காலும் கலாச்சாரமும்
அறிவிப்பு 1: இந்த தொடரில் வரும் சம்பவங்கள், பாத்திரங்கள் (விக்கிரமாதித்தன், வேதாளம், மந்திரவாதி தவிர்த்து) அனைத்தும் உண்மையே! மிக முக்கியமாக, எனது பாதுகாப்பு கருதி, பெயர்களும் இடங்களும் மாற்றப்பட்டுள்ளன.
அறிவிப்பு 2: மாமனார், மாமியார் கடந்த 4927 நாட்களாக குளிக்கவில்லை, பல் துலக்கவில்லை, என்றாலும் நான் அவர்களது கால்களை கழுவி, அதை எனது தலையில் தெளித்து கொள்வேன், கணவன் குடித்து கும்மி அடித்துவிட்டு வீடு வர எவ்வளவு நேரமானாலும், நான் விழித்திருந்து அவன் வந்த பின், பின் தூங்கி முன் எழுவேன், ஏனெனில் அது தான் இந்திய, தமிழ், மனுதர்ம கலாச்சாரம்என்று நினைக்கும் பெண்களும்,அத்தகைய இந்திய, தமிழ், மனுதர்ம கலாச்சாரத்தை என் மனைவி/இரண்டாம் மனைவி/ எதிர் வீட்டுக்காரன் மனைவி பின்பற்ற வேண்டும் என்று நினைக்கும் ஆண்களும்,தயவு செய்து இந்த தொடரை படிக்க வேண்டாம்!
"விக்கிரமா, கணவன் இருக்கும் போதே விஜி இன்னொரு ஆண்மகன் மீது காதல் கொண்டது சரியா?"
வேதாளத்தின் கேள்விக்கு பதில் ஏதும் சொல்லாமல் விக்கிரமன் தலையை தடவிக்கொண்டான்.
====================
"என்ன மாதித்தா... பேச்சையே காணோம்? ஆயிரம் வருசத்துக்கு முன்னாடி டக்கு டக்குன்னு பதில் சொல்லுவ? இப்ப என்ன? மாப்பு, ஒனக்கு வச்சிட்டேனா ஆப்பு..."
"ஆப்பும் இல்லை, இலவச அடுப்பும் இல்லை. என்னை தமிழ் கலாச்சார காவலர்களிடம் மாட்டி விட நீ சதி செய்வது போல தெரிகிறது. அதனால் யோசிக்கிறேன்..."
"என்ன மாதி.. எத்தினி பேரு வந்தாலும் அடங்காது வாள் வீசும் ஒனக்கே இவ்ளோ பயமா??"
"வாள் வீசினால் பயமில்லை வேதாளமே.. ஆனால் ஆசிட் வீசினால்? துப்பாக்கிகளுக்கு பயமில்லை. ஆனால் துடைப்பத்துடன் வந்தால்..ஆயிரம் பேர் வரட்டும்.. ஆனால், கலாச்சார காவலர்கள் ஆட்டோ அனுப்புவார்களே.. "
"என்ன மாதித்தா.... ஷகீலா படம் பார்க்க போகும் பத்தாங்கிளாஸ் பையன் மாதிரி பயப்படுறா... என்னதான் ஆச்சி ஒனக்கு..."
"முட்டாள் தாளமே... ஆயிரம் வருடங்களாக தொங்கி கொண்டிருந்தும் உனக்கு அறிவு வளரவில்லை. தமிழ் கலாச்சாரத்தை கேள்வி கேட்பதும் ஒன்று..தற்கொலைக்கு தயாராவதும் ஒன்று... அது ஒளக நாயகனின் குணா படம் பார்ப்பது போல்... தற்கொலைக்கு அஞ்சாதவர்கள் மட்டுமே செய்ய முடியும்..."
வேதாளம் வெறுப்பானது..
"மாதித்தா.... ஒளக நாயகன், ஒலக்கை நாயகன் என்று நீ ஏன் யார் யாரையோ இழுக்கிறாய்?? நான் என்ன யாருக்கும் புரியாத மாதிரியா பேசுகிறேன்.. பதில் தெரிந்தால் சொல். இல்லையேல் பின்புறம் தெரிய இங்கிருந்து ஓடிப்போ..எனக்கு வேறு முக்கிய வேலைகள் இருக்கிறது.."
"ஆமா, நீதான் ஒலக ஷேர் மார்க்கெட்ட காப்பாத்த போற.. ஒன்னோட பெரிய எளவா போச்சி வேதாளமே... எவனாவது என் மூஞ்சில் ஆசிட் ஊத்தப்போறது உறுதி...அப்புறம் எந்த பொண்ணும் கெடைக்காம நான் "என்ன மாதிரி ராமன் உண்டான்" னு வஜனம் பேசப்போறதும் உறுதி.... சனியன்..கேட்டுட்ட.. சொல்லி தொலைக்கிறேன்..."
ஜாக்கெட்டை தடவி தம்மை பற்ற வைத்து கொண்ட விக்கிரமாதித்தன் பேச ஆரம்பித்தான்...
===========================
"அறிவு கெட்ட வேதாளமே..ஆள் வளர அறிவும் வளர வேண்டும் என்று சொல்வார்கள். ஆயிரம் ஆண்டுகளாக நீ ஆளும் வளரவில்லை..உனக்கு அறிவும் வளரவில்லை..
விஜி செய்ததில் என்ன தவறு? கல்லானாலும் கணவன், புல்லானலும் புருசன் என்று அவள் தன் வாழ்க்கையை மண்ணாக்கி கொள்ள வேண்டுமா என்ன? வாழ்க்கை என்பது ஒரு முறை தான். தன் வாழ்க்கையை குடிகார கணவனுக்காகவும், பேராசை பிடித்த மாமியாருக்காகவும் விஜி நாசமாக்கி கொள்ள வேண்டியதில்லை.புல்லாகவும், கல்லாகவும் இருக்கும் புருசன்களை மண்ணாக்குவதில் எந்த தவறும் இல்லை.
பிடிக்காத கணவனுடன் வாழ்ந்து, பிள்ளை பெற்றுக்கொள்வது ஒரு வித நோய்த்தனமே.அப்படியே வாழ்ந்தாலும் அவளுக்கு பலன் என்ன கலாச்சார காவலி என்று பட்டம் கொடுக்கப்போகிறார்களா சிலை வைக்கப்போகிறார்களா? கண்ணகிக்கு சிலை வைத்ததால் கண்ணகிக்கு என்ன லாபம்? கழக கண்மணிக்களுக்கு தான் லாபமே தவிர, கண்ணகிக்கு ஒரு பைசா லாபமும் இல்லை.
கலாச்சாரத்தின் சவக்குழியை தோண்டுவதாக குறை சொல்கிறாய். அது கலாச்சாரம் என்பதின் அர்த்தமே தெரியாத மூடர்கள் சொல்வது.
கலாச்சாரம் என்பது என்ன... வாழ்க்கையிலிருந்து வந்தது தான் கலாச்சாரமே தவிர, கலாச்சாரத்திலிருந்து வாழ்க்கை வரவில்லை. வாழ்க்கை மாற, கலாச்சாரமும் மாறித்தான் ஆகவேண்டும். மாறாத எந்த விஷயமும் அழியும். If something doesn't move then it's possibly dead.
அதற்கு கலாச்சாரமும் விதி விலக்கல்ல. தமிழ் நாட்டில் கலாச்சாரம் கள்ளச்சாராயம் போல் ஆகிவிட்டது. காய்ச்சுபவன் தருவது தான் சரக்கு..
கணவன் இருக்கும் போது இன்னொரு ஆண்மகன் மீது காதலா??
என்ன தவறு? தன் கணவனை தேர்ந்தெடுக்க விஜிக்கு எந்த வாய்ப்பும் தரப்படவில்லை. அவள் காதலித்தாள். காதலிப்பது ஒருத்தியை, காசுக்காக மணப்பது இன்னொருத்தியை என்றிருக்கும் கலாச்சாரத்தால் அவன் விஜியை கைவிட்டான். காதல் என்றாலே விபச்சாரம் என்று நினைக்கும் தமிழ் கலாச்சாரத்தால், விஜியால் தனது காதலுக்காக போரட முடியவில்லை. அது அவள் தவறல்ல.
டேபிளுக்கு அடியில் லஞ்சம் வாங்கிக்கொண்டு கலாச்சாரம் பேசுபவர்களுக்காகவும், இரண்டு ரூபாய்க்கு ஊசிப்போட்டுக் கொண்டு கோடீஸ்வரர்களாக கட்சி நடத்தும் சில டாக்டர்களுக்காகவும் அவள் தனது வாழ்க்கையை தியாகம் செய்ய வேண்டிய அவசியம் எதுவுமில்லை.
இப்படி கழுத்தை நெறிக்கும் கலாச்சாரத்தை விஜி தூக்கி எறிந்ததில் எந்த தவறும் இல்லை. காலுக்குத்தான் செருப்பே தவிர, கலாச்சார செருப்புக்காக காலை வெட்டிக்கொள்ள முடியாது. காலைக் கடிக்கும் கலாச்சார செருப்பை கழற்றி வீசிய விஜியை எப்படி குறை சொல்ல முடியும்?"
==================================
விக்கிரமனின் பதிலை கேட்ட வேதாளம் குடு குடுவென்று ஓடிப்போய் அருகில் இருந்த மரத்தில் ஏறிக்கொண்டது..
"மாதித்தா.. உன் பதில் சரியே..கலாச்சாரத்தை காக்க வேண்டும் என்பதற்காக விஜி தனது வாழ்க்கை அழித்து கொள்வதில் எனக்கும் உடன்பாடில்லை"
"ஆனால், நீ ஒரு தவறு செய்து விட்டாய். நீ அமைதி காத்திருக்க வேண்டும். ஆனால், உன் பதிலால், கடந்த ஒன்றரை நிமிடங்களாக நீ காத்து வந்த மவுனம் கலைந்துவிட்டதால் இனி நீ என்னை பிடிக்க முடியாது..."
விக்கிரமன் கடுப்பானான்.
"இது பெரிய போங்கா இருக்கே..."
"போங்கோ, பேங்கோ, அது எனக்கு தெரியாது மாதித்தா. நீ இன்று தோற்றுவிட்டாய்...அடுத்த வாரம் வா.. முடிந்தால் என்னை பிடித்து செல்.."
விக்கிரமன் தனது ஒமேகா வாட்ச்சை பார்த்துக்கொண்டான். நள்ளிரவு ஆயிற்று... ஏதாவது கிளப் பக்கம் போனால் ஒரு நாலு ரவுண்டாவது அடிக்கலாம்...ஆனால் அந்த ஸ்பானிஷ் சிட்டு போனது போனது தான்....
அடுத்த வாரம் இந்த வேதாளத்தை பிடிக்காமல் விடுவதில்லை..
கறுவிக்கொண்டே விக்கிரமன் தனது காரை நோக்கி அந்த இருட்டில் நடக்க ஆரம்பித்தான்.
=========விஜியின் கதை முற்றியது ===========
இவ்ளோ படிச்சிட்டீங்க... அப்பிடியே இதையும் படிச்சிடுங்க...
பதிவரின் பின் குறிப்பு
இந்த கதையை எழுத ஆரம்பித்த பின், நான் எதிர்பாராத சில அதிர்ச்சிகள்..
முதல் அதிர்ச்சி, இதை எட்டு பாகங்களாக எழுத நேரிடும் என்பது. ஒண்ணாங்கிளாசில் இருந்து எனக்கு பிடிக்காத விஷயம் எழுதுவது. முக்கிய காரணம் சோம்பேறித்தனம். ஏதோ ஒரு போதையில் (அதாவது, குடி போதையில்), எழுத ஆரம்பித்த விஷய்ம் இப்படி எட்டு பாகங்களாக போகும் என்பதை நான் எதிர்பார்க்கவில்லை. எண்ணித்துணிக கருமம்..... கருமம், எனக்கு ஒரு நாளும் நினைவிருப்பதில்லை. தொடரை ஆரம்பிக்கும் முன் வரை மொத்தமாக எழுதியது நான்கு மொக்கைகள் (சரி, சரி, அதி மொக்கை பதிவுகள்). நம்புங்கள், நிஜமாகவே தொடர் எழுதி யாரையும் கொடுமைபடுத்த நான் கனவிலும் நினைக்கவில்லை.
இரண்டாவது அதிர்ச்சி,இதை படித்த சில நண்பர்கள் கேட்ட (கேட்கும்) கேள்வி...
நண்பர் செல்வ கருப்பையா, நீங்கள் தான் விஜியின் கும்பகோணத்து காதலனா என்று கேட்டிருந்தார். மற்றும் பல நண்பர்கள் (எனது யுனிவர்சிட்டி நண்பர்கள் மற்றும் பலர்), கேட்டது... நீ தான் கதையில் வரும் ஆன்டர்சனா?...
இல்லை சாமி... பக்த ஹரி தாஸ் படம் பார்த்தவர்களுக்கும், தசாவதாரம் விமர்சனம் எழுதியவர்களுக்கும், சமீபத்தில் பத்து பத்து விமர்சனம் எழுதிய அண்ணன் லக்கி லுக், 21 படத்திற்கு விமர்சனம் எழுதிய கயல்விழி அவர்களுக்கும் (மன்னிச்சுக்குங்க கயல்விழி, லக்கி லுக், நான் தப்பிக்கிறதுக்கு உங்கள யூஸ் பண்றேன்), படத்துக்கும் என்ன சம்பந்தமோ அதே அளவு சம்மந்தமே எனக்கும் இந்த கதைக்கும்.
வேதாளம் விக்கிரமனுக்கு சொல்லிய கதையை ஒட்டுக்கேட்டு எழுதியது தவிர பெரிய தொடர்பில்லை.
விஜி எனக்கு தோழியே தவிர, காதலி அல்ல. Friend க்கும் Girl Friend க்கும் வித்தியாசம் தெரியும்.
இந்த குழப்பத்திற்கும் காரணம் நானே. முக்கிய பிரச்சினை, இந்த கதை நடந்த காலத்தை நான் சொல்லவில்லை. இது 1996ல் நடந்த கதை. ( கதையில் எந்த இடத்திலும் செல் ஃபோன் வரவில்லை. காரணம் அந்த கால் கட்டத்த்தில் இன்டியாவில் செல் ஃபோன் அதிகம் இல்லை, கண்டிப்பாக விஜியின் ஊரில் இல்லை). 1996ல் நான் ரொம்ப ச்சின்ன பையன் என்பதால், நான் ஆட்டத்திலேயே இல்லை.
இதை சொல்லாததற்கு காரணம் எனது எழுத்தின் பிழையே. எப்படி எழுதுவது, எதை எழுதுவது என்று நான் திட்டமிடவில்லை. தவிர எனக்கு விஜியும், ஆன்டர்சனும் மிகவும் நெருங்கியவர்கள் என்பதால் அவர்களது Character, Background பற்றி சொல்ல வேண்டும் என்று தெரியவில்லை. So, thats missing too. இதுவும் எனது தவறே!
முற்றுப்புள்ளி வைக்க, " நீ கொஞ்சம் லூசு.... ஏன்டா அழகா ட்ரஸ் பண்ணிக்கிட்டு இப்பிடி தெருப்பொறுக்கி மாதிரி கெட்ட வார்த்தையா பேசுற" என்று அவ்வப்பொழுது, மிக முக்கியமான (அதாவது, யார்ட்டனா நாம மூச்சை போட்ற சமயத்தில) சமயங்களில் என் காலை வாரினாலும் விஜி ஒரு நெருங்கிய தோழி அவ்வளவே. நான் விஜியின் காதலனோ, கணவனோ அல்ல!
இது வரை இதை பொறுமையாக படித்த நல்லவர்களுக்கும், பின்னூட்டமிட்ட நல்ல உள்ளங்களுக்கும் மிக்க நன்றி...
நமக்கு அரை லோடு செங்கல்லு என்று ஆர்டர் செய்த அதிரடி மக்களுக்கு....
அண்ணேய்ங், என்ன உட்ருங்கண்ணே... எல்லாம் அந்த மொட்டை வேதாளம் பண்ணது...
வேதாளம் அடுத்த வாரம் ஒரு கதை சொல்லும் என்று தெரிகிறது. முடிந்தால் நான் அதை உங்களுக்கு சொல்கிறேன்.
என்றென்றும் அன்புடன்,
டாஷ் டாஷ் டாஷ்