முன் அறிவிப்பு : கலாச்சாரம் தான் என் மூச்சு...தெய்வீக காதல் தான் என் பேச்சு...காதல்னா கடவுள்...காமம் ஒரு சைத்தான் என்று பெருமாளுக்கே வைகுண்டம் திறக்கும் கலாச்சார காதலர்கள் இந்த தொடரை படிக்க வேண்டாம்.
எச்சரிக்கை : நான் படிக்கிறது ராணி காமிக்ஸ்...இல்லாட்டி சிறுவர் மலர் என்று சொல்லும் குழந்தைகளும் பொம்பளைன்னா அடக்க ஒடுக்கமா வீட்ல இருக்கணும் அடங்குனாதான் அவ பொம்பள என்று சொல்லும் பெரியவர்களும்...இது உங்களுக்கான கதை அல்ல..மீறிப் படித்தால் பின் விளைவுகளுக்கு நான் பொறுப்பல்ல.

எண்ணித் துணிக கருமம்
இந்த கதையின் முந்திய பாகங்களை இங்கே படிக்கலாம்.
பாகம் ஒன்று, பாகம் இரண்டு, பாகம் மூன்று, பாகம் நான்கு, பாகம் ஐந்து, பாகம் ஆறு,
பாகம் ஏழு, பாகம் எட்டு
பாகம் ஏழு, பாகம் எட்டு
முன்கதைச் சுருக்கம்:
எடின்பரோவில் தன் அன்றைய கேர்ள் ஃப்ரண்டுடன் ரெஸ்டாரன்டில் இருக்கும் விக்கிரமாதித்தனை வேதாளத்தை பிடித்து வரும்படி மந்திரவாதி தொந்தரவு செய்கிறான்....வேதாளத்தை பிடிக்க செளத் வேல்ஸில் இருக்கும் ப்ரெக்கன் ரேஞ்சஸ் காட்டுக்கு செல்லும் விக்கிராமாதித்தனிடம் வேதாளம் வைஜெயந்தியின் கதையை சொல்கிறது...
இருபத்தொரு வயதான திருக்குமரன் தனது முதல் வேலையில் சேர அலுவலகம் செல்கிறான்..அங்கு அவனது மேலதிகாரி குருமூர்த்தி அவனுக்கு வைஜெயந்தியை அறிமுகப்படுத்தி வைக்கிறார்...வைஜெயந்தியை பார்க்கும் திருக்குமரன் அவள் மேல் காதல் கொள்கிறான்...திருக்குமரனை கண்டு வைஜெய்ந்தியும் மன சஞ்சலம் அடைகிறாள்..அதே சமயம் அவளது மேலதிகாரி குருமூர்த்தியும் அவளை ரகசியமாக காதலிக்கிறார்....
இனி....
================
"சொல்லிக்கிட்டே இருக்கேன்...நீ பாட்டுக்கு படுக்கையை விரிச்சா எப்படி...இப்ப கதைய சொல்லல மொட்ட மண்டைல ஆணி அடிச்சிடுவேன்..."
"ஐயய்ய...நான் என்ன எனக்கா விரிச்சேன்....ஒனக்கு தான் மாதி....கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு....நான் வெளிய போயிட்டு வந்துடறேன்...."
மாதித்தனுக்கு புரிந்தது...
"சரி...சரி...சீக்கிரம் போயிட்டு வா...கதைய முடிச்சின்னா தூங்க போலாம்..."
"இந்தா இப்ப வந்துர்றேன்"
வினாடிகள் நிமிடங்களானது...நிமிடங்கள் மணியானது...
என்ன இந்த சனியனை காணோமோ எவ்வளவு நேரம் தான் வெய்ட் பண்றது...
கடுப்பான மாதித்தன் காட்டுக்குள் தேட ஆரம்பித்தான்...
எங்கு தேடியும் வேதாளத்தைக் காணவில்லை!!!
"இந்த இருட்டுல இதுக்கு மேல எங்க தேடுறது...மொட்டை சனியன்...திருப்பியும் ஏமாத்திடுச்சி....அந்த தாடிக்கார மந்திரவாதிக்கு என்ன சொல்றது...."
புலம்பிக் கொண்டே விக்கிரமாதித்தன் காரை நோக்கி நடந்தான்...செளத் வேல்ஸில் திடீரென்று பனிமழை கொட்ட ஆரம்பித்தது....
=====================
என்னது வேதாளத்தைக் காணோமா? அப்ப கதை??
கணவன் இறந்தால் அவனுடன் உடன்கட்டை ஏற வேண்டும் என்ற காட்டுமிராண்டி பழக்கத்தை விட்டொழித்தோம் என்று நாகரீகத்தை பறைசாற்றிக் கொண்டாலும்....கணவனை இழந்த பெண்கள் கடைசி வரை அவன் நினைவுடன் தன் வாழ்க்கையை அழித்துக் கொள்ள வேண்டும் என்று உடன்கட்டை ஏற்றப்படுகிறார்கள்...அதெல்லாம் இல்ல...இந்திய சமூகம் ரொம்ப மாறிடுச்சி என்று நீங்கள் மறுக்கக் கூடும்....ஆனால் கணவனை இழந்த பல சகோதரிகள் தினந்தோறும் சமூகத்தால் மனதளவில் உடன்கட்டை ஏற்றப்பட்டுக் கொண்டு தான் இருக்கிறார்கள்...மற்றவர்களைப் போல அவர்களும் ரத்தமும் சதையும் ஆன மனிதர்களே என்பது கூட பலருக்கு மறந்து போகிறது..
உண்மையில் பெரும் தயக்கத்துடன் தான் இந்த கதையை எழுத ஆரம்பித்தேன்..எழுத்து எனக்கு இன்னமும் கைவரவில்லை என்பது மட்டும் காரணம் அல்ல, வைஜெயந்தி திருக்குமரன் வாழ்க்கையில் இருக்கும் வில்லங்கமான விஷயங்களை எழுதுவது, அதிலும் எல்லாருக்கும் புரியும் படி எழுதுவது என்பது என்னால் இயலுமா என்று எனக்கு சந்தேகம் இருந்தது...
காதல் என்றாலே விபச்சாரமாக பார்க்கும் கலாச்சார காவலர்கள் இருக்கும் ஒரு சமூகத்தில் ஒரு முப்பது வயது கணவனை இழந்த பெண்ணுக்கும், இருபத்தொரு வயது இளைஞனுக்கும் காதல் ஏற்படக்கூடும் என்பதை மனதளவில் கூட யாரும் ஒப்புக் கொள்ள தயாரில்லை...
என் முந்தைய பதிவான பச்சோந்தி என்பதை பலர் வெறும் பீட்டர் விடுவதாக எடுத்துக் கொண்டார்களே தவிர, ஒட்டு மொத்தக் கதையே கடைசி வரியில் தான் வருகிறது என்பதை யாரும் தெரிந்து கொண்டதாக தெரியவில்லை...அல்லது புரியும்படி நான் எழுதவில்லை...
இந்த பிண்ணனியில்,
கதை எழுதுவது கடினம்...உண்மைக் கதை எழுதுவது அதைவிடக் கடினம்...எழுத்து எனக்கு புதிது என்பது மட்டுமல்ல, ஒரு உண்மைக் கதை எழுதுவதற்கு முன் தொடர்புடையவர்களின் ஒப்புதலை பெறுதல் அவசியம் ஆகிறது....
என் முந்தைய தொடரான மனைவியின் காதல்....என்ன தான் மாற்றுப் பெயரில் எழுதினாலும் நெருங்கிய நண்பர்களுக்கு எழுதுவது யார் என்று தெரியாமல் இல்லை...யாருக்கோ நான் சொல்லப் போக அந்த யாரோ இன்னொருவருக்கு சொல்ல என்று சங்கிலித் தொடராய்....."அது சரி" என்றால் யார் என்று பெரும்பாலான நண்பர்களுக்கு இப்பொழுது தெரிந்தே இருக்கிறது...
கதையில் வரும் வைஜெயந்தி எனக்கு நட்பு தான் என்றாலும் திருக்குமரன் வழியே வந்த நட்பு...அவனது தனிப்பட்ட வாழ்க்கை எனக்கு தெரியும் என்றாலும் அதை எழுதும் எந்த எண்ணமும் எனக்கு இல்லை..ஆனால் மனைவியின் காதல் தொடரை படித்து விட்டு, திருக்குமரனும் முக்கியமாக வைஜெயந்தியும் சம்மதம் அளித்ததன் பெயரிலேயே இந்த தொடர் ஆரம்பித்தது..
ஆனால் வைஜெயந்திக்கு இந்த கதை தொடர வேண்டுமா என்ற ஐயம் வந்திருக்கிறது...."வில்லங்கமா எழுதறன்னு உனக்கு தான் கெட்ட பேரு...எழுதி என்னடா செய்யப் போற"
கெட்டப் பெயர், நல்லப் பெயர் பற்றி எனக்கு பெரிய கவலை இல்லாவிட்டாலும், எதற்கு எழுதுகிறேன் என்று எனக்கே இன்னமும் தெரியாத நிலையில் "எழுதி என்ன செய்யப் போற" என்ற வைஜெயந்தியின் கேள்விக்கு என்னிடம் விடையில்லை...
ஆதலால் நண்பர்களே, கதையின் மையப்புள்ளியான வைஜெயந்தியின் வேண்டுகோளின் படி இந்த தொடர் இத்துடன் நிறுத்தப்படுகிறது...
எண்ணித் துணிக கருமம் துணிந்த பின்
எண்ணுவம் என்பதி ழுக்கு
என்னால் இயன்றவரை யோசித்தே இந்த தொடரை ஆரம்பித்தேன் என்றாலும் தொடர இயலாதது எனக்கு வருத்தமே...அரை குறையாக முடிப்பதற்கு உங்களிடம் மன்னிப்பு கோருகிறேன்.
நன்றி.
(அப்பாடா....ஒரு வழியா ஒழிஞ்சான்டா....அவசரமாக பாட்டிலை திறக்கும் நண்பர்களுக்கு.....அப்படில்லாம் முடிவெடுத்துடாதீங்க...நாங்கெல்லாம் அவ்வளவு சீக்கிரம் அடங்கிட மாட்டோம் :0))