Friday 25 September 2009

நவீன விக்ரமாதித்தன் கதைகள் காதல் சொல்லி வந்தாய்! -5

அத்தியாயம் ஐந்து: எங்கிருந்தோ வந்தான்

முந்திய அத்தியாயங்களை படிக்க அத்தியாயம் ஒன்று, அத்தியாயம் இரண்டு,அத்தியாயம் மூன்று, அத்தியாயம் நான்கு


காதல்....புதிரா புனிதமா? எப்பொழுதும் துடிக்கும் இதயமா இல்லை அவ்வப்போது உதிரும் முடியா? ஒரே ஒரு முறை பூக்கும் மலரா இல்லை வெட்ட வெட்ட வளரும் களையா? உணர்வுகளின் சங்கமமா இல்லை உடல்களின் புணர்ச்சியா? காதலா காமமா? காமத்தின் வேஷம் காதலா...காதலின் மறுபுறம் காமமா? ஆறு வயதில் வருவது காதலா இல்லை அறுபது வயதில் வருவது காதலா? காதலுக்காக காதலை துறத்தல் காதலா இல்லை காதலுக்காக உயிரை துறத்தல் காதலா? காதலித்து தோற்றவர்கள் காதல் வெற்றியா இல்லை காதலிக்கப்படாமலேயே காதலிப்பவர்களின் காதல் உச்சமா? அது இலக்கியமா இல்லை இலக்கணமா? அதுவா இதுவா?

எது காதல்....எது தான் காதல்?? எது வெற்றி எது தோல்வி? எது உச்சம் எது வீழ்ச்சி?? சமன்படாத சமன்பாடுகளின் விடை அறிந்தவன் எவன்? ஒரு கோடி விடைகளில் சரியான விடை எது??


"லவ் பத்தி நீங்க என்ன நினைக்கறீங்க கல்பனா?....."

மகேஷ் கேட்டதும் கல்பனாவிற்கு திக்கென்றிருந்தது....ஒரு வேளை...இவனுக்கு சிவராமனைப் பற்றி தெரிந்திருக்குமா...இல்லை இவனுக்கு யாருடனாவது காதலா....நம்மளை மாதிரியே வேறு வழியில்லாம பெண் பார்க்க ஒத்துக்கிட்டானோ.....இவன் கதை எனக்கெதுக்கு....நான் லவ் பண்றேன்ன்னு சொல்லிடலாமா....ச்சே....எதுக்கு இவன்கிட்ட போய் என் கதைய சொல்லணும்...

"லவ்...ம்ம்ம்..எப்படி சொல்றது...திடீர்னு கேக்கறீங்க....வேணும்னா...."
மகேஷ் மெதுவாக நெற்றியில் அடித்துக் கொண்டான்...


"ஸாரி...ஸாரி.......இடியாட்டிக் கொஸ்டின் இல்ல.....திடீர்னு லவ் பத்தி உங்களை கேட்டா நீங்க என்ன சொல்வீங்க.....அது...நான் சொல்ல வந்தது வேற....கரெக்டா சொல்றதுன்னா...நான் ஒரு பொண்ணை லவ் பண்றேன்...அதான்...."

இரவு...பகல்...குளிர்...வெயில்...நெருப்பு...நீர்...இருட்டு....வெளிச்சம்...ஆண்...பெண்...உலகம் இரண்டாகவே இருக்கிறது....என்றைக்கும்...எப்பொழுதும்...இப்பொழுதும்....
கல்பனாவிற்கு ஒரே சமயத்தில் சந்தோஷமாகவும் ஏனோ வெறுமையான ஒரு துக்கமாகவும் இருந்தது...ஸ்ஸ்ஸ்ஸ்....அப்பாடா....இவனுக்கு வேற ஒரு லவ் இருக்கு....அப்ப இந்த கல்யாணம் நடக்காது...சந்தோஷம்....இவனுக்கு வேற ஒரு லவ்வரா....யார் அந்த பெண்...காரணம் இல்லாமல் வெறுமை....வெறுமை சூழ் உலகு...


"ஓ...உங்களுக்கு ஏற்கனவே லவ் இருக்கா...."

"ஆமா கல்பனா...சின்ன வயசுலருந்தே லவ்...அது கொஞ்சம் பெரிய கதை..."
"நீங்க என்கிட்ட சொல்லனும்னு அவசியம் இல்ல...உங்க வீட்ல என்னை பிடிக்கலைன்னு சொன்னா போதும்..."


"இல்ல அது சரியா இருக்காது...உங்கள்ட்ட சொல்லணும்..."

கல்பனாவுக்கு எரிச்சலாக இருந்தது...இவன் யாரை லவ் பண்ணா எனக்கென்ன...லவ் பண்றதை பெத்தவங்க கிட்ட பேச துணிச்சல் இல்லை...பெண் பார்க்க வந்துட்டு இங்க வந்து கதை பேசிக்கிட்டு இருக்கான்...இவனுக்கெல்லாம் எதுக்கு காதல்....

"சரி சொல்லுங்க..."

"ம்ம்ம்...ஏன் எதுக்குன்னு தெரியாது.. அவங்க பேர் கூட தெரியாது...ஆனா சில பேரை பார்த்தாலே பிடிச்சிரும் இல்ல...அது மாதிரி....நான் அப்ப ஸ்கூல் படிச்சிக்கிட்டு இருந்தேன்...ப்ளஸ் டூ....அப்ப தான் அந்த பொண்ணை பார்த்தேன்...என்னை விட ஒரு நாலு வயசு ஜூனியரா இருக்கும்....ஒரு மாதிரி துறுதுறுன்னு ரொம்ப க்யூட்...."

ஸ்கூல் படிக்கும் போதே லவ்வா....சரிதான்....

"அப்பவே லவ்வா??"

"ம்ம்ம்....அது லவ்வுன்னு சொல்ல முடியாது...ஒரு மாதிரி அஃபக்க்ஷன்னு வச்சிக்கங்களேன்....ச்சே...பொண்ணு ரொம்ப க்யூட்டா இருக்கு....நாம லவ் பண்ணா இப்படி ஒரு பொண்ணைத் தான் பண்ணனும்னு ஒரு மாதிரி தாட்ஸ்...அது அப்படியே மனசுல நின்னுடிச்சி....எந்த பொண்ணை பார்த்தாலும் அந்த பொண்ணோட கம்பேர் பண்ணி மார்க் போட்ற மாதிரி....."

மார்க் போட்றதா....கல்பனாவுக்கு சிரிப்பாக இருந்தது....

"மார்க் போட்றதுன்னா....இது அறுவது...இது எழுபது....இது ஃபெயில்னு பசங்க மார்க் போட்ற மாதிரியா....சரி...உங்க லவ்வரை விட யாருமே மார்க் அதிகம் வாங்கியிருக்க முடியாதே...."

மஹேஷ் பெரிய பாரத்தை இறக்கி வைத்தவன் போல சிரித்தான்.... "கரெக்ட்...எந்த பொண்ணுமே அவளை விட அதிக மார்க் வாங்கலை....கிட்டத்தட்ட பத்து வருஷம்....லவ் இன்னும் டீப்பா தான் ஆகிக்கிட்டு இருக்கு..."

"சரியாப் போச்சி...அப்ப அந்த பொண்ணை கல்யாணம் பண்ணிக்க வேண்டியது தான...எதுக்கு என்னை பெண் பார்க்க வந்தீங்க....வீட்ல ஒத்துக்க மாட்டாங்கன்னா?"

"அது...ரீஸன் அதில்ல....ம்ம்ம்ம்...எனக்கு அந்த பொண்ணை ரொம்ப பிடிச்சிருக்கு...ஆனா அந்த பொண்ணுக்கு என்னை பிடிச்சிருக்கான்னு தெரியலையே..."

ம்ம்க்கும்...ஒன் சைட் லவ்வுக்கு தான் இவ்ளோ பில்டப்பா....ஆளு வெளிய தான் அழகா இருக்கான்...உள்ள கொஞ்சம் லூஸா இருப்பான் போலருக்கே...கல்பனாவுக்கு பெரிதாக‌ சிரிக்க தோன்றியது...ச்சே...வேணாம்...இப்ப சிரிச்சா...பாவம்...

"அப்ப பத்து வருஷமா ஒன் சைட் லவ்வா...இவ்ளோ நாளா லவ் பண்றீங்க...பேசாம அந்த பொண்ணுக்கிட்டயே கேட்ருக்கலாமே..."

மஹேஷ் சிரித்தான்...

"கேட்ருக்கலாம்...சான்ஸ் கிடைக்கலை....சரி...இப்ப கேக்குறேன்....உங்களுக்கு என்னை பிடிச்சிருக்கா கல்பனா?...."

=============================

"சார்....இங்க ரெண்டு தோசை....கேட்டு ரொம்ப நேரமாச்சிங்...."

"ஸாரிங்க....அது அங்க சப்ளை பண்ணதுல விட்டு போயிடுச்சி...உங்களுக்கு ரெண்டு பூரி....வேற....."

"பூரி இல்லைங்....ரெண்டு தோசை....முறுகலா...."

"ஆங்...ரெண்டு தோசை...."

இன்னேரம் பெண் பார்க்க வந்திருப்பாங்களா....பத்து மணிக்கு ஃபோன் பண்றேன்னு சொன்னா....எட்டு மணி தான் ஆகுது....ச்சே...இன்னும் ரெண்டு மணி நேரம் இருக்கே...க‌ல்பாவுக்கு ஃபோன் செஞ்சா என்ன....வேணாம்...இன்னும் கொஞ்ச நேரம் ஆகட்டும்..... ஏனோ சில நேரங்களில் காலம் மிக மெதுவாக நகர்கிறது....

சிவராமன் சமையல்கட்டை நோக்கி கத்தினான்....

"இங்க ரெண்டு பூரி...."

==================================

மே மாத வெயில்...கழுத்தெல்லாம் வியர்த்து முகம் கறுக்கும் நிலையில் மழை வரும் என்று குடையுடன் நடப்பவர்கள் எவருமில்லை....திடீரென்று மழை வந்து தொப்பலாக நனைவது போல்...ஏதோ லவ்....வீட்ல சொல்ல முடியாம இங்க பொண்ணு பார்க்க வந்து தொல்லை பண்றான்....நினைத்துக் கொண்டிருந்த கல்பனா அதை எதிர்பார்க்கவில்லை....

"என்னது....நானா....நீங்க....நீங்க...நான் உங்களை பார்த்ததே இல்லியே..."

"ஆமா....கல்பனா...நான் சொன்ன அந்த க்யூட் கேர்ள்...உங்களை தான் நான் பார்த்தது....உங்க அப்பா தான் எனக்கு ட்வெல்த்ல பிஸிக்ஸ்...நீங்க என்னை பார்க்கலை...உங்க வீட்ல தான் நான் உங்களை பார்த்தேன்...அன்னிலருந்து....என்னோட பேங்க் பாஸ்வேர்ட் கூட கல்பா தான்....கல்பா மகேஷ்....பாஸ்போர்ட்ல கல்பனா மகேஸ்வரன்....நல்லாருக்குல்ல...."

யார் இவன்....பத்து வருஷம்....ஒரு நாள்....ஒரு நாள் கூட பார்த்ததில்லை....இன்றைக்கு....எங்கிருந்து வந்தான்...

"ஸாரி...கல்பனா...இல்ல கல்பா....உங்க ஷாக் எனக்கு புரியுது....இவன் யார்னு யோசிக்கிறீங்க இல்லியா....ம்ம்ம்ம்...பெரிசா சொல்ல ஒண்ணுமில்ல....மகேஷ்....ஸன் ஆஃப் கார்த்திக்கேயன்....பி.ஈ....எம்.பி.ஏ.....இன்வெஸ்ட்மென்ட் பேங்கிங்...கோல்ட்மன் ஸாக்ஸ்ல மார்க்கெட் அனலிஸ்ட்....நியூயார்க்ல வீடு....ரஜினிகாந்த்....ஹாரிஸன் ஃபோர்ட்...டானியல் க்ரெய்க்..மாட் டேமன் ஃபேன்....ஆஃபிஸ் பார்ட்டில பியர்...வீக் என்ட்ல மட்டும் கொஞ்சம் விஸ்கி...எப்பனா சிகரெட்...அழகான பொண்ணுங்களை மட்டும் அப்பப்ப சைட் அடிக்கிறது....என்னைக்காவது சொந்தமா பேங்க் ஓப்பன் செய்யணும்னு ஒரு சின்ன ஆசை...ரொம்ப நல்லவனுமில்ல....கெட்டவனுமில்ல....இப்ப சொல்லுங்க...இல்ல...போங்க வாங்க...ஒரு மாதிரி டிஸ்டன்ஸா இருக்குல்ல...இப்ப சொல்லு கல்பா...உனக்கு என்னை பிடிச்சிருக்கா...."

பாலக்காடு தாண்டிய காற்று கோவையில் மெல்ல மார்கழி பனியாய் இறங்க ஆரம்பித்திருந்தது....சுட்டெரிக்கும் சூரியனில்லை...கண்ணை கூச வைக்கும் வெளிச்சமில்லை...உடலுடன் உடல் உரசலை வெறுக்க வைக்கும் வியர்வை இல்லை...பனி விழும் இரவுகள் படைக்கும் கடவுளின் நேரம்...குளிருக்கு இதமாக விளக்கில் விழும் விட்டில் பூச்சிகள்....இரவுகள்....சாத்தானின் நேரமும் கூட...

"இப்பிடி திடீர்னு கேட்டா....என்னன்னு....."

"இல்ல கல்பா...லவ்வை சொல்றதுக்கு முன்னாடி நான் க்வாலிஃபைடா இருக்கணுமில்ல.....பத்து வருஷமா இதைக் கேட்கத் தான் வெய்ட் பண்ணிக்கிட்டு இருக்கேன்...ப்ளீஸ்....இப்ப சொன்னா நல்லது....பிடிச்சி தான் இருக்கணும்னு நான் சொல்லலை...ஆனா....என்னை பிடிச்சிருக்கா இல்லையா..."

நான் நோக்குங்கால் நிலம் நோக்கி நோக்காக்கால் தான் நோக்கி மெல்ல நகும்....நிலம் நோக்குவதன் காரணம் இதை சொன்ன வள்ளுவனுக்கு தெரியுமா...ஆயிரம் காரணங்கள் இருக்கலாம்....தன் முகத்தை மறைப்பதும் அதில் ஒன்றாக இருக்கலாம்....

அடர் சிவப்பில்...மெல்லிய வெண்மையில்...புதிதாய் பூக்க ஆரம்பிக்கும் மாதுளை மொட்டுக்களை பார்த்த படி கல்பனா மெதுவாய் பேசினாள்.....

"பிடிச்சிருக்கு...."

===============================

இவ்ளோ நேரம் கதை சொல்றேன்...ஒரு சத்தத்தையும் காணோமே...தூங்கிட்டானோ....க்ளைமாக்ஸ் சீனில் புள்ளி விவரம் அடுக்கும் புரட்சிக் கலைஞர் போல வேகமாக கதை சொன்ன வேதாளம் திடீரென்று நிறுத்தி விட்டு பக்கத்தில் அழுக்கு பாட்டிலில் இருந்த அழுக்கு தண்ணீரை மாதித்தன் முகத்தில் பொளேரன்று கொட்டியது...

"ஏய்ய்....ய்ய்.....என்னா...யாரு....அடச்சீ....சனியனே...எதுக்கு இப்ப தண்ணி ஊத்துன...."

"ஹிஹி...ஹிஹ்ஹிஹி....அது ஒண்ணுமில்ல மாதி...நெம்ப நேரமா சத்தமே இல்ல...அதான்...தூங்கிட்டியோன்னு பார்த்தேன்...."

"மூஞ்சைப் பாரு....ஒன் எழவு பெரிய எழவாருக்கு....சரி...தண்ணி ஊத்துனது தான் ஊத்துன.....இந்த பாழடைஞ்ச குகைல எதுனா தண்ணி வச்சிருப்பியே....அதை ஒரு க்ளாஸ்ல ஊத்து...."

வேதாளம் இளித்த‌து......

"இல்லாமையா....செவிக்கு உணவில்லா போழ்து வயிற்றுக்கும் சிறுது ஈயப்படும்..."

"ம்ம்ம்க்கும்...காதுல ஈயத்தை ஊத்தறது பத்தாதுன்னு கிட்னிக்கு வேறயா....ஈயி...ஈயி....அப்பிடியே ரெண்டு சிக‌ரெட்டையும் ப‌த்தை வையி..."

ப‌தில் பேசாத‌ வேதாள‌ம் இர‌ண்டு க்ளாஸ்க‌ளில் ஸ்காட்ச் விஸ்கியை ஊற்ற‌ ஆர‌ம்பித்த‌து....




===============தொடரும் ======================

Monday 21 September 2009

நவீன விக்ரமாதித்தன் கதைகள் - காதல் சொல்லி வந்தாய் - 4

அத்தியாயம் நான்கு - கறுப்பு குதிரை




"ராகுல் த்ராவிட் இஸ் ஆன் செவன்டி ட்டூ...ஆன் ஹிஸ் வே ட்டூ ய ஃபேபுலஸ் சென்ச்சுரி...த வால் இஸ் ப்ரூவிங் ஹவ் ஸ்ட்ராங் இட் இஸ்..."

டி.வி.யில் யாரோ உற்சாகமாக அலறிக் கொண்டிருந்தார்கள்...முகங்கள் முகங்கள்...காவி பச்சை வெள்ளை நிறங்களில் கிரிக்கெட் மைதானமெங்கும் முகங்கள் முகங்கள்...காற்றில் கூச்சலிடும் கைகள்...தரையில் பதிய மறுக்கும் கால்கள்...

கையில் பேட்டுடன் ராகுல் த்ராவிட் கால்களை நகர்த்திக் கொண்டிருந்தார்...ஓப்பனிங்கில் ஆரம்பித்து முப்பத்தாறாவது ஓவர்..சச்சின் டென்டுல்கரில் ஆரம்பித்து எம்.எஸ்.தோனி வரை போய் விட த்ராவிட் மட்டும்....எல்லா பால்களையும் அழகாக சமாளித்து....

அந்த பால் அப்படி ஒன்றும் டேஞ்சர் என்று சொல்ல முடியாது... ..மீடியம் ஃபாஸ்ட்...வழக்கமான் இடத்தில் பிட்ச் ஆகி...வைட் போல விலகி சென்று...ஓ...நோ...திடீரென்று ரிவர்ஸ் ஸ்விங்க்.......அவுட்...த்ராவிட் அவுட்....த வால் இஸ் கான்.....பெரும் சத்தத்தில் டி.வி. கூச்சலிட்டது....

பார்த்துக் கொண்டிருந்த கல்பனா மணியை பார்த்துக் கொண்டாள்...மூன்று மணி.....இன்னும் கொஞ்ச நேரம் தான்...ஆறு மணிக்கு அவர்கள் வந்து விடுவார்கள்....

அந்த மகேஷ் எப்படி இருப்பான் என்று தெரியவில்லை.... நேற்றைக்கு இரவெல்லாம் சண்டையிட்டு கடைசியில் அப்பா கெஞ்ச ஆரம்பித்து விட்டார்... ரொம்ப நல்ல பையன்.... என்னோட பழைய ஸ்டூடன்ட்....அமெரிக்காவுல வேலை....நீ மட்டும் சரின்னு ஒத்துக்கிட்டா எல்லாருக்கும் நல்லது....ஒனக்கு பின்னாடி ரெண்டு தங்கச்சிங்களையும் எப்படின்னா கரையேத்திருவேன்....எல்லாம் இப்ப உன் கைல தான் இருக்கு கல்பனா...

கெஞ்சுகிற ஒரு மனிதரிடம்...பிறந்த நாளிலிருந்து பார்த்து பார்த்து வளர்த்து....கைப்பிடித்து நடக்க வைத்து....தினமும் பள்ளிக்கு அழைத்து சென்று...அவள் டென் த்தில் பள்ளியில் முதல் மார்க் வாங்கிய போது தெருவில் எல்லாருக்கும் சாக்லேட் கொடுத்து...காலேஜ் டிஸ்டன்சா இருக்கு...கையில காசு இருந்தா உனக்கு ஒரு வண்டி வாங்கி கொடுத்துடுவேன்...இப்ப இல்ல...டெய்லி நானே உன்னை ட்ராப் பண்றேன்...பொண்ணுன்னா பாட்டு மட்டும் தான் கத்துக்கணும்கிறதெல்லாம் பழைய பேஷன்....இப்ப டென்னிஸ் ஆட்றது தான் ஃபேஷன்...அவளை டென்னிஸ் க்ளாஸில் சேர்த்து விட்டு..... அப்படிப்பட்ட அப்பாவிடம் என்னவென்று சொல்வது.....

"என்னப்பா இது....உங்களுக்குத் தான் சிவா மேட்டர் எல்லாம் தெரியும்ல....அப்புறம் எப்படிப்பா....நான் நாளைக்கு பொண்ணு பார்க்க வரவங்க கிட்ட எப்படி சரின்னு சொல்ல முடியும்....சிவாவுக்கு நான் என்ன பதில் சொல்றது...."

"ம்ம்ம்....என்னம்மா இது.....ஃப்ரண்ட்ஸுன்னு தான் நான் நினைச்சிக்கிட்டு இருக்கேன்....நீயும் அப்படியே நினைச்சிக்க...சிவா கேட்டா நான் பேசிக்கிறேன்....உறவுக்காரங்க...நான் சொன்னா கேப்பாங்க......அவனுக்கும் நானே நல்லதா ஒரு பொண்ணு பார்த்து முடிச்சி வைக்கிறேன்....அவனுக்கு பிஸினஸ் நடத்தக்கூட எதுனா காசு அரேஞ்ச் பண்ணி கொடுக்கலாம்....பாவம் அவனும் கஷ்டப்பட்றான்...."

கல்பனாவுக்கு மீண்டும் எரிச்சலாக இருந்தது.....சுயநல நாக்கு எப்படியெல்லாம் புரள்கிறது....

"அசிங்கமா பேசாதீங்கப்பா....அதெல்லாம் எனக்கு தெரியாது....நான் நாளைக்கு முடியாதுன்னு தான் சொல்லப் போறேன்....அதுக்கப்புறம் அது உங்க பிரச்சினை...."

அப்பா முகத்தை திருப்பி கொண்டார்.... "உன் இஷ்டம்மா...நீ உன்னை மட்டும் பார்க்கிற....எனக்கு மூணு பொண்ணுங்க....நான் எல்லாரையும் பார்க்கணுமே...உன்னைய தான் மூத்த பையன் மாதிரி நினைச்சிக்கிட்டு இருந்தேன்...நீ சரின்னா உன் தங்கச்சிங்களுக்கு ஹெல்ப் பண்ண மாதிரி இருக்கும்....முடியாதுன்னா என்ன சொல்றது....நான் பிச்சை எடுத்தாவது அவங்களையும் கரையேத்தி தான் ஆகணும்...."

மேலே எதுவும் பேசாமல் அப்பா வெளியே புறப்பட்டு சென்று விட்டார்....அதிக டென்ஷனுடன் இருந்தால் புகைப்பது அவர் பழக்கம்....அதற்காக இருக்கலாம்...

டி.வியில் இந்தியா ஒன்பது விக்கெட்டுகளை இழந்து போராடிக் கொண்டிருக்க கல்பனாவுக்கு உள்ளுக்குள் வியர்க்க ஆரம்பித்தது.....இன்னும் மூன்று மணி நேரம் தான்...என்ன சொல்லப் போகிறேன்...எப்படி சொல்லப் போகிறேன்...

====================================

"எங்க பாட்டனுக்கு கும்பகோணம்....வெள்ளைக்காரன் காலத்துல கோயம்புத்தூரு பாலக்காடு, ஊட்டியெல்லாம் பாக்குறதுக்கு நல்ல ஆளு வேணும்னு இங்க ரயில்வேல தொரையே கூப்டாராம்....கும்மோணத்தான்னா அப்பிடி ஒரு மரியாதை...அப்படித்தான் இங்க செட்டில் ஆனது...இன்னிக்கும் எங்க அப்பாரு ஊர்னு சொன்னா அது கும்மோணம் தான் பாத்துக்கங்களேன்.....அவரு இருக்க வரைக்கும் வருஷா வருஷம் குல தெய்வ கோயிலுக்கு திருவிழான்னா கும்மோணம் கெளம்பி போய்டுவாரு... "

மாப்பிள்ளையின் அப்பா சுய விளம்பரம் செய்து கொண்டிருக்க அம்மாவோ பெரிய சிரிப்புடன் தன் பிள்ளையின் பெருமையை முரசறைந்து கொண்டிருந்தாள்....

"எங்க வீட்டுக்காராரு கூட அதிகம் இல்ல....ஆனா மகேஷுன்னு தான் எங்க வீட்ல விதிவெலக்கா அடி முடி காணா மகேசன் மாதிரி அப்பிடி ஒரு ஒயரம்...நெகு நெகுன்னு...நான் நிமிந்து பாத்து தான் பேச வேண்டியதாயிருக்கு....கை நிறைய சம்பளம்...ஆளும் நல்லா இருக்கான்.....அமெரிக்காவுல வேல....வீட்டுக்கு ஒரே புள்ள...எங்கடா எதுனா வெள்ளைக்காரிய கூட்டிக்கிட்டு வந்துருவானோன்னு வயித்துல நெருப்ப கட்டிக்கிட்டு தான் இருந்தேன்னு வச்சிக்கங்களேன்...என் கையால தாலி எடுத்து குடுத்தா குல தெய்வத்துக்கு கொடை குடுக்கறதா நேந்துக்கிட்டு இருக்கேன்....ஒங்க பொண்ணு புண்ணியத்துல எங்க சாமிக்கு இந்த வருஷ கொடை போங்க...."

இதற்காகவே கூட்டி வருவார்கள் போல....வந்திருந்த கும்பலில் ஒருவர் தனது கடமையை செய்ய ஆரம்பித்தார்....

"அதெல்லாம் இருக்கட்டும்க்கா...இப்ப பொண்ணு பிடிச்சிருக்கா இல்லையான்னு சொல்லிட்டா மேற் கொண்டு பேச வேண்டியதை பேசி முடிக்கலாம்ல..."

"என்னத்தை பேசறது....பொண்ணு எங்களுக்கு ரொம்ப பிடிச்சிருக்கு...காசு பணமெல்லாம் கூட வேணாம்....பொண்ணை இப்பவே எங்க கூட கூட்டிக்கிட்டு போலாம்னு இருக்கேன்...."

கல்பனாவின் அப்பா சந்தோஷமாக சிரித்தார்.... "பெரியவங்க பளிச்சின்னு சொல்லிட்டீங்க....எங்களுக்கு முழு சம்மதம்....மேல நீங்க என்ன கேக்கறீங்கன்னு சொல்லிட்டா தேதி குறிச்சிடலாம்...."

தன்னிடம் சம்மதம் கேட்பார்கள் என்று நினைத்திருந்த கல்பனாவுக்கு திக்கென்றிருந்தது....அப்பா நேற்று பேசியது என்ன...

இதை எப்படியோ தெரிந்தவன் போல‌ இது வரை அதிகம் பேசாமல் சிரிப்புடன் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்த மகேஷ் மறுப்பவன் போல தலையை அசைத்து பேச ஆரம்பித்தான்....

"இருங்கம்மா....நான் பொண்ணுக்கிட்ட கொஞ்சம் பேசணுமே...."

மகேஷின் அம்மா மனோரமா ரசிகை.... "ஆமாடா...கல்யாணம் பண்ணிட்டு அப்புறம் பேசிக்கிட்டே தான இருக்கப் போற...அதுக்குள்ள என்ன....சரி சரி போய் பேசிட்டு வா...."

===============================

பிடிக்கலை...இந்த கல்யாணம் எனக்கு பிடிக்கலை...எப்படியாவது சொல்லி விட வேண்டியது....மகேஷை பற்றி கவலை இல்லை....அவன் யாரோ நான் யாரோ...அப்பா தான் உடைந்து போய் விடுவார்....அவரிடம் அப்புறம் பேசிக் கொள்ளலாம்....விற்பனை செய்ய நான் என்ன சட்டியா பானையா....தங்கை வாழ்க்கையை பார் என்று தான் சொல்வார்....சம்பந்தப்பட்ட நித்யாவும் நந்தினியும் கூட இதை ஒத்துக் கொள்ள மாட்டார்கள்....நந்தினி இப்ப தான் ப்ளஸ் டூ....எதுவும் புரியாது....நித்யாவிடம் பேசலாம்...அப்பாவிடம் நித்யாவையே பேச வைக்கலாம்....அட...மாதுளை மரம் பூக்க ஆரம்பிச்சிடுச்சே...ச்சே...பூவெல்லாம் ரொம்ப அழகாயிருக்கு....நாளைக்கு ஒழுங்கா தண்ணி ஊத்தனும்...பேசணும்னு சொன்னான்....எங்க இந்த மகேஷை இன்னும் காணோம்....

தோட்டத்தில் இருந்த மாதுளை மரம் கல்பாவின் கைபட்டு ஒவ்வொரு இலையாக இழந்து கொண்டிருக்க மகேஷ் அவளை நோக்கி வந்து கொண்டிருந்தான்....

"ஸாரி..நான் செருப்பு போடாது வந்துட்டேன்...ஷூ மாட்ட கொஞ்சம் லேட்டாயிடுச்சி...."

முதல் வார்த்தையே ஸாரியா....இன்னும் எத்தனை ஸாரியோ....எதுக்கெல்லாம் ஸாரியோ....கல்பாவுக்கு கொஞ்சம் சிரிப்பாக இருந்தது....

"ம்ம்ம்...பரவாயில்ல...."

"ம்ம்ம்ம்....ஈவ்னிங் ஆயிட்டா கோயம்புத்தூர் கொஞ்சம் ச்சில்லுன்னு ஆயிடுதுல்ல..."

"ம்ம்ம்...ஆமா..."

"நீங்க பி.எஸ்.ஸி. தான....எந்த காலேஜ்..."

"பி.எஸ்.ஜி"

"அட...நானும் அங்க தான்...ஆனா இஞ்சினியரிங்...ஹ ஹாஹ்ஹ்ஹா...."

பெரிதாய் ஜோக் சொன்னவன் போல சிரித்தவனை கல்பனா நிமிர்ந்து பார்த்தாள்... சராசரிக்கும் அதிகமான உயரம்...மங்கலான மெல்லிய இருளில் சிரிக்கும் கண்கள்...கூர்மையான மூக்கு....கருப்பும் இல்லாது வெளீரென்று வெளுப்பும் இல்லாது இரண்டும் கலந்த நிறம்....கலைந்து கிடக்கும் தலை...தானாக கலைந்ததா இல்லை கலைத்து விடப்பட்டதா என்று தெரியவில்லை...கொஞ்சம் சின்ன வயசு அஜித் மாதிரி தான் இருக்கான்...ம்ம்ம்....அதான் அவங்க அம்மா ரொம்ப அலட்டிக்கிறாங்க....

மீண்டும் அவனே பேச ஆரம்பித்தான்....

"ம்ம்ம்....உங்க டைம்பாஸ் என்ன....டி.வி....சினிமா..."

"டே டைம்ல வேற என்ன பண்றது....டி.வி. தான்....ஆனா எனக்கு டி.வி. பிடிக்காது....புக் படிப்பேன்...ஈவ்னிங் அப்பப்ப டென்னிஸ்...."

"அய்யோ...டென்னிஸ் எனக்கு ரொம்ப பிடிக்கும்....நானும் விளையாடுவேன்...என்ன புக் படிப்பீங்க...அகதா க்றிஸ்டி....டானியல் ஸ்டீல்..."

"ம்ம்ம்ம்....அக‌தா க்றிஸ்டி அவ்வளவா படிக்கிறதில்ல...டானியல் ஸ்டீல் ஓக்கே...தமிழ்ல தான் நிறைய படிக்கிறது....பால குமாரன், சுஜாதா, ஜெயமோகன், எஸ்.ராம கிருஷ்ணன், ஜானகி ராமன் இந்த மாதிரி...."

"ம்ம்ம்...நான் அவ்வளவு படிச்சதில்ல...சும்மா அப்பப்ப ஃப்ளைட்ல ட்ராவல் பண்றப்ப எதுனா படிக்கிறது தான்..."

கல்பனாவுக்கு அலுப்பாக இருந்தது....இது என்ன அர்த்தமில்லாத பேச்சு....

"என்னவோ பேசணும்னு சொன்னீங்க..."

"ம்ம்ம்....அது ஒண்ணுமில்ல...சும்மா பேசணும்னு ஒரு ஆசை...சோனியா காந்தி பத்தி நீங்க என்ன நினைக்கறீங்க...."

கல்பனாவுக்கு அவன் தவிப்பு சிரிப்பாக இருந்தது....

"இதை கேட்க தான் இவ்ளோ நேரம் ட்ரை செஞ்சீங்களா...."

மகேஷூம் சிரித்தான்.... "இல்ல கல்பனா....அது வேற...டக்குன்னு எப்பிடி கேக்குறதுன்னு தெரியலை...அதான்...இப்ப கேக்கவா..."

"சரி கேளுங்க..."

தன் பங்குக்கு தானும் இரு இலையை பறித்து கசக்கிய மகேஷ் மாதுளை இலையை முகர்ந்து கொண்டு எங்கோ பார்த்த படி பேசினான்....

"ம்ம்ம்....அது....லவ் பத்தி நீங்க என்ன நினைக்கறீங்க கல்பனா?"

============ தொடரும் =========================

Monday 14 September 2009

ரஜினிகாந்தும் ராகுல் காந்தியும் பின்னே ஒரு சுண்டெலியும்!



வருகிறது வருகிறது என்றார்கள்....வந்தே விட்டது பொயல்...சூறாவளியாய் சுழன்றடித்ததில் தமிழ்நாட்டில் கப்பல்கள் கவிழ்ந்து கிடக்கின்றன...கொடிமரங்கள் குப்புற விழுந்து விட்டன...பேயாய் பெய்த மக்கள் மழையில் பிற கட்சிகள் கரை சேர தள்ளாடுகின்றன...

இது வானிலை வர்ணனை அல்ல....சமீபத்தில் சொல்ட்டி சொல்ட்டி அடித்த ராகுல் காந்தி என்ற சூறாவளியால் ஏற்பட்ட சேதாரக் கணக்கு....

கட்சியே இல்லாத கார்த்திக்கை விட ராகுல் வந்த இடமெல்லாம் மக்கள் வெள்ளம்...சென்ற இடமெல்லாம் திருவிழா கூட்டம்...மீனவர்களில் சிங்கள குண்டடிப் பட்டு செத்தவர்கள் போக மற்றவர்களுக்கெல்லாம் திருவிழா...வயல் காய்ந்து போய் வாங்கிய கடன் கொடுக்க முடியாமல் தூக்கில் தொங்கிய விவசாயிகள் தவிர மற்றவருக்கெல்லாம் பொங்கல்....

வெற்றி வெற்றி மாபெரும் வெற்றி...வரலாறு காணா வெற்றி...பகைவர் நடுங்க வைக்கும் வெற்றி.... நான் சொல்லவில்லை....தன் சேலம் தொகுதியில் தானே ஜெயிக்க முடியாத வெற்றித் திருமகன், வீரத் திருமகன் தங்கபாலு அறிக்கையாக அலறுகிறார்...

தான் வீசிய வேகத்தில் சூறாவளிக்கே கொஞ்சம் தள்ளாட்டம் வந்து விட்டது...தள்ளாட்டமா இல்லை வாரிசு திமிரா என்று தெரியவில்லை....ஆனால் ரஜினிகாந்த் பற்றி முத்து உதிர்த்துவிட்டு போயிருக்கிறார்... "குற்றப் பிண்ணனி உள்ளவர்கள், க்ரிமினல்கள் தவிர யார் வேண்டுமானாலும் காங்கிரஸில் சேரலாம்...அதனால் ரஜினிகாந்தும் சேரலாம்" என்ற ரீதியில் திருவாய் மலர்ந்திருக்கிறார்....

என்றைக்காவது வாழ்க்கையில் கஷ்டப்பட்டு உழைத்திருந்தால் எப்படி பேசுவது என்ன பேசுவது என்று தெரியும்....எவனோ எழுதிக் கொடுத்ததை மனப்பாடம் செய்து அது தன் ஐடியா என்று அலட்டிக் கொள்பவர்களுக்கு எதிர்பாராத கேள்வி வந்தால் இப்படி உளறல் தான் வரும்....மிகத் திறமையாக பேசுவதாக எண்ணிக் கொண்டு உளறிக் கொட்டியிருக்கிறார்....

அடடா...என்ன கருணை...என்ன இரக்கம்....இவர் கட்சியில் சேர ரஜினிகாந்த் க்யூவில் நிற்கிறார்...கால் வலிக்க நிற்கிறார்...தினம் தினம் கண்ணீரும் கம்பலையுமாக பேட்டி கொடுக்கிறார்....

அய்யா, எங்களை ஆதரித்து வாய்ஸ் கொடுங்கள் என்று கதறியது ரஜினிகாந்த் தானே...அண்ணாமலை சைக்கிள் அதற்காகவாவது ஓட்டுப் போடுங்கள் என்று அறிக்கை விட்டது மூப்பனாரும் சிதம்பரமும் இல்லை...

நாட்டு பாதுகாப்புக்கு பீரங்கி...போஃபர்ஸிடம் லஞ்சம் வாங்கிய தேசத் துரோகி....இவர் போன்ற கேவலமானவரிடம் வேலை பார்க்க முடியாது என்று ரஜினியை எதிர்த்து தான் வி.பி.சிங் பதவியை விட்டெறிந்தார்...ராஜீவின் கரங்கள் கறையற்றவை!

இந்திரா காந்தி இறந்த அன்று டெல்லியில் மட்டும் எட்டாயிரம் சீக்கியர்கள் உயிருடன் எரிக்கப்பட்டதாக இன்னமும் சீக்கியர்கள் வெறுப்பில் இருக்கிறார்கள்...ஆனால் ஆலமரம் சாய்ந்தால் மண் அதிரத்தான் செய்யும் என்று சொன்ன அரக்க உள்ளம் ரஜினி...ராஜீவ் காந்தி அல்ல!

லோட்டஸ் என்ற பெயரில் ஸ்விஸ் பேங்க் அக்கவுன்ட் ரஜினிகாந்துடையது....குவாட்ரோச்சியை சி.பி.ஐ. தொடர்ந்து தப்ப விடுவது ரஜினிகாந்தின் கட்டளையின் பேரில்....இட்டாலி குவாட்ரோச்சிக்கும் சென்னை ரஜினி காந்தும் உறவு முறை....இத்தாலி அன்னை சோனியாவுக்கு இது எதுவும் தெரியாது....

ஈழப் படுகொலையில் இந்திய ராணுவம் ரஜினி சொன்னபடியே செயல்பட்டது......ரஜினிகாந்த் உத்தரவால் தான் ஈழத் தமிழர்களை குடும்பம் குடும்பமாக குழந்தைகளை கூட உயிருடன் புதைத்த சிங்கள இனவெறி அரசை பாராட்டி இந்திய இனவெறி அரசு ஐநாவில் ஓட்டுப் போட்டது........அன்னை சோனியா கருணை உள்ளம் மிக்கவர்...

இத்தனை குற்றப்பிண்ணனி உடைய ரஜினிகாந்த்தையும் பெரிய மனதுடன் தன் குடும்ப கட்சியில் சேர்க்க சூறாவளி முன்வந்திருக்கிறது...

யானை கீழே படுத்தா எலி ஏறி விளையாடுமாம்!!!
(படம் உதவி: Google.com)

Saturday 12 September 2009

அதிரடி ராகுல்! அதிர்ச்சியில் ஓபாமா!!!


புளுகார் வரும்போதே அதிரடிக்காரன் மச்சான் மச்சான் மச்சான்டி...அவனுக்கு யாரோ ஆப்பு வச்சான் வாச்சான் வச்சான்டி என்று ஆடிக் கொண்டே வந்தார்..

"என்ன ஒரே ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்...நைட்டு டாஸ்மாக்கு ஊர்வலமோ " என்றோம் நக்கலாக...

நம்மை முறைத்தார் புளுகார்...

"பேச்சுக்கு மட்டும் கொறச்ச இல்ல...எங்கய்யா நான் கேட்ட ஐபாடு...."





நீயே ஒரு பாடு...ஒனக்கு எதுக்கு ஐபாடு...நினைத்தாலும் நாம் வெளியில் சொல்லவில்லை....என்ன இருந்தாலும் சீனியர் புலனாய்வு புளுகர்...

"இந்தாரும்...நீர் கேட்ட ஐபாடு...உம் பிட்டை இனி நீ போடு" என்று முந்திய வாரம் பர்மா பஜாரில் வாங்கிய பழைய டூப்ளிகேட் ஐபாடை நீட்டினோம்...

புளுகாரின் முகம் செத்த எலியை பார்த்த கிழட்டு பூனை போல மலர்ந்தது....

"கேட்டத கொடுத்து இன்ப அதிர்ச்சிக்கு ஆளாக்கி விட்டீர்....அதனால் சொல்றேன்....நம்ம ராகுல் காந்திய பார்த்து ஓபாமா அதிர்ச்சியில இருக்காராம்..."

ராகுல் காந்தியையும் தங்கபாலுவையும் கண்ணம்மா பேட்ட கவுன்சிலர் கூட கண்டுக்க மாட்டேங்கிறான்...இது என்ன புது பிட்டு...

நம் அதிர்ச்சியை வெளியில் காட்டிக் கொள்ளாமல் "அது என்ன கதை" என்றோம்...

"அப்படிக் கேளும்...சொல்றேன்....நம்ம ராகுல் காந்தி சூறாவளி சுற்றுப்பயணத்தில இருக்காரு இல்லியா?"

"ஆமா...அப்படித்தான் அவங்க கட்சி காரங்க மட்டும் சொல்லிக்கிறாங்க...அதுக்கு இன்னா இப்ப?"

"அவரு சூறாவளியா சும்மா சொல்ட்டி சொல்ட்டி அடிச்சதில அய்யா திமுக, அம்மா திமுக, தேமுதிக, பாமக கொடி மரமெல்லாம் சாஞ்சிருச்சாம்..."

"அப்ப காங்கிர'ஷூ', பாஜாக்கா கொடி மரமெல்லாம்...."

"அவங்களுக்கு தமிழ்நாட்டுல ஏதுய்யா கொடியும் மரமும்...இருந்தால்ல சாய்றதுக்கு.." என்று முறைத்த புளுகார் அவரே தொடர்ந்தார்...

"அய்யா, அம்மா, வைத்தியரு, கேப்புடன்னு, ஆணழகன் நடிகர், லெட்டர் பேடு கார்த்திக்கு எல்லாரும் ஆடிப் போயிருக்காங்களாம்...இதுல கார்த்திக்கு மட்டும் தான் கொஞ்சம் தெம்பா இருக்கறதா கேள்வி...என் கட்சில இருக்கறதே நான் மட்டும் தான்...மத்தவய்ங்களை அப்பப்ப வாடகைக்கு தான் எடுக்கறேன்...அதனால என் கட்சில இருந்து யாரும் காங்கிரஷூக்கு போக மாட்டாங்கன்னு சொல்றாராம்...."

"அதெல்லாம் இருக்கட்டும்...இதுல ஓபாமா எங்க வந்தார்...."

"முட்டாள் மாதிரி கேள்வி கேக்காதீர்....இன்னைக்கு தமிழ்நாடு....அடுத்த வருஷம் தமிழ்நாட்டுல காங்கிரஸ் ஆட்சி...தங்கபாலு சி.எம்...இரண்டு வருஷம் கழிச்சி அமெரிக்க அதிபர் தேர்தல்ல ராகுல் நின்னு தனக்கு போட்டியா வந்துடுவார்னு ஓபாமா அரண்டு போய் கிடக்கிறாராம்...ஏற்கனவே ராகுலுக்கு அமெரிக்காவுல பயங்கர செல்வாக்கு...."

"என்னது அமெரிக்காவுலயா..." நம்மால் நம்ப முடியவில்லை...

குடித்து குடித்து எப்பொழுதும் பாதி மூடி இருக்கும் விழிகளை திறக்க முயன்று தோற்ற புளுகார் தொடர்ந்தார்....

"ஆமாவோய்....மோதிலால் நேரு, ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, சோனியா காந்தி வழி வந்த ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சில வாரிசு அரசியலுக்கு இடமில்லைன்னு அதிரடி செஞ்சதும் ஓபாமா அதிர்ச்சியில உக்காந்துட்டாராம்....அந்த அதிர்ச்சியோடவே ராகுலுக்கு அமெரிக்காவுலயும் இந்தியாவுலயும் இருக்க செல்வாக்கு பத்தி உளவு பார்க்க சி.ஐ.ஏவுக்கு உத்தரவு போட்ருக்காரு..."

"அட...விஷயம் அவ்வளவு தூரம் போயிடுச்சா...சி.ஐ.ஏ என்ன சொல்லிச்சாம்..."

"அது தான் நம்ப முடியாத செய்தி....சி.ஐ.ஏ சொல்ற கணக்குப்படி இந்தியாவுல ராகுலுக்கு முப்பத்தி ஏழு பேரும், அமெரிக்காவுல இரண்டரை பேரும் ஆதரவு கொடுக்குறாங்களாம்..."

"அதென்ன...இரண்டரை கணக்கு??"

"அதுக்கும் சி.ஐ.ஏ விளக்கம் சொல்லிருக்கு...ஆதரவு தர்ற இரண்டரை பேருல ஒரு பொண்ணுக்கு ஒன்றரை வயசு தான் ஆகுது...ராகுலுக்கு இவ்வளவு செல்வாக்கு இருக்கிறதை எதிர்ப்பார்க்காத வெள்ளை மாளிகை வட்டாரம் நடுங்கிகிட்டு இருக்காம்..."

"நீர் சொல்றதெல்லாம் நம்புற மாதிரி இல்லையே" என்றோம் சந்தேகமாக...

"நீர் நம்ப மாட்டீர்னு எனக்கு நல்லாத் தெரியும்...ஒரு க்ளூ...ராகுலுக்கும் காங்கிரஷூக்கும் நெருக்கமான ஒரு கான் நடிகர் சமீபத்துல அமெரிக்கா போனார்...அங்க அவரை ரெண்டு மணி நேரம் ஏர்போர்ட்ல ஜட்டியோட தேவுடு காக்க வச்சிட்டாங்க...இது ராகுலை வெறுப்பேத்த ஓபாமா செஞ்ச சதின்னு கதர்சட்டைங்க எல்லாம் பொலம்பிக்கிட்டு இருக்காம்...."

நம்மை நோக்கி கண் சிமிட்ட முயன்ற புளுகார் மப்பு தலைக்கேறி தடாலென்று தரையில் விழுந்தார்!

============
போதையில் புளுகார் புலம்பிய கொசுறு:

ஆண்கள், பெண்கள், கைக்குழந்தைகள் என்று எல்லா மக்களையும் டாஸ்மாக் நோக்கி திருப்பத் தான் அரசு பால்விலையை உயர்த்தி விட்டது என்று தைலாபுர ரெண்டு ரூவா டாக்டர் போராட்டம் நடத்த தயாராகிறாராம்...இதை அறிந்த குடிமகன்கள் குவாட்டர் விலையும் ஒசந்துடுமோ என்று கவலையில் இருக்கிறார்களாம்!!

Monday 7 September 2009

நவீன விக்ரமாதித்தன் கதைகள் - காதல் சொல்லி வந்தாய்- 3

அறிவிப்பு: இந்த கதையில் வரும் பெயர்கள்,சம்பவங்கள், பாத்திரங்கள்,அண்டா, குண்டா, சட்டி, பானை, ஊர், தெரு, கடை,இட்டிலி, சட்டினி, வடை, பொங்கல் எல்லாம் கற்பனையே...கண்டிப்பாக இருந்த, இருக்கின்ற, இனிமேல் இருக்கப் போகின்ற எவரையும் குறிப்பன அல்ல...அப்படி ஏதேனும் ஒற்றுமை இருந்தால் அது வேதாளத்தின் பிழையே தவிர பதிவர் பொறுப்பல்ல!


அத்தியாயம் மூன்று - சூதாட்டம்


முந்திய அத்தியாயங்களை படிக்க அத்தியாயம் ஒன்று, அத்தியாயம் இரண்டு

ரசம் நல்லாருக்கு....மோர்ல கொஞ்சம் உப்பு பத்தலை...கங்குலி ரொம்ப நாளா ஆளையே காணோமே...காலையில தினமலர்ல என்னவோ போட்ருந்தான்...லெமூரியாக் கண்டம் நிஜமாவே கடல்ல மூழ்கிச்சா இல்ல கப்சா உட்றாய்ங்களா...க்யூபால பொண்ணுங்கள்லாம் ரொம்ப அழகாமே...ஆமா...ஃபிடல் காஸ்ட்ரோ இருக்காரா செத்துட்டாரா...சத்தமே இல்ல...
வேகமானது எது...கண்டம் விட்டு கண்டம் பாயும் கணையா..காற்றா...ஒலியா ஒளியா....எதுவுமே இல்லை...மனம் தான்...ரசத்தில் ஆரம்பித்து....லெமூரியாக் கண்டத்தில் மூழ்கி...க்யூபாவுக்கு தாவி... உடல் இடம் விட்டு அசையாது இருந்தாலும் மனம் இடைவிடாது அலைபாய்ந்து கொண்டே தானிருக்கிறது....மனஸ் தான் மனுஷ்யன்...சிவம் சிவனே என்று இருந்தாலும் சக்தியின் நர்த்தனம் இடைவிடாது நடந்து கொண்டே....

அந்த மனமும் ஒரு சில கண‌ங்கள் ஒடுங்கும்...வேகமாக பைக்கில் செல்லும் போது திருப்பத்தில் எதிர்பாராமல் ஒரு பஸ் வந்தால்....நன்றாக சாப்பிட்டு விட்டு கைக் கழுவ எழும்போது நொடிப் பொழுதில் மாரடைப்பு வந்தால்....எனக்கு ஓன்னும் தெரியாதுப்பா என்பது போல எதுவுமே செய்யத் தோன்றாது மானஸ தேவி கைகட்டி வேடிக்கை பார்க்கிறாள்...

"எங்க அப்பா எனக்கு மாப்பிள்ளை பார்த்திருக்கார் சிவா...நாளைக்கு பொண்ணு பார்க்க வர்றாங்களாம்..."

கல்பனா சொல்ல சொல்ல சிவராமனின் மனம் எதுவுமே சொல்லத் தெரியாமல்...வார்த்தைகள் தொலைந்து...

"சிவா...சிவா...நான் பேசறது கேக்குதா...."

சிவராமனின் மனம் மீண்டும் விழித்துக் கொண்டது....என்ன சொல்வது...இதை எதிர்பார்க்கவே இல்லை...இத்தனை நாள் எந்த எதிர்ப்பும் இல்லாமல்..இப்ப திடீர்னு என்ன...ஒரு வேளை...கல்பா விளையாடுகிறாளா...

"என்ன கல்பா இது...திடீர்னு....சும்மா விளையாடுறியா..."

அவன் குரல் அவனுக்கே கேட்கவில்லை....

"இல்ல சிவா...சீரியஸா தான் சொல்றேன்...உன் கிட்ட பேசணும்...ப்ளீஸ் வாயேன்..."

"நீ எதுக்கு ஒத்துக்கிட்ட...போன தடவை பேசும் போது கூட உங்கப்பா எதுவுமே சொல்லலியே..."

பேச பேச சிவராமனின் குரலில் சூடு ஏறியது....

"என்ன சிவா...நீயும் திட்டற....என் கிட்ட சொல்லவேயில்ல...இப்ப தான் சொன்னாங்க...."

ச்சே...அவங்க அப்பா செஞ்சதுக்கு கல்பாக்கிட்ட சண்டை போட்டு என்ன பிரயோஜனம்..சிவராமனுக்கு திடீரென்று வருத்தமாக இருந்தது....

"சரிடா....சும்மா பொண்ணு பார்க்க தான வர்றாங்க....அதுக்கு ஏன் கவலைப்பட்ற...பிடிக்கலைன்னு சொல்லிட்டா முடிஞ்சது..."

"இல்ல சிவா...எனக்கு பிடிக்கலை....நீ வாயேன்..."

கல்பாவின் குரல் அழுவது போல் மாறிக் கொண்டிருந்தது...

"சரி சரி...இப்ப அம்மா மட்டும் தான் இருக்காங்க....மாலு கம்ப்யூட்டர் க்ளாஸ் போயிருக்கா....அரை மணில வந்துருவா....அவ வந்ததும் நான் வர்றேன்...அன்னபூர்ணா வந்துட்டு ஃபோன் பண்ணவா...."

"சரி...எட்டு மணிக்கு வந்துடுவியா...."

"வரேன் கல்பா...நீ சும்மா கவலைப்பட்டுக்கிட்டு இருக்காத....எல்லாம் பார்த்துக்கலாம்..."
ஒக்கே சிவா...பை..."

"பை..."

சொல்லிவிட்டானே தவிர, சிவராமனின் மனம் அடங்காமல் ஆடியது...கல்பா என்பது தீர்மானமான விஷயம்...இத்தனை நாள்....கல்பாவின் இடத்தில் வேறு யாரையும் நினைத்துக் கூட பார்க்க முடிந்ததில்லை....மாலதிக்கு கல்யாணம் முடித்து விட்டு மெஸ்ஸை கொஞ்சம் பெரிதாக்க வேண்டும்....வேலைக்கு ஒரு ஆள் வைத்து காலை, மதியம், இரவு என்று முழு ஹோட்டலாக மாற்றலாம்...அடுத்து கல்யாணம்...அதற்குள் இப்படி... மாலதி ஏன் இன்னும் காணோம்....சீக்கிரம் வந்தா நல்லது....
=============================

சிவ‌ராமன் பெல்ட் தேய்ந்த‌ வெட்கிரைன்ட‌ர் போல‌ ஒலி எழுப்பும் தன் ப‌ழைய‌ டி.வி.எஸ் ஃபிஃப்டியை அன்ன‌பூர்ணா கெளரிசங்கர் வெளியே நிறுத்திய‌ போது சாய்பாபா காலனி முழுவ‌துமாக‌ இருண்டிருந்த‌து....எப்பொழுதும் சூழ்ந்திருக்கும் அழுத்தமான காஃபியின் மணம்...இடையிடையே எழும் சூடான‌ கல்லில் உருகும் நெய்யின் வாசனை...லேசாய் கருகும் வெங்காயம்.....பார்சலுக்காக வெயிட் செய்யும் சின்ன பையன்கள்...வெளியே ஓரமாக தம்மர்கள்...மெல்லிய இருட்டில் அன்னபூர்ணா கெளரிசங்கர் திருவிழாக் கூட்டமாக....ஜெகஜோதியாய்...

இது தான்...இப்படித் தான் ஒரு ஹோட்டல் வேண்டும்...அன்னபூர்ணாவுக்கு போட்டியாக...சரவண பவன் மாதிரி பெரிசா...செயின் ரெஸ்டாரன்ட்...ச்சே...ஒரு நாலு லட்சம் இருந்தா நச்சுன்னு ஆரம்பிச்சி ஒரு ஆளா நின்னுடலாம்....பணம்....எல்லாத்துக்கும் பணம் வேணும்...வெறுங்கையால எத்தனை முழம் போட்றது...இதுல கல்பா வேற...புதுசா ஒரு பிரச்சினையை சொல்றா...எதைன்னு சால்வ் பண்றது...சாண் ஏறுனா பத்து மைல் சறுக்குது...என்ன வாழ்க்கைடா இது....

வாழ்க்கையின் வழுக்கல்களை சிவராமன் கூட்டிக் கழித்துக் கொண்டிருந்த போது திடீரென்று மிக நெருக்கமாக ஒரு குரல் கேட்டது....

"ஸாரி சிவா...வந்து நேரமாச்சா"

"ஆங்...ம்ம்....இல்ல கல்பா...இப்ப தான் வந்தேன்..."

இன்னொரு சூழ்நிலையில் அன்னபூர்ணியின் ஜோதியில் என் க‌ல்பா தேவ‌தையாக‌ நின்றாள் என்று சிவ‌ராம‌ன் வ‌ர்ணிக்க‌ கூடும்...ஆனால் க‌விதைபாடும் நிலையில் இருவ‌ருமே இல்லாத‌தால் நாமே இருட்டில் அவ‌ளை உற்றுப் பார்த்துக் கொள்ள‌ வேண்டிய‌து தான்...அள‌வான‌ உய‌ர‌ம்...இட்லி போல் குண்டாக‌வும் இல்லை...ரவா தோசை போல் ஒல்லியாக‌வும் இல்லை...உய‌ர‌த்திற்கு ஏற்ற‌ உட‌ம்பு....சினிமா ந‌டிகையை சொன்னால் தான் எல்லாருக்கும் தெரிகிற‌து என்ப‌தால்....கொஞ்ச‌ம் அசின் போல்....த‌மிழ்நாட்டு பெண்க‌ளின் அழ‌கான‌ க‌ண்க‌ள்....முக‌ம் ம‌ட்டும் சோக‌மாக‌...கையில் ஏதோ வாட்ச்...என்ன ப்ராண்ட் என்று இருட்டில் தெரியவில்லை...அப்புற‌ம்......போதும்....போதும்...அடுத்த‌வ‌னின் கேர்ள் ஃப்ர‌ண்டை உற்று பார்த்த‌து....

"க‌ல்பா...உள்ள‌ போலாமா...காஃபி...."

"ம்ம்....ச‌ரி...சீக்கிர‌ம் போக‌ணும் சிவா...வீட்ல‌ சொல்லாம‌ வ‌ந்துட்டேன்..தேடுவாங்க‌...."

"ஏன்....எப்ப‌வும் சொல்லிட்டு தான‌ வ‌ருவ...இப்ப‌ என்ன‌..."

க‌ல்ப‌னாவிட‌ம் இருந்து ப‌தில் ஏதும் வ‌ர‌வில்லை....

"ச‌ரி விடு....திடீர்னு இப்ப‌ என்ன‌ க‌ல்பா....எதுக்கு உங்க‌ அப்பா மாப்பிள்ளை பார்க்கிறார்...நான் அவ‌ர்ட்ட‌ பேச‌வா..."

"சார்....என்ன‌ கொண்டு வ‌ர‌ட்டும்....இட்லி...பொங்கல்....தோசை...ர‌வா தோசை...நெய் ரோஸ்ட்...ஆனிய‌ன் ஊத்த‌ப்ப‌ம்...சோளா பூரி...சாம்பார் இட்லி...."

"இருங்க‌..இருங்க‌...அதெல்லாம் இப்ப‌ வேணாம்...மொத‌ல்ல‌ ரெண்டு காஃபி...உன‌க்கு ஸுக‌ர் வேணாம்ல‌ க‌ல்பா...ஒரு காஃபி ஸுக‌ர் இல்லாம‌..."

ம்ம்ம்ம்....க‌ட‌லை பார்ட்டி போல‌ருக்கு என்று ச‌ர்வ‌ர் நினைத்திருக்க‌லாம்...சொல்ல‌வில்லை....
"சொல்லுப்பா...நான் உங்க‌ வீட்ல‌ வ‌ந்து பேச‌வா...இன்னும் ஒரு வ‌ருஷ‌ம் டைம் குடுங்க‌...நானே க‌ல்யாண‌ம் ப‌ண்ணிக்கிறேன்னு சொல்றேன்...."

க‌ல்பனா மெள‌ன‌மாய்...வேக‌மாய் சுழ‌லும் சீலிங் ஃபேனையே பார்த்துக் கொண்டிருந்தாள்....

"எதுனா சொல்லு க‌ல்பா...நீ சொல்லு...நான் என்ன‌ செய்ய‌ணும்..."

க‌ல்பாவின் முக‌ம் ஏனோ இறுகிப் போயிருந்த‌து....

"நாளைக்கு பொண்ணு பார்க்க‌ வ‌ர்றாங்க‌...இப்ப‌ என்ன‌ பேசி என்ன‌ செய்ய‌...."

சிவராம‌னுக்கு திடீரென்று துக்க‌மாக இருந்த‌து...வ‌ர்ற‌து வ‌ர‌ட்டும்...இப்ப‌வே க‌ல்யாண‌ம் செஞ்சிக்கிட்டா என்ன‌....

"அப்ப‌டியில்ல‌ க‌ல்பா....நீ ச‌ரின்னு சொல்லு....நாளைக்கே கூட‌ க‌ல்யாண‌ம் செஞ்சிக்க‌லாம்...நான் ஏற்பாடு செய்ய‌ட்டா..."

"சார்...ரெண்டு காஃபி....ஒன்னு ச‌க்க‌ரை இல்லாம‌...."

இர‌ண்டு பேருக்குமே காஃபி குடிக்கும் மூட் இல்லை...

"இப்படி வச்சிட்டு போங்க....எடுத்துக்க‌றோம்..."

க‌ல்ப‌னா மெதுவாக‌ சிரித்தாள்....

"என்ன‌ க‌ல்பா...சிரிக்கிற‌..."

"ஒண்ணுமில்ல‌...நாளைக்கு க‌ல்யாண‌ம் செஞ்சிகிட்டா எப்ப‌டி இருக்கும்னு நினைச்சேன்...சிரிப்பு வ‌ந்துருச்சி....வெளையாடாத‌ சிவா...ஒன‌க்கு சிஸ்ட‌ர் இருக்கா...எங்க‌ வீட்ல‌யும் என‌க்கு பின்னாடி ரெண்டு த‌ங்க‌ச்சிங்க‌ இருக்காங்க‌....நாம‌ ஓடிப் போய் திடீர்னு க‌ல்யாண‌ம் ப‌ண்ணிக்கிட்டா இவ‌ங்க‌ க‌தி..."

"ம்ம்ம்...அப்ப‌ என்ன‌ ப‌ண்ற‌து..."

"ஒண்ணும் ப‌ண்ண‌ வேணாம்னு தோணுது...நாளைக்கு வ‌ர‌ட்டும்...வ‌ந்து பார்க்க‌ட்டும்...என‌க்கு பிடிக்க‌லைன்னு சொல்லிட‌றேன்...அப்புற‌ம் ரெண்டு நாள் கழிச்சி நீ வ‌ந்து பேசு...இப்ப‌ எதுவுமே பேச‌ வேண்டாம்..."

சிவ‌ராம‌னுக்கு க‌ச‌ப்பாக‌ இருந்த‌து...என்னோட‌ ல‌வ்வ‌ரை எவ‌னோ ஒருத்த‌ன் பார்க்க‌ நானே பெர்மிஷ‌ன் கொடுக்கணும்...ப்ப‌ச்....

"ம்ம்ம்ம்....மாப்பிள்ளை பத்தி எதுனா சொன்னாங்க‌ளா....என்ன‌ பேரு...எங்க‌ வேலை பார்க்கிறான்...எந்த ஊரு..."

"ஏதோ சொன்னாங்க‌...ம‌கேஷாம்...எங்க அப்பாவோட பழைய ஸ்டூடண்ட்...இங்க கோயம்புத்தூர் தான்...கணபதி..."

"எங்க வேலை பார்க்குறார்னு சொல்லலியா....ஃபோட்டோ எதுவும் காட்னாங்களா...."

"இல்ல‌ சிவா.....அவ‌ங்க‌ளுக்கு தான் என்னைப் பார்க்க‌ணும்...என‌க்கு இன்ட்ர‌ஸ்ட் இல்ல‌...நான் எதுக்கு பார்க்க‌ணும்...ச‌ரி...ரொம்ப‌ லேட்டாயிருச்சி....நான் கிள‌ம்புறேன்...நாளைக்கு அவ‌ங்க‌ வ‌ந்து பார்த்துட்டு போன‌தும் உன‌க்கு ஃபோன் ப‌ண்ண‌வா...."

"ச‌ரி...எதுக்கும் ப‌ய‌ப்ப‌டாத‌ க‌ல்பா...பிடிக்க‌லைன்னு சொல்லிடு...அப்புற‌ம் நான் வ‌ந்து பேசிக்கிறேன்...."

"ச‌ரி சிவா...நாளைக்கு சாய‌ந்த‌ர‌ம் தான் வ‌ர்றாங்க‌...நான் பத்து மணிக்கா ஃபோன் ப‌ண்றேன்...."
"ச‌ரி...நான் வெய்ட் ப‌ண்றேன்..."

கிள‌ம்பிப் போன‌ க‌ல்ப‌னாவையே பார்த்துக் கொண்டிருந்த‌ சிவ‌ராம‌னுக்குள் ஏனோ ஒரு ப‌ய‌ப்ப‌ந்து உருள‌ ஆர‌ம்பித்த‌து......

=================== தொட‌ரும் ======================