Wednesday 10 February 2010

மரங்கொத்தி...! - 4மரங்கொத்தி...! - 4

முந்திய பாகங்கள்: பாகம் 1, பாகம் 2, பாகம் 3

ரயில் விழுப்புரத்தை நெருங்கிக் கொண்டிருக்க நான் ஏஸி கம்ப்பார்ட்மெண்டில் சூடு தாங்காமல் என் கைகளை இறுக்கிக் கட்டிக் கொண்டேன்...

இத்தனை நாளாக நான் அடைகாத்த நெருப்பு....ஐந்து வருடங்களாக என்னை விறகாக்கி எரித்த எல்லா நெருப்பும்...என்னால் மனம் உடைந்து செத்துப் போன என் அய்யனை எரித்த நெருப்பு....காதல், காமம், வெறுப்பு, அன்பு, விஷம், இதழ்கள், மது,முத்தம்,துக்கம்...அண்டத்தின் அத்தனை அக்னியும் உள்ளே பீறிட....எனக்கு சங்கீதா மேல் பாய்ந்து அவள் முகம் தாங்கி முத்தமிட வேண்டும் என்று தோன்றியது...ஏண்டி விட்டுட்டு போன...அவள் கன்னத்தில் விரல் பதிய‌ அறைய வேண்டும் என்று தோன்றியது....சொல்...பதில் சொல்...நான் குடித்த விஷத்திற்கு பதில் சொல்...எரிந்து போன என் அப்பனுக்கு பதில் சொல்....எரிந்து கொண்டிருக்கும் எனக்கு பதில் சொல்...தோள் பிடித்து உலுக்க கைகள் பரபரத்தன‌....

முழங்கால் உரசும் தூரத்தில் சங்கீதா...இல்லை..மதிவாணனின் மனைவி உட்கார்ந்திருக்க...எதுவும் செய்ய முடியாமல்...

என்னால் முடியாது...எதுவும் முடியாது...தொடும் தொலைவில் இருந்தாலும் எட்டாது இருக்கிறாள்....நான் காதலும் வெறுப்பும் தாங்காது கைகளால் முகம் பொத்திக் கொண்டேன்...........

=================

மதிவாணனுக்கு ஏதோ புரிந்திருக்க வேண்டும்...

"என்ன செந்தில்...உங்க மொகமே சரியில்லை...பேயடிச்ச மாதிரி இருக்கீங்க....என்னாச்சு...."

என்ன சொல்வதடா...என்ன சொல்ல சொல்கிறாய்...தேடிக் கொண்டிருந்த என் மரண தேவதையை பார்த்தேன் என்றா...இல்லை உன் மனைவி...உன் அழகு மகளின் அம்மா என் முன்னாள் காதலி...இல்லை...இன்றும் நான் காதலிக்கும் காதலி என்றா...என்ன சொல்ல உன்னிடம்...

இதற்கு மேல் என்னால் முடியாது...இங்கிருக்க முடியாது...நான் போக வேண்டும்...

"அது...ஒண்ணும் இல்ல மதி....திடீர்னு கொஞ்சம் ஃபீவரிஷ்ஷா இருக்கு...நான் விழுப்புரத்துல எறங்கிக்கிறேன்...அங்க ஃப்ரன்ட் வீடு இருக்கு..."

என் வார்த்தைகள் தடுமாறியது...

இத்தனை நேரமும் வெளியில் இருட்டை வெறித்துக் கொண்டிருந்த சங்கீதா என் பக்கமாக திரும்பினாள்...

ஏதேனும் சொல் சங்கீதா....கடைசியாக ஒரு முறை....என் பெயரையாவது சொல்...ப்ளீஸ்....

வெளியில் இருந்த‌ இருட்டும் கம்பார்ட்மெண்ட்டின் மங்கலான மஞ்சள் வெளிச்சமும் அவள் முகத்தில் படர்ந்திருக்க‌ அவளின் இமைகள் ஆழ்ந்த துக்கத்துடன் ஒரு முறை மூடித் திறந்தன...சத்தம் வெளி வராது உதடுகள்....நான் முதலும் கடைசியுமாக முத்தமிட்ட அவளின் உதடுகள் மட்டும் அசைத்து "ஸாரி ரியல்லி ஸாரி"

மதிவாணன் முன்விழுந்த மயிர்கற்றையை இடது கையால் ஒதுக்கி விட்டு எழுந்து கொண்டு கைநீட்டினான்...

"உங்க கம்பெனிக்கு ரொம்ப தேங்க்ஸ் செந்தில்...இன்னும் ரெண்டு நிமிஷத்துல விழுப்புரம் வந்துரும்...ஒடம்பை பார்த்துக்கங்க...ஒரே நைட்ல ரொம்ப க்ளோஸாயிட்டோம் இல்ல....நான் வைசாக் போய்ட்டு ஃபோன் பண்றேன்....கல்யாணத்துக்கு கண்டிப்பா வந்துருவேன்...எக்ஸ்ட்ராவா சமைக்க சொல்லுங்க..."

அவன் கண்ணடித்து சிரித்தான்....
===============================

விழுப்புரத்தில் நான் என் ஃப்ரீப்கேஸூடன் இறங்கி ஓரமாக நின்று ரயில் கிளம்பும் வரை ஜன்னலில் தெரிந்த சங்கீதாவையே பார்த்துக் கொண்டிருந்தேன்...நான் பார்ப்பேன் என்று அவளுக்குத் தெரியும் என்று எனக்கும் தெரியும்...ரயில் நகரும் வரை அவள் முகம் ப்ளாட்பாரத்தின் இருட்டில் நிற்கும் என்னையே வெறித்துக் கொண்டிருந்தது...

நான் அவளைப் பார்ப்பது இதுவே கடைசி முறையாக இருக்கலாம்...இனி ஒருவேளை அடுத்தப் பிறவியில்....

ரயில் நகர நகர அடிவயிற்றில் ஒரு துக்கம் சுழன்று என் கழுத்து உக்கிரமாக சுட ஆரம்பித்தது...பிறந்த நாளில் நான் குடித்த தாய்ப்பாலிலிருந்து திருச்சியில் குடித்த காப்பி வரை ஒன்றாக வாயில் வர கடும் ஜூரத்தில் கால்கள் மெதுவாக நடுங்க ஆரம்பிக்க நான் விழுப்புரம் ஜங்ஷனின் மூன்றாவது ப்ளாட்ஃபாரத்தில் வாந்தியெடுத்து அதன் பக்கத்திலேயே தொப்பென்று உட்கார்ந்தேன்.....

=======================

ஒரு வழியாக நான் சமாளித்து எழுந்த போது ப்ளாட்ஃபாரம் யாருமில்லாமல் இருள் அப்பியிருந்தது...மணி இரண்டு இருக்கலாம்...எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை...

விழுப்புரம் எனக்கு ஒன்றும் புதிதில்லை தான்....அவ்வப்பொழுது வந்து போயிருக்கிறேன்....
நான் ஸ்டேஷனை விட்டு வெளியே வந்து இரவுமில்லாது பகலும் இல்லாத அந்த இருட்டில் தள்ளாடி நடந்து....டாஸ்மாக் பூட்டியவுடன் கள்ளமார்க்கெட்டில் தண்ணி விற்கும் இடத்தில் அரை பாட்டில் மெக்டொவல் வாங்கிக் கொண்டு வழக்கமாக தங்கும் ஹோட்டலுக்கு போன போது மானேஜர் வித்தியாசமாக பார்த்தார்...

"செந்தில் ஸாரா...என்ன ஸார்...இந்த நேரத்தில..."

ஆயிரம் அர்த்தம் வாய்ந்த கேள்வி...தமிழ்நாட்டில் எல்லா ஹோட்டல் மேனேஜர்களும் எவன் எப்பொழுது எந்த ரூமில் தற்கொலை செய்து கொள்வானோ என்ற நிரந்தர‌ பயத்துடனே இருக்கிறார்கள்...ஹோட்டலின் பெயர் நிரந்தரமாக அடிபட்டு போவது மட்டுமல்ல...அவர்களின் வேலை போய்விடும்....ஆனால் அதற்கு காரணமானவர்களோ டெல்லி, பெங்களூர், ஹைதராபாத் சில சமயம் விசாகப்பட்டினம் என்று போய் விடுகிறார்கள்....

என் கலைந்த தலையும் தள்ளாட்டமான நடையும் சிவந்த வெறித்த கண்களும் சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்க வேண்டும்....

"ஒண்ணுமில்ல...ட்ரைன்ல மெட்ராஸ் போயிட்டுருந்தேன்...ஃபீவரிஷா இருந்துச்சி...அதான் வழியில எறங்கிட்டேன்...ரூம் காலியா இருக்கா...."

நம்பாதவன் போல‌ என் கழுத்தில் கைவைத்து பார்த்தார்...

"அடடா...நெருப்பா கொதிக்குது ஸார்...ரூம் இருக்கு...நீங்க ஒரு க்ரோசினை போட்டுக்கிட்டு படுங்க...காலையில மொத வேலையா டாக்டரை வரச் சொல்றேன்..."

===================================

நான் மேனேஜரிடம் சாவி வாங்கி என் அறைக்குப் போய்....இருண்டிருந்த அறையில் இரவு விளக்கை போட்டு விட்டு மெல்லிய வெளிச்சத்தில் தரையில் உட்கார்ந்தேன்...இனி என்னால் தூங்க முடியாது....குடிக்கலாம்...விடியும் வரை குடிக்கலாம்...இல்லை....என் சிறுநீரகமும் கல்லீரலும் அழுகி நான் சாகும் வரை குடிக்கலாம்...

உள்ளிருந்த வெப்பமும் அறையின் குளிரும் சேர்ந்து தாக்க நான் அறையிலிருந்த மெத்தையை உடல் முழுதும் சுற்றிக் கொண்டு....தரையில் உட்கார்ந்து குடிக்க ஆரம்பித்தேன்.....வீடிருக்க நாடிருக்க ஊரிருக்க உறவிருக்க..ஏன் என் வாழ்க்கை இப்படி ஆனது....சங்கீதா....தொலைந்து போன என் உன்னத சங்கீதம்...இனி எங்கு பார்ப்பேன் உன்னை....கசப்பான மது உள்ளே இறங்க....ஜூர வேகம் ஏற....எனக்கு அழுகை வந்தது...அறையிலிருந்த துண்டை வாயில் திணித்து நான் சத்தம் வராமல் பெரும் ஓலத்துடன் அழும்போது சட்டென்று தோன்றியது....

நான் ஏன் சாகக் கூடாது?..........

இந்த நேரத்துக்கு தூக்க மாத்திரையோ எலி விஷமோ கிடைக்காது....கை நரம்பை அறுத்துக் கொண்டால்....சூட்கேஸில் பிளேடு இருக்கிறது....

தீவிரமாக யோசிக்கும் போதே திடீரென்று ஒரு குரல் ஊடறுத்தது...

"பிள்ள பாத்து போயிட்டு வரணும்...இங்க அம்ம கெடக்கா...ஒன்னிய விட்ட அவளுக்கும் நாதியில்ல...பாத்துக்கிடு.."

யார்...யார் சொன்னது...கிளியன்...கிளியன் அண்ணாச்சி....

================================

இரவும் பகலும் கலந்த அந்த இருள் பிரியாத முன்காலையில் நான் அழைத்த போது கிளியன் அண்ணாச்சி நன்றாக தூங்கிக் கொண்டிருந்திருக்க வேண்டும்...ஃபோனை எடுக்க சில நிமிடங்கள் ஆனது....

"ஏ....கிளியன் பேசுதேன்...ஆரு....."

தூக்கத்தில் அண்ணாச்சி....

"மாமா...நான் செந்தில் பேசுதேன்...விழுப்புரத்திலருந்து...."

"ஆ...பிள்ள இன்னியும் மெட்ராஸு சேரலையாக்கும்...சொகமாட்டு உண்டா...பஸ்க்காரனுவ நிறுத்திட்டானுவளோ...."

"சொகமுண்டு....அதில்லா...எனக்கு ஒரு சோலியாகணும்...."

"ஆ..அதா....ஒன்னம்ம தூங்கியாச்செ....எழுப்பட்டோ...."

"அம்மையிட்டில்லா...சோலி ஒங்களுத் தான்...."

"பிள்ளக்கில்லா சோலியுண்டா....வெளுத்ததும் முடிக்கேன்...என்ன சோலியாக்கும்..."

நான் ஒரு நிமிடம் தயங்கி மூச்சை ஆழமாக இழுத்துக் கொண்டேன்...

"எனிக்கு ஒரு மீனு பிடிக்கணும்...."

மீனு பிடிக்கணும் என்ற வாக்கியம் அண்ணாச்சியின் தூக்கத்தை முற்றிலுமாக கலைத்திருக்க வேண்டும்...குரல் ரகசியமாக மாறியிருந்தது...

"பிள்ள என்ன சொல்லுது....சாள‌ மீனு குட்டையிலயுண்டு...வாள மீனு கடலுக்கில்லா போவணும்...."

சாள‌ மீன் ரிஸ்க்க்கும் குறைவு...செலவும் குறைவு...வாள மீன்...ரிஸ்க் அதிகம்...செலவும் அதிகம்...

யாருமற்ற அந்த அறையின் மெல்லிய இருட்டில் என் வெளிப்புற பூச்சுக்கள் முற்றிலும் உதிர்ந்து என் மூக்கு மேலுதடு தாண்டி கீழுதடுடன் இணைந்து கூரிய அலகாக மாறியிருந்தது.....என் வாயின் இருபுறமும் அழகான சிங்கப் பற்கள் மேலும் நீண்டு உருமாறி கோரைப் பற்களாக மாறியிருக்க குடி போதையிலும் ஜூர வேகத்திலும் ஆடிக் கொண்டிருந்த என் கைகள் சுருங்கி கைகள் முழுதும் தசை கிழித்து எலும்புகள் புடைத்து முதுகின் இருபுறமும் இரு சிறகுகள் முளைக்க தரையின் சில்லிப்பில் ஏற்கனவே குறுகியிருந்த‌ என் பாதங்கள் மேலும் சுருங்கி விரல்கள் நீண்டு நகங்கள் வளைந்து பறவையின் கால்களாக நான் போர்த்தியிருந்த வெள்ளை நிற மெத்தை கிழிந்து உடல் முழுதும் என்னைப் படர....ஆறடி உயர பிரம்மாண்டமான மரங்கொத்தியாகி....நான் கையிலிருந்த விசிட்டிங் கார்டைப் பார்த்துக் கொண்டே சொல்ல ஆரம்பித்தேன்....

"மீனு வாள மீனாக்கும்....பேரு மதிவாணன்.க்கே. ரெட்டி...ஊரு விசாகப்பட்டினம்....சோலிய முடிச்சிடலாமில்லா..."

=============முற்றும் ============

Tuesday 9 February 2010

மரங்கொத்தி...! ‍-3மரங்கொத்தி...! ‍-3


முந்திய பாகங்கள்: பாகம் 1, பாகம் 2

ரயில் திருச்சி ஜங்ஷனில் நுழைந்து ப்ளாட்ஃபாரத்தில் நின்றதும் நான் கதவுகளை திறந்து கொண்டு வெளியே பாய்ந்தேன்...

"இங்க அஞ்சு நிமிஷம் நிக்கும் மதி...நான் போய் காஃபி வாங்கிட்டு வந்துர்றேன்...ஒங்களுக்கு எதும் வேணுமா..."

"எனக்கும் மூணு காஃபி வாங்கிடு செந்தில்..."

பின்னாடி கத்திய அவனுக்கு பதில் சொல்லாது அதற்குள் உள்ளே ஏறத்துவங்கியிருந்த ஜனக் கூட்டத்தை பிளந்து வெளியே குதித்ததும் தழுவிய திருச்சியின் டிசம்பர் மாத ஊதல் காற்றை அலட்சியப்படுத்தி ப்ளாட்ஃபார்மின் மறு கோடியில் இருந்த காஃபி ஷாப்பை நோக்கி மெல்லிய இருட்டில் ஓடத் துவங்கினேன்....

================================

நான் காஃபி வாங்கிக் கொண்டு கோச்சில் ஏறவும் ரயில் கிளம்பவும் சரியாக இருந்தது...ஓடி வந்ததில் எனக்கு லேசாக மூச்சு வாங்கியது...தம்மடிக்கிறதை விட்ரணும் நினைத்துக் கொண்டே "காஃபி மதி...ஜூடு ஆர்றதுக்குள்ள குடிச்சிடுங்க..." தேங்க்ஸ் செந்தில் என்று சொன்ன அவனைத் தாண்டி...

அவன் பக்கத்தில் ஜன்னலோர சீட்டில் அந்த பெண் உக்கார்ந்திருந்தாள்...மடியில் குட்டியாய் ஜீன்ஸூம் டீஷர்ட்டும் போட்டு பாப் கட்டிங் வெட்டி ஒரு குட்டி குழந்தை....குழந்தை துறுதுறுவென்று விரல்களை கண்ணாடி ஜன்னலை தாண்டி நீட்ட அவள் குழந்தையை இறுக்கி அணைத்து வெளியே வேடிக்கை காட்டிக் கொண்டிருந்ததில் அவள் முகம் எனக்கு தெரியவில்லை....

நான் மதிவாணனைத் தாண்டி எதிரெதிரான சீட்டுகளுக்கான குறுகிய இடைவெளியில் காலை நுழைத்து எனது சீட்டில் பாதி உட்காரும் போது....

"செந்தில்...இது என்னோட வொய்ஃபும் பொண்ணும்....சங்கீதா...இது செந்தில்...மதுரைலருந்து நல்லா கம்பெனி குடுத்திட்டிருக்கார்...."

இது வரை வெளியே குழந்தைக்கு வேடிக்கைக் காட்டிக் கொண்டிருந்த அந்த பெண்....சங்கீதா.....அவன் மனைவி...என் பக்கம் திரும்பி...நான் முதலும் கடைசியுமாக முத்தமிட்ட உதடுகளை திறந்து...."ஹலோ" என்றாள்.....

==============================

சங்கீதா...எஞ்சினியரிங் காலேஜில் பார்த்த நாள் முதல் நான் பாடிக் கொண்டிருந்து இடையில் தொலைந்து போய் ஐந்து வருடங்களாக நான் தேடிக் கொண்டிருக்கும் என் உன்னத சங்கீதம்....சந்தில் என்றும் செங்கீதா என்றும் விதவிதமாக கோர்த்து பாடப்பட்ட சங்கீதம்....பிரிவது இணைவதற்கு...இணைவதே பிரிவதற்கு...காதல் என்பது அரூபமான‌ உணர்வு என்றால் அதன் உருவமான சங்கீதா....ஐ லவ் யூடா....சும்மா சும்மா சொல்லிட்டிருக்க முடியாது...கல்லூரியின் கடைசி நாளன்று விழா மேடையின் பின்புறம் நான் எதிர்பாராத நேரம் முத்தமிட்டு...நான் வாழ்க்கையில் முத்தமிட்ட ஒரே உதடுகள்...அதன் பின் ஐந்து வருடமாய் காணாமல் போய்.....

கோபாக்னி முதல் காமாக்னி வரை அக்னி தேவனின் அத்தனை வடிவங்களும் என் அடிவயிற்றில் ஒரே கணத்தில் நிகழ‌ உட்கார முயன்று கொண்டிருந்த நான் சடாரென நிமிர்ந்ததில் அவளது முகத்தில் முட்டிக் கொண்டேன்...

முகம் உயர்த்தினால் உதடு உரசி முத்தமிடும் தொலைவில் என்னைப் பார்த்ததில் அவளுக்கும் அதிர்ச்சியாக இருக்க வேண்டும்...கண்களில் கருவிழி நகர்ச்சி நின்று போய் ஹலோ உதிர்த்த உதடுகள் உறைந்து போயிருந்தன....இன் அவர் ஃபர்ஸ்ட் நைட் வேர் வில் யூ கிஸ் மீ ஃபர்ஸ்ட்...லெட் மீ கெஸ்...லிப்ஸ்...நோ சங்கி....ஐஸ்....யூ காட் ப்யூட்டிஃபுல் ஐஸ்...

திருச்சி ஜங்ஷனை விட்டு வெளியே வந்து இருட்டை கிழித்துக் கொண்டு ஸ்ரீரங்கத்தை நெருங்கி கொண்டிருந்த ரயிலில்...டேய் ஒரு நாள் ஸ்ரீரங்கம் போகணும்டா...அப்படியே காவிரியை பக்கத்தில உக்காந்து பார்க்கணும்...போலாமே...நீ காவிரியைப் பாரு...நான் உன்னைப் பார்த்துக்கிட்டிருக்கேன்...ச்சீ...போடா...ஒனக்கு எப்பவும் அதே நினைப்புத் தானா... உரசிக் கொண்ட முகங்களுக்கிடையில் காலம் உறைந்து போயிருக்க மதிவாணனின் கை திடீரென்று இடையில் நீண்டது...

"என்ன சங்கீ....பார்த்து திரும்பக் கூடாது...நீ இடிச்சிக்கிட்டு அவரையும் இடிச்சிட்ட பாரு....ஸாரி செந்தில்...திடீர்னு திரும்பிட்டா போல....வலிக்குதா சங்கீ..."

அவன் கைகள் நீண்டு அவளது நெற்றி தடவியது...சங்கீ...எனக்கு காத்தா இருக்கணும்னு ஆசை....நீ காத்து இல்ல, காத்துல பறக்குற மாதிரி இருக்குற...எதுக்குடா...எப்பவும் உன்னை கட்டிப் பிடிச்சிக்கிட்டே இருக்கலாமில்ல...நல்ல ஆசை தான்...போடா....

மாசா மாசம் ஆறாயிரம் கிலோ வெள்ளாட்டுக் கறி...பத்து டன் தக்காளி..ஆறு டன் பச்சை மிளகாய்...எட்டடிக்கு தலையில கங்கையோட காலை தூக்கி ஆடும் சிவன்...பக்கத்துல ஆறடிக்கு அம்மை...பனை மரம்...மரங்கொத்தி...கல்யாணம்...பொண்ணு கோயம்புத்தூரு....கிளியன் அண்ணாச்சி...இருபது இட்லி...கால்ல கல்ல கட்னதும் தாயளி சிக்குன பெருச்சாளி மாதிரில்லா கத்தறான்...

நான் சட்டென்று நிகழ்காலத்திற்கு நகர்ந்தேன்...
=======================
"ஓ..ஸாரி மதி....இல்ல, தப்பு எம் மேல தான்...சீட்ல என்னவோ குத்தற மாதிரி இருந்தது...அதான் திடீர்னு எழுந்திருச்சேன்...இடிச்சிடுச்சி...."நான் அவரசரமாய் நெற்றியை பிடித்துக் கொண்டேன்...

"சரி சரி...நல்லா தேய்ச்சு விட்டுக்கங்க...வீங்கிட போகுது...கல்யாண மாப்பிள்ளை வேற...மூஞ்சு வீங்கினா நல்லாருக்காது..."

சிரித்துக் கொண்டே மதிவாணன் மகளின் கன்னத்தை கிள்ளி திருப்பினான்....

"குட்டி...மாமாவுக்கு ஹாய் சொல்லு....நாலு வயசு தான் ஆகுது செந்தில்...ஆனா செம அடம்...எல்லாம் அவங்க அம்மா ஜீன்ஸ்...அப்படியே வந்திருக்கு...."

"ஆய் அங்கிள்...நல்லா இடிச்சீங்களா...நாளிக்கு உங்க மூஞ்சி பெரிசாயிடுமா அங்கிள்...."

குழந்தை கை நீட்டி என் முகம் தடவியது....குட்டி குட்டியாய் விரல்கள்...குவிந்த உதடு...பெரிய கண்கள்...யூ காட் ப்யூட்டிஃபுல் ஐஸ் சங்கீதா...அம்மா மாதிரியெ...அதே ஜீன்ஸ்...

நான் குழந்தையை தாண்டி கம்பார்ட்மெண்ட்டின் மெல்லிய வெளிச்சத்தில் சங்கீதாவை பார்த்தேன்....ஐந்து வருடத்தில் கொஞ்சமாக எடை கூடியிருக்கிறது....முகம் இன்னமும் பளபளப்பாக....கண்கள் இன்னும் அழகாக...நான் முத்தமிட்ட உதடுகள்...இன்னும் சிவப்பாக...கழுத்தில் தாலி...தாலியில் கருகணியோ இல்லை வேறு ஏதேனும் தெலுங்கு சம்பிரதாயமோ இருக்கலாம்...ரெட்டி தாலிகளை நான் பார்த்ததில்லை....

அவள் ஜன்னலுக்கு வெளிப்பக்கம் இருட்டை வெறித்துக் கொண்டிருந்தாலும் ஓரப்பார்வை என்னை துளைத்துக் கொண்டிருந்தது...

"என் வைஃப்ஃபுக்கு ஒடம்பு சரியில்லை...அதனால திருச்சியில ரிலேட்டிவ்ஸ் வீட்ல இருக்கா....மதுரை வரல்லை...."

மதிவாணன் சொன்னது நினைவில் ஓடியது....ஆக....உனக்குத் தெரியும் சங்கீதா...நான் மதுரையில் இருப்பது உனக்குத் தெரியும்....ஐந்து வருடங்களாக நான் அங்கே தான் இருக்கிறேன்...கேம்பஸ் இன்டர்வியூவில் கிடைத்த அமெரிக்க வேலையை மறுத்து....அதே அட்ரஸில்...என்றாவது ஒரு நாள் நீ வருவாய் என்று தான்....உனக்கு எல்லாம்...எல்லாமே தெரிந்திருக்கிறது...ஆனால் ஐந்து வருடம்....உன் சீர்காழி அட்ரஸிற்கு எத்தனை கடிதம்....எத்தனை ஈமெயில்....எதற்குமே பதிலில்லை....மதுரை, சென்னை, தஞ்சாவூர்...ஏன் கேரளா....பெங்களூர்...ஹைதராபாத்தில் கூட தேடினேன்....நீ விசாகப்பட்டினம் போவாய் என்று தெரியாது போயிற்று....

ஆனால் உனக்கு எல்லாமே தெரிந்திருக்கிறது...நான் உன்னைத் தேடுவதும் தெரிந்திருக்கிறது...தவிர்த்திருக்கிறாய்...கவனமாக...மிக கவனமாக...நான் மதுரையில் இருப்பேன் என்று மதுரை வருவதைக் கூட....நான் என்ன பாவம் செய்தேன் சங்கீதா...நீ என்னை காதலித்த நாட்களில் கூட நீதான் என்னை முதலில் தீண்டினாய்.....செமஸ்டர் எக்ஸாம் ரிசல்ட் வந்து...எலக்ட்ரிகல் லாப்பில் பெயிலாகி நான் துக்கமாய் இருந்த ஒரு மாலை வேளையில்....நீ தான் தலை கலைத்தாய்....நீ தான் முகம் தடவி விரல் பிணைத்தாய்...ஞாபகம் இருக்கிறதா சங்கீதா...

அத்தனை தவிர்த்தும்....காலுடன் கால் உரசும் தூரத்தில் இன்று நான்....எனக்கு ஒரே நேரத்தில் துக்கமும் குரூரமான சிரிப்பும் வந்தது....

திடீரென்று நான் மெலிதாய் சிரிப்பதை சங்கீதா மட்டுமல்ல, மதிவாணனும் கவனித்து இருக்க வேண்டும்....
==================================

"என்ன செந்தில்...திடீர்னு சிரிக்கறீங்க...சொன்னா நாங்களும் சிரிப்போம்ல..."

"ஒண்ணும் இல்ல மதி....நாம என்ன தான் தவிர்க்க நினைச்சாலும்...சில பேரை..ச்சே..ஐ மீன் சில விஷயத்தை தவிர்க்க முடியலை பார்த்தீங்களா..."

மதிவாணன் சிரித்தான்...

"ஒண்ணும் புரியலை...என்ன தத்துவம் தண்ணியா வருது...." தண்ணியில் அழுத்தம் இருந்தது...

"அதெல்லாம் ஒண்ணுமில்ல...நாம யாரும் இடிச்சிக்கணும்னு நினைக்கிறதில்லை...ஆனா கண்டிப்பா இடிச்சிக்கிறோம்ல...அதை சொன்னேன்..."

மதிவாணனுக்கு புரிந்ததோ இல்லையோ சங்கீதாவுக்கு புரிந்திருக்க வேண்டும்....நான் மதிவாணனைப் பார்த்து பேசிக் கொண்டிருந்தாலும் என் கண்கள் அவளையே கவனித்துக் கொண்டிருந்தது....

"ப்ளீஸ்....ஐயம் ரியல்லி ஸாரி....ஆனா அவருக்கு எதுவும் தெரியாது....சொல்லிடாத...ப்ளீஸ்..."

"நீ சந்தோஷமாய் இருக்கிறாய் சங்கீதா....நான் எரிந்து கொண்டிருக்கிறேன்... உயிருடன் தினம் தினம்....அதிகாலையில் எழும் போது செத்து போய் நாள் முழுதும் எரிந்து...நள்ளிரவில் மீண்டும் விழித்து..மீண்டும் செத்து...சாவதற்கே நான் தினம் விழிக்கிறேன்.....ஏன் வந்தாய்...ஏன் போனாய்....போய் வருகிறேன் என்று ஒரு வார்த்தை கூட சொல்லாமல்...நீ பிள்ளை பெற்று நான்கு வருடம் ஆகிறதாமே...நான் உன்னை சுமந்த நாட்களில் நீ பிள்ளை சுமந்திருக்கிறாய்...நான் நண்பர்களை தவிர்த்த ஒரு இரவில் உலகமில்லா தனிமையில் விஸ்கியுடன் சேர்த்து எலி விஷம் குடித்து உயிருக்கு போராடிய‌ அதே நாட்களில் நீயும் ஹாஸ்பிடலில் பிள்ளை பெற்றிருக்கலாம்......உன் நினைவில் நான் தாடி வளர்த்து மதுரையின் அழுக்கான தெருக்களில் போதையுடன் உறங்கிய நாட்களில் நீ புருஷன் பிள்ளையென்று காதல் வளர்த்திருக்கிறாய்....."

கண்களின் மொழி....சொல்லாத வார்த்தைகள்....அவளது கண்கள் கெஞ்சிக் கொண்டிருந்தன....நான் பார்ப்பது அவளுக்கும் தெரிந்தே இருக்கிறது....

காதல் தேவனும் காம தேவனும் எனக்குள் உக்கிரமாய் போர் நடத்த....

எனது மூக்கு நீண்டு மேல் உதடு தாண்டி கீழ் உதடுடன் இணைந்து கூரிய அலகாக மாறிக் கொண்டிருந்தது...காஃபிக் கோப்பையை பிடித்திருந்த எனது கைகள் கண்ணுக்கு தெரியாத வண்ணம் குறுகி விரல்கள் மறைந்து கை முழுக்க எலும்பு புடைத்து முதுகின் இரு புறமும் சிறகுகள் முளைக்க ஆரம்பித்தன...எவரும் கவனிக்காத வண்ணம் ஷூவுக்குள் இருந்த கால்களில் பாதம் சுருங்கி விரல்கள் நீண்டு வளைந்து நகம் வளர்ந்து...நான் போட்டிருந்த மஞ்சள் நிற டீஷர்ட் இணைக்கும் இழைகளை உதிர்த்து வெறும் பஞ்சாகி மயிர் போல உடல் மூட....என்னுள் ஆதாம் காலத்து அக்னியுடன் பிரம்மாண்டமான மரங்கொத்தி உருமாறிக் கொண்டிருக்க....

இருளை கிழித்துக் கொண்டு இலக்கு நோக்கி பறக்கும் அம்பு போல ரயில் விழுப்புரத்தை நெருங்கிக் கொண்டிருந்தது.....

========= கொத்தும்!==============


(Sorry for another long post, but its just my inability to keep it short....Will hope to finish it in the next episode)

Monday 8 February 2010

மரங்கொத்தி...! - 2


மரங்கொத்தி...! - 2

முந்திய பாகங்கள்: பாகம் 1
வழக்கமாக நான் குவாட்டருக்கு மேல் குடிப்பதில்லை...ஆனால்....வழக்கமாக நான் சென்னைக்கு ட்ரைனிலும் போவதில்லை...இன்றைக்கு அதிகமாகவே கிட்டத்தட்ட ஒரு ஹாஃப் என்று சொல்லும் அளவுக்கு குடித்திருந்தேன்....போதை பிடிக்கும் என்பதை விட, எனக்கு ரயில் பயணங்கள் பிடிப்பதில்லை...நான் தூங்க வேண்டும்...

"ஃபைவ் ஏ அன்ட்....ஃபைவ் பீ...இந்த சீட் தான்...."

அவனுக்கு முப்பத்தி ஐந்து வயதிருக்கலாம்...நெடுநெடுவென்று நல்ல உயரம்...அதற்கேற்ற சரியான உடல்வாகு...கோதுமை நிறம் என்று சொல்லும் கறுப்புக்கும் சுண்ணாம்பு வெண்மைக்கும் இடைப்பட்ட நிறம்...குனியும் போது முன் வந்து விழுந்த முடியை ஸ்டைலாக ஒதுக்கிக் கொண்டான்...மீசை இல்லா முகத்தில் லேசான தாடி...அதிக சதையின்றி டைட்டான கன்னங்கள்...கூர்மையாய் மூக்கு....உதடுகள் மட்டும் கொஞ்சம் கறுப்பாக...சிகரெட்டாயிருக்கலாம்...கைகளில் நான் ரொம்ப காஸ்ட்லியாக்கும் என்று சொல்லும் வாட்ச்....

ஏன் எதற்கு என்ற விளக்கம் அபத்தம் என்றாலும்...எதிரில் வந்து உட்கார்ந்த அவனை எனக்கு பார்த்த நிமிடம் பிடித்துப் போனது...

"ஸாரிங்க...மொதல்ல தப்பான பெட்டியில ஏறிட்டேன்...அதான்...டபுள் செக் பண்ணிக்கிட்டேன்...எழுப்பிட்டேன் போல...தூங்கிட்டு இருந்தீங்களா...."

தியேட்டர்ல பாக்கறவனை "என்ன பாஸ், சினிமாவுக்கா" என்று கேட்பது...கல்யாணத்தில் பார்ப்பவனை "என்னங்க கல்யாணத்துக்கு வந்திருக்கீங்க போல" என்பது....தூங்கிக் கொண்டிருப்பவனை எழுப்பி "தூங்கிகிட்டு இருக்கீங்களா..."இவங்களுக்கெல்லாம் என்ன பதில் சொல்றது...எனக்கு சிரிப்பாக இருந்தது...

"இல்ல பாஸ்...பரவால்ல...நானும் இப்பத் தான் ஏறினேன்....."

"நல்லவேளை....நான் கூட தூங்கறவரை எழுப்பிட்டோம்னு நினைச்சிட்டேன்...நீங்க மதுரையா..."

"ஆமா...அண்ணா நகர்...நீங்க..."

"நான்...ம்ம்ம்...வைசாக்...விசாகப்பட்னம்...பொறந்தது திருச்சி பக்கம்...ஆனா அம்மா அப்பா ரொம்ப நாளாவே ஆந்திராவுல செட்டிலாயிட்டாங்க..."

பொதுவாக எனக்கு பேசப் பிடிப்பதில்லை...எங்கேனும் பயணம் செய்தால் எந்த இலக்குமில்லாது சிந்தனையை அலைய விட்டு வெளியே படர்ந்திருக்கும் இருட்டை வெறிப்பது பிடிக்கும்....எல்லாவற்றையும் மறைக்கும் இருள் தான் எத்தனை அழகு....

ஆனால் அவனைப் பார்த்தால் அப்பாவி போல இருந்தான்...கேட்காமலேயே அம்மா அப்பா பூர்வீகம் எல்லாம் வருகிறது...இன்னும் கேட்டால் இவன் கொள்ளுத் தாத்தாவின் சின்ன வீடு எங்கே இருந்தது என்று அட்ரஸ் சொன்னாலும் சொல்வான்...

எனக்கு கொஞ்சமாய் ஆர்வம் ஏற்பட்டது....

"அப்ப உங்களுக்கு தெலுங்கு தெரியும்னு சொல்லுங்க...பாக உன்னாரா??"

அவன் பெரிதாய் சிரித்தான்....

"ஹஹ்ஹாஹ்ஹா....உன்னாரு உன்னாரு....எனக்கு மதர் டங் தெலுங்கு தாங்க...ரெட்டியாரு.......ஆனா திருச்சி பக்கம் தான் பூர்வீகம்...உங்களுக்கும் தெலுங்கு தெரியும் போலருக்கே..."

"ச்சேச்சே....அப்படியெல்லாம் இல்ல பாஸ்...சும்மா ஒரு ரெண்டு மூணு தடவை ஆந்திரா போயிருக்கேன்....அதனால கொஞ்சம் வார்த்தை தெரியும்..."

"சும்மா ஆந்திரான்னா எப்படி...எங்க போனீங்க....புட்டபர்த்தி...திருப்பதி...இல்ல பெத்தபுரா...."
அவன் கண்ணடித்தான்...

பெத்தபுரா...அட...ஆளு நம்ம டைப் போலருக்கே...

"ச்சேச்சே...பெத்தபுரால்லாம் இல்ல பாஸ்...கடப்பா...ராஜமுந்திரி...அப்புறம் அனந்தப்பூர்....நான் க்ரானைட் தேடி போனேன்..."

"க்ரானைட்டா....எதுக்கு....நீங்க என்ன பிஸினஸ் பண்றீங்களா இல்ல சும்மா வீடு கட்டவா..."

"பிஸினஸ் தான்...ஒரு பார்ட்டி க்ரானைட் கேட்டது....சரி, குவாரிலயே வாங்குனா கொஞ்சம் மார்ஜின் நிக்குமேன்னு நான் ஆந்திரா பக்கம் போனேன்....எனக்கு எக்ஸ்போர்ட் பிஸினஸ்..."

அவன் முகம் பிரகாசமானது....

"எனக்கும் பிஸினஸ் தான்...ஃபேமிலி பிஸினஸ்....டயர் ஃபேக்டரி வச்சிருக்கோம்...வைசாக்ல மூணு ஃபேக்டரி இருக்கு....வைசாக் ரப்பர்ஸ்னு பேரு....இவ்ளோ நேரம் பேசிக்கிட்டு இருக்கோம்...பேரு சொல்லலை பாருங்க...எம் பேரு மதிவாணன்...மதிவாணன்.கே"

எனக்கு ஆச்சரியாக இருந்தது...மதிவாணன்...சுத்தமான தமிழ் பேராச்சே...ஆளு தெலுங்குன்னு சொன்னான்....

எனது கார்டை எடுத்து நீட்டினேன்...

"நான் செந்தில் வேல்...இந்தாங்க என்னோட கார்டு...நீங்க தெலுங்குன்னு சொன்னீங்க...ஆனா பேரு சுத்தமான தமிழ்பேரா இருக்கே...."

சிரித்தான்...எனக்கு ஏனோ மாதவன் ஞாபகம் வந்தது....

"அது ஒண்ணுமில்ல...எங்க தாத்தா அந்த காலத்துல தஞ்சாவூர் பக்கம் எம்.எல்.ஏவா இருந்தாரு...ஒங்களுக்குத் தான் தெரியுமே...நைன்டீன் சிக்ஸ்டீஸ்ல தமிழ்ல பேரு வச்சா அரசியலுக்கு யூஸ் ஆகும்னு....அதான்...சுத்தமான தமிழ்ப்பேரு..."

அரசியல் பேச ஆரம்‍பித்தால் பிரச்சினை என்று நினைத்தானோ என்னவோ...

"ஆமா...இப்ப எங்க போறீங்க...மெட்ராஸ்ல என்ன பிஸினஸ்காரியமா..."

"இல்ல பாஸ்...எனக்கு ரெண்டு வாரத்தில கல்யாணம்...அதான் ஃப்ரண்ட்ஸை பார்த்துட்டு இன்விடேஷன் வைக்க போறேன்..."

"அட....வெரிகுட்....ஹாப்பி மேரீட் லைஃப் செந்தில்...எனக்கெல்லாம் இன்விடேஷன் வைக்க மாட்டீங்களா..."

எனக்கு கூச்சமாக இருந்தது....பார்த்து அரைமணி நேரத்தில் எப்படி இவனால் இவ்வளவு நெருக்கமாக முடிகிறது...

"ச்சே...உங்களுக்கு இல்லாமையா...இந்தாங்க...ஆனா கண்டிப்பா வரணும்..."

"வராம? என்னைப் பத்தி ஒங்களுக்கு தெரியாது செந்தில்...ஓசி சாப்பாடுன்னா ஃப்ளைட் பிடிச்சாவது வந்துடுவேன்...."

"ஹிஹி...பறந்தாவது வந்தா சரி....ஆமா உங்க வொய்ஃப் எங்க...வைசாக்ல இருக்காங்களா?"

"ஆமா...ஆனா இப்ப திருச்சில எங்க ரிலேட்டிவ்ஸ் வீட்ல இருக்கா...எனக்கு மீனாட்சி கோயில் பாக்கணும்னு ரொம்ப நாளா ஆசை...என்ன இருந்தாலும் எங்காளுங்க கட்டின கோயிலாச்சே....அவளுக்கு கொஞ்சம் ஒடம்பு சரியில்லை...அதனால மதுரைக்கு அவ வரலை..."

"அப்ப நீங்க மட்டும் தான் மெட்ராஸ் போறீங்களா..."

"இல்ல...அவளும் எம் பொண்ணும் திருச்சில ஜாயின் பண்ணிப்பாங்க...அவங்களுக்குத் தான் இந்த இன்னொரு சீட்...அப்படியே மெட்ராஸ் போய் அங்கருந்து வைசாக் போறதா ப்ளான்...எம் பொண்ணை நீங்க பார்க்கணுமே...நாலு வயசு தான் ஆகுது...செம க்யூட்...செம வாலு...அப்படியே அவங்க அம்மா டைப்...அம்மாவும் பொண்ணும் சேந்துட்டா சமாளிக்க பத்துப் பேர் வேணும்...."

சொல்லும் போதே அவன் கண்களில் சந்தோஷம் தெரிந்தது...ம்ம்ம்...எனக்கும் இப்படி ஒரு க்யூட்டான குட்டிப் பெண்ணும் வாலான மனைவியும் இருந்தா நல்லாத் தான் இருக்கும்.....பார்ப்போம்...

இப்படியே பேசிக் கொண்டு அவன் வாங்கி வந்திருந்த இட்லியை இரண்டு பேரும் ஒரே இலையில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே ரயில் மணப்பாறை விராலிமலையை கடந்து திருச்சியை நெருங்கிக் கொண்டிருந்தது....

"இன்னும் கொஞ்ச நேரத்தில திருச்சி வந்துரும் செந்தில்...எப்படா அவங்களைப் பார்ப்போம்னு இருக்கு..."

ந‌ல்ல மனைவி குழந்தை போல நல்ல நட்பும் எதிர்பாராத நேரத்தில் எதிர்பாராத திசையில் இருந்து தான் வருகிறது...அப்பாவுக்கு கிளியன் அண்ணாச்சி...இன்றிரவு எனக்கு....

நான் அவனை விலக்கி ஜன்னல் வழியாக கண்களை உயர்த்தினேன்...

இருட்டான ஐப்பசி மாத இரவில் பிரம்மாண்டமான நட்சத்திரம் போல விரிந்த திருச்சி நகரத்தை பாண்டியன் எக்ஸ்பிரஸ் வெகுநாளாய் பிரிந்திருந்த காதலன் போல வேகமாய் நெருங்கிக் கொண்டிருந்தது.....

எனக்கு திடீரென்று மர‌ங்கொத்தி ஞாபகம் வந்தது...இருள் தான் பனைமரம்...ரயில் தான் மரங்கொத்தி...ரயிலின் எஞ்சின் இந்த இருட்டில் என் முகம் போல இருக்குமா....

========== பறக்கும்...=============

பி.கு. I know, this is another long post, and the story has not moved forward that much...But there is a reason for this particular episode. As this has already become a long post, next one will be published tomorrow....

மரங்கொத்தி...! -1

மரங்கொத்தி...! -1

இன்றோடு எத்தனையாவது நாளென்று தெரியவில்லை...ஆனால் நேற்றும் நேற்றிய முந்திய நாளும் இதே மரத்தின் இதே இடத்தை கொத்திக் கொண்டிருந்தது ஞாபகம் இருக்கிறது...அவ்வப்பொழுது இரை தேடி விட்டு பிறகு மீண்டும் இந்த நெடிது நின்ற பனை மரத்தின் இந்த இடத்தை கொத்திக் கொண்டிருப்பதே வேலையாக இருக்கிறது...ஏனோ தெரியவில்லை...சுத்தி நிற்கும் மரங்களை அலட்சியப்படுத்தி, இந்த மரமே குறியாக...

என் மூக்கு நீண்டு மேல் உதடு தாண்டி கீழ் உதடுடன் இணைந்து கூரிய அலகாக மாறி விட்டிருக்கிறது...நீளமான கைகள் குறுகி ஆங்காங்கே எலும்பு புடைத்து அதில் மயிர் முளைத்து முதுகின் இரு புறமும் சிறகுகள் நீண்டிருக்கிறது...கால்களின் பாதம் குறுகி நகம் நீண்டு பறவைக் கால்களாக, நான் அடிக்கடி அணியும் நீலப் பூக்கள் வரைந்த வெள்ளைசட்டை என் உடல் முழுதும் பரவி சிறு மயிர்களாக.....நான் என்பதன் அடையாளமாக முகம் மட்டும்....
இல்லையே...நான் மரங்கொத்தி இல்லை...எப்படி ஆனது இப்படி...

"தூத்துக்குடி அண்ணாச்சி வந்திருக்காவ...கீழ வர்றியா தம்பி...."
எங்கோ தூரத்தில் அசரீரி போல அம்மாவின் குரல் கேட்டதும் காட்சிகள் சட்டென்று கலைந்து விட்டது....ச்சே...கனவு....

ஆழ்மன ஆசைகளும், நிறைவேறாத எண்ணங்களும், பயங்களும் தான் கனவுகளாக வருகிறது...ஸிக்மன்ட் ஃப்ராய்டோ இல்லை வேறு யாரோ சொன்னது நினைவில் வந்து போனது...அதிகாலை கனவு பலிக்குமாமே...லேசாக சிரிப்பு வந்தது...பலித்தால் நன்றாகத் தான் இருக்கும்...ஆனால் கொஞ்சம் பெரிய சிறகுகள் வேண்டும்...

===============================

டிசம்பர் மாத அதிகாலையில் தண்ணீர் சிலீரென்றது...அவசரமாக முகம் கழுவி பல் துலக்கும் போது முகத்தை கண்ணாடியில் பார்த்துக் கொண்டேன்...மூக்கு கொஞ்சம் நீளம் தான் அப்பாவைப் போல‌...ஆனால் மரங்கொத்தி என்று சொல்ல முடியாது...ச்சே...என்ன இது...

கீழே வந்த போது கிளியன் அண்ணாச்சி ஒரு சொம்பிலிருந்து ஆறிப் போன கருப்பட்டி காப்பியை கிளாஸில் ஊற்றிக் குடித்துக் கொண்டிருந்தார்...தூத்துக்குடி அண்ணாச்சி...ஒரு வகையில் தூரத்து சொந்தம்...அப்பாவுக்கு நெருங்கிய நட்பு....பெயரென்னவோ தங்கவேலன் என்றிருந்தாலும் கிளியன் அண்ணாச்சி என்று சொன்னால் தான் ஊரில் யாருக்குமே தெரிகிறது...நாலாப்பு படிக்கும் போது திட்டிய வாத்தியாரை சட்டையை பிடித்து தள்ளி விட சட்டை கிழிந்து இவர் கையோடு வந்து விட்டதாம்...கிழியன்....நாங்குனேரி மக்கள் வாயில் பட்டு கிளியன்...

"வாங்க மாமா...ரொம்ப நாளா ஆளக் காணோம்...எங்கயும் புதுசா வீடு பாத்திட்டீங்களா...."

"பிள்ளைக்கு அதே கேலிப்பேச்சு தான்....எய்யா....பாத்து நாளாச்சில்லா..அதான் ஒரு எட்டு பார்த்துட்டு போலம்னு வந்தன்..."
கிளியன் எழுந்து வந்து என் இரு கைகளையும் இறுக்கிப் பிடித்துக் கொண்டார்...

"நீங்க எங்கயோ பாம்பே போனதா சொன்னாங்க...அதான் பம்பாயில வீடு சேத்துட்டீங்களான்னு நினைச்சேன்...எப்படியாவது ஒரு தடவை தூத்துக்குடி வந்து பாக்கலாம்னு நினைக்கிறேன்...இங்க வேலையை விட்டுட்டு வரமுடியல....அத்தை எதும் தப்பா எடுத்துக்க வேணாம்......வீட்ல அத்தை எல்லாம் நல்லா தான இருக்காங்க...அந்த கால் வலி இப்ப எப்படி இருக்கு..."

"எல்லாம் இருக்கா....சாள மீனு வாங்கினா ஏன் உழுவை மீனு வாங்கியாரலன்னு...நாட்டு வாய அடைச்சாலும் நாங்குனேரிகாரிய வாய அடைக்க முடியுமா...அதான் பம்பாயிக்கு ஓடிப் போறதுண்டு...."

"அதுஞ்சரி தான்....பம்பாயில மீனு பிடிச்சீங்களாக்கும்...."

அண்ணாச்சி கையிலிருந்த காப்பியை ஒரே மடக்காக குடித்து விட்டு சர்ச்சு பாதிரியாரின் முன் பாவ மன்னிப்பு கேட்பவர் போல தலையை குனிந்து கொண்டார்....

"அது உள்ளதும்...சேட்டு மீனு....கால்ல கல்லை கட்டினதும் சிக்குன பெருச்சாளி மாதிரில்லா கத்தறான்...எள‌வு இந்த சோலி பாக்கதும் ஒளப்பலாத் தான் உண்டு....இந்தாட்டம் ஊருல பத்து குறுணியாட்டும் வாங்காட்டி ஒம்ம மவள எவன் கட்டுவான்னுட்டு ஒங்க அத்தைக்காரி பாடு முடியல போ...அதுக்காட்டியுமில்ல இந்த மீனு பிடிக்குத சோலி...என்னைக்கு எவன் நம்ம கால்ல கல்ல கட்டுவானிட்டு ஒரு பக்கமா வருது தான்...உப்புத் தோசைக்காவது வழி செய்யணுமில்லா....இந்தா ஒனக்கு கல்யாணம் வச்சிருக்கு...ஒங்கய்யன் எனக்கு செஞ்சதுக்கும் ஒங்கம்ம போட்ட சோத்துக்கும் நான் திருப்பி செய்யணுமில்லா...ஒத்த புள்ள நீ...அதுக்கும் வக்கில்லாம என்ன மசுத்துக்கு நான் மாமனாக்கும்..."

அண்ணாச்சி தலையை குனிந்து கொள்ள வேண்டியது தான்...சோலி அப்படி...பச்சையாக சொல்ல வேண்டுமானால் அண்ணாச்சி ஒரு அடியாள்...காசு கொடுத்து காலை எடுத்துரு என்றால் முடித்து விடுவார்....சில நேரங்களில் கொலை மிரட்டலும் விடுப்பதுண்டு...துணிச்சலாக பார்ட்டியாக இருந்தால் ஆளைத் தூக்கிக் கொண்டு போய் காலில் கல்லைக் கட்டி நடுக்கடலில் இறக்குவதும் உண்டு....வெறும மிரட்டிறது உண்டு, கொலை செஞ்சதில்ல என்று அண்ணாச்சி சொல்வதை எந்தளவு நம்புவது என்று எனக்குத் தெரியவில்லை...முழு போதையில் ஏதேனும் உளறினால் தான் உண்டு....

"நல்லா செஞ்சீங்க போங்க...அதெல்லாம் ஒண்ணும் வேணாம்...ஆனா பார்த்து இருங்க...இப்ப போலீஸ் கெடுபிடியெல்லாம் ஜாஸ்தியா இருக்கு...எங்கனா குடிச்சிட்டு ஒளறி வைக்காதீங்க..."

அண்ணாச்சி சிரித்தார்...

"அதெல்லாம் இருப்பம்....அதக் கொண்டில்லா இங்கன எங்கியும் மீனு பிடிக்கிறதில்ல... ஒனக்க கல்யாணத்துக்கு செய்யணும்...அத நான் ஒங்கம்மைக்கிட்ட கேட்டுக்கிடுதேன்...பொண்ணு எந்த ஊரு...நம்மூர்க்காரியாக்கும்...."

"பொண்ணு கோயம்புத்தூரு...அம்மா போயி அத்தைக்கிட்ட பத்திரிக்கை வச்சாங்களே..."

"அதை கொண்டில்லா நான் இங்க வந்துருக்கன்....கல்யாண வேலையெல்லாம் ஆரம்பிக்கணுமுல்லா...."

"நீங்க இருந்து சாப்பிட்டு போங்க மாமா...எனக்கு வெளிய வேலை கெடக்கு...சாயந்தரம் மெட்ராஸு வேற போவணும்..."

"சாப்பாடு கெடக்கட்டு... பிள்ள பாத்து போயிட்டு வரணும்...இங்க அம்ம கெடக்கா...ஒன்னிய விட்ட அவளுக்கும் நாதியில்ல...பாத்துக்கிடு.. "

"சரிங்க மாமா...நான் வர்றேன்..."

சாப்பாடு கெடக்கட்டு என்று அவர் அலட்சியமாக சொன்னாலும் குறைந்த பட்சம் இருபது இட்லியும் எட்டு தோசையும் அரைச் சட்டி கருப்பட்டி காப்பியும் குடிக்காமல் அவரது காலை நேரம் ஆரம்பமாகாது என்று எனக்குத் தெரியும்....

===========================

கோரிப்பாளையத்தில் முருகேசனை பார்த்து மாதாமாதம் ரெண்டாயிரம் கிலோ வெள்ளாட்டுக் கறி...ஒரு வேலை முடிந்தது....அடுத்து மதுரா ஹோட்டலில் தஞ்சாவூர் ஏஜென்ட்...சொன்ன டிஸைன்படி சிவன் பார்வதி அம்மையுடன் ஆடும் சிலை...கொஞ்சம் லேட்டாகும்...எப்படியும் இந்த மாதக் கடைசியில் கப்பலேற்றி விடலாம்... தலையில் கங்கையுடன் கால் தூக்கி ஆடும் சிவன் எட்டடி....பக்கத்தில் அம்மை ஆறடி...அமெரிக்கா போகிறது....வண்டிப்பாளையம் போய் வாரம் ஆறு டன் தக்காளியும் மூணு டன் பச்சை மிளகாயும் ஏற்பாடு செய்ய வேண்டும்...இது மலேசியாவுக்கு.....கொரியாவிலிருந்து ஈரோட்டு மஞ்சள் கேட்கிறார்கள்...ஆனால் ஈரோட்டுக்காரர்கள் சொல்லும் விலைக்கு மார்ஜின் நிற்காது போலிருக்கிறது...

எனக்கு எக்ஸ்போர்ட் பிஸினஸ்...இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேஷியா மற்றும் உலக நாடுகளெங்கும் என்று சொல்லிக் கொள்ள ஆசை இருந்தாலும் இப்போதைக்கு அதிகம் சிங்கப்பூரும் மலேஷியாவும் தான்....பச்சை மிளகாய், சின்ன வெங்காயம்,அரைக் கீரை, புளிச்சக் கீரை, சேப்பங்கிழங்கு, தக்காளி, முருங்கைக் காய், வெள்ளாட்டுக் கறி, சில சமயம் சாமி சிலை என்று தான் எக்ஸ்போர்ட் போய்க் கொண்டிருக்கிறது....ஏதேனும் டெக்ஸ்டைல், க்ரானைட் என்று ஆர்டர் கிடைத்தால் நானும் ஃப்ரான்ஸ், லண்டன், ஜெர்மனி, அமெரிக்கா என்று பறக்கலாம்...ஆனால் ஏற்கனவே இருப்பவர்களை தாண்டி உள்ளே புகுவது....ம்ம்ம்ம்...மீனாட்சி கண் தொறந்தால் உண்டு....

எல்லாவற்றையும் முடித்துக் கொண்டு நான் ரயில்வே ஸ்டேஷன் போய்....மதுரை ட்டூ சென்னை...பாண்டியன் எக்ஸ்பிரஸ்...ப்ளாட்ஃபார்ம் சிக்ஸ்...அறிவிப்பு கேட்டு..."கும்பலு அள்ளுது மச்சான்...இன்னிக்கு ஆம்னி பஸ்க்காரய்ங்களுக்கெல்லாம் கொள்ளை தான்...அங்க பல்லாவரத்துல நம்ம செந்தில் இருக்கான் மாப்ள...அவன்கிட்ட் நீ வர்றேன்ன்னு சொல்லிருக்கேன்...எக்மோருக்கு வர்றேன்னு சொல்லிருக்கான்..பாத்து பேசிக்க...ஏழாவது மாசம் இங்க வந்திருடி...புள்ள பொறந்தா அது வாடிப்பட்டில தான் பொறக்கணும்...." காது உரசிய குரல்களை கடந்து, முன் பதிவு செய்த என் சீட்டை அடைந்த போது மதுரை டிசம்பரின் மெல்லிய குளிரில் வியர்த்திருந்தது.....

பர்ஸ்ட் க்ளாஸ் ஏ.ஸி.....ஏற்கனவே அடித்திருந்த ஓல்டு மங்க் ரம்மும் சேர்ந்து...சரி, இன்னிக்கி நல்லாத் தூங்கலாம்.... நான் கையோடு கொண்டு போயிருந்த பெரிய டவலை போர்த்திக் கொண்டு தூங்க தயாரான போது...

"ஃபைவ் ஏ அன்ட்....ஃபைவ் பி....இந்த சீட் தான்...."

அவன் எனக்கு எதிர் சீட்டில் வந்து உட்கார்ந்தான்....
===========================
(பி.கு. இதன் முழுக் கதை ஏற்கனவே எழுதி விட்டேன்...ஆனால் வெகு நீளமாக இருப்பதால், பல பாகங்களாக பிரிக்கப்பட்டிருக்கிறது...அடுத்த பாகம் நாளை வெளியாகும்...முக்கியமான டிஸ்கி...நான் அவனில்லை!)