Thursday, 26 March 2009

செல்வி.ஜெயலலிதாவை புரட்சித் தலைவி என்று அழைப்பது தவறா??

இந்த திமூக்கா காரவுக இருக்காகளே அவங்களுக்கு எதுனா கோவம் வந்துட்டா அடிக்கடி அறிக்கை விட்றாங்க...ஜெயலலிதா அப்பிடி என்ன பொரச்சி பண்ணிட்டார்...அப்புறம் என்ன பொரச்சி தலைவின்னு...

எரும மாடு மல்லாக்க படுத்தா எலிக்குட்டி வந்து ஐ லவ் யூ சொல்லுமாம்...அது மாதிரி ஆயிரம் பொரச்சி பண்ணிட்டு தலீவி அமேய்திய இருக்கதுனால இந்த மாதிரி எல்லாம் கேள்வி வருது...

ஒண்ணா ரெண்டா அப்பு....அதுக்கெல்லாம் கணக்கில்ல...ஆனா உங்க வாய அடைக்கிறதுக்காக...

ஒங்க அண்ணாதுரை நெடுஞ்செழியன எப்பிடி கூப்டாரு?? தம்பி வா...தலைமை ஏற்க வா அப்படின்னாரு...ஆனா பொரச்சி தலைவி என்ன சொன்னாங்க....தலை மயிரு உதிர்ந்து போச்சி...உதிர்ந்த மயிர்கள்னு சொன்னாரா இல்லியா?? இம்புட்டி தெகிரியம் ஒங்க பார்ட்டில யாருக்காவது இருக்காப்பு?? இன்னும் எஸ்.டி.எஸ்சுன்னு ஒரு எழுவது வயசு ஆள காருக்கு பின்னாடி ஓடி வர வச்சி எக்ஸசைஸ் பண்ண விட்டது....அவரை ஜீப்புல ஃபுட்போர்டு அடிக்க வச்சதுன்னு ஏகப்பட்ட பொரச்சி இருக்கு...

ஒங்களுக்கெல்லாம் பீரு தெரியும்...டாஸ்மாக்கு பாரு தெரியும்...ஆனா மோரு மேட்டரு தெரியுமான்னேன்?? சானகி அம்மான்னு ஒருத்தங்க தான் எம்ஜியாருக்கு மோருல விஷம் வச்சி அவருக்கு டிக்கட் வாங்கி கொடுத்துட்டாங்கன்னு அந்த காலத்திலேயே அறிக்கை விட்டவங்க எங்க தலீவி...ஒங்காளு கலீஞ்சருக்கு இந்த மோரு மேட்டரு தெரியலியே??

மெட்ராஸுல சனம் கூடிப் போச்சி அதுனால ஒரு எக்ஸ்ட்ரா ஃபிட்டிங் மாதிரி துணை நகர(க)ம் அமைக்கலாம்னு கோடிக் கணக்குல செலவு பண்ண ஒங்காளு திட்டம் போடுறாரு...ஆனா கருணாநிதி குடும்பம் மெட்ராஸ விட்டு வெளிய போயிடுச்சின்னா சனத்தொகை கொறைஞ்சிடும்னு எங்க அம்மா சொன்னாங்களா இல்லியா?? அவங்க அறிவு ஒங்களுக்கு யாருக்காவது இருக்காலே??

சனத் தொகை கூடுது கூடுதுன்னு கூப்பாடு போடுறியளே...நீங்கள்லாம் வெறும் காகிதப் புலிகள் ஓய்...பொரச்சி தலைவி மாதிரி மகாமக கொளத்துல எறங்கி அப்படியே கொஞ்சம் பேரு ஈசனை பாக்க டிக்கட் வாங்கி குடுத்தாங்களே...இப்பிடி நேரடியா நடவடிக்கையில எறங்குற மொதல்வர இந்த தமிழ்நாடு பாத்துருக்கா??

உள்ளூர்ல இருந்து செக்கு வந்தாலே எனக்கெல்லாம் பயமாருக்கு...எந்த பய என்ன வில்லங்கமோன்னு...ஆனா அவங்க வெளிநாட்டுல இருந்து செக்கு வந்தாலும் அனுப்புன பய யாருன்னு தெரியாட்டியும் துணிச்சலா அதை அவங்க பேருல பேங்குல போட்டவுங்க...

அதெல்லாம் சரி தான்...பொருளாதாரம் பத்தி ஒங்க அம்மாவுக்கு என்னடே தெரியும்னு சில பயக கேக்குறானுவ...பத்தாயிரம் சம்பளம் வாங்கியே பத்தாம் தேதிக்கு மேல ஒரு ரூவா அரிசி தான் சாப்பிட வேண்டி இருக்கு....அவங்க அப்படியா?? ஒரு ரூவா சம்பளம் வாங்கியே கொட நாடு எஸ்டேட் வாங்கினவுங்க...எல்லாப் பயலும் அவங்க கிட்ட போயி டூசன் படிங்கலே..அப்பவாவது ஒங்களுக்கு வெளங்குதான்னு பாப்பம்...

நீங்க ஆச்சிக்கு வந்தா கல்வித்துறைக்கு ஒரு மந்திரிய போடுவீங்க...ஆனா கன்னத்துல அறைஞ்சிருக்கறதுக்குன்னே ஒரு மந்திரிய நியமிச்சவுங்க அவங்க...ஒங்காளும் தான் எத்தினி தடவ சி.எம்மா வந்துட்டாரு?? ஒரு தடவையாவது இப்படி ஒரு அமைச்சரை நியமிச்சி மக்கள் சேவை செஞ்சிருக்காரா???

கட்டிங் ப்ளேயரை காதுக்குள்ள உட்ட மாதிரி இருந்தாலும் எங்காளு கவுஜ எளுதுவாரு...கத எளுதுவாரு...பொரச்சி தலீவி என்ன பண்ணிட்டாங்கன்னு கேக்கப்படாது...அவங்க பொரச்சி நடிகையா இருந்த காலத்துலேயே கல்கில ஒரு தொடர் கதை எழுதுனவங்க...அவங்க பண்ண பொரச்சிய இப்பக்கூட எனக்கு எழுதக்கூசுது.....ஆன அவங்க அந்த பொரச்சிய அப்பவே பண்ணிருக்காங்க...காலக்கொடுமை அந்த பொரச்சிய முழுசா முடிக்கலை...ஏன்னா கல்கி அந்த தொடரை பாதியிலேயே நிறுத்திட்டாங்க...

பட்டியல் போட்டா போயிக்கிட்டே இருக்கும்டே...அதனால கடேசியா ஒண்ணு...ஒங்காளும் தான் ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுவதிலருந்து எலக்சன்ல நிக்கறாரு....ஆனா ஒரு தடவை... ஒரே ஒரு தடவையாவது அவரால தோக்க முடிஞ்சிருக்கா?? அவரும் ஊரு விட்டு ஊரு நின்னு பாத்தாரு...ம்ஹூம்...ஒண்ணும் முடியல... ஆனா எங்க பொரச்சி தலைவிய பாருங்க...ஆஸ்கர்ல ரகுமான் ரெண்டு அள்ளுன மாதிரி சி.எம்மா இருக்கும் போதே ஒரே தேர்தல்ல ஆண்டிப்பட்டி, பர்கூர்னு ரெண்டு எடத்துல தோத்து பொரச்சி பண்ணாங்க.. ...முடிஞ்சா ஒங்க தலீவர இத பீட் பண்ண சொல்லுங்க...அப்புறம் பேசலாம்...

Tuesday, 24 March 2009

நடிகர்கள் அறிவற்றவர்களா? பதிவர் மாதவராஜுக்கு சில பதில்கள்!

தமிழ் சினிமா கதாநாயகர்களுக்கு அறிவு இருக்கிறதா இல்லையா என்பதை தீர்மானிக்க முன், அறிவு என்பதன் அளவு கோல் என்ன?? எதைக் கொண்டு அறிவை அளப்பீர்கள்?? மாடு மேய்ப்பவர்களுக்கு கணிப்பொறி தெரியாது ஆனால் அவர்களை அறிவற்றவர்கள் என்பீர்களா இல்லை கணிப்பொறிக் காரர்களுக்கு கட்டிடம் கட்ட தெரியாது என்பதால் அவர்களை அறிவற்றவர்கள் என்பீர்களா?? என்ன தான் அளவுகோல்? சமூகப் பார்வையா?? அப்படியானால், நடிகர்களைத் தவிர தமிழ்நாட்டில் எல்லாருக்கும் சமூகப்பார்வை இருக்கிறதா??
சமூகப்பார்வைக்கும் அறிவுக்கும் என்ன தொடர்பு??

சினிமா என்பது வியாபாரம்...வியாபாரம் மட்டுமே...ஒரு பேங்கருக்கும், மீன்பிடிப்பவருக்கும், காய்கறி விற்பவருக்கும், ஆசிரியருக்கும், டாக்டருக்கும் எப்படி அவையெல்லாம் ஒரு தொழிலோ அப்படியே சினிமாவும்....நடிகர்கள் தங்கள் வேலையை செய்கிறார்கள்...உங்களுக்கு பிடித்தால் பாருங்கள்...மக்களுக்கு பிடிக்கவில்லையேல் எப்படிப்பட்ட நாயகனாய் இருந்தாலும் ஓரம்கட்டப்படுவான்...

சிம்புவும், விஜயும் "இது வரைக்கும் தமிழில் வந்திராத டிஃப்ரண்டான மூவி இது, இதுவரை நான் நடித்திராத டிஃபரண்டான கேரக்டர் இது, தமிழ்ச் சினிமாவுல ரொம்ப வித்தியாசமா என்னைப் பாக்கப் போறீங்க” என்று சொல்கிறார்களாம், மாதவ ராஜ் வருத்தப்படுகிறார்...

வேறு என்ன சொல்லச் சொல்கிறீர்கள் சாமி?? "நான் போன படத்துல நடிச்சேன்ல, அதே மாதிரி டான்ஸு, பழிவாங்குறக் கதை, வேற ஒண்ணும் புதுசா இல்ல" என்றா?? எந்த வியாபாரத்தில் இப்படி சொல்கிறார்கள்??

பிரபலமான கதாநாயகர்களுக்கு சமூகப் பார்வை இல்லை என்கிறார்.....அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் மற்ற எல்லோரையும் போலவே தீவிரமான கருத்துக்கள் இருக்கலாம்...அதை படத்தில் சொல்ல வேண்டிய அவசியம் என்ன?? எம்.ஆர்.ராதா சொல்லியிருக்கலாம்..அவர் காலம் வேறு...இன்றைக்கு விஜயோ, சிம்புவோ எம்.ஆர்.ராதா போல் கருத்து சொன்னால் நீங்கள் படம் பார்ப்பீர்களா? இல்லை அதை கேட்டு யாராவது திருந்தப் போகிறார்களா?? இன்றைக்கும் சாமியாருக்கு பாத பூஜை செய்ய வரிசையில் நிற்கிறார்கள்...பெரியார் சொல்லியும் திருந்தாத இவர்கள் விஜயோ சிம்புவோ சொல்லி திருந்தப் போகிறார்களா?? குஷ்பு சொன்ன ஒரு கருத்துக்கு "பலத்த" வரவேற்பளித்த சமூகம் ஆயிற்றே இது?? தமிழ்நாட்டில் வெடிகுண்டு கலாச்சாரம் என்று ரஜினி சொன்ன ஒரு கருத்தால் தானே பல பிரச்சினைகள் எழுந்தது?? ஈழப்பிரச்சினையில் கருத்து சொன்னதால் அல்லவா சீமான் உள்ளே இருக்கிறார்??

கருத்து சொல்லு, சமூகக் கருத்து சொல்லு என்று நடிகர்களை குறை சொல்லுமுன், உங்களையே கேள்வி கேட்டுக் கொள்ளுங்கள்...நடிகர் சொன்னால் நீங்கள் மாறப் போகிறீர்களா? நடிகர் கருத்து சொல்லி அவர் கார், வீடு கொளுத்தப்பட்டால், குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டால் நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்??

இரண்டு படம் வெற்றி அடைந்துவிட்டால் போதும், உடனே அரசியலுக்கு வர ஆசைப்படுகிறார்கள், முதல்வர் ஆக விரும்புகிறார்கள் என்று அடுத்த குற்றச்சாட்டு...இதை மாதவராஜ் மட்டும் சொல்லவில்லை...இன்னும் பலர், சுப்ரமணிய சாமியிலிருந்து ராமதாஸ் வரை சமுதாய அதிகாரிகளாய் தங்களை தாங்களே நியமித்துக் கொண்ட பலர் சொல்லுவது இது..

ஆனால், கேள்வி என்னவென்றால்...எந்த ஒரு தொழிலும் வெற்றிப் பெற்ற ஒருவர் அடுத்த கட்டத்திற்கு நகர விரும்புவது இயற்கை...அப்படி ஒரு உந்துதல் இல்லாதவர்கள் ஒன்று (உண்மையான) சாமியார்கள் இல்லை ஜடம்... நடிகனாய் வெற்றி பெற்ற ஒருவன் அடுத்த கட்டமாய் அரசியலை நினைப்பது தவறா?? முதல்வராய் ஆக வேண்டும் என்று ஒரு டாக்டருக்கு, ஒரு பேங்கருக்கு, ஒரு எழுத்தாளருக்கு ஆசை வரும்போது நடிகருக்கு வந்தால் என்ன தவறு? மக்களுக்கு விருப்பமிருந்தால் முதல்வர்...இல்லையேல் அடையாளம் காணாது போவார்கள்...சிவாஜியிலிருந்து, ஜானகி அம்மையார், பாக்யராஜ், ராம ராஜன் என்று அரசியலில் தோல்வி அடைந்த பட்டியல் நீளம்...

அடுத்து மாதவராஜ் சொல்லும் குற்றச்சாட்டு, உண்மையில் நடிகர்கள் மீது அல்ல, மக்களையே அவமானப்படுத்துவதாக தோன்றுகிறது..

// மக்களின் ரசனையை ஒரு அங்குலம் கூட உயர்த்தாமல், போட்டதைத் தின்னும் இழிபிறவிகள் போல இந்தக் கதாநாயகர்கள் தமிழ் மக்களை நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். //

விஜய், சிம்பு படம் பார்ப்பவர்களை, இல்லை கமர்ஷியல் படம் பார்ப்பவர்களை குறித்து நீங்கள் சொல்லியிருந்தால், நீங்கள் நடிகர்களை அல்ல, மக்களை இழிபிறவிகள் என்று அழைக்கிறீர்கள்..உங்கள் ரசனைக்கு ஒத்துவராதவர்கள், உங்களைப் போன்றே சிந்தனை இல்லாதவர்கள் இழிபிறவிகள் என்றால், உங்களையும் இன்னும் சிலரையும் தவிர மற்ற எல்லாரும் இழிபிறவிகள் ஆகிவிடுவார்களே??

இது மிக மோசமாக இருக்கிறது....நான் நாசமா போனதுக்கு காரணமே அவன் தான் என்று பொறுப்பை அடுத்தவர் தலையில் சுமத்தும் மனநிலை...ஏன் யாரோ வந்து உங்கள் ரசனையை உயர்த்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்? விஜயோ, சிம்புவோ இல்லை எந்த ஒரு நடிகராவது நீங்கள் வேறு படம் பார்க்ககூடாது என்று தடை விதித்தார்களா? இல்லையே?? உங்களுக்கு பிடித்ததை நீங்கள் பாருங்கள் ஐயா...அவர்களுக்கு தெரிந்ததை அவர்கள் செய்கிறார்கள்...வியாபாரத்தில் இந்த சரக்கு விற்கும் என்ற எண்ணத்தில் தான் படம் எடுக்கிறார்கள்...விற்காவிட்டால் தோல்வி தான்..

அடுத்து ரசனையை உயர்த்துவது என்றால் என்ன?? யாருடைய ரசனை உயர்ந்த ரசனை? ஜெய மோகனை கேட்கலாமா? சாரு நிவேதிதா? எது உயர்ந்த ரசனை என்று யார் வரையறை செய்வது?? மத்திய அரசா? மாநில அரசா? இல்லை இதற்கென்று ஒரு அமைச்சரை நியமிக்கலாமா?? அதை அறிவு ஜீவிகள் கொண்டு நிரப்பலாமா?? ஓ, மீண்டும் ஒரு பிரச்சினை... அறிவை எதைக் கொண்டு தீர்மானிப்பது??

காலையில் ஆறு மணிக்கு எழுந்து பன்னிரெண்டு மணி நேரம் பஞ்சு மில்லில் வேலைப் பார்ப்பவன் போக்கிரி போல் ஒரு படம் பார்ப்பானா இல்லை வீடு போல் ஒரு படம் பார்ப்பானா? நொந்து நூலாகியிருப்பவன் ஐம்பது ரூபாய் கொடுத்து மற்றவர்கள் நொந்து நூலாவதை பார்க்க வேண்டிய அவசியம் என்ன??

விஜய் படம் பார்ப்பதும், சிம்பு படம் பார்ப்பதும் தாழ்ந்த ரசனை என்று உங்களை நினைக்க வைப்பது எது?? இது உயர்ந்த தரம் இது தாழ்ந்த தரம் என்று எப்படி உங்களால் நிர்ணயிக்க முடிகிறது??? எனக்கு பிடித்தது உயர்ந்த தரம் மற்றவையெல்லாம் தாழ்ந்த தரம் என்றால், அது பாஸிஸத்தின் இன்னொரு முகம் அல்லவா?

அவரவருக்கு பிடித்த படத்தை அவர்கள் பார்க்கிறார்கள்....பிடிக்காவிட்டால் படம் தோல்வி...இதில் இந்த படத்தை தான் பார்க்க வேண்டும், தமிழ் சினிமாவின் கதாநாயகர்களுக்கு அறிவில்லை என்று சொல்ல நீங்கள் யார் நான் யார்?

கடைசியாக ஒன்று....

சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்!

தொடர்புடைய பதிவுகள்:

தமிழ்ச்சினிமாவில் அறிவற்றவர்கள் கதாநாயகர்கள், கதாநாயகர்களை அறிவற்றவர்கள் என்று சொன்னது தவறா?

Monday, 23 March 2009

காதறுந்த ஊசியும்....


இரவானாலும் பரவாயில்லை
இன்னும் கொஞ்ச தூரம் தான்...

இடப்பக்கம் திரும்பி சில காதங்கள் நடந்து
மூன்றாவது மரம் தாண்டியதும் வலப்பக்கம் போ...

உன் வலப்பக்கமா என் வலப்பக்கமா
ஏதோ வலது ஏதோ இடது
போகச் சொன்னவன் யாரென்று தெரியவில்லை
போகும் இடமும் சொல்லவில்லை...

இல்லாத இடத்துக்கு போகாத வழி...
இருக்கிறதா இல்லையா...

ஆனாலும் ஆரம்பித்தாயிற்று
போய்த் தான் ஆக வேண்டும்...

கனவுகளே இல்லாமல்
கணக்கில்லா இரவுகள்
க‌ழிந்தன இப்படியே...

இடப்பக்கம் திரும்பி வலப்பக்கம் திரும்பி
மீண்டும் வலது, மீண்டும் இடது...
இப்படியே போனால்
எல்லையில்லா பெருவெளியின்
இல்லாத எல்லைகள் முடியும் இடம் எது...

அங்குலமாய் நிலம் கடக்கும் வேளையில்
காதருகே உரசிச் சென்றது காற்று..

காதறுந்த ஊசியும் வாராது காண் கடைவழிக்கே....

==================================

(கடைசி வரி பட்டினத்தாருடையது...இந்த கிறுக்கலின் அடிப்படை அதுவே..)
படம் உதவி: Flickr.com

(This is a repost as I am away from home....As usual, it would be really helpful if any of my friends can link this in Tamil manam/Tamilish...Much appreciated. Thanks)

Friday, 20 March 2009

கள்ளுப் பானையும் கருவாட்டுக் குழம்பும்


ஏழாங்கிளாஸ் படிச்சிட்டு இருந்தேன்...நல்லா ஞாபகம் இருக்கு..ஏன்னா அப்ப தான் ஒரு வருசமா தம்மடிக்க கத்துக்கிட்டு வீட்டுக்கு தெரியாம இருக்க நெல்லிக்கா, எலுமிச்ச இலைன்னு கையில தேச்சிக்கிறது..."இப்பவும் இங்க எல்லாரும் நல்ல சொகம்...நலமறிய ஆவல்" அப்படின்னு ஆரம்பிச்சி "இந்த பண்டிகைக்கு குடும்பத்தோட வந்துரணும்...சின்னவளும் வர்றேன்னு சொல்லிருக்கா..." அப்படின்னு எங்க அம்மாவுக்கு தாத்தா தீபாவளிக்கு வர சொல்லி "இங்கிலாந்து" லெட்டர் போட்ருந்தாரு...

ஊருன்னா ரொம்ப தூரம்...எங்க அம்மாவை கேட்டா தின்னவேலிம்பாங்க...ஆனா அது தின்னவேலில இருந்து அங்கிட்டு ஒரு மூணு மணி நேரம் போகணும்...மதுரை போயி, அங்க வேற பஸ்ஸு மாறி, தின்னவேலி போயி....அப்புறம் வள்ளியூர் வரும்...ஆனா அது எங்க ஊரு இல்ல....வள்ளியூர்ல இருந்து காலைல ஒண்ணு மதியம் ஒண்ணு அப்புறம் நைட்டு கடைசி பஸ்ஸு ஒண்ணு கெளம்பி போகும்..கிட்டத்தட்ட திசையன் விளை பக்கத்துல ஒரு ச்சின்ன கிராமம்...

ஒரு வழியா கருக்கல்ல ஊருக்கு போயிட்டோம்..அப்ப தான் அந்த ஊருக்கு போறேன்..ஊரெல்லாம் நெறைய பனை மரம்...ஊருக்கு நடுவுல ஒரு பெரிய சர்ச்சு...சூசையப்பராம்....ரொம்ப நல்ல மக்கள் ஆனா ஆம்பளைங்க நிறைய பேரு சட்டை போடாம இருந்தாங்க...மக்களை விட அதிகமா ஆடு...கோழி..சின்ன பொண்ணுங்க பசங்க எல்லாருக்கும் என்னை, எங்க அக்கா, அண்ணனையெல்லாம் பார்த்து ரொம்ப சிரிப்பு....ஏன்னு கேட்டா நாங்க பேசுற தமிழு நல்லாவே இல்லியாம்.....

தாத்தாவுக்கு என்னை பாத்து ரொம்ப சந்தோஷம்...நான் ஹாஸ்டல்ல இருந்து படிச்சதுனால அவரு என்னை அப்ப தான் ரெண்டாவது தடவையா பார்க்கிறாரு..மொத தடவை பார்த்தப்ப டவுசர் போடாம இருந்தனாம்...(மனுசனுக்கு கொழுப்ப பாருன்னு நினைச்சிக்கிட்டேன்..)

தீவாளின்னா சும்மாவா...எல்லாருக்கும் ட்ரஸ் எடுக்கணுமில்ல...அதனால எங்க அம்மா, சித்தி, மாமா எல்லாரும் பக்கத்துல டவுனுக்கு கெளம்பி போயிட்டாங்க...டவுனுன்னா திசையன்விளை...இல்லாட்டி வள்ளியூரு..சரியா ஞாபகம் இல்ல...அப்படியே நம்ம உடன்பிறப்புகளையும் அதாங்க...எங்க அண்ணனுங்க, அக்காவையெல்லாம் கூட்டிக்கிட்டு போயிட்டாங்க...நான் பக்கத்து தெரு எட்வினு, அவங்க அக்கா தேவக்கனி இவங்க கூட பம்பரம் சுத்த போயிட்டதுனால என்னை விட்டுட்டு போயிட்டாங்க...ஐடியா குடுத்தது வழக்கம் போல எங்க அக்கா தான்னு நினைக்கிறேன்...

நான் திரும்பி வந்து ஒரே அழுகை...என்னடே பொட்டக்குட்டி மாதிரி அழுதுகிட்டு இருக்கன்னு எங்க தாத்த என்னை வெளிய கூட்டிக்கிட்டு போயிட்டாரு...எங்கயா?? வேற எங்க...சாயங்காலம் ஆனா அவரு தெனமும் போற எடத்துக்கு தான்...

அவருக்கு டெய்லி கள்ளு குடிச்சாகணும்...நைட்டானா ஊருக்கு கொஞ்சம் வெளிய ஜெயராஜூ தோட்டத்து பின்னாடி கள்ளு விப்பாங்க...நல்லா புளிச்ச கள்ளு... அவரு ஒரு மூணு சட்டி கள்ளு குடிச்சாரு...சைடுக்கு சுருட்டு...அப்புறம் ஏதோ வறுத்த கறி...நானும் பார்த்துட்டே இருந்தேன்...இந்தாளு எப்பிடி குடிக்கிறார்னு பாக்குறதுக்கா நம்மள கூட்டி வந்தாரு....தாத்தா எனக்கு அப்பிடின்னேன்...அவருக்கு பயங்கர சிரிப்பு...அவரு சேக்காளிங்க வேற...தாத்தனுக்கு தப்பாத பேரன்...விதை ஒண்ணு போட்டா சொரை ஒண்ணு மொளைக்குமான்னு சொலவடை வேற...ஒனக்கு இல்லாமயாடேன்னுட்டு எங்க தாத்தா இல்ல வேற யாரோ ஒரு சட்டில கள்ளு குடித்தாங்க...குடிச்சா.....ய்யே...செம புளிப்பு...ஏதோ பத்து நாள் வச்சிருந்த மோர் மாதிரி....ஆனா விடாம குடிச்சிட்டேன்...பின்ன ஏழாங்கிளாஸ் படிச்சிக்கிட்டு இதைக் கூட குடிக்க முடியாட்டி என்ன அர்த்தம்??

அப்புறமா அ‍ப்பிடியே ஜெயராஜூ தோட்டத்து நடுவுல நடந்து தாத்தா என்ன பாட்டி வீட்டுக்கு கூட்டிப் போனாரு...பாட்டிக்கு நாங்க வருவோம்னு தெரியுமா இல்ல அவங்க வழக்கமா சமைக்கிறது அப்படி தானான்னு தெரில...நல்லா குண்டு குண்டா கொஞ்சம் ரோஸ் கலர்ல அரிசி...நெத்திலி கருவாட்டு கொழம்பு...அது நெத்திலி கருவாடுன்னு எனக்கு அப்ப தெரியாது...ஏன்னா எங்க வீட்ல எல்லாரும்ம் சைவம்....அரிசி என்ன இவ்ளோ குண்டா இருக்கு எனக்கு ஓட்டல்ல வாங்கி குடுன்னு தாத்தாக் கிட்ட மொதல்ல அடம்பிடிச்சாலும் அப்புறமா நானும் சாப்டுட்டேன்...சும்மா சொல்லக் கூடாது...நெத்திலி கருவாடும் குண்டு அரிசியும் செம காம்பினேஷன்...

நல்லா தின்னு முடிச்சதும், இந்த பயல வீட்டுல உட்டுட்டு வர்றேன்ன்னு எங்க தாத்தா என்ன திருப்பி வீட்டு பக்கத்துல விட்டுட்டு திரும்பி போயிட்டாரு...இங்க வந்தா டவுனுக்கு போயிருந்த உடம்பொறப்பெல்லாம் வந்துட்டாங்க...என்னைப் பார்த்ததுமே அடிக்கணும்னு தோணும் போல...எங்கடா போன கொரங்குன்னு எங்க அக்கா நறுக்குன்னு ஒரு கொட்டு...சாப்ட்டு தூங்குடான்னு எங்க அம்மா சொன்னாங்க...நான் சாப்டுட்டேன்னு சொன்னேனா.... எங்க அம்மாவுக்கு டவுட் வந்துருச்சி...சாப்ட்டியா...என்ன சாப்பிட்ட...தெனமும் சாம்பாரும் மோரும் சாப்ட்றவங்க கிட்ட கருவாடு சாப்ட்டேன்னு சொல்ல எனக்கு என்ன கோட்டியா புடிச்சிருக்கு...கத்திரிக்கா கொழம்பு...தாத்தாவோட சாப்பிட்டேன்னு சொன்னேன்...எங்க அம்மாவுக்கு அவ்ளோ கோவம்...பின்னிட்டாங்க...கருவாடு சாப்டதுக்கு இம்புட்டு அடியான்னு ரொம்ப நேரம் அழுதுகிட்டு இருந்தேன்...

ரொம்ப நாள் கழிச்சி புரிஞ்சது...அடி கருவாடு சாப்டதுக்கு இல்ல..கருவாட்டு கொழம்பு செஞ்சி சோறு போட்டது என்னோட இன்னொரு பாட்டி...ஆமா எங்க தாத்தாவுக்கு ரெண்டு வொய்ஃபாம்! ரெண்டு கல்யாணம் பண்ணக் கூடாதாமே?

(இப்ப எதுக்கு இந்த கருவாட்டுக் கதைன்னு கேக்குறவங்களுக்கு...மிஸஸ் டவுட்டோட இந்த பதிவை பார்த்ததும் என்னோட கொசுவத்தி புகைய ஆரம்பிச்சிடுச்சி..அதான் இந்த மொக்கை...)

(படம் உதவி: Google.com)

====================================

Saturday, 14 March 2009

ரஜினி அரசியலுக்கு வரலாமா?


எனக்கு ரஜினிகாந்த்தை பிடிக்கும்...எவ்வளவு பிடிக்கும் என்றால்...மூன்றாம் வகுப்பு படிக்கும் போது உனக்கு என்னை எவ்ளோ பிடிக்கும் என்று கேட்ட ஸ்ரீநிதியிடம் சொன்னது போல்...இரண்டு கைகளையும் அகல விரித்து...இவ்ளோ பிடிக்கும் என்று சொல்ல தோன்றுகிறது...

ஒருவரை ஏன் பிடிக்கவில்லை என்று சொல்வது சுலபம்...சிரிப்பது பிடிக்கவில்லை...நடப்பது பிடிக்கவில்லை...ஹேர் ஸ்டைல் பிடிக்கவில்லை....எண்ணி முடியா காரணங்கள்...எல்லையில்லா பட்டியல் அது... ஆனால் ஒருவரை ஏன் பிடிக்கிறது என்பதற்கு காரணம்...எப்படி சொல்வது?

ரஜினியை ஏன் பிடிக்கிறது என்பதற்கு பெரிய காரணம் எதுவும் எனக்கு சொல்லத் தெரியவில்லை...நடிப்பா?? இருக்க முடியாது...ரஜினியை விட மிகச்சிறந்த நடிகர்கள்...மார்லன் பிரான்டோ...அல் பசினோ...ராபர்ட் டி நீரோ...ரஸல் க்ரோ...இன்னும் பலர்...ஆனால் அதிகம் சொல்ல தேவையில்லை...கமல்ஹாசன்...ஆஸ்கர் விருது...ஆப்பம் சுட்ற ஆயா விருது...எந்த விருதும் தேவையில்லை...சிகரங்களை கடந்த உண்மையான கலைஞன்...பதினாறு வயதினிலே சப்பாணி ஆரம்பித்து...தசாவதாரம் பல்ராம் நாயுடு வரை...சிகரங்களை கடப்பது மட்டுமல்ல...மற்றவர்கள் ஏற புதிய சிகரங்களை படைக்கும் கலைஞன்... ஆனால், கமல்ஹாசன் மீது ஒரு மிகச்சிறந்த கலைஞன் என்ற மரியாதை மட்டுமே இருக்கிறது....என்னோட பிரண்ட்...ரொம்ப மேல போயிட்டான்...என்று சொல்ல தோன்றவில்லை... ரஜினி என்ன ஸ்பெஷல்??

தியாகராஜ பாகவதர், எம்.ஜி.யார், சிவாஜி..சிவக்குமார், ஜெய்சங்கர்...கதாநாயகன் ஆகணும்னா சிவப்பா அழகா இருக்கணும்...நல்லவனா இல்லாட்டியும் பரவால்லை...நல்லவனா நடிக்கணும்...என்று இருந்த தமிழ் சினிமாவை... ஆள் கறுப்பு...கலைந்த தலை...ஸ்க்ரீன்ல வர்றதே கையில ஒரு தம்மோட தான்...அப்படி ஒண்ணும் உயரமில்லை...சிரிச்சா எம்.ஜி.ஆர், சிவாஜி மாதிரி அழகா இல்ல...ஒரு வில்லத்தனம் தான் தெரியுது... தமிழ் சினிமாவை தலைகீழாக புரட்டி போட்டதினால் பிடித்திருக்கிறதா??

இல்லை ரஜினி ஒரு மென்டல்...ரொம்ப குடிச்சி மூளை கெட்டு போயிடுச்சி...எப்பவும் போதை தான்...இப்ப பெரிய ஓபனிங் மோகனுக்கு தான்...எல்லா படமும் நூறு நாள்..லேடீஸ் எல்லாம் அவ்ளோ க்ரேஸ்...இன்னும் ரெண்டு படம்...அப்பறம் மோகன் தான் சூப்பர் ஸ்டார்... ஆனந்த் பாபு தான் இப்ப சூப்பர் ஸ்டார்...அவரு டான்ஸுக்குன்னே படம் ஓடும்.. ராமராஜன் தான் இன்னிக்கு தமிழ்நாட்டுல டாப்...ஏ, பி, சி, டின்னு எல்லா சென்டர்லயும் ஹிட்டாகிற மாஸ் ஹீரோ...அடுத்த சி.எம்மே அவரு தான்...ரஜினி எல்லாம் சும்மா...இனிமே எதுனா அப்பா, தாத்தா ரோல்ல நடிக்க வேண்டியது தான்....

ரஜினியின் முடிவுரை...ஒரு முறை அல்ல, இரு முறை அல்ல...ஒருவர் அல்ல..இருவர் அல்ல‌....பல முறை, பலரால் எழுதப்பட்டிருக்கிறது...

ஆனால், ரஜினி இன்னமும் இருக்கிறார்...அவருக்கு முன்னால் வந்த, பின்னால் வந்த, அவரை ஒழிக்க முற்பட்ட, ஒழிந்து விடுவார் என்று மகிழ்ந்த பலரும்...எங்கே இருக்கிறார்கள்??? அவர்களின் முகவரி என்ன??

ரஜினி அன்றைக்கும் சரி, இன்றைக்கும் சரி அதிரடி அறிக்கைகள் விட்டதில்லை..அடுத்த சி.எம். நான் தான் என்று ரகசியமாக அமைச்சரவை அமைப்பதில்லை..

யோசித்துப் பார்த்தால்...எத்தனை முறை ஜெயித்தாய் என்பது முக்கியமல்ல, எத்தனை முறை வீழ்ச்சியில் இருந்து எழுந்தாய் என்பது தான் உன் பலம் என்ற தோல்வியில் இருந்து எழும் குணமே எனக்கு ரஜினியிடம் அதிகம் பிடித்திருக்கிறது... (முதல்வர் கருணாநிதியிடம் எனக்கு பிடித்ததும் இது தான்..)

அதிகம் பிடித்த ஒருவர் அரசியலுக்கு வரலாமா?? வந்தால்??.... ரஜினி தமிழன் அல்ல...தமிழ்நாட்டை தமிழன் தான் ஆள வேண்டும் என்று சிலர் சொல்லக்கூடும்...ஆனால், சம்யுக்தா, சங்கமித்ரா என்று பேரக் குழந்தைகளுக்கு பெயர் வைத்துவிட்டு, தெருவில் இருக்கும் மளிகைக்கடையின் பெயர் ஆங்கிலத்தில் இருந்தால் சில டாக்டர்கள்(மருத்துவராம்!) தார் பூசிக் கொண்டிருக்கிறார்கள்...அவர்கள் பெயரே ராமதாஸ் என்று இருக்கக் கூடும்.இதில் தாஸ் என்பது தமிழா என்று கேட்டால் கலாச்சார கடவுள்களான அவர்கள் உங்கள் தாயாரின் கற்பை கேள்வி கேட்கக் கூடும் என்பதால் அதை விட்டு விடலாம்...ஆனால், தமிழ் நாட்டை இதுவரை ஆண்டவர்களால் பாலாறும் தேனாறும் ஓடி விட்டதா?? சரி, முதல்வரை விடுங்கள்...பல எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் தமிழர்கள் தானே இல்லை அவர்களும் வேறா? பல தொகுதிகளில் பாலாறும் தேனாறும் ஓடுகிறதா இல்லை ஒரு ரூபாய் அரிசிக்கு வரிசை நிற்கிறதா??

ரஜினி எந்த சமூக தொண்டும் ஆற்றவில்லை..அவர் மக்கள் சேவை செய்துவிட்டு அரசியலுக்கு வரட்டும்...உண்மை தான்..ஆனால், இந்திரா காந்தியிலிருந்து ஆரம்பித்து, இன்றைக்கு சோனியா காந்தி, ராகுல் காந்தி, ஜி.கே.வாசன், தயாநிதி மாறன்....இவர்களெல்லாம் ஆற்றிய மக்கள் சேவை என்ன? இதில் மக்களை சந்தித்து எம்.பி.ஆனவர்களாவது பரவாயில்லை...ஆனால், ராஜ்ய சபா எம்.பி. ஆகி, முதல் முறையிலேயே மிக முக்கியமான மத்திய மந்திரி பதவியை பிடித்த அன்புமணி போன்றவர்கள் ஆத்திய (எழுத்துப் பிழை அல்ல!) மக்கள் சேவை என்ன??

நடிகன் நாடாள்வதா என்று ஜெயலலிதாவின் கூட்டணியிலும், கருணாநிதியின் கூட்டணியிலும் மாறி மாறி இருந்த சில அரசியல் ஓடுகாலிகளின் கேள்விக்கு பதில் அவசியமில்லை....அம்மாவிடம் போனால் "அய்யா என் கோமணத்தை கழட்ட பார்த்தார்...அதனால் அன்பு சகோதரியிடம் வந்து விட்டேன்" என்று அறிக்கை விடுவார்கள்...சில மாதங்கள் கழித்து மீண்டும் அய்யாவிடம் வருவார்கள்....அப்படியானால் கோமணம்?? இந்த முறை அய்யா கோமணத்தை கழட்டினாலும் பரவாயில்லை என்று வந்து விட்டார்களா? அய்யா கழட்டி விட்டாரா இல்லையா? அம்மணமாக நிற்கிறார்களா??

எந்த இடத்தில் அதிகம் விலை படியுமோ அங்கு செல்வது தான் விபச்சாரத்தின் வியாபார லட்சணம் என்பதால் அதை விட்டு விடலாம்....

ஆனால், மிகப்பெரிய கேள்வி....நடிகன், தமிழன் இல்லை என்ற கேள்விகளை ஒதுக்கி விட்டு....ரஜினிக்கு உண்மையிலேயே அரசியலுக்கு வரும் தகுதி இருக்கிறதா? திறமை இருக்கிறதா???

தகுதி.....தமிழ்நாட்டில் பிறக்காவிட்டாலும், தமிழனாய் பிறக்காவிட்டாலும்...தன் வாழ்க்கையின் பெரும்பகுதியை அங்கு கழிப்பவர்...கருணாநிதி, ஜெயலலிதா அடுத்து தமிழகத்தின் ஆறு கோடி மக்களுக்கும் அறிமுகமானவர்...ஆறு வயது குழந்தையிலிருந்து தொன்னூறு வயது கிழவர் வரை எல்லாருக்கும் தெரிந்த முகம்...தாத்தவால் இன்றைக்கு அறிமுகப்படுத்தப்பட்டு நாளை மத்திய மந்திரி ஆகும் சில தயாநிதிகளை விட, தமிழக மக்களுக்கு அதிகம் தெரிந்த முகம்...என் குடும்பத்தில் யாராவது அரசியலுக்கு வந்தால் என்னை செருப்பால் அடியுங்கள் என்று சொன்ன மருத்துவர் தந்தையால் ரகஸியமாக ராஜ்ய சபா எம்.பி.ஆக்கப்பட்டு, அடுத்த நாள் அமைச்சர் ஆகும் அன்புமணிகளை விட எல்லாருக்கும் தெரிந்த முகம்...தமிழ்நாட்டிலேயே வாழ்ந்து, தமிழ் மக்களாலேயே வாழ வைக்கப்படும் ரஜினிக்கு தகுதி இல்லை என்று சொல்லிவிட முடியாது....

ஆனால் திறமை.....இது மிகப்பெரிய கேள்வி... உண்மையில் ஒரு அரசை நடத்த ரஜினிக்கு திறமை இருக்கிறதா?? ரஜினி தன் ரசிகர்களை சந்தித்தே பல வருடம் ஆகிறது...இப்படி பட்ட ஒருவர் மக்களை எப்படி சந்திப்பார்??

அரசியலில் எல்லோருக்கும் நல்லவராக எப்போதும் இருக்க முடியாது...ஆனால், ரஜினிக்கோ எல்லோருக்கும் நல்லவராக இருக்கும் ஆசை இருக்கிறது....ஜெயலலிதாவும் நட்பு...கருணாநிதியும் நட்பு....அத்வானியும் நட்பு...சிதம்பரமும் நட்பு....இப்படி எல்லோருக்கும் நல்லவராய் இருக்க நினைக்கும் ஒருவரால் அவர்களை எதிர்த்து அரசியல் நடத்த முடியுமா??

அடுத்து...அரசியலுக்கு வரும் பட்சத்தில் ரஜினியின் திட்டங்கள் என்ன?? உள்ளிருந்தே அரிக்கும் எய்ட்ஸ் நோய் போல் எங்கும் பரவியிருக்கும் ஊழலை எப்படி ஒழிப்பார்?? அரசின் வருவாயில் அறுபது சதவீதத்தை சம்பளமாக பெற்றாலும் லஞ்சம் வாங்குவது எங்கள் பிறப்புரிமை என்று போராடும் அரசு ஊழியர்களை எப்படி சமாளிப்பார்??

புற்று நோய் போல பரவி வரும் ஜாதி சங்கங்கள், ஜாதிக் கட்சிகள்...ரஜினிக்கு ஏதேனும் தெளிவு உண்டா??

இன்றைக்கும் தினம் இருபது ரூபாய்க்கு வேலைப்பார்க்கும் மக்கள் தமிழகத்தில் உண்டு...இலவசமாய் டி.வி.,இலவசமாய் ஜட்டி என்று கோஷம் தவிர்த்து, பொருளாதார ரீதியாய் நிரந்தர தீர்வு??

இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண முயலும் பட்சத்தில், ரஜினி போன்றவர்கள் அரசியலுக்கு வர வேண்டும்...தன்னை உருவாக்கிய சமூகத்திற்கு ஏதேனும் திரும்ப செய்வது ஒவ்வொருவரின் கடமை....

நான் தலீவரு, என் மகன் இளைய தலீவரு, அவன் மகன் இளைஞர் அணி தலீவரு...அவனோட மகன் சிறுவர் அணித் தலீவரு....எங்க ஜாதி தான் தமிழ்நாட்டுல பெரிய ஜாதி....எங்களுக்கு எல்லாதுலயும் அறுவது சதவீதம் இட ஒதுக்கீடு கொடுக்கணும்...வன்னியர் ஓட்டு அன்னியருக்கு இல்லை....நான் ஒரு வக்கீலு....கோர்டுல என்னா வேணும்னாலும் பண்ணுவேன்....எம்மெல யாராவது கைய வச்சா மெட்ராஸுல எந்த பஸ்ஸும் ஓடாது....நான் போலீசு....மணல் கடத்துறலருந்து...ஆள் கடத்துறது வரை எனக்கு மாமூல் வரணும்....நான் மினிஸ்டரு...தலீவருக்கு கால் புடிக்கிறது...கட்டை பஞ்சாயத்து பண்றது என் தொழிலு....

இப்படியே போகும் அரசியலில், ஏதேனும் மாற்றங்களை கொண்டு வர முடியும், அடித்தட்டு மக்களின் வாழ்க்கையில் முன்னேற்றம் கொண்டு வர முடியும் என்றால் ரஜினி அரசியலுக்கு வருவதில் எந்த தவறும் இல்லை!

சொலல்வல்லன் சோர்விலான் அஞ்சான் அவனை

இகல்வெல்லல் யார்க்கும் அரிது


==================================


Monday, 9 March 2009

மீண்டும் ஒரு முறை!


அதிகம் குடித்து விட்டாய் நண்பா
இன்றைக்கு இது போதும்...
கழுத்துக்கு பின் இதழ் உரசிய‌ ஆங்கில மாதை முத்தமிட்டு...
மெதுவே அவ‌ள் விலக்கி..

கடும் குளிர் வீசும் வீதியில்
ஃபேன்ஸி ய பிஜே க்யூட்டி
காதிருந்தும் செவிடனாய்...
தலை மட்டும் அவள் மறுத்து...
தனியே நடந்த போது...

இடக்கால் வலம் இழுக்க‌
இன்னும் சிறிது தூரம் தான்....
இனி மேல் குடிப்பதில்லை...
குடித்தாலும் நடப்பதில்லை...

என்றும் செய்யும் உறுதியை
மீண்டும் ஒருமுறை உறுதி செய்யும் வேளையில்...

சரி போகலாம் வா...

எங்கிருந்தோ ஒரு குரல்...
இல்லை....மிக அருகாமையில்...

யாரது...

பனி விழும் யார்க் ஷையரின்
இருள் கொட்டும் நேரத்தில்...

இமைகளில் கூட பனித் துகள்கள்..
முகமெங்கும் பனி படர்ந்து...
இதழ் பிரியாமல் சிரித்தாள் அவள்...

எனக்கு தெரியும் அவளை...
இல்லை தெரியாது...
எங்கோ தூர தேசத்தில்
எப்போதோ ஒரு முறை
ஏற்கனவே பார்த்திருக்கிறேன்...

நீ....கொஞ்சம் இரு...
இடக்கை துழாவி சிகரெட்டை பற்ற வைத்து
யார் இவள் என்று மூளையின்
இருண்ட பக்கங்களை தேடுகையில்...

மெதுவாக...மிக மெதுவாக...
இல்லை...வேகமாகிறது...
இடப்பக்கத்திலிருந்து ஏதோ வலி...

என்ன அது....
வலக்கை உயர்த்தி...நெஞ்சு பிடிப்பதற்குள்...

இல்லை இனி...
கொட்டும் பனி கண் மூட‌ மெதுவே மரணித்தேன்...
மீண்டும் ஒரு முறை!
=============================

Friday, 6 March 2009

தமிழர்களுக்கு உரிமை இல்லை - மொரார்ஜி தேசாயின் முட்டாள் தனம்!


மொரார்ஜி தேசாய்னு ஒரு நல்லவரு வல்லவரு இருந்தாரு...இந்திரா காந்தியவே எதிர்த்து நின்னவருன்னு பெருசுங்க எல்லாம் சொல்வாங்க...அவரு தன் பிஸ்ஸை தானே குடிப்பாருன்னு அவரப்பத்தி ஒரு நியூஸு கூட உண்டு...

அப்படிப்பட்ட "ஒண்ணுக்கு" புகழ் மொரார்ஜி தேசாய் விகடனுக்கு 1987ழுல ஒரு பேட்டி குடுத்துருக்காரு....படிச்சி பார்த்தா....எந்த ஒரு அடிப்படை அறிவும் இல்லாத ஒரு மனிதன் பிரதமர் பதவிக்கு போறது இந்தியா மாதிரி சாபக்கேடுள்ள நாட்ல மட்டும் தான் முடியும்...

விகடன் பேட்டி முழுசா இங்க எழுதக் கூடாதுங்கிறதுனால...ஒரு பகுதி மட்டும்...

கேள்வி: ஸ்றீலங்காவின் தற்போதைய நிலைமையை பார்க்கும் போது இந்திய அரசாங்கத்தின் நடவடிக்கை எவ்வாறு இருந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

பதில்: இந்திய அரசாங்கம் இதில் தலையிட்டிருக்கவே கூடாது.

கேள்வி: சமீபத்தில் இந்திய அரசு உதவியளித்தது கூடவா??
பதில்: ஆமாம்..இந்தியா இதை செய்திருக்கக் கூடாது..நம் மக்கள் வேறு நாட்டில் இருந்தால் மெஜாரிட்டியின் ஆதிக்கத்தையும் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். விரும்பவில்லையென்றால் திரும்பி விட வேண்டியது தானே? பஞ்சாப் தீவிரவாதிகளுக்கு ஸ்ரீலங்கா உதவி செய்தால் நாம் ஒப்புக் கொள்வோமா?

கேள்வி: தமிழர்களுக்கு அரசாங்கம் சில அடிப்படை உரிமைகளைக்கூட வழங்கவில்லையே?

பதில்: அடிப்படை உரிமை இல்லாமலா ஆறு தமிழ் மந்திரிகள் அந்த அரசாங்கத்தில் உள்ளனர்?

கேள்வி: அவர்கள் சிங்கள அரசின் நடவடிக்கைகளை ஒப்புக் கொள்பவர்கள் ஆயிற்றே?

கேள்வி: நான் உங்கள் கருத்தை ஒப்புக் கொள்ளமாட்டேன். தமிழன் என் பதால் biased opinion உங்களுக்கு உள்ளது. நான் அங்கு சென்றபோது கூடத் தமிழர்களிடம் கூறினேன். லங்கா அரசாங்கம் பொது மக்களுக்கு எதிராக ஏதாவது நடவடிக்கை எடுத்தால், நான் உதவிக்கு வரு வதாக உறுதியளித்தேன். ஆனால், தீவிரவாதி களின் நடவடிக்கையை நான் ஆதரிக்கவில்லை.

கேள்வி: லங்கா அரசாங்கம் பொதுமக்களை அல்லவா படுகொலை செய்கிறது?

பதில்: பொதுமக்கள் தீவிரவாதிகளைத் தனிப் படுத்த வேண்டும். தீவிரவாதிகள் என்றும் மெஜாரிட்டியல்ல! பொதுமக்களின் விருப்பத்துக்கு மாறாக தீவிரவாதம் அனுமதிக்கக் கூடாது. பொதுமக்களுக்கு உண்மையில் அரசாங்கத்துடன் ஒத்துப்போக விருப்பமிருந்தால் தீவிரவாதம் அதைத் தடுக்க விடக்கூடாது.

அதாவது இந்த மொக்கையனுக்கு இலங்கை பிரச்சினை பற்றி ஒரு அடிப்படை அறிவு கூட இல்லை...முதலில் ஈழத் தமிழர்கள் இந்தியர்கள் அல்ல...அவர்கள் தமிழர்களே தவிர இந்தியர்கள் அல்ல‌!!. பல நூற்றாண்டுக்கு முன்னரே, சொல்லப் போனால் இந்தியாவில் ஆங்கில ஆட்சி ஏற்படும் முன்னரே இலங்கையில் உரிமையுடன் இருந்தவர்கள். பல தலைமுறையாக, இலங்கையில் பிறந்து வளர்ந்து, அங்கேயே வாழ்பவர்கள்...அவர்ககுக்கு இந்திய பாஸ்போர்ட்டோ இந்திய குடியுரிமையோ இல்லை....ஒருவர் ஒரு நாட்டில் பிறந்து வளர்ந்தால் அவர் அந்த நாட்டின் குடிமகன் ஆகிறார் என்று உலக நாடுகள் பலவும் ஏற்றுக் கொண்ட அடிப்படை மனித நாகரீகம் கூட இந்த மனிதரிடம்(???) இல்லை!

அடுத்து....சிங்களர்கள் மெஜாரிட்டியாம்...அதனால் அடங்கி போக வேண்டுமாம்...மானத்துடன் வாழ்வது அடிப்படை உரிமை...தன் உரிமையை கேட்டால் கூட மொரார்ஜி போன்ற பதவிக்காக வால் பிடிப்பவர்களுக்கு அது தீவிரவாதமாக படுகிறது...

முக்கியமாக கவனிக்க வேண்டியது...லங்கா அரசாங்கம் பொதுமக்களை படுகொலை அல்லவா செய்கிறது என்ற கேள்விக்கு இந்த நல்லவனின் பதில்... "பொதுமக்கள் தீவிரவாதிகளைத் தனிப் படுத்த வேண்டும். தீவிரவாதிகள் என்றும் மெஜாரிட்டியல்ல! பொதுமக்களின் விருப்பத்துக்கு மாறாக தீவிரவாதம் அனுமதிக்கக் கூடாது. பொதுமக்களுக்கு உண்மையில் அரசாங்கத்துடன் ஒத்துப்போக விருப்பமிருந்தால் தீவிரவாதம் அதைத் தடுக்க விடக்கூடாது."

அதாவது....அரசாங்கம் படுகொலை செய்கிறதே என்ற கேள்விக்கு இவரின் பதில்...அரசாங்கத்துடன் ஒத்துப் போக வேண்டும்! தாய் முன்னிலையில் மகளை கற்பழித்தாலும், குழந்தைகள் முன்னிலையில் தாயை கற்பழித்தாலும் மக்கள் அரசாங்கத்துடன் ஒத்துப் போக வேண்டும்....மொரார்ஜியாக இருந்தால் அப்படி தான் செய்வார்!!!

இந்த பேட்டி கொடுக்கப்பட்ட 1987ல்...ஈழத்தமிழர் துயரம் உச்சமாக இருந்த வருடங்கள் 1980கள்...அந்த சூழ்நிலையில், இப்படி ஒரு ஆதிக்க வெறி பிடித்த பேட்டி கொடுக்க வேண்டுமானால், ஒன்று இந்த நபருக்கு மன நிலை பாதிக்கப்பட்டிருக்க வேண்டும்...இல்லை, இவர் ஹிட்லரின் நெருங்கிய தோழராய் இருக்க வேண்டும்!

அதெல்லாம் சரி, "பிஸ்ஸு" புகழ் மொரார்ஜி தேசாய் செத்து சுண்ணாம்பாயி பல வருஷம் ஆயிடுச்சி...இப்ப எதுக்கு இந்த பதிவுன்னு கேக்குறவங்களுக்கு...

இருக்கிறது நண்பர்களே....இந்த நபர் இந்தியாவின் பிரதமராக இரண்டு வருடம் சாணி கொட்டியதாக தெரிகிறது...

நாட்டின் பிரதமராக இருந்த ஒரு நபருக்கே ஈழப்பிரச்சினை பற்றியோ, மனித உரிமைகள், உலக சமுதாயம் ஏற்றுக் கொண்ட நடைமுறைகள் பற்றி எந்த அறிவும் இல்லாமல் இருக்கும் போது, இன்றைக்கு அரசு நடத்திக் கொண்டிருக்கும் பல்வேறு நபர்களுக்கு என்ன விதமான அறிவு இருக்க முடியும்??

Wednesday, 4 March 2009

இறையாண்மையும் பொறையாண்மையும்!

அண்ணன் பழமைபேசி அவரு பதிவுல ஒரு கேள்வி கேட்ருக்காரு.

// ஒரு இலட்சம் பேர் மூனு வருசத்துக்குள்ள திரும்பி வரப் போறாங்கன்னு புலம்பல். வந்தவங்க இங்க(US)யே இருந்துக்கணும்ன்னு எதிர்பாக்கறாங்களோ?? அதை விடுங்க, வருசம் 65000 பேர், அது போக இதர உள்நுழைவு(L1, B1...)ல எண்ணிலடங்காத பேர் உள்ள வருவாங்களே? அது கண்ணுக்குத் தெரியலையா?? நீங்க எல்லாம் நிர்வாகிகள்தானா?? //

ரொம்ப கரெக்ட்டானா கேள்வி தல! இவங்களுக்கு நிர்வாகத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்ல...ஏதோ டி.வி.ல பேச சான்ஸ் கிடைச்சா அள்ளி விட்றது தான்... இந்தியாவுல எந்த புள்ளிவிவரமும் கிடையாது...புள்ளிவிவரத்துக்குன்னு ஒரு அமிச்சரு இருக்காரு...அவரு பேரு வாசனாம்...அவருக்கே அந்த துறைல என்ன செய்யணும்னு தெரியாது...

இந்தியா இன்னும் பொழைச்சு கெடக்குனா, முக்கிய காரணம் மக்கள் இவங்களை எல்லாம் மதிக்கிறதே இல்ல....அலுவாலியா? யாருப்பா அது?? மக்கள் பாட்டு அவங்களால எவ்வளவு முடியுமோ அவ்வளவு கஷ்டப்பட்டு எதுனா வேலை செய்றாங்க...அதனால தான் இந்தியா ஓடுது...

இந்த புள்ளி விவரமும் கிடையாது...எந்த திட்டமும் கிடையாது...

என் பேரு அப்துல் கலாம், அட்ரஸு ஜனாதிபதி பவன் அப்படின்னு ஒருத்தரு கொஞ்ச நாளைக்கு முன்னாடி பாஸ்போர்ட்டே எடுத்தாரு...அப்ப நிர்வாகம் எப்படி டாப்பா இருக்குன்னு பாருங்க!

எம்.கே. நாராயண்னு ஒருத்தரு பாதுகாப்பு செயலரா இருக்காராம்(!)...ஆனா அவ்ரு நாட்டு பாதுகாப்புக்குன்னு இதுவரை என்ன செஞ்சாருன்னு அவருக்கே தெரியாது... இவங்கெல்லாம் தான் இந்தியாவோட நிர்வாகிங்க!

பழமைபேசி அண்ணன் அப்படியே ஓபாமா கூட கம்பேர் பண்ணி ஒரு கேள்வி கேட்ருக்காரு.ஆனாலும் ஓபாமா கூட கம்பேர் பண்றது ரொம்ப ஓவரு....நான் கறுப்பர் இனம், நான் கிறிஸ்டியன், நான் இந்த ஜாதி அப்படின்னு அவரு ஓட்டுக் கேக்கலை..நான் வந்தா இது தான் ப்ளான்...நாட்டை இப்படி தான் நடத்துவேன்னு சொல்லி தான் ஓட்டு கேட்டாரு...

ஆனா இந்தியாவுல எப்படி வோட்டு கேட்கிறாங்க??? நான் ஒங்க ஜாதி....ஒங்க மதம்....நாங்க வந்தா கோவிலு கட்டுவோம்...மத்ய பிரதேஷ், உத்தர்பிரதேஷ்ல பல குழந்தைங்க சாப்பாடு இல்லாம சாவுறத வேர்ல்ட் ஹெல்த் ஆர்கனைசேஷன் சொல்லுது...ஆனா இவங்களுக்கு முக்கிய பிரச்சினை கோவில் கட்றது....இதெல்லாம் வெளங்குறதுக்கா??

நாங்க வந்தா இந்த ஜாதிக்கு இத்தினி பெர்சண்ட் இட ஒதுக்கீடு, அதுல இந்த மதத்துக்கு இத்தினி பெர்சண்ட் இட ஒதுக்கீடு (அப்ப மத்தவனெல்லாம் நாண்டுகிட்டு சாவுறதா?)...

இப்ப புதுசா ஒண்ணு ஆரம்பிச்சிருக்காங்க....நீதிபதி பதவில இட ஒதுக்கீடு வேணுமாம்....கொடுக்கலாம் தப்பில்ல...ஆனா கொஞ்சம் யோசிக்கணும்...இருக்கிறதே கொஞ்சம் பதவி...அதுல ஒவ்வொரு ஜாதிக்கும் இட ஒதுக்கீடு கொடுத்தா எல்லா ஜாதிக்கும் எப்படி கொடுக்கிறது?? அப்ப ஒதுக்கீடு கிடைக்காத ஜாதிக்காரங்க என்ன பண்றது?? நீதிமன்றத்தை புறக்கணிச்சிரலாமா??

தமிழ்நாட்டுக்கு தண்ணி தந்தா செத்துருவோம்னு கர்நாடகாவுல ஒரு விவசாயி தீக்குளிக்குறாரு...தமிழ் படம் ஓட்டுனா தியேட்டரை அடிச்சி நொறுக்குறாங்க...மஹாராஷ்ட்ராவுல மராத்தி தவிர யாரும் இருக்கக் கூடாதுன்னு அடிச்சி வெரட்டுறாங்க...கடலுக்கு போனாலும் பரவால்ல, தமிழ்நாட்டுக்கு போகக் கூடாதுன்னு கேரளாவுல காசு போட்டு தண்ணிய திருப்பி விட்றாங்க....

கர்நாடகாவுல தமிழர்களை அடிச்சி வெரட்டுனப்ப, கேரளாவுல தண்ணி பிரச்சினை பண்ணப்ப....ஆட்சில இருந்தது எல்லாம் காங்கிரசு தான்... ஆனா, இப்ப அவங்க சொல்றாங்க...வை கோ, சீமான் இந்தியாவோட இறையாண்மையை பாதிக்கிற மாதிரி பேசுறாங்களாம்....

பால் தாக்ரே, அச்சுதானந்தன், எடியூரப்பா, எஸ்.எம். கிருஷ்ணா இவங்க செஞ்சதை விட வைகோ, சீமான் என்ன செஞ்சிட்டாங்க???

என்ன இறையாண்மையோ பொறையாண்மையோ ஒரு மயிரும் புரியல!