Showing posts with label கருத்து. Show all posts
Showing posts with label கருத்து. Show all posts

Wednesday, 7 April 2010

திறக்கக் கூடாத கதவு 2: இஸ்லாம் தலையை வெட்டச் சொல்கிறதா?

எல்லாருக்கும் ஒரு பெயர் இருக்கிறது. சில பெயர்கள் பெற்றோர் வைப்பவை, சில பெயர்கள் எமினெம் போல சம்பந்தப்பட்டவர்களே வைத்துக் கொள்வது. அவர் பெயர் அலி சபாத்.

அலி சபாத் என்றால் உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை, ஆனால் இதைப் படிக்கும் மிடில் ஈஸ்ட் நண்பர்களுக்கு தெரிந்திருக்கலாம். அவர் லெபனானை சேர்ந்தவர். ஐந்து குழந்தைகளின் தகப்பன். லெபனானின் பெரும்பான்மை மதமான இஸ்லாமியர். தொழில் முறையில் ஒரு டி.வி. நிகழ்ச்சியாளர். டி.வி நிகழ்ச்சி என்றால் யாரோ எழுதி யாரோ இசையமைத்த பாடலை நோகாமல் யாருக்கோ டெடிகேட் செய்யும் நிகழ்ச்சி அல்ல, ஒரு வகையில் ஆவி அமுதா போல, தமிழ்நாட்டின் எண்ணற்ற திருட்டு சாமியார்கள் போல குறி சொல்லும் நிகழ்ச்சி.

இஸ்லாமின் விதிகளின் படி குறி சொல்லுதல், உருவ வழிபாடு போன்றவை கடுமையான குற்றங்கள். ஒரு இஸ்லாமியரான அவருக்கும் அது தெரிந்தே இருக்கும். சரி குறி சொன்னதுடன் நிறுத்தி இருக்கலாம். ஆனால் எல்லா இஸ்லாமியர்களுக்கும் இருப்பது போல கடமையோ அல்லது கனவோ, மெக்கா/மெதினா புனிதப் பயணம் செய்ய அவருக்கும் தோன்றி இருக்கிறது.

விதி சில நேரங்களில் புனிதப் பயணம் என்ற பெயரிலும் வரும் போலிருக்கிறது. புனிதப் பயணமாக சவுதி அரேபியா சென்ற அவர், 2008ல் சவுதி அரேபியாவின் மத பாதுகாப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டு இருக்கிறார். 2008லிருந்து இரண்டு வருடங்களாக அவரது நிலை யாருக்கும் தெரியவில்லை. அவரது மனைவி குழந்தைகள் உட்பட.
சமீபத்தில் அவருக்கு மத ரீதியான குற்றங்களுக்காக மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.

இந்த மரண தண்டனை சென்ற வெள்ளியன்று (ஆமாம், புனித வெள்ளி தான்) நிறைவேற்றப்படுவதாக இருந்த நிலையில் அலி சபாத்தின் வழக்கறிஞரும் மற்ற பல மனித உரிமை அமைப்புகளும் செய்த முயற்சியின் விளைவாக தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. அன்றைக்கு நடப்பதாக இருந்தது மட்டுமே தள்ளி வைக்கப்பட்டிருக்கிறதே தவிர தண்டனை இன்னமும் மாற்றப்படவில்லை. எந்த நேரத்திலும் அவரது தலை துண்டிக்கப்படலாம்.

அலி சபாத் குறி சொல்லும் நிகழ்ச்சி நடத்தியது சரியா, பகுத்தறிவான செயலா என்ற கேள்விகளை விடுத்து, அவர் யார் உயிருக்கும் ஆபத்து ஏற்படுத்தியதாகவோ, பொது மக்கள் கூடும் இடங்களிலும் அலுவலகங்களிலும் குண்டு வைத்ததாகவோ இல்லை ஓடும் ரயிலில் பீக் அவரில் ஏறி குண்டு வைத்ததாகவோ தெரியவில்லை.

அவர் செய்த ஒரே குற்றம் இஸ்லாமால் தவறு என்று சொல்லப்பட்ட ஒரு செயலை செய்ததே.

சம்பந்தப்பட்டவர் லெபனானை சேர்ந்தவர். புனித பயணமாக வந்த மாற்று நாட்டவரை சவுதி மத போலீஸ் கைது செய்து அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது. சம்பந்தப்பட்ட சவுதி அரசு, அல் குரானையே அரசியல் சட்டமாக அறிவித்திருக்கும் ஒரு நாடு. அங்கு சட்டம் என்றால் இஸ்லாமின் ஷரியா சட்டமே.

குரானை அரசியல் சட்டமாக அறிவித்து ஷரியா சட்டத்தை பின்பற்றும் ஒரு நாடு மதத்தின் பெயரால் மாற்று நாட்டவர் ஒருவரின் தலையை வெட்ட உத்தரவிடுகிறது என்றால், எழும் கேள்வி, உண்மையிலேயே இஸ்லாமும் குரானும் இது போன்ற சில்லறை குற்றங்களுக்கு தலையை வெட்டவும் கை காலை வெட்டவும் உத்தரவிடுகிறதா? எல்லையற்ற அருளாளனால் அருளப்பட்டதாக சொல்லப்படும் குரானில் உண்மையிலேயே இப்படி உத்தரவுகள் இருக்கிறதா? இப்படி சொல்லியிருந்தால் அது என்ன விதமான கருணை?

==================
சரி, அல்குரான் சட்டம், அலி சபாத்தின் தலை என்று இதை கடந்து போய்விடலாம். ஆனால் உங்கள் தலைக்கு எப்படியோ இதில் என் தலைக்கு நிச்சயமாக ஆபத்து இருக்கிறது.

ச‌வுதியின் ஷரியா சட்டப்படி, அயல் நாட்டவர்களும் மாற்று மதத்தினவரும் கூட விதிவிலக்கல்ல. இதை படிக்கும் நீங்கள் எப்படியோ, ஆனால் எனக்கு இஸ்லாம் மீதோ அல்லது வேறு எந்த ஒரு மதத்தின் மீதோ நம்பிக்கை இல்லை என்பதால் மது அருந்துதல், பன்றி மாமிசம் உண்ணுதல் போன்ற விஷயங்களை நான் விரும்பி கொண்டாட்டத்துடன் தான் செய்து கொண்டிருக்கிறேன். விரும்பி இல்லாவிட்டாலும் விழாக்களின் போது மற்றவர்களுக்காக கோவில்களுக்கும், சர்ச்சுக்கும் கூட செல்வது உண்டு. வேறு வழியின்றி முழங்காலிட்டோ இல்லை என்றைக்கும் கண் திறக்காத கல்சிலைகளின் முன் கைகட்டி நிற்பதும் கூட உண்டு.

அப்படியானால் என்றைக்காவது சவுதி சென்றால் என் தலையும் துண்டாக்கப்படும் வாய்ப்புண்டா? உலகில் இருக்கும் அறுநூறு கோடி பேரில் சுமார் முப்பது சதவீதம் இஸ்லாமை கடைபிடிப்பவர்கள் என்று வைத்துக் கொண்டாலும் மீதி இருக்கும் சுமார் 420 கோடி பேர் நிலை என்ன? இப்படி தலைகளை துண்டித்துக் கொண்டே போனால் உலகத்தில் எத்தனை தலைகள் மிஞ்சும்?

தொடர்புடைய சுட்டிகள்:

http://news.bbc.co.uk/1/hi/world/middle_east/8598134.stm

http://news.bbc.co.uk/1/hi/world/middle_east/8600398.stm

http://edition.cnn.com/2010/WORLD/meast/03/31/saudi.arabia.sorcery/index.html

படம் உதவி: சி.என்.என் மற்றும் பிபிசி

Monday, 28 December 2009

மதம்...திறக்கக் கூடாத கதவு??

எச்சரிக்கை 1: இது மதம் சார்ந்த பதிவல்ல, மனம் சார்ந்த பதிவு, நான் எல்லா மதங்களையும் மதிக்கிறேன் என்று முகத்திரை இடுவதில் எனக்கு விருப்பமில்லை. உண்மையில் மதங்களையும் கடவுளையும் மறுப்பவன் என்ற முறையில் எனக்கு எந்த மதத்தின் மீதும் மதிப்பில்லை...என் பெற்றோரின் மதமான இந்து மதமும் இதில் அடக்கம்...மனம் சார்ந்த பதிவு என்பதை விட இது முழுக்க முழுக்க மதம் குறித்த பதிவு...எழுத்து மிக நேரிடையாக இருக்கக் கூடும்....If you can't call shit as shit, please LEAVE NOW!.

எச்சரிக்கை 2: கன்னமிடும் கயவருக்கு அன்னமிடும் பெண்டீரை தாமாக தாரை வார்க்கும் கூட்டம்....திறந்து வைத்த பண்டங்கள் என்று பெண்களை ஏதோ தின்பண்டம் போல எழுதும் பதிவரை கண்டிக்க வக்கில்லாத போலி முற்போக்கு பதிவர்கள், என்னை இந்து வெறியன் என்றோ, கொண்டை என்றோ, பூணூலை உள்ள போடு என்றோ சொல்லக் கூடும்....முத்திரைகள், பாரம்பரியம், கலாச்சாரம், போலி முற்போக்குவாதிகள், குறிப்பாக மதநூல்கள் குறித்து நான் கவலைப்படுவதில்லை என்பதால் கெட்ட வார்த்தைகளும் இருக்கலாம்... YOU HAVE BEEN WARNED! AND YOU HAVE THE CHOICE TO CLOSE THIS BROWSER WINDOW AT ANY TIME. NOW ITS UP TO YOU TO PROCEED!!!
எச்சரிக்கை 3: முன்கதை தெரியாமல் இடுகையை தொடர்ந்தால் முடியை பிய்த்துக் கொள்ள நேரிடலாம் என்பதால் தயவு செய்து இந்த இடுகைகளை படித்து விட்டு தொடரவும்...
http://sumazla.blogspot.com/2009/12/blog-post_27.html
http://sumazla.blogspot.com/2009/12/blog-post_25.html
http://kalakalapriya.blogspot.com/2009/12/blog-post_25.html
http://ojasviviji.blogspot.com/2009/12/blog-post_5312.html

================

யார் பர்தா அணிந்தால் எனக்கென்ன? அணியாவிட்டால் எனக்கென்ன? பர்தா அணிந்தால் நற்குடி...இல்லாவிட்டால்? ம்ம்ம்...சரி, நற்குடி இல்லை நாறக்குடி என்றே இருந்தாலும் எனக்கென்ன போச்சு? யார் எப்படிப் போனால் எனக்கென்ன? பல பிரபல பதிவர்களும், முற்போக்கு பதிவர்களும் செய்தது/செய்வது போல வெறுமனே மெளனம் சாதித்து கொண்டு இருக்கலாம் தான்...எந்த எதிர்வினையும் புரியாது மெளனமாய் இருந்தால் பின்னாளில் முற்போக்கு பதிவர் என்ற முத்திரையாவது மிஞ்சும்....என்னை யாரும் நற்குடி இல்லை என்றோ தேவடியா மவன் என்றோ நேரடியாக சொல்லவில்லை...உண்மையில் இது என் பிரச்சினை இல்லை என்று கூட சொல்லிவிட முடியும் தான்....அவரவர் உடை அவரவர் விருப்பம்...இதில் கேள்வி கேட்க எனக்கு என்ன உரிமை? ம்ம்ம்...அப்படியும் சொல்லிவிட முடியாது...என்றைக்கு நியூயார்க் இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்டு வேலைக்கு போன என் தோழி அடையாளம் சொல்ல ஒரு உடல் பாகம் கூட இல்லாது கருகி எரிந்து போனாளோ அன்றைக்கே மதமும், மத அடையாளங்களும், மதத்தால் சொல்லப்படும், செய்யப்படும் விஷயங்களும் என் பிரச்சினை ஆகிவிட்டது...


பர்தா பற்றி பேசும் போது இங்கு பிரிட்டனில் கண்கள் மட்டுமே தெரியும் படி பர்தா அணிந்து வேலைக்கு போனதால் வேலையிலிருந்து நீக்கப்பட்ட ஒரு டீச்சர் பற்றிய கதை ஞாபகம் வருகிறது....வீட்டில் இருக்கும் போது பர்தா அணிவதில் எந்த பிரச்சினையும் இல்லை...ஆனால் பள்ளி பிள்ளைகளுக்கு பாடம் எடுக்கும் போது கண்கள் மட்டும் தெரியும் படி உடை உடுத்துவது அவர்களின் கல்வியை பாதிக்கிறது...முறையான கல்வி குழந்தைகளின் மனித உரிமை என்று கோர்ட் டீச்சரின் கேஸை தள்ளுபடி செய்துவிட்டது...(இதில் கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயம், அந்த பள்ளி சர்ச் ஆஃப் இங்கிலண்டினால் நடத்தப்படுவது...இவர் வேலைக்கான இன்டர்வியூவுக்கு போன போது பர்தா அணியவில்லை!)...இவர் வெளியிட்ட அறிக்கையில் பர்தா அணிவது தனது மத உரிமை என்று சொல்லியிருக்கிறார்... அதே சமயம், அதே இஸ்லாமை பின்பற்றுவதாக சொல்லும், பல கொடூர கொலைகளை செய்த தலிபான் பன்றிகள் பள்ளிக்கு செல்லும் பெண் குழந்தைகளின் முகத்தில் இருந்து பர்தாவை விலக்கி விட்டு ஆசிட் ஊற்றும் கொடூரத்தை எப்படி புரிந்து கொள்வது என்று எனக்கு தெரியவில்லை...நாளை எனக்கு ஒரு பெண் பிறந்து அவள் எல்.கே.ஜி போகும் போது அவள் முகத்திலும் ஆசிட் ஊற்றப்படுமோ என்று கவலை ஏற்படுவதையும் தவிர்க்க முடியவில்லை...

பர்தா அணிபவர்கள் நற்குடி என்றால், அணியாதவர்கள் என்ன என்ற கேள்வியை வாசிப்பவர்களுக்கே விட்டு விட்டு, அதனால் ஏற்படும் விளைவுகளையும், அதன் அடிப்படையையும் பற்றியே யோசிக்கிறேன்... உண்மைதான்....என்ன உடை அணிய வேண்டும் என்பது மிக நிச்சயமாக தனி மனித உரிமை...ஆனால் அந்த உடை மத ரீதியான உடை என்றால் கேள்விகள் எழுவதை நிச்சயமாக தவிர்க்க முடியாது....குறிப்பாக முகத்தை மூடும் உடைகள்.... பலர் கூடும் பொதுவான இடத்தில் முகம் மறைக்கும் இவர்கள் சொல்ல வருவது என்ன? உங்களுடன் கலக்க எங்களுக்கு எந்த விருப்பமும் இல்லை, எங்களை தனித்து விடுங்கள் என்பதா?? அப்படி தான் எனில், மற்ற சமுதாய மக்கள் இவர்களை ஒட்டு மொத்தமாக புறக்கணித்து ஒதுக்குவதை தடுக்க முடியாது....பின்னாளில், நாங்கள் ஒதுக்கப்படுகிறோம், புறக்கணிக்கப்படுகிறோம் என்று குறை சொல்ல எந்த இவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை....You will reap what you sow!

=====================

சில மாதங்களுக்கு(??) முன் உன்னைப் போல் ஒருவனில் வரும் , பேக்கரியில் எரித்துக் கொல்லப்பட்ட் ஒரு முஸ்லிம் பெண்ணை பற்றி வரும் ஒரு மோசமான வசனத்தை பதிவர்கள் பலரும் கண்டித்து எழுதியிருந்தார்கள்....அது ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிய விமர்சனமே....ஆனால் அந்த படம் எதிர்பார்த்ததை விட பெரிய வெற்றியே பெற்றது....

படத்தை கிழித்த பதிவர்கள், படத்தின் வெற்றியை குறித்து எதுவும் ஆராய்ந்ததாக தெரியவில்லை... படத்தை விட, படத்தின் வெற்றியே எனக்கு முக்கியமாக தெரிகிறது....தமிழ் சினிமாவுக்கே உரிய குத்து பாட்டு, நாயகனின் குத்து டயலாக், வடிவேலு/விவேக் காமெடி, ஹிட்டான பாடல்கள் என்று எந்த பொழுதுபோக்கு அம்சமும் இல்லாத இந்த படம் வெற்றி பெற என்ன காரணம்?? உளவியல் ரீதியாக ஆராய்ந்தால், இந்த வெற்றி தரும் செய்தி மிக கவலைக்குரியது... மத ரீதியாக பிளவுபட்டிருக்கும், தீவிரவாதி என்றால் முஸ்லீம் என்று நினைக்கும் ஒரு மனநிலையை தான் இது காட்டுகிறதா? இந்த மன நிலை சரியா தவறா என்றால்....மிக நிச்சயமாக தவறு தான் ஏனெனில் முஸ்லிம்கள் மட்டுமல்ல, எல்லா சமுதாயத்து மக்களும் வாழ்க்கையின் அடுத்த கட்ட வளர்ச்சிக்குத் தான் போராடிக் கொண்டிருக்கிறார்கள்...

ஆனால், மும்பை குண்டு வெடிப்பு, கோயம்பத்தூர் குண்டு வெடிப்பு, பெங்களூர் குண்டு வெடிப்பு, பார்லிமென்ட் தாக்குதல், லண்டனில் ட்யூப் ரயில் குண்டு வெடிப்பு, நியூயார்க் இரட்டை கோபுர தாக்குதல், மீண்டும் மும்பையில் பொது மக்கள் மீது கொடூரமான கொலை வெறி துப்பாக்கிச் சூடு என்று தொடர்ந்து வரும் விஷ்யங்களால் மக்களின் மனநிலை "உன்னைப் போல் ஒருவனை" வெற்றி பெறச் செய்யும் வகையில் தான் இருக்கிறது. ஒப்புக் கொள்ள கசப்பாக இருந்தாலும் இதன் நியாய தர்மங்களை விவாதித்தாலும் இது தான் உண்மை!

======================
இந்த சூழ்நிலையில் பர்தா அணிந்தால் நற்குடி என்றும், திறந்து வைத்த பண்டங்கள் என்று எழுதுவது மிக கசப்பான உணர்வையே தருகிறது....என்னதான் இது மதம் சார்ந்த பதிவல்ல, மனம் சார்ந்த பதிவு என்று அறிவித்தாலும் திறந்து வைத்த பண்டங்கள் என்ற எழுத்துக்களில் தெறிப்பது மிகத் தீவிரமான மத உணர்வே என்றே புரிந்து கொள்ள முடிகிறது...இவர் சொல்லும் க்றிஸ்த்மஸ் வாழ்த்துக் கூட....ஸாரி....தவறாகவே புரிந்து கொள்ளப்படலாம்!

==========================
பி.கு. 1: முற்போக்கு பதிவர்கள் என்று சொல்லிக் கொள்ளும் பலரும் நமக்கென்ன வந்தது என்று சும்மா இருக்கும் போது நற்குடி என்ற சொல்லாடலின் விபரீதத்தை சுட்டிக்காட்டி பின்னூட்டமிட்ட/இடுகையிட்ட பதிவர்கள் கோவி.கண்ணன், துளசி டீச்சர், சஞ்சய் காந்தி, கலகலப்ரியா, "மயில்" விஜி ராம், உண்மைத் தமிழன், குடுகுடுப்பை, பிரபாகர், செல்வேந்திரன், இன்னும் பலருக்கும் நன்றி...உங்களில் எல்லோருடனும் பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், துணிச்சலாக பேசும் உங்கள் போன்றாரால் தான் கருத்து விவாதம் என்பதே சாத்தியமாகிறது...

பி.கு. 2: இது போன்ற சென்சிட்டிவான இடுகைகள் இப்போதைக்கு வேண்டாம் என்று எனக்கு மிகவும் பிடித்த‌ பதிவர் வடகரை வேலன் போன்றவர்கள் சொல்லியிருக்கிறார்கள்....அவர்களின் நல்ல மனதையும் நோக்கத்தையும் புரிந்து கொண்டாலும் சில விஷயங்களை என்னால் பேசாமல் இருக்க முடியவில்லை...

பி.கு. 3: யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கில்லையென்றாலும் தியாக ராஜ பாகவதர், எம்.ஆர்.ராதா, எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல், விஜய், அஜீத், பெரியார், பார்ப்பனர்கள், ஜெயலலிதா, கருணாநிதி, சாரு நிவேதிதா, ஜெயமோகன் என்று எந்த விஷயத்தை பேசினாலும் யாருக்காவது மனம் புண்படத் தான் செய்யும் என்பது எழுதப்படாத உண்மை...இதைப் படிப்பவர்களில் யார் மனமேனும் புண்படுமாகில், I am Sorry, but I have no other way!

பி.கு. 4: இடுகையில் எழுதப்பட்டிருப்பவை என் எண்ணங்கள் மட்டுமே...இதைப் படிப்பவர்கள் வெட்டியோ/ஒட்டியோ தங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொண்டால் எனது புரிதலுக்கு உதவி செய்யும்...நன்றி!

படம் உதவி: BBC மற்றும் The New York Times

Saturday, 15 November 2008

சட்டக்கல்லூரி கலவரம் - போலீசுக்கு பாராட்டு

சட்டக்கல்லூரி கலவரம் பற்றி பல பதிவர்கள் எழுதி தீர்த்து விட்டார்கள்..அதனால் நான் சொல்ல வருவதை சுருக்கமாக சொல்லி விடுகிறேன்..

வழக்கமாக போலீசுக்கு ஒரு கொள்கை உண்டு. பொது இடத்தில் இல்லாமல், பொது மக்களுக்கு இடையூறு செய்யாமல் இரண்டு ரவுடி கும்பல்கள் சண்டையிட்டு கொண்டால் பெரும்பாலும் தலையிட மாட்டார்கள்..இதற்கு பல உதாரணங்கள் உண்டு.

ஏனெனில் எந்த ரவுடி கும்பலில் எவன் செத்தாலும் போலீசுக்கும் சமுதாயத்திற்கும் லாபமே. இதில் தவறு ஏதும் இருப்பதாக தெரியவில்லை..

சட்டக் கல்லூரி கலவரத்திலும் போலீசார் இந்த அணுகுமுறையையே பின்பற்றி இருப்பதாக தெரிகிறது. அடிதடி நடந்த இடம் ட்ரெயின் ஸ்டேஷனோ, இல்லை மக்கள் வந்து போகும் இடமோ இல்லை. கல்லூரி உள்ளே நடந்து இருக்கிறது..

சரி, சண்டை போட்டது யார்? படத்தில் ஒருவன் கத்தியுடன் ஓடி வருகிறான்..மற்றொரு கும்பல் உருட்டு கட்டை, இரும்பு கம்பியுடன் திரிகிறது.
உண்மையில் மாணவர்களாய் இருந்தால், கத்தியும் இரும்பு கம்பியும் எப்படி வரும்? ஆக இவர்கள் மாணவர்கள் என்பதை விட, ரவுடிகள் என்பது தான் சரி.

கல்லூரிக்கு வருவதாலேயே எல்லாரும் மாணவ மணிகள் என்று ஆகிவிட முடியாது..ஆக அடித்துக் கொண்டிருப்பது இரண்டு ரவுடி கும்பல்கள் என்று தெரிகிறது.

இந்த‌ கும்ப‌லில் எவ‌ன் ஒழிந்தாலும் யாருக்கு ந‌ஷ்ட‌ம்? இவ‌ர்க‌ளா வ‌ந்து ச‌ட்ட‌த்துறையை காப்பாற்ற‌ போகிறார்க‌ள்? இல்லை ச‌ட்ட‌ மேதைக‌ளாக‌ போகிறார்க‌ளா??

நாட்டுக்கு ந‌ஷ்ட‌மா? ச‌முதாயத்திற்கு ந‌ஷ்ட‌மா? ஒரு வேளை அவ‌ர்க‌ள் வீட்டுக்கு வேண்டுமானால் ந‌ஷ்ட‌மாக‌ இருக்க‌லாம்..ஆனால், இத்த‌கைய‌ பிள்ளைக‌ள் இருப்ப‌தை விட‌ இல்லாம‌ல் இருப்ப‌தே நல்லது என்று அவ‌ர்க‌ள் கூட‌ நினைக்க‌க்கூடும்..

இப்ப‌டிப்ப‌ட்ட‌ ர‌வுடி கும்ப‌லில் எவ‌ன் ஒழிந்தாலும் ச‌ரி என்று "க‌ண்டுக்காம‌ல்" விட்ட‌ காவ‌ல் துறையை பாராட்டுகிறேன்!