Thursday 29 October 2009

நான் கடவுள்.....


நான் ஏன் இருட்டு சந்துக்குள்....அதுவும் அந்த சந்துக்குள் போக வேண்டும்...வேறு வழியாக போயிருக்கலாம்....அது வழக்கமாக போகும் பாதை கூட அல்ல...சிட்டி சென்டரிலிருந்து கொஞ்சம் ஒதுங்கி பகல் நேரத்திலேயே அந்த சந்து இருட்டாகத் தான் இருக்கும்....ஒரு பழைய சர்ச்...விக்டோரியா மஹாராணி காலமோ இல்லை செயின்ட் பால் அவர் கையாலேயே கரசேவை செய்தாரோ என்று யோசிக்கும் வகையில் அங்காங்கே இடிந்து...ஜன்னல்கள் நொறுங்கி.......Danny loves sTACY...Cat is a SLAG...Blair is a fucker...Man U sucks....Emily fucked everyone in Manchester....கோணல்மானலாய் கறுப்பு, நீலம், சிவப்பு என்று கிடைத்த் நிறத்தில் சுவரில் தெறிக்கும் காதல்...கருத்து சுதந்திரம்...கடுப்பு....உச்சியில் இருக்கும் சிலுவை மட்டும் இல்லாவிட்டால் அது சந்திரமுகி பங்களா...அருந்ததீ அரண்மனை என்று சொல்லிவிடலாம்...அதற்கு பக்கத்தில் எப்பொழுதும் சில பிச்சைக்காரர்கள்...உடைந்த கிடார்கள்....கிழிந்த ட்ரம்ஸ்கள்....நசுங்கிய பியர் கேன்கள்...சில காலி பாட்டில்கள்...பழைய புத்தகங்கள்...விரிக்கப்பட்ட துண்டில் சில காசுகள்...அழுத்தமாய் வீசும் கஞ்சா வாசனை...அழுக்காய் கிழிந்த உடையில் சில மனிதர்கள்....அவர்கள் மீது பயம் இல்லாவிட்டாலும்....என் வீட்டுக்கு குறுக்கு பாதையாய் இருந்தாலும்... அந்த சந்தை ஏனோ நான் தவிர்த்து விடுவதே வழக்கம்...

கொழுப்பு...குடி போதை என்றும் சொல்லலாம்...இரவு ஒரு மணி ஆகிவிட்டது...ஸம்மர் டைம் முடிந்து விண்டர் ஆரம்பித்ததில் ஒரு வேளை சன் ரைஸ் ஆகியிருந்தால் மதியம் மூன்று மணிக்கே சன் செட்....என் கை எனக்கே தெரியாத இருட்டு....காது ஓட்டையில் ஊடுருவி கிட்னியை ஃப்ரீஸ் ஆக்கும் குளிர்...இந்த கருமம் போதாது என்று விட்டு விட்டு பெருந்தூறலாய் மழை வேறு....ரேச்சலின் பர்த்டே பார்ட்டி...வழக்கத்தை விட அதிகமாய் போதை....குறுக்கு சந்தில் போனால் சீக்கிரம் வீடு போகலாம்...புத்திசாலித் தனம் என்று கூட சொல்லலாம்....

சந்தில் நுழைந்து....அதான்டா இதான்டா அருணாச்சலம் நாந்தான்டா...அன்னைத் தமிழ் நாட்டினிலே அனைவருக்கும் சொந்தம்டா...தலைவர் பாட்டை கொஞ்சம் சத்தமாக பாடிக் கொண்டு....இங்கிலாந்துல இருந்துக்கிட்டு என்ன அன்னைத் தமிழ்நாடு...அப்பத்தா தமிழ்நாடு....ஒக்காளி இன்னிக்கி செத்தா நாளைக்கு பால் கூட இல்ல....

பாதி தூரம் நடந்திருப்பேன்...ம்ம்ம்....என்ன கருமம் பிடிச்சே ஊரோ...ஒருத்தனையும் காணோமே.....

அது ஒரு முட்டாள் சந்து....நேராய் போனால் சர்ச்...ஆனால் சர்ச்சை ஒட்டி சந்து ஒரு எழுபது எண்பது டிகிரியில் திடீரென்று திரும்பும்...சந்தை வெட்டி இன்னொரு சந்து...முட்டு சந்து...சந்தின் முடிவில் ஒரு பெரிய சுவர் இருந்தால் அது முட்டு சந்து தானே....கொஞ்சம் கவனிக்காவிட்டால் அப்படி ஒரு சந்து இருப்பதே தெரியாது....அதற்குள்ளிருந்து எவனாவது/எவளாவாது உங்கள் மீது பாய்ந்த பின்னரே கவனிப்பீர்கள்......Fucking stupid turn.....என்பது போல...

நான் அந்த சந்தை கவனிக்காது கடந்து போயிருக்கலாம்...அதான் முன்னாடியே சொன்னேனே...கொழுப்பு...போதை...எவனாவது/எவளாவது திடீரென்று பாய்ந்து விட்டால்....எப்பொழுதும் எனக்கிருக்கும் ஜாக்கிரதை...அல்லது விதி யாரை விட்டது....

முட்டு சந்தை கடக்கும் முன் அனிச்சையாய் தலையை வலப்பக்கம் திருப்பி....நல்லவேளை....அப்படி யாரும் என் மீது பாயவில்லை....ஆனால்.....

சர்ச்சின் சுவர் மீது சாய்ந்து ஒருவன் தரையில் உட்கார்ந்திருந்தான்...இல்லை...சுவரை முதுகுக்கு கொடுத்து அரைகுறையாக படுத்திருந்தான்....கால்கள் இரண்டும் நீட்டி...வழக்கமான பிச்சைக்காரர்களின் தூங்குநிலை தான்...பெரிதாய் சொல்வதற்கில்லை....ஆனால்....அவனுக்கு முழுதாய் முகம் காட்டி....எனக்கு பக்கவாட்டில் முகம் காட்டி....யாரவன்...பிச்சைக்காரனை மிரட்டிக் கொண்டிருக்கிறான் போல...

தூரத்தில் இருக்கும் ஏதோ லைட்டில் இருந்து வெளிச்சம் படுவதால் பிச்சைக்காரனின் முகம் மட்டுமே தெரிகிறது....நின்று கொண்டிருப்பவன் முகம் பக்கவாட்டில் லேசாக....கறுப்பு நிற ஜீன்ஸ் பேண்ட்....வெள்ளை நிற முழுக்கை சட்டை....இளைஞன்...வயது...உடலைப்பின் படி...இருபத்தெட்டு இருக்கலாம்...ஆறடிக்கு பக்கமாய் நல்ல உயரம்...நீள நீளமாய் கைகள்....குண்டாகவும் இல்லாமல் ஒல்லியாகவும் இல்லாமல்....சரியான உடல்வாகு...டென்னிஸ் விளையாடுவான் போல...சீராக வெட்டப்பட்ட கறுப்பான தலைமுடி....உருவ அமைப்பை பார்த்தால் கண்டிப்பாக வெள்ளைக்காரன் இல்லை....பாகிஸ்தானியாகவே பங்களாதேஷியாகவோ இல்லை இந்தியனாகவோ இருக்கலாம்....இவன் ஏன் பிச்சைக்காரனை மிரட்டிக் கொண்டிருக்கிறான்....

இருங்கள்...பிச்சைக்காரன் என்றா சொன்னேன்...இல்லை...வெளிச்சத்தில் பார்த்தால் படுத்திருப்பவன் பிச்சைக்காரன் மாதிரி இல்லை...தலை கலைந்திருக்கிறது...முகத்தில் ஒரு வார தாடி....ஒரு வேளை அது அவன் ஸ்டைலாக கூட இருக்கலாம்....அவன் உடைகளும் கூட அழுக்காக இல்லை...நல்ல உடைகள்...இள‌ நீல நிறத்தில் முழுக்கை சட்டை...அடர் கருப்பில் ஜீன்ஸ்...இல்லை...பேன்ட்....கழுத்தில் ஒழுங்காக முடிச்சிடாத டை....ஆனால் கசங்கி இருக்கிறது....குடி போதையில் விழுந்து விட்டானோ....வயது....முகத்தின் தசைகள் இறுகி இருக்கிறது....நீட்டிய கால்களும் தளர்ந்து தரையில் ஊன்றிய கைகளும் உறுதியாக இருப்பது போலத் தான் தெரிகிறது...வயது சொல்வது கஷ்டம்....நாற்பதுக்கும் அறுபதுக்கும் இடையில்...இவனை கிழவன் என்று சொல்வதா இல்லை நடுவயசா....சரி...என்னை விட வயதானவன்...அதனால் கிழவன் என்று வைத்துக் கொள்வோம்....அவனைப் பார்த்தால் வெள்ளைக்காரன் போலவும் இல்லை....சைனாக் காரன் போலவோ இந்திய துணைக்கண்டன் போலவோ இல்லை...ஒரு மாதிரி வெளுப்பான நிறம்....இந்த மங்கலான வெளிச்சத்தில் சரியாக தெரியவில்லை....ஆனால் அவன் லேசாக சிரிப்பது மட்டும் தெரிகிறது....

எவன் எப்படி போனால் என்ன....என்ன பிரச்சினையோ...ஏதேனும் கஞ்சாவாக இருக்கலாம்....நான் தாண்டிப் போயிருக்கலாம்...ஆனால்...அவனவன் விதி அவனை தேடி வருமாமே....இப்பொழுது உட்கார்ந்திருந்த வயது தெரியாத கிழவன் நின்று கொண்டிருப்பவனிடன் ஏதோ சொல்கிறான்....வாக்குவாதம் போலிருக்கிறது....

"நீ ஒரு முட்டாள்....வடிகட்டிய முட்டாள்....நான் யார் என்று தெரியாமல் பேசிக் கொண்டிருக்கிறாய்...."

அட...தமிழ்...நம்ம ஊர்க்காரங்க போலருக்கே... நினைத்துக் கொண்டிருக்கும் போதே நின்று கொண்டிருந்தவனும் ஏதோ சொல்கிறான்....

"கிழிஞ்சது போ....அந்த மயிரத் தான் அரை மணி நேரமா கேட்டுக்கிட்டு இருக்கேன்....யார் நீ...ஏன் இங்க விழுந்து கெடக்க....வீடு எங்கன்னு சொல்லு...ஒரு டாக்ஸி பிடிச்சி அனுப்பி வைக்கிறேன்...."

ஓ....இவனும் நம்ம ஊர்தான் போலருக்கே...பாவம்....எதுனா ஹெல்ப் பண்ணலாம்....என்னை மறைத்த திருப்பத்திலிருந்து ஒரு அடி எடுத்து வைக்கையில்...

கிழவனின் பதில் ஊசியாய் காதில் இறங்கியது....

"நாக்கை அடக்கி பேசு....என்னைத் தெரியவில்லை....முட்டாள்....நான் தான்....கடவுள்...."
========================

இரண்டுசரி தான்....தனித் தமிழன் மட்டுமல்ல...தண்ணித் தமிழன் போல...எத்தனை ரவுண்ட் அடித்தானோ...எனக்கு லேசாக சிரிப்பு வந்தது...நின்று கொண்டிருந்தவனும் இதையே நினைத்திருக்கலாம்...

"அடடா....கடவுள் இப்படி நடுத்தெருவுல க்வாட்ட்ர் அடிச்சிட்டு குப்புற கெடப்பான்னு எங்கம்மா சொல்லலியே....சரி...விடு...உன் வீடு எங்கருக்குன்னு சொல்லு...இல்லாட்டி உன் பசங்க ஃபோன் நம்பர் குடு...பேசி வரச் சொல்றேன்...."

கிழவன் முறைப்பது தெரிந்தது...

"கடவுளுக்கு ஏதடா வீடு....எல்லாம் என் வீடு....எல்லாம் என் மக்கள்...உனக்கு வேண்டுமானால் ஏதேனும் வரம் வாங்கிக் கொண்டு வீடு போய் சேர்....செயின்ட் ஜெம்மா பள்ளியில் மூன்றாவது படிக்கும் உன் மகள் ஆர்த்திக்கு இன்னும் சிறிது நேரத்தில் காய்ச்சல் வரப் போகிறது....உன் டாக்டர் மிஸஸ் கிப்சனுக்கு ஃபோன் செய்து அவளைக் காப்பாற்று...இன்னும் சிறிது நேரத்தில் பெரிய மழை வரும்....அதற்கு முன் இங்கிருந்து கிளம்பு...."

கேட்டுக் கொண்டிருந்த எனக்கு ஆச்சரியாக இருந்தது....என்ன இது...கிழவன் அள்ளி விடுகிறான்....ஒரு வேளை இது உண்மையாக இருக்குமோ....

தூரத்தில் நின்று கொண்டிருந்தவன் பின் வாங்குவது தெரிந்தது...லேசாய் பின் நகர்ந்து...அவன் குரல்...பேயடித்தவன் போல....குழறலாய்...

"யேய்....நீ..நீ..ஒனக்கு எப்பிடி என் பொண்ணு பேரு தெரியும்....நீ...நீ...சாமியாரா...."

கிழவன்....வேண்டாம்....எனக்கு பயமாக இருக்கிறது....கடவுள்....கடவுள் வெற்றி பெற்றவன் போல மெதுவாக சிரித்தார்....மங்கலான இருட்டிலும் சிரிப்பில் ஒரு களை தெரிந்தது....

"இல்லை மகனே....சாமியார் அல்ல...நான் தான் சாமி....நான் தான் கடவுள்...உனக்கு சந்தேகமிருந்தால் என்ன வேண்டும் சொல்...இப்பொழுதே தருகிறேன்...."

நின்று கொண்டிருந்தவன் என்ன நினைத்தானோ....

"எனக்கு....எனக்கு....ரொம்ப குளிருது....ஒரு பாக்கெட் டன்ஹில் சிகரெட்டும் ஒரு ஸிப்போ லைட்டரும் வேணும்...."

கடவுள் மந்தகாசமாய் சிரித்தார்...கீழே ஊன்றியிருந்த வலது கை உயர்த்தி...சாய்பாபா சாமியார் போல....வெறுங்கை விரித்து..மூடித் திறக்க....

ஒரு புத்தம் புதிய டன்ஹில் சிகரெட் பாக்கெட்டும்...ஒரு ஸிப்போ லைட்டரும்....

தூரத்தில் நின்று கொண்டிருந்த எனக்கு நாக்கு தொண்டையில் சிக்கிக் கொண்டது....

நின்று கொண்டிருந்தவன் முழங்காலிட்டு சிகரெட்டை பவ்யமாய் வாங்கிக் கொண்டான்..

"மை காட்...மை காட்...சாமி...எனக்கு இன்னொரு பெரிய ஆசை...கேட்டா கோவிச்சிக்க மாட்டீங்களே..."

"நீ என் குழந்தை...என் பிம்பம்...கேள் மகனே...கேள்...."

"அது வந்து சாமி....வந்து...எனக்கு...எனக்கு ப்ரிட்னி ஸ்பியர்ஸை கிஸ் பண்ணனும்னு ரொம்ப நாளா ஆசை...."

கடவுள் திருவிளையாடல் சிவாஜி போல பெரிதாக சிரித்தார்....

"ப்ரிட்னி இப்பொழுது லாஸ்வேகஸில் குடித்துக் கொண்டிருக்கிறாள்...அவளது விதிப்படி இன்றைக்கு மூன்று விநாடிகள் முகம் தெரியாத ஒருவன் அவளை முத்தமிட வேண்டும்....எல்லாம் விதிப்படி நடக்கும்....இதோ....நீ கேட்ட ப்ரிட்னி ஸ்பியர்ஸ்...."

அந்த கும்மிருட்டில்....பளிச்சென்று சிறிய ஒளியுடன்....மறைப்பதை விட காட்டுவதே முக்கியம் எனும் பார்ட்டி ட்ரஸ்ஸில்...ஓ மை காட்....ப்ரிட்னி...நிஜமாகவே ப்ரிட்னி ஸ்பியர்ஸ்....கையில்...அது என்ன...ஐஸ் வோட்காவா...இல்லை மார்ட்டினியா....

இது கனவா...இல்லை நிறைய குடித்து ஹலுசினேஷனா....நம்ப முடியாத திகைப்புடன் நான் யோசித்துத் கொண்டிருக்கும் போதே அவன் ப்ரிட்னியை இறுக முத்தமிட்டு முடித்து....ப்ரிட்னி மறைந்து....மீண்டும் மங்கலான இருட்டு....

கடவுள் மீண்டும் பேச ஆரம்பித்தார்...

"இப்பொழுது நம்புகிறாயா....நான் கடவுள்....ஆனால் நீ...மகனே நீ ஒரு முட்டாள்....கடவுளே வந்தாலும் உனக்கு என்ன கேட்க வேண்டும் என்று தெரியவில்லை...சரி சரி கிளம்பு...உனக்கு நேரமாயிற்று....உன் மகள் ஆர்த்தியை போய்ப் பார்...."

"நம்புகிறேன்....கடவுளே....நீர் கடவுள்....நீர் தான் கடவுள்...."

குனிந்து வணங்கியவனின் கைகள் அவனது முழங்காலின் கீழே பின்பக்கமாக இருந்த பாக்கெட்டில் எதையே துழாவுவது தூரத்தில் இருந்து எனக்கு தெரிந்தது....என்ன தேடுகிறான்....ஒரு வேளை சூடம் கொளுத்த போகிறானா....

நிமிர்ந்தவனின் கையில்....அந்த மங்கலான இருட்டை கிழித்துக் கொண்டு...இரு புறமும் கூராக..... ....

ஒரு கத்தி பளபளத்தது.....

============== ==============

மூன்று

இது நான் வழக்கமாக வெண்டைக்காய் வெட்டும் கத்தியல்ல...அது ஒரு புறம் மட்டும் தான் கூர்மையாக இருக்கும்....அதுவும் கூர்மை என்று சொல்ல முடியாது....குறைவாக மொன்னை....ஆனால் இது....தூரத்தில் இருந்து பார்க்கும் போதே தெரிகிறது...ராயல் நேவியில் இருந்து லீவில் வந்த மார்க்கோ காட்டிய கத்தி போல...குத்துவதற்கே செய்த கத்தி....இருபுறமும் கூர்மையாக...


என்ன செய்கிறான் இவன்....கடவுளிடமே வழிப்பறி செய்கிறானா...

என்னைப் போலவே கடவுளும் குழம்பி இருக்க வேண்டும்....அவர் முகத்தில் சிரிப்பும் மந்தகாசமும் மறைந்து....போலி சர்டிஃபிகேட் கொடுத்து இன்டர்வியூவில் மாட்டிய தெலுங்குகாரன் போல...விழித்தார்...

"என்ன செய்கிறாய் நீ...."

"ஒன்றுமில்லை...நீ யாரென்று தெரியாமல் முட்டாள்தனமாக வரம் கேட்டுவிட்டேன்...இப்பொழுது புரிந்து விட்டது...நீ தான் கடவுள்...."

கடவுளின் குரல் கோபமாக ஒலித்தது....

"உன்னை படைத்தவனுக்கு மரியாதை கொடு...."

"மரியாதை...என்ன மயிருக்கு உனக்கு மரியாதை....எதுவும் செய்ய முடியாததால் எதுவும் செய்யாமல் இருப்பவனை மன்னிக்கலாம்....ஆனால் எல்லாம் செய்ய முடிந்த நீ செய்து கிழித்தது என்ன....உனக்கு எதுக்குடா மரியாதை..."

"நீ சொல்வது ஒன்றும் புரியவில்லை...."

"புரியலையா....போடாங்.....என்னை படை...என்னை படைன்னு யார்னா உன்னை கேட்டாங்களாடா....ஒனக்கு பொழுது போகலைன்னா மனுஷங்களை படைச்சிருவியாமே....ஒக்காளி....நாங்க என்ன உன் போதைக்கு ஊறுகாயா...."

கத்தியுடன் நின்றிருந்தவனின் குரல் காரமாக இருந்தது....

"என்ன போதை...என்ன ஊறுகாய்....மகனே....நீ குடித்திருக்கிறாய்....மழை வரும் முன் ஒழுங்காக வீடு போய் சேர் என்று சொன்னேன்....நீ கேட்கவில்லை....இப்பொழுது பார்....மழை வந்துவிட்டது...."

என்னால் நிஜமாகவே நம்ப முடியவில்லை....கடவுள் சொல்லி முடிப்பதற்குள்...சடசடவென்று....பலமாக....மிக பலமாக....மழை கொட்ட ஆரம்பித்தது....நான் நிஜமாகவே கடவுளை பார்த்துக் கொண்டிருக்கிறேன்....

கத்தியுடன் நின்றிருந்தவன் கவலைப்பட்டதாக தெரியவில்லை....

"மழை வந்தா என்ன...மயிரா போச்சி....உன்கிட்ட கேக்காம விடுறதில்ல....ஊரை கொள்ளையடிச்சி பத்து தலைமுறைக்கு சொத்து சேக்குறவனெல்லாம் மேல மேல தான் போயிக்கிட்டு இருக்கான்....கவுன்சிலரா இருந்தவன் எம்.எல்.ஏ ஆகிடறான்...எம்.எல்.ஏ மந்திரி ஆகிடறான்....அவன் பேரன் ஊர்ல பொறுக்கித் தனம் பண்றான்...நல்லவங்க....ஒன்னும் தெரியாத கொழந்தைங்க எல்லாம் ரொம்ப கஷ்டப்பட்டு சாவுறாங்க...சோத்துக்கே இல்லாம சாவுறாங்க...தேவடியா பசங்க குண்டு வச்சி சாவுறாங்க....இல்ல இனவெறி இறையாண்மைங்கிற பேர்ல கொல்றானுங்க...அப்புறம் அந்த பொணத்தைக் காட்டியே ஓட்டு வாங்குறானுங்க....இதுக்கெல்லாம் நீ என்ன செஞ்ச...."

சோவென்று பெய்த மழையில்.....கடவுளின் உதடுகள் அசையவில்லை...மெளனம்...

"இன்னாடா....கேக்குறோமில்ல....சொல்டாங்க வெண்ணை....."

கடவுளுக்கு பயம் உண்டா....கடுங்குளிரிலும் கொட்டும் மழையிலும் முகம் வியர்க்குமா...

கடவுளின் முகம் வியர்த்திருந்தது...குரல் நடுங்கியது....

"அது....அதெல்லாம் விதிப்படி நடக்கிறது....இப்படித்தான் நடக்கணும்கிறது விதி....அதை நான் நினைச்சாலும் மாத்த முடியாது...."

"எல்லாம் விதிப்படித் தான் நடக்கும்னா நீ என்ன மயிருக்குடா இருக்க....."

அவன் கடவுளை நோக்கி கத்தியுடன் முன்னேறினான்....

================ =================

நான்கு

கடவுளுக்கு அவன் நோக்கம் புரிந்திருக்க வேண்டும்....

"வேண்டாம்....வேண்டாம்....முட்டாள் தனமாக ஏதாவது செய்துவிடாதே...."

கழுத்து திருகிய கோழி போல கடவுளின் அலறல் அந்த சந்தில் எதிரொலித்தது....இதுவரை சாய்ந்திருந்த சுவற்றில் இருந்து வேகமாக எழ முயன்றார்....

அவன் அதை விட வேகமாக இருந்தான்....அவன் இடக்கால் உயர்ந்து கடவுளின் முகத்தை சுவற்றில் அழுத்தி தேய்த்தது....இடது கை கடவுளின் கலைந்த தலை மயிரை கொத்தாக பற்றியது....

கடவுள் இரு கைகளாலும் அவன் காலைப் பற்றி தன்னை விடுவிக்க போராடிக் கொண்டிருந்தார்....அவன் வேகமாக இருந்தான்....கத்த வாயெடுத்த கடவுளின் வாயில் ஷூக்கால் திணிக்கப்பட்டது....

கடவுளின் முழி பிதுங்க...தலை மயிரை இறுகப் பற்றி....குரல் வெளிவராது காலால் தடுத்து....அவன் வலது கை ஓங்கி....

கத்தி கடவுளின் வயிற்றை கிழிப்பதை தூரத்தில் இருந்து நான் பார்த்துக் கொண்டிருந்தேன்....கடவுளின் தொப்புளில் கத்தியை சொருகி....நேர்கோடாய் மேலிழுத்து....மீண்டும் கீழே கொண்டு வந்து....வலது பக்கமாய்....ஆங்கில L போல நகர்த்தி.....

மான்செஸ்டரின் குளிர்கால இரவில்....மழையுடன் மழையாக கடவுளின் ரத்தம் கலக்க....கொட்டும் மழை கண் நனைக்க...திறந்த வாய் நிறைக்க....வலப்பக்கம் தலை சாய்த்து.....கடவுள்....செத்துப் போயிருந்தார்....

============ ============

ஐந்து

கடவுளை கொன்று முடித்து....கத்தியை நனைத்திருந்த ரத்தத்தை அவரின் உடையிலேயே துடைத்து முடித்த அவன்....கடவுளின் இறந்த உடலை காலால் நகர்த்தி விட்டு....இது வரை அவர் சாய்ந்திருந்த சுவரில் நின்றவாறே சாய்ந்து கொண்டு....பாக்கெட்டை துழாவி ஒரு சிகரெட்டை எடுத்து....ஸிப்போ லைட்டரால் பற்றவைத்து....ஆழமாக இழுத்து...புகையை வெளியே விட்டு...என்னை நோக்கி திரும்பினான்....

முட்டாள் தனம்...போதை...கொழுப்பு...திமிர்....என்ன வேண்டுமானாலும் சொல்லலாம்....கடவுளின் மரணத்தை பார்த்த அதிர்ச்சியில் நான் என் மறைவிடைத்திலிருந்து வெளியே வந்திருந்தேன்....இந்த நிலையில்....இந்த நிலையில்....அவனால்....என்னை நன்றாக பார்க்க முடியும்....என்னாலும் அவனை.....

என்னை நோக்கியவன்...ச்சும்மா ஜாலிக்கு பூனை காதை கிள்ளிட்டேன்...நீ அதை பாத்துட்டியா என்று சிரிக்கும் குழந்தை போல....மெல்ல சிரித்தான்...

உயிர்வரை ஊடுருவும் குளிரில்....கடும் மழையில்....அந்த இரவின் மங்கலான வெளிச்சத்தில்.....

அவன் முகம் நானாகயிருந்தது........

(திருட்டு பயலே என்று யாரும் பின்னூட்டம் போடும் முன்...இதில் கதை மட்டுமே என்னுடையது...அடிப்படை கருத்து நீட்ஷேவுடையது...ஆல்சோ, இதை எழுத எனக்கு இரண்டு மணி நேரம் ஆகியது....படிப்பவர்கள் ஒரு இரண்டு நிமிடம் செலவு செய்து கதையின் குறைபாடுகளை சொன்னால் நல்லது....நன்றி...)

Tuesday 20 October 2009

செம்மொழியும் ரெட் ஜெயண்ட் மூவிஸூம்....ஒரு பழைய பாட்டும்

செய்தி ஒன்று :

த‌மிழக முதல்வர் காஞ்சியில் நடைபெற்ற பேரறிஞர் அண்ணாவின் நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டில் கோவையில் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நடைபெறும் என்று அறிவித்திருப்பதற்கு இலங்கை மலேசியா, சிங்கப்பூர் மொரீசியஸ் போன்ற வெளிநாட்டு தமிழறிஞர்கள், ஆர்வலர்களும், தமிழ்நாட்டு தமிழறிஞர்களும் முதல்வரை பாராட்டி மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

http://thatstamil.oneindia.in/news/2009/10/18/tn-its-now-world-classical-tamil-meet-as-iatr-opts.html

செய்தி இரண்டு:

முதல்வர் கருணாநிதியின் பேரனும் துணை முதல்வர் ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் தனது "ரெட் ஜெயண்ட் மூவிஸ்" வழியாக வழங்கும் "ஆதவன்" படம் தீபாவளியன்று வெளியானது...

ஆதவன் பாட்டை யூட்யூப்ல பார்த்து டவுசர் டர்ரானப்ப இந்த பழைய எம்.ஜி.ஆர்/பட்டுக் கோட்டை கல்யாண சுந்தரம் பாட்டு கிடைச்சது....பாட்டுக்கும் செய்திக்கும் நிச்சயமா சம்பந்தமில்ல...Sunday 18 October 2009

ஈலி ஈலி லாமா சபக்தானி.....அதிகாலையில் எழுந்து வழக்கம் போல முகம் துடைத்து
கட்டாத வீட்டு லோன்...
திவாலான என் பென்ஷன் ஃபண்ட்...
தள்ளிப் போன மகளின் காலேஜ் ஃபீஸ்...
விவாகரத்து செய்து காம்பன்சேஷன் கேட்கும் முன்னாள் மனைவி..
விற்க முடியாத பழைய ஃபோர்டு கார்...
திவாலாக காத்திருக்கும் என் இன்வெஸ்ட்மென்ட் பேங்க்...
கீழே கீழே போகும் ஸ்டாக் மார்க்கெட்....

துடைக்க முடியாத முந்திய இரவுகளின் நினைவுகள் அலையடிக்க....
நாளான ஸ்காட்ச் விஸ்கி போல சிவப்பான கண் துடைத்து...

நேற்றைக்கும் அதன் முந்திய நாளுக்கும்
சென்ற வாரத்திலும் சென்ற மாதத்திலும்
செய்தது போல பல் துலக்கி....குளித்து....
அனிச்சையாய் பிபிசி நியூஸ் பார்த்து...
காய்ந்து போன பிரட்... ஆம்லெட் போட நேரமில்லை....

லண்டனின் அதிகாலை குளிரில் கை விறைத்து
வேகமாய் பறக்கும் கோழி பண்ணை போல‌
நிற்காமல் செல்லும் ட்யூப் பிடித்து...

விரும்பாத காதலாய் முகத்தில் முகம் உரசி
என் கழுத்தில் எவனோ எவளோ உதடு உரசி
எதேச்சையாய் பின்புறம் தழுவும் உடல் உதறி....

எத்தனை செய்தாலும்.....
அன்று நிச்சயமாய் ஒரு சந்தோஷம்...
இன்றைக்கு வெள்ளிக் கிழமை....

வெள்ளிக் கிழமை இரவுகள்....
க‌டவுளால் ஆசிர்வதிக்கப்பட்டவை....

============================

விழிப்பு....பயணம்...வேலை...உணவு...முயக்கம்...தூக்கம்...
எந்திரமாய் வாழ்க்கை....தீராத கவலைகள்....
கவலை சூழ் உலகில் மதுவை கண்டுபிடித்தவன் தேவன்....
அதை கடன் அட்டைக்கு விற்பவன் அதி தேவன்...

எல்லார் கையிலும் மதுக் கிண்ணம்....
பதினெட்டு...இருபது...
இருபதும் இன்றி முப்பதும் இன்றி இடையில்...
முப்பது தாண்டி...நாற்பது தாண்டி....

கொண்டாடத்தில் சில....
துக்கம் மறைக்க....மறுக்க...தூக்கம் பிடிக்க சில...

முற்றிலும் மறைக்கும் ஜீன்ஸ் பேண்ட்கள்...
கடவுள் போல் இருப்பதை சந்தேகத்திற்கு உள்ளாக்கும் உள்ளாடைகள்....
இல்லாத‌தை இருப்பதாக காட்டும் மந்திரவாதிகள்...

தோள் தட்டி அழைக்கும் தேவதைகள்....
சிரிப்புடன் மறுக்கும் அழகான ராட்சசிகள்...

அவனவன் விருப்பத்திற்கு அவனவன் பார்க்க கடவன்.....
ஏவாளை ஜெயித்த ஆதாம் எவன்....

=====================

முகம் முழுதும் வியர்த்து...
கையில் கோப்பை ஏந்தி....
சில மணிநேரம் கவலை மறந்து....
என்னவென்றே புரியாத பாடலுக்கு ஆடும் போது....

ட்ட்ட்டொம்ம்ம்ம்...

சிந்திக்கும் நேரமில்லை....ஆனாலும்...
குடி போதையில் எவரேனும் குப்புற விழந்திருக்கலாம்...

சில விநாடி புரியவில்லை...என்னவென்று....
புரிந்த போது...

என்னை சுற்றிலும் புகை...
தேவதைகள் இருந்த இடமெங்கும் நெருப்பு...

என் கைகள்...என்னை விட்டு தள்ளி...

எரிந்து கொண்டிருந்தது...

இல்லை....இன்றைக்கு இல்லை....
நான் இன்றைக்கு சாக....விரும்பவில்லை...
அதுவும் நிச்சயமாக....
தோல் உரிக்கப்பட்ட கோழி போல....
நெருப்பில் வெந்து சாக எனக்கும் விருப்பமில்லை....

கண் எரித்த புகை விலக்கி பார்த்த போது....
கால தாமதம்....

காலையில் நான் போட்டிருந்த கறுப்பு பேண்ட்...
முந்திய இரவு பாலீஷ் செய்த ஷூக்கள்....
இடுப்புக்கு கீழ் இல்லை....எதுவும் இல்லை...
என் கால்கள் என்னிடம் இல்லை....

உள்ளும் புறமும் ஒன்றாக...
என் ரத்தம் உள் மட்டுமின்று வெளியிலும்.....
நகர முடியாது என் மீது விழுந்து கிடக்கும் உடல்கள்....
சென்ற வினாடியில் தேவதைகள்....
இந்த வினாடி அழுத்தும் பிணங்கள்....

======================

கட்டாத வீட்டு லோன்...
திவாலான என் பென்ஷன் ஃபண்ட்...
தள்ளிப் போன மகளின் காலேஜ் ஃபீஸ்...
விவாகரத்து செய்து காம்பன்சேஷன் கேட்கும் முன்னாள் மனைவி..
விற்க முடியாத பழைய ஃபோர்டு கார்...
திவாலாக காத்திருக்கும் என் இன்வெஸ்ட்மென்ட் பேங்க்...
கீழே கீழே போகும் ஸ்டாக் மார்க்கெட்....

கைகள் சிதறி கால்கள் சிதறி....
வெறும் முண்டமாக...
உதடு கிழிந்து...முகம் கருகி... மார்பு கிழிந்து ரத்தம் ஒழுகி....
ஈரல் முழுதும் புகை சூழ்ந்து...
மூச்சு திணறி நான் சாகும் போது....

இராக் படையெடுப்புக்குக்கு...
எங்கள் பதில்....
ஏதேனும் காட்டுமிராண்டி கும்பல் நாளை குதூகலிக்கலாம்...

ஐந்து வயது தானென்றாலும்
பள்ளிக்கு போனால்...
பெண் முகத்தில் ஆசிட்
என்ற தலிபான்கள்....
ஆஃப்கனை விட்டு வெளியேறாவிட்டால்....
அறிக்கை விட்டு கொக்கரிக்கலாம்...

ஆஃப்கன் பிரச்சினையை எழுதினீர்களா...
இராக் ஆக்கிரமிப்பை எழுதினீர்களா...
குஜராத் கலவரத்தை எழுதினீர்களா...
பார்ப்பன பூனூல் தெரிகிறது...
உன் கொண்டை நீ எங்கு போனாலும் தெரிகிறது....
எல்லா குண்டுகளையும் காமன்மேன் தலையில் போடு...

சுகுணா திவாகர்கள் நாளை இடுகையிடலாம்....
முற்போக்குவாதிகள் நாளை என் மரணத்துக்கு காரணம் சொல்லலாம்.....
நியாயம் கற்பிக்கலாம்...
சூடு பறக்க தங்கள் வாதத் திறமைகளை நிரூபிக்கலாம்...
இன்ஷா மார்க்ஸ் என்று தன்னடக்கம் காட்டலாம்...

ஆனாலும்...

ஆஃப்கனில் அமெரிக்க படைகள் நுழைய நான் ஆணையிடவில்லை...
இராக் செல்லும் முன் என்னை யாரும் கேட்கவில்லை...
நான் பிறந்த மூன்றாம் நாள் செத்துப் போன தாய் மீது சத்தியமாக‌...
குஜராத் கலவரங்களுக்கு நான் காரணமில்லை...
பிறந்த நாள் முதல் இதுவரை நான் மும்பை போனதேயில்லை.....

==============

கைகள் சிதறி கால்கள் சிதறி....
வெறும் முண்டமாக...
உதடு கிழிந்து...முகம் கருகி...
மார்பு கிழிந்து ரத்தம் ஒழுகி....
ஈரல் முழுதும் புகை சூழ்ந்து...
மூச்சு திணறி நான் சாகும் போது....

பதினொரு வயதில் காஜா பீடி...
காசு கிடைத்தால் வில்ஸ் ஃபில்டர்...
பள்ளி எஜுகேஷனல் டூர்... பொய் சொல்லி...பெயர் தெரியாத விஸ்கி...
ஆறாங்கிளாஸ் படிக்கும் போது எட்டாம்கிளாஸ் பெண்ணுக்கு லவ் லெட்டர்.... பத்தாவது படிக்கும் போது அஞ்சரைக்குள் வண்டி...

க‌ஷ்டப்பட்டு ப்ளஸ்டூ...கடினமாய் படித்து என்ட்ரன்ஸ்...
கடும் போட்டியில் எஞ்சினியரிங் காலேஜ்....
சின்ன சின்னதாய் கலவரங்கள்...

ங்கோத்தா சொல்லுடா....ம்மாள சொல்லுடா....
சின்ன சின்னதாய் ஹாஸ்டல் ராக்கிங்....

நீ இல்லன்னா நான் செத்துருவேண்டி...
காதலித்து....
அப்பனின் ஜாதி வெறியால்....
எவனுக்கோ மனைவியாய் போய்....
என் பெயரை மகனுக்கு சூட்டியவளிடம்
சின்ன சின்ன பொய்கள்.....

====================================

கைகள் சிதறி..... கால்கள் சிதறி....
வெறும் முண்டமாக...
உதடு கிழிந்து...முகம் கருகி...
மார்பு கிழிந்து ரத்தம் ஒழுகி....
ஈரல் முழுதும் புகை சூழ்ந்து...
மூச்சு திணறி நான் சாகும் போது....

எல்லாம் ஞாபகம் வந்து....

கடைசியில் ஒன்று...
மறந்தே போனது...

ஈலீ...ஈலீ...லாமா சபக்தானி......
=================================

ஈலி ஈலி லாமா சபக்தானி....ஜீஸஸ் க்ரைஸ்ட் கடைசியாக சொன்ன ஹீப்ரு வாசகங்கள் என்று நம்பப்படுகிறது....இதற்கு அர்த்தம் "என் தந்தையே...என் தந்தையே....ஏன் என்னை கைவிட்டீர்"....

(You dont know NewYork Love....Let me show you....உற்சாக பந்தாய்....துக்கத்தில் அழும்போது இறுக்கி அணைக்கும் காதலியாய்....One day I'll be running this bank...and...you'll be likcking my foot....You Bastard.....Fucking Bastard....Nil Carboarandom Illegitmiti....But I tolerate you....just for your stupid smile.....பெண்களின் வலிமைக்கு உதாரணமாய்....எல்லாம் சொல்லி....எந்த கனவும் நனவாகாமல்.....ந்யூயார்க் ட்வின் டவர் தாக்குதலில் கருகி உயிர் இழந்த என் உயிர்த்தோழி Kirstine McKinnessக்கு அவளது பிறந்த நாளில் இந்த எழுத்து சமர்ப்பணம்....

I promise you this Kirstie....The fight with Taliban is not a fight between Taliban and America...It's a fight between Taliban Assholes and the human civilisation....We shall not stop until the Taliban and like minded assholes are annihilated!

Tuesday 13 October 2009

நவீன விக்ரமாதித்தன் கதைகள்- காதல் சொல்லி வந்தாய்! - 8

முந்திய அத்தியாயங்களை படிக்க அத்தியாயம் ஒன்று, அத்தியாயம் இரண்டு,அத்தியாயம் மூன்று,அத்தியாயம் நான்கு, அத்தியாயம் ஐந்து, அத்தியாயம் ஆறு, அத்தியாயம் ஏழு
அத்தியாயம் எட்டு - சுட்ட மண்!

"மாதித்தா...இந்த கேள்விகளுக்கு உனக்கு விடை தெரிந்தாலும் தெரியாவிட்டாலும் பிட் அடித்தாவது விடை சொல்ல வேண்டும்...இல்லாவிட்டால் உன் தலை தமிழ்நாட்டு காங்கிரஸ் கோஷ்டிகள் போல் சுக்கு ஆயிரமாக நொறுங்கி சிதறி விடும்...."

வேதாளம் சொன்னதும் மாதித்தன் தலையை தடவிக் கொண்டான்...

"என்ன கருமம்டா இது...என் தலை முதல்வர் பதவி மாதிரி ஆயிப் போச்சே...வர்றவன் எல்லாம் அதுக்கே குறி வைக்கிறான்...சரி சரி கைய அவுத்து விடு...எதுனா சொல்றேன்..."

"அதெல்லாம் அவுக்க முடியாது மாதி...நீ சும்மா வாயில சொல்லு...கையா பேசப் போவுது...."

"அவுத்து விட்டு பாரு....என் கை எப்பிடி பேசுதுன்னு காமிக்கிறேன்..." முறைத்து கொண்டே மாதித்தன் அங்கிருந்த உயரமான பாறையில் ஏறிக் கொண்டான்...

"ஏய்ய்....மாதி....இப்ப எதுக்கு பாறையில ஏறுற...ஒபாமாவுக்கெல்லாம் நோபல் குடுத்துட்டாய்ங்க....எங்க முத்தமிழ் வித்தகருக்கு கோயபல்ஸ் விருது கூட குடுக்கலைன்னு எதுனா தற்கொலை செய்ய போறியா...."

"அட சனியனே...அதுக்கெல்லாம் டீக்குடிக்க வேற ஒடன்பொறப்புங்க இருக்காங்க...என்ன பெரிய ஓபாமா...அவருக்கெல்லாம் வேற யார்னா கொடுத்தா தான் விருது...எங்க ஐயாவுக்கு வேணும்னா அவரே குடுத்துப்பாரு...எடுத்துப்பாரு...அப்படி எல்லா விருதும் தீர்ந்து போச்சின்னா கலை உலக படைப்பாளி...டவுசர் கிளிச்ச தொடைப்பாளின்னு எதுனா புதுசா உருவாக்கிடுவோம்....இப்ப ஒனக்கு தீர்ப்பு சொல்லணுமா வேண்டாமா..."

"ஆமா...பெரிய சாலமன் பாப்பையா...அப்படியே சொல்லிட்டாலும்....சொல்லு....சொல்லித் தொலை...."

"நாட்டாம நாஞ் சொல்ற தீர்ப்புக்கு உச்சிபுளிகுடி பண்ணாரி அம்மன் சத்தியமா எட்டு ஊரு பதினெட்டு பட்டியும் கட்டு படணும்...இது நாட்டாமை உத்தரவு உத்தரவு உத்தரவு...."

வேதாளம் குரல் கொடுத்தது...

"நாட்டாம...இன்னும் தீர்ப்பே சொல்லலியே..."

"அடச்சே....எவன்டா அது...காப்பு கட்றதுக்கு முன்னாடியே மாடு அடக்க வர்றவன்...முந்திரிக் கொட்டை மாதிரி....சொல்வோமில்ல..."

அந்த இருட்டில் வேதாளத்தை குத்து மதிப்பாக முறைத்த மாதித்தன் பேச ஆரம்பித்தான்....

========================

"முட்டாள் வேதாளமே...நீ ஆள் தான் மொட்டை...இப்பொழுது உன் அறிவும் மொட்டையாகி விட்டதா இல்லை கள்ளச் சாராயம் காய்ச்சும் போது உன் அறிவையும் அடுப்பில் வைத்து எரித்து விட்டாயா...

சிவராமனை காதலித்த கல்பனாவுக்கு மகேஷை பிடித்திருப்பது சரியா....என்ன கேள்வி இது...உலகத்தின் அடிப்படை சலனம்....ஆதி சிவனின் சலனத்தால் தான் அண்ட சராசரங்களும் விரிந்தது...இது உண்மையோ இல்லையோ சராசரி மனிதனின் சலனம் தான் உலக இயக்கம்....அலையில்லாத கடலும் சலனமில்லாத மனமும் இங்கு இல்லை...மனிதன் சலனமற்று போகும் நாளில் அகில உலகமும் உறைந்து போகும்...ஆசை தான் துன்பத்திற்கு காரணம்....ஆனால் துன்பம் மட்டுமல்ல உலக இயக்கத்திற்கும் அது தான் காரணம்...

கல்பனா மகேஷிடம் சலனமடைந்தது உண்மை....சூழ்நிலை காரணம் என்று கடைசியில் அவள் சொல்வது தன்னை தானே ஏமாற்றுவதே...இது சரியா தவறா....உண்மையில் எது சரி எது தவறு...எது இயல்பு எது கட்டமைப்பால் திணிக்கப்பட்டது......வன்முறை இயல்பா இல்லை அஹிம்சை இயல்பா...கல்பனாவுக்கு சிவராமனை பிடித்திருந்தது...அதே சமயம் மகேஷையும் பிடித்திருக்கிறது...சிவராமனை பிடிக்க சில காரணங்கள்....மகேஸ்வரனை பிடிக்க சில காரணங்கள்...மகேஷ் மீது அவளுக்கு ஏன் காதல் வரக் கூடாது என்பதற்கு காரணங்கள் அவளிடம் இல்லை...ஆனால் ஒரு பெண் இரு ஆண்களை காதலிக்க முடியுமா என்றால்...சமூகம் மறுக்கலாம்....இல்லை...முடியாது...நடக்காது....நடக்கக் கூடாது...என்று கலாச்சார காவலர்கள் அலறலாம்...ஆனால் இயற்கை கலாச்சாரங்களுக்கும் அதன் காவலர்கள் என்று தன்னை தானே அறிவித்துக் கொண்டவர்களுக்கும் கட்டுப்பட்டது அல்ல...முடியும்....ஒரு ஆணின் மனம் இரு பெண்களிடம் சலனப்படும் போது பெண்ணின் மனமும் சலனப்படலாம்...படும்....ஆனால் ஒருவனுக்கு ஒருத்தி ஒருத்திக்கு ஒருவன் என்ற சமூக கட்டுப்பாடே அதை தவறா சரியா என்று கேள்வியாக்குகிறது.....அலை கடலுக்கு அணை கட்ட முடியுமா...கடல் போல மனமும் விடாமல் அலையடித்துக் கொண்டு தான் இருக்கிறது...கண்ணகியின் கணவனுக்கு மாதவியிடம் மன சலனம் என்றால் கல்பனாவுக்கு மகேஷிடம் சலனம்...காதல்....காதலுக்கு என்பதன் வரைமுறை யாருக்கும் தெரியாத போது இது காதல் அல்ல என்று எப்படி சொல்ல முடியும்.....காதல் என்பது என்ன....முகத்திரைகளை விலக்கிப் பார்த்தால் அது காமமாகவும் இருக்கலாம்....பல வண்ணம் காட்டும் அப்பட்டமான சுயநலமாகவும் இருக்கலாம்...அல்லது ஸிக்மன்ட் ஃப்ராய்ட் சொல்வது போல நார்ஸிசம்...சுய மோகமாகவும் இருக்கலாம்...

ஆக...சிவராமனை காதலித்த கல்பனா மகேஷிடம் சலனமடைந்தது இயற்கை விதிகளின் படி சரியே....அது சமூக நியதிகளின் படியும், கலாச்சார விதிகளின் படியும் தவறாக இருக்கலாம்...ஆனால் கலாச்சாரங்கள் உருமாறும்...கால தேவனால் என்றாவது ஒரு நாள் உருத்தெரியாமல் அழிக்கப்படும்..சிந்து சமவெளி கலாச்சாரமும் சங்கம் வளர்த்த பாண்டிய கலாச்சாரமும் தஞ்சையில் செழித்த சோழர்களின் கலாச்சாரமும் இன்று கடலுடன் போய்விட்டது..ஆனால் இயற்கை இன்றைக்கும் அலையடித்துக் கொண்டு தான் இருக்கிறது..."

க்கும்....தொண்டைய செருமிக் கொண்ட மாதித்தன் சிறிது நிறுத்தினான்....

"நாட்டாம....தீர்ப்ப முழுசா சொல்லு...அப்ப சிவராமன் மேட்டரு...."

"அட....இருடே...ஒரு தம்ம அடிச்சிட்டு அந்த கேஸை பைசல் பண்ணுவோம்...."

வேதாளம் மாதித்தனுக்கும் சேர்த்து ஒரு தம்மை பற்ற வைக்க குகையில் புகை சூழ்ந்தது....

================================

"அடுத்து சிவராமன்....அவன் கலாச்சார கட்டமைப்புகளின் பிரதிநிதி...ஆனால் அவனது காதல் உச்சமானது....மனித மனத்தின் மற்றொரு விசித்திரம்...விடாது அலை மட்டுமல்ல...மனித மனம் யாருடனாவது எதற்காவது போட்டி போட்டுக் கொண்டே இருக்கிறது....போர் போர்...கொல் கொல்...என்றே வாளுடன் அலைகிறது....சிவராமனால் தனக்கு ஒரு போட்டியை சகிக்க முடியவில்லை...கல்பனா தனக்கே என்று தான் வகுத்த எல்லைக்குள் இன்னொருவன் பிரவேசிப்பதை அவனால் தடுக்க முடியவில்லை...அவனை பொறுத்த வரை அது உச்சமான காதல்...மலை உச்சியில் இருப்பவன் கீழே விழுந்தால் மரணிப்பதே நல்லது....அதீத காதலுக்கும் அதீத வெறுப்புக்கும் ஒரு நூலிழை தான் வித்தியாசம்...இது விளிம்பு நிலை மனம்...எந்த நேரத்திலும் விளிம்புகளை உடைக்கும்....கல்பாவின் மனம் மகேஷிடம் சலனமடைந்ததுமே சிவராமனின் காதல் செத்து விட்டது...அது சுட்ட மண்....உடைந்த கண்ணாடிகளை கூட உருக்கி மீண்டும் உருவாக்கலாம்...ஆனால் சுட்ட மண்ணில் பயிர் செய்தவர்கள் யார்...சுட்ட மண் செத்த மண்...அதில் எதுவும் வளராது...சிவராமன் காதலித்தது தன்னை காதலித்த கல்பனாவையே...மகேஷையும் காதலிக்கும் கல்பனாவை அல்ல...மலை உச்சியில் இருந்து வீழ்ந்த அவன் காதல் செத்து விட்டது...எதற்காக போரிட்டானோ அந்த காதல் செத்த பின் அவனுக்கு வேலையில்லை...இது புரிந்தே சிவராமன் விலகினான்...அதனால் அவன் விலகியது சரியே...ஆணாதிக்க மனோபாவம் என்று சொல்ல முடியாது...செத்து போன காதலின் துக்கம் என்று வேண்டுமானால் சொல்லலாம்...."

தீர்ப்பு சொல்லி முடித்த விக்ரமாதித்தன் நிறுத்தினான்...

"என்ன வேதாளமே...உன் சந்தேகம் தீர்ந்ததா...."

வேதாளம் மண்டையை சொறிந்தது....

"ஒண்ணியும் பிரியலியே....இப்ப இன்னாங்கிற நீ...சரிங்கிறியா தப்புங்கிறியா...."

"சரியா போச்சி போ...விடிய விடிய ராமாயணம் கேட்டு சீதைக்கு அப்பா அனுமன்னு சொன்னானாம்....கலாச்சார அளவுகோல்களையும் கட்டமைப்பு திணிப்புகளையும் விடுத்து இயற்கையின் விசித்திர ஆட்டங்களின் படி அவர்கள் இருவரும் சரி...சரி...சரி...இது தான் இந்த பதினெட்டு பட்டி பஞ்சாயத்து தீர்ப்பு....சரி சரி...தீர்ப்பு தான் சொல்லிட்டேன்ல...இப்ப கைய அவுத்து விடு...ரெண்டு பேரும் கெளம்பி மந்திரவாதிகிட்ட போலாம்...உன்னை அவன் கிட்ட ஒப்படைச்சிட்டா என் கடமை முடிஞ்சது...."

வேதாளம் நக்கலாக இளித்தது....

"இன்னா மாதி....என்னை என்ன லூசுன்னு நினைச்சியா உன் கூட வர....நான் கெளம்புறேன்...நீ வேணும்னா மந்திரவாதி கிட்ட போ...."

"அட சனியனே...இந்த தடவை நான் அந்த தாடிக்காரனுக்கு என்ன பதில் சொல்ல....சரி இந்த கை கட்டையாவது அவுத்து விட்டுட்டு போ...."

"ஹிஹி..ஹீ....அது மந்திர கயிறு மாதி....நீ பதில் சொன்ன இருபத்தியெட்டாவது நிமிஷம் தானே அறுந்துடும்....அப்படி தான் செட் பண்ணியிருக்கேன்...."

"அது என்ன இருபத்தெட்டு நிமிஷம்...."

"ஓ அதுவா....அது நான் இந்த ஓட்டைக் கார்ல இந்த காட்டை விட்டு ஓட ஆகுற டைம்...."

சொன்ன வேதாளம் குடுகுடுவென்று ஓடி அந்த இருட்டில் மறைந்தது!
============================
அழுகிய தக்காளி...கெட்டுப் போன முட்டை....காலியா போன குவாட்டர் பாட்டில்....விழாத லாட்டரி...பழைய தினத்தந்தி....அரை லோடு செங்கல்... அரை குறையா உடைச்ச கருங்கல்....இது எதுவும் வீசாம அமைதியாய் இருக்கும் தமிழிஷ் தமிழ்மணம் வாக்காள பெருமக்களே....இது வரை நாட்டாமை மாதித்தன் தீர்ப்பை கேட்டீர்கள்...அடுத்து நன்றி நவில வருவது அகில உலக வருத்தப்படாத வாலிபர் சங்க உதவி துணை பொறுப்பு செயலாளரும்....லண்டன் இருபத்தி எட்டாவது வட்ட குஜமுக இணை செயலாளருமான லண்டன் ட்யூப் ரயிலுக்கே டிக்கட் எடுக்காத மாவீரன்... உங்கள் பேரன்பிற்கும் பெருமதிப்பிற்கும் உரிய மக்கள் தொண்டன்....வருங்கால முதல்வர்..."அது சரி" அவர்கள்....

==========================
பதிவர் பேருரை

பேரன்பிற்கும் பெருமதிப்பிற்கும் உரிய வாக்காள பெருமக்களே...தாய்மார்களே...தந்தைமார்களே....இளைஞர்களே...இளைஞிகளே...முன்னாள் இளைஞர்களே...இன்றைய பதிவர்களே...எதிர்கால பதிவர்களே...பின்னூட்டம் மட்டுமே எழுதும் பின்னூட்டவாதிகளே....தமிழ் மணமானாலும் சரி, தமிழிஷ் ஆனாலும் சரி...எனக்கு ஓட்டே போடாத எதிர்க்கட்சி நண்பர்களே...

முன்பே சொல்லியது போல, கதை சொல்வதை விட, இது இப்படித் தான் இருக்க வேண்டும் என்ற கலாச்சாரங்கள் எனும் திரை விலக்கி மனித மனத்தை ஆராயவே நான் முயன்று கொண்டிருக்கிறேன்...கல்பனாவும் சிவராமனும் செய்தது சரியா தவறா...சரியோ தவறோ உங்கள் அளவுகோல் என்ன...

நாட்டாமை மாதித்தன் தீர்ப்பு சரியா தவறா...உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது...கருத்துக்களை "நாட்டாமை மாதித்தன், நம்பர் 17, அஞ்சாவது குறுக்கு சந்து, ஓல்டு மாங்க் புரம், பிரிஸ்டால், BS1 8VK, யுனைட்டட் கிங்க்டம்" என்ற முகவரிக்கு அனுப்பலாம்...(கண்டிப்பாக ஸ்டாம்ப் ஒட்டவும்)

தவிர, என் எழுத்து பற்றியுமான கருத்துக்களையும் கொட்டலாம்....குறிப்பாக கதையில் எந்த இடம் சொதப்பியது...மொத்தமே சொதப்பல் தான் எதைன்னு சொல்றது என்றால் அதையும் சொல்லலாம்....

உங்களிடம் நன்றி கூறி குவாட்டருக்கு சைடாக வடை வாங்கப் போவது...அன்புடன் "அது சரி"

=======முடிந்தது....ஸ்ஸ்ஸ்...யப்பாடா...=========

Sunday 11 October 2009

நவீன விக்ரமாதித்தன் கதைகள் - காதல் சொல்லி வந்தாய்! -7


மீண்டும் அதே கோயம்புத்தூர்....அதே சாய்பாபா காலனி..அழும்

குழந்தைகள்...சிரிப்புடன்...சிந்தனையுடன்...சுடிதார்...சேலை...சில ஜீன்ஸ் பெண்கள்...வயது வித்தியாசமில்லாமல் ஜீன்ஸ் ஆண்கள்...வித்தியாசமாய் சில வேட்டிகள்....இட்லி...தோசை...பூரி...உப்புமா...பொங்கல்...ஃபுல் மீல்ஸ்...அதே அன்னபூர்ணா...அதே அழுத்தமான காஃபியின் வாசம்...எதுவும் மாறவில்லை...சிரிப்பிற்கும் அழுகைக்கும் பிறப்பிற்கும் இறப்பிற்கும் அர்த்தம் இன்றி காலதேவனின் நடனம் நடந்து கொண்டே இருக்கிறது...குப்பை கோபுரம் ஏறும்...கோபுரம் குப்பையாக நசுக்கப்படும்...இரவுகள் விடியும்....பகல் அழிந்து இருள் சூழும்....இன்றைக்கு ஒரே வித்தியாசம் அன்னபூர்ணா தவிர வெளியே மற்ற இடங்கள் இருண்டிருக்கிறது...ஏதோ ட்ரான்ஸ்ஃபார்மர் பிரச்சினை...சாய்பாபா காலனி, பாப்பாநாயக்கன் பாளையம், லட்சுமி மில்.. காந்திபுரம்...எல்லா இடங்களும் இருட்டில்....

ஊசியாய் குத்தும் மார்கழி மாத ஈரக்காற்றும்...கண்ணில் அப்பிய கருமை போல இருட்டும்...இருட்டும் ஊசியும் வெளியே மட்டுமா....

சிவராமன் கல்பனாவை வெறித்துக் கொண்டிருந்தான்...

எத்தனை பேச்சு...எத்தனை சிரிப்பு...விளையாட்டாய் எத்தனை பொய்கள்...ஏன்டா எனக்கு காஃபி சொன்ன...நீயே குடி...தான் தின்னி...நீ தான காஃபி கேட்ட...அது அப்போ...எனக்கு இப்ப காஃபி வேணாம்...ஐஸ் க்ரீம் வேணும்...இதே அன்னபூர்ணாவில் பொய்யாய் எத்தனை சண்டைகள்...சிவா...உனக்கு பையன் வேணுமா இல்ல பொண்ணு வேணுமா...வேணாம் நீ சொல்லாத...எனக்கு பொண்ணு தான் வேணும்...சானியா மீர்ஸா மாதிரி டென்னிஸ்ல பெரிய ஆளாக்கணும்...அப்புறம் பர்த் டே எல்லாம் ரெஸ்டென்ஸில தான் கொண்டாடணும்...ஃபர்ஸ்ட் ஸ்டாண்டர்ட் படிக்கும் போதே ஸ்பானிஷும் ஸான்ஸ்க்ரிட்டும் சொல்லி கொடுக்கணும்......அதென்ன ஸான்ஸ்க்ரிட்டும் ஸ்பானிஷும்....அதெல்லாம் கேக்காத....எனக்கு பிடிச்சதை என் பொண்ணுக்கு சொல்லிக் குடுப்பேன்...உனெக்கென்ன...நீ ஹோட்டலை பார்த்துட்டு இரு...

இதே கல்பனா பேசியது....எது உண்மை...எது பொய்...உண்மையில் உண்மை என்ற ஒன்று உண்டா...அன்று உண்மை...இன்று இல்லை...நிஜம் நிறம் மாறுமா...நிறம் மாறினால் அது நிஜமாகுமா...

"காஃபி ஆறுது கல்பனா..."

"ம்ம்ம்....."

கல்பனா....இந்த ஏழு வருடத்தில் சிவராமன் கல்பனா என்று சொல்லியதே இல்லை....கல்பா....

"சொல்லு கல்பனா...கல்யாணத்தை நிறுத்தணும்னு சொன்ன....ஆனா வந்ததில இருந்து எதுவும் பேசமாட்டேங்கற..."

கல்பனா சிவராமனை நிமிர்ந்து பார்த்துவிட்டு முகத்தை திருப்பிக் கொண்டாள்...குரல் தடுமாறியது....


"ஸாரி சிவா...."...

"ஸாரி...எதுக்கு ஸாரி கல்பனா...என் கூட பழகினதுக்கா....இல்ல அந்த மகேஷை பிடிக்கலைன்னு என்கிட்ட சொல்லிட்டு போனியே அதுக்கா....எதுக்கு இந்த ஸாரி..."

கல்பனாவின் அழகிய முகம் அழுவது போல் மாறியது....உதட்டை கடித்துக் கொண்டாள்....

"நீ நம்ப மாட்ட...ஆனா நிஜமாவே ஸாரி சிவா...எங்க அப்பா கெஞ்சினாரு...உனக்கு பின்னாடி ரெண்டு தங்கச்சிங்க...நித்யாவையும் நந்தினியையும் நினைச்சி பாரு....எனக்கு ஹெல்ப் பண்ணுன்னு கெஞ்சினாரு...அதான்....நான் கொஞ்சம் கன்ஃப்யூஸ் ஆகிட்டேன்....ஆனா...என்னால....நீ....உனக்கு த்ரோகம் பண்ண முடியாது சிவா...கில்ட்டி ஃபீலிங்...வேணாம்....என்னால மகேஷை கல்யாணம் செஞ்சிக்க முடியாது...ப்ளீஸ்...நான் மகேஷ் கிட்ட பேசிக்கிறேன்...நீ மட்டும் என்னை மன்னிச்சிட்டேன்னு சொல்லு...இந்த மேரேஜை நிறுத்தனும்...."

சிவராமனுக்குள் ஏதோ புரண்டது....

எத்தனை நாள் கனவு...இந்த கைப்பிடிக்க எத்தனை நாள்....

"கல்பனா....இல்ல....கல்பா...என்னால உன்னை வெறுக்க முடியாது கல்பா....இன்னைக்கி இல்ல...என்னைக்கும்...நீ என்ன சொன்னாலும் எப்படி சொன்னாலும்....ஸிம்பிள்...அன்ட் ஸ்ட்ரைட்...ஐ லவ் யூ...ஐ லவ் மை கல்பா...."

கல்பனா இதை எதிர்பார்க்கவில்லை...இத்தனை லவ்வா....நான் என்ன சொன்னாலும் உன்னால் சகிக்க முடியுமா...கடவுளே...உன்னை காயப்படுத்திவிட்டேன்...ஸாரிடா....ஐ லவ் யூ...லவ் யூ ஸோ மச்.......இனிமே பாரு....லவ்வுன்னா என்னன்னு உனக்கு காட்டுரேன்...இந்த மேரேஜ் மட்டும் நிக்கட்டும்....இந்த கல்பா எப்படி லவ் பண்றேன்னு உனக்கு காட்டுறேன்....அப்படி ஒரு லவ் நீ எங்கயும் பார்க்க மாட்ட...

கல்பனாவின் முகம் பிரகாசமானது....

"தேங்க்ஸ் சிவா...ஐ லவ் யூ டூ....லவ் யூ ஸோ மச்..."

கல்பனாவின் கைகள் சிவராமனின் கைகளை இறுக்க பற்றி கொண்டன...

=================================

இந்த வியர்வை....வியர்வை வெறுப்பானது என்று சொன்னவன் எவன்....காதலில் இதயம் வியர்க்கும் போது வெறுப்பவன் எவன்....இதயத்தின் வியர்வை காதல்.....உதடுகளின் துடிப்பு காதல்....கேசத்தின் அலைதல் காதல்...கைகளின் இறுக்கம் காதல்....இந்த ஸ்பரிசம்....இந்த ஸ்பரிசத்திற்காக எத்தனை நாள் தவமிருந்தேன் கல்பா....உன் மென்மையான இந்த கைகளை இப்படி இறுக்கி பிடிக்க எத்தனை நாள்....எத்தனை இரவுகள்....காலங்களை கணக்கெடுத்தால் கால தேவனின் கணக்கு புத்தகம் நிரம்பி விடும்...காலம்.....காலம்....கல்லால் மண்ணால் ஆன கோட்டைகளை மட்டும் அது சிதைக்கவில்லை....வாளும் வேலும் கொண்ட பேரரசுகள் மட்டும் மண்ணாகவில்லை....கால தேவனின் கரங்கள் உடைத்த காதல் கோட்டைகள் கணக்கில் இல்லை....மண்ணான மனக் கோட்டைகள் கால தேவனுக்கே மறந்து போயிருக்கும்....

"ஆனா கல்பா...."

கல்பனாவின் கைகள் சிவராமனை மேலும் இறுக்கியது...

"என்ன ஆனா...."

சிவராமன் ஆறிப் போய் கொண்டிருந்த காஃபியை வெறித்தான்....

"உனக்கு நிஜமாவே அந்த மகேஷை பிடிச்சிருக்கு....உண்மையா இல்லியா....உனக்கு கில்ட்டி ஃபீலிங் கல்பனா....சிவராமன் கிட்ட ப்ராமிஸ் செஞ்சோமே.....இப்ப மகேஷை மேரேஜ் பண்ணிக்கிட்டா உறுத்துமேன்னு கவலை....நான் உண்மையை சொல்லட்டுமா...நீ லவ் பண்றது மகேஷை தான்....சிவராமனை இல்ல....எனக்கு தெரியல‌ கல்பா....என் கிட்ட என்ன தப்புன்னு தெரியல....எப்படி அமெரிக்கா போறதுன்னு தெரியல...எப்படி பணம் சேர்க்கிறதுன்னு தெரியல....ட்ரை பண்ணிக்கிட்டு இருக்கேன்....எப்ப முடியும்னு தெரியலை...ஆனா....இன்னைக்கு....இன்னி தேதிக்கு....என்னால அமெரிக்க மகேஷோட போட்டி போட முடியலை...முடியாது...இப்ப முடியாது...."

கல்பனாவின் முகம் வெளிறியது....

"சிவா...ப்ளீஸ்....புரிஞ்சிக்கயேன்.....இந்த பொண்ணு பார்க்கிறதையே நான் ஒத்துக்கிட்டு இருக்க மாட்டேன்.....ஆனா நீ சரின்னு சொன்னியே....அப்புறம் தான ஒத்துக்கிட்டேன்....சரி....நான் தப்பு...தப்பு பண்ணிட்டேன்....கொஞ்சம் யோசிச்சி பாரு சிவா....நீ என்னை நெஜமாவே ஹேட் பண்றியா....கல்பா இல்லாம உன்னால முடியுமா...நீ என்னை லவ் பண்ணவே இல்லியா..."

சந்தோஷத்தில் மட்டும் தான் சிரிக்க முடியும் என்று சொன்னது யார்?? மரணத்திலும் சிரித்த மனிதர்கள் இருக்கிறார்கள்.....கடும் கோபத்திலும் துக்கத்திலும் சிரிக்க முடியும்....சிதம்பரம் நடராஜர் போல....

சிவராமன் சிரித்தான்.....

"இல்ல கல்பா...முடியாது....ஒரு வேளை அடுத்த ஜென்மத்துல முடியுமோ என்னவோ....ஆனா இந்த ஜென்மத்துல என்னால கல்பாவை வெறுக்க முடியாது....ஏன்னா நான் லவ் பண்றேன்....கல்பாவை லவ் பண்றேன்...இன்னிக்கும்....ஆனா....நான் லவ் பண்ண கல்பா என்னை லவ் பண்ணலை...அவளுக்கு மகேஷை பிடிச்சிருக்கு....அப்ப நான் என்ன செய்ய....விலகிடணும் இல்லியா....ஏன்னா அது தான் லவ்....உனக்கு லவ்வுன்னா என்னன்னு தெரியுமா கல்பா....காதலுக்காக காதலை துறத்தல்....நல்லா இரு கல்பனா.....மறந்துடு..மகேஷை கல்யாணம் செஞ்சிக்க....அமெரிக்கா போ...உன்னோட ஸிஸ்டர்ஸ்க்கு ஹெல்ப் பண்ணு....உனக்கு டாட்டர் தான பிடிக்கும்....அழகா பெத்துக்க....டென்னிஸ் கத்துக்குடு...சானியா மீர்ஸா என்ன...வீனஸ் வில்லியம்ஸ்...செரீனா வில்லியம்ஸ் மாதிரி ஆக்கு....ஸ்பானிஷ்...ஸான்ஸ்க்ரிட் கத்துக்குடு....சிவராமன்....ம்ம்ம்.....அழுக்கு ஜீன்ஸ்...பழைய ஓட்டு வீடு...இட்லி தோசை பூரி பொங்கல்....எங்கயோ பாப்பநாயக்கன் பாளையத்துல மெஸ் நடத்துற ஒருத்தன்...ஒரு வகையில உறவு முறை...மத்தபடி யார் அவன்....ஒரு பேட் எபிசோட்...கெட்ட கனவு....மறந்துடு கல்பா...முடியும்....உன்னால முடியும்...."

சிவராமனை இறுக்க பிடித்திருந்த கல்பனாவின் கைகள் அன்னபூர்ணாவின் ஏசியிலும் கல்பனாவுக்கு வியர்த்திருந்தது....

"சிவா....நீ ரொம்ப டென்ஷனாயிருக்க....ப்ளீஸ்....எனக்காக...கொஞ்சம் புரிஞ்சிக்கயேன்...."

"இல்ல கல்பா....எனக்கு புரியுது....என்ன கொஞ்சம்... இல்ல‌ இல்ல...ரொம்ப ரொம்ப லேட்...நான் கல்பனாவை லவ் பண்ணது, பண்றது எவ்வளவு உண்மையோ அதே அளவு கல்பனா சிவராமனை லவ் பண்ணலைங்கிறதும் உண்மை...."

சிவராமன் எழுந்திருந்தான்....

"சிவா...என்னை விட்டுட்டு போறியா...."

"ஆமா கல்பனா...எனக்கு வேற வேலையிருக்கு....மெஸ்ஸுக்கு போணும்....கணக்கு பார்க்கணும்....நாளைக்கு மெஸ் திறக்க எல்லாம் ரெடியா இருக்கான்னு செக் பண்ணனும்....மெஸ் நடத்திறது பேங்க் வேலை மாதிரி இல்ல கல்பனா....எல்லாம் நான் தான் செய்யணும்...."

"சிவா.....அது வந்து...."

"வேணாம் கல்பனா....நீ எதுவும் சொல்ல வேணாம்....கல்யாண பொண்ணு....எதுக்கு கஷ்டப்படுற...."

"நீ என் கல்யாணத்துக்கு வருவியா சிவா....."

எழுந்திருந்த சிவராமன் நின்றான்.....

"இல்ல....முடியாது....என்னால முடியாது....அம்மாவையும் மாலதியையும் அனுப்பலாம்......ஆனா மாலதிக்கு நம்ம விஷயம் எல்லாம் தெரியும்....அவ வர மாட்டா....அம்மா மட்டும் வருவாங்க....கடைசியா ஒண்ணு....ஏழு வருஷ பழக்கத்தில....உனக்கு ப்ளஸ்டூல மேத்ஸ் சொல்லிக் கொடுத்தவங்கிற முறைல கேக்குறேன்....எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணிவியா கல்பா...."

"என்ன சிவா இது...."

"செய்றேன்னு சொல்லு....."

"சரி செய்றேன்...என்ன ஹெல்ப்..."

"ரொம்ப பெரிசு இல்ல....இனிமே எனக்கு ஃபோன் செய்யாத....மகேஷுக்கு அது பிடிக்காது.....பதிலுக்கு....என்னால....ம்ம்ம்...இந்த மெஸ்க்காரன் என்ன தரமுடியும்.... எதுவும் தர முடியாது.....ஆனா என்னோட வாழ்த்துக்கள்....ஹாப்பி மேரீட் லைஃப் மிஸஸ் கல்பனா மகேஸ்வரன்...."

கல்பனாவின் பதிலுக்கு காத்திராமல் சிவராமன் வெளியேறினான்....அவனைச் சுற்றிலும் மார்கழி மாத இருள் சூழ்ந்தது.....

==========================

"கதை அவ்ளோ தான் மாதி...." என்றது வேதாளம்...


"ஏய்யப்பா...எவ்ளோ பெரிய கதை....ஆனா பாவம் சிவராமன்...கடைசில அவன் லவ் ஃபெயிலியர் ஆயிடுச்சே...."

"ம்ம்ம்க்கும்....இதை சொல்லத் தான் உன்ன இவ்ளோ செலவு பண்ணி கடத்திட்டு வந்தாங்களாக்கும்....எனக்கு வேற டவுட்டு...."

"என்னது....செலவு பண்ணி கடத்திட்டு வந்தியா....ஒரு ஒடைஞ்சி போன ஃபோர்டு ஃபியஸ்டா காரு....அழுக்கு கோட்டு....இதுக்கு பேரு செலவா....."

"அய்யய்ய....ஓன்னோட பெரிய கதையா போச்சி....அதை விடு....எனக்கு இப்ப ஒரு உண்ம தெரிஞ்சாகனும்...."

"ஆமா....இவரு பெரிய பராக் ஓபாமா...இவருக்கு எல்லா உண்மையும் தெரிஞ்சாகணும்....சரி சொல்லு....என்னது அது....."

"சிவராமனை காதலிப்பதாக சொன்ன கல்பனா மகேஷை பிடிச்சிருக்குன்னு சொன்னது சரியா? அப்படி சொன்னாலும் அவள் சூழ்நிலையின் காரணமாகவே சொல்ல நேரிடுகிறது...பின்னர் அவள் தன் செயலுக்காக வருத்தம் தெரிவிக்கிறாள்...ஆனாலும் சிவராமன் அவளை புறக்கணிக்கிறான்....சிவராமன் செய்தது சரியா? இது தான் எத்தனை பெண்களை வேன்டுமானாலும் காதலிக்கலாம், மனைவி, துணைவி என்று முத்தமிழ் வித்தகனாக விளக்கம் கொடுக்கலாம் ஆனால் ஒரு பெண் மனதாலும் மற்றவனை நினைக்கக் கூடாது என்ற ‌ திமிர் பிடித்த ஆணாதிக்க மனோபாவம் அல்லவா?....மாதித்தா...இந்த கேள்விகளுக்கு உனக்கு விடை தெரிந்தாலும் தெரியாவிட்டாலும் பிட் அடித்தாவது விடை சொல்ல வேண்டும்...இல்லாவிட்டால் உன் தலை தமிழ்நாட்டு காங்கிரஸ் கோஷ்டிகள் போல் சுக்கு ஆயிரமாக நொறுங்கி சிதறி விடும்...."

====நாட்டாமை மாதித்தனின் தீர்ப்பு அடுத்த அத்தியாத்தில் ==========

Sunday 4 October 2009

நவீன விக்ரமாதித்தன் கதைகள் - காதல் சொல்லி வந்தாய்! - 6

அத்தியாயம் ஆறு - நீ துரோகி!

முந்திய அத்தியாயங்களை படிக்க அத்தியாயம் ஒன்று, அத்தியாயம் இரண்டு, அத்தியாயம் மூன்று,அத்தியாயம் நான்கு, அத்தியாயம் ஐந்து
"இதோட மூணாவது ரவுண்டு...மூணு ரவுண்டு எட்டு பவுண்ட்....நாலு சிகரெட் எண்பது பென்ஸ்....சைடுக்கு ஒரு ஒரு பவுண்ட்...எட்டு...ஒன்னு...ஒம்போது...ஒம்போது பவுண்ட் எண்பது பென்ஸ்...எடுத்து வை மாதி...அப்ப தான் அடுத்த ரவுண்ட் ஊத்துவேன்..."

"என்னது காசா..."

"பின்ன...வர்றவனுக்கெல்லாம் ஓசில ஊத்தி கொடுக்க நான் என்ன ஜாதிக் கட்சியா நடத்துறேன்...காச எடுப்பூ...."

"அதெல்லாம் பைசா பேறாது...குடிச்சதுக்கும் நீ சொல்ற கதையை கேட்டதுக்கும் சரியா போச்சி....வேணும்னா காந்தி கணக்குல எழுதிக்க.....இப்ப‌ அவுத்து விட்டின்னா நான் பாட்டு போய்க்கிட்டே இருப்பேன்..."

வேதாளம் நீண்ட பெருமூச்சு விட்டது....

"ம்ம்ம்....வோட்டு போட்றதுக்குத் தான் காசு கேக்குறானுங்கன்னா இப்ப கதை கேட்கவுமா....ஒரு காலத்துல நான் கதை சொன்னா அம்புட்டு பேரு...இப்ப காசு குடுத்து கதை கேட்க ஆள் கொண்டு வர வேண்டியதாருக்கு...என் பொழப்பு இப்பிடி மாபெரும் மாநாடு நடத்துற கட்சி மாதிரி கேவலமாயிடுச்சே...சரி சரி...வாங்கின காசுக்கு சத்தம் இல்லாம கதை கேட்பேன்னு குவாட்டர் பாட்டில் மேல சத்தியம் பண்ணு...."

"பண்ணிட்டா போச்சி...எங்களுக்கெல்லாம் சத்தியமும் சைட் டிஷ்ஷும் ஒன்னு...அப்பப்ப நக்கிப்போம்...."

மாதித்தன் பாதி முடிந்திருந்த விஸ்கி பாட்டில் மீது அடித்து சத்தியம் செய்தான்...

"பொய் சத்தியம் செஞ்சவனுக்கு டாஸ்மாக்குல கூட‌ எடம் கிடைக்காது பாத்துக்க..."

அலுத்துக் கொண்ட வேதாளம் கதையை மீண்டும் ஆரம்பித்தது....

=====================================

"கணக்கெல்லாம் பார்த்திட்டியாடா......மாலு என்னவோ கம்ப்யூட்டர் க்ளாசுக்கு கட்டணும்னு சொன்னா...அதுக்கு ஒரு தொள்ளாயிரம் வேணும்...."

"ப்பச்ச்...நீயே எடுத்துக்கம்மா...எல்லாம் அந்த பீரோவுல தான் இருக்கு..."

"ஆமா...ஏண்டா எப்ப பார்த்தாலும் உர்ருன்னு இருக்க...எதுனா ஒடம்பு சரியில்லையா..மணி தான் ஒம்பதரை ஆச்சே...மெஸ்ஸை மூடிட்டி நீ வேணா போய் படு...நான் இந்த பாத்திரத்தையெல்லாம் கழுவி வைக்கணும்...."

சரியில்லை தான்...உடம்பு இல்லை...மனசு...ஏனோ பயமாய் இருக்கிறது...ச்சே...என்ன இது...அதான் கல்பா சொன்னாளே...பிடிக்கலைன்னு சொல்லிடறேன்னு....அப்புறம் என்ன...இன்னும் ஃபோன் வரலை...கொஞ்ச நேரம் வெய்ட் செஞ்சி பார்க்கலாம்...பத்து மணி ஆகட்டும்...

"இன்னும் அரை மணி நேரம் ஆகட்டும்மா...பத்து மணிக்கு மூடலாம்...யார்னா வருவாங்க..."

"சீக்கிரம் மூடினா கழுவி வச்சிட்டு படுக்க போகலாம்னு பார்த்தேன்.....ஆங்...ஃபோன் அடிக்குது...எடுத்து யாருன்னு பாரு..."

மாலதியின் அறையிலிருந்து ஃபோன் அடிக்கும் சத்தம் கேட்டது....

பத்து மணி ஆகப் போவுது....கல்பாவா...செல்லுக்கு தான ஃபோன் பண்றேன்னு சொன்னா...இல்ல...ஃபோன் பண்றேன்னு சொன்னா...செல்லுக்குன்னு சொல்லலை...ஆனா எப்பவும் செல்லுக்கு தான பண்ணுவா....இல்ல வேற யாராவதா... சிவராமன் குழப்பத்துடன் ஃபோனை எடுத்தான்....

"ஹலோ..."

"ஹலோ...யாரு...சிவராமனா...சிவா...நாந்தான் மாமா பேசறேன்..."

கல்பனாவின் அப்பா.

====================================

இதை எதிர்பார்க்கவில்லை...கல்பனா தான் ஃபோன் செய்திருக்க வேண்டும்...திடீரென்று அவள் அப்பா ஏன்....கல்பா அந்த மாப்பிள்ளையை பிடிக்கவில்லை என்று சொல்லி....பெரிய பிரச்சினை ஆகிவிட்டதா...அவராக சொல்லட்டும்... சிவராமன் சமாளித்துக் கொண்டான்...

"ஆ...ம்ம்..ஆமா மாமா...சிவா தான் பேசறேன்...வீட்ல எல்லாரும் நல்லாருக்காங்களா..."

"எல்லாம் நல்லாதாம்ப்பா இருக்காங்க...அம்மா எப்படி இருக்காங்க...நீ எங்க இப்பல்லாம் வீட்டு பக்கமே வர்றதில்லை..."

சண்டை போடப் போகிறார் என்று எதிர்பார்த்தால் நல்லா பேசுறாரே....ஒரு வேளை கல்பா எதுவுமே சொல்லலியோ...

"அது...வேலை ரொம்ப ஜாஸ்தியாயிடுச்சி...அதான்...என்ன விஷயம் மாமா...அம்மாவை கூப்பிடவா..."

"இருக்கட்டும்ப்பா...எல்லாம் நல்ல விஷயம் தான்...கல்பனாவுக்கு கல்யாணம் நிச்சயம் பண்ணிருக்கோம்...மார்கழி முடிஞ்சதும் கல்யாணம்....மாப்ள அமெரிக்காவுல பேங்க்குல வேலை பார்க்கிறாரு...ரொம்ப நல்ல எடம்...எனக்கு கூடமாட ஒத்தாசையா நீயும் உங்க அம்மாவும் தான் கொஞ்சம் ஹெல்ப் பண்ணனும்...அதுக்குத் தான் கூப்பிட்டேன்..."

என்ன இது...சிவராமனுக்கு கால்கள் லேசாக‌ நடுங்கியது...எதையாவது பிடித்துக் கொள்ள வேண்டும்....ஃபோன் ஏன் வழுக்குகிறது....கல்பனா எதுவுமே சொல்லலியா...இல்லை...எல்லாரும் சேந்து அவளை மிரட்டி வச்சிட்டாங்களா...லவ் பண்றதுக்கு இந்தாளுக்கும் தெரியுமே...என்ன கொழுப்பிருந்தா எனக்கே ஃபோன் பண்ணி ஹெல்ப் பண்ண சொல்வான்...இனிமே பேசாம இருந்தா ஏறி மிதிச்சிட்டு போயிருவானுங்க...

சிவராமனின் குரல் சூடாக வழிந்தது...

"என்ன மாமா...எதுவுமே தெரியாத மாதிரி பேசறீங்க...நானும் கல்பாவும் லவ் பண்றோம்...இது உங்களுக்கும் தெரியும்...அத்தைக்கும் தெரியும்...கோயம்புத்தூர்ல எல்லாருக்கும் தெரியும்...இப்ப ஃபோன் பண்ணி வேற மாப்பிள்ளை பார்த்திருக்கேன்...நீ வந்து பந்தக்கால் நடுன்னு கூப்டுறீங்க...என்ன நக்கல் பண்றீங்களா..."

எதிர்முனையில் நீண்ட அமைதி... சாம பேத தான தண்டம்...சொன்னவன் அதிபுத்திசாலி...சாமத்திலும் பேதத்திலும் சாயாவிட்டால் தானம்...தானமும் தோற்றால் மட்டுமே தண்டம்...கல்பனாவை ஜெயிக்க சாமம் பேதம்...சிவராமனை ஜெயிக்க தானம்...விளக்கை அணைத்தால் எல்லா ஆம்பிளையும் ராமன்...அவசியம் வந்தால் ஒவ்வொரு மனிதனும் சாணக்கியன்...

கல்பனாவின் அப்பா காய் நகர்த்த ஆரம்பித்தார்...

"சிவா...என்னப்பா இது...உன்னை சின்னப் பையன்லருந்து தெரியும்...உங்க அப்பா போனதுக்கப்புறம் உன்னை படிக்க வைச்சவன் நான்...எத்தனை தடவை எங்க வீட்டுக்கு வந்துருக்க...எங்க வீட்லயே சாப்பிட்டுட்டு அப்படியே தூங்கிருவ...ஞாபகம் இருக்கா...அடிக்கடி வரப் போக, நீ உறவுங்கிறது கூட எங்களுக்கு மறந்து போச்சு.....எங்க வீட்ல‌ ஒருத்தனாத் தான் ட்ரீட் பண்றோம்...கல்பனாவும் உன்னை ஒரு நல்ல ஃப்ரண்டா தான் பார்க்கிறா...நீ ஏன் அதை லவ்வுன்னு எடுத்துக்கற...சரி...விடு...உன்னையும் குறை சொல்ல முடியாது...வயசுக் கோளாறு..."

"ஃப்ரண்ட்ஷிப் மட்டும் தான்னு கல்பா உங்கள்ட்ட சொன்னாளா? அவளை பேச சொல்லுங்க...உங்க கிட்ட எனக்கு என்ன பேச்சு..."

"ம்ம்ம்...கல்பனா உன்னை பத்தி எதுவும் சொல்லலை சிவராமா...நீ நல்ல ஃப்ரண்டா இல்லாட்டியும் பரவால்ல...நல்ல மனுஷனா இரு...அவளுக்கு மாப்பிள்ளை பிடிச்சிருக்கு...சரின்னுட்டா...நீ ஏன் குறுக்க நிக்கிற..."

"நீங்க என்ன மிரட்டினீங்கன்னு யாருக்கு தெரியும்...கல்பனாவை பேச சொல்லுங்க...இல்லாட்டி நான் இப்பவே கெளம்பி வர்றேன்...நீங்க என்ன பண்ணுவீங்கன்னு பார்க்கலாம்..."

"என்ன சிவா கலாட்டா பண்றியா...நீ பண்ணுவ...உன்னையெல்லாம் நம்புனதே தப்பு...பெத்த பொண்ணை மெரட்டி கல்யாணம் பண்ணி வைக்கிற அளவு நான் கேவலமானவன் இல்ல....கல்பனாவுக்கு மாப்பிள்ளையை பிடிச்சிருக்கு....நீயே அவள்ட்ட கேட்டுக்க‌...கல்பா...இந்தா நீயே உன் ஃபரண்டு கிட்ட சொல்லு...உனக்கு மகேஷை பிடிச்சிருக்குன்னு நல்லா தெளிவா உறைக்கிற மாதிரி சொல்லு....குறுக்க நிக்க வேணாம்னு சொல்லு...."

"சிவா...நான் கல்பனா பேசறேன்..."

மிகத் தொலைவிலிருப்பது போல் மெல்லியதாக கல்பனா....

"சொல்லு கல்பா...உன்னை மிரட்டினாங்களா...யார் என்ன செய்றாங்கன்னு பார்க்கலாம்...தைரியமா சொல்லு..."

"இல்ல சிவா...யாரும் மிரட்டலை...."

சிவராமனுக்கு குரல் நடுங்கியது....

"அப்ப...அப்ப....அந்த மகேஷை உனக்கு பிடிச்சிருக்கா...."

"ஆமா..."

=================================

பெண் பார்த்து விட்டு போய் ஒரு வாரம் ஆகிவிட்டது...தேதி குறித்துவிட்டார்கள்...இன்னும் ரெண்டு வாரத்தில்.....கல்பனா மகேஸ்வரன்...

கல்பனா குழம்பிக் கொண்டிருந்தாள்...

மகேஷை பிடிச்சிருக்கு...ஆனா சிவாவையும் பிடிச்சிருக்கே...மகேஷை பிடிக்கலைன்னு சொல்ல காரணமே இல்ல...சிவாவை பிடிச்சிருக்குன்றதை தவிர...எப்படி பிடிக்கலைன்னு சொல்ல முடியும்...சிவாவை லவ் பண்ணா மகேஷை எப்படி பிடிச்சிருக்க முடியும்...ஒரு வேளை...அவன் சிவாவை விட அழகா இருக்கான்...அமெரிக்காவில வேலை...ச்சே...இல்ல...எனக்கு அது தோணவே இல்ல...

என்னமோ மகேஷை பிடிச்சிருக்கு...அதே மாதிரி சிவாவையும் பிடிச்சிருக்கு....சிவாவை ஏன் பிடிச்சிருக்கு...ரொம்ப நாள் பழக்கம்...ஃப்ரண்ட்...அவன்கிட்ட எல்லாத்தையும் பேசலாம்...அந்த முன் கோபம்...அப்புறம் ஸாரி...எல்லாம் பிடிச்சிருக்கு....மகேஷ்...ம்ம்....ஒரு மாதிரி துறுதுறுன்னு இருக்கான்...சிவா ஒரு ரிவர் மாதிரி...மகேஷ் கொஞ்சம் கடல் மாதிரி....ரெண்டு பேரையுமே பிடிச்சிருக்கு...

அது எப்படி கல்பா...ஒரு பொண்ணு எப்படி ரெண்டு பேரை லவ் பண்ண முடியும்...

லவ்வுன்னு யார் சொன்னா...பிடிச்சிருக்கு...அவ்வளவு தான்...ஒரே ஒருத்தரை தான் பிடிச்சிருக்கணுமா...ஏன் ரெண்டு பேரை பிடிச்சிருக்குன்னு சொல்லக் கூடாதா...

அப்ப லவ் வேற பிடிச்சிருக்குன்னு சொல்றது வேறயா...லவ் என்ன கெட்ட வார்த்தையா...நீ பிடிச்சிருக்குன்னு சொல்றது எந்த அர்த்தத்தில....உண்மைய சொல்லு கல்பா....நீ ரெண்டு பேரையும் லவ் பண்றியா....

ச்சே...அது அசிங்கமா இருக்கே...எப்படி ரெண்டு பேரை லவ் பண்ண முடியும்...

என்ன தப்பு கல்பா...காஃபியும் பிடிக்கும்...டீயும் பிடிக்கும்....ஆண் குழந்தையையும் பிடிக்கும்...பெண் குழந்தையும் பிடிக்கும்...அம்மாவும் பிடிக்கும்...அப்பாவும் பிடிக்கும்...அப்ப சிவராமனும் பிடிக்கும்...மகேஷும் பிடிக்கும்...இதுல என்ன தப்பு...இல்லைன்னு சொல்றியா...அப்ப நீ சொன்னதுல எது உண்மை எது பொய் கல்பா....நீ சிவராமனை லவ் பண்றேன்னு சொன்னது உண்மையா இல்ல மகேஷை பிடிச்சிருக்குன்னு சொன்னது பொய்யா...சரி, நீ சிவராமனை லவ் பண்றது தான் உண்மைன்னு வச்சிக்குவோம்....அப்ப மகேஷை ஜஸ்ட் பிடிச்சிருக்கா இல்ல லவ் பண்றியா...எதுனா ஒண்ணு தான் சாய்ஸ்...

சிவராமனோட ஏழு வருஷம் லவ் கல்பா..ஜஸ்ட் பிடிச்சிருக்குன்னு உன்கிட்ட நீயே பொய் சொல்லாத.....எத்தனை ப்ளான் பண்ணிருப்பீங்க...அழகா ரேஸ் கோர்ஸுல ஒரு ஃப்ளாட்...குட்டி குட்டியா பசங்க....ஊட்டி, கொடைக் கானல், ப்ளாக் தண்டர் வருஷா வருஷம் டூர்...அன்னபூர்ணா மாதிரி ஒரு பெரிய ஹோட்டல்...எப்படியாவது ஒரு ஃபோர்ட் கார்....

எல்லாத்தையும் மறந்துடுவியா கல்பா....உன்னால சிவராமனை விட்டுட முடியுமா...அமெரிக்காவுல போய் கார், பங்களா...பளபளப்பா புருஷன்...உன்னால வாழ முடியுமா...ஃபோர்ட் காரை பார்க்கும் போதெல்லாம் உனக்கு உறுத்தாது??...

நீ செல்ஃபிஷ்...துரோகி கல்பா...நட்புத் துரோகி...காதல் துரோகி...மகேஷ் , சிவராமன் ரெண்டு பேரும் அவங்க சைட்ல கரெக்ட்...நீ தான் தப்பு...

இல்ல...சிவராமனை மறந்துட்டு என்னால வாழ முடியாது...மனசுல உறுத்திக்கிட்டே இருக்கும்...அது மகேஷுக்கும் துரோகம்...வேணாம்...மகேஷ் கிட்ட எப்படியாவது சொல்லிக்கலாம்...சிவராமன்கிட்ட பேசினா என்ன....இப்ப டைம்...எட்டு மணி ஆகுது...சிவா இப்ப மெஸ்ல பிஸியா இருப்பானே...இருக்கட்டும்....

நைன் எய்ட் நைன் ஃபோர் ட்டூ நைன் ஃபைவ் நைன் ஃபைவ் ஒன்...

கல்பனா தன் மொபைல் போனில் சிவராமனின் எண்களை அழுத்த ஆரம்பித்தாள்....

======================

"சார்...இங்க கொஞ்சம் சாம்பார்...அடுத்து நாலு இட்லி சொல்லிடுங்க..."

"சார்...நமக்கு பில்லு எவ்வளவு....ஏதோ ஃபோன் அடிக்குது பாருங்க..."

Kalpa Calling....Kalpa Calling.... சிவராமன் தன் மொஃபைல் ஃபோனை வெறித்தான்...

கல்பா...ஏன் பேச வேண்டும்....பேச என்ன இருக்கிறது....இல்லை...கல்பாவிடம் பேசாமல் இருக்க முடியாது....

"ஹலோ...சிவராமன் ஹியர்..."

"சிவா...நான் கல்பா...உன்கிட்ட கொஞ்சம் பேசணும்...."

சிவராமனுக்கு கசப்பாக இருந்தது....

"என்ன பேசணும்....கல்யாணத்துக்கு பந்தக்கால் நட நான் வரணுமா...."

அமைதி....

"இல்ல சிவா...இந்த கல்யாணத்தை நிறுத்தணும்..."

======================== தொடரும் =====================

(பின் குறிப்பு: ஆணி அதிகமாகி என் பாடி பஞ்சர் ஆகிவிட்டதால் கடந்த சில நாட்களாக அதிகம் படிக்க முடியவில்லை...எதுவும் எழுதவும் முடியவில்லை...தாமதத்திற்கு நண்பர்கள் மன்னிப்பார்களாக...Also sorry for this such a long post...நீ அப்படியே எழுதிட்டாலும்.. வெளங்கிரும்...சந்தோஷமா இருந்தம்டே என்பவர்கள் துக்கத்தில் அடுத்த குவாட்டரை ஆர்டர் செய்க‌!)