Sunday, 13 March 2011

எரி பலி

கடவுள் ஆபிரகாமை நோக்கி “நீ உன் மகனை, நீ அன்பு கூரும் ஒரே மகனான ஈசாக்கை அழைத்துக் கொண்டு மோரியா நிலப்பகுதிக்கு செல். அங்கு நான் உனக்குக் காட்டும் மலைகளில் ஒன்றின் மேல் எரி பலியாக அவனை நீ பலியிட வேண்டும்” என்றார்.
பழைய ஏற்பாடு, அதிகாரம் 22.
==============================================
பின் வரிசையில் யாரோ ஷூக்கால்களை தரையில் நகர்த்தும் ஓசை கேட்டது. கேஸியாக இருக்கும். அவளுக்கு எங்கே போனாலும் இருப்புக் கொள்ளாது. பதினெட்டு வயதில் நானும் அவளைப் போலத்தான் இருந்தேன். எனக்கு சிரிப்பு வந்தது.  டிஷ்யூ பேப்பரால் முகத்தைத் துடைப்பது போல மறைத்துக் கொண்டேன். 


”ஆக, மிஸ் ரிச்சர்ட்சன் தன் பூனைகளை வெகுவாக நேசித்தார். இது உண்மை தானே” என் லாயர் கேட்க வெட்ரினரி டாக்டர் அப்ஸல்யூட்லி என்றார்.  என் பூனைகள் ஏமிக்கும் டாராவுக்கும் அவர் தான் டாக்டர்.  டாராவுக்கு காலில் அடிபட்டிருந்தது. அந்த கட்டை அவிழ்க்க இந்த வாரம் செல்ல வேண்டியது. அதற்குள் ஏமியும் டாராவும் செத்துப் போய்விட்டன. அனிச்சையாக நான் கைப்பையை தடவிக் கொண்டேன். ஏமி புஸ் புஸ்சென்று இருக்கும். நான் தொட்டால் அதன் காதுகள் விரைத்து வாலைத் தூக்கிக் கொண்டு என் கண்களையே ஆவலுடன் பார்க்கும். 


“அப்படியானால் மிஸ் கரோலின் ரிச்சர்ட்சன் தான் வெகுவாக நேசித்த பூனைகளை தானே ஏன் கொல்ல வேண்டும்? உங்களால் சொல்ல முடியுமா?” லாயர் கேட்க டாக்டர் தலையசைத்து என்னால் அதை நம்பவே முடியவில்லை. எனக்குத் தெரியாது. அவர் தன் பூனைகளை வெகுவாக நேசித்தார். அதை உறுதியாக சொல்ல முடியும். 


உட்கார்ந்திருந்த மூன்று நீதிபதிகளும் குறிப்பெடுத்துக் கொண்டதை கவனித்தேன். பெண் நீதிபதியின் தலை நம்ப முடியாதவர் போல குறுக்காக அசைந்தது. எனக்கு நிஷா ஞாபகம் வந்தது.  நிஷா என்று கூப்பிட்டால் அவன் இப்படித் தான் மறுப்பாக தலை அசைப்பான். நிஷான்னா கேர்ள்ஸ் நேம். கால் மீ நிஷாந்த். சொல்லும் போதெல்லாம் அவன் முகத்தில் வெட்கம் படரும். இருபது வயது ஆண் வெட்கப்பட்டு நான் பார்த்ததே இல்லை. யோசித்தால் பதினாறு வயதிலிருந்து இந்த முப்பத்தாறு வயது வரை எந்த ஆணும் வெட்கப்பட்டு நான் பார்த்ததே இல்லை. சட்டை இல்லாத உடம்புடன் ரோட்டில் அலைவார்கள். நிஷாவை அரைக் கால்சட்டையில் கூட நான் பார்த்தது இல்லை. என் கால் குச்சியா இருக்கும் அதனால் போடுவதில்லை என்று அவன் சொன்னாலும் உண்மை எனக்குத் தெரியும். அவனுக்கு அது பழக்கமில்லை. அவனால் முடியாது.  சொன்னால் இல்லை இல்லை என்று சிரிப்பான். சிரிக்கும் போது உதடுகள் கொஞ்சம் கோணலாகும். எனக்கு அவனை இறுக்க கட்டிக் கொண்டு அவன் காதை திருக வேண்டும் போலிருக்கும். இதை ஹன்னாவிடம் சொன்ன போது அவள் என் கையை கிள்ளினாள். டூ யூ லவ் ஹிம். நான் யோசிக்காமல் உடனடியாக யெஸ் என்றேன். அவளிடம் சொல்ல முடிகிறது. அவனிடம் முடியவில்லை. அவனை பார்க்கும் போதெல்லாம் என் வயது எனக்கு ஞாபகம் வருகிறது. அவன் வேறு. நான் வேறு. ஆனாலும் அவனை இறுக்கி கட்டிக் கொள்ள தோன்றுகிறது. முத்தமிட்டால் அவன் எப்படி வெட்கப்படுவான்.


அந்த வெள்ளி இரவு நைட் க்ளப்பின் இருட்டில் நான் முத்தமிட்ட போது அவன் உதடுகள் குழந்தையின் உள்ளங்கைப் போல இருந்தன. அவன் கண்கள் அப்படியாகும் என்று நான் நினைக்கவில்லை. நோ நோ சொல்லிய உதடுகள் வெகு வேகமாக துடைக்கப்பட்டதையும் நான் பார்க்க விரும்பவில்லை.  சனிக்கிழமை காலையில் காணாமல் போனவன் இரண்டு நாள் கழித்து திங்கள் இரவு வந்தான். அவன் பின்னால் அந்தப் பெண். கரோல் இது ஜெஸிக்கா. ஸாரி, இப்போ தான் இண்ட்ரோ பண்ண முடிஞ்சது. என்னோட கேர்ள் ஃப்ரண்ட். அவள் உதடுகள் திறந்து ஹாய் என்றாள். ஆஸ்ட்ரேலியன். என்னைப் பார்த்த ஜெஸிக்காவின் கண்களை என்னால் மறக்கவே முடியாது. அவமானத்தில் என் உடல் பாதியாக குறுகியது.  நான் என் அறைக்குள் வந்து கதவை இறுக்க தாழிட்டுக் கொண்டேன்.  என் உலர்ந்து போன உதடுகளை பிய்த்தெறிய என்னால் முடியாது போனது. 


நான் நிமிர்ந்து பார்த்த போது க்ரவுன் ப்ராசிக்யூஷன் லாயர் எழுந்து நின்று ஏதோ கேட்டுக் கொண்டிருக்க வெட்னரி டாக்டர் போய் வேறு யாரையோ விசாரித்துக் கொண்டிருந்தார்கள்.  ”யெஸ். ரொம்ப ஹெவி டோஸ் பாய்ஸன். இறந்து போய் எவ்வளவு நேரம் ஆச்சுன்னு சரியா சொல்ல முடியாது. மே பி எய்ட் ஹவர்ஸ். ரெண்டு பாடியும் டீ கம்போஸ் ஆகலை. ஆனா விரைச்சு போய் இருந்தது.” பூனையை சொல்றீங்களா போலீஸ் லாயர் இடைமறிக்க அந்த ஆள் “இல்லை. நான் பூனையை பார்க்கலை. நாங்க முதல்ல போனப்ப ஒரு ஆண் உடல் ஒரு பெண் உடல் இதைத் தான் பார்த்தோம். ரெண்டு பாடியும் ஒரே பெட்ல. கார்டன்ல ரெண்டு பூனையும் செத்துக் கிடந்தது அப்புறம் தான் எனக்கு தெரியும்.”


க்ரவுன் ப்ராசிக்யூஷன் லாயர் அவரை அனுப்பி விட்டு நீதிபதிகளிடம் அருகில் போய் ஏதோ சொன்னார். அவர்கள் தலையாட்டி விட்டு என் பெயரை அழைத்தார்கள். “டாக்டர் கரோலின் ரிச்சர்ட்சன். உங்கள் வீட்டில் பேயிங் கெஸ்ட்டாக தங்கியிருந்த நிஷாந்த் ராமகிருஷ்ணனையும் அவரது கேர்ள் ஃப்ரண்ட் ஜெஸிக்கா ராபர்ட்ஸையும் நீங்கள் அக்டோபர் இருபது இரண்டாயிரத்து எட்டு திங்கள் அன்று விஷமிட்டு கொன்றதை ஒப்புக் கொள்கிறீர்களா?”


நான் அவன் பெயர் நிஷா என்று நினைத்துக் கொண்டே எழுந்து நின்று ஆம் என்றேன்.


==============================================================

Tuesday, 8 March 2011

இடம்

பூனைக்குட்டிகள் எனக்கு வேண்டும்
எதிர்வீட்டு குழந்தை என் பூனைகளை அள்ளிப் போனது.
வீட்டுக் காவலுக்கு நல்லது
பெரிதாய் வளர்ந்திருந்த நாய் பென்ஷன் தாத்தாவுக்கு.
காரை நான் வைத்துக் கொள்கிறேன்
பேருதவியாய் இடுக்கண் களையும் நட்பு
உன் நிலம் என் நிலம் பிரிப்பதில்லை
வேலி விரிக்கும் தூரத்து மாமன். 
வீடு மட்டும் என் பேரில் எழுது
கரிக்கோடுகள் இல்லாத தாய்ப்பால் கணக்கு.
எத்தனை நாளானாலும் பிஸினஸை என்னிடம் விடு
வேகமாய் சொல்லும் உடன்பிறப்பு.
எல்லாவற்றுக்கும் இடம் இருக்கிறது.
இன்னமும் கிடைக்கவில்லை
என்னை விட்டுச் செல்ல ஒரு இடம்.

Wednesday, 2 March 2011

மாதொரு பாகன் - பெருமாள் முருகனின் பேயாட்டம்

குத்தாட்டம் எல்லாருக்கும் தெரியும். எத்தனை பேர் பேயாட்டம் பார்த்திருக்கிறீர்கள்? மோகினி ஆட்டமில்லை பேயாட்டம். ஊர் பக்கம் சில பேருக்கு பேய் பிடித்து ஆடுவார்கள். பேய் இருக்கிறதா தியாகராஜ பாகவதர் காலத்திலிருந்தே தமிழ் சினிமா பேய்கள் எல்லாம் ஏன் வெள்ளை உடையிலேயே திரிகிறது என்றெல்லாம் கேட்டால் பதில் சொல்ல மாட்டேன். ஆ.வி. மதனுக்கு எழுதி அனுப்புங்கள். பத்து ரூபாய் போஸ்டில் அடுத்த வருஷம் வரும்.  பேய் பிடிப்பதில் ஒரு பெரிய ஆச்சரியம் எனக்கு தெரிந்து பேய் பிடித்தவர்கள் எல்லாம் அப்பாவிகள். சத்தமாக பேசினாலே கொலைக்குற்றம் என்பது போல பேசுவார்கள். ஆனால் பேய் பிடித்து ஆட ஆரம்பித்து விட்டால் வண்டை வண்டையாக வரும்.  நான் ரொம்பவும் சின்ன பையன். ரெண்டாம் வகுப்பு என்று ஞாபகம். சாம்பார் சித்திக்கு பேய் பிடித்திருப்பதாக சொன்னார்கள். எப்பொழுது சாப்பிட போனாலும் வெண்டிக்காய் சாம்பார், அவரைக்காய் சாம்பார், வெங்காய சாம்பார் என்றே செய்வதால் நாங்கள் வைத்த ரகசிய பெயர். சாம்பார் சித்தி. இன்னொரு சித்தியும் உண்டு. அவள் பெயர் டப்பா. நாங்கள் வைத்த பெயரில்லை. நான் பிறக்கும் முன்னரே அந்தப் பெயர் தான். சாம்பார் சித்தி ரொம்பவே அப்பாவியாக இருப்பார்.  எதுக்கு அவனை திட்டிக்கிட்டே இருக்க என்று எனக்கு சப்போர்ட் செய்வதால் பிடிக்கும். அவருக்குத் தான் பேய் பிடித்து இருப்பதாகவும், பேயோட்ட பூசாரி வருவார் என்றும் காலையிலேயே சொல்லி விட்டார்கள். காலையில் இருந்தே எனக்கு பயமாகவும் சந்தோஷமாகவும் இருந்தது. பேய் ஓட்ட பூசாரி வந்தால் குட்டிச்சாத்தான் கூட்டி வருவான். நான் அதுவரை குட்டிச் சாத்தான் பார்த்ததே இல்லை. இப்பவும் தான். எட்டிப் பார்த்துக் கொண்டே இருந்து ஒரு வழியாக நன்றாக இருட்டிய பின் தான் வந்து சேர்ந்தார் அந்த ஆள். குட்டிச் சாத்தானை காணோம். கேட்டால் அதான் நீ இருக்கல்ல என்று சொல்லி கடுப்பேத்தியது வேறு கதை. 


குட்டி சாத்தானை நான் எட்டிப் பார்த்தது பற்றி இங்கே பேசப் போவதில்லை. ஆனால் அப்புறம் நடந்தது தான் விஷயம். கிள்ளி விட்டால் கூட பதிலுக்கு திட்டாத சாம்பார் சித்தி ஆடிய ஆட்டம். அவருக்கு அவ்வளவு பெரிய கண்கள் இருப்பதே எனக்கு அன்று தான் தெரிந்தது. என் அப்பாவின் முன் நின்று பேசவே யோசிப்பவர் அன்று அவரை எட்டி உதைத்தது. ஸ்பூனில் எடுத்து குடித்தால் சிந்தி விடுமாம். மோர் குடிப்பதையே டம்ளரில் ஊற்றி குடிப்பவர் கழுத்தில் வழிய வழிய பாட்டிலோடு பீர் குடித்தது. பீர் என்று பேர் பின்னாளில் தான் எனக்குத் தெரியும். சொன்னால் நம்ப வேண்டும். 


கவுண்டர் என்றதும் பின்னால் கம்பி போட்ட மாட்டு வண்டி, கன்கார்ட் விமானம் ஓட்டுவது போல அதுக்கு ஒரு ட்ரைவர், கண்ணு கூசுதுய்ய்யா என்று சொல்ல வைக்கும் வெள்ளைச் சட்டை, அழுக்கு ஜமுக்காளம், ஆலமரம், ஷூட்டிங் ஸ்பாட்டில் புளி போட்டு துலக்கிய சொம்பு, எட்டு பட்டி தீர்ப்பு என்று விஜயகுமாரோ விஜயகாந்தோ உங்கள் நினைவில் வந்து தொலைத்தால் கொஞ்சம் ஆசிட் ஊற்றி கண்ணை கழுவி விட்டு வாருங்கள். பெருமாள் முருகனின் கதை நாயகனும் ஒரு கவுண்டர் தான். காளியப்பன். வெள்ளை சொள்ளையெல்லாம் இல்லை. பெரும்பாலும் கோவணம் கட்டி ஆடு மாடு விவசாயம். மனைவி பொன்னா. ஈரோட்டு பக்கத்தில் இருக்கும் திருச்செங்கோடு என்று கதை களம். கதை நடப்பது ராஜாஜி முதல்வராக இருந்த வெள்ளையர் காலம் என்றாலும் இன்றைக்கும் திருச்செங்கோடு ஈரோடு தமிழ்நாட்டின் இன்னும் பல கிராம பஸ்ஸ்டாண்டுகளில் நீங்கள் பார்க்கும் எளிய மனிதர்கள். இந்த காலக் குறிப்பே கதை முடிய இருக்கும் நேரத்தில் போகிற போக்கில் சொல்லப்படுகிறது. ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எந்த பயனும் இல்லாத அதனாலேயே அது குறித்து எந்த கவலையும் இல்லாத மனிதர்கள். 


பிள்ளை இல்லாத காளிக்கும் பொன்னாவுக்கும் ஏற்படும் அவமானங்கள். வறடன் வறடி என்று பட்டப் பெயர். பக்கத்து வயலுக்கு பருப்பு விதைக்க பொன்னா உதவப் போய் மழையின்றி வெள்ளாமை சரியாக இல்லாது போக ”வயித்துலயே ஒண்ணும் முளைக்காத வறடி தொட்ட பருப்பு மட்டும் முளைச்சுடுமா”. காளி பொட்டன் என்று சொல்லாமல் சொல்லி பொன்னாவுக்கு வலை விரிக்கும் வேலை இல்லாத மைனர்கள். காளியப்பனும் பொன்னாவும் தங்களுக்கு தாங்கள் மட்டுமே என்று தங்கள் தொண்டுப்பட்டியிலும் வீட்டிலும் அடைந்து கிடக்க வேண்டிய நிலைக்கு தள்ளும் சமூகம். டவுன்ல இருக்கவனுங்க தான் சூது வாது புடிச்சவனுக கிராமத்துல மக்க மனுஷங்க எல்லாம் தங்கம் என்ற போலி பிம்பத்தை பெருமாள் முருகன் முதலில் உடைக்கிறார். காளியை இரண்டாம் மணம் செய்ய சொல்லி வற்புறுத்துகிறார்கள். அவனுக்கோ விருப்பமில்லை. அவனுக்கு பொன்னா முக்கியம். இரண்டாம் திருமணம் செய்து குழந்தை பிறந்து விட்டால் பொன்னா வறடி என்பது உறுதியாகி விடும். அதை அவளால் தாங்க முடியாது என்று பயம். அப்படி பிறக்காவிட்டால் அவன் வறடன் என்று நிச்சயமாகி விடும். ஊர் இன்னும் அசிங்கமாக பேசும் என்பது ஒரு புறமிருக்க இன்னொரு பெண்ணின் வாழ்வும் பாழாகி விடும். 


போகாத கோயில் இல்லை, செய்யாத பூஜை , நேர்த்திக் கடன் இல்லை. உயிரை பணயம் வைத்து மலை உச்சியில் ஒற்றையாக இருக்கும் வறடி கல்லையும் பொன்னா சுற்றியாகி விட்டது. ஆனாலும் குழந்தைக்கு வழி இல்லை. இப்படி குழந்தை இல்லாத காளி பொன்னாவின் பிரச்சினை குத்திக் கிழித்து ரத்தம் சுவைக்கும் சமூகம் என்று அமைதியாக போகும் கதை, சாம்பார் சித்தியின் பேயாட்டம் போல திடீரென்று விஸ்வரூபமெடுத்து கல் தோன்றி மண் தோன்றா காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்த குடியின் கலாச்சார கதைகளை கிழித்து முகத்தில் எறிகிறது. 


பொன்னாவின் குழந்தை பிரச்சினைக்கு காளியின் அம்மாவும் பொன்னாவின் அம்மாவும் கூடிப் பேசி ஒரு வழி கண்டு பிடிக்கிறார்கள். ஒட்டு மொத்த கதையே இந்த முடிவு தான். கணவன் மனைவி அவர்கள் குழந்தை என்ற அடிப்படை கருத்தியலை ஆட்டிப் பார்க்கிறது மாதொரு பாகன்.   பெண்ணுக்கு குழந்தை முக்கியமா கணவன் முக்கியமா எந்த எல்லை வரை செல்ல முடியும். தீர்மானிப்பது யார். முடிவு நோக்கி தள்ளும் சமூகத்தின் பொறுப்பு என்ன. 


எல்லாருக்கும் மரண பயம் இருக்கிறது. பயம் மரணமும் அதன் வலியும் அல்ல. உண்டு உடுத்தி சிரித்து இருந்த ஒரு வாழ்க்கை திடீரென்று ஒரு நாள் அறுந்து போகும் என்பது தான் பயமாக இருக்கிறது. நான் போனாலும் உலகம் இருக்கும். மாரில் அடித்து அழுபவர்கள் கூட இரண்டு நாள் இல்லாவிட்டால் இரண்டு மாதம் கழித்து சிரிக்கப் போகிறார்கள். என் இருப்பின் அடையாளங்கள் முற்றிலும் மறக்கப்படும். வெளிப்படையாக சொல்லாவிட்டாலும் என் இருத்தலின் தொடர்ச்சி என் மகன். மகள்.  நான் என்ற ஒருவன் வாழ்ந்ததின் ஒரே சாட்சி.  வாரிசு இல்லாவிட்டால் நிச்சய மரணம். மறுநாளே மறக்கப்படும் இருத்தலியம்.  அடிப்படையான மரண பயம் தான் குழந்தை விருப்பாக வெளிப்படுகிறதோ என்று நினைக்க தோன்றுகிறது.


காளிக்கு பயம் இருந்தாலும் அவனுக்கு பொன்னா முக்கியம்.  அவள் மீது காதலெனில் அவளுக்காக எதையெல்லாம் அவனால் ஒப்புக் கொள்ள முடியும்?  ஆனால் பொன்னாவோ அந்த முடிவுக்கு ஒப்பு கொள்வது மட்டுமல்ல அதை செயல்படுத்தவும் செய்கிறாள். காளி அந்த முடிவுக்கு இசைவாய் இருக்கிறான் என்று தவறாக நினைத்து அவள் அதில் ஈடுபட்டாலும் காளியால் ஒரு போதும் செய்ய முடியாத ஒன்றை அவள் செய்கிறாள். அர்த்த நாரீஸ்வரன் அர்த்தம் இழக்கிறான்.


 ”கொழந்தைய பெத்து எதுக்கு வளக்கறம்? அது நல்லா வளந்து ஆளாவோனும்னா? கொழந்தய கொஞ்சறதும் வளக்கறதும் நம்மளுக்கு தேவையா இருக்கு. அதுக்குதான் பெத்துக்கறதும் வளக்கறதும். அப்புறம் என்ன வயசான காலத்துல பையன் என்னை பார்க்கலை பிள்ள என்னயப் பாக்கலீன்னு பொலம்பறது? அதெல்லாம் புத்தி கெட்ட நாய்ங்க செய்யறது...” எட்டி உதைத்த என் சித்தியை போல பெருமாள் முருகன் போகிற போக்கில் உடைத்து நொறுக்குகிறார். ஒற்றைக் கதையில் இத்தனை பேயாட்டம் வேறு எதிலும் படித்த நினைவில்லை. என்ன வகையான பேயாட்டம் என்று படித்தால் தான் புரியும். இன்றைய எழுத்துக்களில் அழுத்தமாக சுவடு பதிக்கும் இந்த கதையை காலச்சுவடு வெளியிட்டிருப்பது மிகப் பொருத்தமாக இருக்கிறது.


மாதொரு பாகன். யானையின் தடம்.


=====================
பின் குறிப்பு 1: நன்றி சொல்வது அன்னியப்படுத்துவதாக இருந்தாலும் இந்த புத்தகத்தை அனுப்பி வைத்த நட்புக்களுக்கு நன்றி என்று சொல்வதை தவிர வேறு என்ன செய்வது என்று தெரியவில்லை. நீங்கள் அனுப்பியிராவிட்டால் யானையின் தடங்கள் எனக்கு தெரியாதே போய் இருக்கலாம். 


மாதொரு பாகன் குறித்து ஈரோடு கதிரின் விமர்சனத்தை இங்கே படிக்கலாம்.


பின் குறிப்பு 2: தமிழர்கள் இலக்கியத்தை கொண்டாடுவதில்லை என்று தினம் அறிக்கை விடும் பின்நவீனத்துவ பிதாமகரும் அவரது ரசிகர் மன்ற தலைமை நிலைய மூத்த உறுப்பினர்களும் மாதொரு பாகனை எப்படி கொண்டாடுகிறார்கள் என்று தெரிந்து கொள்ள ஆவலாய் இருக்கிறேன்.