Thursday, 23 September 2010

ஆசை


உருவம் காட்டிய கண்ணாடி உடைத்து
சிதறிப் போன சில்லுகளை சேர்த்துக் கொண்டிருக்கிறேன்
என்றாவது ஒரு நாள்
ஏதேனும் ஒன்று காணாமல் போகும்.

=========================================

Monday, 13 September 2010

சிலுவை

அவர்கள் பந்தியமர்ந்து போஜனம்பண்ணுகையில், இயேசு அவர்களை நோக்கி: என்னுடனே புசிக்கிற உங்களில் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
புதிய ஏற்பாடு. மார்க்கு: அதிகாரம் 14 வசனம் 18
==================
ஏனென்று தெரியவில்லை. சில நாட்களாக உறக்கம் பிடிப்பதில்லை. விட்டு விட்டு கத்தும் தவளை போல தூக்கமும் விழிப்பும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

நான் புதர் நடுவே இருந்த அந்த கற்பாறையில் மெதுவே புரண்டு படுத்தேன். என்னை சுற்றிலும் கற்பாறைகளும் குற்றுச் செடிகளும் கடல் நடுவே துள்ளி எழும் மீன் கூட்டம் போல சூழ்ந்திருக்க மீட்பரால் ஆசீர்வதிக்கப்பட்ட மற்றவர்கள் கரை ஒதுங்கிய படகுகளை போல கால் விரித்து உறங்கிக் கொண்டிருந்தார்கள். மீட்பரை தொடர்ந்து வந்த நாள் முதலாய் இப்படி உறங்குவதே சுகமாக இருக்கிறது.

மீட்பரிடம் பேசி நாட்களாயிற்று. இப்பொழுதெல்லாம் அடிக்கடி தனிமையில் இருக்கிறார். நீண்ட நாளாய் புதைந்திருந்த திராட்சை ரசம் போல அவரிடம் இது வரை நான் காணாத ஒரு துக்கம் அடர்ந்திருக்கிறது. எப்பொழுதும் விழிப்பாயிருங்கள் என்று சொல்பவரிடம் என் தூக்கம் குறித்து கேள்வி எழுப்பவும் துணிவில்லை. நான் உறக்கம் பிடிக்காமல் புரண்டு கொண்டிருக்க மண் துளைத்து எழும் கற்றாழை போல‌ தூரத்தே நீட்டியிருந்த மற்றொரு கற்பாறையிலிருந்து அந்த மனிதன் எழுந்து நின்றான். நான் அந்த இரவில் கண்களை கசக்கிக் கொண்டு உற்று பார்த்து அது கலிலியேனாகிய யூதாஸ் காரியேத்து என்று அடையாளம் கண்ட அதே நேரம் அவன் திருடனை போல சுற்றிலும் பார்த்து விட்டு மெதுவாக எங்கோ நடக்க ஆரம்பித்தான்.

எனக்கு விழிப்பாயிருங்கள் என்று மீட்பர் சொல்லியது நினைவில் வந்து அடி வயிற்றில் சூடாக எதுவோ கசிய ஆரம்பித்தது. ஆசிர்வதிக்கப்பட்டவர்களில் யூதாஸ் மேல் எனக்கு ஒரு போதும் முழு நம்பிக்கை இருந்தது இல்லை. மீட்பர் அறியாதது ஒன்றுமில்லை என்பதால் மீட்பரை கேள்வி கேக்கவும் முடியவில்லை. நான் மெதுவே எழுந்து நின்று பாறைகளுக்கும் குத்து செடிகளுக்கும் இடையில் பதுங்கி புல் ஊறும் பாம்பு போல அவனறியாது யூதாஸை தொடர ஆரம்பித்தேன்.
============================
நான் பார்த்த போது உயரமான கற்பாறையில் இஸ்ரவேலின் ராஜாவாக‌ மீட்பர் அமர்ந்திருக்க யூதாஸ் காரியேத்து அவர் முன்னே மண்டியிட்டு இருந்தான். நிலவொளி மீட்பரின் கண்ணில் பட்டு கருணை போல வழிய நான் இருவரின் பக்கவாட்டு முகமும் தெரியும் படி பாறைகளுக்கிடையில் ஒளிந்து கொண்டேன். மணலில் புதையும் ஒட்டகத்தின் கால்கள் போல என் மனம் ஏனோ தள்ளாட ஆரம்பித்தது.

பிதாவின் சித்தப்படி நடக்கும்.இன்றிலிருந்து மூன்றாம் நாள். மீட்பரின் குரல் மெதுவாக ஒலிக்க யூதாஸ் கற்பாறையில் முகம் தேய்த்து ரபீ ரபீ என்று அலற ஆரம்பித்தான். அவன் குரல் வாதை மிகுந்த கழுதையின் குரல்வளை நெறிக்கப்படுவது போல தீனமாக இருந்தது. அவன் நீண்ட நேரம் அழுது புலம்பி என்னைக் கைவிட்டீர் பிதாவேவென்று எழுந்து நிற்க நான் ஒளிந்திருந்த நிலையில் பின் நகர்ந்து அவன் முகம் பார்த்தேன். பாறை கிழித்து தோல் வ‌ழன்ற முகத்தில் நிலவொளியுடன் ரத்தம் ஒழுக அவன் தலை கலைந்து முள்முடி சூட்டப்பட்ட மனிதன் போல இருந்தான். அவன் தள்ளாட்டத்துடன் தன் இடத்துக்கு திரும்பாது எதிர் திசையில் நடக்க ஆரம்பிக்க நான் மீட்பரிடம் பேசத் துணிவின்றி யாரும் அறியாவண்ணம் என்னிடம் வந்து படுத்துக் கொண்டேன்.
===============
அன்றிலிருந்து மூன்றாம் நாள் நாங்கள் கெத்சமனே போய் இருக்கையில் மீட்பர் மிகுந்த துக்கமாயிருந்தார். எங்களை விடுத்து தனிமையில் போய் நீண்ட நேரம் ஜெபமாயிருந்தார். பின்னர் அவர் எங்களிடையே பேசிக் கொண்டிருக்கையில் பலர் புடை சூழ வந்த யூதாஸ் ரபீ ரபீ என்று மீட்பரை கட்டியணைத்து கன்னத்தில் முத்தமிட்டான். அவனுடன் வந்தவர்கள் உடனடியாக மீட்பரை கைது செய்து அழைத்துப் போக மீட்பரின் சீடர்கள் யூதாஸ் காரியேத்துவை பலவாறாக தூஷிக்க ஆரம்பித்தார்கள்.

அவனோ அவர்களை விடுத்து மானமுள்ள‌ திருடன் போல‌ தலைகுனிந்து நடக்க ஆரம்பிக்க நான் கூட்டத்திலிருந்து விலகி அவனை பின் தொடர ஆரம்பித்தேன்.
================================
முதுகு பிறவிக் கூன் போல வளைந்து இஸ்ரவேலின் மிகப் பெரிய சிலுவையை சுமப்பவன் போல யூதாஸ் காரியேத்துவின் நடை தள்ளாடியது. கெத்சமனே நகரிலிருந்து விலகி வெகு தூரம் நடந்த அவன் அந்த காட்டுப்பகுதி வந்ததும் நின்றான். சுற்றிலும் பார்த்து விட்டு தன் பணப்பையிலிருந்து சில வெள்ளிக் காசுகளை எடுத்து வாயில் போட்டான். தோற்பையிலிருந்த நீரை குடித்து விட்டு அவன் மீண்டும் நடக்க ஆரம்பிக்க அவன் வாயில் இருந்து ரத்தம் வர ஆரம்பித்தது. அவன் மேலும் சிறிது தூரம் நடந்து வயிற்றை பிடித்துக் கொண்டு இரண்டாக மடிந்து மண்ணில் விழுந்தான்.

அவனறியாமல் பின் தொடர்ந்து கொண்டிருந்த நான் அவன் விழுந்ததும் அவனை நோக்கி ஓடினேன். அவன் வாயிலிருந்து வடிந்த ரத்தம் இஸ்ரவேலின் மண்ணை நனைக்க அவன் முகம் ரத்தத்தில் தோய்ந்திருக்க மண்ணில் புரண்டவாறே என் திசை நோக்கி கை நீட்டி கத்தினான். எனக்குத் தெரியும். உனக்கு தெரியும். எல்லாம் தெரியும்.

நான் யூதாஸ் காரியேத்து கண் சொருகி வாய் கோணி கைகள் வயிற்றை அழுத்திப் பிடித்து உடல் இரண்டாக மடிந்து வாயிலிருந்து ரத்தம் வடிய உயிர் துறப்பதை ஏதும் செய்ய முடியாமல் பார்த்துக் கொண்டிருந்தேன்.
========================

நான் ஓட்டமும் நடையுமாக கெத்சமனே திரும்பி வந்து மீட்பரின் மற்ற சீடர்கள் நின்ற கூட்டத்தில் கலந்து கொண்டேன். காவலர்கள் பேதுருவானவனிடம் மீட்பர் குறித்து விசாரிக்க அவன் அவரை ஒரு போதும் அறிகிலேன் என்று மறுதலித்தான். அப்பொழுது கோழிக் கூவிட அவன் முகம் பொத்தி பெரும் அழுகையுடன் கூட்டம் விலக்கி ஓட கூடியிருந்த மக்களில் சிலர் மீட்பரையும் சிலர் யூதாஸையும் தூஷிக்க ஆரம்பித்தார்கள்.

காவலர்களில் ஒருவன் என்னை கவனித்திருக்க வேண்டும். அவன் என்னை நோக்கி வந்து சவுக்கை நீட்டி கேட்டான். இந்த மக்கள் தூஷிப்பதை கேட்டாயா. அவர்களை நீ அறிவாயா.

நான் மறுதலிப்பாக தலையசைத்தேன். இம்மக்கள் யாரை தூஷணை செய்கிறார்கள், நான் எதுவும் அறிகிலேன்.

சொல்லும் போதே இனி எப்பொழுதும் நான் பேச முடியாது என்பதை உணர்ந்தேன். என் இதயம் திடீரென்று மிகவும் கனமாக இருந்தது.அந்த கனம் இனி ஒரு போதும் இறங்காது என்பது எனக்குத் தெரியும்.
==========================================
பின் குறிப்பு 1: இயேசு கிறிஸ்துவை காட்டிக் கொடுத்ததில் யூதாஸின் பங்கு பற்றி நிறைய விவாதம் இருக்கிறது. பிதாவின் சித்தம் படியே நடந்தது என்பது இயேசுவின் வாக்கு எனில் பழி ஏன் யூதாஸின் மேல் என்பது அதில் ஒரு முக்கிய பக்கம். ஆகவே இது முற்றிலும் என் சிந்தனை அல்ல. ஆனால், இப்படி ஒரு கோணத்தில் போர்ஹே எழுதியிருப்பதாக படித்ததும் இதை எழுதிப் பார்க்க தோன்றியது. நான் போர்ஹே எழுதியதை படித்ததில்லை என்பதால் இது காப்பி அல்ல.

பின் குறிப்பு 2: பல்வேறு எரிச்சல்களுக்கும் கசப்புகளுக்கும் மத்தியில் காலைப் பிடித்த முதலை போல கிறுக்கும் பழக்கம் தொடர்வதால் இது தமிழ்ப்பதிவுலகில் காஞ்சிரம் ஆகிக் கொண்டிருக்கும் ஒருவனின் நூற்றி ஒன்றாவது கிறுக்கல். எத்தனை காலம் தொடரும் என்று என்னை நானே கேட்டுக் கொண்டிருக்கிறேன். பார்க்கலாம்.

Friday, 10 September 2010

என் பெயரில் ஒரு போலி : எச்சரிக்கை பதிவு

கலாச்சார காவலர்களும் குடி கெடுக்கும் நாட்டமைகளும் நிறைந்த இந்த பொய் நிகர் உலகத்தில் இது நடக்கும் என்று சில வாரங்களாக எதிர்பார்த்த விஷயம் நடந்தே விட்டது. அதுவும் பிரபல பதிவர் என்று பரப்பும் போதே இது எதிர்பார்த்த
விஷயம் தான்.

கையை பிடிச்சு இழுத்த கதை கிடைக்கவில்லையோ என்னவோ என்னைப் போலவே பெயருடன் ஒரு போலி கிளம்பி வந்திருக்கிறது. நான் "அது சரி" என்று பெயர் வைத்திருந்தால் அந்த போலி "Adhusari" என்று பெயருடன் திரிகிறது.

எப்படி குடைச்சல் கொடுக்கலாம் என்று எந்த தறுதலை ரூம் போட்டு யோசித்ததோ இதை எழுதும் இன்றைக்கு 10/09/2010 அன்று சுட சுட ஒரு போலி ப்ரஃபைலை ஏற்படுத்தி என் பெயரில் கமெண்ட் போட ஆரம்பித்திருக்கிறது.

அதனால் வேறு வழியின்றி எனது ஃப்ரஃபைல் பெயருடன் எனது ப்ரஃபைல் ஐ.டியும் இணைத்து " அது சரி(18185106603874041862)" என்ற பெயரில் மட்டுமே எனது பின்னூட்டங்கள் வரும். வேறு எந்த பெயரிலும் வந்தாலும் அது போலியின் பின்னூட்டம். அதை நிராகரிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். அந்த போலி உயிரினத்தின் கமெண்டுக்கு நான் பொறுப்பல்ல.

ஆனால், இந்த ஐ.டியையும் இணைத்து போலி பெயரை உருவாக்குவது பெரிய காரியமல்ல. இந்த போலிகளை கண்டுபிடிக்க ஒரே வழி ஏற்கனவே டோண்டு ராகவன் அவர்கள் சொன்ன எலிக் குட்டி சோதனை தான். ப்ரஃபைல் பெயர் மீது மவுஸை வைத்தால் அது என் ப்ரஃபைலுக்கு செல்ல வேண்டும். எனது ப்ரஃபைலில் "முரண்தொடை, வருங்கால முதல்வர்" என்று இரண்டு தளங்கள் இருக்கும். இது தான் அது நான் இட்ட பின்னூட்டம் என்பதற்கு ஒரே அடையாளம்.

நான் அதிகம் பின்னூட்டம் இடுவதில்லை. அதனால் உங்கள் தளங்களில் என் பெயரில் பின்னூட்டம் வந்தால் தயவு செய்து அதை செக் செய்யுங்கள்.

இங்கே இணைத்திருப்பது எனது ப்ரஃபைலின் படம். பெரிதாக்க க்ளிக் செய்யவும்.


அடுத்து அந்த போலியின் ப்ரஃபைல்.
இதை பார்க்க இங்கே சுட்டவும். பெரிதாக்கி அந்த ப்ரஃபைல் என்றைக்கு உருவாக்கப்பட்டிருக்கிறது என்று கவனியுங்கள். போலியின் நோக்கம் புரியும். எட்டே முக்கால் மணிக்கு ப்ரஃபைலை உருவாக்கி உடனே ஓடோடிப் போய் நண்பர் கலகலப்ரியாவின் பதிவில் பின்னூட்டம் இட்டிருக்கிறது. அடுத்து பதிவர் மதார் அவர்களின் பதிவிலும் ஒரு பின்னூட்டம். மதாரின் பதிவில் ஆன பின்னூட்டத்தின் காரணம் யூகிக்க கஷ்டமில்லை. நேற்று இரவு குருஜி சுந்தரின் பஸ்ஸில் வினவு இடுகையில் எப்படி அவரது பெயரை இழுத்தார்கள் என்று கேள்வி கேட்டதன் பலன். அந்த வினோத உயிரி இதை கவனித்து மதாரின் பதிவில் போய் என் பெயரில் பின்னூட்டம் இட்டிருக்கிறது. (இதை படிக்கும் நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள். கூகிள் பஸ்ஸிலும் எச்சரிக்கையாக இருங்கள். குறிப்பாக அறிமுகமே இல்லாத நபர்களை தவிர்க்கலாம். இது வேண்டுகோள் மட்டுமே.)

பொய் நிகர் உலகத்தில் போலி உயிரினங்கள் பெருகிவிட்டது. இது போன்ற உயிரினங்களை கண்டு நான் சொல்வதை சொல்லாமல் நிறுத்த போவதில்லை என்றாலும் இந்த உயிரிகளை கண்டு கடும் அருவெறுப்பு ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை.


==============================