அலி சபாத் என்றால் உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை, ஆனால் இதைப் படிக்கும் மிடில் ஈஸ்ட் நண்பர்களுக்கு தெரிந்திருக்கலாம். அவர் லெபனானை சேர்ந்தவர். ஐந்து குழந்தைகளின் தகப்பன். லெபனானின் பெரும்பான்மை மதமான இஸ்லாமியர். தொழில் முறையில் ஒரு டி.வி. நிகழ்ச்சியாளர். டி.வி நிகழ்ச்சி என்றால் யாரோ எழுதி யாரோ இசையமைத்த பாடலை நோகாமல் யாருக்கோ டெடிகேட் செய்யும் நிகழ்ச்சி அல்ல, ஒரு வகையில் ஆவி அமுதா போல, தமிழ்நாட்டின் எண்ணற்ற திருட்டு சாமியார்கள் போல குறி சொல்லும் நிகழ்ச்சி.
இஸ்லாமின் விதிகளின் படி குறி சொல்லுதல், உருவ வழிபாடு போன்றவை கடுமையான குற்றங்கள். ஒரு இஸ்லாமியரான அவருக்கும் அது தெரிந்தே இருக்கும். சரி குறி சொன்னதுடன் நிறுத்தி இருக்கலாம். ஆனால் எல்லா இஸ்லாமியர்களுக்கும் இருப்பது போல கடமையோ அல்லது கனவோ, மெக்கா/மெதினா புனிதப் பயணம் செய்ய அவருக்கும் தோன்றி இருக்கிறது.
விதி சில நேரங்களில் புனிதப் பயண
ம் என்ற பெயரிலும் வரும் போலிருக்கிறது. புனிதப் பயணமாக சவுதி அரேபியா சென்ற அவர், 2008ல் சவுதி அரேபியாவின் மத பாதுகாப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டு இருக்கிறார். 2008லிருந்து இரண்டு வருடங்களாக அவரது நிலை யாருக்கும் தெரியவில்லை. அவரது மனைவி குழந்தைகள் உட்பட.சமீபத்தில் அவருக்கு மத ரீதியான குற்றங்களுக்காக மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.
இந்த மரண தண்டனை சென்ற வெள்ளியன்று (ஆமாம், புனித வெள்ளி தான்) நிறைவேற்றப்படுவதாக இருந்த நிலையில் அலி சபாத்தின் வழக்கறிஞரும் மற்ற பல மனித உரிமை அமைப்புகளும் செய்த முயற்சியின் விளைவாக தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. அன்றைக்கு நடப்பதாக இருந்தது மட்டுமே தள்ளி வைக்கப்பட்டிருக்கிறதே தவிர தண்டனை இன்னமும் மாற்றப்படவில்லை. எந்த நேரத்திலும் அவரது தலை துண்டிக்கப்படலாம்.
அலி சபாத் குறி சொல்லும் நிகழ்ச்சி நடத்தியது சரியா, பகுத்தறிவான செயலா என்ற கேள்விகளை விடுத்து, அவர் யார் உயிருக்கும் ஆபத்து ஏற்படுத்தியதாகவோ, பொது மக்கள் கூடும் இடங்களிலும் அலுவலகங்களிலும் குண்டு வைத்ததாகவோ இல்லை ஓடும் ரயிலில் பீக் அவரில் ஏறி குண்டு வைத்ததாகவோ தெரியவில்லை.
அவர் செய்த ஒரே குற்றம் இஸ்லாமால் தவறு என்று சொல்லப்பட்ட ஒரு செயலை செய்ததே.

சம்பந்தப்பட்டவர் லெபனானை சேர்ந்தவர். புனித பயணமாக வந்த மாற்று நாட்டவரை சவுதி மத போலீஸ் கைது செய்து அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது. சம்பந்தப்பட்ட சவுதி அரசு, அல் குரானையே அரசியல் சட்டமாக அறிவித்திருக்கும் ஒரு நாடு. அங்கு சட்டம் என்றால் இஸ்லாமின் ஷரியா சட்டமே.
குரானை அரசியல் சட்டமாக அறிவித்து ஷரியா சட்டத்தை பின்பற்றும் ஒரு நாடு மதத்தின் பெயரால் மாற்று நாட்டவர் ஒருவரின் தலையை வெட்ட உத்தரவிடுகிறது என்றால், எழும் கேள்வி, உண்மையிலேயே இஸ்லாமும் குரானும் இது போன்ற சில்லறை குற்றங்களுக்கு தலையை வெட்டவும் கை காலை வெட்டவும் உத்தரவிடுகிறதா? எல்லையற்ற அருளாளனால் அருளப்பட்டதாக சொல்லப்படும் குரானில் உண்மையிலேயே இப்படி உத்தரவுகள் இருக்கிறதா? இப்படி சொல்லியிருந்தால் அது என்ன விதமான கருணை?
==================
சரி, அல்குரான் சட்டம், அலி சபாத்தின் தலை என்று இதை கடந்து போய்விடலாம். ஆனால் உங்கள் தலைக்கு எப்படியோ இதில் என் தலைக்கு நிச்சயமாக ஆபத்து இருக்கிறது.
சவுதியின் ஷரியா சட்டப்படி, அயல் நாட்டவர்களும் மாற்று மதத்தினவரும் கூட விதிவிலக்கல்ல. இதை படிக்கும் நீங்கள் எப்படியோ, ஆனால் எனக்கு இஸ்லாம் மீதோ அல்லது வேறு எந்த ஒரு மதத்தின் மீதோ நம்பிக்கை இல்லை என்பதால் மது அருந்துதல், பன்றி மாமிசம் உண்ணுதல் போன்ற விஷயங்களை நான் விரும்பி கொண்டாட்டத்துடன் தான் செய்து கொண்டிருக்கிறேன். விரும்பி இல்லாவிட்டாலும் விழாக்களின் போது மற்றவர்களுக்காக கோவில்களுக்கும், சர்ச்சுக்கும் கூட செல்வது உண்டு. வேறு வழியின்றி முழங்காலிட்டோ இல்லை என்றைக்கும் கண் திறக்காத கல்சிலைகளின் முன் கைகட்டி நிற்பதும் கூட உண்டு.
அப்படியானால் என்றைக்காவது சவுதி சென்றால் என் தலையும் துண்டாக்கப்படும் வாய்ப்புண்டா? உலகில் இருக்கும் அறுநூறு கோடி பேரில் சுமார் முப்பது சதவீதம் இஸ்லாமை கடைபிடிப்பவர்கள் என்று வைத்துக் கொண்டாலும் மீதி இருக்கும் சுமார் 420 கோடி பேர் நிலை என்ன? இப்படி தலைகளை துண்டித்துக் கொண்டே போனால் உலகத்தில் எத்தனை தலைகள் மிஞ்சும்?
தொடர்புடைய சுட்டிகள்:
http://news.bbc.co.uk/1/hi/world/middle_east/8598134.stm
http://news.bbc.co.uk/1/hi/world/middle_east/8600398.stm
http://edition.cnn.com/2010/WORLD/meast/03/31/saudi.arabia.sorcery/index.html
படம் உதவி: சி.என்.என் மற்றும் பிபிசி


