Saturday, 29 November 2008

மும்பை தீவிரவாதம்: கருணாநிதி, காடுவெட்டி குருவும்,அப்சல்குருவும்!

சைனாவின் முக்கிய ஏற்றுமதி குறைந்த விலையில் செய்யப்படும் பொருட்கள்..ஸ்ரீலங்காவின் ஏற்றுமதி தேயிலை..பிரிட்டனின் முக்கிய ஏற்றுமதி ஃஃபினான்ஷியல் ஸெர்விஸஸ்...இந்தியாவின் முக்கிய ஏற்றுமதி ஐ.டி. செர்வீஸஸ்...ஆனால் சில நாடுகளின் முக்கிய ஏற்றுமதி தீவிரவாதம் அதனால் ஏற்படும் ஹோல்சேல் மர்டர்!


இந்த கடைசி கேட்டகரியில் வருவது பாகிஸ்தான்..மதவாதத்தையும், தீவிர வாதத்தையும் மட்டுமே ஏற்றுமதி செய்யும் இந்த பாழாய் போன, மனித நாகரீகத்தின் புற்று நோயான இந்த தேசம் அனைத்துலக தீவிரவாதிகளின் தாய்நாடு என்பதை கிட்டத்தட்ட இந்த உலகமே மிகச்சமீப காலமாக புரிந்து கொண்டு இருப்பதாக தெரிகிறது...


மும்பையில் சில காட்டுமிராண்டி மிருகங்கள், மனித உருவம் தரித்த ஜந்துக்கள் எந்த காரணமும் இன்றி அப்பாவி மக்களை கொன்று குவித்ததற்கும் இந்த தீவிரவாத தேசத்திற்கும் ஏதேனும் சம்பந்தம் உண்டா என்று எனக்குத் தெரியாது... இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை...

ஆனால், சம்பந்தம் இருந்தால் அதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை!

ஏனெனில் இந்த தேசத்தின் பின்ணனி அப்படி! ஆஃப்கனில் அமெரிக்க போர் ஆரம்பித்த காலத்திலிருந்து தீவிரவாதிகளின் மயிரைக் கூட புடுங்காமல், அமெரிக்க பணத்தில் கொழுத்த இந்த தேசம், ஆஃப்கனில் தலிபான் தறுதலைகள் ஓரளவு ஒழிக்கப்பட்ட பின், அடுத்து தனது கும்பி கழுவ என்ன செய்வது என்று யோசிப்பதாக தெரிகிறது.. இவர்களிடம் இருக்கும் ஒரே ஏற்றுமதி சரக்கு தீவிர வாதம்...கொன்று குவிப்பது... தங்களிடம் இன்னமும் சரக்கு இருக்கிறது என்று காட்ட இந்த புற்று நோய் தேசமே இதை செய்திருந்தாலும் ஆச்சரியமில்லை.

இதில் அந்த அரசுக்கும், ஜனாதிபதி, பிரதமருக்கும் நேரடி தொடர்பு இல்லை என்றாலும் கூட, அந்த அரசு எந்திரங்கள் பயன்படுத்த்ப்பட்டிருக்க கூடும்.. தலிபான் காட்டுமிராண்டிகளின் அதிகாரபூர்வ முதன்மை வேலையாளான ஐ.எஸ்.ஐ யின் பங்கு மிகவும் கேள்விக்குறியது...


அப்பிடியெல்லாம் இல்ல, பாகிஸ்தான் ஒரு புனித தேசம் என்பவர்கள் சில வாரங்களுக்கு முன் சைனா, சவுதி அரேபியா, வேர்ல்ட் பேங்க் என்று கையேந்தியதை ஞாபகப்படுத்தி கொள்வது நல்லது...அப்படியே உலகில் நடக்கும் தீவிரவாத தாக்குதல்களில் ஈடுபடும் பெரும்பான்மையான ஓநாய்கள் பாகிஸ்தானில் பயிற்சி பெற்றதாக சொல்வதையும் நினைவுப்படுத்துவது நல்லது!

ஒட்டு மொத்த‌ உல‌க‌த்தையும் ஆஃப்க‌ன் போன்று க‌ற்கால‌த்திற்கு கொண்டு செல்வ‌தே இவ‌ர்க‌ளின் நோக்க‌மாக‌ இருக்க‌க் கூடும். அதே ச‌ம‌ய‌ம் இவ‌ர்க‌ள் அணிவ‌து நைக் ஷூஸ், Gap டீ ஷ‌ர்ட்! குடிப்ப‌து ஸ்காட்ச் விஸ்கி!

இந்த‌ வெறி பிடித்த‌ மிருக‌ங்க‌ளை ஒட்டு மொத்த‌மாக‌ அழிப்ப‌து இய‌லாத‌ காரிய‌ம் என்றாலும், இந்தியாவை ம‌ட்டுமே அடிக்க‌டி தாக்குவ‌து ஏன்? மும்பை குண்டு வெடிப்பு, அக்ஷ‌ர்தாம் தாக்குத‌ல், பெங்க‌ளுரில் தாக்குத‌ல்..டெல்லி மார்க்கெட்டில் தொட‌ர் குண்டு வெடிப்பு...இப்பொழுது மீண்டும் மும்பையில் கொலை வெறி!

இவ‌ர்க‌ளுக்கு தைரிய‌ம் த‌ருவ‌து அவ‌ர்க‌ள் அடித்திருக்கும் க‌ஞ்சா, அபின் ம‌ட்டும் அல்ல‌, இன்னொரு முக்கிய‌ கார‌ண‌மும் உண்டு...

அந்த‌ முக்கிய‌ கார‌ண‌த்திற்கு ப‌ல‌ பெய‌ர்க‌ள்...சில‌ உதார‌ண‌ம்...கையாலாகாத‌, அறுப‌து வ‌ய‌திற்கு மேல் சினிமா க‌தாநாய‌க‌ன் ஆக‌ முய‌ற்சிக்கும் சிவ‌ராஜ் பாட்டீல்...பார்லிமெண்டை தாக்கி, சில‌ பாதுகாவ‌ல‌ர்க‌ளை கொன்ற‌ அப்ச‌ல் குருவை தூக்கிலிட்டால் சிறுபான்மையின‌ரின் ம‌த‌ உண‌ர்வுக‌ள் பாதிக்க‌ப்ப‌டும் என்று ஒட்டு மொத்த‌மாக‌ ஒரு ச‌மூக‌த்தையே தீவிர‌வாதியுட‌ன் இணைக்கும் முட்டாள்க‌ளான‌ காங்கிர‌ஸ்...அர‌சிய‌ல் என்றால் எவ‌ன் காலையும் ந‌க்குவேன் என்று சொல்லும் க‌ருணாநிதி....

மும்பை பிர‌ச்சினையில் த‌மிழ்நாட்டில் ஒரு முக்கிய‌ நிக‌ழ்வு பின்த‌ள்ள‌ப்ப‌ட்டு விட்ட‌து.. தேசிய‌ பாதுகாப்பு ச‌ட்ட‌த்தில் கைது செய்ய‌ப்ப‌ட்டிருந்த‌ காடுவெட்டு குரு என்ற‌ அன்னை தெர‌சாவின் ம‌று பிற‌வி மீதான‌ வ‌ழ‌க்கு வாப‌ஸ் வாங்க‌ப்ப‌ட்டு அவ‌ர் விடுத‌லை செய்ய‌ப்பட்டு இருக்கிறார்...

அவரை குண்டர் சட்டத்தில் அடைத்தது முன் இருந்த‌ ஜெ. அர‌சு அல்ல‌. இதே க‌ருணாநிதி அர‌சு தான்.. இத‌ற்கு க‌ருணாநிதி அர‌சு சொல்லிய‌ கார‌ண‌ம்...

"மாவ‌ட்ட‌ க‌லெக்ட‌ரை கொல்லும்ப‌டி தூண்டினார்...தொகுதி எம்.எல்.ஏ வை கொல்வேன் என்று பேசினார்... ம‌த்திய‌ ம‌ந்திரி ராஜா தொகுதிக்குள் வ‌ந்தால் உயிருட‌ன் திரும்பி போக‌ முடியாது என்று பேசினார்"

இது ச‌ம்ப‌ந்த‌மாக‌ "அன்னை தெர‌சா" காடுவெட்டி குரு தொட‌ர்ந்த‌ வ‌ழ‌க்கு சென்ற‌ வார‌ம் ஹை கோர்ட்டில் விசார‌ணைக்கு வ‌ந்த‌து...காடுவெட்டிக‌ளால் தாங்க‌ள் பேசிய‌தை ம‌றுக்க‌ முடிய‌வில்லை...அவ‌ரின் ஒரே வாத‌ம், "அதை நான் பொது ம‌க்க‌ளிட‌ம் பேச‌வில்லை...ஆக‌வே க‌ல‌வ‌ர‌த்தை தூண்டினேன் என்று குற்ற‌ம் சாட்ட‌ முடியாது"...ஆக‌, அவ‌ர் தான் பேசிய‌தை அவ‌ராலே ம‌றுக்க‌ முடிய‌வில்லை!

ஆனால், என்ன‌ ஆச்ச‌ரிய‌ம்....தொண்ணூற்றேழு வ‌ய‌து கிழ‌வ‌ன் ஒரு இர‌வில் ப‌தினேழு வ‌ய‌து கும‌ரியாக‌ (ஆமாம் கிழ‌வ‌ன் கும‌ர‌ன் ஆவ‌து கூட‌ இல்லை, கும‌ரியாக‌வே ஆகி விட்டான்!) ஆவ‌து போல், ஓரே வார‌த்தில் க‌ருணாநிதி அர‌சு வ‌ழ‌க்கை வாப‌ஸ் வாங்கி விட்ட‌து!

இத‌ற்கு கார‌ண‌ம் என்ன‌? "அன்னை தெர‌சா" காடுவெட்டியார் த‌ன்னை மிக‌ கேவ‌லமாக‌ பேசிய‌தாக‌ ஒப்பாரி வைத்த‌ க‌ருணாநிதி இன்று ம‌ன‌ம் மாற‌க் கார‌ண‌ம் என்ன‌? காடுவெட்டியார் நிஜ‌மாக‌வே அன்னை தெர‌சா ஆகிவிட்டாரா இல்லை வ‌ள்ள‌லார் ஆகிவிட்டாரா? இல்லை கூட்டணி வைச்சா தான் க‌ட்சி பொழைக்கும், அதுனால‌, தேச‌மாவ‌து, பாதுகாப்பாவ‌து...எவ‌ன் நாச‌மா போனா என‌க்கென்னா....கூட்ட‌ணி வ‌ச்சி, நாலு சீட்ட‌ பிடிச்சி அடுத்து சென்ட்ர‌ல்ல‌ எவ‌ன் க‌வ‌ர்ன்மென்ட் வ‌ந்தாலும் நான் ரெண்டு மினிஸ்ட‌ர் போஸ்ட் வாங்க‌ணும் என்ற‌ "உய‌ர்ந்த‌, க‌லாச்சார‌ம் மிக்க‌" அர‌சிய‌ல் கார‌ண‌மா??

அதெல்லாம் இருக்க‌ட்டும்...கருணாநிதிக்கும், மும்பை தாக்குத‌லுக்கும் என்ன‌டா ச‌ம்ப‌ந்த‌ம்...மொட்டை த‌லைக்கும் மொழ‌ங்காலுக்கும் முடிச்சி போடுற‌தே ஒன‌க்கெல்லாம் வேலையாப் போச்சி... என்று சொல்ப‌வ‌ர்க‌ளுக்கு...

இருக்கிற‌து ஐயா, இருக்கிற‌து! இவ‌ர்க‌ளின் அர‌சிய‌லில் தேச‌ப்பாதுகாப்பு ச‌ட்ட‌த்தை கேலியாக்கி விட்டார்க‌ள்..பொடா ச‌ட்ட‌த்தை வைகோ மீது பாய்ச்சி ஜெ. கேலியாக்கிய‌து போல்..

இப்ப‌டி இவ‌ர்க‌ளுக்கு வேண்டாம் என்றால் ஒருவ‌ரை கைது செய்வ‌தும், ஓட்டு பொறுக்க‌ வேண்டுமென்றால் அவ‌ரை விடுத‌லை செய்வ‌தும் என்று விளையாடியே நாச‌மாக்கி விட்டார்க‌ள்...இந்த‌ பிர‌ச்சினையில், காடுவெட்டி குருவை குண்ட‌ர் ச‌ட்ட‌த்தில் உள்ளே அடைத்த‌ க‌லெக்ட‌ரும், மாவ‌ட்ட‌ காவ‌ல் அதிகாரியும் கேலி பொருளாகி விட்டார்க‌ள்... நாளை ஒருவ‌ன் தீவிர‌வாதி என்று தெரிந்தாலும் அவ‌னை உள்ளே த‌ள்ள‌ ம‌ன‌ம், தைரிய‌ம் வ‌ருமா? எந்த‌ அர‌சிய‌ல் வியாதி ச‌ப்போர்டுக்கு வ‌ருவான் என்று யாருக்கு தெரியும்?

ஆக‌, இப்ப‌டி அர‌சிய‌லுக்காக‌ நாட்டையே நாச‌ம் செய்துவிட்டார்க‌ள்...இதில் வ‌ய‌தில் மூத்த‌ அர‌சிய‌ல்வாதி என்ப‌தால்....

க‌ருணாநிதி முத‌ல் குற்ற‌வாளி!

Sunday, 23 November 2008

நவீன விக்கிரமாதித்தன் கதைகள் - மோகத்தைக் கொன்றுவிடு

முன் அறிவிப்பு 1: வழக்கம் போல இந்த தொடரில் வரும் சம்பவங்கள், பாத்திரங்கள் அனைத்தும் உண்மையே. கதை மாந்தர்கள் மற்றும் பதிவரின் நலம் கருதி அவர்களின் அடையாளங்கள் முற்றிலும் மாற்றப்பட்டுள்ளன.

முன் அறிவிப்பு 2: காதல் தெய்வீகமானது, காமத்திற்கு அதில் இடம் இல்லை என்று கருதும் தெய்வீக காதலர்களும், காமமோ காதலோ அது ஆண்களின் ஏகபோக உரிமை, அது தான் இந்திய, தமிழக, சிந்து சமவெளி, ஹரப்பா மற்றும் மொகஞ்சதாரோ கலாச்சாரம் என்று சொல்லும் கலாச்சார காவலர்களும் தயவு செய்து இந்த தொடரை படிக்க வேண்டாம்.





அத்தியாயம் மூன்று - புதை மணல்

இதன் முந்திய பாகங்களை படிக்க இங்கே சொடுக்கவும்.
அத்தியாயம் ஒன்று, அத்தியாயம் இரண்டு


காமக் கடல்மன்னும் உண்டே அதுநீந்தும்
ஏமப் புணைமன்னும் இல்

திருக்குறள், அதிகாரம் 117, படர்மெலிந் திரங்கல்


"கைக்கிளைன்னா இன்னா?"

வேதாளத்தின் கேள்விக்கு விடை தெரியாமல் விக்கிரமாதித்தன் விழித்தான்..

"கைக்கிளைன்னா...ம்ம்ம்...எதுனா கைக்கு பக்கத்துல இருக்கிற மரக்கிளையா? ஊருல சொல்லுவாங்க..."

"ம்க்கும். உன் மண்டை கிளை. கைக்கிளைன்னா பொருந்தா காதல்..ஒனக்கு புரியற மாதிரி சொல்றதுன்னா பொருந்தா காமம்.. அதெல்லாம் பொற நானூறு, அக நானூறு படிச்சவங்களை கேக்கணும்..நீயே சால்ட்டு கொட்டாயில ஜல்ஸா பண்ற பொறம்போக்கு..உன்ட்ட போயி கேட்டேன் பாரு..எனக்கு அய்யாவோட இதயத்துல கூட எடம் கெடைக்காது போலருக்கு"

"அட சட்டி போட்ட சனியனே..இப்பிடி கைக்கிளு சைக்கிளுன்னு டைம்மை வேஸ்ட் பண்ணாத.. கெளம்பு கெளம்பு..இப்ப கெளம்பினா தான் சாயந்திரத்துக்குள்ள மந்திரவாதிய பாக்க முடியும்..."

"ஆமா அவன் பெரிய நயந்தாரா..அப்பிடியே பாத்துட்டாலும்...ரொம்ப‌ ப‌ற‌க்காத‌ மாதி...நீ என்ன‌ ஆட்சில‌யா இருக்க? ஆட்சி போன‌ ஒரு அம்மா தான் ராஜினாமா செய்யி, ராஜினாமா செய்யின்னு ப‌ற‌க்க‌றாங்க‌ன்னா நீ எதுக்கு ப‌ற‌க்குற‌?"

"ஆச்சி போனாலும் அறிக்கை விடுவாங்க...அதெல்லாம் ஒனக்கு எதுக்கு..ரொம்ப பேசுன உம் மேல மான நஷ்ட ஈடு வழக்கு தான்...பாத்துக்க..."

"அவங்க மானம் என்ன ஒரு கோடி ரூவா தான...நம்ம வடிவேலு வாங்குற சம்பளத்த விட ச்சீப்பா இருக்கு...குடுத்துட்டா போச்சி..ஆனா மானத்தை எப்பிடி நஷ்டப்படுத்துறதுன்னு தான் எனக்கு பிரியல..அது என்ன புண்ணாக்கு யாவாரமா நஷ்டமாவுறதுக்கு.."

"வேலையில்லாத வெட்டி பையன் வழுக்கையனுக்கு மொட்டை போட்டானாம்..அப்பிடி தான் இருக்கு உன் கத...இப்பிடி ஊர் வம்பு பேசுறதுக்கு பேசாம கெளம்பினா இன்னேரம் பாதி தூரம் போயிருக்கலாம்..."

"போலாம் மாதி...எதுனா சரக்கு வச்சிருக்கியா...நான் காச்சிரதையும் கெடுத்துட்ட..."

"அதெல்லாம் ஒண்ணுமில்ல....நீ வா போலாம்.."

"இரு மாதி...இவ்வளவு தூரம் வந்துட்ட...கதையை கேக்காம போனா எப்பிடி.."

"என் நேரம்..சரி என்ன கதை அது...சீக்கிரம் சொல்லித் தொலை.."

"எல்லாம் நம்ம மருத‌ காரய்ங்க கதை தான்..வைகை காஞ்சி போனாலும் வை கையை அப்பிடின்னுட்டு இருக்காய்ங்களே அவய்ங்க ஊரு கத தான்..."

தலையில் மாட்டியிருந்த சட்டியை கையில் எடுத்துக் கொண்ட வேதாளம் கதை சொல்ல ஆரம்பித்தது...
=================================


வைஜெயந்தி ஓடிக் கொண்டிருந்தாள்....அவளுக்கு மூச்சிரைத்தது...சுற்றிலும் மணல்...இது என்ன இடம்..ஏன் ஓடிக் கொண்டிருக்கிறேன்...எங்கு ஓடுகிறேன்..கால் வலிக்குதே..உக்காரலாமா...தெரியலியே..எவ்வளவு நேரம் ஓடணும்...இது என்ன யாருமே இல்ல இங்க...வெறும் பொட்டல் மணல் காடா இருக்கே...அய்யோ இது என்ன..கால் உள்ள போகுதே...இது என்ன இடம்..புதை மணலா...நான் அவ்வளவு தானா...சுபா..அய்யோ சுபா உன்னை தனியா விட்டுட்டு போறேனே.....

"ஹெல்ப்...ஹெல்ப்..யாராவது காப்பாத்துங்களேன்.."

வைஜெயந்தி அலறினாள்.. திடீரென்று அவளது முகத்தை பிடித்து யாரோ உலுக்கினார்கள்...

"ம்மா..ம்மா..என்னம்மா ஆச்சு...எந்திரிம்மா..."

வைஜெயந்திக்கு சட்டென்று விழிப்பு வந்தது...என்ன ஆயிற்று...

"என்னம்மா ஆச்சி.."

அந்த அரை இருட்டில் குழந்தை சுபா பயத்துடன் விழித்துக் கொண்டிருந்தது..

"ஒண்ணுமில்ல குட்டி...அம்மா ஏதோ படம் பார்த்தனா..அதான் கெட்ட கனா. நீ தூங்கு...காலையில ஸ்கூலுக்கு போகணுமில்ல.."

குழந்தையை படுக்க வைத்து விட்டு வைஜெயந்தி வியர்த்திருந்த முகத்தை துடைத்துக் கொண்டாள்..

என்ன ஒரு மோசமான கனவு..புதை மணலில் புதைவது போல்..டைம் என்ன...நான்கு ஆகிறது..அதி காலையில் கண்ட கனவு பலிக்குமோ...கடவுளே..
இனி தூக்கம் வராது..வெறுமனே படுத்திருக்க வேண்டியது தான்..அது இன்னும் கொடுமை...மூடிய கண்களும் விழித்திருக்கும் மனமும்...நரக வேதனை..

ஏன் என் வாழ்க்கை இப்படி போகிறது..தின்று..தூங்கி..உழைத்து..மீண்டும் தூங்கி...தின்று...உழைத்து...இது வாழ்க்கையா..சிறையா...இது தான் புதை மணலா..நான் புதைந்து கொண்டு தான் இருக்கிறேன்...உயிருடன்...

ஆஃபிஸ் ஒன்பது மணிக்கு தான்..பழங்காநத்தத்தில் இருந்து சிம்மக்கல்லில் இருக்கும் ஆஃபிஸ் என்னவோ பக்கம் தான்..ஆனால் ட்ராஃபிக் ஜாமிலும், மதுரையில் அடிக்கும் வெயிலிலும் சென்று திரும்பி வருவதற்குள் வாழ்க்கை கசந்து விடுகிறது...அப்படியே வீடு வந்தால் மட்டும் என்ன..இங்கு என்ன வாழ்கிறது...எந்த ராஜ குமாரன் காத்துக் கொண்டிருக்கிறான்...குழந்தையை தவிர...அவளும் இல்லாவிட்டால் இந்த வாழ்க்கையே அர்த்தம் இல்லாது போய்விடும்..

இன்றைக்கு ஆஃபிஸில் என்ன வேலை...தினமும் செய்யும் அதே வேலை தான்..இல்லை இன்று புதிதாய் சில இஞ்சினியர்கள் சேருகிறார்கள்..அக்கவுண்ட்ஸ் டிபார்ட்மென்டில் இருப்பதால் நான் தான் அவர்களுக்கு சம்பள கணக்கு எல்லாம் ஓபன் செய்ய வேண்டி இருக்கும்..சீக்கிரமே கிளம்ப வேண்டி இருக்கும்...சீக்கிர‌மே திரும்பி வ‌ர‌ முடிந்தால் ந‌ல்ல‌து...குழ‌ந்தை பாவ‌ம் காத்துக் கொண்டிருப்பாள்..

வைஜெய‌ந்தி புர‌ண்டு குழ‌ந்தையை இறுக‌ அணைத்து கொண்டாள்..அன்றைய‌ தின‌ம் த‌ன‌து வாழ்க்கையில் சில‌ புதிய‌ க‌ண‌க்குக‌ள் திற‌க்க‌ப்ப‌ட‌ போவ‌து அவ‌ளுக்கு தெரியாது....


=======================

குன்ற‌த்திலே கும‌ர‌னுக்கு கொண்டாட்ட‌ம்

அங்கே குவிந்த‌த‌ம்மா பெண்க‌ள் எல்லாம்

வ‌ண்டாட்ட‌ம் வ‌ண்டாட்ட‌ம்

குன்ற‌த்திலே கும‌ர‌னுக்கு கொண்டாட்டம்...

ப‌த்துக்கு ப‌த்து சைஸில் இருந்த‌ அந்த‌ அறையின் ஒரு மூலையில் அந்த‌ ப‌ழைய‌ ஆடியோ ப்ளேய‌ர் அல‌றிக் கொண்டிருந்த‌து.

"மாப்ள‌...கும‌ரா...ஒம் பேரு திருக்கும‌ர‌ன்கிற‌துக்காக‌ இப்பிடி திருப்ப‌ர‌ங்குன்ற‌த்துல‌ இருந்து கிட்டு குடிக்கும் போது சாமி பாட்டு கேட்கிற‌து ஓவ‌ர் அல‌ப்ப‌ரையா இல்ல‌..."

"மாப்ள‌ அண்டா...அதுக்கு தாண்டா எங்க‌ அப்ஸு அப்ப‌வே தெளிவா திருக்கும‌ர‌ன்னு பேரு வ‌ச்சிருக்காரு...ரொம்ப‌ தெளிவுல்ல‌...எவ‌னும் என்ன‌ ம‌ரியாத‌ இல்லாம‌ கூப்பிட‌ முடியாது..."

"வேணாம்...இதோட ஆறு ரவுண்டு ஆயிடுச்சி..மணி வேற நாலு ஆயிடுச்சி...விடியப் போவுது..இதோட நிறுத்திக்கோ..போதும்..."

"ய்யால...நாங்கல்லாம் அறுவது ரவுண்டு அடிச்சாலும் ஸ்டெடியா நிப்போம்டி..விடிய தான் போவுது மாப்ள...வேல கெடைச்சிருச்சில்ல...வாழ்க்கைல மொத வேலைங்கிறது ஒரு தடவை தான் கெடைக்கும்...அப்பவே கொண்டாடிறணும்..."

"நீ பேசுவடா...ஒனக்கெல்லாம் வேலை குடுத்தாய்ங்க பாரு..அவய்ங்கள சொல்லணும்...வேலைக்கு இன்னிக்கி தான ஜாய்ன் பண்ற...மொத நாளே இப்பிடி விடிய விடிய குடிச்சிட்டு போனா வெளங்குமா..."

"அடடா...மாப்ள...அக்கறையில நெஞ்ச நக்கிட்டடா..அப்பிடியே அந்த ஊறுகாய இங்க தள்ளு...அதையும் நக்கிராத...பூண்டு ஊறுகாயும்..பட்டை சரக்கும்...சும்மா கும்முனு தூக்குது..."

"போடாங்...முட்டாக் கூ...ஒனக்கு போயி சொன்னேன் பாரு...என்ன பிஞ்ச செருப்பால தான் அடிக்கணும்..."

"அவசரப்படாத மாப்ள...இந்த ரவுண்டு முடிச்சிட்டு ஓஞ் செருப்ப பிச்சே அடிச்சிருவோம்....அப்பிடியே..காலைல‌ என்னை நீ தான் ஆஃபிஸுல‌ டிராப் ப‌ண்ண‌னும்...என் வ‌ண்டிய‌ எங்க‌ அப்ஸு எடுத்துட்டு போறாராம்...வ‌ய‌சானாலும் அவ‌ரு அல‌ப்ப‌ரை தாங்க‌ முடிலை...இப்ப‌வும் பொட்டிக்க‌டைக்கு போற‌துனாலும் ய‌ம‌ஹாவுல‌ தான் போவேங்கிறாரு..."

"ச‌ரி ச‌ரி..ட்ராப் ப‌ண்றேன்..ஆபிசு எங்க‌ இருக்கு..."

"சிம்ம‌க்க‌ல்லுல‌ மாப்ஸ்.."

"ச‌ரி...ஆனா ஆபிஸ்ல‌ ஒழுங்கா இரு...எதுனா ஜாரியா பாத்து பின்னாடி போயிராத‌...வெட்டிபுடுவாய்ங்க‌..."

"ஆமா...நாங்க‌ ஜாரி பாக்க‌ தான் போறோம் பாரு...அட‌ப் போடா.."

"ரொம்ப‌ நேர‌ம் ஆச்சிடா..இந்தா முருக‌ன் கோவிலுக்கு டூரிஸ்டெல்லாம் வந்துட்டாய்ங்க‌...இப்ப‌ தூங்கினா தான் காலையில‌ எட்டு மணிக்காவது எந்திரிக்க‌ முடியும்.. நீ அப்பிடியே க‌ட்டைய‌ சாத்து...நான் இப்பிடி சாத்துறேன்..."

"சாத்திட்டா போச்சி..."

குடி போதையில் திருக்கும‌ர‌ன் தூங்கி போன‌ போது அன்றைய‌ தின‌ம் அவ‌னுடைய‌ வாழ்க்கையை முற்றிலும் மாற்ற‌ப் போவ‌து அவ‌னுக்கு தெரியாது...

=============================


கதையை சொல்லிக் கொண்டு வந்த வேதாளம் திடீரென நிறுத்திக் கொண்டது...

"என்ன தாளமே நிறுத்திட்ட..."

வேதாளம் இளித்தது...

"ஒனக்கு தெரியாதா மாதி...இதுக்கு மேல சொல்றதுன்னா எனக்கு எதுனா உள்ள போணும்..என்ன சரக்கு வச்சிருக்க..."

"சரக்கா...ஒரு மண்ணும் இல்ல..நீ ஒழுங்கா கதைய சொல்லு..எனக்கு நேரமாவுது.."

"ஹி ஹி ஹி...மாதி...இந்த டுபாக்கூரெல்லாம் என்ட்ட விடாத...ஒன்ன பத்தி எனக்கு தெரியாதா...கார்ல எதுனா சரக்கு இல்லாம நீ வெளிய வர மாட்டியே....என்ன சரக்கு வச்சிருக்க..."

"ம்ம்ம்...எனக்கு மட்டும் கொஞ்சமா டெக்கீலா வச்சிருக்கேன்...அதெல்லாம் ஒனக்கு பிடிக்காது..."

"டெக்கீலாவோ ஷகீலாவோ....எங்களுக்கு எல்லாம் பிடிக்கும் போ போ போயி எடுத்துட்டு வா..."

"ச்சை...ஒரு வேதாளத்துக்கு சரக்கு வாங்கி தர்ற நிலமைக்கு நான் வந்துட்டேனே.."

விக்கிரமாதித்தன் புலம்பிக் கொண்டே காரை நோக்கி நடந்தான்...

============= தொடரும் =============