இந்த கதை எதுக்கு என்றால் நேற்றிலிருந்து எனக்கு பரவை முனியம்மாவை கொஞ்சம் கூட பிடிக்காமல் போய்விட்டது. அவனவன் சொந்த காசில் சூனியம் வைத்துக் கொள்கிறான் என்றால் எனக்கு மட்டும் எவ்ளோ செலவானாலும் பரவால்ல என்று அடுத்தவர்கள் சூனியம் வைக்கிறார்கள். அவர்களை சொல்லியும் குற்றமில்லை. என் புத்தியை சொல்ல வேண்டும். ஒரு பாப்கார்னுக்கும் கறுப்பு காஃபிக்கும் ஆசைப்பட்டு எவனாவது எந்திரன் பார்ப்பானா?
ஒரு ரூபாய் அரிசிக்கும் வழியில்லை. ஓட்டுப் போடவும் காசு தர மாட்டேன் என்கிறார்கள். இதெல்லாம் இல்லாமல் எப்படி அய்யா ஒரு தமிழன் இருக்க முடியும். நான் தமிழனே இல்லை என்று சொன்னது போன மாசம். இது இந்த மாசம். நம்புங்கள். அதனால் தான் பாப்கார்னுக்கு ஆசைப்பட்டு கிளம்பி விட்டேன். கூட்டிப் போனவர்கள் நல்லவர்கள் தான்.பரம்பரையாக ஆட்டுக்கு மஞ்சத் தண்ணி தெளிப்பது தான் அவர்கள் வழக்கம். பாப்கார்ன், காஃபி எல்லாம் சரியாக செய்துவிட்டார்கள். வெட்டப் போகும் ஆடு மண்டையை ஆட்டினால் அவர்களும் தான் என்ன செய்வார்கள்.
குப்பனும் சுப்பனும் ஒரே மாதிரி இருப்பார்கள். ரெண்டு பேரும் நல்லவங்க தான். சுப்பனோட ஆளு சுப்பம்மாவை பார்த்ததும் குப்பனுக்கு கும்முன்னு கெளம்பிடுது லவ்ஸ். விட்டுக் கொடுத்துடுன்னு கேக்குறான். சுப்பன் விட்றா மாதிரி இல்லை. ரெண்டு பேருக்கும் ஜாரி மேட்டர்ல சண்டை வந்துடுது. சுப்பன் குப்பனை அடிச்சி பெண்டை கழட்டி குப்பையில போட்டுடறான். லவ்வு எவ்ளோ பெரிய மேட்டரு. மசுரு போனாலும் உசிரு போனாலும் லவ்வை விட்ற முடியுமா விட்டா அவன் தமிழனா அதனால குப்பன் குப்பையில இருந்து எந்திரிச்சி வந்துடறான். அவனுக்கு எல்ப்பு பண்ண சுப்பனை பிடிக்காத ஒரு ஆளு.
ஜங்க்கர் இந்தியாவின் ஆகப் பெரிய டைரக்டர். அவரு பத்து வருஷம் செட்டு போட்ட யோசிச்ச கதை. ஒலகத்துல இப்படி ஒரு படம் எங்கயுமே வந்ததில்லை. சொன்னது ரஜினியா இல்லை உலக ரஜினி ரசிக மன்ற தலைவர் திருக்குவளை மு கருணாநிதியான்னு தெரியலை.
பெரியவங்க சொன்னா பெருமாள் சொன்ன மாதிரின்னு எங்க பாட்டி சொல்லிருக்கு. அது அவங்க அம்மா என்ன சொன்னாலும் கேக்காதாம். அது வேற கதை. அப்புறம் சொல்றேன். அய்யா, நான் கேட்பதெல்லாம் ஒன்று தான். அறுபத்தாறு வயது ஆள் இருபத்தாறு வயது யூத்தா வர்றது ஓக்கே. ஆனா, அதுக்காக ஆறு வயது பையனோட ஜட்டியை போட்டுக்கிட்டு திரிஞ்சா என்ன சொல்றது?
ராணி காமிக்ஸும் இரும்புக்கை மாயாவியும் நானே படிச்சிருக்கேன். எழுத்துக் கூட்டித் தான். குப்பன் சுப்பன் கதையையும் இரும்புக்கை மாயாவி ராணி காமிக்ஸ் கதையவும் மிக்ஸ் பண்ணுங்க. அதுல கொஞ்சமா சப்பை காமெடியை ஒரு ஸ்பூன் போடுங்க. அப்புறம் கூகிள் பண்ணி, பன்னி இல்லை பண்ணி பைட்டு, பிட்டு, டெரா, ஸீட்டா,கம்ப்யூட்டர் இதெல்லாம் சேருங்க. சேர்த்தாச்சா? என்னவோ ஒண்ணு மிஸ் ஆகுதுல்ல? ரைட்டு. உங்க வீட்ல எதுனா அட்டு ம்யூசிக் இருக்கா? அட்டு இல்லாட்டி பரவால்ல. கிச்சன்ல எலி, பன்னி, எருமை எதுனா ஓட விட்டு அதை ரெக்கார்ட் பண்ணுங்க. பண்ணியாச்சா? அதை யார்னா ஒரு ரிட்டயர்டு தமிழய்யா கிட்ட குடுத்து பாட்டு எழுத சொல்லுங்க. கவனமா இருங்க. பைட்டு, பிட்டு, ஃபைட்டு, சிட்டு, அட்டு, குட்டு, பேபி,ஸ்டார் பக்ஸ் காஃபின்னு செம்மொழில எழுதணும். இல்லாட்டி திருக்குவளை மு கருணாநிதி வரி விலக்கு தரமாட்டாரு. அவரு வீட்டு சொத்தா? எல்லாம் பேரனுங்க சொத்து. வாரி வழங்கிட முடியுமா?
எல்லாம் ரெடி. எதுனா ஒரு பேரனையும் ஒரு ஜங்க்கரையும் பிடிங்க. என்னது பேரனை தெரியாதா? நீங்கள்ல்லாம் உருப்பட வழியே இல்லை. அவ்ளோ பெரிய ஃபாமிலி. ஒருத்தரை கூடவா தெரியாது? ஒரு நூறு பேரு இருப்பாங்களே?
அவ்ளோ தான். உங்க கையில ஒரு எந்திரன் இருக்கான்.உள்ளூருக்கு ரஜினி ஓக்கே. உலக அளவுல மார்க்கெட் பண்ணனுமே? யாராவது கைய பிடிச்சி இழுத்தாக் கூட ஐஸ்க்ரீம் எனக்கு பிடிக்காதுன்னு சொல்ற மாதிரி ஒரு எக்ஸ்பிரஷன் காட்டணும். கரெக்டா பிடிக்கிறீங்க போங்க. அடச்சீ. கைய விடுங்க.ஆமா. ஐஸ்வர்யாவை புக் பண்ணுங்க. அவங்களுக்கும் நடிப்புக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நாம என்ன அவங்களை நடிக்கவா சொல்ல போறோம்? நான் குடிப்பது கோக்னு சொல்ற மாதிரி ரெண்டு டயலாக் சொல்லணும். நமக்கு அவங்க போறும்.
உங்களுக்கே தெரியாம நீங்க ஒரு பெரிய புரட்சி பண்ணிட்டீங்க. இது வரைக்கும் சிம்பு, சொம்பு, டி ராஜேந்தர் இவங்க தான் தாடி வளர்த்துக்கிட்டு எனக்கு அவ வேணும்னு வஜனம் சொல்லிட்டிருந்தாங்க. ஆனா இப்ப ஒரு ரோபோ சொல்லுது. எனக்கு சனா வேணும் அதென்னய்யா சனா? என்னவோ கெட்ட கனா. விடுங்கோ. வெள்ளைக் காரன் ஸ்டீம் கண்டுபிடிச்சி ரயில் விட்டான். தமிழன் அதே ஸ்டீமை வெச்சி இட்லி சுட்டான். என்ன இருந்தாலும் கல் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடி. டாஸ்மாக்ல க்யூவில நிக்க வேண்டியதா இருக்கு. ரோபோ லவ் தான் பண்ணுதுன்னா ஜன்க்கர் அதுக்கும் மேல போறாரு. அரிமா அரிமா எனக்கு பின்னால சொறிம்மா சொரிம்மான்னு ட்ரீம்ல டூயட் வேற பாடுது. ஸ்டீமை வச்சி ட்ரைன் மட்டும் தான் விடணும்னு எவன் சொன்னான்? கம்ப்யூட்டர் கனவுல டூயட் பாடும்னு அசின் என்ன அசிமோவ் கூட நினைச்சதில்லை. ஒரே தாண்டு. இனிமே தமிழனுக்கு என்ன தெரியும்னு எவனாவது கேப்பான்? எந்திரனை பார்க்க சொல்லிடுவோம். ஒரு பய வாயை திறக்க மாட்டான்.
சரி, நாம மட்டுமா சிக்கினோம் நிறைய பேரு இருப்பாங்கன்னு தியேட்டர்ல எண்ணிப் பார்த்தா மொத்தம் முப்பத்தஞ்சி பேரு. பிரிட்டனில் அரங்கு நிறைந்த காட்சிகள். உண்மை செய்திகளை உருவாக்குவது உங்கள் சன் டிவி. சன் என்றால் தமிழ். தமிழுக்கு தலையும் கொடுப்பார் கருணாநிதி. அவர் தலை இல்லை. தினகரனில் யாராவது வேலை பார்க்கறீங்களா?
ரஜினி இமயமலைக்கு போய்ட்டாராம். அங்கயே இருந்தா அவருக்கு நல்லது. திரும்பி வந்து இன்னொரு சங்கர் படத்துல நடிச்சா அடுத்த வாய்ப்பு சங்கு மார்க் லுங்கிகள் ஜட்டிகள் விளம்பரம் தான்.
இப்படி ஒரு த்ராபையான படத்தை எடுக்க ஜன்க்கருக்கு ஐடியா கொடுத்தது சுஜாதா என்கிறார்கள். அவர் இல்லை என்பதால் வசதியாய் போயிற்று. எனக்கு என்னவோ இது பரவை முனியம்மாவின் ஐடியா என்று தான் தோன்றுகிறது. கோவில்பட்டி முறுக்கு அவனை குனிய வச்சி நொறுக்கு என்று பாடியது அவர் தானே? சந்தேகமிருந்தால் ஜிய்யாங் ஜிய்யாங் ஜினுக்கு அவனை புத்தூருக்கு அனுப்பு என்று அடுத்த வரி வேறு.
இருக்கட்டும். படுக்க வைத்து பத்து லாரியை ஏற்றியது போல எனக்கு வலிக்கிறது. நான் புத்தூருக்கு போய்விட்டு வந்து பரவை முனியம்மாவுக்கு கச்சேரியை வைத்துக் கொள்கிறேன்.
====================================
====================================