பல தற்கொலைகள் ஏதோ ஒற்றைக் கணத்தின் முடிவல்ல. மிக மெதுவாக தன் போக்கில் நடக்கும் தொடர் நிகழ்வு. வெற்று சடலங்களாக மனிதர்கள் நடந்து கொண்டே இருக்கிறார்கள் எங்கும் செல்லாத ஒரு முட்டுச் சந்தை நோக்கி.
உறுபசி சம்பத்தின் மரணத்தில் தான் கதை ஆரம்பிக்கிறது. அழகர், ராமதுரை, மாரியப்பன், யாழினி என்று கல்லூரி நண்பர்கள், சம்பத்தின் மனைவி ஜெயந்தி என்று காய்ந்து போன எலும்புத் துண்டங்களாக சம்பத்தின் வாழ்க்கை சிதறிக் கிடக்கிறது.
பரீட்சைக்கு படிக்காமல் பரவி இருக்கும் பசுமைக்காகவே தமிழ் இலக்கியம் படிக்க வேண்டும் என்று சொல்லும் சம்பத், கம்பராமாயணத்தை கொளுத்தும் சம்பத், கறுப்பு சட்டை போட்டு பேராசிரியரிடம் வாக்குவாதம் செய்யும் கலகக்கார சம்பத், யாழினியிடம் ஒரே ஒரு முத்தத்திற்காக கெஞ்சும் சம்பத், குடித்து விட்டு லாட்ஜ் அறையில் வாந்தி எடுக்கும் சம்பத், மதுரையில் நட்டு போல்ட்டு விற்கும் சம்பத்...நண்பர்கள் கொடுத்த பணத்தில் பூச்செடி வியாபாரம் ஆரம்பித்து திடீரென்று அத்தனை பூந்தொட்டிகளையும் காணாமல் செய்யும் சம்பத்...பெரிய கலக பேச்சாளராக உயர்ந்து வீழ்ச்சி அடையும் சம்பத்......திடீரென்று ஒரு பெண்ணை பார்த்து இரண்டாம் நாளே அவளை மணம் செய்யும் சம்பத், அப்பனை விறகு கட்டையால் அடித்து நொறுக்கும் சம்பத், மரண படுக்கையில் பெற்றவர்களை நினைத்து அழும் சம்பத்.
சம்பத் ஓடிக் கொண்டே இருக்கிறான், மாறிக் கொண்டே இருக்கிறான். உண்மையில் அவன் ஓடுவது அவனிடமிருந்தே. அவன் வெறுப்பது அவனைத் தான்.அந்த வெறுப்பே மற்றவர்கள் மேல் தொடர்ந்து உமிழ்ப்படுகிறது. யாருமே அரவணைக்க முடியாத கற்றாழைப் போல ஆகிவிட்டேன் என்கிறான். உண்மையில் அவன் விரும்பியது அது தான். அதனாலேயே தொடர்ந்து மற்றவர்களை துரத்தியடிக்கிறான்.
சிறு வயதில் தங்கையின் மரணம் அவனை பாதித்திருக்க கூடும். மரணத்திடமிருந்து ஓட அவன் அதை நோக்கியே ஓடுகிறான். மரணத்தின் மீதான அவன் விருப்பம் பசியைப் போல உறுத்திக் கொண்டே இருக்க அவனது அத்தனை செயல்களும் தோற்றுப் போன ஒருவனின் கடைசி நேர முயற்சி போலவே இருக்கிறது.
மரண பயம் எல்லா மனிதனுக்கும் எப்பொழுதுமே இருக்கும் என்று தோன்றுகிறது. சில நேரங்களில் கூட்டில் அடங்கிய ஆமை போல அமைதியாக சில நேரங்களில் கரையில் மோதும் அலையைப் போல பேரிரைச்சலுடன் ஏதோ ஒரு விதமாக அது இருந்து கொண்டே தான் இருக்கிறது. வயதில் மூத்தவர்கள் மரணிக்கும் போது கடந்து போகும் பயம் ஒத்த வயதுடைய நண்பன் இறந்து போகும் போது வாலை குழைக்கும் நாயைப் போல ஒடுங்கிப் போகிறது, சொல்லப்படாத லட்சம் வார்த்தைகளுடன். யானையின் காலில் கட்டும் சங்கிலிப் போல மரணத்தை மறுக்க தான் குடும்பம் குழந்தை கோயில் மதம் பணம் வெற்றி தோல்வி என்று விதம் விதமான கட்டுக்கள். கீழே விழுகையில் கையில் எட்டும் மரக்கிளைகளை பற்றிக் கொள்வது போல.
”உங்களுக்கு தெரிஞ்ச யாரோ சம்பத்தாம். மெட்ராஸ்ல இறந்துட்டாராம்” தலைவலிக்கு தைலம் தேய்த்துக் கொண்டே ஒரு பெண் அறிவிக்கிறாள். உண்மையில் இதை தவிர்க்கவே சம்பத் கடைசி வரை போராடி தோற்றுப் போனான் என்று தோன்றுகிறது.
நண்பகல் பாலையின் வழியும் வெயிலைப் போல நாவல் முழுவதும் வெறுமையும் கசப்பும் வழிந்து கொண்டே இருக்கிறது. மலையை ஊர்ந்து அரிக்கும் எறும்புக் கூட்டமாக காலம் ஒவ்வொருவர் மீதும் ஊர்ந்து கொண்டே தான் இருக்கிறது.
கடலில் கரைந்து காணாமல் போகும் சம்பத்தின் சாம்பலைப் போன்று வாழ்க்கையின் தோல்வியாகவே உறுபசியை எடுத்துக் கொள்ளலாம்.
உறுபசி. சிதைவுகளின் சித்திரம்.
====================