முன் அறிவிப்பு 1: வழக்கம் போல இந்த தொடரில் வரும் சம்பவங்கள், பாத்திரங்கள் அனைத்தும் உண்மையே. கதை மாந்தர்கள் மற்றும் பதிவரின் நலம் கருதி அவர்களின் அடையாளங்கள் முற்றிலும் மாற்றப்பட்டுள்ளன.முன் அறிவிப்பு 2: காதல் தெய்வீகமானது, காமத்திற்கு அதில் இடம் இல்லை என்று கருதும் தெய்வீக காதலர்களும், காமமோ காதலோ அது ஆண்களின் ஏகபோக உரிமை, அது தான் இந்திய, தமிழக, சிந்து சமவெளி, ஹரப்பா மற்றும் மொகஞ்சதாரோ கலாச்சாரம் என்று சொல்லும் கலாச்சார காவலர்களும் தயவு செய்து இந்த தொடரை படிக்க வேண்டாம்.காலைச் சுற்றிய பாம்பு!
"ஐ இல் ஹேவ் எ க்ராப் மீட் சூப் ஃபார் ஸ்டார்டர்ஸ்.. அன்ட் ஃபார் யூ மிங்ஸீ?"
"mmh. Just a corn soup Aathi.. I am on diet this week".
அம்பது கிலோ கூட இல்ல. இதுல டயட்டு வேறயா..கிளிஞ்சிரும்.. மாதித்தன் மனசுக்குள் நினைத்தாலும் சொல்லவில்லை.இந்த மஞ்சள் அழகி டின்னருக்கு வந்ததே பெரிய விஷயம்..எதையாவது சொல்லி அதையும் கொடுப்பானேன்..
அந்த சனியன் பிடித்த வேதாளத்தால் அந்த ஸ்பானிஷ் சிட்டு தான் பறந்து விட்டது..சரி, இந்த சைனீஸ் அழகி வந்ததே நல்லது. என்ன, இவள் ட்ரிங்சும் பண்றதில்லை.. இவள் அடிக்கும் சிகரெட்டும் நமக்கு ஒத்து வருவதில்லை.. குப்பை லாரி க்ராஸ் பண்ண மாதிரி ஒரே கப்பு..சரி..காதல்னா சும்மாவா..கப்பைக் கூட சகிக்கலைன்னா எப்படி..இவளை எப்படின்னா மால்பரோவுக்கு மாத்திட்டா பிரச்சினை தீர்ந்தது..
பிடிக்குமேன்னு எடின்பரோவுலேயே காஸ்ட்லியான சைனீஸ் ரெஸ்டாரண்டுக்கு கூட்டி வந்தா இவ டயட்டுங்கறா...இதுல இருக்கற பேரை வேற ரொம்பவே சுருக்கி ஆதியாம்..ஆதி..பாதி.. சரி, பொண்ணுங்க எப்பிடி கூப்டாலும் நல்லா தான் இருக்கு.. இனி வேதாளத்தையும் பார்ப்பதில்லை.. கதையும் கேட்பதில்லை. அந்த சனியனும், மந்திரவாதியும் எப்படி போனால் நமக்கென்ன..அவன் பாடு வேதாளம் பாடு..
"ஆடுங்கடா என்ன சுத்தி நான் அய்யனாரு வெட்டுக்கத்தி..
பாடப்போறேன் என்ன பத்தி.. கேளுங்கடா வாயப்பொத்தி..."
நேரங்காலம் தெரியாமல் போக்கிரித்தனமாக மாதித்தனின் மொபைல் ஃபோன் செந்தமிழில் பாட ஆரம்பித்தது...
==========================
எவன்டா இது.. குடும்ப மீட்டிங்ல கட்சிக்கார களவாணி பூந்த மாதிரி.. கண்ட நேரத்துல ஃபோன் பண்ணிக்கிட்டு.. உடன்பிறப்பேன்னு மாநாட்டுல சொன்னா அதுக்காக உள்ளயே வந்த மாதிரி இருக்கே..
"ஹலோ.. ஆதி ஹியர்..."
"ஆதி...ஆதி...ஆஆஆஆதீஈஈஈஈஈஈஈ. த்தீத்தீத்தீ... நாயர் கடை டீட்டீட்டீ..ஹா ஹா ஹா..."
மறுமுனையில் பலத்த சிரிப்பொலி கேட்டது..
அடிங்ங்க்க..எவன்டாது நம்மளுக்கு ஃஃபோன் பண்ணி நம்மளையே கலாய்க்கிறது..
"Who is this?"
"ஆதி... ஹஹஹாஹ்ஹா.. என்ன விக்கிரமாதித்தா..ஓடிப்போன சிட்பண்ட் கம்பெனி காரன் போல பேரை மாற்றி விட்டாயா? அதுவும் சரி தான், தலைமறைவு வாழ்க்கை வாழ்பவனுக்கு அது தானே வழி.."
விக்கிரமாதித்தனா? ரெண்டு நாதாரிகள் மட்டும் தானே முழுப்பெயரை சொல்லிக் கூப்பிடும்? இது வேதாளமாக தெரியவில்லை.. அப்படியானால்.. அவனுமா...
விக்கிரமனுக்கு வேர்த்தது..
"என்ன அரசே.. கட்சி மாறிய திருநாவுக்கரசர் மாதிரி சத்தமே இல்லை? நீ உஜ்ஜையினி அரசன் விக்கிரமாதித்தன் தானே?"
" நீ...நீங்கள்..நீங்கள்.."
"ஆம் விக்கிரமாதித்தா... ஆயிரம் ஆண்டுகளாக உன்னால் ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கும் மந்திரவாதி தான்... அரசன் அன்று கொல்வான்.. தெய்வம் நின்று கொல்லும். நீயோ ஆயிரம் ஆண்டுகளாக என்னை ஏமாற்றிக் கொல்கிறாய்.. நீ கொடுத்த வாக்குறுதியை மறந்து விட்டாயா?"
காலைச் சுற்றிய பாம்பு கடிக்காமல் விடாது போலிருக்கிறதே..
இந்த மந்திரவாதி இங்கு எப்படி வந்தான்..அதுவும் இந்த நேரத்தில்..
"மந்திரா..நீயா..நீங்கள்..நீங்கள் எப்படி இங்கு..இந்த நேரத்தில்.."
"என்ன விக்கிரமாதித்தரே..ஆச்சரியமாக இருக்கிறதா? தேரா மன்னா, செப்புவதுடையேன்.. நீ பிடித்து வருவதாக சொன்ன வேதாளம் எங்கே? ஒரு நாள் அல்ல இரு நாள் அல்ல.. ஓராண்டு அல்ல.. ஈராண்டு அல்ல.. ஆயிரத்து பதினேழு புள்ளி எட்டு ஆண்டுகள்..அரசியல் வாதிகள் வாக்குறுதி கொடுப்பதே வாய்க்கரிசி போட்ட மாதிரி தான் போலும்.. வேதாளமும் வரவில்லை...உன்னையும் காணவில்லை..என்ன தான் செய்து கொண்டிருக்கிறாய்? "
"மந்திரா..பொரச்சி கலைஞர் போல் புள்ளி விவரங்களை எடுத்து விடாதே..ஆமாம், சொன்னேன், அதுக்கு என்ன இப்ப..நான் ஒண்ணும் உன்னை ஏமாற்ற நினைக்கவில்லை. மோன மாசம் கூட அதை பிடிக்க போனேன்..அது வழக்கம் போல கதை சொல்லி ஏமாற்றி விட்டது.."
"உன்னை எவன் கதை கேட்க சொன்னது..நீ என்ன சின்ன குழந்தையா..காக்கா கதை சொன்னிச்சி அதனால நரி வடையை எடுத்துட்டு போச்சின்னு சொல்ல? வெக்கமாக இல்லை?"
"மந்திரா..நீ புரியாமல் பேசுகிறாய்..."
"சரி, கதை சொன்னிச்சி.. அது நடந்து நாலு வாரம் ஆச்சி. அது போன மாசம்...நான் சொல்றது இந்த மாசம்..அதுக்கப்புறம் ஏன் போகலை?"
"மந்திரவாதி உனக்கு தெரியாதது இல்லை. எனக்கு வேலைகள் அதிகம்.."
"ஆஹா.. எனக்கு தெரியாதா உன் வேலையும், லீலையும்...வேலை நேரத்தில் பெண்களை துரத்துபவர்கள் சிலர்.. பெண்களை துரத்துவதையே வேலையாக வைத்திருப்பவன் நீ.. குடித்து கும்மாளம் அடிப்பது..அப்புறம் குப்புற படுத்து விடுவது...கேட்டால் வேலையாம் வேலை.."
"மந்திரவாதி... மூடனாக பேசாதே.. அமெரிக்காவில் ஸ்டாக் மார்க்கெட்டில் நடந்த பிரச்சினைகளால்...."
மந்திரவாதி விக்கிரமனை முடிக்க விடவில்லை.
"அமெரிக்கா அண்டார்டிக்கா..அடுப்புல வச்சிட்டு மறந்துட்டா கருகிப்போயிரும் கத்திரிக்கா.. இந்த கதையெல்லாம் என்னிடம் விடாதே விக்கிரமாதித்தா..உன்னால் முடியாவிட்டால் சொல்.. நான் ஏதேனும் தமிழ்நாட்டு உடன்பிறப்பிடமோ இல்லை ரத்தத்தின் ரத்தத்திடமோ சொல்கிறேன்.. பாதாளத்தையே வளைப்பவர்கள் கேவலம் ஒரு வேதாளத்தையா பிடிக்க மாட்டார்கள்?"
"மந்திரா நீ என்னை கேவலப்படுத்துகிறாய்..உனக்கு என்ன தான் வேண்டும்?"
"ம்ம்ம். அதுவா..ஒரு குவாட்டரும் கோழி பிரியாணியும் வேண்டும்..ஆயிரம் வருடத்திற்கு அப்புறம் இப்படி ஒரு கேள்வியா? வேறு என்ன, எனக்கு அந்த வேதாளம் தான் வேண்டும்.."
"சரி, பிடித்து வருகிறேன். எனக்கு கொஞ்சம் டைம் கொடு.. எப்படியும் இன்னும் ஆறு மாதத்தில் பிடித்து வருகிறேன்.."
"ஆறு மாதமா? விக்கிரமாதித்தா, நீ நிலவரம் புரியாமல் கலவரம் செய்கிறாய்..இன்னும் ஒரு வருடத்திற்குள் இந்தியாவில் தேர்தல் வருகிறது. என்னை பிரதமராக்க வேண்டும் என்று இது வரை அஞ்சு பேர் யாகத்திற்கு ஆர்டர் செய்திருக்கிறார்கள். நீ மட்டும் அந்த வேதாளத்தை பிடித்து வந்து விட்டால் யாகத்தை நிறைவு செய்து விடுவேன். அதற்கு தான் வேதாளம் வேண்டும். நீ என்னடா என்றால் ஆறு மாதம் என்கிறாய்.."
"இருப்பதே ஒரு பதவி தானே மந்திரா. அதற்கு எப்படி அஞ்சி பேர்?"
"அதெல்லாம் உனக்கெதற்கு? வந்தவர்கள் எல்லாம் பெரிய ஆட்கள். ஒருவர் காயாவதி. ஏதொ புத்திரபிரதேச முதல்வராம்.மக்கள் தொகையை தவிர வேறு பங்களிப்பு இல்லாததால் புத்திர பிரதேசம் என்று பெயராம்...இன்னொருவர் பாலு பிரசாத் யாதவாம். அவர் வீட்டில் எப்பவும் பத்து எருமை மாடாவது இருக்குமாம். அடுத்தவர் பெயர் அத்துவாணியாம்.. எப்பவும் எவனுக்காவது ஆணியடிப்பதே அவருக்கு தொழிலாம்...அடுத்தவர் தான் விசித்திரம்.. அவர் பெயர் கானியாவாம், இருப்பது கானா நாட்டிலாம்...அவரை எப்படி இந்தியாவில் பிரதமராக்குவது என்று எனக்கே தெரியவில்லை"
"மந்திரவாதி..நீ பெரிய ஆள் தான்.. ஆனால் உன் யாகத்திற்கு வேதாளம் எதற்கு..பாவம் விட்டுவிடேன்.."
"விக்கிரமாதித்தா...இந்த மகாசத்ரு விநாச யாகம் பற்றி தெரியாமல் பேசுகிறாய்..இதற்கு வேதாளம் மிக அவசியம். அய்யோ இந்தியா...அய்யகோ இந்தியா..என்று கத்திக்கொண்டே அதன் தலையில் தினம் நூத்தியெட்டு தேங்காய் வீதம் நூத்தியெட்டு நாட்களுக்கு உடைத்தால் தான் யாகம் முடிவடையும்.. ஆனியோ கோனியோ மந்திரியாக முடியும்.. இதெல்லாம் உனக்கு புரியாது..உன்னால் அந்த ஓடுகாலி வேதாளத்தை பிடித்து வர முடியுமா முடியாதா? அதை மட்டும் சொல்.."
"சரி மந்திரா..பிடிக்கிறேன்..ஆனால் அது எங்கே இருக்கிறது என்று கூட எனக்கு தெரியாதே.."
"அந்த கவலை உனக்கு வேண்டாம் விக்கிரமா..அதை நானே கண்டு பிடித்து விட்டேன்..உனக்கு பிரக்கன் ரேஞ்சஸ் தெரியுமா?"
"தெரியாது. அது எங்க இருக்கு?"
"ஆமா, உனக்கு பாரையும், பாவைகளையும் விட்டா என்னதான் தெரியும்? அது செளத் வேல்ஸில் இருக்கு.. அந்த வேதாளமும் அங்க தான் இருக்கு.. உடனே கெளம்புனா பிடிச்சிட்டு வந்திரலாம்.."
"என்ன மந்திரா வெளையாடுறியா.. நான் எடின்பரோவுல இருக்கேன். இங்க இருந்து சவுத் வேல்ஸ் ஐநூறு மைல்.. இப்ப கிளம்பினா கூட, போய் சேர நாளைக்கி ஆயிடும்.."
"அதை தான் நானும் சொல்றேன் விக்கிரமா... உடனே கெளம்பு. இப்ப மணி ஏழு தான் ஆகுது.. வண்டிய விரட்டுனா எப்பிடியும் நைட்டு பண்ணென்டு மணிக்குள்ள போயி சேந்துடலாம்.."
"இப்பவா... நான் ரெஸ்டாரண்டுல இருக்கேனே.."
"நைட்டானா நீ என்ன பண்ணுவன்னு எனக்கு தெரியும் விக்கிரமா.. கொஞ்ச நாளைக்கி அதை தள்ளி வை... நீ வேதாளத்தை பிடிப்பதில் தான் எல்லாம் இருக்கிறது.. மறந்து விடாதே...என்ன போகிறாயா?"
"சரி போறேன்..வேற வழி?"
"வெற்றியடைய வாழ்த்துக்கள் ".
பதிலை எதிர்பார்க்காமல் மந்திரவாதி காலை கட் செய்தான்..
=======================
"What happened Aathi? Is everything OK.."
"ah, yeah.."
"Shall we order for main course then.."
நேரம் தெரியாமல் இந்த பொண்ணு வேற..
"mmh..Mingzee..I got a problem .. I got to go..I'm sorry.."
"Now? You have not even touched your starters..."
"Yeah...Sorry Mingzee...It's some emergency".
"Can I help.."
"No.Thanks...I'll catch you later.."
"mmh..ok..if you say so.."
அப்ப இனிமே இவளும் அவ்வளவு தானா? இந்த வேதாளத்தாலும் மந்திரவாதியாலும் தான் எவ்வளவு பிரச்சினை...பாலு பிரசாத்தோ...காலு பிரசாத்தோ எவன் மந்திரி ஆனா நமக்கென்ன..சனியன் பிடித்த வேதாளத்தை கையை காலை ஒடச்சாவது இந்த தடவை பிடிச்சிர்றது...
கடும் கோபத்தில் காரை கிளப்பிய விக்கிரமன், செளத் வேல்ஸ் செல்லும் மோட்டார் வேயில் காரை விரட்ட ஆரம்பித்தான்..
=======அப்ப வேதாளம்?... அடுத்த வாரம் வரும்...=====