Tuesday 15 February 2011

சாருவின் தேகமும் ஷங்கரின் எந்திரனும்


எழுத்து ஒரு சுயவதை என்று சொல்லியிருக்கிறார்கள். நான் எழுதுவதை சொல்லவில்லை. சிலருடைய எழுத்தை படிப்பதை சொல்கிறேன். அதையே நீங்களும் சொல்லலாம். தப்பில்லை.

ஆனால் பாருங்கள் சுயவதை செய்வதில் எனக்கு விருப்பமில்லை. அப்படியும் சில நேரங்களில் இப்படி ஆகிவிடுகிறது. சந்திர மோகன் வருவான் என்று எனக்கு எப்படி தெரியும்? அவன் கையில் எந்திரன் டிவிடி வேறு. சந்திரனும் எந்திரனும் பார்ப்பதற்கு சந்திர மண்டலத்திற்கு நடந்து போய் தொலைக்கலாம்.

வதைத்தலுக்கும் வதைப்படுதலுக்கும் இடையில் தான் சமூக பண்பாட்டு வரலாறு எழுதப்படுகிறது. நான் சொல்லவில்லை அய்யா. தேகத்தில் சாரு சொல்லி இருக்கிறார். தர்மா என்பவன் கதை பன்றி புடுக்கை அறுப்பதில் ஆரம்பிக்கிறது. அவன் டார்ச்சர் செய்பவனாக மாறுகிறான். ஆண் குறியில் கோணி ஊசியால் ஓட்டைப் போடுவது மூக்கில் ஊசி வைத்து தைப்பது மலத்தை கரைத்து குடிக்க வைப்பது என்று தேர்ட் கிரேட் டார்ச்சர்கள். இதெல்லாம் ரொம்ப பழைய ஸ்டைல். தர்மாவுக்கு யாராவது சொல்ல வேண்டும். வாட்டர் போர்டிங் பற்றி. பெரிய டார்ச்சர் வலி அல்ல, உயிர் பயம் தான். ரகுவரன் படம் எத்தனை பேர் பார்த்திருக்கிறீர்கள்?

குப்பி கொடுப்பது, ஜேப்படி செய்வது, புல்லை தின்பது எல்லாம் சாரு முன்பே எழுதியது தான். பக்த துருவ மார்கண்டேயா. செத்து கிடந்த நாயை புணர்ந்த கதைகள் தமிழில் ஏற்கனவே இருப்பதால் பன்றியை புணர்ந்ததாக சொல்லும் இடம் எந்த விதமான கடும் மன அதிர்ச்சியையும் ஏற்படுத்தவில்லை. தமிழின் சிறந்த படம் எந்திரன் என்று ரஜினியும் ஷங்கரும் ஏற்கனவே சொல்லிவிட்டார்கள்.

தமிழ்ப்பட கதாநாயகிகள் ஏனோ ரவுடிகளை மட்டுமே காதலிக்கிறார்கள். முகத்தில் காயம் இருந்தால் அதில் முத்தமிடுகிறார்கள். அவனை துரத்தி துரத்தி காதலிக்கிறார்கள். ஒரு கதாநாயகி மட்டும் இருந்தால் இப்பொழுதெல்லாம் தமிழர்களுக்கு போரடிக்கிறது. மினிமம் இரண்டு தேவை. அதிலும் ஒருத்தி கட்டுபெட்டி பெண்ணாகவும் இன்னொருத்தி அல்ட்ரா மாடர்னாகவும் இருக்க வேண்டும். தெலுங்கில் இது இருபது வருட ட்ரெண்ட்.


பாரிஸில் இருக்கும் முத்தமிடவே கூச்சப்படும் இருபது வயது தமிழ்க்கன்னிப் பெண்ணிலிருந்து ஆண்களை... இல்லை யாரையுமே ஒரு பொருட்டாக மதிக்காத பொஸஸிவ் உணர்வே இல்லாத நாற்பது பேருடன் படுத்த பெண்ணும் கூட தர்மா என்றால் விழுந்து விழுந்து காதலிக்கிறார்கள். நீ இல்லாமல் நான் இல்லை உன் ஃபோட்டோ பார்த்தாலே ஆர்கஸம் வந்து விடுகிறது இப்படியே பக்கம் பக்கமாக கடிதம் எழுதுகிறார்கள். தர்மாவுக்கு உலகமெங்கும் அழகிய ரசிகைகள்.

கிளிமாஞ்சரோ கன்னக்குழி மாஞ்சாரோ என்று ரஜினி ஆடிக் கொண்டிருக்கிறார். ஐஸ்வர்யா சரி என்னவோ பண்றாய்ங்க என்று அந்த பக்கமாக போய்க் கொண்டிருந்தார். அவரும் படத்தில் இருக்கிறார் இல்லையா. ரெண்டு கோடி சம்பளத்திற்கு நாலு அடி கூட நடக்காவிட்டால் அது அநியாயம். எந்திரனை விடுங்கள். ஜெண்டில்மேன் என்று ஒரு ஷங்கர் படம் இருக்கிறது. அதில் ஒரு பாட்டு வரும். உசிலம்பட்டி பெண்குட்டி முத்து பேச்சி நீ ஒரக்கண்ணால் பார்த்தாலே நான் புள்ளத்தாச்சி. ரொம்ப பழைய படம். எத்தனை பேர் பார்த்திருப்பீர்கள் என்று தெரியவில்லை.

ரெண்டு கதாநாயகி படத்தில் எப்பொழுதுமே ஒரு பிரச்சினை உண்டு. ஒரு கதாநாயகன் ரெண்டு மனைவி என்பதை தமிழ்கலாச்சாரம் ஒரு போதும் ஒத்துக் கொள்ளாது. கதாநாயகனோ கலாச்சார காவலன். மூணு டூயட் பாடிய பின் இரண்டாவது கதாநாயகியை என்ன செய்வது? தங்கச்சீ என்று சொன்னால் டி ராஜேந்தர் அதற்கு ஒட்டு மொத்த குத்தகை வைத்திருக்கிறார். வேறு வழியே இல்லை, அவள் சாகத் தான் வேண்டும். பிராப்ளம் சால்வ்ட். கதாநாயகன் ஒரு காதல் காந்தம் என்பதையும் நிரூபித்தாயிற்று. I am a mean lean sex machine. ஒரு கல்லு. ரெண்டு பன்னி. எந்திரன் புரஃபஸரிடம் வந்து எனக்கு சனா வேணும் அவ இல்லாம நான் இல்லை என்று சொல்லிக் கொண்டிருக்கிறான்.

சந்திர மோகனிடம் ஏன் பேசவில்லை என்று கேட்காதீர்கள். அவன் பெரிய டார்ச்சர். வதை. பெரிய உளவியல் காரணம் எல்லாம் ஒரு மண்ணும் இல்லை. மாப்ள அவ என்னை பார்த்தாடா அந்த கோயில் தெரு கலா இல்ல அவ நான் இல்லாட்டி செத்துருவேன்னு சொல்றா. இப்ப என்ன பண்றதுன்னே தெரியலை என்ற ரீதியில் அவன் டார்ச்சர் இருக்கும். அதை விட டார்ச்சர் கவிதை என்ற பெயரில் அவன் எதையாவது சொல்லித் தொலைப்பது. உயிரே உருகுது, என் தலை மயிரே கருகுது என்று வரும் எட்டாம் கிளாஸ் கவிதைகளை எத்தனை முறை தான் படித்து தொலைப்பது? தர்மா எழுதும் கவிதைகளை சொல்லவில்லை. தர்மா உண்மையில் பரவாயில்லை. இருபது எழுதினால் ரெண்டு தேறுகிறது.

தர்மா பீ அள்ளிய காலத்தில் பார்த்த விதம் விதமான மலத்தை அதன் வடிவம் நிறம் என்று வர்ணிக்கிறான். வாசிப்பவனுக்கு அதிர்ச்சி தருகிறானாம். அவன் கதையில் ப்ளாட்பாரத்தில் பத்து ரூபாய்க்கு கிடைக்கும் போர்னோக்ராஃபி புத்தக வார்த்தைகள் நிறைய வருகிறது. ஒரு பெண் நாற்பது பேருடன் படுத்திருக்கிறேன் என்று சொல்கிறாள். உன்னை இப்பவே ****** போலருக்கு என்று மெயில் அனுப்புகிறாள்.

சாரு நிவேதிதா இந்த நாவல் மூலம் காட்டும் உலகம் கடும் மன அதிர்ச்சியை ஏற்படுத்துகிறதாம். எந்திரன் தான் உலகின் மிகச்சிறந்த படம் இப்படி ஒரு படம் எந்த மொழியிலும் எந்த நூற்றாண்டிலும் வந்ததில்லை என்ற மொக்கை விளம்பரம் போல இருக்கிறது. செய்தித் தாளோ டிவியோ குறைந்த பட்சம் தமிழ்ப்படம் பார்த்தவர்களுக்கு கூட இதில் மயிரளவும் அதிர்ச்சி வராது. ஒரு வேளை ஜன்னலை மூடிக் கொண்டு குகையில் வாழ்பவர்களுக்கு அதிர்ச்சி வ்ரலாம். ஆனால் நான் இப்படி ஃபக் பண்ணுவேன் அப்படி ஃபக் பண்ணுவேன் என்ற ரீதியில் தர்மாவின் ஆண்குறி வாசிப்பவனின் முகத்தில் தொடர்ந்து ஆடிக் கொண்டே இருப்பது கடும் எரிச்சலை தான் தருகிறது. தன் கதையை கேட்பவனை டார்ச்சர் செய்ய வேண்டும் என்பது தர்மாவின் நோக்கமானால் இந்த கதை அதை முழுமையாக சாதிக்கிறது. பின்னட்டையில் சொல்வது உண்மை தான். சித்திரவதையின் தொழில் நுட்பம் நுணுக்கமாக மாறி இருக்கிறது. சித்திரவதை செய்வதில் தமிழ் சினிமா நடிகர்களின் நட்சத்திர பேட்டியை சாரு மிஞ்சி இருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.

ஃபக்கிங் ஷிட் என்று நான் கத்துவதை கேட்டு சந்திர மோகன் திரும்பி புத்தகத்தின் அட்டையை எழுத்துக் கூட்டி தே....க....ம் என்று படித்து விட்டு தேகம்னா என்ன என்றான். அவனுக்கு தமிழ் வாசிக்க முடியாது.

எனக்கும் தமிழ் வாசிக்க தெரியாமல் போய்த் தொலைந்திருந்தால் என்ன என்று யோசித்து விட்டு கடுப்புடன் சொன்னேன்.

“பொத்திக்கிட்டு போடா மயிறு. ப்ரேதம்”.

எந்திரனாவது பார்த்து தொலைத்திருக்கலாம்.