Showing posts with label வாள் வீச்சு. Show all posts
Showing posts with label வாள் வீச்சு. Show all posts

Friday, 26 December 2008

ஜெயமோகனின் மத்தகம்: நட்பு,துரோகம்,காமம், காதல், சோரம்... வாள்வீச்சு


யானையை பிடிக்காதவர்கள் யார்? என் அம்மா போல்...நான் கொடுத்த பத்து பைசாவிற்கு தலை தடவிய யானை...என்னடா ஒரே ஒரு வாழைப்பழம் தானா...ஓரக்கண்ணால் நக்கலாக சிரித்தாலும் துதிக்கையால் என் தோள் தட்டிய யானை...ஏழு வயதில் வகுப்பில் முதல் ராங்க் வாங்கியதற்காக என் தந்தை தோள் தழுவியதை விட இன்னமும் மறக்காமல் இருக்கிறது... நான் எவ்ளோ பெரிய ஆள்...நீயெல்லாம் சும்மா சுள்ளான் என்று பலம் காட்டாமல் யப்பா, யப்பா என்று நான் அலற அலற துதிக்கையால் வாரி மத்தகத்தின் மேல் தூக்கி வைத்துக் கொண்ட யானை...ஒரு வேளை யானை என்னை அணைத்து முத்தமிடுவதாகக் கூட நினைத்து கொண்டிருக்க கூடும்....சிலரது அன்பு நமக்கு புரிவதில்லை...புரிந்த போது அவர்கள் இருப்பதில்லை...
ஜெயமோகனின் மத்தகத்தை யானை காதலின் பேரிலேயே படிக்க ஆரம்பித்தேன்..ஆனை ஆனை அழகர் யானை அழகரும் சொக்கரும் ஏறும் ஆனை..
இப்படி சிறுபிள்ளையாக ஆரம்பித்தது விரைவில் மாறியது...வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது ஜெயமோகனுக்கு கை வந்த கலை....அதிலும் அந்த மொழி நடை அவர் ஏற்றிக் கொண்டிருப்பது ஊசி என்பதே பல நேரங்களில் மறக்க செய்கிறது...
கேசவன் யானையின் தலைமைப் பாகனான ஆசான்...அவருக்கு அடுத்த நிலையின் அருணாசலம் அண்ணன்...அடுத்து யானை மேய்க்கும் பரமன்...அவனுக்கும் அடுத்த நிலையில் சுப்புக் கண்....மூன்றாம் நிலையில் இருக்கும் பரமன் சொல்வதாகவே கதை நிகழ்கிறது...
ஆசான் "சவமே" என்ற ஒரு வார்த்தை சொன்னதற்காக அவரது காலை முறிக்கும் கேசவன்...சுப்புக்கண் தன் முன்னால் ஒரு பெண்ணுடன் பேசிக் கொண்டிருந்தான் என்பதற்காக அவன் அருகில் வந்தால் விரட்டி அடிக்கும் கேசவன்...
// சுப்பு நடுங்கியபடி கைகளை மார்பில் வைத்துக்கொண்டு மெல்ல அலைநாக்குகள் ததும்பிய நீர் விளிம்புவரை வந்தான். அவன் நீரில் கால் வைக்கவும் கேசவன் பயங்கரமாகப் பிளறியபடி எழுந்தான். நீரலைகள் எழுந்து மணல் விளம்பை நக்கின. //
// ”ஆசானே.. ஆனை என்னை கொன்னு போடும். என்னை கொன்னு போடும் ஆசானே. வயசான அம்மை இருக்கா ஆசானே” என்று கெஞ்சி அழுதான். நான் கேசவனைப் பார்த்தேன். பக்கவாட்டில் நன்றாக மல்லாந்து கிடந்தான். பக்கவாட்டு நெற்றிக்குழியில் நீர் தேங்கியிருந்தது. சிறிய கண்களைச் சுற்றி சருமம் சுருங்கி விரிந்தது. அவனுடைய உடலே சுப்புக்கண்ணை கவனிக்கிறது என்று எனக்குத் தெரியும். சுப்புக்கணின் கால்கள் நீரைத் தொட்ட அந்தக் கணமே யானை பிளிறி எழும். .....கனத்த கால்கள் மணலில் கிருகிருவென பள்ளம் செய்ய மெதுவாக நடந்து சுப்புக்கண்ணை நோக்கிச் சென்றது.
.... சுப்புக்கண் அப்படியே தரையோடு தரையாக விழுந்து கிடந்தான்...
....என் உடலில் நாற்றம் அடித்தது. கீழே மணலில் சுப்புக்கண் பேதி போயிருந்தான். //
// பிற யானைகளுக்குப் போல ‘காலெடுத்தானே’ ‘கையெடுத்தானே’ ‘வலத்தானே’ ‘இடத்தானே’ என்றெல்லாம் கத்தக் கூடாது, சொல்லக்கூடாது. துரட்டியும் குத்துக்கம்பும் எடுப்பதைப் பற்றி கற்பனைகூட செய்ய முடியாது. //
கேசவனின் பெரிய தம்புரானின் மறு உருவம்...ஆளும் தம்பிரானின் ஆத்ம ஸ்நேகிதன்..ராஜ ஸ்நேகிதம்...ராஜ கல்பனை பெற்ற யானை.அதன் மத்தகத்தின் மீது தம்புரானை தவிர யாரையும் அது அனுமதிப்பதில்லை...
//
அந்த உத்தரவு எப்படி கேசவனுக்குத் தெரிந்தது என்பதே ஆச்சரியம்தான். வேறு எவரையும் தன் மத்தகத்தின் மீது ஏறுவதற்கு கேசவன் அனுமதித்தததில்லை. சட்டென்று பயங்கரமாக பளிறியபடி கொம்பு குலுக்கிய கேசவன் ஓரடி பின்னால் வைத்தான். கோபம் கொண்ட ·பல்குனன் நாயர் தன் உடைவாளை உருவியபடி ”எந்தடா?” என்று கேட்டபடி ஆசானை வெட்ட வருவதற்குள் கேசவன் மீண்டும் பிளிறியபடி துதிக்கையால் பல்குனன் நாயரை ஓங்கி ஒரு தட்டு தட்டினான். நாயர் தெறித்துப் பின்னாலிருந்த கல்தூணில் மண்டை அடித்து கீழே விழுந்து மூர்ச்சையானான் //
// கோபமாக உள்ளே வந்த இளையதம்புரான் ”கேசவனுடே மீதெ திடம்பும் ஞானும் அல்லாதே ஆரும் கேறல் அருது எந்நு சொன்னது என்னுடெ ராஜ கல்பனை. அது கடந்நவன் ஆரெந்நாலும் மரணம் அவனுடெ விதி. ஆருக்குண்டு மறு வாக்கு? ம்ம்? //
// ”சொல்லும் பொருளும் அறிஞ்š நான் சொல்லுந்நேன். கேசவன் நம்முடைய ஆனை. அவனுடெ மீதே நாம் அல்லாதே ஓராளும் கயறுக இல்ல” என்றார். //
இப்படி ராஜ மரியாதையுடன் வலம் வரும் கேசவன் மீது ஆசான், பாகன்கள் என்று யாரும் ஏறி விடமுடியாது...ஆனால் அவனுக்கோ கரடிக்குளம் நாராயணன் என்ற யானையை மிஞ்சி விட ஆசை... பாகன் பரமனும் அருணாசலம் அண்ணனும் நட்பு..ஆனால் அருணாசலத்தின் காதலியை பரமன் மிரட்டி அடைகிறான்...
// அருணாச்சலம் அண்ணா தணிந்து, ”மக்கா லே, நீ எனக்க தம்பியில்லா? அவ உனக்கு அம்மையப் போலாக்கும் லே” என்றார். ”அந்தச் சோலியே வேண்டாம். நடக்குமா நடக்காதா சொல்லும்” என்றேன். //
// அருணாச்சலம் அண்ணன் சட்டென்று என் கால்களைப் பற்றிக் கொண்டார். இருட்டில் அவரது கண்கள் பளபளவென்று ஈரமாக இருப்பதைக் கண்டேன். அவர் கைகைள் என் கால்களில் சூடாகப் பதிந்தன. ”தம்பி, உன்னை என் சொந்தத் தம்பியாட்டு நெனைச்சியேம்ல… வேண்டாம்ல… மகாபாவம்ல. //
முதலில் சாவேன் என்று மிரட்டி பின்பு பரமனுடன் உடன்படும் அருணாசலத்தின் காதலி...
// அவள் தரையிலேயே கிடந்தாள். நான் அவள் கைகளைப் பற்றித் தூக்கி எடுத்தேன். வியர்த்துக் குளிர்ந்த உடம்பு நீரில் வந்த வாழை போலிருந்தது... ”என்னை கொல்லப்படாது… என்னையும் என் பிள்ளையையும் நாசம் பண்ணிப்பிடாது… நான் செத்திருவேன்….கூடப்பிறப்பா நினைக்கணும்…தம்புரானே….உங்கள தெய்வமா கும்பிடுதேன்” என்று என்னை உந்தி நெளிந்தபடி கண்ணீர் வழியச் சொன்னாள். அவளைப் பேசவே விடக்கூடாது என்று இறுகப் பிடித்து இழுத்துப் பாயில் தள்ளினேன். ”அய்யோ வயித்தில பிள்ள… பாத்து” என்று அவள் பதறிக் கெஞ்ச ஆரம்பித்தாள். //
இப்படி செய்யும் பரமன் அடுத்து அருணாசலத்திற்கு மேலும் பெரும் துரோகம் செய்கிறான்...அவரது மனைவியை தான் பெண்டாள்கிறான்...கோயில் நகையை திருடுகிறான்...
// அவரது கண்கள் மூன்று மாதம் தாண்டாத குழந்தையின் பனிபடர்ந்த விழிகளுடன் இருந்தன. ”ஓடிவாங்க ஓடி வாங்க… அண்ணனை ஆனை தூக்கிப் போட்டுட்டுது… அய்யோ” என்று கதறியபடி நான் தோப்புக்குள் நுழைந்து நெய்யாற்றின்கரை கோயிலை நோக்கிச் ஓடினேன். //
இதையெல்லாம் ஒட்டியோ என்னவோ கேசவன் பரமனை அருகிலும் நெருங்க விடுவதில்லை...பரமனுக்கு அடுத்த நிலையில் இருக்கும் சுப்புக்கண் (மரண பயத்துடன் கதையில் அறிமுகமாகும் அதே சுப்புக்கண்!!) அதிகாரம் பெறுகிறான்...
// அவனுக்குத் தெரியாமலிருக்காது. ஒரு மாதமாக என்னை கேசவன் அருகிலேயே விடுவதில்லை. என்னுடைய வாசனை கிடைத்தாலே முன்னங்காலை தூக்கி வைத்து ம்ம் என்று ஒலியெழுப்பும். //
கேசவனின் பாடும் சுகமில்லை...தம்புரானுக்கு உடல் நிலை சரியில்லாது போக, அவரின் மகனின் அதிகாரம் ஏற்படுகிறது...அவனுக்கோ குதிரைகளே பிரியம்....அப்பொழுது தான் கேரளத்தில் அடியெடுத்து வைத்திருக்கும் ஆங்கிலேயர் ஸ்னேகிதம்...யானையை பிடிப்பதில்லை...தம்புரான் இறக்க அங்கு செல்லும் கேசவனுக்கு செல்லும் கேசவனுக்கு பல்வேறு அனுபவங்கள்...
// உள்ளே இருந்து இளையதம்புரான் வருவதைக் கண்டேன். அவர் கையில் நீளமான துப்பாக்கி இருந்தது. மூக்குத் துளைபோல இரட்டைக் குழல்கொண்ட தோள் உயரமான துப்பாக்கி. பழுத்த மூங்கில் நிறமான குழாய். ஈட்டி மரத்தாலான மட்டை. அதை தோளில் தூக்கியபடி வந்த தம்புரான் வாசலில் நின்று கடும் கோபத்தில் முகம் சுளித்து, ”போ.. போடா” என்றார். //
// அவர் துப்பாக்கியை நீட்டியபடி மேலும் பின்னகர்ந்து குறி பார்த்தார். //
// இளைய தம்புரான் அந்தக் துப்பாக்கியின் கீழே உள்ள வளையத்துக்குள் சுட்டுவிரலால் அழுத்த அது மூடி திறந்து கொள்ளும் ஒலி கேட்டது. //
ஐயோ கேசவா என்று மனதில் ஒலி எழுந்த நேரத்தில் கேசவனின் முடிவு..... ஜெயமோகன் ஊசி ஏற்றுகிறார் என்று நினைத்திருந்த நேரத்தில் ஒரே நேரத்தில் பல வாள்களை வீசுகிறார்... மரத்தை மறைத்தது மாமத யானை மரத்தில் மறைந்தது மாமத யானை..... யானைக் கதையாக படிப்பவர்களுக்கு முடிவில் கதை முற்றிலும் ஒரு புதிய கோணம் காட்டுகிறது.. நட்பு, துரோகம்,சூழ்நிலைக்கேற்ப மாறும் கற்பு, நான்கு வருணங்கள், தொடர்ந்து கைமாறும் அதிகாரம்...வர்க்க பேதத்தை உடைப்பதில் ஆங்கிலேய ஆட்சியின் மறைமுக பங்கு...உண்மையில் முடிவில் தான் இந்த கதை ஆரம்பிக்கிறது....
சூரியனுக்கு டார்ச் அடிப்பது அனர்த்தம் என்று தெரிந்தாலும் ஜெயமோகனை பாராட்டாமல் இருக்க முடியவில்லை!
இவ்வளவு சொல்லிவிட்டு இதை சொல்லாவிட்டால் நன்றியாகாது...ஓரளவு ஜெயமோகனை படித்திருந்தாலும்....நான் இந்த கதை படிக்க முக்கிய காரணம் திரு. சுரேஷ் கண்ணன் அவர்களின் இந்த பதிவே... சுரேஷ் கண்ணனுக்கு நன்றி!

சமீப காலமாகவே எனக்கு தெரிந்த மிஸஸ்.டவுட் அவர்களும் மத்தகம் குறித்து மிக அழகாக ஒரு பதிவிட்டிருக்கிறார்...
ஜெயமோகனை படிக்க விரும்புபவர்கள் தயவு செய்து அவர் தளத்திலேயே படித்து கொள்ளுங்கள்....
மத்தகத்தின் சுட்டிகள்