அவரது அறிக்கைப்படி, நடந்த விவகாரத்திற்கு முழு பொறுப்பு. 5.5.2003 அன்று, அன்றைக்கிருந்த ஜெயலலிதாவின் அதிமுக ஆட்சி, மத்திய அரசுக்கு எழுதிய கடிதத்தின் படியே பார்வதியம்மாள் இந்தியாவுக்குள் நுழைய தடை செய்யப்பட்டிருக்கிறது.
ஆனால், கருணாநிதி மிகத் தெளிவாக, சொல்லாது திட்டமிட்டு மறைத்த விஷயம், அன்றைக்கிருந்த மத்திய ஆட்சி வாஜ்பாய் தலைமையில், திமுகவின் ஆதரவுடன் நடந்த ஆட்சி, கருணாநிதியின் ஆட்சி. மாறன், டி.ஆர். பாலு, ஆ.ராசா என்று திமுகவின் முக்கிய புள்ளிகள் எல்லாம் ஆட்சியில் முக்கிய பங்கும், அதிகாரமும் செலுத்திய ஆட்சி. தமிழ்நாட்டு விவகாரங்களில் மாறனையும் திமுகவையும் மீறியோ, அல்லது அவர்களுக்கு தெரியாமலோ எந்த ஒரு முடிவையும் மத்திய அரசு எடுக்க முடியாத படி, திமுகவின் முழு செல்வாக்கின் கீழ் நடந்த ஆட்சி.
(இதன் பின்னரே முரசொலி மாறன் நவம்பர் 23, 2003ல் இறக்கிறார். உடல்நலமில்லாது இருந்த அவரை, இந்திய அரசின் செலவில் தனி விமானத்தில் அமெரிக்காவுக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தது இதே கருணாநிதி தான் என்பது இங்கு தேவையில்லாத விஷயம்)
அதாவது, ஜெயலலிதாவின் அதிமுக அரசு எழுதிய கடிதத்தை மாறனும், பாலுவும், கருணாநிதியும் நினைத்திருந்தால் ஏற்காது கிடப்பில் போட்டிருக்கலாம். ஆனால், கருணாநிதியின் மந்திரிகள் முழு ஒப்புதல் அளித்தே பார்வதி அம்மாள் இந்தியா உள்ளே நுழைய தடை செய்யப்பட்டிருக்கிறது! இதையே சன் டிவி மீது நடவடிக்கை எடுக்க கோரியோ, கருணாநிதியை கைது செய்ய கோரியோ ஜெ. அரசு கடிதம் கொடுத்திருந்தால் செய்திருப்பார்களா?
ஆக, இந்த மனிதத் தன்மையே இல்லாத செயலில் பொறுப்பு அதிமுகவுக்கும் ஜெயலலிதாவுக்கும் மட்டுமா? இல்லை கருணாநிதிக்கும் பங்கு உண்டா? இதைப் படிப்பவர்களும், திமுக தொண்டர்களும் முடிவு செய்து கொள்ளலாம்.
=============
இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம், விமான நிலையத்தில் நடந்த விஷயம் எதுவுமே தனக்கு இரவு 12 மணி வரை தெரியாது என்று சொல்லியிருக்கிறார். அதே சமயம், அங்கு சென்னை நகர போலீசும், விமான நிலைய பாதுகாப்பு போலீசும் குவிக்கப்பட்டிருக்கிறார்கள். பார்வதி அம்மாளை வரவேற்க சென்ற வைக்கோவும், நெடுமாறனும் உள்ளே செல்லவே முடியாது தடுத்து நிறுத்தப்பட்டிருக்கிறார்கள்.
போலீஸ் துறைக்கு பொறுப்பான முதல்வருக்கு, தலைநகரின் ஏர்போர்ட்டில் போலீஸ் குவிக்கப்படுவதே தெரியாதாம்..இது என்ன விதமான நிர்வாகம் என்ற கேள்வி எழுந்தாலும் கருணாநிதியின் வயதும் உடல்நிலையும் கருதி அதை ஒப்புக் கொள்ளலாம். ஆனால், துணை முதல்வர், அன்பழகன், வீராசாமி போன்ற மூத்த மந்திரிகள், டிஜிபி, தலைமைச் செயலாளர் என்று யாருக்குமே தெரியாதா? அப்படியானால், போலீசார் யார் உத்தரவும் இன்றி அவர்களே குவிந்து கொண்டார்களா??
===========================
அடுத்து, இந்திய இறையாண்மை குறித்து நான் கேள்வி எழுப்புவதை சில நண்பர்கள் தனிப்பட்ட முறையில் கண்டித்து இருக்கிறார்கள். அவர்களுக்கு நான் எழுப்பும் கேள்விகள்,
1. ஒரு எண்பது வயதான, பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட முதிய பெண் எந்த விதத்தில் இந்தியாவின் இறையாண்மைக்கு சவாலாக இருப்பார் என்று நினைக்கிறீர்கள்? இன்னும் பத்து வருடத்தில் உலகின் சூப்பர் பவர் ஆவோம் என்று சொல்லிக் கொண்டு இருக்கும் நாடு, நடக்கவே முடியாத ஒரு மூதாட்டியை பார்த்து தொடை நடுங்குகிறது என்று எடுத்துக் கொள்ளலாமா?
2. கார்கில் போருக்கு முக்கிய காரணம் முஷாரஃப் என்று எல்லாருக்கும் தெரியும். ஆனால், அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு கொடுத்தார்கள். உங்கள் இந்தியாவின் ஜனாதிபதியும், பிரதமரும் அவருக்கு விருந்தளித்து அவரை கடவுள் போல நடத்தினார்கள். கார்கில் போரில் இறந்து போனவர்களுக்கு இது இந்தியா செய்த துரோகமா இல்லையா? இந்தியாவுக்கு எதிராக செயல்பட்ட முஷாரஃப்ஃபுக்கு விருந்தளித்தால் அது இறையாண்மையை பாதுகாப்பதாக அர்த்தமா?
3. பார்வதி அம்மாள் ஒன்றும் விசா, பாஸ்போர்ட் என்று எதுவும் இல்லாது வந்து விடவில்லை. முறைப்படி அனுமதி பெற்றே வந்திருக்கிறார். அவரை அனுமதிக்க முடியாது என்றால் விசா தராது மறுக்க வேண்டியது தானே? உடல் நலமில்லாத ஒருவரை எதற்கு அலைக்கழிக்க வேண்டும்? யாரெல்லாம் தடை செய்யப்பட்ட லிஸ்டில் இருக்கிறார்கள் என்பது விசா வழங்கிய இந்திய தூதரகத்துக்கும் இந்திய தூதருக்கும் தெரியவில்லை, ஆனால் விமான நிலையத்தில் இருக்கும் குடியேற்ற அதிகாரிகளுக்கு பயணி விமானத்தை விட்டு இறங்கும் முன்னரே தெரிகிறது. இது தற்செயலாக நடந்த தவறா இல்லை பிரபாகரனின் தாய் என்பதற்காக அவரை வரவழைத்து அவமானப்படுத்த உங்களின் இந்திய அரசும் தமிழக அரசும் திட்டமிட்டு செய்த இழிவான செயலா?
பின் குறிப்பு: நண்பர் தமிழ்ப்ரியன், எனது முந்தைய பதிவு, அதில் சொல்லி இருக்கும் நபரின் பேச்சு போலவே நரகலான எழுத்து என்று சொல்லியிருக்கிறார். நன்றி தமிழ்ப்ரியன். நீங்கள் சொல்வது மிகவும் உண்மை. அந்த எழுத்துக்காக நான் முழு மனதுடன் எல்லோரிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். ஆனால், அரசியல் மேடையில் ஒரு பெண்ணின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி கேவலமாக பேசுவதை விட, என் எழுத்து கேவலமாக இல்லை என்றே நான் இன்னமும் நினைக்கிறேன். நன்றி.