Sunday, 14 June 2009

கறிக்கடைல வந்து சென்ட்டு பாட்லு....

கைல நாலு காசு இருந்தா, "ஏய் இங்க பூசு...லெஃப்ட்ல பூசு..ஆங்..ரைட்ல பூசு"ங்கிற மாதிரி நமக்கு முன்னாடி ரெண்டு பேரு, பின்னாடி ரெண்டு பேரு, சைட்ல நாலு பேருன்னு கித்தாப்பா திரியலாம்..ஊர்ல இருக்க ஆட்டோ, சின்ன பசங்க சைக்கிளு எல்லாத்திலயும் நம்ம மொகரைய பெருசா படம் புடிச்சி ஒட்டலாம்...அப்படியே எதுனா கோமநாதபுரம், பாமநாதபுரம் தொகுதி எம்.பி. ஆயிடலாம்...நம்மக்கிட்டயும் பேட்டின்னு எதுனா பத்திரிகைகாரய்ங்க வருவாய்ங்க....நம்ம அருமை பெருமையெல்லாம் அள்ளி வுடலாம்...

எளவு...இங்க சிங்கிள் டீக்கே சிங்கி...அதுல எங்க இருந்து அல்லக்கைங்களுக்கு படியளக்கிறது...நமக்கு நாமே கொள்கை பரப்பு செயலாளரா இருந்துக்க வேண்டியது தான்...

ஆகவே.... ஆன்றோரே, சான்றோரே,ஆய்ந்தவிந்த (அது என்ன முட்டையா??) பெரியோரோ, இளைஞர்களே, இளைஞிகளே, சிறுவர்களே, சிறுமிகளே...நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த "புரட்சி கொண்டான்", "புண்ணாக்கு விற்றான்", "டீக்கடையில் பாக்கி வைத்தான்", எங்கள் அண்ணன் "அதுசரி"யின் சூடான நேருக்கு நேர் இதோ...





1.உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா?

எந்த பேரு?? ஆங்...நீங்க கேட்டதும் தான் ஞாபகம் வருது..இந்த கழுதைக்கு கழுதைன்னு ஏன் பேரு வந்துச்சி?? அதை கய்தன்னு கூப்பிடறாய்ங்களே அதனால கய்த...ச்சீ கழுத வருத்தப்படுமா? கழுதைக்கு அந்த பேரு பிடிக்குமா பிடிக்காதா?

2. கடைசியாக அழுதது எப்பொழுது?

அது டெய்லி அளுவறது தான்....பின்ன போதை ஏர்றதுக்கு மின்னாடி குவாட்டர் தீந்து போயி கொஞ்சமா ஊறுகா மட்டும் இருந்தா அளுக வராம இன்னா பண்ணும்??

3. உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

தெர்லபா...நாமல்லாம் இங்க்க தோச்சி ச்சப்புன்னு கைநாட்டு வெய்க்கிற கேசு..

4.பிடித்த மதிய உணவு என்ன?

நல்லா சுகுரான கொஸ்டின்...தோஸ்த்து வாங்கி தர்றதா இருந்தா குவாட்டரும் கோளி பிரியாணியும்...லெக் பீசுன்னா ஜமா தான்...நாந்தான் தோஸ்த்துக்கு வாங்கி தரணும்னா தயிர் சோறும், அவய்ங்க ஓசில தர்ற ஊறுகாவும்...

5.நீங்கள் வேறு யாராவதாக இருந்தால் உங்களோட நட்பு வச்சுக்குவீங்களா ?

அய்ய...அவன் கூட போயி யார்னா பெரண்டா இருக்க முடியுமா...தாய்ளி குடிச்சான்னா பீரு பாட்டில எடுத்துக்கிட்டு சேக்காளியவே குத்த‌ வருவான்...

6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?

கடல்ல வச்சி குடிச்சா இன்னா அர்வில வச்சி குட்ச்சா இன்னா....குவாட்டரு குவாட்டரு தான்...இன்னாது குள்க்றதா....இன்னா இது கெட்ட பயக்கம்லாம்...நாம அதெல்லாம் பண்றதில்லபா...

7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

ஆம்பிளையலா இருந்தா....எதுக்கு அவய்ங்கள பார்த்துக்கிட்டு..எங்கனா பராக்கு பாத்துக்கிட்டு பேஸ்றது தான்...பொம்பிளையளா இருந்தா...தடாபுடான்னு பேசுவேன்...ஆனா நாமெல்லாம் ரொம்ப கூச்சமான ஆளுபா...அதனால தரைய பாத்துக்கிட்டு தான் பேசுறது...

8.உங்ககிட்ட உங்களுக்கு பிடித்த விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?

என்னாண்ட புட்ச்ச மேட்ரு...அல்லாரையும் நல்லவய்ங்கன்னு நம்பிர்றது...புடிக்காத மேட்டரு...அதுவும் அதேன்...

9. உங்க சரிபாதி கிட்ட உங்களுக்கு பிடித்த, பிடிக்காத விஷயம் எது?

நம்ம டாவுகிட்டியா?? புட்ச்சது குவாட்டரா இருந்தாலும் நைன்டியா இருந்தாலும் நம்க்கு சரி பாதி குடுக்குறது....புடிக்காதுன்னா....நம்ம சரக்குல சரி பாதி கேக்குறது...பாதிய அங்க குட்துட்டா எப்பிடி போதை வரும்னேன்??

10.யார் பக்கத்தில் இல்லாமல் இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்?

மெர்சலாருக்குப்பா....நம்ப தலிவரு எம்ஜியாரு தான்...

11. இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?

இன்னிக்கு இன்னா தீபாளியா...அதான் பாக்குறல்ல..நேத்தி கட்டிருந்த அதே ப்ளூ கலர் கைலியும், முண்டா பனியனும் தான்...இன்னாது பனியன் கலரா? சேப்பு கலருபா...சாயம் பூடுச்சா அதான் வெள்ளையா தெரியுது...

12. என்ன பாட்டு கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?

நம்ம டாவு எதொ பாடினு இருக்குபா...சுண்ட கஞ்சி சோறுடா...சுரும்பு கருவாடுடா...வாள மீனு காலுடா...வர்ற ஸ்டைல பாருடா....

13. வர்ண பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?

அய்ய...பேனா வெச்சி இன்னா பண்ண?

14.பிடித்த மணம்?

நல்லா பசிக்கிறப்ப பிரியாணி வாசனை..

15. நீங்க அழைக்கப் போகும் நபர்கள் யார் யார் ? ஏன் உங்களுக்கு அவர்களை பிடித்து உள்ளது. அவர்களை அழைக்கக் காரணம் என்ன ?

அய்ய..பேட்டைல நமக்கு யாரையும் தெர்யாதுபா...நம்மள மாதிரி அல்லக்கைலாம் யாரையும் கூப்ட முடியாது...நாம அழைச்சி யார்னா வரப் போறாங்களா?? பின்ன இன்னாத்துக்கு வெட்டி வேலைன்னேன்??வோணும்னா அவங்களே வந்தா தான் உண்டு...

16. உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு?

நடராசன் அண்ணனா?? நல்லா எய்துவாரு...எவன் குவாட்டர் குடுக்குறானோ அவன் பக்கம்னு நம்மள மாதிரி சைடு போடாம, நடுக்கால நின்னு எய்துவாரு...வோணும்னா நீயே இத படிச்சி பாரேன்...

17. பிடித்த விளையாட்டு?

கோல்ஃப் வெளாடுவேன்னு சொன்னா நம்பவா போறீங்க??

18. கண்ணாடி அணிபவரா?

கண்ணெல்லாம் நல்லா தான் இருக்கு...ஆனா, நம்ம கண்ணு ஊரு மேயுறத அடுத்த பயலுவ‌ பாக்க கூடாதுன்னு நம்ம தலீவரு கலிஞ்சரு மேறி கூலிங்கிளாஸ் போட்டுக்குறது...

19. எப்படிப்பட்ட திரைப்படம் பிடிக்கும்?

அல்லாம் ஆக்சனு படங்க தான்...ச்சும்மா கில்லி மாதிரி இருக்கணும்...

20.கடைசியாகப் பார்த்த படம்?

ஏதோ குவாட்டர் ஆஃப் சோலாஸ்னு சொன்னாய்ங்க...ஆஹா பேருலயெ குவாட்டரான்னு போனேன்...ஆனா அது வேற பேராமே??

21. இப்பொழுது படித்துக்கொண்டு இருக்கும் புத்தகம்?

பொஸ்தவமா?? இன்னாதிது....கறிக்கடைல வந்து செண்டு பாட்லு கேட்னுருக்க‌?? சரி கேட்டுப்புட்ட....ஒன்ன மேறி நாளைக்கி நாலு பேரு பேசக்கூடாது பாரு...அதான் தோஸ்த்து ஒருத்தன படிச்சி காட்ட சொல்லி கேட்டுக்கினுக்கிறேன்... ஒடையாருன்னு ஒரு பொஸ்தவம்...ஒரு பொஸ்தவம் இல்ல...ஆறு பொஸ்தவம்...நம்ப சாமியாரு பாலகுமாரன் எய்தினாராம்...நான் கூட நம்ப சாராய ஒடையாரு பத்தி எய்தின பொஸ்தவம்னு நெனைச்சிட்டேன்...ஆனா இது தஞ்சாவூர்ல பெர்சா இருக்கே அந்த கோய்லு பத்தின பொஸ்தவமாம்...ராசராச சோழ ஒடையாரு... அப்பாலிக்கா ....நமக்கு இங்கிலிபீசு தெரியாதுன்னு ஒரு பய சொல்லிரப்படாது பாரு...அதனால God Delusion அப்பிடின்னு ஒரு வெள்ளைக்கார தொர எய்தின புக்கு...

22.உங்களுக்கு பிடித்த சத்தம்? பிடிக்காத சத்தம்?

அய்ய...நமக்கு சத்தமே புடிக்காதுபா...

23.பிடித்த பருவ காலம் எது?

நல்லா மள பெய்ற டைம் தான்....கொட்ற மழைல நனைஞ்சிட்டு அப்பிடியே தோஸ்துங்களோட சேந்து ஒரு நாலு ரவுண்டு வுட்டுட்டு தலைக்கறி சாப்ட்ற சொகம் இருக்கே....ஆஹா...இன்னாபா இப்பெல்லாம் மளையே பேய மாட்டேங்குது...

24. உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?

டெஸ்க்டாப்பா? அப்பிடின்னா??

25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிகபட்ச தொலைவு?

ஊரெல்லாம் சுத்துறது தான்....டேப்பு வச்சில்லாம் அளக்கிறதில்ல...

26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

இல்லாம பின்ன?? பெட்டு கட்னா மூணு நாளு முளிச்சிக்கிட்டு இருப்பேன்...கட்றியா?

27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

அது அன்னியன் மேறி பெரிய லிஸ்ட்பா...அல்லாத்தையும் எய்தினா ஒங்க கெவுருமெண்டு இந்த பேட்டிய தடை பண்ணிரும்...

28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

உள்ள ஒன்ன வெச்சிட்டு வெளிய ஒண்ணு காட்றதெல்லாம் பேமானிங்க பண்றது....நாம உள்ள வெளிய எல்லாம் சாத்தான் தான்...

29. உங்களுக்கு பிடித்த சுற்றுலாத்தலம்?

டூரிஸ்டுங்க வராத ஏரியா...

30. எப்படி இருக்கணும்னு ஆசை?

இன்னா ஆசப்பட்டு இன்னா புண்ணியம்னேன்??

31. மனைவி இல்லாம செய்ய விரும்பும் காரியம்?

ஹிஹிஹி....இதெல்லாம் எப்பிடி பப்ளிக்கு கிட்ட சொல்றது??

32. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க..?

வாய்க்கைங்கிறது போட்டு மேறி...கடல்ல இர்க்க தான் போட்டு....கரைல இருந்தா அதுக்கு பேரு வேஸ்டு....

Wednesday, 3 June 2009

பசி........

"எந்த சக்களத்தி முண்ட‌ எனக்கு பொண்ணு தரேங்குறா சொல்லு..."

என்னது அசிங்கமா..எடுத்த உடனேயே சக்களத்தி..முண்டைன்னு...முகம் சுளிக்கிறீர்கள் என்றால் உங்களுக்கு மாணிக்கத்தை தெரியாது என்று அர்த்தம்....

மாணிக்கம் இப்படித் தான் வர்ஜா வர்ஜமில்லாமல்...உங்களுக்கும் எனக்கும் தெரிந்த நாகரீகம் தெரியாமல் பேசுவான்...இடுப்பில் ஒரு அழுக்கு பச்சை லுங்கியும் தோளில் ஒரு துண்டும்...சட்டையில்லாமல் கறுப்பு உடம்புடன் திரிவான்..என் மாமனின் நட்பு என்பதால் எனக்கும்...முதலில் சகித்துக் கொண்டு இப்பொழுது எனக்கு பழகி விட்டது...மாணிக்கத்துக்கு தொழில் மாடு வளர்ப்பது, வீடு வீடாக சென்று பால் ஊற்றுவது...நாலு பசு மாடு, மூணு எருமை...அவற்றின் கன்றுகள்...பத்து பதினைந்து கோழிகள்..அவற்றின் குஞ்சுகள்...இறைந்து கிடக்கும் வைக்கோல்..ஒரு ஓரமாய் அவிழ்ந்து கிடக்கும் புண்ணாக்கு மூட்டை...அவனது வீட்டை வீடு என்று யாரும் ஒப்புக் கொள்ள மாட்டார்கள்...சீக்கிரம் நாலு ஆடு வாங்குனா நல்ல காசு என்று சொல்லிக் கொண்டிருக்கிறான்...அனேகமாய் அடுத்த வாரம் இங்கு சில ஆடுகளும்...

நான் போன போது கோழிகளை பிடித்து கூண்டில் அடைத்துக் கொண்டிருந்தான்...

"ஏண்ணே...வயசு முப்பத்தஞ்சாச்சி...ஒரு கல்யாணம் பண்ணிக்க வேண்டியது தான" என்று கேட்டதற்கு தான் இந்த "சக்களத்தி முண்டை" பதில்...

"ஆமா...இப்பிடியே சொல்லிக்கிட்டு இரு...ஒரு நாளு யாரும் இல்லாம தான் சாவப் போற..."

"ஆட்டிக்கிட்டு வந்துட்டியா சாபம் குடுக்க....வர்றவ எல்லாம் ஒரு ச்சின்ன வேலையா இருந்தாலும் பரவால்ல...ஆனா மாடு வளக்குறவனுக்கு எப்பிடி பொண்ணு குடுக்கிறதுங்கிறாளுவ...ஒன்ன மாதிரி வெள்ளையும் சொள்ளையுமா மினுக்கிக்கிட்டு இருந்தா தான் பிடிக்கிது...இவளுங்களுக்காவ மாட்ட வித்துட்டு நான் என்ன செய்றது...பிச்ச எடுக்க தான் போவணும்...இதுல செவ்வாய் தோஷம் வேற...அப்புறம் எங்க இருந்து கல்யாணம்...பெருசா பேசுறான் கூமுட்ட....."

கல்யாணம் என்று யார் சொன்னாலும் அவனுக்கு கோபம் வருவதில் நியாயம் இருந்தது...இதற்கு மேல் பேசினால் என் டவுசர் கிழியும் அபாயம் இருப்பதால்...

"சரிண்ணே...டென்ஷன் ஆவாத...இன்னும் சாப்பிடல இல்ல...சரி சரி வா...பஸ் ஸ்டாண்டு வரைக்கும் போயி முட்ட பரோட்டா சாப்டலாம்..."

"முட்ட பரோட்டாவா.... கொஞ்ச இரு, இந்தா வந்துர்றேன்...."

"சாப்பிட மட்டும் ஒடனே கெளம்பிருவியே..."

"காலைலருந்து காஞ்சி போயி கெடக்கேன்...எம் பசி எனக்கு தான்டா தெரியும்..." ‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍

------------------------------------------------------------------------

கொஞ்ச நாளிலேய மாணிக்கம் வாயெல்லாம் பல்லாக எங்கள் வீட்டுக்கு வந்தான்...

"டேய் ரொம்ப படிச்சவனே...நீ சொன்ன மாதிரியே கல்யாணம் பண்ணிக்க போறேன்டா...பொண்ணெல்லாம் பார்த்தாச்சி...கரூர் பக்கத்துல..."

நிஜமாகவே சந்தோஷமாயிருந்தது...அதுக்காக வம்பிழுக்கிற சான்ஸை விட முடியுமா...

"இதப் பார்ரா...பெரிய நியூஸ் தான்...ஆமா, பொண்ணுக்கிட்ட ஒன் வீட்ல‌ பத்து பசுவும் எட்டு எருமையும் இருக்கறத சொல்லிட்டியா..இல்ல ஏமாத்திட்டியா..."

"ஒம் புத்தி ஒன்னை விட்டு எங்க போகும்...எல்லாம் சொல்லியாச்சி...."

ஆனால் அவன் என்னிடம் சொல்லாதது...அந்த பெண்ணுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி ரத்தான விஷயம்...

கல்யாணமும் நடந்தது...தெருவில் எல்லாருக்கும் பத்திரிக்கை வைத்து...சோறு போட்டு...மாணிக்கம் இள மஞ்சள் நிற பட்டு வேட்டியும் இள மஞ்சள் நிற பட்டு சட்டையும் உடுத்தி...மாரியம்மன் கோவிலில் இரவு கலை நிகழ்ச்சி என்ற பெயரில் மைக் செட்டு வைத்து...குத்தாட்டம் நடத்தி...

கல்யாணம் ஆகி மூன்று நாட்களுக்கு மாணிக்கத்தை ஆளையே பார்க்க முடியவில்லை... ‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍

----------------------------------------------------------------------------

நாலு நாள் கழித்து அன்று சாயந்தரம் வீட்டுக்கு பால் கொண்டு வந்திருந்தான்...முகத்தில் உற்சாகம் இல்லை...

"எண்ணன்ணே...ஒன்ன பார்த்தா கல்யாண களையே இல்லியெ...பொண்ணுக் கூட எதுனா பிரச்சினையா..."

"ஒண்ணுமில்லடா...ஒரு சின்ன பிரச்சினை...அவ கோவிச்சிக்கிட்டு அவங்க ஊருக்கு போயிட்டா..."

கல்யாணம் ஆன புதிதில் பெண்கள் தாய் வீட்டுக்கு போக துடிப்பது சகஜம் தான்...ஆனால் மூன்றே நாளில்??

"ஏன்ணே...நீ எதுனா சண்டை போட்டியா..."

"எல்லாம் அதே கருமம் தான்டா...அவளுக்கு வீட்ல மாடு இருக்கது பிடிக்கலை...என் மேல சாணி நாத்தம் வருதாம்...எல்லா மாட்டையும் வித்துரு....இல்லாட்டி ஒன்னைய சாணின்னு தான் கூப்பிடுவேன்னா...ரெண்டு நாளா அப்பிடி தான் கூப்பிட்டா...நேத்தி எனக்கு கோவம் வந்திடுச்சி...திட்டிட்டேன்...கோவிச்சிக்கிட்டு ஊருக்கு போயிட்டா..."

"ஒனக்கு அறிவே இல்ல...சரி வுடு...காலையில மாமா, நானெல்லாம் கருரூக்கு போய் பேசி கூட்டி வந்துருவோம்..."

எத்தனை கோர்த்தாலும் அந்த கல்யாணம் ஒரு வருடத்திற்கு மேல் ஒட்டவில்லை...அவன் மனைவி தாய் வீட்டுக்கு போனவள் அங்கே தங்கிவிட மாணிக்கம் திருவண்ணாமலை, திருப்பதி, பழனி, திருப்பரங்குன்றம் என்று போக ஆரம்பித்தான்...திடீரென்று கடவுளே இல்லை என்பான்...கொஞ்ச நாள் கழித்து மீண்டும் திருவண்ணாமலை, திருப்பதி, பழனி, திருப்பரங்குன்றம்... ‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍

-----------------------------------------------------------------------

இந்த முறை லீவில் வீட்டுக்கு போன போது மாணிக்கத்தை பார்க்க முடியவில்லை. வேறு யாரோ பால் கொண்டு வந்தார்கள்...

"எங்க மாமா...மாணிக்கம் அண்ணனை காணோம்...மாட்டெல்லாம் வித்துட்டாரா...."

மாமா கொஞ்ச நேரம் பேசாமல் இருந்தார்...

"மாணிக்கத்தை ஹாஸ்பிடல்ல சேத்துருக்கு...அதனால வர மாட்டான்..."

"ஏன் என்னாச்சி...ஒடம்பு எதுவும் சரியில்லையா..."

"ஆமா...அவனுக்கு..ம்ம்ம்ம்...அதெல்லாம் ஒனக்கெதுக்கு...விடு..."

"சொல்லுங்க...என்னாச்சி..."

"அவனுக்கு எய்ட்ஸ்டா...எங்கயோ போயி நோய வாங்கிட்டு வந்துட்டான்...இப்ப ஹாஸ்பிடல்ல வச்சி பாத்துக்கிட்டு இருக்காங்க...."

============

இந்த கதை,உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு நடத்தும் சிறுகதைப் போட்டிக்காக எழுதப்பட்டது.

========================================================