Thursday, 22 December 2011
பின்னம்
நான் கொஞ்ச நேரம் அம்மாவை பார்த்து விட்டு அவள் எதுவும் சொல்லாமல் போக கண்ணை கசக்கிக் கொண்டேன். வியாழக்கிழமை தான் ஆகிறது. ஸ்கூலுக்கு போகணும். இன்னிக்கு ஸ்கூல் இருக்கா இல்லியா. அம்மா இன்னேரத்துக்கு திட்ட ஆரம்பித்திருப்பாளே. ஒரு வேளை லீவ் எதுவும் விட்டுட்டாங்களா. யோசித்துக் கொண்டிருக்கும் போதே அக்கா வந்து உலுக்கினாள். எருமை மாடு மணி எட்டாகுது இப்பத் தான் எந்திரிச்சி நெளிஞ்சிக்கிட்டு இருக்கு. சீக்கிரம் குளிச்சிட்டு வாடா ஸ்கூலுக்கு நேரமாகுது. நான் அவிழ்ந்து கிடந்த டவுசரை மேல ஏற்றிக் கொண்டு “பாட்டி ஏன் அழறா...இட்லி சுடலியா”
அக்கா தள்ளி விட்டாள். தாத்தாவுக்கு அடிபட்டு ஆஸ்பத்திரில சேத்துருக்காம். நீ திங்கிறதிலயே இரு. இட்லியும் கிடையாது ஒண்ணும் கிடையாது. போற வழியில சாமியண்ணன் கடைல கொட்டிக்க. இல்லாட்டி ஒரு நாள் பட்டினியா கெட. ஒண்ணும் செத்துட மாட்ட.
எனக்கு ஒன்றும் புரியவில்லை. பல் விளக்காமல் வாய் கசப்பாக இருந்தது. நான் ட்ரவுசரை பிடித்து கொண்டு “தாத்தாவா. அவர் தான் செத்து போயிட்டாரே”
பளீரென்று கன்னத்தில் அறை விழுந்தது. “சனியன் சனியன் இதெல்லாம் எங்கருந்து தான் வந்திச்சுன்னு தெரியலை. காலைல எந்திருச்சதுமே எழவெடுக்குது”. அம்மா எப்பொழுது எழுந்தாள் எப்பொழுது அறைந்தாள் என்று தெரியவில்லை. எனக்கு கன்னம் எரிந்தது. நான் முகத்தைப் பொத்திக் கொண்டு “தாத்தா செத்துப் போயிட்டாருன்னு நீ தான சொன்ன”. அம்மா அடுத்து கை ஒங்குவதற்குள் அக்கா என்னை தள்ளி விட்டு கத்தினாள். “ஆமா எதுக்கெடுத்தாலும் இவனைப் போட்டு அடி. உங்கிட்ட அடி வாங்கி சாகறதுக்கு தான் இவன் பொறந்திருக்கான்”.
ஸ்கூலுக்கு போகும் போது அக்கா தான் சொன்னாள். அடிபட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்திருப்பது பாட்டியின் அண்ணன். எனக்கு தாத்தா முறை. கோலாலம்பூரில் பைக்கில் போகும் போது அடிபட்டு விட்டது. ஆஸ்பத்திரியில் சேர்த்திருப்பதாக மெட்ராசுக்கு தந்தி வந்து மெட்ராஸில் இருந்து காலையில் ஃபோன் பண்ணி சொல்லியிருக்கிறார்கள். பாட்டி அழ ஆரம்பித்து விட்டாள்.
=====================
அம்மா கதை சொல்லியிருக்கிறாள். அம்மாவின் அப்பாவுக்கு வலது கை சரியாக வராது. நொண்டி என்று சொல்ல முடியாது என்றாலும் நொண்டி என்று தான் சொல்வார்கள். அதை மறைத்து பாட்டிக்கு கல்யாணம் செய்து வைத்து விட்டார்கள். பாட்டியின் அண்ணன் மனைவி மதனிக்கு இது எல்லாம் தெரியும். அவள் என் அம்மாவின் அப்பாவுக்கு உறவு முறை. ”எனக்க தங்கச்சிக்கு நொண்டிப்பயலை கட்டி வச்சிட்டியேடி. தாயோளி மவளே. அமுக்குணியாட்டம் இருந்து குடிய கெடுத்துட்டியேடி”. மதனிக்கு அது பொறுக்காது. “எவம்ட்டல ஏறி வர்ற. உம்ம கண்ண பொடனிலயா வச்சிருந்துச்சி. அவனுக்கு கைய பாக்க துப்பில்ல. எம்மிட்ட ஏறி வர்ற. கெட்டினவன்னா அப்பிடித்தாம். பிரியனுக்கு கை ஒடஞ்சாலும் காலு ஒடஞ்சாலும் இருந்து பார்க்கணும். நாளைக்கு நீரு கை காலு ஒடஞ்சி நொண்டியா கெடந்தாலும் ஒம்ம தங்கச்சி மாதிரி நான் ஆவலாதி சொல்ல மாட்டேன் பாத்துக்கிடும். யோக்கியமான பொட்டச்சின்னா கெட்டினவன பாப்பா. ஒம்ம தங்கச்சி கதை வேற மாதிரில்லா. அதான் ஊரெல்லாம் சீப்பட்டு கெடக்கு கத”.
விடம் கொண்ட பாம்பை போல பாட்டியின் அண்ணாவுக்கு ஏறி விட்டது. “தேவிடியா முண்ட. என்ன சொல்லிட்டடி. ஒன்ன மாதிரி சீப்பட்ட பரம்பரைன்னு நெனைச்சிட்டியா. நொண்டியாம்ல நொண்டி.திருவாந்தரத்து நாயர் வம்சமிடி. இப்ப சொல்லுதேன் கேட்டுக்க. ஒனக்க அண்ணன் மாதிரி நாறப் பொழப்பு நான் பொழைக்க மாட்டேன். எனக்க கை காலு போச்சின்னா நாண்டுக்கிட்டு சாவேன். ஈனப்பொழப்பு எனக்க ரத்தத்தில ஓடல”. எப்படி என்று தெரியவில்லை. அடுத்த ஒரு வாரத்தில் மலேஷியா போனவர் அதற்கப்புறம் ஊருக்கு வரவேயில்லை. பிள்ளைகளின் படிப்பு பணம் வரும். ஊரில் திருவிழா காது குத்து கல்யாணம் என்றால் தென்னநேரி கேசவன் நாயர் என்று யாரேனும் மொய் எழுதிப் போவார்கள் ஆனால் ஒரு நாளும் பாட்டியின் மதனி பேருக்கு பணம் வராது.
==================================
அன்றைக்கு ஸ்கூல் முடிந்து வீடு வந்த போது வீட்டில் கும்பலாக இருக்க வாசலில் செபாஸ்டின் நாடாரின் டாக்ஸி நின்றிருந்தது.பாட்டி இன்னமும் அழுது கொண்டிருந்தாலும் வேறு சேலை கட்டியிருந்தாள். அம்மாவும் மாமாவும் ரெடியாக இருக்க அப்பா அதிசயமாக வீட்டில் இருந்தார். தென்னநேரி பாட்டி கூடத்தின் மூலையில் குத்துக்காலிட்டு உட்கார்ந்திருந்தாள். “ஒத்த வார்த்த சொல்லிட்டன்னு ஒரு மனியன் இப்படி போவானா. ஒரு நாளு ரெண்டு நாளு இல்ல முப்பது வருசம் போயிட்டான். புள்ளைங்களுக்கு எழுதுவான் ஒரு நாளும் ஒங்கம்மா எப்பிடி இருக்கான்னு கேட்டதில்லை. மத்தவளுக மாதிரி எனக்கு அண்ணன் தம்பின்னு ஒருவனும் இல்ல நானும் ஒருத்தன்கிட்டயும் ஒத்த வார்த்த பேசினதுல்ல. ஆனாக்கும் எங்க சாமி விடுமா. வருசம் தவறாம பொங்க வக்கிறமே அவ கண்ணு அவிஞ்சா போச்சு. கேப்பாள்ல. அரசன் அன்னு கொல்வான் தெய்வம் நின்னு கொல்லும்னு சொல்லுவானுவ. இந்தா கேட்டுட்டாள்ல. ஏ வயித்தெரிச்சல கேட்டுட்டாள. கால ஒடச்சிப்புட்டா. ஒடம்புல ரெத்தம் தெடமா இருக்க வரைக்கும் ஒடலாம். ஒடஞ்சி போனா பொண்டாட்டிக்கிட்ட வர வச்சிடுவாள.”
நான் மெட்ராஸை பார்த்ததே இல்லை. திருச்செந்தூரை விட பெரிய கடல் என்று ராஜாங்கம் சொன்னான். நான் மாமாவின் கையை பிடித்துக் கொண்டு “மாமா மாமா நானும் வர்றேன். எனக்கு ஸ்கூல் டீச்சர் ஒண்ணும் சொல்ல மாட்டாங்க.”.
============================
வள்ளியூர் திருநெல்வேலி மதுரை திருச்சி. திருச்சியில் எங்கோ ஒரு இடத்தில் பஸ் நிற்க மாமா என்னை எழுப்பி டீ வேணுமாடா என்று கேட்க நான் தலையை ஆட்டி இல்ல காப்பி என்று சொன்னது ஞாபகம் இருக்கிறது. நான் கண் விழித்ததும் “இவந்தான் சின்னப்பையன். எட்டு வயசு ஆவுது. சூது வாது ஒண்ணும் தெரியலை.போனா போன எடம் வந்தா வந்தா எடம். ஒரு மாதிரி மந்தமா இருக்கான். திருச்செந்தூருக்கும் பழனிக்கும் மொட்டை போடறதா நேந்துக்கிட்டு இருக்கோம்.”. அம்மா சொல்ல பாட்டி குறுக்கிட்டு “இவனுக்க தெளியறதுன்னா அவனுக்க கொலதெய்வத்த நேந்துக்கிடணும். அதுக்கு கும்போணம் பக்கமில்லா போவணும்”. அம்மா பதில் சொல்லாமல் பாட்டியை வெறிக்க மெட்ராஸ் மாமா “செரி செரி அப்புறம் பேசிக்கலாம். ஃப்ளைட் வர்ற டைம் ஆச்சு. இப்ப போனா சரியா இருக்கும்”.
===================================
நான் அதற்கு முன் மெட்ராஸ் ஏர்போர்ட் பார்த்ததில்லை. எப்பொழுதாவது வானத்தில் வெள்ளையாக கோடிருக்கும். அதைப் பார்த்து அந்த ஃப்ளைட் தூத்துக்குடிக்கோ மதுரைக்கோ போகிறது என்று பந்தயம் கட்டியதோடு சரி. சாரா எனக்கு முப்பது பைசா தரவேண்டும் என்று ஞாபகம் வந்தது. மெட்ராஸ் ஏர்போர்ட்டில் கடலில் அலையும் காகம் போல ஜனங்கள் இருந்தார்கள். மெட்ராஸ் மாமா என் கையை இறுக்கி பிடித்துக் கொள்ள நாங்கள் வரிசையில் நின்றோம்.
திடீரென்று ஒரு உயர்த்தி பிடிக்கப்பட்ட அட்டையை பார்த்து விட்டு மாமா கையை ஆட்டி கத்தினார். “ராஜேந்திரன். ராஜேந்திரன். ஐயம் ராஜேந்திரன்.”
மாமாவின் கூச்சலில் பயந்து போன நான் அவர் கையை இறுகப் பிடித்துக் கொண்டு அந்த பக்கமாக பார்த்தேன். கண்ணாடி பேழையில் உடல் முழுவதும் மூடி ஊதிப் போன முகம் மட்டும் தெரியும் படியாக ஒரு பிணம்.
அப்பொழுது தெரியவில்லை. ஆனால் வெகு நாட்களுக்கு பின்னரே எனக்கு தெரிந்தது. ஊருக்கு போக வேண்டியது தெரிந்ததும் தாத்தா விஷம் தின்று தற்கொலை செய்து கொண்டார் என்பது.
=====================================================
Monday, 25 July 2011
பிதா
- இயேசு ஞானஸ்நானம் பெற்று ஜலத்திலிருந்து கரையேறினவுடனே இதோ வானம் அவருக்கு திறக்கப்பட்டது; தேவ ஆவி புறாவைப் போல இறங்கி தம் மேல் வருகிறதைக் கண்டார். அன்றியும் வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி இவர் என் நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன் என்று உரைத்தது.
- புதிய ஏற்பாடு, மத்தேயு. அதிகாரம் 3, வசனங்கள் 16,17
- ====================
- ”வாயில கொஞ்சம் நல்லெண்ணைய ஊத்தி கட்டுங்க” என்று அத்தை சொல்லவும் தஞ்சாவூர் மாமாவும் இன்னொருவரும் அப்பாவின் வாயில் எண்ணெயை ஊற்றி வெளியே கொஞ்சமாய் வழிந்த எண்ணெயை துணியால் துடைத்து அந்த துணியை அப்பாவின் தலைவழியாக நாடியுடன் சேர்த்து இறுக்கி கட்டினார்கள். அப்பாவுக்கு நல்லெண்ணையை பொடியில் ஊற்றி இட்லி சாப்பிட பிடிக்கும். ஆனால் இதயத்தில் அடைப்பு இருந்ததால் எண்ணெய் எதுவும் சேர்க்க கூடாது என்று சொல்லி விட்டார்கள். சாகும் வரை உப்பில்லாத இட்லியை தான் சாப்பிட்டு கொண்டிருந்தார்.
- அப்பாவை அவர் வழக்கமாய் உட்காரும் பிரம்பு நாற்காலியில் தான் உட்கார வைத்திருந்தார்கள். கல்லூரி நாட்களில் இருந்தே நான் ஹாஸ்டலில் இருந்து வரும் போதெல்லாம் அவர் அதே நாற்காலியில் தான் வீட்டுக்கு வெளியே உட்கார்ந்திருப்பார். ஏதேனும் பேப்பர். அவர் பேப்பரை படித்து முடிக்க மதியம் ஆகும். அதிகம் படித்ததில்லை என்பதால் மெதுவாக தான் படிப்பார். எப்பொழுது படித்தாலும் எம்ஜிஆரை தவிர வேறு எந்த பெயரிலும் அவருக்கு ஜ வராது. ஜெயலலிதா கூட செயலலிதா தான். ராஜீவ் காந்தி ராசீவ் காந்தி. எம்ஜிஆர் மட்டும் என்னவோ ஸ்பெஷல். இறுக்கி கட்டியதும் அவர் முகம் இறுகியது போல தெரிந்தது. “நேத்து நைட் குடிச்சிட்டு வந்தியா” என்று கேட்ட பொழுது அவர் முகம் இப்படி தான் இருந்தது. கோபமா துக்கமா என்று சொல்ல முடியாத முகம். “இல்ல.....அது சுந்தர மூர்த்தி பர்த்டே...அதான்.....” நான் இழுத்ததை கவனிக்காதவர் போல தலையை ஆட்டி விட்டு போய்விட்டார்.
- நாலு பேருக்கு அப்புறம் ஐந்தாவது ஆள் நான் என்பதலோ என்னவோ அப்பா இப்படித் தான். என்னிடம் அதிகம் பேசியதேயில்லை. அண்ணா அக்கா எல்லாரிடமும் ஏதேனும் சொல்லிக் கொண்டே இருப்பவர் என்னிடம் இரண்டு வார்த்தைகள் தான். சாப்பிட்டியா என்பது தான் அதிகமாய் பேசிய வார்த்தை. அதுவும் மருத்துவம் படிக்க நான் சென்னை சென்ற பின் பேசுவதற்கு விஷயங்களே இல்லை என்று ஆகிவிட்டது.
- சுந்தர மூர்த்தி பின்னால் இருந்து தோளைத் தொட்டான். மெல்லிய குரலில் ”வாடா. பின்னாடி போய் ஒரு தம்மடிச்சிட்டு வரலாம்” என்றவனை தொடர்ந்து வீட்டை சுற்றி பின்னால் இருந்த தோட்டத்திற்கு போனோம். மூர்த்தி சிகரெட்டை பற்ற வைத்து விட்டு “உங்க அப்பாவுக்கு தெரிஞ்சா திட்டுவாருன்னு எத்தனை தடவை [பயந்துக்கிட்டே இங்க நின்னு அடிச்சிருக்கோம்....ஞாபகம் இருக்கா...” என்றான். நான் அவனை வெறுமனே பார்த்துவிட்டு “ம்ம்ம்...ஆமா” என்றேன். அதற்கு மேல் என்ன சொல்வது என்று தெரியவில்லை. அவன் புகையை வெளியே விட்டு விட்டு தோளைத் தட்டினான். “மாப்ள. ரொம்ப அப்செட் ஆகி இருக்க போல. ரொம்ப நாளா ஹார்ட்ல ப்ராப்ளம். எப்ப வேணும்னாலும் இப்படி நடக்கும்னு தெரிஞ்சது தான...நான் காலைல இருந்து பார்த்துக்கிட்டே தான் இருக்கேன். நீ அழவே இல்ல. மனசு விட்டு அழுதுருடா. உள்ள வெச்சிக்காத. அது பின்னாடி ரொம்ப கஷ்டமாயிடும்...”
- நான் சிகரட்டின் நுனியில் இருந்த சாம்பலை தட்டி விட்டு “அப்படி எதும் இல்லடா....எனக்கு எதுக்கு அழறதுன்னு தெரியலை. வேண்டா வெறுப்பா புள்ள பெத்து காண்டாமிருகம்னு பேரு வச்ச மாதிரின்னு சொல்வாங்க. இருந்தப்பவே என்ட்ட அவரு சரியா பேச மாட்டாரு. ஸ்கூல்லயே ஃபர்ஸ்ட் ராங்க் எடுத்தாலும் ராங்க் கார்ட் கூட என் கிட்ட கேட்டதில்லை. எந்த ஸ்கூல் ஃபங்ஷனுக்கும் வர மாட்டாரு. உனக்கு தான் தெரியுமே. மூணாவது படிக்கும் போது எனக்கு ஹார்ட் ஆப்பரேஷன் பண்ணாங்க. அப்போ கூட இவரு இப்படி தான் இருந்தாரு. ஹாஸ்டல்ல இருந்து வீட்டுக்கு வந்தா கூட எப்ப வந்த, எப்போ போகணும் அவ்ளோ தான். ஒரு மாதிரி டிஸ்டன்ஸ் ஆகிப் போச்சுடா. இப்போ அவரு இல்லை. ஆனா எப்பவுமே அப்படி தான இருந்தது. அதான் எனக்கு தெரியலை. என்ன பண்றதுன்னு. ஆனா ஒரு மாதிரி டல்லா தான் இருக்கு...”
- சிகரெட்டை முடித்து விட்டு நாங்கள் வரவும் அப்பா ரெடியாக இருந்தார். கடைசி பயணம். “கழுத்துல கைல போட்ருக்க தங்கத்தை கழட்டிட்டு அவருக்கு பிடிச்சதை கொண்டு வாங்க” யாரோ சொல்ல அண்ணன் வீட்டிற்குள் போய் அப்பாவின் பெட்டியை எடுத்து வந்தான். கனமாய் பூட்டு போட்ட பழைய தகரப் பெட்டி. திண்டுக்கல் பூட்டு என்று அப்பா சொல்லியிக்கிறார். அதை யாரும் திறக்க விட்டதேயில்லை. ஒவ்வொரு தீபாவளிக்கும் மட்டும் அதை திறந்து அந்த கறுப்பு துண்டை எடுத்து படையல் வைப்பார். எம்ஜியார் அவருக்கு கொடுத்த துண்டு. எம்ஜியார் கட்சி ஆரம்பித்த காலத்தில் அப்பா அவரை ஊருக்கு கூட்டி வந்து கூட்டம் போட்டிருக்கிறார். அதில் யாரோ கல்லடித்து அப்பா முகத்தில் காயமாகி ரத்தம் ஒழுக எம்ஜியார் போட்டிருந்த துண்டால் அதை துடைத்து விட்டு கட்டு போட்டாராம். அப்பா படுத்திருந்த ஆஸ்பத்திரிக்கு வந்து “உனக்கு என்ன வேணும்னு சொல்லு. இப்பவே செய்றேன்” என்றவரிடம் “இந்த துண்டு மட்டும் ஆயுசுக்கும் போதும் தலைவரே” என்று சொல்லி வாங்கிய துண்டு. அப்பா அடிக்கடி சொல்லும் கதை. அவர் வேறு எதுவும் கதை சொல்லி எனக்கு ஞாபகம் இல்லை.
- அண்ணா தகரப்பெட்டியை அப்பாவின் காலடியில் வைத்து திறந்து எம்ஜியாரின் கறுப்பு துண்டை எடுத்து வெளியே வைத்தான். அப்பாவின் ரத்தம் எம்ஜிஆர் துண்டில் ஊடுருவிய இடங்கள் மட்டும் தனியாக தெரிந்தது. எம்ஜியார் போட்டிருந்த துண்டு என்று அப்பா அதை துவைத்ததே இல்லை. பழைய பேப்பர்கள். கிறுக்கலாய் அப்பாவின் எழுத்து. அப்பாவின் தோளில் கை போட்ட எம்ஜியார் ஃபோட்டோ.
- எல்லாவற்றுக்கும் கீழே குட்டியாய் ஒரு சின்ன பையனின் வெள்ளை கலர் சட்டை. அதன் இடது மார்பு பக்கத்தில் ரத்தம் படிந்து கறுப்பாகி இருந்தது. அதன் அடியில் பழுப்பேறி கலர் மாறிப் போன ஒரு ஃபோட்டோ. பிண்ணனியில் ஜெயண்ட் வீலும் கூடாரங்களும் மக்களுமாக ஏதோ பொருட்காட்சி. பஞ்சு மிட்டாயுடன் ஒரு குட்டிப் பையன் நின்றிருக்க மண்டியிட்டு அவன் சட்டை பொத்தானை சரி செய்யும் அப்பா.
- அந்த பையனை எனக்குத் தெரியும். அது என் படம். அது ஹார்ட் ஆப்பரேஷனுக்கு பின்னால் நான் போட்டிருந்த சட்டை.
- =================================================
Monday, 18 April 2011
கட்டுவிரியனின் குட்டி
Sunday, 13 March 2011
எரி பலி
பழைய ஏற்பாடு, அதிகாரம் 22.
==============================================
பின் வரிசையில் யாரோ ஷூக்கால்களை தரையில் நகர்த்தும் ஓசை கேட்டது. கேஸியாக இருக்கும். அவளுக்கு எங்கே போனாலும் இருப்புக் கொள்ளாது. பதினெட்டு வயதில் நானும் அவளைப் போலத்தான் இருந்தேன். எனக்கு சிரிப்பு வந்தது. டிஷ்யூ பேப்பரால் முகத்தைத் துடைப்பது போல மறைத்துக் கொண்டேன்.
”ஆக, மிஸ் ரிச்சர்ட்சன் தன் பூனைகளை வெகுவாக நேசித்தார். இது உண்மை தானே” என் லாயர் கேட்க வெட்ரினரி டாக்டர் அப்ஸல்யூட்லி என்றார். என் பூனைகள் ஏமிக்கும் டாராவுக்கும் அவர் தான் டாக்டர். டாராவுக்கு காலில் அடிபட்டிருந்தது. அந்த கட்டை அவிழ்க்க இந்த வாரம் செல்ல வேண்டியது. அதற்குள் ஏமியும் டாராவும் செத்துப் போய்விட்டன. அனிச்சையாக நான் கைப்பையை தடவிக் கொண்டேன். ஏமி புஸ் புஸ்சென்று இருக்கும். நான் தொட்டால் அதன் காதுகள் விரைத்து வாலைத் தூக்கிக் கொண்டு என் கண்களையே ஆவலுடன் பார்க்கும்.
“அப்படியானால் மிஸ் கரோலின் ரிச்சர்ட்சன் தான் வெகுவாக நேசித்த பூனைகளை தானே ஏன் கொல்ல வேண்டும்? உங்களால் சொல்ல முடியுமா?” லாயர் கேட்க டாக்டர் தலையசைத்து என்னால் அதை நம்பவே முடியவில்லை. எனக்குத் தெரியாது. அவர் தன் பூனைகளை வெகுவாக நேசித்தார். அதை உறுதியாக சொல்ல முடியும்.
உட்கார்ந்திருந்த மூன்று நீதிபதிகளும் குறிப்பெடுத்துக் கொண்டதை கவனித்தேன். பெண் நீதிபதியின் தலை நம்ப முடியாதவர் போல குறுக்காக அசைந்தது. எனக்கு நிஷா ஞாபகம் வந்தது. நிஷா என்று கூப்பிட்டால் அவன் இப்படித் தான் மறுப்பாக தலை அசைப்பான். நிஷான்னா கேர்ள்ஸ் நேம். கால் மீ நிஷாந்த். சொல்லும் போதெல்லாம் அவன் முகத்தில் வெட்கம் படரும். இருபது வயது ஆண் வெட்கப்பட்டு நான் பார்த்ததே இல்லை. யோசித்தால் பதினாறு வயதிலிருந்து இந்த முப்பத்தாறு வயது வரை எந்த ஆணும் வெட்கப்பட்டு நான் பார்த்ததே இல்லை. சட்டை இல்லாத உடம்புடன் ரோட்டில் அலைவார்கள். நிஷாவை அரைக் கால்சட்டையில் கூட நான் பார்த்தது இல்லை. என் கால் குச்சியா இருக்கும் அதனால் போடுவதில்லை என்று அவன் சொன்னாலும் உண்மை எனக்குத் தெரியும். அவனுக்கு அது பழக்கமில்லை. அவனால் முடியாது. சொன்னால் இல்லை இல்லை என்று சிரிப்பான். சிரிக்கும் போது உதடுகள் கொஞ்சம் கோணலாகும். எனக்கு அவனை இறுக்க கட்டிக் கொண்டு அவன் காதை திருக வேண்டும் போலிருக்கும். இதை ஹன்னாவிடம் சொன்ன போது அவள் என் கையை கிள்ளினாள். டூ யூ லவ் ஹிம். நான் யோசிக்காமல் உடனடியாக யெஸ் என்றேன். அவளிடம் சொல்ல முடிகிறது. அவனிடம் முடியவில்லை. அவனை பார்க்கும் போதெல்லாம் என் வயது எனக்கு ஞாபகம் வருகிறது. அவன் வேறு. நான் வேறு. ஆனாலும் அவனை இறுக்கி கட்டிக் கொள்ள தோன்றுகிறது. முத்தமிட்டால் அவன் எப்படி வெட்கப்படுவான்.
அந்த வெள்ளி இரவு நைட் க்ளப்பின் இருட்டில் நான் முத்தமிட்ட போது அவன் உதடுகள் குழந்தையின் உள்ளங்கைப் போல இருந்தன. அவன் கண்கள் அப்படியாகும் என்று நான் நினைக்கவில்லை. நோ நோ சொல்லிய உதடுகள் வெகு வேகமாக துடைக்கப்பட்டதையும் நான் பார்க்க விரும்பவில்லை. சனிக்கிழமை காலையில் காணாமல் போனவன் இரண்டு நாள் கழித்து திங்கள் இரவு வந்தான். அவன் பின்னால் அந்தப் பெண். கரோல் இது ஜெஸிக்கா. ஸாரி, இப்போ தான் இண்ட்ரோ பண்ண முடிஞ்சது. என்னோட கேர்ள் ஃப்ரண்ட். அவள் உதடுகள் திறந்து ஹாய் என்றாள். ஆஸ்ட்ரேலியன். என்னைப் பார்த்த ஜெஸிக்காவின் கண்களை என்னால் மறக்கவே முடியாது. அவமானத்தில் என் உடல் பாதியாக குறுகியது. நான் என் அறைக்குள் வந்து கதவை இறுக்க தாழிட்டுக் கொண்டேன். என் உலர்ந்து போன உதடுகளை பிய்த்தெறிய என்னால் முடியாது போனது.
நான் நிமிர்ந்து பார்த்த போது க்ரவுன் ப்ராசிக்யூஷன் லாயர் எழுந்து நின்று ஏதோ கேட்டுக் கொண்டிருக்க வெட்னரி டாக்டர் போய் வேறு யாரையோ விசாரித்துக் கொண்டிருந்தார்கள். ”யெஸ். ரொம்ப ஹெவி டோஸ் பாய்ஸன். இறந்து போய் எவ்வளவு நேரம் ஆச்சுன்னு சரியா சொல்ல முடியாது. மே பி எய்ட் ஹவர்ஸ். ரெண்டு பாடியும் டீ கம்போஸ் ஆகலை. ஆனா விரைச்சு போய் இருந்தது.” பூனையை சொல்றீங்களா போலீஸ் லாயர் இடைமறிக்க அந்த ஆள் “இல்லை. நான் பூனையை பார்க்கலை. நாங்க முதல்ல போனப்ப ஒரு ஆண் உடல் ஒரு பெண் உடல் இதைத் தான் பார்த்தோம். ரெண்டு பாடியும் ஒரே பெட்ல. கார்டன்ல ரெண்டு பூனையும் செத்துக் கிடந்தது அப்புறம் தான் எனக்கு தெரியும்.”
க்ரவுன் ப்ராசிக்யூஷன் லாயர் அவரை அனுப்பி விட்டு நீதிபதிகளிடம் அருகில் போய் ஏதோ சொன்னார். அவர்கள் தலையாட்டி விட்டு என் பெயரை அழைத்தார்கள். “டாக்டர் கரோலின் ரிச்சர்ட்சன். உங்கள் வீட்டில் பேயிங் கெஸ்ட்டாக தங்கியிருந்த நிஷாந்த் ராமகிருஷ்ணனையும் அவரது கேர்ள் ஃப்ரண்ட் ஜெஸிக்கா ராபர்ட்ஸையும் நீங்கள் அக்டோபர் இருபது இரண்டாயிரத்து எட்டு திங்கள் அன்று விஷமிட்டு கொன்றதை ஒப்புக் கொள்கிறீர்களா?”
நான் அவன் பெயர் நிஷா என்று நினைத்துக் கொண்டே எழுந்து நின்று ஆம் என்றேன்.
==============================================================
Monday, 13 September 2010
சிலுவை
Wednesday, 10 February 2010
மரங்கொத்தி...! - 4

இத்தனை நாளாக நான் அடைகாத்த நெருப்பு....ஐந்து வருடங்களாக என்னை விறகாக்கி எரித்த எல்லா நெருப்பும்...என்னால் மனம் உடைந்து செத்துப் போன என் அய்யனை எரித்த நெருப்பு....காதல், காமம், வெறுப்பு, அன்பு, விஷம், இதழ்கள், மது,முத்தம்,துக்கம்...அண்டத்தின் அத்தனை அக்னியும் உள்ளே பீறிட....எனக்கு சங்கீதா மேல் பாய்ந்து அவள் முகம் தாங்கி முத்தமிட வேண்டும் என்று தோன்றியது...ஏண்டி விட்டுட்டு போன...அவள் கன்னத்தில் விரல் பதிய அறைய வேண்டும் என்று தோன்றியது....சொல்...பதில் சொல்...நான் குடித்த விஷத்திற்கு பதில் சொல்...எரிந்து போன என் அப்பனுக்கு பதில் சொல்....எரிந்து கொண்டிருக்கும் எனக்கு பதில் சொல்...தோள் பிடித்து உலுக்க கைகள் பரபரத்தன....
முழங்கால் உரசும் தூரத்தில் சங்கீதா...இல்லை..மதிவாணனின் மனைவி உட்கார்ந்திருக்க...எதுவும் செய்ய முடியாமல்...
என்னால் முடியாது...எதுவும் முடியாது...தொடும் தொலைவில் இருந்தாலும் எட்டாது இருக்கிறாள்....நான் காதலும் வெறுப்பும் தாங்காது கைகளால் முகம் பொத்திக் கொண்டேன்...........
=================
மதிவாணனுக்கு ஏதோ புரிந்திருக்க வேண்டும்...
"என்ன செந்தில்...உங்க மொகமே சரியில்லை...பேயடிச்ச மாதிரி இருக்கீங்க....என்னாச்சு...."
என்ன சொல்வதடா...என்ன சொல்ல சொல்கிறாய்...தேடிக் கொண்டிருந்த என் மரண தேவதையை பார்த்தேன் என்றா...இல்லை உன் மனைவி...உன் அழகு மகளின் அம்மா என் முன்னாள் காதலி...இல்லை...இன்றும் நான் காதலிக்கும் காதலி என்றா...என்ன சொல்ல உன்னிடம்...
இதற்கு மேல் என்னால் முடியாது...இங்கிருக்க முடியாது...நான் போக வேண்டும்...
"அது...ஒண்ணும் இல்ல மதி....திடீர்னு கொஞ்சம் ஃபீவரிஷ்ஷா இருக்கு...நான் விழுப்புரத்துல எறங்கிக்கிறேன்...அங்க ஃப்ரன்ட் வீடு இருக்கு..."
என் வார்த்தைகள் தடுமாறியது...
இத்தனை நேரமும் வெளியில் இருட்டை வெறித்துக் கொண்டிருந்த சங்கீதா என் பக்கமாக திரும்பினாள்...
ஏதேனும் சொல் சங்கீதா....கடைசியாக ஒரு முறை....என் பெயரையாவது சொல்...ப்ளீஸ்....
வெளியில் இருந்த இருட்டும் கம்பார்ட்மெண்ட்டின் மங்கலான மஞ்சள் வெளிச்சமும் அவள் முகத்தில் படர்ந்திருக்க அவளின் இமைகள் ஆழ்ந்த துக்கத்துடன் ஒரு முறை மூடித் திறந்தன...சத்தம் வெளி வராது உதடுகள்....நான் முதலும் கடைசியுமாக முத்தமிட்ட அவளின் உதடுகள் மட்டும் அசைத்து "ஸாரி ரியல்லி ஸாரி"
மதிவாணன் முன்விழுந்த மயிர்கற்றையை இடது கையால் ஒதுக்கி விட்டு எழுந்து கொண்டு கைநீட்டினான்...
"உங்க கம்பெனிக்கு ரொம்ப தேங்க்ஸ் செந்தில்...இன்னும் ரெண்டு நிமிஷத்துல விழுப்புரம் வந்துரும்...ஒடம்பை பார்த்துக்கங்க...ஒரே நைட்ல ரொம்ப க்ளோஸாயிட்டோம் இல்ல....நான் வைசாக் போய்ட்டு ஃபோன் பண்றேன்....கல்யாணத்துக்கு கண்டிப்பா வந்துருவேன்...எக்ஸ்ட்ராவா சமைக்க சொல்லுங்க..."
அவன் கண்ணடித்து சிரித்தான்....
===============================
விழுப்புரத்தில் நான் என் ஃப்ரீப்கேஸூடன் இறங்கி ஓரமாக நின்று ரயில் கிளம்பும் வரை ஜன்னலில் தெரிந்த சங்கீதாவையே பார்த்துக் கொண்டிருந்தேன்...நான் பார்ப்பேன் என்று அவளுக்குத் தெரியும் என்று எனக்கும் தெரியும்...ரயில் நகரும் வரை அவள் முகம் ப்ளாட்பாரத்தின் இருட்டில் நிற்கும் என்னையே வெறித்துக் கொண்டிருந்தது...
நான் அவளைப் பார்ப்பது இதுவே கடைசி முறையாக இருக்கலாம்...இனி ஒருவேளை அடுத்தப் பிறவியில்....
ரயில் நகர நகர அடிவயிற்றில் ஒரு துக்கம் சுழன்று என் கழுத்து உக்கிரமாக சுட ஆரம்பித்தது...பிறந்த நாளில் நான் குடித்த தாய்ப்பாலிலிருந்து திருச்சியில் குடித்த காப்பி வரை ஒன்றாக வாயில் வர கடும் ஜூரத்தில் கால்கள் மெதுவாக நடுங்க ஆரம்பிக்க நான் விழுப்புரம் ஜங்ஷனின் மூன்றாவது ப்ளாட்ஃபாரத்தில் வாந்தியெடுத்து அதன் பக்கத்திலேயே தொப்பென்று உட்கார்ந்தேன்.....
=======================
ஒரு வழியாக நான் சமாளித்து எழுந்த போது ப்ளாட்ஃபாரம் யாருமில்லாமல் இருள் அப்பியிருந்தது...மணி இரண்டு இருக்கலாம்...எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை...
விழுப்புரம் எனக்கு ஒன்றும் புதிதில்லை தான்....அவ்வப்பொழுது வந்து போயிருக்கிறேன்....
நான் ஸ்டேஷனை விட்டு வெளியே வந்து இரவுமில்லாது பகலும் இல்லாத அந்த இருட்டில் தள்ளாடி நடந்து....டாஸ்மாக் பூட்டியவுடன் கள்ளமார்க்கெட்டில் தண்ணி விற்கும் இடத்தில் அரை பாட்டில் மெக்டொவல் வாங்கிக் கொண்டு வழக்கமாக தங்கும் ஹோட்டலுக்கு போன போது மானேஜர் வித்தியாசமாக பார்த்தார்...
"செந்தில் ஸாரா...என்ன ஸார்...இந்த நேரத்தில..."
ஆயிரம் அர்த்தம் வாய்ந்த கேள்வி...தமிழ்நாட்டில் எல்லா ஹோட்டல் மேனேஜர்களும் எவன் எப்பொழுது எந்த ரூமில் தற்கொலை செய்து கொள்வானோ என்ற நிரந்தர பயத்துடனே இருக்கிறார்கள்...ஹோட்டலின் பெயர் நிரந்தரமாக அடிபட்டு போவது மட்டுமல்ல...அவர்களின் வேலை போய்விடும்....ஆனால் அதற்கு காரணமானவர்களோ டெல்லி, பெங்களூர், ஹைதராபாத் சில சமயம் விசாகப்பட்டினம் என்று போய் விடுகிறார்கள்....
என் கலைந்த தலையும் தள்ளாட்டமான நடையும் சிவந்த வெறித்த கண்களும் சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்க வேண்டும்....
"ஒண்ணுமில்ல...ட்ரைன்ல மெட்ராஸ் போயிட்டுருந்தேன்...ஃபீவரிஷா இருந்துச்சி...அதான் வழியில எறங்கிட்டேன்...ரூம் காலியா இருக்கா...."
நம்பாதவன் போல என் கழுத்தில் கைவைத்து பார்த்தார்...
"அடடா...நெருப்பா கொதிக்குது ஸார்...ரூம் இருக்கு...நீங்க ஒரு க்ரோசினை போட்டுக்கிட்டு படுங்க...காலையில மொத வேலையா டாக்டரை வரச் சொல்றேன்..."
===================================
நான் மேனேஜரிடம் சாவி வாங்கி என் அறைக்குப் போய்....இருண்டிருந்த அறையில் இரவு விளக்கை போட்டு விட்டு மெல்லிய வெளிச்சத்தில் தரையில் உட்கார்ந்தேன்...இனி என்னால் தூங்க முடியாது....குடிக்கலாம்...விடியும் வரை குடிக்கலாம்...இல்லை....என் சிறுநீரகமும் கல்லீரலும் அழுகி நான் சாகும் வரை குடிக்கலாம்...
உள்ளிருந்த வெப்பமும் அறையின் குளிரும் சேர்ந்து தாக்க நான் அறையிலிருந்த மெத்தையை உடல் முழுதும் சுற்றிக் கொண்டு....தரையில் உட்கார்ந்து குடிக்க ஆரம்பித்தேன்.....வீடிருக்க நாடிருக்க ஊரிருக்க உறவிருக்க..ஏன் என் வாழ்க்கை இப்படி ஆனது....சங்கீதா....தொலைந்து போன என் உன்னத சங்கீதம்...இனி எங்கு பார்ப்பேன் உன்னை....கசப்பான மது உள்ளே இறங்க....ஜூர வேகம் ஏற....எனக்கு அழுகை வந்தது...அறையிலிருந்த துண்டை வாயில் திணித்து நான் சத்தம் வராமல் பெரும் ஓலத்துடன் அழும்போது சட்டென்று தோன்றியது....
நான் ஏன் சாகக் கூடாது?..........
இந்த நேரத்துக்கு தூக்க மாத்திரையோ எலி விஷமோ கிடைக்காது....கை நரம்பை அறுத்துக் கொண்டால்....சூட்கேஸில் பிளேடு இருக்கிறது....
தீவிரமாக யோசிக்கும் போதே திடீரென்று ஒரு குரல் ஊடறுத்தது...
"பிள்ள பாத்து போயிட்டு வரணும்...இங்க அம்ம கெடக்கா...ஒன்னிய விட்ட அவளுக்கும் நாதியில்ல...பாத்துக்கிடு.."
யார்...யார் சொன்னது...கிளியன்...கிளியன் அண்ணாச்சி....
================================
இரவும் பகலும் கலந்த அந்த இருள் பிரியாத முன்காலையில் நான் அழைத்த போது கிளியன் அண்ணாச்சி நன்றாக தூங்கிக் கொண்டிருந்திருக்க வேண்டும்...ஃபோனை எடுக்க சில நிமிடங்கள் ஆனது....
"ஏ....கிளியன் பேசுதேன்...ஆரு....."
தூக்கத்தில் அண்ணாச்சி....
"மாமா...நான் செந்தில் பேசுதேன்...விழுப்புரத்திலருந்து...."
"ஆ...பிள்ள இன்னியும் மெட்ராஸு சேரலையாக்கும்...சொகமாட்டு உண்டா...பஸ்க்காரனுவ நிறுத்திட்டானுவளோ...."
"சொகமுண்டு....அதில்லா...எனக்கு ஒரு சோலியாகணும்...."
"ஆ..அதா....ஒன்னம்ம தூங்கியாச்செ....எழுப்பட்டோ...."
"அம்மையிட்டில்லா...சோலி ஒங்களுத் தான்...."
"பிள்ளக்கில்லா சோலியுண்டா....வெளுத்ததும் முடிக்கேன்...என்ன சோலியாக்கும்..."
நான் ஒரு நிமிடம் தயங்கி மூச்சை ஆழமாக இழுத்துக் கொண்டேன்...
"எனிக்கு ஒரு மீனு பிடிக்கணும்...."
மீனு பிடிக்கணும் என்ற வாக்கியம் அண்ணாச்சியின் தூக்கத்தை முற்றிலுமாக கலைத்திருக்க வேண்டும்...குரல் ரகசியமாக மாறியிருந்தது...
"பிள்ள என்ன சொல்லுது....சாள மீனு குட்டையிலயுண்டு...வாள மீனு கடலுக்கில்லா போவணும்...."
சாள மீன் ரிஸ்க்க்கும் குறைவு...செலவும் குறைவு...வாள மீன்...ரிஸ்க் அதிகம்...செலவும் அதிகம்...
யாருமற்ற அந்த அறையின் மெல்லிய இருட்டில் என் வெளிப்புற பூச்சுக்கள் முற்றிலும் உதிர்ந்து என் மூக்கு மேலுதடு தாண்டி கீழுதடுடன் இணைந்து கூரிய அலகாக மாறியிருந்தது.....என் வாயின் இருபுறமும் அழகான சிங்கப் பற்கள் மேலும் நீண்டு உருமாறி கோரைப் பற்களாக மாறியிருக்க குடி போதையிலும் ஜூர வேகத்திலும் ஆடிக் கொண்டிருந்த என் கைகள் சுருங்கி கைகள் முழுதும் தசை கிழித்து எலும்புகள் புடைத்து முதுகின் இருபுறமும் இரு சிறகுகள் முளைக்க தரையின் சில்லிப்பில் ஏற்கனவே குறுகியிருந்த என் பாதங்கள் மேலும் சுருங்கி விரல்கள் நீண்டு நகங்கள் வளைந்து பறவையின் கால்களாக நான் போர்த்தியிருந்த வெள்ளை நிற மெத்தை கிழிந்து உடல் முழுதும் என்னைப் படர....ஆறடி உயர பிரம்மாண்டமான மரங்கொத்தியாகி....நான் கையிலிருந்த விசிட்டிங் கார்டைப் பார்த்துக் கொண்டே சொல்ல ஆரம்பித்தேன்....
"மீனு வாள மீனாக்கும்....பேரு மதிவாணன்.க்கே. ரெட்டி...ஊரு விசாகப்பட்டினம்....சோலிய முடிச்சிடலாமில்லா..."
Tuesday, 9 February 2010
மரங்கொத்தி...! -3

"இங்க அஞ்சு நிமிஷம் நிக்கும் மதி...நான் போய் காஃபி வாங்கிட்டு வந்துர்றேன்...ஒங்களுக்கு எதும் வேணுமா..."
"எனக்கும் மூணு காஃபி வாங்கிடு செந்தில்..."
பின்னாடி கத்திய அவனுக்கு பதில் சொல்லாது அதற்குள் உள்ளே ஏறத்துவங்கியிருந்த ஜனக் கூட்டத்தை பிளந்து வெளியே குதித்ததும் தழுவிய திருச்சியின் டிசம்பர் மாத ஊதல் காற்றை அலட்சியப்படுத்தி ப்ளாட்ஃபார்மின் மறு கோடியில் இருந்த காஃபி ஷாப்பை நோக்கி மெல்லிய இருட்டில் ஓடத் துவங்கினேன்....
================================
நான் காஃபி வாங்கிக் கொண்டு கோச்சில் ஏறவும் ரயில் கிளம்பவும் சரியாக இருந்தது...ஓடி வந்ததில் எனக்கு லேசாக மூச்சு வாங்கியது...தம்மடிக்கிறதை விட்ரணும் நினைத்துக் கொண்டே "காஃபி மதி...ஜூடு ஆர்றதுக்குள்ள குடிச்சிடுங்க..." தேங்க்ஸ் செந்தில் என்று சொன்ன அவனைத் தாண்டி...
அவன் பக்கத்தில் ஜன்னலோர சீட்டில் அந்த பெண் உக்கார்ந்திருந்தாள்...மடியில் குட்டியாய் ஜீன்ஸூம் டீஷர்ட்டும் போட்டு பாப் கட்டிங் வெட்டி ஒரு குட்டி குழந்தை....குழந்தை துறுதுறுவென்று விரல்களை கண்ணாடி ஜன்னலை தாண்டி நீட்ட அவள் குழந்தையை இறுக்கி அணைத்து வெளியே வேடிக்கை காட்டிக் கொண்டிருந்ததில் அவள் முகம் எனக்கு தெரியவில்லை....
நான் மதிவாணனைத் தாண்டி எதிரெதிரான சீட்டுகளுக்கான குறுகிய இடைவெளியில் காலை நுழைத்து எனது சீட்டில் பாதி உட்காரும் போது....
"செந்தில்...இது என்னோட வொய்ஃபும் பொண்ணும்....சங்கீதா...இது செந்தில்...மதுரைலருந்து நல்லா கம்பெனி குடுத்திட்டிருக்கார்...."
இது வரை வெளியே குழந்தைக்கு வேடிக்கைக் காட்டிக் கொண்டிருந்த அந்த பெண்....சங்கீதா.....அவன் மனைவி...என் பக்கம் திரும்பி...நான் முதலும் கடைசியுமாக முத்தமிட்ட உதடுகளை திறந்து...."ஹலோ" என்றாள்.....
==============================
சங்கீதா...எஞ்சினியரிங் காலேஜில் பார்த்த நாள் முதல் நான் பாடிக் கொண்டிருந்து இடையில் தொலைந்து போய் ஐந்து வருடங்களாக நான் தேடிக் கொண்டிருக்கும் என் உன்னத சங்கீதம்....சந்தில் என்றும் செங்கீதா என்றும் விதவிதமாக கோர்த்து பாடப்பட்ட சங்கீதம்....பிரிவது இணைவதற்கு...இணைவதே பிரிவதற்கு...காதல் என்பது அரூபமான உணர்வு என்றால் அதன் உருவமான சங்கீதா....ஐ லவ் யூடா....சும்மா சும்மா சொல்லிட்டிருக்க முடியாது...கல்லூரியின் கடைசி நாளன்று விழா மேடையின் பின்புறம் நான் எதிர்பாராத நேரம் முத்தமிட்டு...நான் வாழ்க்கையில் முத்தமிட்ட ஒரே உதடுகள்...அதன் பின் ஐந்து வருடமாய் காணாமல் போய்.....
கோபாக்னி முதல் காமாக்னி வரை அக்னி தேவனின் அத்தனை வடிவங்களும் என் அடிவயிற்றில் ஒரே கணத்தில் நிகழ உட்கார முயன்று கொண்டிருந்த நான் சடாரென நிமிர்ந்ததில் அவளது முகத்தில் முட்டிக் கொண்டேன்...
முகம் உயர்த்தினால் உதடு உரசி முத்தமிடும் தொலைவில் என்னைப் பார்த்ததில் அவளுக்கும் அதிர்ச்சியாக இருக்க வேண்டும்...கண்களில் கருவிழி நகர்ச்சி நின்று போய் ஹலோ உதிர்த்த உதடுகள் உறைந்து போயிருந்தன....இன் அவர் ஃபர்ஸ்ட் நைட் வேர் வில் யூ கிஸ் மீ ஃபர்ஸ்ட்...லெட் மீ கெஸ்...லிப்ஸ்...நோ சங்கி....ஐஸ்....யூ காட் ப்யூட்டிஃபுல் ஐஸ்...
திருச்சி ஜங்ஷனை விட்டு வெளியே வந்து இருட்டை கிழித்துக் கொண்டு ஸ்ரீரங்கத்தை நெருங்கி கொண்டிருந்த ரயிலில்...டேய் ஒரு நாள் ஸ்ரீரங்கம் போகணும்டா...அப்படியே காவிரியை பக்கத்தில உக்காந்து பார்க்கணும்...போலாமே...நீ காவிரியைப் பாரு...நான் உன்னைப் பார்த்துக்கிட்டிருக்கேன்...ச்சீ...போடா...ஒனக்கு எப்பவும் அதே நினைப்புத் தானா... உரசிக் கொண்ட முகங்களுக்கிடையில் காலம் உறைந்து போயிருக்க மதிவாணனின் கை திடீரென்று இடையில் நீண்டது...
"என்ன சங்கீ....பார்த்து திரும்பக் கூடாது...நீ இடிச்சிக்கிட்டு அவரையும் இடிச்சிட்ட பாரு....ஸாரி செந்தில்...திடீர்னு திரும்பிட்டா போல....வலிக்குதா சங்கீ..."
அவன் கைகள் நீண்டு அவளது நெற்றி தடவியது...சங்கீ...எனக்கு காத்தா இருக்கணும்னு ஆசை....நீ காத்து இல்ல, காத்துல பறக்குற மாதிரி இருக்குற...எதுக்குடா...எப்பவும் உன்னை கட்டிப் பிடிச்சிக்கிட்டே இருக்கலாமில்ல...நல்ல ஆசை தான்...போடா....
மாசா மாசம் ஆறாயிரம் கிலோ வெள்ளாட்டுக் கறி...பத்து டன் தக்காளி..ஆறு டன் பச்சை மிளகாய்...எட்டடிக்கு தலையில கங்கையோட காலை தூக்கி ஆடும் சிவன்...பக்கத்துல ஆறடிக்கு அம்மை...பனை மரம்...மரங்கொத்தி...கல்யாணம்...பொண்ணு கோயம்புத்தூரு....கிளியன் அண்ணாச்சி...இருபது இட்லி...கால்ல கல்ல கட்னதும் தாயளி சிக்குன பெருச்சாளி மாதிரில்லா கத்தறான்...
நான் சட்டென்று நிகழ்காலத்திற்கு நகர்ந்தேன்...
=======================
"ஓ..ஸாரி மதி....இல்ல, தப்பு எம் மேல தான்...சீட்ல என்னவோ குத்தற மாதிரி இருந்தது...அதான் திடீர்னு எழுந்திருச்சேன்...இடிச்சிடுச்சி...."நான் அவரசரமாய் நெற்றியை பிடித்துக் கொண்டேன்...
"சரி சரி...நல்லா தேய்ச்சு விட்டுக்கங்க...வீங்கிட போகுது...கல்யாண மாப்பிள்ளை வேற...மூஞ்சு வீங்கினா நல்லாருக்காது..."
சிரித்துக் கொண்டே மதிவாணன் மகளின் கன்னத்தை கிள்ளி திருப்பினான்....
"குட்டி...மாமாவுக்கு ஹாய் சொல்லு....நாலு வயசு தான் ஆகுது செந்தில்...ஆனா செம அடம்...எல்லாம் அவங்க அம்மா ஜீன்ஸ்...அப்படியே வந்திருக்கு...."
"ஆய் அங்கிள்...நல்லா இடிச்சீங்களா...நாளிக்கு உங்க மூஞ்சி பெரிசாயிடுமா அங்கிள்...."
குழந்தை கை நீட்டி என் முகம் தடவியது....குட்டி குட்டியாய் விரல்கள்...குவிந்த உதடு...பெரிய கண்கள்...யூ காட் ப்யூட்டிஃபுல் ஐஸ் சங்கீதா...அம்மா மாதிரியெ...அதே ஜீன்ஸ்...
நான் குழந்தையை தாண்டி கம்பார்ட்மெண்ட்டின் மெல்லிய வெளிச்சத்தில் சங்கீதாவை பார்த்தேன்....ஐந்து வருடத்தில் கொஞ்சமாக எடை கூடியிருக்கிறது....முகம் இன்னமும் பளபளப்பாக....கண்கள் இன்னும் அழகாக...நான் முத்தமிட்ட உதடுகள்...இன்னும் சிவப்பாக...கழுத்தில் தாலி...தாலியில் கருகணியோ இல்லை வேறு ஏதேனும் தெலுங்கு சம்பிரதாயமோ இருக்கலாம்...ரெட்டி தாலிகளை நான் பார்த்ததில்லை....
அவள் ஜன்னலுக்கு வெளிப்பக்கம் இருட்டை வெறித்துக் கொண்டிருந்தாலும் ஓரப்பார்வை என்னை துளைத்துக் கொண்டிருந்தது...
"என் வைஃப்ஃபுக்கு ஒடம்பு சரியில்லை...அதனால திருச்சியில ரிலேட்டிவ்ஸ் வீட்ல இருக்கா....மதுரை வரல்லை...."
மதிவாணன் சொன்னது நினைவில் ஓடியது....ஆக....உனக்குத் தெரியும் சங்கீதா...நான் மதுரையில் இருப்பது உனக்குத் தெரியும்....ஐந்து வருடங்களாக நான் அங்கே தான் இருக்கிறேன்...கேம்பஸ் இன்டர்வியூவில் கிடைத்த அமெரிக்க வேலையை மறுத்து....அதே அட்ரஸில்...என்றாவது ஒரு நாள் நீ வருவாய் என்று தான்....உனக்கு எல்லாம்...எல்லாமே தெரிந்திருக்கிறது...ஆனால் ஐந்து வருடம்....உன் சீர்காழி அட்ரஸிற்கு எத்தனை கடிதம்....எத்தனை ஈமெயில்....எதற்குமே பதிலில்லை....மதுரை, சென்னை, தஞ்சாவூர்...ஏன் கேரளா....பெங்களூர்...ஹைதராபாத்தில் கூட தேடினேன்....நீ விசாகப்பட்டினம் போவாய் என்று தெரியாது போயிற்று....
ஆனால் உனக்கு எல்லாமே தெரிந்திருக்கிறது...நான் உன்னைத் தேடுவதும் தெரிந்திருக்கிறது...தவிர்த்திருக்கிறாய்...கவனமாக...மிக கவனமாக...நான் மதுரையில் இருப்பேன் என்று மதுரை வருவதைக் கூட....நான் என்ன பாவம் செய்தேன் சங்கீதா...நீ என்னை காதலித்த நாட்களில் கூட நீதான் என்னை முதலில் தீண்டினாய்.....செமஸ்டர் எக்ஸாம் ரிசல்ட் வந்து...எலக்ட்ரிகல் லாப்பில் பெயிலாகி நான் துக்கமாய் இருந்த ஒரு மாலை வேளையில்....நீ தான் தலை கலைத்தாய்....நீ தான் முகம் தடவி விரல் பிணைத்தாய்...ஞாபகம் இருக்கிறதா சங்கீதா...
அத்தனை தவிர்த்தும்....காலுடன் கால் உரசும் தூரத்தில் இன்று நான்....எனக்கு ஒரே நேரத்தில் துக்கமும் குரூரமான சிரிப்பும் வந்தது....
திடீரென்று நான் மெலிதாய் சிரிப்பதை சங்கீதா மட்டுமல்ல, மதிவாணனும் கவனித்து இருக்க வேண்டும்....
==================================
"என்ன செந்தில்...திடீர்னு சிரிக்கறீங்க...சொன்னா நாங்களும் சிரிப்போம்ல..."
"ஒண்ணும் இல்ல மதி....நாம என்ன தான் தவிர்க்க நினைச்சாலும்...சில பேரை..ச்சே..ஐ மீன் சில விஷயத்தை தவிர்க்க முடியலை பார்த்தீங்களா..."
மதிவாணன் சிரித்தான்...
"ஒண்ணும் புரியலை...என்ன தத்துவம் தண்ணியா வருது...." தண்ணியில் அழுத்தம் இருந்தது...
"அதெல்லாம் ஒண்ணுமில்ல...நாம யாரும் இடிச்சிக்கணும்னு நினைக்கிறதில்லை...ஆனா கண்டிப்பா இடிச்சிக்கிறோம்ல...அதை சொன்னேன்..."
மதிவாணனுக்கு புரிந்ததோ இல்லையோ சங்கீதாவுக்கு புரிந்திருக்க வேண்டும்....நான் மதிவாணனைப் பார்த்து பேசிக் கொண்டிருந்தாலும் என் கண்கள் அவளையே கவனித்துக் கொண்டிருந்தது....
"ப்ளீஸ்....ஐயம் ரியல்லி ஸாரி....ஆனா அவருக்கு எதுவும் தெரியாது....சொல்லிடாத...ப்ளீஸ்..."
"நீ சந்தோஷமாய் இருக்கிறாய் சங்கீதா....நான் எரிந்து கொண்டிருக்கிறேன்... உயிருடன் தினம் தினம்....அதிகாலையில் எழும் போது செத்து போய் நாள் முழுதும் எரிந்து...நள்ளிரவில் மீண்டும் விழித்து..மீண்டும் செத்து...சாவதற்கே நான் தினம் விழிக்கிறேன்.....ஏன் வந்தாய்...ஏன் போனாய்....போய் வருகிறேன் என்று ஒரு வார்த்தை கூட சொல்லாமல்...நீ பிள்ளை பெற்று நான்கு வருடம் ஆகிறதாமே...நான் உன்னை சுமந்த நாட்களில் நீ பிள்ளை சுமந்திருக்கிறாய்...நான் நண்பர்களை தவிர்த்த ஒரு இரவில் உலகமில்லா தனிமையில் விஸ்கியுடன் சேர்த்து எலி விஷம் குடித்து உயிருக்கு போராடிய அதே நாட்களில் நீயும் ஹாஸ்பிடலில் பிள்ளை பெற்றிருக்கலாம்......உன் நினைவில் நான் தாடி வளர்த்து மதுரையின் அழுக்கான தெருக்களில் போதையுடன் உறங்கிய நாட்களில் நீ புருஷன் பிள்ளையென்று காதல் வளர்த்திருக்கிறாய்....."
கண்களின் மொழி....சொல்லாத வார்த்தைகள்....அவளது கண்கள் கெஞ்சிக் கொண்டிருந்தன....நான் பார்ப்பது அவளுக்கும் தெரிந்தே இருக்கிறது....
காதல் தேவனும் காம தேவனும் எனக்குள் உக்கிரமாய் போர் நடத்த....
எனது மூக்கு நீண்டு மேல் உதடு தாண்டி கீழ் உதடுடன் இணைந்து கூரிய அலகாக மாறிக் கொண்டிருந்தது...காஃபிக் கோப்பையை பிடித்திருந்த எனது கைகள் கண்ணுக்கு தெரியாத வண்ணம் குறுகி விரல்கள் மறைந்து கை முழுக்க எலும்பு புடைத்து முதுகின் இரு புறமும் சிறகுகள் முளைக்க ஆரம்பித்தன...எவரும் கவனிக்காத வண்ணம் ஷூவுக்குள் இருந்த கால்களில் பாதம் சுருங்கி விரல்கள் நீண்டு வளைந்து நகம் வளர்ந்து...நான் போட்டிருந்த மஞ்சள் நிற டீஷர்ட் இணைக்கும் இழைகளை உதிர்த்து வெறும் பஞ்சாகி மயிர் போல உடல் மூட....என்னுள் ஆதாம் காலத்து அக்னியுடன் பிரம்மாண்டமான மரங்கொத்தி உருமாறிக் கொண்டிருக்க....
இருளை கிழித்துக் கொண்டு இலக்கு நோக்கி பறக்கும் அம்பு போல ரயில் விழுப்புரத்தை நெருங்கிக் கொண்டிருந்தது.....
========= கொத்தும்!==============
Monday, 8 February 2010
மரங்கொத்தி...! - 2

"ஃபைவ் ஏ அன்ட்....ஃபைவ் பீ...இந்த சீட் தான்...."
அவனுக்கு முப்பத்தி ஐந்து வயதிருக்கலாம்...நெடுநெடுவென்று நல்ல உயரம்...அதற்கேற்ற சரியான உடல்வாகு...கோதுமை நிறம் என்று சொல்லும் கறுப்புக்கும் சுண்ணாம்பு வெண்மைக்கும் இடைப்பட்ட நிறம்...குனியும் போது முன் வந்து விழுந்த முடியை ஸ்டைலாக ஒதுக்கிக் கொண்டான்...மீசை இல்லா முகத்தில் லேசான தாடி...அதிக சதையின்றி டைட்டான கன்னங்கள்...கூர்மையாய் மூக்கு....உதடுகள் மட்டும் கொஞ்சம் கறுப்பாக...சிகரெட்டாயிருக்கலாம்...கைகளில் நான் ரொம்ப காஸ்ட்லியாக்கும் என்று சொல்லும் வாட்ச்....
ஏன் எதற்கு என்ற விளக்கம் அபத்தம் என்றாலும்...எதிரில் வந்து உட்கார்ந்த அவனை எனக்கு பார்த்த நிமிடம் பிடித்துப் போனது...
"ஸாரிங்க...மொதல்ல தப்பான பெட்டியில ஏறிட்டேன்...அதான்...டபுள் செக் பண்ணிக்கிட்டேன்...எழுப்பிட்டேன் போல...தூங்கிட்டு இருந்தீங்களா...."
தியேட்டர்ல பாக்கறவனை "என்ன பாஸ், சினிமாவுக்கா" என்று கேட்பது...கல்யாணத்தில் பார்ப்பவனை "என்னங்க கல்யாணத்துக்கு வந்திருக்கீங்க போல" என்பது....தூங்கிக் கொண்டிருப்பவனை எழுப்பி "தூங்கிகிட்டு இருக்கீங்களா..."இவங்களுக்கெல்லாம் என்ன பதில் சொல்றது...எனக்கு சிரிப்பாக இருந்தது...
"இல்ல பாஸ்...பரவால்ல...நானும் இப்பத் தான் ஏறினேன்....."
"நல்லவேளை....நான் கூட தூங்கறவரை எழுப்பிட்டோம்னு நினைச்சிட்டேன்...நீங்க மதுரையா..."
"ஆமா...அண்ணா நகர்...நீங்க..."
"நான்...ம்ம்ம்...வைசாக்...விசாகப்பட்னம்...பொறந்தது திருச்சி பக்கம்...ஆனா அம்மா அப்பா ரொம்ப நாளாவே ஆந்திராவுல செட்டிலாயிட்டாங்க..."
பொதுவாக எனக்கு பேசப் பிடிப்பதில்லை...எங்கேனும் பயணம் செய்தால் எந்த இலக்குமில்லாது சிந்தனையை அலைய விட்டு வெளியே படர்ந்திருக்கும் இருட்டை வெறிப்பது பிடிக்கும்....எல்லாவற்றையும் மறைக்கும் இருள் தான் எத்தனை அழகு....
ஆனால் அவனைப் பார்த்தால் அப்பாவி போல இருந்தான்...கேட்காமலேயே அம்மா அப்பா பூர்வீகம் எல்லாம் வருகிறது...இன்னும் கேட்டால் இவன் கொள்ளுத் தாத்தாவின் சின்ன வீடு எங்கே இருந்தது என்று அட்ரஸ் சொன்னாலும் சொல்வான்...
எனக்கு கொஞ்சமாய் ஆர்வம் ஏற்பட்டது....
"அப்ப உங்களுக்கு தெலுங்கு தெரியும்னு சொல்லுங்க...பாக உன்னாரா??"
அவன் பெரிதாய் சிரித்தான்....
"ஹஹ்ஹாஹ்ஹா....உன்னாரு உன்னாரு....எனக்கு மதர் டங் தெலுங்கு தாங்க...ரெட்டியாரு.......ஆனா திருச்சி பக்கம் தான் பூர்வீகம்...உங்களுக்கும் தெலுங்கு தெரியும் போலருக்கே..."
"ச்சேச்சே....அப்படியெல்லாம் இல்ல பாஸ்...சும்மா ஒரு ரெண்டு மூணு தடவை ஆந்திரா போயிருக்கேன்....அதனால கொஞ்சம் வார்த்தை தெரியும்..."
"சும்மா ஆந்திரான்னா எப்படி...எங்க போனீங்க....புட்டபர்த்தி...திருப்பதி...இல்ல பெத்தபுரா...."
பெத்தபுரா...அட...ஆளு நம்ம டைப் போலருக்கே...
"ச்சேச்சே...பெத்தபுரால்லாம் இல்ல பாஸ்...கடப்பா...ராஜமுந்திரி...அப்புறம் அனந்தப்பூர்....நான் க்ரானைட் தேடி போனேன்..."
"க்ரானைட்டா....எதுக்கு....நீங்க என்ன பிஸினஸ் பண்றீங்களா இல்ல சும்மா வீடு கட்டவா..."
"பிஸினஸ் தான்...ஒரு பார்ட்டி க்ரானைட் கேட்டது....சரி, குவாரிலயே வாங்குனா கொஞ்சம் மார்ஜின் நிக்குமேன்னு நான் ஆந்திரா பக்கம் போனேன்....எனக்கு எக்ஸ்போர்ட் பிஸினஸ்..."
அவன் முகம் பிரகாசமானது....
"எனக்கும் பிஸினஸ் தான்...ஃபேமிலி பிஸினஸ்....டயர் ஃபேக்டரி வச்சிருக்கோம்...வைசாக்ல மூணு ஃபேக்டரி இருக்கு....வைசாக் ரப்பர்ஸ்னு பேரு....இவ்ளோ நேரம் பேசிக்கிட்டு இருக்கோம்...பேரு சொல்லலை பாருங்க...எம் பேரு மதிவாணன்...மதிவாணன்.கே"
எனக்கு ஆச்சரியாக இருந்தது...மதிவாணன்...சுத்தமான தமிழ் பேராச்சே...ஆளு தெலுங்குன்னு சொன்னான்....
எனது கார்டை எடுத்து நீட்டினேன்...
"நான் செந்தில் வேல்...இந்தாங்க என்னோட கார்டு...நீங்க தெலுங்குன்னு சொன்னீங்க...ஆனா பேரு சுத்தமான தமிழ்பேரா இருக்கே...."
சிரித்தான்...எனக்கு ஏனோ மாதவன் ஞாபகம் வந்தது....
"அது ஒண்ணுமில்ல...எங்க தாத்தா அந்த காலத்துல தஞ்சாவூர் பக்கம் எம்.எல்.ஏவா இருந்தாரு...ஒங்களுக்குத் தான் தெரியுமே...நைன்டீன் சிக்ஸ்டீஸ்ல தமிழ்ல பேரு வச்சா அரசியலுக்கு யூஸ் ஆகும்னு....அதான்...சுத்தமான தமிழ்ப்பேரு..."
அரசியல் பேச ஆரம்பித்தால் பிரச்சினை என்று நினைத்தானோ என்னவோ...
"ஆமா...இப்ப எங்க போறீங்க...மெட்ராஸ்ல என்ன பிஸினஸ்காரியமா..."
"இல்ல பாஸ்...எனக்கு ரெண்டு வாரத்தில கல்யாணம்...அதான் ஃப்ரண்ட்ஸை பார்த்துட்டு இன்விடேஷன் வைக்க போறேன்..."
"அட....வெரிகுட்....ஹாப்பி மேரீட் லைஃப் செந்தில்...எனக்கெல்லாம் இன்விடேஷன் வைக்க மாட்டீங்களா..."
எனக்கு கூச்சமாக இருந்தது....பார்த்து அரைமணி நேரத்தில் எப்படி இவனால் இவ்வளவு நெருக்கமாக முடிகிறது...
"ச்சே...உங்களுக்கு இல்லாமையா...இந்தாங்க...ஆனா கண்டிப்பா வரணும்..."
"வராம? என்னைப் பத்தி ஒங்களுக்கு தெரியாது செந்தில்...ஓசி சாப்பாடுன்னா ஃப்ளைட் பிடிச்சாவது வந்துடுவேன்...."
"ஹிஹி...பறந்தாவது வந்தா சரி....ஆமா உங்க வொய்ஃப் எங்க...வைசாக்ல இருக்காங்களா?"
"ஆமா...ஆனா இப்ப திருச்சில எங்க ரிலேட்டிவ்ஸ் வீட்ல இருக்கா...எனக்கு மீனாட்சி கோயில் பாக்கணும்னு ரொம்ப நாளா ஆசை...என்ன இருந்தாலும் எங்காளுங்க கட்டின கோயிலாச்சே....அவளுக்கு கொஞ்சம் ஒடம்பு சரியில்லை...அதனால மதுரைக்கு அவ வரலை..."
"அப்ப நீங்க மட்டும் தான் மெட்ராஸ் போறீங்களா..."
"இல்ல...அவளும் எம் பொண்ணும் திருச்சில ஜாயின் பண்ணிப்பாங்க...அவங்களுக்குத் தான் இந்த இன்னொரு சீட்...அப்படியே மெட்ராஸ் போய் அங்கருந்து வைசாக் போறதா ப்ளான்...எம் பொண்ணை நீங்க பார்க்கணுமே...நாலு வயசு தான் ஆகுது...செம க்யூட்...செம வாலு...அப்படியே அவங்க அம்மா டைப்...அம்மாவும் பொண்ணும் சேந்துட்டா சமாளிக்க பத்துப் பேர் வேணும்...."
சொல்லும் போதே அவன் கண்களில் சந்தோஷம் தெரிந்தது...ம்ம்ம்...எனக்கும் இப்படி ஒரு க்யூட்டான குட்டிப் பெண்ணும் வாலான மனைவியும் இருந்தா நல்லாத் தான் இருக்கும்.....பார்ப்போம்...
இப்படியே பேசிக் கொண்டு அவன் வாங்கி வந்திருந்த இட்லியை இரண்டு பேரும் ஒரே இலையில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே ரயில் மணப்பாறை விராலிமலையை கடந்து திருச்சியை நெருங்கிக் கொண்டிருந்தது....
"இன்னும் கொஞ்ச நேரத்தில திருச்சி வந்துரும் செந்தில்...எப்படா அவங்களைப் பார்ப்போம்னு இருக்கு..."
நல்ல மனைவி குழந்தை போல நல்ல நட்பும் எதிர்பாராத நேரத்தில் எதிர்பாராத திசையில் இருந்து தான் வருகிறது...அப்பாவுக்கு கிளியன் அண்ணாச்சி...இன்றிரவு எனக்கு....
நான் அவனை விலக்கி ஜன்னல் வழியாக கண்களை உயர்த்தினேன்...
இருட்டான ஐப்பசி மாத இரவில் பிரம்மாண்டமான நட்சத்திரம் போல விரிந்த திருச்சி நகரத்தை பாண்டியன் எக்ஸ்பிரஸ் வெகுநாளாய் பிரிந்திருந்த காதலன் போல வேகமாய் நெருங்கிக் கொண்டிருந்தது.....
எனக்கு திடீரென்று மரங்கொத்தி ஞாபகம் வந்தது...இருள் தான் பனைமரம்...ரயில் தான் மரங்கொத்தி...ரயிலின் எஞ்சின் இந்த இருட்டில் என் முகம் போல இருக்குமா....
========== பறக்கும்...=============
பி.கு. I know, this is another long post, and the story has not moved forward that much...But there is a reason for this particular episode. As this has already become a long post, next one will be published tomorrow....
மரங்கொத்தி...! -1
மரங்கொத்தி...! -1என் மூக்கு நீண்டு மேல் உதடு தாண்டி கீழ் உதடுடன் இணைந்து கூரிய அலகாக மாறி விட்டிருக்கிறது...நீளமான கைகள் குறுகி ஆங்காங்கே எலும்பு புடைத்து அதில் மயிர் முளைத்து முதுகின் இரு புறமும் சிறகுகள் நீண்டிருக்கிறது...கால்களின் பாதம் குறுகி நகம் நீண்டு பறவைக் கால்களாக, நான் அடிக்கடி அணியும் நீலப் பூக்கள் வரைந்த வெள்ளைசட்டை என் உடல் முழுதும் பரவி சிறு மயிர்களாக.....நான் என்பதன் அடையாளமாக முகம் மட்டும்....
இல்லையே...நான் மரங்கொத்தி இல்லை...எப்படி ஆனது இப்படி...
"தூத்துக்குடி அண்ணாச்சி வந்திருக்காவ...கீழ வர்றியா தம்பி...."
ஆழ்மன ஆசைகளும், நிறைவேறாத எண்ணங்களும், பயங்களும் தான் கனவுகளாக வருகிறது...ஸிக்மன்ட் ஃப்ராய்டோ இல்லை வேறு யாரோ சொன்னது நினைவில் வந்து போனது...அதிகாலை கனவு பலிக்குமாமே...லேசாக சிரிப்பு வந்தது...பலித்தால் நன்றாகத் தான் இருக்கும்...ஆனால் கொஞ்சம் பெரிய சிறகுகள் வேண்டும்...
===============================
டிசம்பர் மாத அதிகாலையில் தண்ணீர் சிலீரென்றது...அவசரமாக முகம் கழுவி பல் துலக்கும் போது முகத்தை கண்ணாடியில் பார்த்துக் கொண்டேன்...மூக்கு கொஞ்சம் நீளம் தான் அப்பாவைப் போல...ஆனால் மரங்கொத்தி என்று சொல்ல முடியாது...ச்சே...என்ன இது...
கீழே வந்த போது கிளியன் அண்ணாச்சி ஒரு சொம்பிலிருந்து ஆறிப் போன கருப்பட்டி காப்பியை கிளாஸில் ஊற்றிக் குடித்துக் கொண்டிருந்தார்...தூத்துக்குடி அண்ணாச்சி...ஒரு வகையில் தூரத்து சொந்தம்...அப்பாவுக்கு நெருங்கிய நட்பு....பெயரென்னவோ தங்கவேலன் என்றிருந்தாலும் கிளியன் அண்ணாச்சி என்று சொன்னால் தான் ஊரில் யாருக்குமே தெரிகிறது...நாலாப்பு படிக்கும் போது திட்டிய வாத்தியாரை சட்டையை பிடித்து தள்ளி விட சட்டை கிழிந்து இவர் கையோடு வந்து விட்டதாம்...கிழியன்....நாங்குனேரி மக்கள் வாயில் பட்டு கிளியன்...
"வாங்க மாமா...ரொம்ப நாளா ஆளக் காணோம்...எங்கயும் புதுசா வீடு பாத்திட்டீங்களா...."
"பிள்ளைக்கு அதே கேலிப்பேச்சு தான்....எய்யா....பாத்து நாளாச்சில்லா..அதான் ஒரு எட்டு பார்த்துட்டு போலம்னு வந்தன்..."
"நீங்க எங்கயோ பாம்பே போனதா சொன்னாங்க...அதான் பம்பாயில வீடு சேத்துட்டீங்களான்னு நினைச்சேன்...எப்படியாவது ஒரு தடவை தூத்துக்குடி வந்து பாக்கலாம்னு நினைக்கிறேன்...இங்க வேலையை விட்டுட்டு வரமுடியல....அத்தை எதும் தப்பா எடுத்துக்க வேணாம்......வீட்ல அத்தை எல்லாம் நல்லா தான இருக்காங்க...அந்த கால் வலி இப்ப எப்படி இருக்கு..."
"எல்லாம் இருக்கா....சாள மீனு வாங்கினா ஏன் உழுவை மீனு வாங்கியாரலன்னு...நாட்டு வாய அடைச்சாலும் நாங்குனேரிகாரிய வாய அடைக்க முடியுமா...அதான் பம்பாயிக்கு ஓடிப் போறதுண்டு...."
"அதுஞ்சரி தான்....பம்பாயில மீனு பிடிச்சீங்களாக்கும்...."
அண்ணாச்சி கையிலிருந்த காப்பியை ஒரே மடக்காக குடித்து விட்டு சர்ச்சு பாதிரியாரின் முன் பாவ மன்னிப்பு கேட்பவர் போல தலையை குனிந்து கொண்டார்....
"அது உள்ளதும்...சேட்டு மீனு....கால்ல கல்லை கட்டினதும் சிக்குன பெருச்சாளி மாதிரில்லா கத்தறான்...எளவு இந்த சோலி பாக்கதும் ஒளப்பலாத் தான் உண்டு....இந்தாட்டம் ஊருல பத்து குறுணியாட்டும் வாங்காட்டி ஒம்ம மவள எவன் கட்டுவான்னுட்டு ஒங்க அத்தைக்காரி பாடு முடியல போ...அதுக்காட்டியுமில்ல இந்த மீனு பிடிக்குத சோலி...என்னைக்கு எவன் நம்ம கால்ல கல்ல கட்டுவானிட்டு ஒரு பக்கமா வருது தான்...உப்புத் தோசைக்காவது வழி செய்யணுமில்லா....இந்தா ஒனக்கு கல்யாணம் வச்சிருக்கு...ஒங்கய்யன் எனக்கு செஞ்சதுக்கும் ஒங்கம்ம போட்ட சோத்துக்கும் நான் திருப்பி செய்யணுமில்லா...ஒத்த புள்ள நீ...அதுக்கும் வக்கில்லாம என்ன மசுத்துக்கு நான் மாமனாக்கும்..."
அண்ணாச்சி தலையை குனிந்து கொள்ள வேண்டியது தான்...சோலி அப்படி...பச்சையாக சொல்ல வேண்டுமானால் அண்ணாச்சி ஒரு அடியாள்...காசு கொடுத்து காலை எடுத்துரு என்றால் முடித்து விடுவார்....சில நேரங்களில் கொலை மிரட்டலும் விடுப்பதுண்டு...துணிச்சலாக பார்ட்டியாக இருந்தால் ஆளைத் தூக்கிக் கொண்டு போய் காலில் கல்லைக் கட்டி நடுக்கடலில் இறக்குவதும் உண்டு....வெறும மிரட்டிறது உண்டு, கொலை செஞ்சதில்ல என்று அண்ணாச்சி சொல்வதை எந்தளவு நம்புவது என்று எனக்குத் தெரியவில்லை...முழு போதையில் ஏதேனும் உளறினால் தான் உண்டு....
"நல்லா செஞ்சீங்க போங்க...அதெல்லாம் ஒண்ணும் வேணாம்...ஆனா பார்த்து இருங்க...இப்ப போலீஸ் கெடுபிடியெல்லாம் ஜாஸ்தியா இருக்கு...எங்கனா குடிச்சிட்டு ஒளறி வைக்காதீங்க..."
அண்ணாச்சி சிரித்தார்...
"அதெல்லாம் இருப்பம்....அதக் கொண்டில்லா இங்கன எங்கியும் மீனு பிடிக்கிறதில்ல... ஒனக்க கல்யாணத்துக்கு செய்யணும்...அத நான் ஒங்கம்மைக்கிட்ட கேட்டுக்கிடுதேன்...பொண்ணு எந்த ஊரு...நம்மூர்க்காரியாக்கும்...."
"பொண்ணு கோயம்புத்தூரு...அம்மா போயி அத்தைக்கிட்ட பத்திரிக்கை வச்சாங்களே..."
"அதை கொண்டில்லா நான் இங்க வந்துருக்கன்....கல்யாண வேலையெல்லாம் ஆரம்பிக்கணுமுல்லா...."
"நீங்க இருந்து சாப்பிட்டு போங்க மாமா...எனக்கு வெளிய வேலை கெடக்கு...சாயந்தரம் மெட்ராஸு வேற போவணும்..."
"சாப்பாடு கெடக்கட்டு... பிள்ள பாத்து போயிட்டு வரணும்...இங்க அம்ம கெடக்கா...ஒன்னிய விட்ட அவளுக்கும் நாதியில்ல...பாத்துக்கிடு.. "
"சரிங்க மாமா...நான் வர்றேன்..."
சாப்பாடு கெடக்கட்டு என்று அவர் அலட்சியமாக சொன்னாலும் குறைந்த பட்சம் இருபது இட்லியும் எட்டு தோசையும் அரைச் சட்டி கருப்பட்டி காப்பியும் குடிக்காமல் அவரது காலை நேரம் ஆரம்பமாகாது என்று எனக்குத் தெரியும்....
===========================
கோரிப்பாளையத்தில் முருகேசனை பார்த்து மாதாமாதம் ரெண்டாயிரம் கிலோ வெள்ளாட்டுக் கறி...ஒரு வேலை முடிந்தது....அடுத்து மதுரா ஹோட்டலில் தஞ்சாவூர் ஏஜென்ட்...சொன்ன டிஸைன்படி சிவன் பார்வதி அம்மையுடன் ஆடும் சிலை...கொஞ்சம் லேட்டாகும்...எப்படியும் இந்த மாதக் கடைசியில் கப்பலேற்றி விடலாம்... தலையில் கங்கையுடன் கால் தூக்கி ஆடும் சிவன் எட்டடி....பக்கத்தில் அம்மை ஆறடி...அமெரிக்கா போகிறது....வண்டிப்பாளையம் போய் வாரம் ஆறு டன் தக்காளியும் மூணு டன் பச்சை மிளகாயும் ஏற்பாடு செய்ய வேண்டும்...இது மலேசியாவுக்கு.....கொரியாவிலிருந்து ஈரோட்டு மஞ்சள் கேட்கிறார்கள்...ஆனால் ஈரோட்டுக்காரர்கள் சொல்லும் விலைக்கு மார்ஜின் நிற்காது போலிருக்கிறது...
எனக்கு எக்ஸ்போர்ட் பிஸினஸ்...இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேஷியா மற்றும் உலக நாடுகளெங்கும் என்று சொல்லிக் கொள்ள ஆசை இருந்தாலும் இப்போதைக்கு அதிகம் சிங்கப்பூரும் மலேஷியாவும் தான்....பச்சை மிளகாய், சின்ன வெங்காயம்,அரைக் கீரை, புளிச்சக் கீரை, சேப்பங்கிழங்கு, தக்காளி, முருங்கைக் காய், வெள்ளாட்டுக் கறி, சில சமயம் சாமி சிலை என்று தான் எக்ஸ்போர்ட் போய்க் கொண்டிருக்கிறது....ஏதேனும் டெக்ஸ்டைல், க்ரானைட் என்று ஆர்டர் கிடைத்தால் நானும் ஃப்ரான்ஸ், லண்டன், ஜெர்மனி, அமெரிக்கா என்று பறக்கலாம்...ஆனால் ஏற்கனவே இருப்பவர்களை தாண்டி உள்ளே புகுவது....ம்ம்ம்ம்...மீனாட்சி கண் தொறந்தால் உண்டு....
எல்லாவற்றையும் முடித்துக் கொண்டு நான் ரயில்வே ஸ்டேஷன் போய்....மதுரை ட்டூ சென்னை...பாண்டியன் எக்ஸ்பிரஸ்...ப்ளாட்ஃபார்ம் சிக்ஸ்...அறிவிப்பு கேட்டு..."கும்பலு அள்ளுது மச்சான்...இன்னிக்கு ஆம்னி பஸ்க்காரய்ங்களுக்கெல்லாம் கொள்ளை தான்...அங்க பல்லாவரத்துல நம்ம செந்தில் இருக்கான் மாப்ள...அவன்கிட்ட் நீ வர்றேன்ன்னு சொல்லிருக்கேன்...எக்மோருக்கு வர்றேன்னு சொல்லிருக்கான்..பாத்து பேசிக்க...ஏழாவது மாசம் இங்க வந்திருடி...புள்ள பொறந்தா அது வாடிப்பட்டில தான் பொறக்கணும்...." காது உரசிய குரல்களை கடந்து, முன் பதிவு செய்த என் சீட்டை அடைந்த போது மதுரை டிசம்பரின் மெல்லிய குளிரில் வியர்த்திருந்தது.....
பர்ஸ்ட் க்ளாஸ் ஏ.ஸி.....ஏற்கனவே அடித்திருந்த ஓல்டு மங்க் ரம்மும் சேர்ந்து...சரி, இன்னிக்கி நல்லாத் தூங்கலாம்.... நான் கையோடு கொண்டு போயிருந்த பெரிய டவலை போர்த்திக் கொண்டு தூங்க தயாரான போது...
"ஃபைவ் ஏ அன்ட்....ஃபைவ் பி....இந்த சீட் தான்...."
அவன் எனக்கு எதிர் சீட்டில் வந்து உட்கார்ந்தான்....
===========================
Thursday, 29 October 2009
நான் கடவுள்.....

சரி தான்....தனித் தமிழன் மட்டுமல்ல...தண்ணித் தமிழன் போல...எத்தனை ரவுண்ட் அடித்தானோ...எனக்கு லேசாக சிரிப்பு வந்தது...நின்று கொண்டிருந்தவனும் இதையே நினைத்திருக்கலாம்...
"அடடா....கடவுள் இப்படி நடுத்தெருவுல க்வாட்ட்ர் அடிச்சிட்டு குப்புற கெடப்பான்னு எங்கம்மா சொல்லலியே....சரி...விடு...உன் வீடு எங்கருக்குன்னு சொல்லு...இல்லாட்டி உன் பசங்க ஃபோன் நம்பர் குடு...பேசி வரச் சொல்றேன்...."
கிழவன் முறைப்பது தெரிந்தது...
"கடவுளுக்கு ஏதடா வீடு....எல்லாம் என் வீடு....எல்லாம் என் மக்கள்...உனக்கு வேண்டுமானால் ஏதேனும் வரம் வாங்கிக் கொண்டு வீடு போய் சேர்....செயின்ட் ஜெம்மா பள்ளியில் மூன்றாவது படிக்கும் உன் மகள் ஆர்த்திக்கு இன்னும் சிறிது நேரத்தில் காய்ச்சல் வரப் போகிறது....உன் டாக்டர் மிஸஸ் கிப்சனுக்கு ஃபோன் செய்து அவளைக் காப்பாற்று...இன்னும் சிறிது நேரத்தில் பெரிய மழை வரும்....அதற்கு முன் இங்கிருந்து கிளம்பு...."
கேட்டுக் கொண்டிருந்த எனக்கு ஆச்சரியாக இருந்தது....என்ன இது...கிழவன் அள்ளி விடுகிறான்....ஒரு வேளை இது உண்மையாக இருக்குமோ....
தூரத்தில் நின்று கொண்டிருந்தவன் பின் வாங்குவது தெரிந்தது...லேசாய் பின் நகர்ந்து...அவன் குரல்...பேயடித்தவன் போல....குழறலாய்...
"யேய்....நீ..நீ..ஒனக்கு எப்பிடி என் பொண்ணு பேரு தெரியும்....நீ...நீ...சாமியாரா...."
கிழவன்....வேண்டாம்....எனக்கு பயமாக இருக்கிறது....கடவுள்....கடவுள் வெற்றி பெற்றவன் போல மெதுவாக சிரித்தார்....மங்கலான இருட்டிலும் சிரிப்பில் ஒரு களை தெரிந்தது....
"இல்லை மகனே....சாமியார் அல்ல...நான் தான் சாமி....நான் தான் கடவுள்...உனக்கு சந்தேகமிருந்தால் என்ன வேண்டும் சொல்...இப்பொழுதே தருகிறேன்...."
நின்று கொண்டிருந்தவன் என்ன நினைத்தானோ....
"எனக்கு....எனக்கு....ரொம்ப குளிருது....ஒரு பாக்கெட் டன்ஹில் சிகரெட்டும் ஒரு ஸிப்போ லைட்டரும் வேணும்...."
கடவுள் மந்தகாசமாய் சிரித்தார்...கீழே ஊன்றியிருந்த வலது கை உயர்த்தி...சாய்பாபா சாமியார் போல....வெறுங்கை விரித்து..மூடித் திறக்க....
ஒரு புத்தம் புதிய டன்ஹில் சிகரெட் பாக்கெட்டும்...ஒரு ஸிப்போ லைட்டரும்....
தூரத்தில் நின்று கொண்டிருந்த எனக்கு நாக்கு தொண்டையில் சிக்கிக் கொண்டது....
நின்று கொண்டிருந்தவன் முழங்காலிட்டு சிகரெட்டை பவ்யமாய் வாங்கிக் கொண்டான்..
"மை காட்...மை காட்...சாமி...எனக்கு இன்னொரு பெரிய ஆசை...கேட்டா கோவிச்சிக்க மாட்டீங்களே..."
"நீ என் குழந்தை...என் பிம்பம்...கேள் மகனே...கேள்...."
"அது வந்து சாமி....வந்து...எனக்கு...எனக்கு ப்ரிட்னி ஸ்பியர்ஸை கிஸ் பண்ணனும்னு ரொம்ப நாளா ஆசை...."
கடவுள் திருவிளையாடல் சிவாஜி போல பெரிதாக சிரித்தார்....
"ப்ரிட்னி இப்பொழுது லாஸ்வேகஸில் குடித்துக் கொண்டிருக்கிறாள்...அவளது விதிப்படி இன்றைக்கு மூன்று விநாடிகள் முகம் தெரியாத ஒருவன் அவளை முத்தமிட வேண்டும்....எல்லாம் விதிப்படி நடக்கும்....இதோ....நீ கேட்ட ப்ரிட்னி ஸ்பியர்ஸ்...."
அந்த கும்மிருட்டில்....பளிச்சென்று சிறிய ஒளியுடன்....மறைப்பதை விட காட்டுவதே முக்கியம் எனும் பார்ட்டி ட்ரஸ்ஸில்...ஓ மை காட்....ப்ரிட்னி...நிஜமாகவே ப்ரிட்னி ஸ்பியர்ஸ்....கையில்...அது என்ன...ஐஸ் வோட்காவா...இல்லை மார்ட்டினியா....
இது கனவா...இல்லை நிறைய குடித்து ஹலுசினேஷனா....நம்ப முடியாத திகைப்புடன் நான் யோசித்துத் கொண்டிருக்கும் போதே அவன் ப்ரிட்னியை இறுக முத்தமிட்டு முடித்து....ப்ரிட்னி மறைந்து....மீண்டும் மங்கலான இருட்டு....
கடவுள் மீண்டும் பேச ஆரம்பித்தார்...
"இப்பொழுது நம்புகிறாயா....நான் கடவுள்....ஆனால் நீ...மகனே நீ ஒரு முட்டாள்....கடவுளே வந்தாலும் உனக்கு என்ன கேட்க வேண்டும் என்று தெரியவில்லை...சரி சரி கிளம்பு...உனக்கு நேரமாயிற்று....உன் மகள் ஆர்த்தியை போய்ப் பார்...."
"நம்புகிறேன்....கடவுளே....நீர் கடவுள்....நீர் தான் கடவுள்...."
குனிந்து வணங்கியவனின் கைகள் அவனது முழங்காலின் கீழே பின்பக்கமாக இருந்த பாக்கெட்டில் எதையே துழாவுவது தூரத்தில் இருந்து எனக்கு தெரிந்தது....என்ன தேடுகிறான்....ஒரு வேளை சூடம் கொளுத்த போகிறானா....
நிமிர்ந்தவனின் கையில்....அந்த மங்கலான இருட்டை கிழித்துக் கொண்டு...இரு புறமும் கூராக..... ....
ஒரு கத்தி பளபளத்தது.....
============== ==============
இது நான் வழக்கமாக வெண்டைக்காய் வெட்டும் கத்தியல்ல...அது ஒரு புறம் மட்டும் தான் கூர்மையாக இருக்கும்....அதுவும் கூர்மை என்று சொல்ல முடியாது....குறைவாக மொன்னை....ஆனால் இது....தூரத்தில் இருந்து பார்க்கும் போதே தெரிகிறது...ராயல் நேவியில் இருந்து லீவில் வந்த மார்க்கோ காட்டிய கத்தி போல...குத்துவதற்கே செய்த கத்தி....இருபுறமும் கூர்மையாக...
என்ன செய்கிறான் இவன்....கடவுளிடமே வழிப்பறி செய்கிறானா...
என்னைப் போலவே கடவுளும் குழம்பி இருக்க வேண்டும்....அவர் முகத்தில் சிரிப்பும் மந்தகாசமும் மறைந்து....போலி சர்டிஃபிகேட் கொடுத்து இன்டர்வியூவில் மாட்டிய தெலுங்குகாரன் போல...விழித்தார்...
"என்ன செய்கிறாய் நீ...."
"ஒன்றுமில்லை...நீ யாரென்று தெரியாமல் முட்டாள்தனமாக வரம் கேட்டுவிட்டேன்...இப்பொழுது புரிந்து விட்டது...நீ தான் கடவுள்...."
கடவுளின் குரல் கோபமாக ஒலித்தது....
"உன்னை படைத்தவனுக்கு மரியாதை கொடு...."
"மரியாதை...என்ன மயிருக்கு உனக்கு மரியாதை....எதுவும் செய்ய முடியாததால் எதுவும் செய்யாமல் இருப்பவனை மன்னிக்கலாம்....ஆனால் எல்லாம் செய்ய முடிந்த நீ செய்து கிழித்தது என்ன....உனக்கு எதுக்குடா மரியாதை..."
"நீ சொல்வது ஒன்றும் புரியவில்லை...."
"புரியலையா....போடாங்.....என்னை படை...என்னை படைன்னு யார்னா உன்னை கேட்டாங்களாடா....ஒனக்கு பொழுது போகலைன்னா மனுஷங்களை படைச்சிருவியாமே....ஒக்காளி....நாங்க என்ன உன் போதைக்கு ஊறுகாயா...."
கத்தியுடன் நின்றிருந்தவனின் குரல் காரமாக இருந்தது....
"என்ன போதை...என்ன ஊறுகாய்....மகனே....நீ குடித்திருக்கிறாய்....மழை வரும் முன் ஒழுங்காக வீடு போய் சேர் என்று சொன்னேன்....நீ கேட்கவில்லை....இப்பொழுது பார்....மழை வந்துவிட்டது...."
என்னால் நிஜமாகவே நம்ப முடியவில்லை....கடவுள் சொல்லி முடிப்பதற்குள்...சடசடவென்று....பலமாக....மிக பலமாக....மழை கொட்ட ஆரம்பித்தது....நான் நிஜமாகவே கடவுளை பார்த்துக் கொண்டிருக்கிறேன்....
கத்தியுடன் நின்றிருந்தவன் கவலைப்பட்டதாக தெரியவில்லை....
"மழை வந்தா என்ன...மயிரா போச்சி....உன்கிட்ட கேக்காம விடுறதில்ல....ஊரை கொள்ளையடிச்சி பத்து தலைமுறைக்கு சொத்து சேக்குறவனெல்லாம் மேல மேல தான் போயிக்கிட்டு இருக்கான்....கவுன்சிலரா இருந்தவன் எம்.எல்.ஏ ஆகிடறான்...எம்.எல்.ஏ மந்திரி ஆகிடறான்....அவன் பேரன் ஊர்ல பொறுக்கித் தனம் பண்றான்...நல்லவங்க....ஒன்னும் தெரியாத கொழந்தைங்க எல்லாம் ரொம்ப கஷ்டப்பட்டு சாவுறாங்க...சோத்துக்கே இல்லாம சாவுறாங்க...தேவடியா பசங்க குண்டு வச்சி சாவுறாங்க....இல்ல இனவெறி இறையாண்மைங்கிற பேர்ல கொல்றானுங்க...அப்புறம் அந்த பொணத்தைக் காட்டியே ஓட்டு வாங்குறானுங்க....இதுக்கெல்லாம் நீ என்ன செஞ்ச...."
சோவென்று பெய்த மழையில்.....கடவுளின் உதடுகள் அசையவில்லை...மெளனம்...
"இன்னாடா....கேக்குறோமில்ல....சொல்டாங்க வெண்ணை....."
கடவுளுக்கு பயம் உண்டா....கடுங்குளிரிலும் கொட்டும் மழையிலும் முகம் வியர்க்குமா...
கடவுளின் முகம் வியர்த்திருந்தது...குரல் நடுங்கியது....
"அது....அதெல்லாம் விதிப்படி நடக்கிறது....இப்படித்தான் நடக்கணும்கிறது விதி....அதை நான் நினைச்சாலும் மாத்த முடியாது...."
"எல்லாம் விதிப்படித் தான் நடக்கும்னா நீ என்ன மயிருக்குடா இருக்க....."
அவன் கடவுளை நோக்கி கத்தியுடன் முன்னேறினான்....
================ =================
கடவுளுக்கு அவன் நோக்கம் புரிந்திருக்க வேண்டும்....
"வேண்டாம்....வேண்டாம்....முட்டாள் தனமாக ஏதாவது செய்துவிடாதே...."
கழுத்து திருகிய கோழி போல கடவுளின் அலறல் அந்த சந்தில் எதிரொலித்தது....இதுவரை சாய்ந்திருந்த சுவற்றில் இருந்து வேகமாக எழ முயன்றார்....
அவன் அதை விட வேகமாக இருந்தான்....அவன் இடக்கால் உயர்ந்து கடவுளின் முகத்தை சுவற்றில் அழுத்தி தேய்த்தது....இடது கை கடவுளின் கலைந்த தலை மயிரை கொத்தாக பற்றியது....
கடவுள் இரு கைகளாலும் அவன் காலைப் பற்றி தன்னை விடுவிக்க போராடிக் கொண்டிருந்தார்....அவன் வேகமாக இருந்தான்....கத்த வாயெடுத்த கடவுளின் வாயில் ஷூக்கால் திணிக்கப்பட்டது....
கடவுளின் முழி பிதுங்க...தலை மயிரை இறுகப் பற்றி....குரல் வெளிவராது காலால் தடுத்து....அவன் வலது கை ஓங்கி....
கத்தி கடவுளின் வயிற்றை கிழிப்பதை தூரத்தில் இருந்து நான் பார்த்துக் கொண்டிருந்தேன்....கடவுளின் தொப்புளில் கத்தியை சொருகி....நேர்கோடாய் மேலிழுத்து....மீண்டும் கீழே கொண்டு வந்து....வலது பக்கமாய்....ஆங்கில L போல நகர்த்தி.....
மான்செஸ்டரின் குளிர்கால இரவில்....மழையுடன் மழையாக கடவுளின் ரத்தம் கலக்க....கொட்டும் மழை கண் நனைக்க...திறந்த வாய் நிறைக்க....வலப்பக்கம் தலை சாய்த்து.....கடவுள்....செத்துப் போயிருந்தார்....
============ ============
கடவுளை கொன்று முடித்து....கத்தியை நனைத்திருந்த ரத்தத்தை அவரின் உடையிலேயே துடைத்து முடித்த அவன்....கடவுளின் இறந்த உடலை காலால் நகர்த்தி விட்டு....இது வரை அவர் சாய்ந்திருந்த சுவரில் நின்றவாறே சாய்ந்து கொண்டு....பாக்கெட்டை துழாவி ஒரு சிகரெட்டை எடுத்து....ஸிப்போ லைட்டரால் பற்றவைத்து....ஆழமாக இழுத்து...புகையை வெளியே விட்டு...என்னை நோக்கி திரும்பினான்....
முட்டாள் தனம்...போதை...கொழுப்பு...திமிர்....என்ன வேண்டுமானாலும் சொல்லலாம்....கடவுளின் மரணத்தை பார்த்த அதிர்ச்சியில் நான் என் மறைவிடைத்திலிருந்து வெளியே வந்திருந்தேன்....இந்த நிலையில்....இந்த நிலையில்....அவனால்....என்னை நன்றாக பார்க்க முடியும்....என்னாலும் அவனை.....
என்னை நோக்கியவன்...ச்சும்மா ஜாலிக்கு பூனை காதை கிள்ளிட்டேன்...நீ அதை பாத்துட்டியா என்று சிரிக்கும் குழந்தை போல....மெல்ல சிரித்தான்...
உயிர்வரை ஊடுருவும் குளிரில்....கடும் மழையில்....அந்த இரவின் மங்கலான வெளிச்சத்தில்.....
அவன் முகம் நானாகயிருந்தது........
(திருட்டு பயலே என்று யாரும் பின்னூட்டம் போடும் முன்...இதில் கதை மட்டுமே என்னுடையது...அடிப்படை கருத்து நீட்ஷேவுடையது...ஆல்சோ, இதை எழுத எனக்கு இரண்டு மணி நேரம் ஆகியது....படிப்பவர்கள் ஒரு இரண்டு நிமிடம் செலவு செய்து கதையின் குறைபாடுகளை சொன்னால் நல்லது....நன்றி...)