Sunday 1 January 2012

சாரு நிவேதிதாவின் எக்ஸைல் (அ)கோகிலா எங்கே போகிறாள்? (அ) அய்யாங்....ட்டொய்ங்.. 6

சனிப்பெயர்ச்சி எனக்கு சரியில்லை. இதுக்கு முன்னாடி சரியா இருந்துச்சா என்று கேட்காதீர்கள். அப்பொழுதும் இல்லை இப்பொழுதும் இல்லை. எனக்கு என் ராசியே தெரியாது என்பதால் எந்த ராசிக்கு பெயர்ந்தாலும் எனக்கு சரியில்லை. அது தான் கதை.இப்படி எதையாவது காரணம் வைத்து ஆரம்பித்தால் தான் நானூறு வருடமாக நான் சொல்லிக் கொண்டிருக்கும் என் சொந்த கதை சோகக் கதையை திரும்ப புலம்ப ஆரம்பிக்க முடியும். (ஆஹா ஆரம்பிச்சிட்டாய்ங்கடா ஆரம்பிச்சிட்டாய்ங்கடா... - கோவிந்தன்)

அமெரிக்காவிலோ பிரிட்டனிலோ ஒரு படத்தில் நடித்தாலே போதும். டேனியல் க்ரெய்க் ஒரு படத்தில் தான் நடித்தார். அதுவும் சாதாரண ஜேம்ஸ்பாண்ட் படம். இப்பொழுது அவரை தெரியாதவர்களே இல்லை. அவருக்கு லண்டனில் நாலு சொந்த வீடும் ப்ரைவேட் ஜெட்டும் இருக்கிறது. ஆனால் விஜய் எத்தனை வருடமாக நடித்துக் கொண்டிருக்கிறார்? கனவில் கூட ப்ரைவேட் ஜெட் வாங்க முடியுமா அவரால்? மனோரமா. நம் காலத்தில் ஆயிரத்து ஐநூறு படம் நடித்தவர். இன்றைக்கும் அவரது பெயர் தமிழ்நாடு தாண்டி எங்கும் தெரியவில்லை. இப்படி இருந்தால் தமிழ்நாடு உருப்படுமா ஐயா? தமிழ் கலாச்சாரம் செத்து விட்டது என்று நான் முன்னூறு வருடம் முந்தியே சொல்லி விட்டேன்.( வட போச்சே - கோவிந்தன்) (கலாச்சாரம். ச் வராது - பிரபல தமிழ்பதிவர்)

வீட்டுக்கு வந்தா ஒரு பத்து நாள் இருக்க மாதிரி வாயேன். பண்டாரம் பரதேசி மாதிரி வந்தா ரெண்டு நாள்ல ஓடணுமா என்கிறாள் அம்மா. பிரச்சினை கிட்னி தான். அம்மாவுக்கெல்லாம் பயப்பட நான் ஒண்ணும் அம்மாக்கோண்டு இல்லை. ஆனால் அவள் பார்க்கும் மெகா ஸீரியலை ரெண்டு நிமிடம் பார்த்தாலே என் கிட்னி கிழிந்து விடும் போலிருக்கிறது.
கண்டுக்காத அம்மா, சோறு கிடைத்தாள் போதும் என்று இருக்கும் அப்பா, விதம்விதமாய் கொடுமைப் படுத்தும் அம்மாவின் காதலன், கொஞ்சமும் அன்பே இல்லாத கர்ப்பிணிப் பெண்ணை (யாருக்கு யாரு மேல அன்பில்லை? ஒண்ணுமே புரியலியே - கோவிந்தன்) காட்டில் விட்டு செல்லும் கணவன், சோறு கூட போடாத மாமியார்.இது கோகிலா மெகா ஸீரியல் கதை இல்லை. எக்ஸைலின் முக்கிய பாத்திரமான அஞ்சலியின் கதை. மெகா ஸீரியல் கொடுமை தாங்க முடியாமல் தான் தமிழ்நாட்டிலிருந்து ஓடி வந்தேன். அதையே நாவல் வடிவில் மீண்டும் படிக்க வேண்டி இருக்கிறது. (எறங்கின பஸ்லயே திரும்பி ஏத்தி விடறாய்ங்களே - கோவிந்தன்)

தீப்பொறி ஆறுமுகம், கலைஞர் கருணாநிதி, மக்கள் நடிகர் ராமராஜன், புரட்சிக் கலைஞர் விஜயகாந்த்,வைகைப்புயல் வடிவேலு, அல்டிமேட் ஸ்டார் அஜீத்.(இதுக்கு பேரு தான் நேம் ட்ராப்பிங் - கோவிந்தன்). பெயருக்கு முன் பட்டம் இல்லாமல் இருப்பது தமிழ்நாட்டில் அண்டர்வேர் போடாமல் லுங்கி கட்டுவது போல. சாருவுக்கு அவரது தற்கொலைப்படையினர் பட்டம் கொடுத்திருக்கிறார்கள். கலகக்கார ஞானி. புரட்சிக்காரர் என்று கூப்பிட முடியாது. புரட்சி செய்வது எல்லாருக்கும் தெரிந்து விட்டது. மிடில்க்ளாஸ் குமாஸ்தா அம்பியான நானே கூட புரட்சி செய்வது எப்படி என்று ரெசிப்பி எழுதியிருக்கிறேன். புத்தகத்தின் பின்னட்டையில் சாரு இலக்கியவாதிகளில் ஒரு கலகக்காரர், கலகக்காரர்களில் ஓர் இலக்கியவாதி என்று பதிப்பாளரே சொல்கிறார். (அவனே சொல்லிட்டானா? - கவுண்டமணி. அண்ணே ஒரு வெளம்பரம் - செந்தில்)

ஆண் பெண் இரண்டாக நீர் சுகித்திருக்கும் படி படைத்தோம். பைபிள். அறுபது வயது எழுத்தாளர் உதயா முப்பது வயது அஞ்சலியை படுக்கையில் கிடத்தி ஆடைகளை களைந்து பிளம்பர் வேலை...கதை ஆரம்பிக்கிறது. (இந்த கலகத்தையெல்லாம் நான் எட்டாங்கிளாஸ்ல தமிழ் புக்குக்கு நடுவுல மறைச்சே படிச்சிட்டனே - கோவிந்தன்)
அதற்கு பின் வெகு நேரம் வருவது அஞ்சலி உதயாவுக்கு மாய்ந்து மாய்ந்து எழுதும் கடிதம். கடிதம் கடிதம். கடி. தம். அப்படி லவ் பண்றேன், இப்படி லவ் பண்றேன். உன் குரல் கேட்டாலே ஆர்கஸம் வந்துடுது. (நான் கூட ஒரு படத்தில நாக்கை அறுத்துக்கிட்டேன் - லிவிங்ஸ்டன்)
ஆனால் அஞ்சலி எழுதும் கடிதத்தில் ஒரு நல்ல விஷயம். பக்கங்களை வேகமாக திருப்பி விடலாம். நானூத்து முப்பது பக்கத்தை பிரபல அறிஞர் ஆவி மதன் ஒரே இரவில் படித்திருக்கிறார். எழுத்தாளர் உதயா முதன்முதலாகஃப்ரஞ்ச்சில் ஒரு கவிதை படைத்திருக்கிறார். எனக்கு ஃப்ரஞ்ச் தெரியாது. (கடவுள் இருக்காண்டா கொமாரு - கோவிந்தன்)

அஞ்சலி உதயாவுக்கும், உதயா அஞ்சலிக்கும் மாறி மாறி மாறி மாறி கதற கதற ..ச்சை. இனிமேல் தினத்தந்தி படிப்பதில்லை. கடிதம் எழுதியது போக வருவது ப்ளாஸ்டிக் க்ளாஸ் 300, ஆடு வெட்டும் கத்தி 1, காய் வெட்டு கத்தி 1, பச்சை மிளகாய்- 2 கிலோ, மிளகு 250 கி, ஓல்டு சிந்தால் சோப் -4, மாங்காய் - 2 கிலோ, பகார்டி -4, ரெமி மார்டின் -2. எட்டு பக்கத்திற்கு பிச்சாவரத்தில் கார்னிவல் கொண்டாட தேவையான குறிப்புகள். நாவல் நானூறு பக்கம் ஐயா. எப்படித் தான் நிரப்புவது.

கலகக்கார ஞானி சாருவின் ப்ளாக்கிலிந்து உதயா நிறைய திருடி இந்த நாவலில் உபயோகித்திருக்கிறார். பல பல ப்ளாகுகள் எழுத்துக்கள் கூட மாறாது இந்த நாவலில் வருகிறது.சாரு அடுத்த முறை உதயாவை பார்க்கும் போது பேசிக் கொள்வார்.

உதயா ஒரு இண்ட்ரஸ்டிங் கேரக்டர். உண்மையில் அவன் தான் கலகக்காரன். பதிமூன்று வயது அஞ்சலிக்கு செக்ஸ் டார்ச்சர் தரும் திவாகர் நாயின் திவாகர் நாய் இல்லாமல் வருவதில்லை திவாகர் நாயின் கையைக் காலை வெட்டிப் போட துடிக்கும் உதயா மொராக்கோவின் டாஞ்சியர்ஸ் பற்றி பெருமையாக பேசுகிறான். ஐரோப்பாவில் ஓரினச் சேர்க்கைக்கே தடை இருந்த போது டாஞ்சியர்ஸில் ஏகப்பட்ட பையன்கள் ஒவ்வொரு விடுதியிலும் கிடைப்பார்களாம். இவர்கள் எல்லாம் விரும்பியே செய்தார்களா இல்லை செக்ஸ் டார்ச்சர் செய்யப்பட்டார்களா என்பதெல்லாம் உதயாவுக்கு தேவையில்லை. டாஞ்சியர்ஸில் கிடைப்பார்கள், அதனால் அது எழுத்தாளர்களின் புகலிடம். பெரும் கலகம். மாபெரும் புரட்சி. (அவங்களுக்கெல்லாம் பையன்களை புணர்ந்தால் தான் இலக்கியம் வருமா? - கோவிந்தன்)

தினமலருடன் ஒவ்வொரு ஞாயிறும் வாரமலர் என்று புத்தகம் வரும். அதில் வரும் கவிதைகள் ஒவ்வொன்றுக்கும் நோபல் பரிசு கொடுக்க வேண்டும். ஆனால் அத்தனை பரிசுகள் கொடுத்தால் நோபல் கமிட்டி திவாலாகி விடும் என்பதால் கொடுப்பதில்லை. எழுதுபவர்களும் அதைக் கேட்டு உண்ணாவிரதம் இருப்பதில்லை. அது அவர்கள் பிரச்சினை. நமக்கென்ன வந்தது. கதை அதுவல்ல. அதில் திண்ணை என்று ஒரு பகுதி வரும். காந்தி 1942 வட்டமேஜை மாநாட்டுக்காக லண்டன் சென்ற போது அவரது கோவணத்தை தொட்டு பார்த்த வெள்ளையர்கள் இந்திய துணி எத்தனை மென்மையாக இருக்கிறது என்று வியந்தார்கள், அதைக் காப்பி அடித்து தான் மான்செஸ்டரில் ஓரு ஆலையே நிறுவினார்கள். இட்லிக்கு உளுந்து ஊறப்போடும் போது அதனுடன் கொஞ்சம் வெந்தயமும் சேர்த்து ஊற வைத்தால் இட்லி குஷ்புவைப் போல குண்டாக அழகாக வரும். பார்வதி குளிக்கப் போகும் போது தன் அழுக்கை திரட்டி ஒரு பிள்ளையை உருவாக்கி  காவலுக்கு வைத்துப் போனாள். பார்வதியை பார்க்க வந்த சிவனை அந்த பிள்ளை உள்ளே விட மறுக்கவே சிவகணங்கள் தலையை துண்டித்து விட்டனவாம். குளித்து முடித்து விட்டு வந்த பார்வதி அழுது புலம்பவே சிவனின் கட்டளைப்படி ஒரு யானையின் தலை பிள்ளைக்கு பொறுத்தப்பட்டது. இவர் தான் இன்றைக்கு நாம் கேட்பதெல்லாம் அருளும் பிள்ளையார்.காரைக்குடி முக்குறுணி பிள்ளையாருக்கு முக்குறுணி அரிசியில் கொளுக்கட்டை படைத்தால் நாட்டுக்கே அரசரகலாம். இப்படி அரிய பெரிய தகவல்கள் எல்லாம் திண்ணையில் கிடைக்கும். எக்ஸைலிலும் கிடைக்கும்.

நான் இருபத்தைந்து வருடமாக நூறு பேருக்குத் தான் எழுதிக் கொண்டிருந்தேன். தமிழ் சமூகமே என்னைத் துரத்துகிறது. (கணக்கு உதைக்குதே - கோவிந்தன்) தமிழ்நாட்டில் எழுத்தாளனுக்கு மரியாதை இல்லை என்று உதயா புலம்பிக் கொண்டே இருக்கிறார். அய்யா, பேரன்பும் கருணையுள்ளமும் உள்ளவரே. எழுதியதையே எழுதினால் எப்படி ஐயா படிப்பார்கள்? எத்தனை முறை தான் படிப்பது? எழுதி முடித்ததும் எழுதியவன் இறந்து விடுகிறான்.பின் நவீனத்துவம். சில எழுத்துகளை படிக்கும் போதே வாசிப்பவனும் செத்தொழிகிறான். வேலாயுதம் படத்தை நூறு முறை பார்த்தவர்கள் கை தூக்குங்கள்.

படம் என்றதும் ஞாபகம் வருகிறது. மொகாபத்தேன் என்று ஒரு படம். எத்தனை பேர் பார்த்திருக்கிறீர்கள்?. ஷாருக்கான், அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய். பெரிய நட்சத்திர பட்டாளம்.  படம் செம மொக்கை. என் வாழ்க்கையில் அப்படி ஒரு அறுவை படத்தை பார்த்ததில்லை. மூன்று மணி நேர படத்தில் நான் நூற்று அறுபது நிமிடம் தியேட்டருக்கு வெளியே பாரில் தான் உட்கார்ந்திருந்தேன். ஆனால் ஒரு நன்மை. அதற்கு பின் நான் எந்த ஹிந்தி படமும் பார்க்கவில்லை. பார்க்க வேண்டும் என்று நினைத்தாலே பீதியாக இருக்கிறது. காசும் மிச்சம். நேரமும் மிச்சம்.

எக்ஸைல் படிக்கும் போது அடிக்கடி தோன்றியது மொகாபத்தேன் தான். எதற்காக வேலை விட்டு நேரம் விட்டு படித்துக் கொண்டிருக்கிறேன் என்று என் மீதே கடும் வெறுப்பாக இருக்கிறது. இந்த நேரத்திற்கு உருப்படியாக ஏதாவது செய்யலாம். எதுவும் உருப்படியாக இல்லாவிட்டால் மெகா ஸீரியலாவது பார்க்கலாம்.
(அது தான் தெரியுதுல்ல வெண்ண. தேகம் படிச்சிட்டே இப்படித் தான் பேயடிச்சவன் மாதிரி பொலம்பிக்கிட்டு இருந்த. பின்ன புடுங்கறதுக்கா இந்த புக்கை வாங்கிப் படிக்கிற. பிக்காலி ஃபெல்லோ - கோவிந்தன்)

கோவிந்தா, நீ சொல்வது சரி. நான் இந்த புத்தகத்தை படித்திருக்கவே வேண்டியதில்லை. ஆனால் உதயாவின் ரசிகர் மன்றமும் தற்கொலைப்படையும் இந்த நூற்றாண்டின் மாபெரும் இலக்கியம் என்ற ரீதியில் இதை கூவிக் கொண்டிருக்கிறார்கள். ( இவர்களெல்லாம் மெகா ஸீரியலோ தமிழ்ப்படமோ பார்க்காதவர்கள் போலிருக்கிறது. கொடுத்து வைத்த புண்ணியவான்கள் - கோவிந்தன்). ப்ளாக், ட்விட்டர், பஸ், ப்ளஸ் போன்ற இடங்களில் உலவிக் கொண்டிருப்பதன் வினை இது. ஒன்று இதையெல்லாம் விட்டு விலக வேண்டும். அப்பொழுது இந்த கூச்சல் எனக்கு தெரியாது போய்விடும். அல்லது எனக்கு தமிழ் எழுதப்படிக்க மறந்து போக வேண்டும். தமிழை மறப்பது கஷ்டம் தான். ஆனால் எக்ஸைல் போன்ற மாபெரும் இலக்கியங்களை படிக்காமல் இருக்க அது தான் வழி என்றால் அதற்குமே நான் சித்தமாக இருக்கிறேன்.

எக்ஸைல் - வாசிப்பவர்கள் போக வேண்டியது.