Friday, 26 December 2008

ஜெயமோகனின் மத்தகம்: நட்பு,துரோகம்,காமம், காதல், சோரம்... வாள்வீச்சு


யானையை பிடிக்காதவர்கள் யார்? என் அம்மா போல்...நான் கொடுத்த பத்து பைசாவிற்கு தலை தடவிய யானை...என்னடா ஒரே ஒரு வாழைப்பழம் தானா...ஓரக்கண்ணால் நக்கலாக சிரித்தாலும் துதிக்கையால் என் தோள் தட்டிய யானை...ஏழு வயதில் வகுப்பில் முதல் ராங்க் வாங்கியதற்காக என் தந்தை தோள் தழுவியதை விட இன்னமும் மறக்காமல் இருக்கிறது... நான் எவ்ளோ பெரிய ஆள்...நீயெல்லாம் சும்மா சுள்ளான் என்று பலம் காட்டாமல் யப்பா, யப்பா என்று நான் அலற அலற துதிக்கையால் வாரி மத்தகத்தின் மேல் தூக்கி வைத்துக் கொண்ட யானை...ஒரு வேளை யானை என்னை அணைத்து முத்தமிடுவதாகக் கூட நினைத்து கொண்டிருக்க கூடும்....சிலரது அன்பு நமக்கு புரிவதில்லை...புரிந்த போது அவர்கள் இருப்பதில்லை...
ஜெயமோகனின் மத்தகத்தை யானை காதலின் பேரிலேயே படிக்க ஆரம்பித்தேன்..ஆனை ஆனை அழகர் யானை அழகரும் சொக்கரும் ஏறும் ஆனை..
இப்படி சிறுபிள்ளையாக ஆரம்பித்தது விரைவில் மாறியது...வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது ஜெயமோகனுக்கு கை வந்த கலை....அதிலும் அந்த மொழி நடை அவர் ஏற்றிக் கொண்டிருப்பது ஊசி என்பதே பல நேரங்களில் மறக்க செய்கிறது...
கேசவன் யானையின் தலைமைப் பாகனான ஆசான்...அவருக்கு அடுத்த நிலையின் அருணாசலம் அண்ணன்...அடுத்து யானை மேய்க்கும் பரமன்...அவனுக்கும் அடுத்த நிலையில் சுப்புக் கண்....மூன்றாம் நிலையில் இருக்கும் பரமன் சொல்வதாகவே கதை நிகழ்கிறது...
ஆசான் "சவமே" என்ற ஒரு வார்த்தை சொன்னதற்காக அவரது காலை முறிக்கும் கேசவன்...சுப்புக்கண் தன் முன்னால் ஒரு பெண்ணுடன் பேசிக் கொண்டிருந்தான் என்பதற்காக அவன் அருகில் வந்தால் விரட்டி அடிக்கும் கேசவன்...
// சுப்பு நடுங்கியபடி கைகளை மார்பில் வைத்துக்கொண்டு மெல்ல அலைநாக்குகள் ததும்பிய நீர் விளிம்புவரை வந்தான். அவன் நீரில் கால் வைக்கவும் கேசவன் பயங்கரமாகப் பிளறியபடி எழுந்தான். நீரலைகள் எழுந்து மணல் விளம்பை நக்கின. //
// ஆசானே.. ஆனை என்னை கொன்னு போடும். என்னை கொன்னு போடும் ஆசானே. வயசான அம்மை இருக்கா ஆசானே” என்று கெஞ்சி அழுதான். நான் கேசவனைப் பார்த்தேன். பக்கவாட்டில் நன்றாக மல்லாந்து கிடந்தான். பக்கவாட்டு நெற்றிக்குழியில் நீர் தேங்கியிருந்தது. சிறிய கண்களைச் சுற்றி சருமம் சுருங்கி விரிந்தது. அவனுடைய உடலே சுப்புக்கண்ணை கவனிக்கிறது என்று எனக்குத் தெரியும். சுப்புக்கணின் கால்கள் நீரைத் தொட்ட அந்தக் கணமே யானை பிளிறி எழும். .....கனத்த கால்கள் மணலில் கிருகிருவென பள்ளம் செய்ய மெதுவாக நடந்து சுப்புக்கண்ணை நோக்கிச் சென்றது.
.... சுப்புக்கண் அப்படியே தரையோடு தரையாக விழுந்து கிடந்தான்...
....என் உடலில் நாற்றம் அடித்தது. கீழே மணலில் சுப்புக்கண் பேதி போயிருந்தான். //
// பிற யானைகளுக்குப் போல ‘காலெடுத்தானே’ ‘கையெடுத்தானே’ ‘வலத்தானே’ ‘இடத்தானே’ என்றெல்லாம் கத்தக் கூடாது, சொல்லக்கூடாது. துரட்டியும் குத்துக்கம்பும் எடுப்பதைப் பற்றி கற்பனைகூட செய்ய முடியாது. //
கேசவனின் பெரிய தம்புரானின் மறு உருவம்...ஆளும் தம்பிரானின் ஆத்ம ஸ்நேகிதன்..ராஜ ஸ்நேகிதம்...ராஜ கல்பனை பெற்ற யானை.அதன் மத்தகத்தின் மீது தம்புரானை தவிர யாரையும் அது அனுமதிப்பதில்லை...
//
அந்த உத்தரவு எப்படி கேசவனுக்குத் தெரிந்தது என்பதே ஆச்சரியம்தான். வேறு எவரையும் தன் மத்தகத்தின் மீது ஏறுவதற்கு கேசவன் அனுமதித்தததில்லை. சட்டென்று பயங்கரமாக பளிறியபடி கொம்பு குலுக்கிய கேசவன் ஓரடி பின்னால் வைத்தான். கோபம் கொண்ட ·பல்குனன் நாயர் தன் உடைவாளை உருவியபடி ”எந்தடா?” என்று கேட்டபடி ஆசானை வெட்ட வருவதற்குள் கேசவன் மீண்டும் பிளிறியபடி துதிக்கையால் பல்குனன் நாயரை ஓங்கி ஒரு தட்டு தட்டினான். நாயர் தெறித்துப் பின்னாலிருந்த கல்தூணில் மண்டை அடித்து கீழே விழுந்து மூர்ச்சையானான் //
// கோபமாக உள்ளே வந்த இளையதம்புரான் ”கேசவனுடே மீதெ திடம்பும் ஞானும் அல்லாதே ஆரும் கேறல் அருது எந்நு சொன்னது என்னுடெ ராஜ கல்பனை. அது கடந்நவன் ஆரெந்நாலும் மரணம் அவனுடெ விதி. ஆருக்குண்டு மறு வாக்கு? ம்ம்? //
// சொல்லும் பொருளும் அறிஞ்š நான் சொல்லுந்நேன். கேசவன் நம்முடைய ஆனை. அவனுடெ மீதே நாம் அல்லாதே ஓராளும் கயறுக இல்ல” என்றார். //
இப்படி ராஜ மரியாதையுடன் வலம் வரும் கேசவன் மீது ஆசான், பாகன்கள் என்று யாரும் ஏறி விடமுடியாது...ஆனால் அவனுக்கோ கரடிக்குளம் நாராயணன் என்ற யானையை மிஞ்சி விட ஆசை... பாகன் பரமனும் அருணாசலம் அண்ணனும் நட்பு..ஆனால் அருணாசலத்தின் காதலியை பரமன் மிரட்டி அடைகிறான்...
// அருணாச்சலம் அண்ணா தணிந்து, ”மக்கா லே, நீ எனக்க தம்பியில்லா? அவ உனக்கு அம்மையப் போலாக்கும் லே” என்றார். ”அந்தச் சோலியே வேண்டாம். நடக்குமா நடக்காதா சொல்லும்” என்றேன். //
// அருணாச்சலம் அண்ணன் சட்டென்று என் கால்களைப் பற்றிக் கொண்டார். இருட்டில் அவரது கண்கள் பளபளவென்று ஈரமாக இருப்பதைக் கண்டேன். அவர் கைகைள் என் கால்களில் சூடாகப் பதிந்தன. ”தம்பி, உன்னை என் சொந்தத் தம்பியாட்டு நெனைச்சியேம்ல… வேண்டாம்ல… மகாபாவம்ல. //
முதலில் சாவேன் என்று மிரட்டி பின்பு பரமனுடன் உடன்படும் அருணாசலத்தின் காதலி...
// அவள் தரையிலேயே கிடந்தாள். நான் அவள் கைகளைப் பற்றித் தூக்கி எடுத்தேன். வியர்த்துக் குளிர்ந்த உடம்பு நீரில் வந்த வாழை போலிருந்தது... ”என்னை கொல்லப்படாது… என்னையும் என் பிள்ளையையும் நாசம் பண்ணிப்பிடாது… நான் செத்திருவேன்….கூடப்பிறப்பா நினைக்கணும்…தம்புரானே….உங்கள தெய்வமா கும்பிடுதேன்” என்று என்னை உந்தி நெளிந்தபடி கண்ணீர் வழியச் சொன்னாள். அவளைப் பேசவே விடக்கூடாது என்று இறுகப் பிடித்து இழுத்துப் பாயில் தள்ளினேன். ”அய்யோ வயித்தில பிள்ள… பாத்து” என்று அவள் பதறிக் கெஞ்ச ஆரம்பித்தாள். //
இப்படி செய்யும் பரமன் அடுத்து அருணாசலத்திற்கு மேலும் பெரும் துரோகம் செய்கிறான்...அவரது மனைவியை தான் பெண்டாள்கிறான்...கோயில் நகையை திருடுகிறான்...
// அவரது கண்கள் மூன்று மாதம் தாண்டாத குழந்தையின் பனிபடர்ந்த விழிகளுடன் இருந்தன. ”ஓடிவாங்க ஓடி வாங்க… அண்ணனை ஆனை தூக்கிப் போட்டுட்டுது… அய்யோ” என்று கதறியபடி நான் தோப்புக்குள் நுழைந்து நெய்யாற்றின்கரை கோயிலை நோக்கிச் ஓடினேன். //
இதையெல்லாம் ஒட்டியோ என்னவோ கேசவன் பரமனை அருகிலும் நெருங்க விடுவதில்லை...பரமனுக்கு அடுத்த நிலையில் இருக்கும் சுப்புக்கண் (மரண பயத்துடன் கதையில் அறிமுகமாகும் அதே சுப்புக்கண்!!) அதிகாரம் பெறுகிறான்...
// அவனுக்குத் தெரியாமலிருக்காது. ஒரு மாதமாக என்னை கேசவன் அருகிலேயே விடுவதில்லை. என்னுடைய வாசனை கிடைத்தாலே முன்னங்காலை தூக்கி வைத்து ம்ம் என்று ஒலியெழுப்பும். //
கேசவனின் பாடும் சுகமில்லை...தம்புரானுக்கு உடல் நிலை சரியில்லாது போக, அவரின் மகனின் அதிகாரம் ஏற்படுகிறது...அவனுக்கோ குதிரைகளே பிரியம்....அப்பொழுது தான் கேரளத்தில் அடியெடுத்து வைத்திருக்கும் ஆங்கிலேயர் ஸ்னேகிதம்...யானையை பிடிப்பதில்லை...தம்புரான் இறக்க அங்கு செல்லும் கேசவனுக்கு செல்லும் கேசவனுக்கு பல்வேறு அனுபவங்கள்...
// உள்ளே இருந்து இளையதம்புரான் வருவதைக் கண்டேன். அவர் கையில் நீளமான துப்பாக்கி இருந்தது. மூக்குத் துளைபோல இரட்டைக் குழல்கொண்ட தோள் உயரமான துப்பாக்கி. பழுத்த மூங்கில் நிறமான குழாய். ஈட்டி மரத்தாலான மட்டை. அதை தோளில் தூக்கியபடி வந்த தம்புரான் வாசலில் நின்று கடும் கோபத்தில் முகம் சுளித்து, ”போ.. போடா” என்றார். //
// அவர் துப்பாக்கியை நீட்டியபடி மேலும் பின்னகர்ந்து குறி பார்த்தார். //
// இளைய தம்புரான் அந்தக் துப்பாக்கியின் கீழே உள்ள வளையத்துக்குள் சுட்டுவிரலால் அழுத்த அது மூடி திறந்து கொள்ளும் ஒலி கேட்டது. //
ஐயோ கேசவா என்று மனதில் ஒலி எழுந்த நேரத்தில் கேசவனின் முடிவு..... ஜெயமோகன் ஊசி ஏற்றுகிறார் என்று நினைத்திருந்த நேரத்தில் ஒரே நேரத்தில் பல வாள்களை வீசுகிறார்... மரத்தை மறைத்தது மாமத யானை மரத்தில் மறைந்தது மாமத யானை..... யானைக் கதையாக படிப்பவர்களுக்கு முடிவில் கதை முற்றிலும் ஒரு புதிய கோணம் காட்டுகிறது.. நட்பு, துரோகம்,சூழ்நிலைக்கேற்ப மாறும் கற்பு, நான்கு வருணங்கள், தொடர்ந்து கைமாறும் அதிகாரம்...வர்க்க பேதத்தை உடைப்பதில் ஆங்கிலேய ஆட்சியின் மறைமுக பங்கு...உண்மையில் முடிவில் தான் இந்த கதை ஆரம்பிக்கிறது....
சூரியனுக்கு டார்ச் அடிப்பது அனர்த்தம் என்று தெரிந்தாலும் ஜெயமோகனை பாராட்டாமல் இருக்க முடியவில்லை!
இவ்வளவு சொல்லிவிட்டு இதை சொல்லாவிட்டால் நன்றியாகாது...ஓரளவு ஜெயமோகனை படித்திருந்தாலும்....நான் இந்த கதை படிக்க முக்கிய காரணம் திரு. சுரேஷ் கண்ணன் அவர்களின் இந்த பதிவே... சுரேஷ் கண்ணனுக்கு நன்றி!

சமீப காலமாகவே எனக்கு தெரிந்த மிஸஸ்.டவுட் அவர்களும் மத்தகம் குறித்து மிக அழகாக ஒரு பதிவிட்டிருக்கிறார்...
ஜெயமோகனை படிக்க விரும்புபவர்கள் தயவு செய்து அவர் தளத்திலேயே படித்து கொள்ளுங்கள்....
மத்தகத்தின் சுட்டிகள்

Saturday, 20 December 2008

நவீன விக்கிரமாதித்தன் கதைகள் - மோகத்தைக் கொன்றுவிடு - பாகம் ஐந்து

முன் அறிவிப்பு 1: வழக்கம் போல இந்த தொடரில் வரும் சம்பவங்கள், பாத்திரங்கள் அனைத்தும் உண்மையே. கதை மாந்தர்கள் மற்றும் பதிவரின் நலம் கருதி அவர்களின் அடையாளங்கள் முற்றிலும் மாற்றப்பட்டுள்ளன.

முன் அறிவிப்பு 2: காதல் தெய்வீகமானது, காமத்திற்கு அதில் இடம் இல்லை என்று கருதும் தெய்வீக காதலர்களும், காமமோ காதலோ அது ஆண்களின் ஏகபோக உரிமை, அது தான் இந்திய, தமிழக, சிந்து சமவெளி, ஹரப்பா மற்றும் மொகஞ்சதாரோ கலாச்சாரம் என்று சொல்லும் கலாச்சார காவலர்களும் தயவு செய்து இந்த தொடரை படிக்க வேண்டாம்.



இந்த கதையின் முந்திய பாகங்களை இங்கே படிக்கலாம்..பாகம் ஒன்று, பாகம் இரண்டு, பாகம் மூன்று, பாகம் நான்கு

முன்கதைச் சுருக்கம்:
எடின்பரோவில் தனது கேர்ள் ஃப்ரண்டுடன் ரெஸ்ட்ராண்டில் இருந்த மாதித்தனை வேதாளத்தை பிடித்து வரும்படி மந்திரவாதி தொல்லை செய்கிறான்..வேதாளத்தை பிடிக்க செளத் வேல்ஸ் செல்லும் விக்கிரமனிடம் வேதாளம் வைஜெயந்தியின் கதையை சொல்கிறது..
இருப‌த்தொரு வ‌ய‌தான‌ திருக்கும‌ர‌ன் த‌ன‌து முத‌ல் வேலையில் சேர‌ அலுவ‌ல‌க‌ம் செல்கிறான்..அங்கு அவ‌ன‌து மேல‌திகாரி குருமூர்த்தி அவ‌னுக்கு வைஜெய‌ந்தியை அறிமுக‌ப்ப‌டுத்தி வைக்கிறார்...வைஜெய‌ந்தியை பார்க்கும் திருக்கும‌ர‌ன் திகைப்புட‌ன் நிற்கிறான்.
இனி.....

அலை பாயுதே....
வாழ்க்கையில் ஒரு கணமேனும் காதலிக்காதவர்கள் இல்லை..ஆனால் காதல் எப்பொழுது வருகிறது...ஏன் வருகிறது..யார் மீது வருகிறது..எதற்காக எதை எதிர்பார்த்து வருகிறது...சங்க காலத்திலிருந்து இந்த காலம் வரை யாரும் கண்டுபிடித்ததாக தெரியவில்லை...மல்லிகை மலர்வதும் மனங்கள் திறப்பதும் எதிர்பாராத தருணத்தில் எப்படியோ நடக்கிறது...யாயும் யாயும் யாராவீரோ என்று இருந்தவர்கள் செம்புலம் சேர்ந்த நீர்த்துளி போல் கலந்து விடுவதும் நடந்து விடுகிறது....

அவள் கண்கள் இப்படித்தான் இருக்கும்...இப்படித்தான் சிரிப்பாள்..பேசும் போது முகம் இப்படியெல்லாம் மாறும்...யாருக்கும் தெரியாமல் மனம் அதன் போக்கில் கட்டி அமைக்கும் பிம்பங்கள்...

அத்தனையும் பிம்பம்...பிம்பத்தை எங்கு சென்று தேடுவது என்ற கையறு நிலையில் என்றாவது ஒரு நாள் அவளை எதிர்பாராமல் சந்திக்க...அதே மனம் ஆனந்த கூச்சல் இடுகிறது...இவளா இவளா என்று தேடி எந்த இடத்திலும் திறக்காத கதவுகள் எந்த முன்னறிவிப்பும் இன்றி ஹோவென திறந்து விடுகிறது...

வைஜெயந்தியை பார்த்த திருக்குமரனின் மனக்கதவுகள் தடேரென்று திறந்து கொண்டன...இப்பொழுது தான் முதல் முறையாக பார்க்கிறேனா? இல்லையே...எத்தனையோ முறை ஏந்திய முகமாயிற்றே இது..எத்தனை முறை இந்த விரல்களை வருடியிருப்பேன்..கரம் கோர்த்த உணர்வு இப்பொழுதும் இருக்கிறதே..இந்த புன்னகை...ஜென்ம ஜென்மமாக வருவதல்லவா...எப்படி பிரிந்தேன்...ஏன் பிரிந்தேன்..எந்த ஜென்மத்தில்...
கள் குடித்த குரங்குக்கும் காதல் கொண்ட மனதிற்கும் காலங்களும் சூழ்நிலைகளும் தெரிவதில்லை...ஆனால் காலம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை...குருமூர்த்திக்கு காத்திருக்க காலம் இல்லை..

"என்ன குமரன் ரொம்ப ஸ்டன் ஆகி நிக்கிறீங்க...இவங்களை முன்னாடியே தெரியுமா..."

வேகமாய் ஓடி வந்து கீழே விழுந்த குழந்தை போல மனம் திடீரென்று மட்டுப்பட்டது...யார் இவங்க...ரொம்ப நாள் பார்த்த மாதிரி இருக்கு...ஆனா இவங்க யாருன்னே எனக்கு தெரியாதே..இது என்ன கனவா.....

"ம்ம்ம்..ஆமா ஸார்...இல்ல சார்..."

"என்ன இது....தெரியுமா தெரியாதா...வைஜெயந்தி....இவர் உங்களுக்கு தெரிஞ்சவரா..."

திருக்குமரன் திரு திரு குமரன் ஆக விழிப்பது பார்த்து வைஜெயந்திக்கு சிரிப்பாக இருந்தது...யார் இவன்...இது வரை பெண்களையே பார்க்காத பிறவி போல்...

"இல்ல ஸார்...நானும் இப்ப தான் பார்க்கிறேன்..."

குருமூர்த்தி ச‌லித்துக் கொண்டார்...

"ச‌ரி ச‌ரி, அவ‌ரு உங்க‌ள எங்க‌யோ பார்த்திருப்பார் போல‌ருக்கு...மிஸ்ட‌ர் கும‌ர‌ன், இவ‌ங்க‌ வைஜெய‌ந்தி...அக்க‌வுண்ட்ஸ்...வைஜெய‌ந்தி...இவ‌ர் திருக்கும‌ர‌ன்...புதுசா ஜாய்ன் ப‌ண்றாரு...இவ‌ர‌ கூட்டிப் போயி டாக்குமெண்ட்ஸ், பேங்க் அக்க‌வுண்ட் டீட்டெய்ல்ஸ் எல்லாம் வாங்கிடுங்க‌..முடிச்சிட்டு நாராய‌ண‌ன் கிட்ட‌ அனுப்புங்க‌...அவ‌ரு ஹெச்.ஆர். விஷ‌ய‌த்தை முடிச்சிருவாரு..."

"ஓக்கே ஸார்...வாங்க‌ கும‌ர‌ன்..." வைஜெய‌ந்தி திருக்கும‌ர‌னை அழைத்து கொண்டு வெளியேற‌ முனைந்தாள்...

"வைஜெய‌ந்தி...ஒரு நிமிஷ‌ம்...ஸாட்ட‌ர் டே அபர்ணாவுக்கு ப‌ர்த்டே...காலைல‌ கோயிலுக்கு போய்ட்டு ஈவ்னிங் சின்ன‌தா ஒரு பார்ட்டி...நீங்களும் சுபாஷினியும் வ‌ந்தா தான் அவ‌ ப‌ர்த்டேவே கொண்டாடுவேன்னு ஒரே அடம் பிடிக்கிறா....கொஞ்ச‌ம் சிர‌மம் பார்க்காம‌ வ‌ர‌முடியுமா? நானே உங்க‌ளையும் சுபாவையும் பிக்க‌ப் ப‌ண்ணிட்டு ட்ராப் ப‌ண்ணிர்றேன்..."

"ஓ...க‌ண்டிப்பா வ‌ந்துர்றேன் ஸார்...நானும் அப‌ர்ணாவ‌ பார்த்து ரொம்ப‌ நாளாச்சு..சுபாவும் ரொம்ப‌ ச‌ந்தோஷ‌ப்ப‌டுவா...."

"தேங்க்ஸ் வைஜெய‌ந்தி.."

"நோ மென்ஷ‌ன் ஸார்...அப்ப... நான் இவ‌ரை கூட்டிக்கிட்டு போயி பார்மாலிட்டியெல்லாம் முடிச்சிட்டு அனுப்பி வைக்கிறேன் ஸார்..."

சொல்லிவிட்டு க‌த‌வை திற‌ந்து வெளியேறும் வைஜெய‌ந்தியையும், ப‌ள்ளிக்கூட‌ சிறுவ‌ன் போல் அவ‌ள் பின்னாலேயே செல்லும் திருக்கும‌ர‌னையும் பார்த்த‌வாறே குருமூர்த்தியின் ம‌ன‌ம் உழ‌ல‌ ஆர‌ம்பித்த‌து...

வைஜெய‌ந்தியின் பின்னால் செல்வ‌து திருக்கும‌ர‌ன் மட்டும் தானா...என் ம‌ன‌மும் போகிற‌தே...உன்னை பார்த்து திகைப்ப‌து அவ‌ன் ம‌ட்டும‌ல்ல... நானும் தான் வைஜெய‌ந்தி...நான் உன்னை ம‌ன‌துக்குள் பூஜிப்ப‌து உன‌க்கு தெரியுமா...ஓவ்வொரு நாளும் உன் நினைவுக‌ளுட‌ன் தான் விடிகிற‌து...ஒவ்வொரு இரவும் உன் நினைவுகளுடன் தான் முடிகிறது...எப்பொழுதும் உன்னுட‌ன் இருக்க‌த் துடிப்ப‌து என் ம‌க‌ள் ம‌ட்டும‌ல்ல‌...அவ‌ளை விட‌ அதிக‌ம் துடிப்ப‌து நான் தான்...

நாற்ப‌து வ‌ய‌தாகி விட்டால் ஆண் புத்தி நாய் புத்தி ஆகிவிடும்....உங்களுக்கு நாற்பத்தி ரெண்டே ஆகிவிட்டது..நீ சொல்ல‌லாம்...இல்லை வைஜெய‌ந்தி....ப‌தினெட்டு வ‌ய‌தில் தான் காத‌ல் வ‌ரும் என்று யார் சொன்னார்க‌ள்....நாற்ப‌து வ‌ய‌தில் என‌க்கு முப்ப‌த்தி ரெண்டு வ‌ய‌தான‌ உன் மீது காத‌ல் வ‌ர‌க்கூடாது என்று விதி இருக்கிற‌தா...

குருமூர்த்தி...இது என்ன‌ அயோக்கிய‌த்த‌ன‌மான‌ சிந்த‌னை...இன்னொரு ம‌ன‌ம் க‌டிந்து கொண்ட‌து...

இல்லை இது அயோக்கிய‌த் த‌ன‌ம் இல்லை...என் ம‌னைவி இருந்த‌ வ‌ரை என் ம‌ன‌தில் வேறு யாருக்கும் இட‌ம் இல்லையே...அவ‌ள் இல்லாத‌ வெற்றிட‌த்தில் அல்ல‌வா இப்பொழுது அலை பாய்கிற‌து...எத்தனை கோவில்கள்...எத்தனை டாக்டர்கள்...அவளை மட்டும் யாராவது கேன்சரில் இருந்து காப்பாற்றி இருந்தால்...கோடி கோடியாய் சொத்திருக்கிற‌து...ஆனாலும் என் ம‌க‌ளுக்கு ஒரு தாய் இல்லை...நான் ம‌ன‌ம் விட்டு பேச‌ ஒரு ஜீவ‌ன் இல்லை...அவ‌ளுக்கு ஒரு தாயை கொடுக்க‌ வேண்டிய‌து என் க‌ட‌மைய‌ல்ல‌வா...வைஜெய‌ந்தியை விட‌ ந‌ல்ல‌ தாய் யார் இருக்க‌ முடியும்...அவ‌ள் ம‌க‌ளுக்கும் என்னால் ந‌ல்ல‌ த‌ந்தையாக‌ இருக்க‌ முடியுமே..

இதை விரைவில்...விரைவில் என்ன‌ இந்த‌ ஸாட்ட‌ர் டேவே அவ‌ளிட‌ம் சொல்லி விட‌ வேண்டிய‌து தான்...அத‌ற்காக‌ தானே வ‌ர‌ச் சொல்லியிருக்கிறேன்...ப்ளீஸ், ந‌ல்ல‌ ப‌தில் சொல் வைஜெய‌ந்தி...

எனக்கு நீ வேண்டும்...நீ ம‌ட்டுமே வேண்டும்...

குருமூர்த்தி சுய‌ சிந்த‌னையின்றி தான் இதுவ‌ரை கிறுக்கிக் கொண்டிருந்த‌ த‌ன் க‌ம்பெனியின் லெட்ட‌ர் பேடை பார்த்தார்...அதில் ஒரே ஒரு வார்த்தை ம‌ட்டும் ப‌ல‌ முறை அழுத்த‌மாக‌ எழுத‌ப்ப‌ட்டிருந்த‌து...


வைஜெய‌ந்தி....

=========போர் இனி ஆரம்பம்===========