Monday 31 August 2009

நவீன விக்ரமாதித்தன் கதைகள் - காதல் சொல்லி வந்தாய்!

அறிவிப்பு: இந்த கதையில் வரும் பெயர்கள்,சம்பவங்கள், பாத்திரங்கள்,அண்டா, குண்டா, சட்டி, பானை, ஊர், தெரு, கடை,இட்டிலி, சட்டினி, வடை, பொங்கல் எல்லாம் கற்பனையே...கண்டிப்பாக இருந்த, இருக்கின்ற, இனிமேல் இருக்கப் போகின்ற எவரையும் குறிப்பன அல்ல...அப்படி ஏதேனும் ஒற்றுமை இருந்தால் அது வேதாளத்தின் பிழையே தவிர பதிவர் பொறுப்பல்ல!அத்தியாயம் இரண்டு - சுழன்றும் ஏர் பின்னது உலகம்

இந்த கதையின் முதல் அத்தியாயத்தை இங்கே படிக்கலாம்...

"மாதி....சுட்ட மண் என்னிக்காவது திருப்பி ஒட்டியிருக்கா??"

வேதாளத்தின் கேள்விக்கு பதில் சொல்லாமல் மாதித்தன் முறைத்துக் கொண்டிருந்தான்...

"என்னா மொறைப்பு...பதவி போன பழைய சி.எம். மாதிரி பாக்குற...கேட்டதுக்கு பதில‌ சொல்லப்பு...."

"மண்ணாவது...மண்ணாங்கட்டியாவது...நீயும் உன் கதையும்....கதை சொல்றது தான் சொல்ற....அப்பிடியே என் ரெண்டு காதுலயும் எதுனா அழுக்குத் துணிய சொருகிட்டு கதை சொல்லேன்....நான் பாட்டுக்கு நிம்மதியா தூங்குவேன்..."

"சரி விடு....நான் கதையே சொல்லலை....பொக்கிஷம் திருட்டு சி.டி. கெடைச்சுது...பாக்குறியா..."

"என்னாது....பொக்கிஷமா....மாத்தி மாத்தி கடிதம் எழுதியே கபாலத்த பொளக்குறாய்ங்களாமே...அந்த படத்தை பாக்குறதுக்கு நான் பேசாம காங்கிரஸ் கட்சிலயே சேந்துடுவேன்...அய்யா சாமி...நீ கதைய ஆரம்பி....டாய்ய்ய்ய் கதை எங்கடான்னு ஏற்கனவே ரெண்டு செங்கல்லு வந்திடுச்சி...இப்பிடியே போனா வர்ற செங்கல்ல வச்சி யார்க்க்ஷையர்ல‌ ஒரு வீடே கட்டிரலாம்...."

"ஆங்....அது...."

வேதாளம் கதையை ஆரம்பித்தது...

===========================

மார்கழி மாத கோவை மாலை ஏழு மணிக்கெல்லாம் இருட்ட ஆரம்பித்திருந்தது....காந்திபுரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து லஷ்மி மில்லுக்குக்கோ புதூருக்கோ பீளமேட்டுக்கோ இல்லை அதையும் தாண்டியோ விரையும் மாநகர பஸ்கள்...வீட்டுக்கு லேட்டாய் போகும் குமாஸ்தாக்கள்...சேல்ஸ் பெண்கள்.....யமஹா வீல் மாத்த ஐநூறு ரூவாயா...ஏனுங்க நெம்ப ஜாஸ்தி சொல்றீங்களே...பேரம் பேசும் ஜீன்ஸ் பேண்ட்டுகள்...ஈரோடுன்னா பால்கோவா....மாம்பழம்னா மல்கோவா...அள்ளு அள்ளு ச்சீப்பா அள்ளு....ஈரோட்டையும் மாம்பழத்தையும் சேர்த்தே ஏலம் விடும் வியாபாரிகள்....காலையில இருந்து ஃப்ளோர்ல நின்னு காலெல்லாம் செம வலி மச்சான்...நைட்டுக்கு ஒரு நைன்டியாவது ஏத்துனா தான் தூக்கம் வருமாட்ருக்கு...பஞ்சு மில்லில் வாலிபத்தை தொலைத்த வாலிப வயோதிகர்கள்...ஊழலை ஒழிக்கும் கருணாநிதி அரசு போல பெயருக்கு இருட்டை விரட்டும் கார்ப்பரேஷன் விளக்கு கம்பங்கள்...நீங் என்ன சொல்லுங்....நம்ம நமீதா மாதிரி மலையாளத்தி ஒருத்தியும் கெடையாது...தம்ளன் தம்ளன் தானுங்...டாஸ்மாக் உற்சாகத்தில் குஜராத் நமீதாவை தமிழாக்கும் பரந்த உள்ள தமிழ் குடிமகன்கள்....

கணவனிடம் செல்லக் கோபம் கொண்ட புது மனைவி போல மெயின் ரோட்டிலிருந்து சற்று உள்ளே தள்ளிய பாப்பநாயக்கன் பாளையம் தனது இரவு வாழ்க்கைக்கு தயாராகிக் கொண்டிருந்தது...இரவு வாழ்க்கை என்பது உண்பதும் சீரியல் பார்த்து கண்ணீர் சிந்துவதுமாகவே மாறிப் போய்விட்ட கலாச்சாரத்தின் பிம்பமாக பண்ணாரி அம்மன் உணவகத்திலிருந்து ஓடு போட்ட கூரை வழியே பூரி வாசனையும், பொங்கல் வாசனையும் இனம் பிரிக்க முடியா வாசனைகளுடன் புகை போல கசிந்து கொண்டிருந்தது...

உணவகம் என்றதும் கற்பனை குதிரைகளை பறக்க விடா தீர்கள்....அது ஒரு சிறிய மெஸ்...சிவா என்ற சிவராமனுக்கும், மாலு என்ற அவன் தங்கை மாலதிக்கும் அவன் அம்மாவுக்கும் அது வீடு....மாதக் கணக்கில் அக்கவுண்ட் வைத்து அங்கு சாப்பிடும் மில் சூப்பர்வைசர்களுக்கும் இன்ன பிற வாலிப வயோதிகர்களுக்கும் அது பண்ணாரி அம்மன் மெஸ்...சுருக்கமாக அம்மன் மெஸ்....டிவியும் சோஃபாவும் இருக்க வேண்டிய ஹாலில் நான்கு மேஜைகளும் சில பெஞ்சுகளும்...அது தான் மெஸ்...அதை தாண்டி ஒரு அறை.. அங்கு தான் சமையல்...அதை தாண்டி ஒரு அறை...அது மாலதியின் அறை மற்றும் எல்லாப் பொருட்களின் அறை...

"சிவா இட்லி எல்லாம் ரெடியாயிடுச்சி...உள்ள வர்றியா"

"இந்தா வந்திட்டம்மா..."

எப்படி பார்த்தாலும் இந்த மாசம் கொஞ்சம் இடிக்கும் போலருக்கே...இன்னும் ரெண்டு நாள் கடை நல்லா ஓடினா நல்லது......கணபதி மேன்ஷன்லருந்து ஒரு மூவாயிரம் வர வேண்டி இருக்கு...அதுவும் வராட்டி சேவிங்க்ஸ்ல இருந்து தான் எடுக்கணும்...

நோட்டையும் பேனாவையும் கீழே வைத்து விட்டு எழுந்திரிக்கும் சிவராமனை உங்களுக்கு தெரிந்திருக்கும்....பஸ்ஸில், ட்ரெயினில், துணிக்கடையில், டாக்டரின் அறைக்கு வெளியே கவலையுடன்... இன்னும் எத்தனையோ இடங்களில் எதிர்ப்படும் இருபத்தாறு வயது இளைஞர்களில் சிவராமனை நீங்கள் பார்த்திருக்கலாம்......எதிர்கால இந்தியா கையில் இருக்கிறதோ இல்லையோ தகப்பன் இல்லாத குடும்பம் இன்றைக்கு இவன் கையில் தான் இருக்கிறது...அதனால் கணக்கு வழக்கு கூட்டல் கழித்தல்கள்...

"என்னம்மா...சட்னி, சாம்பார் எல்லாம் ரெடியாயிடுச்சா...மேன்ஷன்லருந்து ஏழு பார்சல் கேட்ருந்தாங்க....வர சொல்லிரவா..."

"எல்லாம் ரெடிடா...வரச் சொல்லு....அப்புறம்....மதியம் தரகர் வந்துட்டு போனாருல்ல....பையன் நல்ல பையனாருக்கான்...பள்ளிப்பாளையத்துல மில்லு சூப்பர்வைசர்...மாலதிக்கு முடிச்சிரலாமேடா..."

இது தினம் நடக்கும் பிரச்சினை...மாலுவுக்கு இப்பொழுது தான் பி.எஸ்.சி இரண்டாம் வருடம் ஆகிறது...அம்மாவுக்கு எத்தனை சொன்னாலும் புரிவதில்லை...அவள் பிரச்சினை அவளுக்கு...

"என்னம்மா....அந்த தரகர் தான் அறிவில்லாம அவசரப்படுறார்னா...நீங்க வேற...இன்னும் ஒரு வருஷம் தான...அவளும் படிச்சி முடிக்கட்டும்...கல்யாணம் வச்சா எப்படியும் ரெண்டு லட்சம் செலவாயிடும்...நம்ம கையிலயும் இப்ப அவ்ளோ காசு இல்ல...ஒரு வருசத்தில எப்படியாவது ஒரு ஒரு லட்சம் சேத்துட்டா இந்த வீட்ட ஒத்தி வைச்சி அவ கல்யாணத்தை முடிச்சிரலாம்...இப்பவே கல்யாணம்னு சொன்னா காசுக்கு நான் எங்க போறது...."

"சள்ளுன்னு விழுந்து புடுங்காதடா...மாலுவுக்கு மட்டுமில்ல...கல்பனாவையும் யோசி...அவளும் ஒனக்காக தான வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கா...அவங்க வீட்டையும் யோசிச்சி பாருடா...எப்ப பார்த்தாலும் காசு காசுன்னு அதையே எண்ணிக்கிட்டு இருக்காத..."

வீட்டுக்கு தெரிந்தே காதலிப்பதில் இது ஒரு பிரச்சினை....கல்பனா...கல்பா...இவனை விட இரண்டு வயது குறைவு...ஒரு வகையில் தூரத்து சொந்தம்...ப்ளஸ் டூ பரிட்சைக்கு இவனிடம் படிக்க வந்ததில் இருந்து....காதலாகி கசிந்துருகி...ஒரே ஜாதி...ஒரே பொருளாதார நிலை..தூரத்து உறவு...எதிர்ப்பில்லாத ஏழு வருட காதல்....சுழன்றும் ஏர் பின்னது உலகம் உழன்றும் கல்பாவே தலை....

சிவராமன் மெல்லிய இருட்டில் அம்மாவையே பார்த்துக் கொண்டிருந்தான்... இவளுக்கு தெரியுமா....கல்பாவை இன்னும் கைப்பிடிக்கவில்லை....ஆனால் தினந்தோறும் கனவு குடித்தனம் நடத்திக் கொண்டு தான் இருக்கிறேன்...இறுக்க கைகோர்த்து மருதமலை படி ஏறியேறிக் கொண்டு.....கல்பாவின் உள்ளங்கை சூடு இன்னமும் இருக்கிறது...ஆனால் காசு வேண்டும்....அவள் கால்கள் கூட தரையில் படாமல் தாங்க வேண்டும்...அதற்கு காசு வேண்டும்...எல்லாவற்றுக்கும் காசு வேண்டும்....அம்மாவுக்கு புரியவில்லை...

"சரிம்மா....தரகர்கிட்ட நான் பேசிக்கிறேன்...நீ மாலுக்கிட்ட எதுவும் சொல்லிக்கிட்டு இருக்காத...அவளாவது நிம்மதியா படிக்கட்டும்...."

"என்னவோடா...சீக்கிரம் நீங்க ரெண்டு பேரும் செட்டிலானா தான் எனக்கு நிம்மதி..."

இதற்கு மேல் இங்கு நின்றால் அம்மா புலம்ப ஆரம்பித்து விடுவாள்....

"சரி சரி....விடு...அந்த சட்னி, சாம்பாரெல்லாம் எடு...நான் கொண்டு போய் மெஸ்ஸில வச்சிட்டு மேன்ஷனுக்கு ஃபோன் பண்றேன்...."

ஸ்னேகிதனே...ஸ்னேகிதனே....ரகஸிய ஸ்னேகிதனே.... அவனது மொபைல் ஃபோன் மெதுவாக பாட ஆரம்பித்தது...கல்பாவுக்கு பிடித்த பாட்டு...அவளே செட் செய்த ரிங் டோன்... ஏதோ புதிய நம்பர்...மெஸ் ஓப்பன் செய்யணும்....இந்த டைம்ல யார் ஃபோன் பண்றது...ஒரு வேளை மேன்ஷன்லருந்து கூப்பிடறாங்களோ...

"ஹலோ சிவா ஹியர்...."

"சிவா....நாந்தான்....கல்பா...."

ஏழரை மணி மெஸ் ஓப்பன் பண்ற டைம்னு கல்பாவுக்கு தெரியும்...இந்த டைம்க்கு கூப்பிட மாட்டாளே...

"சொல்லு கல்பா...என்ன திடீர்னு இந்த டைம்ல...."

"ஒண்ணுமில்ல...கொஞ்சம் பேசணும்..."

"இப்பவா...மெஸ் தொறக்கணுமே...சரி சொல்லு...என்ன வீட்ல யாருக்காவது ஒடம்பு சரியில்லையா....டாக்டர்கிட்ட கூட்டிப் போகணுமா..."

"அதெல்லாம் இல்ல சிவா..எல்லாரும் நல்லாத் தான் இருக்காங்க..."

"அப்புறம் என்ன..."

மறுமுனையில் கல்பனா தயங்குவது தெரிந்தது....

"என்ன கல்பா....எதுவும் பிரச்சினையா..."

"ம்ம்...ஆமா...நீ கொஞ்சம் அன்னபூர்ணா வரைக்கும் வர்றியா...."

கல்பா வீடு பக்கம் தான்...சாய் பாபா காலனி...அன்னபூர்ணா ஹோட்டல் பக்கத்தில்...

"என்ன கல்பா...டைம் ஏழரை ஆயிடுச்சி...நான் மெஸ் தொறக்கணுமே..நான் நாளைக்கு காலைல வர்றேன்....உங்க அப்பாக்கிட்ட பேசியும் ரொம்ப நாளாச்சி....இல்ல அர்ஜண்ட்னா போன்லயே சொல்லு..."

"ம்ம்....அது வந்து...ம்ம்ம்....எங்க அப்பா எனக்கு மாப்பிள்ளை பார்த்திருக்கார் சிவா....நாளைக்கு பொண்ணு பார்க்க வர்றாங்களாம்...."

================ தொடரும் ====== ============

Monday 24 August 2009

நவீன விக்ரமாதித்தன் கதைகள் - காதல் சொல்லி வந்தாய்!

அத்தியாயம் ஒன்று - மாட்டிக் கொண்ட மாதித்தன்
"நல்ல மாட்டுக்கு ஒரு சூடு....முன்னாள் மந்திரிக்கு ஒரு ரெய்டு...உனக்கு எத்தனை சூடு மாதித்தா...எத்தனை சூடு...ஆயிரத்து நூத்தி பதினேழு வருடங்கள் ஆகிவிட்டது...சொன்ன வாக்கை காப்பாற்ற முடிந்ததா உன்னால்??"

மந்திரவாதியின் குரல் மாதித்தனின் செல்போனை கிழித்துக் கொண்டு அறை முழுவதும் பரவியது...

"மந்திரா...கட்சி விட்டு கட்சி ஓடும் கயவாளிகள் மாதிரி என்னை பேசாதே...நான் என்ன போகாமயா இருக்கேன்....நீ சொன்னன்னு பிரிஸ்டால் வரைக்கும் போனேன்....அந்த சனியன் பிடிச்ச வேதாளம் இந்தா வர்றேன்னுட்டு அப்பிடியே ஓடிப் போயிருச்சி ஓடுகாலி நாயி....நானும் தேடிக்கிட்டு தான் இருக்கேன்...சீக்கிரமா அதை பிடிச்சி உன்கிட்ட ஒப்படைச்சாதான் எனக்கு நிம்மதி..."

"சீக்கிரமான்னா...நீ வேதாளத்தை பிடிக்கிறதுக்குள்ள கருணாநிதி காவிரிப் பிரச்சினையவே தீத்துருவாரு...ரஜினிகாந்து அப்பா வேஷத்துல நடிக்க ஆரம்பிச்சிருவாரு போலருக்கே..."

"நீ பேசுறதா பார்த்தா நான் பிடிக்கவே மாட்டேன்னு சொல்ற மாதிரி இருக்கே...இன்னும் கொஞ்ச நாள் டைம் குடு...."

"ஆமா நான் நயந்தாரா...நீ ரஜினிகாந்து....கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம்னு மரத்த சுத்தி டூயட் பாடலாம் வர்றியா..."

என்னக் கொடுமைடா மாதி இது...போயும் போயும் இந்த தாடிக்கார சடையன் கூட டூயட் பாட்ற மாதிரி ஆயிடுச்சே நம்ம நிலைமை...ம்ம்ம்ம்...நினைக்கிறதெல்லாம் வெளிய சொல்ல முடியுமா...

மாதித்தன் குரலை மென்மையாக்கி கொண்டான்...

"இல்ல மந்திரா...இன்னும் மூணு மாசம் டைம் குடு..அந்த வேதாளம் எங்க இருந்தாலும் கண்டுபிடிச்சி கொண்டு வர்றேன்"

"மூணு மாசம் டைம் விக்கிரமாதித்தா...மூணே மாசம்..."

மந்திரவாதியின் மிரட்டல் குரலுடன் மாதித்தனின் மொபைல் போன் ஊமையானது.

------------------------------------------------------

மந்திரவாதி கத்தியதில் மாதித்தனுக்கு ஏற்றி வைத்திருந்த போதை எல்லாம் இறங்கியிருந்தது...

ம்ம்....சுதி மொத்தமா எறங்கிருச்சு...இன்னும் நாலு ரவுண்டு விட்டாதான் நைட்டு தூக்கம் வரும்..விஸ்கி வேற தீந்து போச்சே.....சரி அப்பிடியே மெதுவா நடந்து போயி தெருக்கடைல ரெண்டு பாட்டில் வாங்கிட்டு வந்துரலாம்...வெளிய ஃபுல்லா இருட்டிருச்சே....கடை தொறந்திருக்குமா இல்ல இன்னிக்கி நைட்டு ட்ரையா தான் தூங்கணுமா...

ஷூவை மாட்டிக் கொண்டு மாதித்தன் வெளியே நடந்த போது இரவு நேர பிரிஸ்டால் மெல்லிய மழையில் நனைந்து கொண்டிருந்தது.

தெருவுல ஒரு பயலைக் காணோமே...நைட்டு பகல் எப்ப பார்த்தாலும் இந்த தெருவுல ஒருத்தனைக் கூட பார்க்க முடியல....ம்ம்ம்...இந்நேரம் உஜ்ஜைனிலருந்தா புள்ளையார் சதுர்த்தியும் அதுவுமா ஜெகஜோதியா இருந்திருக்கும்...எல்லாம் போச்சு....ஆமா அது என்ன காரு....பழைய காரு பாத்திருக்கேன்...ஆனா இது என்ன நசுங்கி போன கெரசின் டின்னுக்கு நம்பர் ப்ளேட் மாட்ன மாதிரி...இதைக் கூட இந்த ஊர்ல ஓட்றாய்ங்களா...

மாதித்தன் யோசித்துக் கொண்டிருந்த போதே அவனை தாண்டி சென்ற கார் திடீரென்று நின்றது...அது ஒரு பழைய ஃபோர்ட் ஃபியஸ்டா கார்...கருப்பு பெயின்ட் தேய்ந்து போய் தகரம் பல இடங்களில் மார்க்கெட் போன நடிகை போல பல்லிளிக்க‌...நம்பர் ப்ளேட் பாதி கழன்று தொங்கிக் கொண்டிருந்தது..ஒரு டயரில் பாதி காற்று இல்லை...கமலஹாசன் போல ஈரமான ரோட்டை அழுத்தி முத்தமிட்டுக் கொண்டிருந்தது.... அதில் இருந்து வயது கணிக்க முடியாத ஒரு ஆள் இறங்கினான்...நீளமான ரெயின்கோட் பல இடங்களில் கிழிந்து ஒட்டுப் போட்டிருந்தது...தலையில் ஒரு பழைய தொப்பி...கழுத்தில் ஒரு சாயம் போன நீளமான காசித் துண்டு...இருட்டில் மாதித்தனுக்கு முகம் தெரியவில்லை...

யார்டா இவன்...அப்பிடியே ரீசைக்ளிங் பின்ல இருந்து எந்திரிச்சி வந்த மாதிரி இருக்கான்... மாதித்தன் பேச ஆரம்பிக்கும் முன் ஒரு பேப்பரை நீட்டி அந்த மனிதன் பேச ஆரம்பித்தான்...

"எக்ஸ்க்யூஸ் மீ ஸார்....டூ யூ நோ திஸ் அட்ரஸ் பை எனி சான்ஸ்"

லெட் மீ ஸீ...எடிங்க்டன் ஸ்ட்ரீட்...டேக் லெஃப்ட் அன்ட் தென்.."

அடுத்து நடந்ததை நிஜமாகவே மாதித்தன் எதிர்பார்க்கவில்லை...

அவன் வாயில் ஒரு அழுக்கு துணி திணிக்கப்பட்டது....தலையில் கனமான எதுவோ தாக்கியது.... மாதித்தன் நினைவிழந்தான்.....

---------------------------------------------------

"நான் எங்க இருக்கேன்..."

தமிழ்ப்பட ஹீரோயின் போல கேள்வியுடன் மாதித்தன் கண்விழித்த போது பதில் சொல்ல ஹீரோ யாரும் இல்லை...அவன் கைகள் ஒரு பாறையுடன் சேர்த்து கட்டப்பட்டிருந்தது....கண்களை சுற்றிலும் துழாவ விட்டான்....

அது ஒரு குகை...ஒழுங்கில்லாமல் குடையப்பட்டிருந்ததால் பாறைகள் துருத்திக் கொண்டிருந்தன....இருண்ட மூலைகளில் பிரம்மாண்டமான சிலந்தி வலைகள்...சில வவ்வால்கள் தலைகீழாக...ஒரு வேளை சிலந்தி வலையில் சிக்கிக் கொண்டிருக்கலாம்...பாறைகளில் லேசாய் ஈரக்கசிவு....விடாது பெய்யும் பிரிட்டிஷ் மழை...ஒரு மூலையில் அழுக்குத் துணிகள்...முட்டை ஓடுகள்...ஒரு காலியான‌ வைன் பாட்டில்..சில மண் சட்டிகள்.....சிகரெட் துண்டுகள்....மூலையில் மரக்கட்டைகளை குவித்து எரியும் நெருப்பு...

"என்ன மாதி....மப்பு ரொம்ப ஜாஸ்தியோ....லேசா தட்டினதுக்கே இம்புட்டு நேரம் கழிச்சி எந்திருக்கிற.... கே.எஃப்.ஸில சிக்கன் வாங்கிட்டு வந்தேன்...சாப்ட்றியா..."

பேசிக் கொண்டே வேதாளம் உள்ளே வந்தது...இன்னமும் அதே கிழிந்த பல இடங்களில் ஒட்டுப் போட்ட ரெயின் கோட்...கழுத்தில் சாயம் போன காசித் துண்டு...தலையில் பழைய தொப்பி இல்லை...கொம்புகள் நீட்டிக் கொண்டு தெரிந்தன...

"அட சனியனே....ரொம்ப அசிங்கமா இருக்கும் போதோ எனக்கு லேசா ஒரு டவுட்டு வந்திச்சி...நீ தானா அது....எதுக்கு என்ன இங்க கடத்திட்டு வந்த...."

"ரொம்ப கத்தாத மாதித்தா...எத்தினி நாள் தான் நீ என்னை பிடிப்ப....ரொம்ப போரடிக்குது....அதான் ஒரு சேஞ்சுக்கு....நானே ஒன்னப் பிடிச்சிட்டு வந்துட்டேன்...."

"எதிர்கட்சி எம்.எல்.ஏவை பிடிக்கிற மாதிரி ரொம்பக் கேவலமா இருக்கே...சரி சரி அவுத்து விடு...ஒன்னை மந்திரவாதிகிட்ட சேத்துட்டு நான் பாட்டுக்கு போய்கிட்டே இருக்கேன்..."

வேதாளம் பலமாக சிரித்தது....

"மாதி...ஒனக்கு உறவுகள் பத்தி எதுவுமே தெரியலை...சில உறவுகள் ஒரு தடவை ஒடஞ்சிட்டா எப்பவுமே ஒட்டாது...ஒனக்கு ஒரு கதை தெரி"

"ஏய்...நில்லு நில்லு....நீ கதை சொல்ல ஆரம்பிக்கிற மாதிரி இருக்கே...நீ வந்தா வா...வராட்டி போ...ஆனா கதை மட்டும் சொல்லாத....ரொம்பக் கொடுமையா இருக்கு...ப்ளீஸ் என்னை அவுத்து விட்றேன்...நான் நடந்தே உஜ்ஜைனிக்கு போயிட்றேன்...இனிமே உன் பக்கமே வர மாட்டேன்..."

வேதாளத்தை இடை மறித்த மாதித்தன் கெஞ்ச ஆரம்பித்தான்....

"பெட்ரோல் செலவு பண்னி ஒன்னை இவ்ளோ தூரம் தூக்கிட்டு வந்ததே இதுக்குத் தான்...அப்புறம் கதை சொல்லாட்டி எப்பூடீ...."

மாதித்தனின் கெஞ்சலை புறக்கணித்த வேதாளம் கதை சொல்ல ஆரம்பித்தது....

"மாதி....சுட்ட மண் என்னிக்காவது திருப்பி ஒட்டியிருக்கா??"

==================== தொடரும் ===================

Saturday 22 August 2009

தீராத விளையாட்டுப் பிள்ளை.....

கண்ணப்பன், கண்ணப்பன் என்று ஒருவர்....சிவனுக்கு கண்ணைக் கொடுத்தது அந்த காலத்து கண்ணப்பன்....அன்றைய‌ பொரச்சித் தலைவி ஆட்சியில் பொதுப்பணித்துறை மந்திரியாக இருந்து பொதுச் சேவையில் அன்னை தெரசாவையே மிஞ்சியவர் இந்த கண்ணப்பன்...இன்னமும் கலைச்சேவைகளெல்லாம் செய்ததாக கூட செய்திகள் உண்டு...

காலம் சென்றது...பொரச்சி இவரை புறக்கணித்தது....கொஞ்ச நாள் தனிக்கடை...ஜாதி சொல்லிப் பார்த்தும் "யாவாரம் பிச்சிக்கிட்டு" ஓடவில்லை...காலி செய்தார் கடையை...கட்டினார் பொட்டியை கோபால புரத்துக்கு....நெய்யும் பாலும் போல, பொய்யும் நானும் போல என்று அடுக்கு மொழியில் அணைத்தார் அண்ணன்....அடுத்து வந்தது அண்ணன் ஆட்சி...அமைச்சர் பதவி..மீண்டும் பொது மக்களுக்கு சேவை என்று குவாட்டர் இல்லாமலேயே கனவில் மிதந்தார் நமது கதாநாயகன்....அந்தோ பரிதாபம்...இதயத்தில் மட்டுமே இடம் கிடைத்ததே தவிர மந்திரியாகும் பாக்கியம் மீண்டும் கிட்டவில்லையே....உருண்டார் புரண்டார் அழுதார் தொழுதார்...இரங்கவில்லையே நெய்யும் பொய்யும் அண்ணன்...கொதித்தெழுந்தது பொதுப்பணியில் ஓடாய் தேய்ந்த உள்ளம்...மந்திரி பதவி வாங்க வக்கில்லாத எனக்கு எம்.எல்.ஏ பதவி ஒரு கேடா....தூக்கி எறிந்தார் பதவியை....எத்தனை கட்சிகளடா...எத்தனை கதவுகளடா....தட்டினார் தோட்டத்து கதவை...கலந்தார் பொரச்சியில்....இந்த தன்னலம் கருதா தியாகியின் சேவை எங்களுக்கு தேவை என ஓட்டளித்த இளையான்குடி தமிழர்கள் இருட்டில் நின்றனர்....

-----------------------

அடுத்து வருவதும் ஒரு கண்ணப்பரின் கதை தான்....

பாரதத்தில் தேரோட்டியவன் அந்த கண்ணன்....பாரதத்தின் மூத்த அரசியல்வாதிக்கு காரோட்டியவர் இந்த கண்ணப்பன்....அந்த கண்ணனுக்கு என்ன கிடைத்ததோ...ஆனால் இந்த கண்ணப்பனுக்கு கிடைத்தது மந்திரி பதவி...வாழ்ந்தார் வளமாக....பிற்காலத்தில் பிளந்தார் கட்சியை...ஒட்டினார் வைகோவுடன்...பெற்றார் மூத்த தலைவர் ப்ரோமோஷன்....தொண்டாமுத்தூரில் தொண்டு செய்ய தேர்ந்தெடுத்தார்கள் இவரை....கடல் மணலையும் எண்ணிவிடலாம்...ஆனால் கண்ணப்பர் தொண்டாமுத்தூருக்கு செய்த தொண்டுகள் கணக்கிலடங்கா...கணக்கிலடங்கா...கணக்கில்லா தொண்டு செய்த இந்த காரோட்டிக்கு கட்சித் தலைவருடன் வந்தது பிணக்கு...மக்களாவது மண்ணாவது...டேய் சண்டி....எட்றா வண்டி...திருப்பினார் காரை....வண்டி நின்ற இடம்.....அதே கோபாலபுரம்....தொண்டை அடைக்க நின்றனர் தொண்டாமுத்தூர் தொண்டர்கள்...

-----------------------------------

ராமனின் கண்ணப்ப அவதாரம் தான் இப்படி தீராத விளையாட்டுப் பிள்ளையாகி விட்டது என்றால், அடுத்து வருவது இரண்டு அவதாரங்கள் சேர்ந்த கதை...ஏகபத்தினி விரதன் ராமனும், ஏகப்பட்ட பத்தினி விரதன் கிருஷ்ணனும் சேர்ந்தால் கதை என்னவாகும்.....கந்தலாகும்... அப்படித்தான் ஆகிவிட்டது கம்பம் மக்களின் சனநாயகம்....போர்வாளுக்கு உறையாக இருப்பார் என்று தேர்ந்தெடுத்தால் இவரோ போர்வாள் இவர் வீட்டு சவரக்கத்தியாக இருக்க வேண்டும் என்றார்...ஏற்குமா போர்வாள்....தூக்கி எறிந்துவிட்டது....வைகோவை கம்பத்தில் அடையாளம் காட்டியவன் நான் என்று அடிக்கடி அலறும் இந்த அவதாரம் தனக்கொரு அடையாளம் தேடியது....திக்கற்றவருக்கு தெய்வமே துணை...கழுதை கெட்டால் குட்டிச்சுவர்...அடைந்தது கழகத்தை...எப்பேர்பட்ட கொள்கை வீரன்...மக்கள் தொண்டன்....தூக்கி எறிந்தானே பதவியை...கம்பம் மக்கள் கண்ணீரும் கம்பலையுமாக கதறினர்....

------------------------------------------

காலம் கலிகாலம்....அவதாரங்களால் தான் பெரும் சேதாரம்...

அப்படியும் சொல்லிவிட முடியாது...

பொரச்சித் தலைவியையே தோற்கடித்துக் காட்டி புரட்சி செய்த பர்கூரின் பங்காளியாகத் தான் இருந்தார் தம்பியான துரை...ஏழைப் பங்காளன் எண்பது கோடிக்கு அதிபதி...பஸ் முதலாளி பழனிச்சாமியை எதிர்க்க பொர்ச்சிகரமான ஆள் என்று பொரச்சித் தலைவி இட்ட கட்டளையால் ஜனநாயக் வாதிகளும் நீதிமான்களும் நிறைந்த நாடாளுமன்றத்தை நாடிப் போய்விட்டார்...ஐந்தாண்டுகள் இருப்பார் அள்ளித் தருவார் சேவையை என்று ஆர்வத்துடன் ஓட்டளித்த பர்கூர் மக்களுக்கு இவர் அளித்த சேவைகள் எண்ணிலடங்கா....ஏட்டிலடங்கா....ஆனாலும் போய்விட்டார்...

-------------------------------------------------------------------

தங்களுக்கு சேவை செய்ய பிரதிநிதி ஒருவர் இல்லாமல் மக்கள் இருப்பதா.....உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு....இப்பொழுது தான் தங்கள் திறமையை இலங்கையில் காட்டிய வல்லரசு இந்தியாவிற்கு இது இழுக்கல்லவா...

இந்தியாவில் எல்லாருக்கும் எல்லாம் இருக்கிறது....எம்.எல்.ஏ மட்டும் தான் இல்லை....சில பல கோடிகள் செலவாகும்...அதனால் என்ன...சட்டை கிழிந்திருந்தாலும் மக்கள் எல்லாரும் மெர்சிடிஸ் காரில் தானே போய்க் கொண்டிருக்கிறார்கள்....அரிசி வாங்க முடியாவிட்டாலும் ஏசி ரூமில் தானே இருக்கிறார்கள்....கிடப்பது கிடக்கட்டும்...கிழவனை தூக்கி மனையில் வை... மக்கள் இருந்தால் என்ன செத்தால் என்ன...மக்கள் பிரதிநிதி முக்கியம்....அவன் ஓடுகாலியாக இருந்தாலும்....

நடத்தி விட்டார்கள் தேர்தலை....எல்லாம் பெற்று மக்கள் பிரதிநிதி மட்டுமே இல்லாமல் வாடி வதங்கிய மக்கள் தேர்ந்தெடுத்து விட்டார்கள்....எந்த கட்சி இந்த தேர்தலுக்கு காரணமோ அதே கட்சியை....கம்பத்தில் அதே அவதாரம் மீண்டும் முடிசூடி இருப்பது மக்களின் தெளிவான தேர்வுக்கும், மக்களாட்சியின் மாண்புக்கும் மாபெரும் சான்று......

மக்கள் பிரதிநிதிகள் வந்துவிட்டார்கள்....இனி பாலாறும் தேனாறும் ஓடும்....நீச்சல் தெரியாதவர்கள் இப்பொழுதே நீந்திப் பழகுங்கள்!!!

Monday 3 August 2009

பூஜ்யம்....அம்மா ஆடு இலை ஈ உடுக்கையில் ஆரம்பித்து
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் என்றாகி...

சுற்றிலும் பார்த்து அறுப்பதற்கு எதுவும் இல்லாது போக‌
சுண்டு விரலை.....
முன் பற்களால் வலிக்காது மெல்லக் கடித்து...
கசிந்த இரத்தத்தை மெதுவே.....
உப்பாகத் தான் இருக்கிறது....

எக்ஸ் மைனஸ் ஒய் என்றால் இசட்
இசட் ப்ளஸ் எக்ஸ் என்றால் ஒய் எனில்
எக்ஸின் மதிப்பென்ன....
செர்பிய படுகொலையும் சிப்பாய் புரட்சியும்
அல்ஜீரிய தலைநகரும் அல்ஜீப்ரா விடைகளும்....

சிறு கத்தி எடுத்து இடைப் பக்கம்
சிறிதாய் கோடிழுத்து.....

தேரா மன்னா செப்புவதுடையேன்...
குனித்த புருவமும் கொவ்வை செவ்வாயில் குமின்சிரிப்பும்
இனித்தமுடைய எடுத்த பொற்பாதமும்....

இன்டக்ரேஷன் டிஃப்ரன்ஷியேஷன்...
எலக்ட்ரான் ப்ரோட்டான் எதுவுமில்லாத ந்யூட்ரான்
யுரேனியம் க்ரிடிக்கல் மாஸ் அணுகுண்டு...
ஃபிஷனை விட பெரிது ஃப்யூஷன்...
சி ட்டூ ஹெச் ஃபைவ் ஓஹெச்
எதில் ஆல்ஹாலின் மூலக்கூறு வாய்ப்பாடு...

தோள் பக்கம் மெல்ல கடித்து
கழுத்து நோக்கி மெதுவே நகர்ந்து....

ப்ளான் எலிவேஷன் எஞ்சினியரிங் ட்ராயிங்...
ஃபோர்ஸ் டார்க் ஜைராஸ்கோப்...
பெட்ரோல் உடனடி பவர்...டீசல் கொஞ்ச நேரம் ஆகும்...

இன்டர்னல் கம்பஸ்டன் எஞ்சின்...
இருபது வயதில் வேலை இருபதாயிரம் சம்பளம்..
ஏசி ரூம் கம்பெனி கார்...

வலப்பக்கம் அலுப்பாய் இருக்கிறது
இடப்பக்கம் ஆரம்பித்தால் என்ன...

காலாண்டு கணக்குகள் வராக் கடன்கள்
பங்குதாரர்கள் டிவிடென்ட்.. டேக் ஓவர் மெர்ஜர்...
மார்ஜின் ட்ரேடிங்கும் ப்ரைவேட் எக்விட்டியும்...
இன்ஃப்லேஷனும் க்ரெடிட் க்ரென்ச்சும்...
காளைப் பாய்ச்சலும் கரடிப் பிடியும்....

எக்ஸ் மைனஸ் ஒய் என்றால் இசட்
இசட் ப்ளஸ் எக்ஸ் என்றால் ஒய் எனில்
எக்ஸின் மதிப்பென்ன....
கூட்டிக் கழித்துப் பார்த்தால் பூஜ்ஜியமாய் இருக்கலாம்...

தின்ன தின்ன தீராது
நீண்டு கொண்டே இருக்கிறது...

தன் முயற்சியில் தளராத விக்கிரமாதித்தன் போல‌
தின்று கொண்டே இருக்கிறேன் என்னை நானே...

=========================

படம் உதவி: http://freemasonry.bcy.ca/
(This is a repost as I am on a trip to somewhere....I would be really nice of you, if any of my friends can submit this to Tamilsh/Tamilmanam. Thanks for your visit....Cheers....)