Thursday, 26 March 2009

செல்வி.ஜெயலலிதாவை புரட்சித் தலைவி என்று அழைப்பது தவறா??

இந்த திமூக்கா காரவுக இருக்காகளே அவங்களுக்கு எதுனா கோவம் வந்துட்டா அடிக்கடி அறிக்கை விட்றாங்க...ஜெயலலிதா அப்பிடி என்ன பொரச்சி பண்ணிட்டார்...அப்புறம் என்ன பொரச்சி தலைவின்னு...

எரும மாடு மல்லாக்க படுத்தா எலிக்குட்டி வந்து ஐ லவ் யூ சொல்லுமாம்...அது மாதிரி ஆயிரம் பொரச்சி பண்ணிட்டு தலீவி அமேய்திய இருக்கதுனால இந்த மாதிரி எல்லாம் கேள்வி வருது...

ஒண்ணா ரெண்டா அப்பு....அதுக்கெல்லாம் கணக்கில்ல...ஆனா உங்க வாய அடைக்கிறதுக்காக...

ஒங்க அண்ணாதுரை நெடுஞ்செழியன எப்பிடி கூப்டாரு?? தம்பி வா...தலைமை ஏற்க வா அப்படின்னாரு...ஆனா பொரச்சி தலைவி என்ன சொன்னாங்க....தலை மயிரு உதிர்ந்து போச்சி...உதிர்ந்த மயிர்கள்னு சொன்னாரா இல்லியா?? இம்புட்டி தெகிரியம் ஒங்க பார்ட்டில யாருக்காவது இருக்காப்பு?? இன்னும் எஸ்.டி.எஸ்சுன்னு ஒரு எழுவது வயசு ஆள காருக்கு பின்னாடி ஓடி வர வச்சி எக்ஸசைஸ் பண்ண விட்டது....அவரை ஜீப்புல ஃபுட்போர்டு அடிக்க வச்சதுன்னு ஏகப்பட்ட பொரச்சி இருக்கு...

ஒங்களுக்கெல்லாம் பீரு தெரியும்...டாஸ்மாக்கு பாரு தெரியும்...ஆனா மோரு மேட்டரு தெரியுமான்னேன்?? சானகி அம்மான்னு ஒருத்தங்க தான் எம்ஜியாருக்கு மோருல விஷம் வச்சி அவருக்கு டிக்கட் வாங்கி கொடுத்துட்டாங்கன்னு அந்த காலத்திலேயே அறிக்கை விட்டவங்க எங்க தலீவி...ஒங்காளு கலீஞ்சருக்கு இந்த மோரு மேட்டரு தெரியலியே??

மெட்ராஸுல சனம் கூடிப் போச்சி அதுனால ஒரு எக்ஸ்ட்ரா ஃபிட்டிங் மாதிரி துணை நகர(க)ம் அமைக்கலாம்னு கோடிக் கணக்குல செலவு பண்ண ஒங்காளு திட்டம் போடுறாரு...ஆனா கருணாநிதி குடும்பம் மெட்ராஸ விட்டு வெளிய போயிடுச்சின்னா சனத்தொகை கொறைஞ்சிடும்னு எங்க அம்மா சொன்னாங்களா இல்லியா?? அவங்க அறிவு ஒங்களுக்கு யாருக்காவது இருக்காலே??

சனத் தொகை கூடுது கூடுதுன்னு கூப்பாடு போடுறியளே...நீங்கள்லாம் வெறும் காகிதப் புலிகள் ஓய்...பொரச்சி தலைவி மாதிரி மகாமக கொளத்துல எறங்கி அப்படியே கொஞ்சம் பேரு ஈசனை பாக்க டிக்கட் வாங்கி குடுத்தாங்களே...இப்பிடி நேரடியா நடவடிக்கையில எறங்குற மொதல்வர இந்த தமிழ்நாடு பாத்துருக்கா??

உள்ளூர்ல இருந்து செக்கு வந்தாலே எனக்கெல்லாம் பயமாருக்கு...எந்த பய என்ன வில்லங்கமோன்னு...ஆனா அவங்க வெளிநாட்டுல இருந்து செக்கு வந்தாலும் அனுப்புன பய யாருன்னு தெரியாட்டியும் துணிச்சலா அதை அவங்க பேருல பேங்குல போட்டவுங்க...

அதெல்லாம் சரி தான்...பொருளாதாரம் பத்தி ஒங்க அம்மாவுக்கு என்னடே தெரியும்னு சில பயக கேக்குறானுவ...பத்தாயிரம் சம்பளம் வாங்கியே பத்தாம் தேதிக்கு மேல ஒரு ரூவா அரிசி தான் சாப்பிட வேண்டி இருக்கு....அவங்க அப்படியா?? ஒரு ரூவா சம்பளம் வாங்கியே கொட நாடு எஸ்டேட் வாங்கினவுங்க...எல்லாப் பயலும் அவங்க கிட்ட போயி டூசன் படிங்கலே..அப்பவாவது ஒங்களுக்கு வெளங்குதான்னு பாப்பம்...

நீங்க ஆச்சிக்கு வந்தா கல்வித்துறைக்கு ஒரு மந்திரிய போடுவீங்க...ஆனா கன்னத்துல அறைஞ்சிருக்கறதுக்குன்னே ஒரு மந்திரிய நியமிச்சவுங்க அவங்க...ஒங்காளும் தான் எத்தினி தடவ சி.எம்மா வந்துட்டாரு?? ஒரு தடவையாவது இப்படி ஒரு அமைச்சரை நியமிச்சி மக்கள் சேவை செஞ்சிருக்காரா???

கட்டிங் ப்ளேயரை காதுக்குள்ள உட்ட மாதிரி இருந்தாலும் எங்காளு கவுஜ எளுதுவாரு...கத எளுதுவாரு...பொரச்சி தலீவி என்ன பண்ணிட்டாங்கன்னு கேக்கப்படாது...அவங்க பொரச்சி நடிகையா இருந்த காலத்துலேயே கல்கில ஒரு தொடர் கதை எழுதுனவங்க...அவங்க பண்ண பொரச்சிய இப்பக்கூட எனக்கு எழுதக்கூசுது.....ஆன அவங்க அந்த பொரச்சிய அப்பவே பண்ணிருக்காங்க...காலக்கொடுமை அந்த பொரச்சிய முழுசா முடிக்கலை...ஏன்னா கல்கி அந்த தொடரை பாதியிலேயே நிறுத்திட்டாங்க...

பட்டியல் போட்டா போயிக்கிட்டே இருக்கும்டே...அதனால கடேசியா ஒண்ணு...ஒங்காளும் தான் ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுவதிலருந்து எலக்சன்ல நிக்கறாரு....ஆனா ஒரு தடவை... ஒரே ஒரு தடவையாவது அவரால தோக்க முடிஞ்சிருக்கா?? அவரும் ஊரு விட்டு ஊரு நின்னு பாத்தாரு...ம்ஹூம்...ஒண்ணும் முடியல... ஆனா எங்க பொரச்சி தலைவிய பாருங்க...ஆஸ்கர்ல ரகுமான் ரெண்டு அள்ளுன மாதிரி சி.எம்மா இருக்கும் போதே ஒரே தேர்தல்ல ஆண்டிப்பட்டி, பர்கூர்னு ரெண்டு எடத்துல தோத்து பொரச்சி பண்ணாங்க.. ...முடிஞ்சா ஒங்க தலீவர இத பீட் பண்ண சொல்லுங்க...அப்புறம் பேசலாம்...

Tuesday, 24 March 2009

நடிகர்கள் அறிவற்றவர்களா? பதிவர் மாதவராஜுக்கு சில பதில்கள்!

தமிழ் சினிமா கதாநாயகர்களுக்கு அறிவு இருக்கிறதா இல்லையா என்பதை தீர்மானிக்க முன், அறிவு என்பதன் அளவு கோல் என்ன?? எதைக் கொண்டு அறிவை அளப்பீர்கள்?? மாடு மேய்ப்பவர்களுக்கு கணிப்பொறி தெரியாது ஆனால் அவர்களை அறிவற்றவர்கள் என்பீர்களா இல்லை கணிப்பொறிக் காரர்களுக்கு கட்டிடம் கட்ட தெரியாது என்பதால் அவர்களை அறிவற்றவர்கள் என்பீர்களா?? என்ன தான் அளவுகோல்? சமூகப் பார்வையா?? அப்படியானால், நடிகர்களைத் தவிர தமிழ்நாட்டில் எல்லாருக்கும் சமூகப்பார்வை இருக்கிறதா??
சமூகப்பார்வைக்கும் அறிவுக்கும் என்ன தொடர்பு??

சினிமா என்பது வியாபாரம்...வியாபாரம் மட்டுமே...ஒரு பேங்கருக்கும், மீன்பிடிப்பவருக்கும், காய்கறி விற்பவருக்கும், ஆசிரியருக்கும், டாக்டருக்கும் எப்படி அவையெல்லாம் ஒரு தொழிலோ அப்படியே சினிமாவும்....நடிகர்கள் தங்கள் வேலையை செய்கிறார்கள்...உங்களுக்கு பிடித்தால் பாருங்கள்...மக்களுக்கு பிடிக்கவில்லையேல் எப்படிப்பட்ட நாயகனாய் இருந்தாலும் ஓரம்கட்டப்படுவான்...

சிம்புவும், விஜயும் "இது வரைக்கும் தமிழில் வந்திராத டிஃப்ரண்டான மூவி இது, இதுவரை நான் நடித்திராத டிஃபரண்டான கேரக்டர் இது, தமிழ்ச் சினிமாவுல ரொம்ப வித்தியாசமா என்னைப் பாக்கப் போறீங்க” என்று சொல்கிறார்களாம், மாதவ ராஜ் வருத்தப்படுகிறார்...

வேறு என்ன சொல்லச் சொல்கிறீர்கள் சாமி?? "நான் போன படத்துல நடிச்சேன்ல, அதே மாதிரி டான்ஸு, பழிவாங்குறக் கதை, வேற ஒண்ணும் புதுசா இல்ல" என்றா?? எந்த வியாபாரத்தில் இப்படி சொல்கிறார்கள்??

பிரபலமான கதாநாயகர்களுக்கு சமூகப் பார்வை இல்லை என்கிறார்.....அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் மற்ற எல்லோரையும் போலவே தீவிரமான கருத்துக்கள் இருக்கலாம்...அதை படத்தில் சொல்ல வேண்டிய அவசியம் என்ன?? எம்.ஆர்.ராதா சொல்லியிருக்கலாம்..அவர் காலம் வேறு...இன்றைக்கு விஜயோ, சிம்புவோ எம்.ஆர்.ராதா போல் கருத்து சொன்னால் நீங்கள் படம் பார்ப்பீர்களா? இல்லை அதை கேட்டு யாராவது திருந்தப் போகிறார்களா?? இன்றைக்கும் சாமியாருக்கு பாத பூஜை செய்ய வரிசையில் நிற்கிறார்கள்...பெரியார் சொல்லியும் திருந்தாத இவர்கள் விஜயோ சிம்புவோ சொல்லி திருந்தப் போகிறார்களா?? குஷ்பு சொன்ன ஒரு கருத்துக்கு "பலத்த" வரவேற்பளித்த சமூகம் ஆயிற்றே இது?? தமிழ்நாட்டில் வெடிகுண்டு கலாச்சாரம் என்று ரஜினி சொன்ன ஒரு கருத்தால் தானே பல பிரச்சினைகள் எழுந்தது?? ஈழப்பிரச்சினையில் கருத்து சொன்னதால் அல்லவா சீமான் உள்ளே இருக்கிறார்??

கருத்து சொல்லு, சமூகக் கருத்து சொல்லு என்று நடிகர்களை குறை சொல்லுமுன், உங்களையே கேள்வி கேட்டுக் கொள்ளுங்கள்...நடிகர் சொன்னால் நீங்கள் மாறப் போகிறீர்களா? நடிகர் கருத்து சொல்லி அவர் கார், வீடு கொளுத்தப்பட்டால், குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டால் நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்??

இரண்டு படம் வெற்றி அடைந்துவிட்டால் போதும், உடனே அரசியலுக்கு வர ஆசைப்படுகிறார்கள், முதல்வர் ஆக விரும்புகிறார்கள் என்று அடுத்த குற்றச்சாட்டு...இதை மாதவராஜ் மட்டும் சொல்லவில்லை...இன்னும் பலர், சுப்ரமணிய சாமியிலிருந்து ராமதாஸ் வரை சமுதாய அதிகாரிகளாய் தங்களை தாங்களே நியமித்துக் கொண்ட பலர் சொல்லுவது இது..

ஆனால், கேள்வி என்னவென்றால்...எந்த ஒரு தொழிலும் வெற்றிப் பெற்ற ஒருவர் அடுத்த கட்டத்திற்கு நகர விரும்புவது இயற்கை...அப்படி ஒரு உந்துதல் இல்லாதவர்கள் ஒன்று (உண்மையான) சாமியார்கள் இல்லை ஜடம்... நடிகனாய் வெற்றி பெற்ற ஒருவன் அடுத்த கட்டமாய் அரசியலை நினைப்பது தவறா?? முதல்வராய் ஆக வேண்டும் என்று ஒரு டாக்டருக்கு, ஒரு பேங்கருக்கு, ஒரு எழுத்தாளருக்கு ஆசை வரும்போது நடிகருக்கு வந்தால் என்ன தவறு? மக்களுக்கு விருப்பமிருந்தால் முதல்வர்...இல்லையேல் அடையாளம் காணாது போவார்கள்...சிவாஜியிலிருந்து, ஜானகி அம்மையார், பாக்யராஜ், ராம ராஜன் என்று அரசியலில் தோல்வி அடைந்த பட்டியல் நீளம்...

அடுத்து மாதவராஜ் சொல்லும் குற்றச்சாட்டு, உண்மையில் நடிகர்கள் மீது அல்ல, மக்களையே அவமானப்படுத்துவதாக தோன்றுகிறது..

// மக்களின் ரசனையை ஒரு அங்குலம் கூட உயர்த்தாமல், போட்டதைத் தின்னும் இழிபிறவிகள் போல இந்தக் கதாநாயகர்கள் தமிழ் மக்களை நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். //

விஜய், சிம்பு படம் பார்ப்பவர்களை, இல்லை கமர்ஷியல் படம் பார்ப்பவர்களை குறித்து நீங்கள் சொல்லியிருந்தால், நீங்கள் நடிகர்களை அல்ல, மக்களை இழிபிறவிகள் என்று அழைக்கிறீர்கள்..உங்கள் ரசனைக்கு ஒத்துவராதவர்கள், உங்களைப் போன்றே சிந்தனை இல்லாதவர்கள் இழிபிறவிகள் என்றால், உங்களையும் இன்னும் சிலரையும் தவிர மற்ற எல்லாரும் இழிபிறவிகள் ஆகிவிடுவார்களே??

இது மிக மோசமாக இருக்கிறது....நான் நாசமா போனதுக்கு காரணமே அவன் தான் என்று பொறுப்பை அடுத்தவர் தலையில் சுமத்தும் மனநிலை...ஏன் யாரோ வந்து உங்கள் ரசனையை உயர்த்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்? விஜயோ, சிம்புவோ இல்லை எந்த ஒரு நடிகராவது நீங்கள் வேறு படம் பார்க்ககூடாது என்று தடை விதித்தார்களா? இல்லையே?? உங்களுக்கு பிடித்ததை நீங்கள் பாருங்கள் ஐயா...அவர்களுக்கு தெரிந்ததை அவர்கள் செய்கிறார்கள்...வியாபாரத்தில் இந்த சரக்கு விற்கும் என்ற எண்ணத்தில் தான் படம் எடுக்கிறார்கள்...விற்காவிட்டால் தோல்வி தான்..

அடுத்து ரசனையை உயர்த்துவது என்றால் என்ன?? யாருடைய ரசனை உயர்ந்த ரசனை? ஜெய மோகனை கேட்கலாமா? சாரு நிவேதிதா? எது உயர்ந்த ரசனை என்று யார் வரையறை செய்வது?? மத்திய அரசா? மாநில அரசா? இல்லை இதற்கென்று ஒரு அமைச்சரை நியமிக்கலாமா?? அதை அறிவு ஜீவிகள் கொண்டு நிரப்பலாமா?? ஓ, மீண்டும் ஒரு பிரச்சினை... அறிவை எதைக் கொண்டு தீர்மானிப்பது??

காலையில் ஆறு மணிக்கு எழுந்து பன்னிரெண்டு மணி நேரம் பஞ்சு மில்லில் வேலைப் பார்ப்பவன் போக்கிரி போல் ஒரு படம் பார்ப்பானா இல்லை வீடு போல் ஒரு படம் பார்ப்பானா? நொந்து நூலாகியிருப்பவன் ஐம்பது ரூபாய் கொடுத்து மற்றவர்கள் நொந்து நூலாவதை பார்க்க வேண்டிய அவசியம் என்ன??

விஜய் படம் பார்ப்பதும், சிம்பு படம் பார்ப்பதும் தாழ்ந்த ரசனை என்று உங்களை நினைக்க வைப்பது எது?? இது உயர்ந்த தரம் இது தாழ்ந்த தரம் என்று எப்படி உங்களால் நிர்ணயிக்க முடிகிறது??? எனக்கு பிடித்தது உயர்ந்த தரம் மற்றவையெல்லாம் தாழ்ந்த தரம் என்றால், அது பாஸிஸத்தின் இன்னொரு முகம் அல்லவா?

அவரவருக்கு பிடித்த படத்தை அவர்கள் பார்க்கிறார்கள்....பிடிக்காவிட்டால் படம் தோல்வி...இதில் இந்த படத்தை தான் பார்க்க வேண்டும், தமிழ் சினிமாவின் கதாநாயகர்களுக்கு அறிவில்லை என்று சொல்ல நீங்கள் யார் நான் யார்?

கடைசியாக ஒன்று....

சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்!

தொடர்புடைய பதிவுகள்:

தமிழ்ச்சினிமாவில் அறிவற்றவர்கள் கதாநாயகர்கள், கதாநாயகர்களை அறிவற்றவர்கள் என்று சொன்னது தவறா?