Saturday 17 January 2009

நவீன விக்கிரமாதித்தன் கதைகள் - மோகத்தைக் கொன்றுவிடு - பாகம் ஏழு

முன் அறிவிப்பு : கலாச்சாரம் தான் என் மூச்சு...தெய்வீக காதல் தான் என் பேச்சு...காதல்னா கடவுள்...காமம் ஒரு சைத்தான் என்று பெருமாளுக்கே வைகுண்டம் திறக்கும் கலாச்சார காதலர்கள் இந்த தொடரை படிக்க வேண்டாம்.

எச்சரிக்கை : நான் படிக்கிறது ராணி காமிக்ஸ்...இல்லாட்டி சிறுவர் மலர் என்று சொல்லும் குழந்தைகளும் பொம்பளைன்னா அடக்க ஒடுக்கமா வீட்ல இருக்கணும் அடங்குனாதான் அவ பொம்பள என்று சொல்லும் பெரியவர்களும்...இது உங்களுக்கான கதை அல்ல..மீறிப் படித்தால் பின் விளைவுகளுக்கு நான் பொறுப்பல்ல.
இந்த கதையின் முந்திய பாகங்களை இங்கே படிக்கலாம்.

முன்கதைச் சுருக்கம்:
எடின்பரோவில் தன் அன்றைய கேர்ள் ஃப்ரண்டுடன் ரெஸ்டாரன்டில் இருக்கும் விக்கிரமாதித்தனை வேதாளத்தை பிடித்து வரும்படி மந்திரவாதி தொந்தரவு செய்கிறான்....வேதாளத்தை பிடிக்க செளத் வேல்ஸில் இருக்கும் ப்ரெக்கன் ரேஞ்சஸ் காட்டுக்கு செல்லும் விக்கிராமாதித்தனிடம் வேதாளம் வைஜெயந்தியின் கதையை சொல்கிறது...
இருப‌த்தொரு வ‌ய‌தான‌ திருக்கும‌ர‌ன் த‌ன‌து முத‌ல் வேலையில் சேர‌ அலுவ‌ல‌க‌ம் செல்கிறான்..அங்கு அவ‌ன‌து மேல‌திகாரி குருமூர்த்தி அவ‌னுக்கு வைஜெய‌ந்தியை அறிமுக‌ப்ப‌டுத்தி வைக்கிறார்...வைஜெய‌ந்தியை பார்க்கும் திருக்கும‌ரன் அவள் மேல் காதல் கொள்கிறான்....அதே சமயம் அவனது மேலதிகாரி குருமூர்த்தியும் வைஜெயந்தியை ரகஸியமாக காதலிக்கிறார்...ஆனால் வைஜெயந்திக்கு ஜெய் என்ற பெயரில் கணவன் இருப்பது தெரிய வருகிறது...

இனி.....

=========================


பொம்மலாட்டம்

"இந்த மழைல அடிச்ச டக்கீலாவெல்லாம் எறங்கிடும் போலருக்கே...வேகமா நட மாதி...காங்கிரஸ்காரய்ங்க காமராஜ் ஆட்சி அமைச்ச மாதிரி இம்புட்டு மெதுவா நடந்தா என்னிக்கி போய் சேர்றது..." வேதாளம் மாதித்தனை அவசரப்படுத்தியது....

"அவய்ங்க ஆட்சி அமைக்கிறாய்ங்களோ இல்லியோ....ஒனக்கு அவய்ங்கள மாதிரியே வாயி....உள்ள சரக்கு இல்லாட்டியும் பேச்சு மட்டும் ஒண்ணும் கொறச்சல் இல்ல...."

"அதான் சொன்னன் இல்ல...உள்ள ஏத்தின சரக்கெல்லாம் எறங்கிடுச்சி...இனிமே எதுனா ஏத்துனா தான் பேச முடியும்...."

"எப்பிடி...தமிழ்நாட்டு காங்கிரஸ் காரய்ங்க மாதிரியா...ஓசில கெடச்சா ஒரு குவாட்டருக்கு நாலு குவாட்டருன்னு அடிச்சிட்டி நடுத்தெருவுல அசிங்கம் பண்ண மாதிரி தான் அவய்ங்க பேசிட்டு இருக்காய்ங்க...அவய்ங்கள விடு...எங்க உன் குகை..."

"இந்தா வந்திடுச்சி...இது தான்...."

குகையைப் பார்த்த மாதித்தனுக்கு எரிச்சலாக இருந்தது...

சில உடைந்த பாத்திரங்கள்...உடைந்த பாட்டில்கள்..நசுங்கிய பியர் கேன்கள்...பாதி அடித்த சிகரெட்கள்...என்றோ சாப்பிட்டு விட்டு மீதி வைத்த பீட்ஸா....

"என்ன கருமம் இது...இதெல்லாம் ஒரு எடம்...கார்ப்பரேஷன் குப்பைத் தொட்டியே இதை விட நல்லாருக்கும்...."

"அடக்கி வாசி மாதி...எலெக்ஷன் டைம்ல அவனவனுக்கு இதயத்துல தான் எடம் கெடைக்குது....அந்த எடத்துக்கு இந்த எடம் எவ்வளவோ க்ளீன்..."

"அடக் கெரகம் புடிச்ச சனியனே...எங்க சுத்தினாலும் அங்கயே வர்றீயே...ஒனக்கெல்லாம் அவாள் இவாள்....அப்புறம் டவுசர் கிழிஞ்ச வேதாள்னு ஒரு கவுஜ எழுதினா தான் சரிப்படுவ போலருக்கு...மாஞ்சா நெஞ்செனல்லாம் வந்து ஒன்ன நொங்கு எடுக்குறதுக்குள்ள கதைய சொல்லு..."

"என்னது மாஞ்சா நெஞ்சனா...பேரக் கேட்டாலே அதிருதுதே...."

மாஞ்சா நெஞ்சனை நினைத்து தன் நெஞ்சை பிடித்துக் கொண்ட வேதாளம் கதையை தொடர ஆரம்பித்தது....

================================

பாவைக் கூத்து....பரவைக் கூத்து...தோல் கூத்து..பொம்மலாட்டம்...மிகப்பெரிய கூத்து எது... ஆர்ப்பரிக்கும் கடலின் வேகம்...கண்ணுக்கு தெரியாத காற்றின் வேகம்...எது வேகம்...இல்லை என்கிறார்கள்...இருக்கிறது என்கிறார்கள்...

ஆனால் மனம் ஆடும் கூத்து...தாம் தோம் தக்கிட தோம்...தக்கிட தக்கிட தோம்....முயலகன் மேல் நடராஜர் ஆடும் கூத்தை விட அதி வேகமாய் சுழன்றாடுகிறது...


அவனவன் மனம் அவனவன் மேடை...ஆடும் வரை ஆடும்...பார்ப்பவர் யாருமில்லாவிட்டாலும் தினம் ஒரு கூத்து...இறந்த காலம் நிகழ்காலம் எதிர்காலம்...எந்த இயந்திரமும் இல்லாமல் எல்லாக் காலத்திற்கும் எந்த நொடியிலும் பரவும் ஜோதி...மானஸ தேவியை எரித்த ஜோதி...மேடை சாம்பலாகும் வரை எரியும் ஜோதி...ஜோதி ஜோதி ஜெக ஜோதி.....ஜோதியை அணைத்தவர் எவருமில்லை...அணைக்கப்படாதவர் எவருமில்லை...ஜோதியை கலந்து ஜோதியாய்...பிறக்கும் போதே விலங்குடன் பிறந்தவன் மனிதன்...விலங்கு வெளியில் இல்லை...உள்ளே...சில சமயங்களில் வெளிச்சம் தரும் ஜோதியாய்...பல நேரங்களில் உள்ளிருந்து எரிக்கும் ஜோதியாய்...

வைஜெயந்தியின் மனம் கூத்தாடிக் கொண்டிருந்தது... ஜெய்..ஜெய்....ஏன் மீண்டும் ஜெய்...என்ன ஆயிற்று இன்று...ஏதோ புதிதாய் இத்தனை நாட்களாய் இல்லாமல்...

குருமூர்த்தியா? அவருக்கு என்னவோ ஆகிவிட்டது...தினமும் நேராக பார்க்கும் ஆள் இன்றைக்கு எங்கோ பார்த்துக் கொண்டு...

இல்லை வைஜெயந்தி...உண்மையை சொல்...குருமூர்த்தியால் தான் உன் மனம் ஆடுகிறதா...நீ தினமும் தான் குருமூர்த்தியை பார்க்கிறாய்...ஆனால் ஏன் இன்று...

குமரன்??....

அது...அது தான் வைஜெயந்தி...உனக்கு குமரனை பிடித்திருக்கிறது...அவன் உளறல் பிடித்திருக்கிறது...வெட்கத்துடன் அவன் சிரிப்பது பிடித்திருக்கிறது... அவள் மனம் குதித்தது...

ச்சீ....கெட்ட புத்தி...அவன் நல்லாருக்கான்....அதுமில்லாம கொஞ்சம் ஜெய் மாதிரியே இருக்கான் இல்ல....அதான்...வேற ஒண்ணுமில்ல....

வேற ஒண்ணுமில்லையா...நிஜமாவே?....

ம்ம்ம்....இல்ல எனக்கு ஜெய் ஞாபகமா இருக்கு....குமரன் ஜெய் மாதிரியே இருக்கான்...அதே உயரம்...அதே மாதிரி கொஞ்சம் கோணல் சிரிப்பு...அப்புறம் அதே உளறல்...ஆனா இவன் ஜெய்யை விட கொஞ்சம் கறுப்பு...

அப்ப உனக்கு ஞாபகம் ஜெய் தான்னு சொல்ற...

இல்லியா பின்ன....

அப்ப போய் ஜெய்யை பார்க்க வேண்டியது தான...இங்க என்ன பண்ற...

இன்னும் ஆஃபிஸ் முடியலையே....நாலு மணி தான் ஆகுது...வேலை இருக்கே...

அது தினம் இருக்கறது தான்...ஒனக்கு ஞாபகம் ஜெய் மேல தான்னு சொன்னா எங்க இப்ப ப்ரூவ் பண்ணு...

எப்பிடி....

பெர்மிஷன் போட்டுட்டு போ...ஒனக்கு குமரன் மேல லவ்வுன்னு நான் சொல்றேன்...இல்ல ஜெய் தான்னு சொன்னா நீ தான் ப்ரூவ் பண்ணனும்...

அசிங்கமா பேசாத...அந்த பையன் வயசென்ன...என் வயசென்ன...டிசம்பர் வந்தா முப்பத்தி ஓண்ணாவுது... அவன் பாப்பா மாதிரி இருக்கான்....

ஐ....வயசெல்லாம் கணக்குப் போட்டிட்டியா...

மனம் எக்காளம் கொட்டியது..

மனதுடன் சண்டையிடுவது வைஜெயந்திக்கு சலிப்பாக இருந்தது....

எத்தனை நாள் உன்னுடன் சண்டையிடுவது... உன் தொல்லை தாங்க முடியலை...சரி...நான் இப்பவே பெர்மிஷன் போட்டுட்டு போறேன்...நீ தப்புன்னு ப்ரூவ் பண்றேன்...

மொதல்ல ப்ரூவ் பண்ணு வைஜ்...அப்புறமா பேசலாம்...

============================

வைஜெயந்தி பர்மிஷன் போட்டு விட்டு வெளியேறிய போது மணி நான்காகியிருந்தது....உதய சூரியன் உதிக்கிறதோ இல்லையோ மதுரை சூரியன் சுட்டெரிக்க தவறுவதில்லை...அது மாலையானாலும்....

மேல மாசி வீதி, கீழ மாசி வீதி, சிம்மக்கல், மீனாட்சி அம்மன் கோயில்...பெரும் கூட்டம் பெரியார் பஸ் ஸ்டாண்ட்...மீனாட்சி அம்மன் கோயிலுக்கு போகணும்னா பெரியார் பஸ் ஸ்டாண்ட்ல எறங்கு....மீனாட்சி அம்மன்...பெரியார்...இது மீனாட்சிக்கோ பெரியாருக்கோ தெரியுமா.... கோயிலுக்கு வந்தவர்கள்...உசிலம்பட்டிக்கு பஸ் எங்க மாப்ள ஏறணும்...தேடுபவர்கள்...கணக்கு மாஸ்டர் சூப்பரா இருக்காருல்ல...எங்க ஐயன் தோல உரிச்சிருவாருடி....மாப்ள...ஒரு ரவுண்டு ஏத்திக்கிட்டு அப்பறமா தங்க ரீகல் போலாம்டா...பேசிக் இன்ஸ்டின்க்ட்னு புதுசா போட்ருக்காய்ங்க...கரெக்டா இருக்கும்...தேவர் ஒயின்ஸின் நீண்ட கால கஸ்டமர்கள்...தலைவரு அரசியலுக்கு வந்தா இவய்ங்கல்லாம் தாங்க மாட்டாய்ங்க...தாயோளிங்க...ரசிகர்கள்...

பாண்டியன் பஸ் பிடித்து...கூட்டத்தோடு கூட்டமாக நசுங்கி....வைஜெயந்தி பழங்காநத்தம் வீட்டை அடைந்த போது....மணி ஐந்தாகி இருந்தது....

======================================

அப்பா...ஆஃபிஸை விட்டு சீக்கிரம் வந்தது நிம்மதியாக இருக்கிறது...பொய்யானது என்றாலும் விடுதலை...கொஞ்ச நேர விடுதலை... ஆனால்....வீட்டில் யார் இருப்பார்கள்...சுபாவுக்கு இன்னும் ஸ்கூல் முடிந்திருக்காது...வந்திருக்க மாட்டாள்....வந்தவுடன் குதிக்கப் போகிறாள்...அம்மாவை பார்த்து....அவள் குதிப்பதை பார்த்து நாளாயிற்று...சின்ன சின்ன சந்தோஷங்களை கூட கொடுக்க முடியாமல்...என்ன வாழ்க்கை....

ஜெய்....ஜெய் இருப்பான்....லவ் யூ ஜெய்...எனக்காக எல்லாவற்றையும் உதறியவன் அல்லவா நீ... ஏனோ என்றைக்கும் இல்லாமல் இன்றைக்கு மனம் புரட்டிப் போடுகிறது..நான் ஏதோ தவறு செய்கிறேன்...உறுத்தலாக இருக்கிறது....நீ தான் வழி சொல்ல வேண்டும்....உனக்கு தெரியும் ஜெய்....

வைஜெயந்தியின் மனம் அவளை விட வேகமாக நடந்தது....

==========================

வீட்டின் கதவை திறந்து....எங்கிருந்தோ வந்திருந்த ஒரு இன்லண்ட் லெட்டர்...பால் பாக்கெட்...ஏதோ ஒரு துண்டு நோட்டீஸ்....அவளுக்கு எதையும் பார்க்க நேரமில்லை....படுக்கையறைக்குள் பாய்ந்தாள்....

ஜெய் வழக்கம் போல் சிரித்துக் கொண்டிருந்தான்...

"ஜெய்...ஒனக்கு ரைட் ஹாண்ட் தான...அப்புறம் என்ன சிரிக்கும் போது மட்டும் லெஃப்ட் ஹாண்ட்...."

"ஐயோ வைஜ்...இதெல்லாமா கேப்பாங்க....தெரிலையே....ச்சின்ன வயசு பழக்கம்..."

அவனைப் பார்த்ததும் பிடித்துப் போக வைத்தது இந்த சிரிப்பு தான்...கொஞ்சம் கோணலாக...கொஞ்சம் வெட்கத்துடன்...கலைந்த தலை...இடது கையில் நெற்றியை தாங்கி....ஒனக்கு எப்படி சொல்றதுன்னே தெரியல வைஜ் என்பது போல‌...அதே சிரிப்பு...

"ஜெய்...இன்னைக்கு குமரன்னு ஒரு பையன் வந்திருந்தான்...உன்னை மாதிரியே சிரிப்பு...எனக்கு உன் ஞாபகம் வந்திருச்சி...ஒரு வேளை அவன் உனக்கு தெரிஞ்சவனா இருப்பான்னு நினைச்சேன்...ஜெய்....எனக்கு அவனை பிடிச்சிருக்குன்னு நினைக்கிறியா....இல்ல...எனக்கு தெரியல....இன்னிக்கு திங்கட் கிழமை தான...வெள்ளிக்கிழமை போட்ட பூ அதுக்குள்ள எப்படி வாடிப் போச்சி...பூக்காரன் வந்தா பூ வாங்கணும்...உண்மைய சொல்றேன்...மனசு ரொம்ப அல்லாடுது ஜெய்...ப்ளீஸ்...தப்பா எடுத்துக்க மாட்டதான...உனக்கு புரியும் ஜெய்..."

எந்த பதிலும் சொல்லாமல் ஜெய் என்ற ஜெய்ஷங்கர் அமைதியாக இருந்தான்...

ஃபோட்டோவில் அதே வெட்கச்சிரிப்பும் வெள்ளிக்கிழமை போட்ட மாலையுமாக....

=====================

சிவாஜி ரேஞ்சுக்கு ஓவர் ஆக்டிங் உடன் கதை சொல்லி வந்த வேதாளத்தை மாதித்தன் அவசரமாக கை நீட்டி தடுத்தான்...

"நிறுத்து நிறுத்து...."

"என்னா என்னாச்சி மாதி...நீ கடுப்பாயி என் மூஞ்சில உன் பீச்சாங்கைய வைக்கப் போறேன்னு நெனச்சேன்"...

"ம்ம்க்கும்...அப்படி ஒரு நினைப்பு வேறயா ஒனக்கு....ஒம் மூஞ்சில பீச்சாங்கைய வச்சா அப்புறம் அதை ஆசிட் ஊத்தி தான் கழுவணும்..."

வேதாளம் முறைத்தது...

"அப்புறம் என்னாத்துக்கு தங்கப்பதக்கம் சிவாஜி மாதிரி கைய காட்டுன...."

"தங்கமாவது...தகரமாவது...அதெல்லாம் ஒண்ணுமில்ல...குளுரு பின்னி எடுக்குது....குளிருக்கு தேவை மது மாதும்பாய்ங்க....இங்க இருக்கறது ஓண்ணு தான்...அதனால அந்த டக்கீலாவ எடு....ஒரு ரவுண்டு அடிச்சிட்டு மீதி கதை கேக்கலாம்..."

"ஹிஹிஹி....நானே தொறக்கலாம்னு இருந்தேன்...நீயே சொல்லிட்ட...."

புதுசாய் பதவி கிடைத்த எம்.எல்.ஏ போல் வேதாளம் காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை இளித்தவாறே பாட்டிலை திறக்க ஆரம்பித்தது...

=============தொடரும்=============

Friday 9 January 2009

கலைஞருக்கு ஒரு கடைக்கோடி (முன்னாள்) தொண்டனின் கடிதம்
தமிழகத்தின் மூத்த தலைவருக்கு,
வணக்கம் ஐயா.நீங்கள் உங்கள் குடும்பத்தோடு மிக்க சுகமாய் இருப்பீர்கள் என்று நம்புகிறேன். இவ்விடம் எல்லாம் சுகம் என்று சொல்ல முடியாத நிலையில்...இருந்தாலும் தோழைமையோடும் ஏழமை பேசுதல் நம் பண்பாடு இல்லையே..அதனால் சுகம் என்றே சொல்லி வைக்கிறேன்..

யாரடா நீ என்று நீங்கள் கேட்பதற்குள்...உங்களுக்கு என்னை தெரியாது...ஆனால் உங்களை எனக்கு சிறுவயதிலிருந்தே தெரியும்..ஏழு வயது இருக்குமென்று நினைக்கிறேன்.."போடுங்கம்மா ஓட்டு சூரியனப் பாத்து" என்று ஓட்டு சாவடியில் நின்று உங்களுக்காக ஓட்டு கேட்டு இருக்கிறேன்..அதற்காக எம்.ஜி.யார் பக்தரான என் தந்தையிடம் அடியும் வாங்கி இருக்கிறேன். 

அத்துடன் நின்றதா என் பைத்தியக்காரத் தனம்? கல்லூரி சேர்ந்த முதல் வருடம் ஒரு தேர்தல் வந்தது...அன்று நடந்த அராஜக ஆட்சியை ஒழிக்க வேண்டும் என்று உங்களுக்காகவும் உங்கள் ஆதரவு பெற்ற தம்பிகளுக்காகவும் கல்லூரியை புறக்கணித்து விட்டு கிராமம் கிராமமாக திரிந்திருக்கிறேன்...கட்சி என்னவோ வென்றது...ஆனால்....

உங்களை ஜெயலலிதா அரசு அதிகாலையில் கைது செய்த‌ போது அய்யோ கொல்றாங்களே...கொல்றாங்களே என்று அலறிய போது...ரத்தம் கொதித்த கோடிக்கணக்கான மக்களில் நானும் ஒருவன்....பேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்...அன்று கொல்லும் அரசன் ஆணை வென்றுவிட்டது...என்று துடித்தவர்களில் நானும் ஒருவன்...உங்களை விடுவிக்க வேண்டும் என்று உண்ணாவிரதம் இருந்து போலீசிடன் அடிவாங்கிய அப்பாவிகளில் நானும் ஒருவன்...லண்டன்ல இருந்து லீவுக்கு வந்துருக்க...உனக்கு ஏண்டா இந்த ஊர் அரசியல் என்று என் தந்தை கண்டித்த போதும் அவரிடம் சண்டை போட்டிருக்கிறேன்...எனக்கு அவர் எப்படியோ அப்படியே நீங்களும் ஒரு தந்தையே...

என்னவென்று தெரியவில்லை...உங்கள் மீது அப்படி ஒரு நம்பிக்கை...தமிழினத்திற்கு இருக்கும் ஒரே தலைவன் என்ற நம்பிக்கை...நீங்களும், அறிஞர் அண்ணாவும், நெடுஞ்செழியன், மதியழகன், பேராசிரியர் அன்பழகன், மற்றும் பல எண்ணற்ற தொண்டர்கள் இல்லாதிருந்தால் தமிழ்நாட்டில் இந்தி திணிக்கப்பட்டிருக்கும்...தமிழுக்கு சவக்கிடங்கு தோண்டப்பட்டிருக்கும் என்று இன்னமும் நம்புபவர்களில் நானும் ஒருவன். 


உங்களுக்கு தெரியுமா ஐயா, என் தாயின் சகோதரன், என் தாய் மாமன் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் போலீசார் அடித்த அடியில் கால் முடமாகிப் போனான்...அவனுக்கு அப்பொழுது வயது பதினைந்தோ என்னவோ...பிற்காலத்தில் இதனாலயே அவன் திருமணம் தடைப்பட‌ இருபத்தைந்து வயதில் தற்கொலை செய்து கொண்டான்...அவன் வீழ்ந்தாலும் ஒவ்வொரு மனிதனின் கடமையான தாய் மொழியை காப்பதில் அவன் தன் கடமையை செய்து விட்டே வீழ்ந்தான்...வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும்...உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு...

ஆனால் ஐயா, திரும்பி பார்க்கையில் நான் செய்தது சரிதானா என்று எனக்குள் பெரும் கேள்விகள் எழுந்த வண்ணமே இருக்கின்றன...

உண்மையில் தவறு என்று ஆரம்பித்தது? 
அடைந்தால் திராவிட நாடு, இல்லையேல் சுடுகாடு என்ற கொள்கையிலிருந்து பின்வாங்கி இன்றைக்கு முப்பது உறுப்பினர்கள், நாளை நாம் தான் நாடாள வேண்டும் என்று ஆரம்பித்த பதவி ஆசையிலா?
இல்லை என் கட்சி, என் பதவி, என் குடும்பம் என்று நீங்கள் எம்.ஜி.ஆரை ஓரம் கட்டிய போதா?

நீங்கள் எம்.ஜி.யாரை எதற்கு ஓரம் கட்டினீர்கள் என்று எனக்கு தெரியாது ஐயா..அப்பொழுது நான் பிறக்கவேயில்லை...ஆனால் நீங்கள் வை.கோ.வை கட்சியை விட்டு நீக்கினீர்களே...அன்று தான் உறவு உடைந்தது ஐயா...அன்று தான் உடைந்தது...

சரி, கட்சியை விட்டு நீக்க உங்களுக்கு உரிமை இருக்கலாம்...ஆனால் அதற்கு நீங்கள் சொன்ன காரணம்? 

"விடுதலைப் புலிகளின் துணையுடன் என்னை கொல்ல முயற்சி" என்று கொலைப்பழி சுமத்தினீர்களே?? நெஞ்சுக்கு நீதி எழுதிய உங்கள் நெஞ்சைத் தொட்டு சொல்லுங்கள்...ஜெயலலிதா அரசால் உங்களுக்கு அனுப்பப்பட்ட இந்த செய்தி உண்மை என்று நீங்கள் உண்மையிலேயே நம்பினீர்களா இல்லை நொண்டி குதிரைக்கு சறுக்கியதே சாக்கு என்று இதை காரணமாக வைத்து ஸ்டாலினுக்கு எதிர்கால போட்டி என்று கருதப்பட்ட வைகோவை வெளியே அனுப்பினீர்களா??

எத்தனையோ காரணங்கள் சொல்லியிருக்கலாம்...ஆனால் கொலைப் பழி?? கட்சிக்கு ரத்தமும் சதையுமாக இருந்த வைகோ மேல் உங்களுக்கு இப்படி ஒரு பழி சுமத்த எப்படி மனம் வந்தது?? இது முதுகில் குத்தும் துரோகம் அல்லவா?

நடந்தது பழங்கதை...அதை ஏன் அல்பமாக கேள்வி கேட்கிறாய் என்று நீங்கள் சொல்லக்கூடும்....ஆனால் இப்பொழுது நடப்பது என்ன?

தயாநிதி மாறனுக்கு எதற்கு பதவி கொடுத்தீர்கள்? முரசொலி மாறனின் மகன், உங்களுக்கு பேரன் என்பதை தவிர, அவர் கட்சிக்கும் நாட்டுக்கும் ஆற்றிய அரும்பணிகள் என்ன?? எந்த தகுதியில் அவர் எம்.பி. சீட்டுக்கு நிறுத்தப்பட்டு உடனடியாக மத்திய மந்திரி ஆக்கப்பட்டார்??

அது தான் அப்படி என்றால்....எந்த அடிப்படையில் எதன் காரணமாக அவர் மந்திரி பதவியிலிருந்து விலக்கப்பட்டார்? எதனால் ஒருவர் மந்திரியாகிறார், எதனால் ஒருவர் நீக்கப்படுகிறார் என்று மக்களுக்கு சொல்ல வேண்டாமா?? இது அடிப்படை ஜனநாயகம் அல்லவா?? ஜனநாயகம் பற்றி அடிக்கடி பேசும் உங்களுக்கு இது ஏன் மறந்து போயிற்று???

இப்பொழுது திடீரென்று பனித்தது...இனித்தது...கூவத்தில் பன்றி குளித்தது என்றெல்லாம் பேட்டி கொடுக்கிறீர்கள்... ஆனால் முதலில் ஏன் புளித்தது என்றே நீங்கள் சொல்லவில்லையே ஐயா??

மாநில பொறுப்பை கவனிக்க ஸ்டாலின், மத்திய பொறுப்புக்கு முரசொலி மாறன்...அவர் இறந்து விட்டால் அடுத்து என் பேரன்...அது தான் தயாநிதி மாறன்....அவனை தூக்கிவிட்டால் வேறு எவனுக்கும் தகுதியில்ல்லை...என் மகளே என்று நீங்கள் திரு.கனிமொழியை அவசர அவசரமாக எம்.பி.ஆக்கியது நியாயமா?? 

நான் தான் தி.மு.க தலைவர்...அதுவும் போட்டியின்றி தேர்ந்து எடுக்கப்பட்ட தலைவர்..என்று நீங்கள் சொல்லலாம்...ஆனால் தி.மு.க உங்கள் கட்சியில்லையே? அது அண்ணாதுரையால், லட்சக்கணக்கான தி.மு.க தொண்டர்களால் அன்றைக்கிருந்த காங்கிரஸ் அரசிடம் அடியும் உதையும் வாங்கி வளர்க்கப்பட்ட கட்சியல்லவா?? இது உங்கள் குடும்ப வியாபாரம் அல்லவே மகளுக்கு, மகனுக்கு, பேரனுக்கு என்று பங்கு பிரிக்க??

உனக்கு அரசியல் தெரியாது என்று நீங்கள் என்னை ஒரே சொல்லில் ஒதுக்கலாம்...உண்மை தான் எனக்கு குடும்ப அரசியல் தெரியவில்லை...புரியவும் இல்லை...

உலகத் தமிழர்களின் ஒரே தலைவர் என்று இன்னமும் உங்களை சிலர் சொல்கிறார்கள்...அதை இன்னமும் சிலர் நம்பிக் கொண்டிருக்க கூடும்.... இன்றைக்கு இலங்கை பிரச்சினையில் நீங்கள் செய்யும் செயல்கள் வெந்த புண்ணில் வெங்காயத்தைத் தேய்ப்பது போல் இருக்கிறது....

டி.ஆர். பாலுவுக்கு கப்பல் துறை, போக்குவரத்து துறை இல்லையென்றால் அரசில் சேர மாட்டோம் என்று அடம்பிடித்த நீங்கள் இலங்கையில் சின்னஞ்சிறு குழந்தைகள் வரை கொன்று குவிக்கப்படும் போது, மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதுகிறீர்கள்...கம்யூனிஸ்டுகள் கூட்டம் நடத்திய பின், மனித சங்கிலி என்று அறிவிக்கிறீர்கள்....மற்ற நாட்டு பிரச்சினையில் இந்தியா தலையிட முடியாது என்று அறிக்கை விடுகிறீர்கள்....


மத்திய வெளியுறவு மந்திரி இலங்கை செல்வார் என்று அறிக்கை விட்டீர்கள்...உங்கள் அடிப்பொடிகள் அதையும் கொண்டாடினார்கள்....ஆனால் நடப்பது என்ன?? மந்திரி இன்னமும் மந்தியாக இங்கு தான் இருப்பார்....எப்பொழுது செல்வார்....எல்லாரும் செத்த பின் அனுதாபம் தெரிவிக்கவா? மலர் வளையம் வைக்கவா? எவனுக்கு வேண்டும் உங்கள் அனுதாபமும் மலர் வளையமும்??

என்னை என்ன தான் செய்ய சொல்கிறாய்...ஆதரவை வாபஸ் வாங்கினால் இந்திய அரசு கவிழும் ஆனால் இலங்கை பிரச்சினை தீராது என்று நீங்கள் வாதாடக் கூடும்...

உண்மை தான் ஐயா....


ஆனால், நீங்கள் ஏன் இலங்கை அரசுக்கும், விடுதலைப்புலிகளுக்கும் ஒரு சமரச தீர்வு காண முயற்சிக்கக் கூடாது?? 

இந்திய அரசு தலையிட வேண்டாம்...குறைந்த பட்சம் சிங்கள ராணுவத்திற்கு பயிற்சியும், ஆயுதங்களும், ஆலோசனைகளும் கொடுப்பதை நிறுத்தலாமே?? 

இந்தி எதிர்ப்புக்காக போரடிய உங்களால் இதை ஏன் ஒரு மக்கள் இயக்கமாக எடுத்து செல்ல முடியாது?? நீங்கள் தலைமை ஏற்றால் இன்றும் கோடிக்கணக்கான மக்கள் குவிவார்களே?? மக்கள் திரண்டால் இந்திய அரசால் அதை புறக்கணிக்க முடியுமா? ஒரு வேளை எதிர்க்கட்சியாக இருந்தால் தான் அதையெல்லாம் செய்வீர்களா??

இதுவரை இத்தனை நடந்தும் ஒரு துரும்பைக் கூட நகர்த்தாமல் படுகொலையை ஊக்குவிக்கும் இந்திய அரசில் நான்கு மந்திரிகளுடன் நீங்களும் ஒரு அங்கம்....உண்மையில் தமிழ்நாட்டை பொறுத்தவரை இந்திய அரசு என்றால் நீங்கள் தான்....மறந்து விடாதீர்கள்..

விடுதலைப் புலிகள் வன்முறைவாதிகள் என்ற பல்லவியை பாடாதீர்கள்....அஹிம்சை முறையில் போராடிய தந்தை செல்வா, உண்ணாவிரதம் இருந்தே உயிர்விட்ட திலீபன் என்ன ஆனார்கள் என்று உங்களுக்கு தெரியும்...விடுதலைப் புலிகள் எந்த சூழ்நிலையில் உருவானார்கள் என்றும் உங்களுக்கு தெரியும்....கண் முன்னே தாயும், சகோதரியும் கற்பழிக்கப்படுவதை பார்க்கும் எவனும் புலியாகத் தான் மாறுவான்...1980களில் ஜே.வி.பியும், இலங்கை அரசும் செய்த இனப்படுகொலைகள் உங்களுக்கு தெரியாதா?? எத்தனை தாய்களும், அவர்கள் வயது வராத மகள்களும் கற்பழிக்கப்பட்டு, லாரி டயருடன் கட்டி, பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டனர்??? இந்த சூழ்நிலையில் அவர்கள் துப்பாக்கி எடுப்பதை தவிர உண்ணாவிரதமா இருக்க முடியும்??

அது எல்லாம் பழங்கதை..இப்பொழுது நடப்பது என்ன?? ராஜீவ் காந்தியை கொலை செய்தார்களே என்று நீங்கள் சொல்லக்கூடும்....

இருக்கலாம்...அதே சமயம் ராஜீவை கொன்றது சந்திராசாமி என்று கூட சில தகவல்கள் உண்டு....ஆனால், இப்பொழுது நடப்பது புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் நடக்கும் போர் என்று நீங்கள் சொல்கிறீர்களா?? அப்படியானால், பள்ளி மீது குண்டு வீசி, குழந்தைகளை கொன்றது?? 

அதற்கெல்லாம் நான் ஒன்றும் செய்ய முடியாது...என்று நீங்கள் நினைத்தால் அதையாவது சொல்லி விடுங்கள்....மறக்குலத்தில் வந்த உங்களுக்கு இதை சொல்ல மனத் துணிச்சல் உண்டு என்று நம்புகிறேன்...ஆனால், கடிதம் எழுதுகிறேன், கோரிக்கை வைக்கிறேன் என்று ஊருக்காகவும், அரசியலுக்காகவும் நடிக்காதீர்கள்..

மற்றவர்களிடம் கேட்க வேண்டியது தானே...என்னிடம் ஏன் கேட்கிறாய் என்று நீங்கள் கேட்கலாம்...உண்மை தான்...ஆனால், தமிழ்நாட்டில் பெரும் இயக்கங்கள் என்றால் நீங்களும், ஜெயலலிதா அம்மையாரும் தான்...அவர் நிலைப்பாடு தெரிந்த விஷயம்....எப்படியாவது எல்லா தமிழர்களும் ஒழிந்தால் சரி என்பது அவரது வெளிப்படையான நிலை....உங்கள் நிலையும் அது தான் என்றால் சொல்லிவிடுங்கள்... அவரை மன்னிக்கலாம்....ஏனெனில் அவர் நெஞ்சில் குத்துகிறார்...ஆனால் நீங்கள் ஐயா....முதுகில் அல்லவா குத்துகிறீர்கள்???

எதிர்காலத்தில் தமிழ்நாட்டின் சரித்திரத்தை எழுதும் எவரும் திருக்குவளை முத்துவேலர் கருணாநிதியை புறக்கணித்து எழுதிவிட முடியாது...ஆனால் நீங்கள் தமிழின தலைவராக எழுதப்படுவீர்களா இல்லை தமிழ்நாட்டில் வந்து சென்ற மற்றொரு அரசியல்வாதியாக இனம் காணப்படுவீர்களா என்பது உங்கள் கையில் தான் உள்ளது...

திருக்குறளுக்கு உரையெழுதிய உங்களுக்கு நான் சொல்ல வேண்டியதில்லை...ஆனாலும் உங்கள் பணிச்சுமைகளால் நீங்கள் மறந்துவிட்டிருக்கலாம் என்பதால் ஒன்றே ஒன்று சொல்ல விரும்புகிறேன்...

தக்கார் தகவிலார் என்பதவரவர்
எச்சத்தாற் காணப்படும்

====================================

Tuesday 6 January 2009

கன்யாகுமரியும், புகையும் சிகரெட்டும், பின்னே ஒரு விருதும்

பேசாம வாய மூடிக்கிட்டு தூங்குடான்னு சொல்லுவாங்க....ஆனா சில பேரு தூங்கும் போதும் வாய மூட மாட்டேங்கிறானுங்க...கரண்ட் இருக்கோ இல்லியோ கொர் கொர்ருன்னு பம்பு செட்டு ஓட்ட ஆரம்பிச்சிடுறானுங்க....அதுவும் அதி காலையில மூணு மணிக்கு இப்பிடி சத்தம் கேட்டா பக்கத்துல இருக்கறவனுக்கு எப்பிடி தூக்கம் வரும்....

ரூம் மேட்டு புண்ணியத்துல அந்த சனிக்கிழமை சீக்கிரமே எந்திருச்சிட்டேன்...கோயம்புத்தூர்ல காலங்காத்தால தெருவுல நடந்தாலும் பிரச்சினை...திடீர்னு வந்து போலீசுகாரங்க தூக்கிட்டு போயிருவாங்க....சரி என்ன பண்றது....குளிர்ல நடுங்கிட்டே குளிச்சிட்டு....அப்படியே வெளிய வந்து அண்ணாச்சி கடைல நாலு வில்ஸு...பத்த வச்சிக்கிட்டே நடந்தா காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட் வந்துடுச்சி...அங்க மொபஸல் பஸ் ஸ்டாண்டு உள்ள போயி ஒரு காஃபி சாப்பிட்டுட்டு பேப்பர் வாங்கிட்டு போலாம்...

அண்ணே ஒரு காஃபி..சுகர் ஜாஸ்தியா...அப்பிடியே தினமலர் ஒண்ணு கொடுங்க...விகடன் இன்னும் வர்லீங்களா....

திருப்பி ஒரு தம்மை அடிச்சிக்கிட்டே காஃபிய முடிச்சா...பக்கத்துல ஒரு பஸ்ஸு கெளம்பிட்டு இருந்துச்சி...பஸ் ஸ்டாண்டுல பஸ்சு கெளம்பாம பின்ன துபாய் போற ஃப்ளைட்டா கெளம்பும்..

எந்த ஊருக்கு போறாய்ங்க‌...கன்னியாகுமரி... வக்காளி...கோயம்பத்தூரிலருந்து கன்னியாகுமரி போறதுன்னா....பல்லடம், காங்கேயம்....தாராபுரம்...மதுர...தின்னவேலி...நாகர்கோயிலு...அப்பிடியே கொஞ்சம் எட்டி நடையப்போட்டா குழித்துற...எல கேரளாவுக்கே போயிடலாம்ல...

கண்டக்டரு நான் பஸ் ஏற தான் நிக்கிறேன்னு நெனச்சிட்டாரு போலருக்கு....

தம்பி...சீக்கிரம் ஏறு...பஸ்ஸ எடுக்கப் போறேன்....எங்க போணும்...

திடீர்னு தோணிச்சி....

"கன்னியாகுமரி சார்"

அந்த நிமிடம் வரை பயணம் செல்வதாக எந்த திட்டமும் இல்லை...ஏன் பயணம் செய்ய தோன்றியது என்றும் தெரியாது....கன்யாகுமரி என் சொந்த ஊரும் அல்ல...குறைந்த பட்சம் நண்பர்கள் கூட இல்லை...அங்கு எவரையும் எனக்கு தெரியாது...

=====================

இப்ப இந்த கதையெல்லாம் என்ன மயித்துக்குடே சொல்ற....

இருக்கிறது ஐயா....இருக்கிறது...

நான் என்ன எளவுக்கு பதிவு எழுதுகிறேன்....எழுத்தாளர் ஆக விருப்பமா? இல்லை கருத்து பொர்ச்சி செய்ய போகிறேனா... இல்ல நல்லதா நாலு பதிவு எழுதி பிரபல பதிவர் ஆகணுமா....

ஒரு மண்ணும் இல்லை....ஏன் எழுத ஆரம்பித்தேன்....நான் 
கன்னியாகுமரி செல்ல என்ன காரணமோ அதே காரணம் தான்....கையில் காசு இருந்தது...பக்கத்தில் பஸ்சும் இருந்தது...போய் விட்டேன்...

என் பதிவுகளும் அதே....பேப்பர் கிடைத்தால் கிறுக்கித் தள்ளும் சிறுவனைப் போல...

எப்படி ரூம் மேட்டின் குறட்டை என்னை அதிகாலையில் காந்திபுரத்திற்கு நடக்க வைத்ததோ....ஒரு மிகப்பிரபல வாரப்பத்திரிக்கையின் ஒரு கட்டுரையும் என்னை வெறுப்பேற்றியது பதிவெழுத ஒரு காரணம் என்று சொல்லலாம்...

"லண்டன் ஆகிறது சென்னை....இன்றைக்கு சென்னையை சுற்றிலும் மூன்று டிஸ்கோ கிளப்புகள்..."

என்ன மயிருடா இது.....ஒன்றரை கோடி பேரு இருக்கற சென்னையில மூணு நைட் கிளப் இருக்கறது பெரிய மேட்டரா? ச்சப்ப மேட்டரு...இதுக்கு ஒரு கட்டுரையா...

அது அத்துடன் முடியவில்லை....

"சென்னை இளைஞர்கள் இப்படி சென்று கொண்டிருப்பது சமூக அக்கறை உள்ளவர்களை பெரிதும் கவலைப்பட வைத்திருக்கிறது...."

இன்னும் கொடுமை...அதுக்கு ஆன்லைன் வாசகர் பின்னூட்டம் வேறு...

"நான் அமெரிக்காவுல அஞ்சி வருஷமா இருக்கேன்...ஆனா இதுவரைக்கும் எந்த கிளப்புக்கும் போனதுல்ல...தமிழ் கலாச்சாரத்தை பின்பற்றுவதில் நான் பெருமை கொள்கிறேன்".....இந்த மயிருக்கு அமெரிக்காவுல இருந்து என்ன ஆஃப்கனிஸ்தானில இருந்து என்ன....

அடிங்க....அப்ப நைட் கிளப் போனா இவங்க கலாச்சாரம் கெட்டுருமா??? 

எந்த கலாச்சாரத்த பார்த்து இப்படி நாட்டுல லஞ்சம் வாங்கி குவிக்கிறானுங்க..சைக்கிள்ல போனவன் கூட கவுன்சிலராயிட்டா காருல தான் போறான்....அவனுக்கு எச்சல் பொறுக்க பத்து கைத்தடிங்க வேற...பனித்தது...இனித்ததுன்னு அறிக்கை விட்டே ஒருத்தரு அரசியல் நடத்தறாரு....எந்த நாட்டு கலாச்சாரத்த பாத்து நான் மேல் சாதி, நீ கீழ் சாதின்னு ஒதுக்குறானுங்க....எந்த நாட்டு கலாச்சாரத்துல இத்தனை பவுனு, இவ்வளவு ரொக்கம் குடுத்ததான் கல்யாணம் பண்ணுவேன்னு பப்ளிக்கா விபச்சாரம் அதுவும் பத்திரிக்கை அடிச்சி பண்றானுங்க??

இதுல எல்லாம் கெடாத கலாச்சாரம் நைட் கிளப் போனா கெட்டுடுமாம்.....அப்பிடி என்ன வெளக்கெண்ணை கலாச்சாரம்டா அது???

நான் பதிவு எழுத ஆரம்பிச்சதே கடுப்புல தான்...எனக்கு நல்லா எழுத வரும்னு எந்த நம்பிக்கையிலும் இல்ல....நான் எழுதறதே பெரும்பாலும் சாட்டர்டே நைட்டு கிளப்புக்கு போயிட்டு வந்துட்டு தான்...நைட்டு பன்னெண்டு மணிக்கு வந்தா அடுத்த அரை மணி நேரத்துல எழுதி, அத கால் மணி நேரம் ஃபார்மேட் பண்ணி...அப்பிடியே அப்லோட் செய்றது...

தண்ணியடிச்சா தம்மடிக்கிற மாதிரி....சனிக்கிழமை நைட்டு டைம் கெடச்சா பதிவு எழுதறது....நான் தம்மடிக்கிறதுக்கும் பதிவு எழுதறதுக்கும் பெரிய வித்தியாசம் இல்ல....

இதெல்லாம் இப்ப சொல்றதுக்கு ஒரு காரணம் இருக்கு....திடீர்னு நண்பர் மோகன் எனக்கு பட்டர்ஃபிளை விருது குடுக்குறேன்னு சொல்லிட்டாரு....நான் எழுதறது பத்தி யாரு என்ன நெனைக்கிறாங்கன்னு எனக்கு தெரியாது....ஆனா நான் என்ன நெனைக்கிறேன்னு எனக்கு தெரியும்ல???

எழுத்தை நேசிக்கிறேன்...தமிழை சுவாசிக்கிறேன்...எளக்கியம் படைக்க முயற்சிக்கிறேன்னு கதை விட எல்லாம் எனக்கு விருப்பம் இல்ல...தண்ணியடிச்சா தம்மு....ஸாட்டர்டே நைட்டு போதையேறாம இருந்தா எழுத்து....நான் அடிக்கிறது ஜல்லி....எழுதறது மொக்கை...

இதுக்கு போய் விருதா??? ரொம்ப ஓவரா இருக்கேன்னு மோகன்கிட்டயே சொல்லிட்டேன்...ஆனா அவருக்கு நாம கிறுக்கறது ரொம்ப பிடிச்சி போச்சி போலருக்கு....அந்த விருது உங்களுக்குத் தான்னு சொல்லிட்டாரு....

விருதுக்கு நன்றின்னு அவரு நல்ல மனசா பாராட்டுனாலும் எனக்கு இன்னும் உறுத்தலா தான் இருக்கு...

இனிமே உருப்படியா எழுதலாமா....

ச்சேச்சே....இது என்ன கெட்ட புத்தி....அதெல்லாம் உருப்படியா விஷயம் தெரிஞ்சவங்க எழுதுவாங்க....

நாம வழக்கம் போல சித்தன் போக்கு சிவன் போக்கு தான்...

Saturday 3 January 2009

நவீன விக்கிரமாதித்தன் கதைகள் - மோகத்தைக் கொன்றுவிடு - பாகம் ஆறு

முன் அறிவிப்பு 1: வழக்கம் போல இந்த தொடரில் வரும் சம்பவங்கள், பாத்திரங்கள் அனைத்தும் உண்மையே. கதை மாந்தர்கள் மற்றும் பதிவரின் நலம் கருதி அவர்களின் அடையாளங்கள் முற்றிலும் மாற்றப்பட்டுள்ளன.

முன் அறிவிப்பு 2: காதல் தெய்வீகமானது, காமத்திற்கு அதில் இடம் இல்லை என்று கருதும் தெய்வீக காதலர்களும், காமமோ காதலோ அது ஆண்களின் ஏகபோக உரிமை, அது தான் இந்திய, தமிழக, சிந்து சமவெளி, ஹரப்பா மற்றும் மொகஞ்சதாரோ கலாச்சாரம் என்று சொல்லும் கலாச்சார காவலர்களும் தயவு செய்து இந்த தொடரை படிக்க வேண்டாம்.


இந்த கதையின் முந்திய பாகங்களை இங்கே படிக்கலாம்.


பாகம் ஒன்று, பாகம் இரண்டு, பாகம் மூன்று, பாகம் நான்கு, பாகம் ஐந்துமுன்கதைச் சுருக்கம்: எடின்பரோவில் தன் அன்றைய கேர்ள் ஃப்ரண்டுடன் ரெஸ்டாரன்டில் இருக்கும் விக்கிரமாதித்தனை வேதாளத்தை பிடித்து வரும்படி மந்திரவாதி தொந்தரவு செய்கிறான்....வேதாளத்தை பிடிக்க செளத் வேல்ஸில் இருக்கும் ப்ரெக்கன் ரேஞ்சஸ் காட்டுக்கு செல்லும் விக்கிராமாதித்தனிடம் வேதாளம் வைஜெயந்தியின் கதையை சொல்கிறது...

இருப‌த்தொரு வ‌ய‌தான‌ திருக்கும‌ர‌ன் த‌ன‌து முத‌ல் வேலையில் சேர‌ அலுவ‌ல‌க‌ம் செல்கிறான்..அங்கு அவ‌ன‌து மேல‌திகாரி குருமூர்த்தி அவ‌னுக்கு வைஜெய‌ந்தியை அறிமுக‌ப்ப‌டுத்தி வைக்கிறார்...வைஜெய‌ந்தியை பார்க்கும் திருக்கும‌ரன் அவள் மேல் காதல் கொள்கிறான்....அதே சமயம் அவனது மேலதிகாரி குருமூர்த்தியும் வைஜெயந்தியை ரகஸியமாக காதலிக்கிறார்....

இனி.....

===========================

பேய் வரும் நேரம்!


என்னதிது....நாமளும் கதை சொல்லிக்கிட்டு இருக்கோம்..ஆனா ரொம்ப நேரமா இந்த மாதிப்பய கிட்ட இருந்து ஒரு சத்தத்தையும் காணோம்...அப்பிடியே தூங்கிட்டானா....

"ஏய்....எந்திரியப்பு....கதை ஆரம்பிச்ச ஒடனேயே இப்பிடி தூங்கினா எப்பிடி..."

கடுப்பான வேதாளம் மாதித்தனின் தலையை பிடித்து உலுக்கியது...

"அடச்சே....சனியனே கைய எடு...நாட்டுல குடிக்கவும் விட மாட்டேங்கிறானுங்க...தூங்கவும் விட மாட்டேங்கிறானுங்க....இனிமே லவ் பண்ணக்கூட இவனுங்க கிட்ட பெர்மிஷன் வாங்கணுமாட்ருக்கு....அதுக்கும் அது கலாச்சாரமில்லன்னு சொல்லுவானுங்க போலருக்கு...."

இதை எதிர்பார்க்காத வேதாளம் தாடியை சொறிந்து கொண்டது....

"ஏய்....என்னப்பு....இப்பிடி கடுப்படிக்கிற....காதலிக்க பெர்மிஷன் குடுக்கறதுன்னா அதுக்கும் பத்து பெர்சன்ட் கேப்பானுங்களே...."

"காதலிக்கிறதுக்கென்ன‌....இனிமே நீ வெளிய போயி சைட் அடிக்கக் கூட கமிஷன் கேப்பாணுங்க...அதெல்லாம் இருக்கட்டும்...ஒனக்கென்ன....கதைய சொல்ல வேண்டியது தான....எதுக்கு என் மண்டைய உலுக்குற..."

"இல்ல நீ தூங்கிட்டியான்னு பாத்தேன்..."

"என்னாத்துக்கு....தூங்கினதும் என் டவுசர கழட்டிக்கிட்டு ஓடிறலாம்னு நெனச்சியா...."

"அடச்சே.....என்ன இப்பிடி அசிங்கப்படுத்திட்டியே....டவுசர கழட்றது...கோமணத்த அவுக்கறது....வேட்டிய கிளிக்கிறது....இதெல்லாம் என் பொழப்பு இல்ல....இதுக்கெல்லாம் நீ தமிழ்நாட்டுக்கு தான் போகணும்...."

"எதுக்கு....யாராவது என் டவுசர கிழிக்கிறதுக்கா.....டவுசர் இருக்கட்டும்....இப்ப நீ கதைய சொல்ல போறியா இல்லியா...."

"சொல்றேன்ப்பு....நீ ஏஞ் டவுசர அவுத்துறாத‌...." தன் அழுக்கு ஜீன்ஸை கெட்டியாக பிடித்து கொண்ட வேதாளம் கதையை தொடர ஆரம்பித்தது....

===========================

திருக்குமரனை அழைத்து சென்ற வைஜெயந்திக்கு சிரிப்பாக இருந்தது...

அவளை ஆண்கள் ஆர்வத்துடன் பார்ப்பது புதிதல்ல..தான் அழகாய் இருப்பது அவளுக்கும் தெரியும்..அழகாய் இருக்கும் எதையும் மீண்டும் பார்க்கவே எல்லாரும் விரும்புகிறார்கள்..ஆனால் யாரும் இப்படி திகைத்துப் போய் நின்றதில்லை....ஒரு வேளை இவன் அவருக்கு தெரிந்தவனாக இருப்பானோ...

ஸ்கூல் பையன் போல் தன் பின்னால் வந்து கொண்டிருக்கும் திருக்குமரனிடம் திரும்பினாள்....

"ஏங்க குமரன்...என்னை முன்னாடி எங்கயாவது பாத்திருக்கீங்களா..."

"இல்லீங்க....அது வந்து....."

"அப்ப ஏன் அப்படி ஸ்டன் ஆகி நின்னீங்க.....நான் கூட நீங்க ஜெய்யோட க்ளோஸ் ஃப்ரன்டுன்னு நெனச்சேன்...."

குமரனுக்கு அவளை பார்க்க முடியவில்லை...தலை குனிந்து கொண்டான்....

"அது....அது வந்து....இல்ல..ஸாரி மேடம்...உங்கள எங்கயோ பார்த்த மாதிரி இருந்துச்சி....அதான்...ஆனா....ஜெய்ங்கிறது யாரு மேடம்...."

வைஜெயந்தி தலையில் கை வைத்துக் கொண்டாள்....

"சரியாப் போச்சி....நீங்க இன்னைக்கி தான் ஜாய்ன் பண்றீங்க...உங்களை குழ‌ப்பிட்டேன் போலருக்கு.....ஜெய் என்னோட ஹஸ்பென்ட்... சரி சரி...நீங்க வாங்க....இது தான் என்னோட டேபிள்..."

குமரனுக்குள் ஏதோ இடம் பெயர்ந்தது...

"உங்க அக்கவுண்ட், அட்ரஸ் டீட்டெய்ல்ஸ் எல்லாம் வேணும்...உங்க வீடு எங்கருக்கு...."

"திருப்பரங்குன்றம் மேடம்...."

"திருப்பரங்குன்றமா....பக்கத்துல தான்....நான் பழங்காநத்தம்....அக்கவுண்ட் நம்பர் சொல்லுங்க....எந்த பேங்க்..."

"மெஜுரா பேங்க்....டூ செவன் சிக்ஸ் ஃபோர் ஒன் எய்ட் த்ரீ மேடம்...."

வைஜெயந்தி அவனை நிமிர்ந்து பார்த்தாள்.....அந்த கண்கள்...வேண்டாம்...குமரன் முகத்தை திருப்பிக் கொண்டான்...

"மேடமெல்லாம் வேண்டாம்...நீங்க பேர் சொல்லியே கூப்பிடுங்க...."

"சரிங்க மேடம்.....ஸாரி....உங்க பேரு......ஸாரி....அது....."

என்ன ஆயிற்று இவனுக்கு.....ஒரு வேளை உடல்நிலை சரியில்லையோ....

"வைஜெயந்தி....நீங்க வைஜெயந்தின்னே கூப்பிடலாம்...."

"சரிங்க மேடம்....ஸாரி...வைஜெயந்தி மேடம்....இல்ல...வைஜெய்ந்தி..."

வைஜெயந்திக்கு அவன் அவஸ்தை விளையாட்டாக இருந்தது....

"யப்பா....ஒரு வழியா சொல்லீட்டீங்க...நான் உங்கள திருன்னு கூப்டலாமா...அது என்ன கைல கட்டு..."

"ரோடு பைக்ல விழுந்திடுச்சி....இல்ல...பைக் ரோட்ல விழுந்திடுச்சி..."

ஏன் இவன் இப்படி உளறுகிறான்...ஒரு வேளை இவன் இயல்பே இது தானா....இவன் எப்படி மார்க்கெட்டிங்கில்... என்னைக் கண்டு உளறுகிறானா....இதற்கு முன் இப்படி உளறியது ஒரே ஒரு ஆள்....ஜெய்...அது காதல் உளறல்...ஜெய்...எப்படி இருக்கிறாய்....ஒரு வேளை இவனும்....ச்சே...இருக்காது...இவன் வயசு என்ன....என் வயசு என்ன....என் புத்தி ஏன் இப்படி போகிறது....

"நல்லா விழுந்துச்சி....கைய பாத்துக்கங்க...."

"சரிங்க மேட....வைஜெயந்தி...."

"குட்....நீங்க இன்னொரு கேள்விக்கு பதில் சொல்லலை...."

ஆயிரத்து எட்டாவது முறையாக திருக்குமரன் விழித்தான்...

"என்ன முழிக்கிறீங்க.....உங்கள நான் திருன்னு கூப்பிடலாம்ல?"

திரு!...திரு!....திருக்குமரனுக்கு இனித்தது...அவன் பிறந்ததிலிருந்து யாரும் அவனை திரு என்று கூப்பிட்டதில்லை....வீட்டில் குமரன்....நண்பர்களுக்கு கொமாரு...கடுப்பானால் டமாரு....ஆனால் திரு? இதுவரை யாருமில்லை...

அன்றைய தினத்தில் முதல் முறையாக அவனுக்கும் சிரிப்பு வந்தது....

"திரு....நல்லாருக்கு....நீங்க திருன்னு கூப்பிடுங்க...இல்லாட்டி தெருன்னு கூப்பிடுங்க.....நீங்க எப்பிடி கூப்ட்டாலும் நல்லா தான் இருக்கு...."

வைஜெயந்திக்கு அப்பாடா என்றிருந்தது.....

"தெருனெல்லாம் கூப்பிட மாட்டேன்....கவலைப்படாதீங்க....இதுல ஒரு சைன் பண்ணுங்க.....அவ்வளவு தான்....உங்க ஸர்டிஃபிகேட் எல்லாம் எடுத்துக்கிட்டு ஹெச்.ஆர். போங்க...அங்க நாராயணன் இருப்பாரு....அவர் மீதிய பாத்துப்ப்பாரு...எதுனா பிரச்சினைன்னா என்கிட்ட வாங்க....நான் ஹெல்ப் பண்றேன்...."

"சரிங்க மேடம்....இல்ல...வைஜெயந்தி...உங்க ஹெல்ப்புக்கு ரொம்ப தேங்க்ஸ்..."

"நோ ப்ராப்ளம்....ஹெச்.ஆர். டிபார்ட்மென்ட் செகன்ட் ஃப்ளோர்..."

திரும்பி நடந்த திருக்குமரனை பார்த்து வைஜெயந்தியின் மனதில் அலையடித்தது....ஜெய்யும் இப்படித் தான்...ஜெய்....என்ன செய்து கொண்டிருக்கிறாய்....

======================

வேகமாக சொல்லிக் கொண்டு வந்த வேதாளம் திடீரென நிறுத்திக் கொண்டு வானத்தை அண்ணாந்து பார்த்தது....

"மொட்டை....என்ன வவ்வால் மாதிரி மேல பாக்குற....எதுனா கோமணம் பறக்குதா...இல்ல புதுசா எவனாவது கட்சி ஆரம்பிச்சி கொடி ஏத்திட்டானா...."

"இல்ல....மழை வர்ற மாதிரி இருக்கு....அதான்...."

"அதெல்லாம் ஒரு மண்ணுமில்ல.....அது யாரு ஜெய்....எங்க போனான் அந்த மண்டையன்..."

விக்கிரமன் கேட்டுக் கொண்டிருக்கும் போதே ச‌ட சடவென்று மழைக் கொட்ட ஆரம்பித்தது.....

மாதித்தன் சலித்துக் கொண்டான்....

"கிழிஞ்சது போ....குடி தாங்கின ஐயாவோட அரசியலும் செளத் வேல்ஸ் மழையும் ஒண்ணு தான் போலருக்கு....எப்ப வரும்...எங்க போகும்...எவன் கூட போகும்னு எவனுக்கும் தெரியாது...."

"எவன் கூட போகும்னு எவனுக்கும் தெரியாதா.....ரொம்ப அசிங்கமா இருக்கே..."

"அத விடு....அது எவன் கூடயோ போகுது...இப்ப நாம எங்க போறது...."

"ஒவ்வொரு எலக்ஷனுக்கும் போறதுக்கு எடமிருக்கறப்ப நமக்கு எடமில்லையா....இப்பிடியே இன்னும் கொஞ்சம் காட்டுக்குள்ள போனா ஒரு குகை இருக்கு....அங்க மழை பெய்யாது....வா போலாம்....."

இளித்த வேதாளம் விக்கிரமனை கும்மிருட்டில் காட்டுக்குள் கூட்டிச் சென்றது...

======மோகம் என்னும் மாயப்பேய்....இனி வரும்=======