அறிவிப்பு 1: இந்த தொடரில் வரும் சம்பவங்கள், பாத்திரங்கள் (விக்கிரமாதித்தன், வேதாளம், மந்திரவாதி தவிர்த்து) அனைத்தும் உண்மையே! மிக முக்கியமாக, எனது பாதுகாப்பு கருதி, பெயர்களும் இடங்களும் மாற்றப்பட்டுள்ளன.
அறிவிப்பு 2: மாமனார், மாமியார் கடந்த 4927 நாட்களாக குளிக்கவில்லை, பல் துலக்கவில்லை, என்றாலும் நான் அவர்களது கால்களை கழுவி, அதை எனது தலையில் தெளித்து கொள்வேன், கணவன் குடித்து கும்மி அடித்துவிட்டு வீடு வர எவ்வளவு நேரமானாலும், நான் விழித்திருந்து அவன் வந்த பின், பின் தூங்கி முன் எழுவேன், ஏனெனில் அது தான் இந்திய, தமிழ், மனுதர்ம கலாச்சாரம்என்று நினைக்கும் பெண்களும்,அத்தகைய இந்திய, தமிழ், மனுதர்ம கலாச்சாரத்தை என் மனைவி/இரண்டாம் மனைவி/ எதிர் வீட்டுக்காரன் மனைவி பின்பற்ற வேண்டும் என்று நினைக்கும் ஆண்களும்,தயவு செய்து இந்த தொடரை படிக்க வேண்டாம்!
அறிவிப்பு 3: இந்த பாகத்தில் வரும் கெட்ட வார்த்தைகள் அந்த சூழ்நிலையில் கதாபாத்திரங்களால் உபயோகிக்கப்பட்டவையே. கதையை சொல்லி வரும் வேதாளத்திற்கோ, வெறுமே பதிவிடும் எனக்கோ இதில் எந்த சம்பந்தமும் இல்லை. இருந்தாலும் இதில் வரும் வார்த்தைகளுக்காக, நான் சூப்பர் ஸ்டார் போல் மன்னிப்பு, இல்லை, வருத்தம் கேட்டுக்கொள்கிறேன்.
காருக்கு சென்று ஃப்ளாஸ்க்கில் வென்னீருடன் வந்த விக்கிரமன் அந்த நள்ளிரவில், காட்டில் உட்கார்ந்து காஃபி கலக்க ஆரம்பித்தான்.
அவள் வருவாளா, அவள் வருவாளா என் ஒடஞ்சி போன கொம்பை ஒட்ட வைக்க அவள் வருவாளா...
பாடிக்கொண்டிருந்த வேதாளம் நக்கலடிக்க ஆரம்பித்தது.
"நாயர், இவிட சூடா ஒரு ச்சாயா"
"அட, ஜாக்கெட் போட்ட சனியனே. ஆயிரம் ஆண்டு தொங்கி கொண்டிருந்தாலும் உன் கொழுப்பு அடங்கவில்லை".
"கோவிச்சுக்காத மாதித்தா. நீ காஃபி கலக்கும் அழகில் எனக்கு பாட்டு வந்து விட்டது. சரி, சரி, எனக்கு சக்கரைய கம்மியா போடு. நம்ம டாக்டர் வேதாள மூர்த்தி சொல்லிருக்கார்".
"பெயரை ஒழுங்கா சொல்லு தாளமே. டாக்டர் வேதமூர்த்தியா??"
"வேதம், மாத்ருபூதம் எல்லாம் மனிதர்களுக்கு தான். எனக்கெதற்கு வேதமும், பூதமும். நம்ம டாக்டர் வேதாள மூர்த்தி தான்"
நீயும் உன் டாக்டரும். எப்படியோ நீ ஒழி ந்தால் தான் எனக்கு நிம்மதி. சரி சரி, கதைக்கு வா! சென்னைக்கு போன விஜி என்ன ஆனாள்? சென்னையில் அவளுக்கு காத்திரு ந்த செய்தி என்ன? தமிழ் மண்ணில் கால் வைத்ததும் அவள் மனம் மாறி விட்டது என்று எனக்கு தோன்றுகிறது.
"பேஷ் பேஷ். காப்பின்னா, ஓசி காப்பி தான்"
சூப்பர் நடிகர் போல், கண்ணால் முறைத்து தம்மை பற்ற வைக்க முயன்று தோற்ற வேதாளம், மீண்டும் கதை சொல்ல ஆரம்பித்தது.
============================
மாதித்தா, கடல் மண்ணை அள ந்தவன் கூட உண்டு, ஆனால், மனித எண்ணத்தை அளந்தவன் இல்லை. தினம் ஒரு கூட்டணியில் இருக்கும் ராமதாசு போல, தினம் மாறுவது தான் இயற்கை குணம்.
விஜி லண்டன் போன ஒரு மாத காலத்தில், மாமியார் மிகவும் மாறியிரு ந்தாள். லண்டன் போனவர்கள் எல்லாம் மறு நாளே கோடீஸ்வரர்கள் ஆகி விடுகிறார்கள் என்பது தான் இந்தியாவில் சொல்லப்படுவது.
தான் கோடீஸ்வரி ஆகிவிட்டதாகவே மாமியார் மகிழ்ந்திருந்தாள். அவளுக்கு விஜி திரும்பி வந்ததும் அதிர்ச்சியே.
"என்னடி திடீர்னு வந்துட்ட. லீவுல தான வந்திருக்க? வேல ஒண்ணும் பிரச்சினை இல்லியே, திரும்பி போவல்ல?"
விஜிக்கு எரிச்சலாக இரு ந்தது. லண்டன் போக இவள் காட்டிய எதிர்ப்பு என்ன? இப்பொழுது கேட்பது என்ன?
உள்ளம் என்பது ஊமை என்று கண்ணதாசன் தனக்கு மட்டும் சொல்லவில்லை விக்கிரமா. எல்லா உள்ளங்களும் பல சமயங்களில் ஊமையாய் இருப்பது போல் விஜியின் உள்ளமும் ஊமையாய் இருந்தது.
"அதெல்லாம் ஒண்ணும் பிரச்சினை இல்ல அத்த. திரும்பி போகணும்".
விக்கிரமா, சொல்வது எளிது . செய்வது கடினம். ஆன்டர்சனும், லண்டனும் கொடுத்த தைரியத்தில் வந்து விட்டாளே தவிர, விஜிக்கு நடுக்கமாயிருந்தது.
இவர்களிடம் எப்படி ஆரம்பிப்பது, என்ன சொல்வது? நான் இன்னொருவனை காதலிக்கிறேன் என்று எந்த பெண்ணும் தன் கணவனிடமே சொன்னதாக அவள் கதையில் கூட படித்ததில்லை. அவள் பார்த்த எந்த தமிழ் சினிமாவும் இதை காட்டவில்லை.
அவள் கணவன் சந்திரனும் சந்தோஷமாக இருன்தான். பார்வை மங்கலாக இருந்தாலும், விஜியின் அழகு அதிகமாகியிருப்பதாக அவனுக்கு தோன்றியது. இது வரை இல்லாத காதல் அவனுக்கு அந்த ஒரே நாளில் வந்து விட்டிருந்தது. சந்தோஷத்தையும், துக்கத்தையும் "பாட்டிலுடன்" பகிர்ந்து கொள்வது தான் அவன் வழக்கம்.
பெரிய சிரிப்புடன் அவளை இறுக்கி அணைத்து கொண்டான்.
"ம்ம்ம், ஆ..., விஜி, ஒரு ஐநூறுவா குடு"
"எதுக்குங்க, ஏற்கனவே குடிச்சி தான உங்களுக்கு கண்ணுல பிரச்சினை.."
"என்னடி புதுசா... கடை வரையிலும் போய்ட்டு வந்துர்றேன்"
விஜிக்கு புரிந்தது. ஆனால் பாதி பார்வை போன பின்னும் திருந்தாத மனிதனை என்ன சொல்லி திருத்த முடியும்?
பார்த்து கொண்டே இருந்த மாமியார் அருகில் வந்தாள்.
"விஜி, உன் புருஷனுக்கு கண்ணு ஆபரேஷன் பண்ணனும். ஒரு நாலு லட்சம் வேணும்".
"பண்ணிடலாம் அத்த. ஆனா, இப்ப என்ட்ட அவ்வளவு பணம் இல்லியே"
" இல்லாட்டி என்ன.. பேங்குல தான வேல பாக்குற. லோன் போட்டு குடு. அவ அவ புருசனுக்கு என்னமோ பண்றா. நீ புருசன் கண்ண பத்தி கூட கவல பட மாட்டேங்குற. எல்லாம் அவன் தல விதி. உன்ன கட்டிக்கிட்டு மாரடிக்கிறான். வேறன்ன சொல்ல"
ஏற்கனவே உதறலில் இருந்த விஜிக்கு ஒன்றும் சொல்ல முடியவில்லை.
"சரிங்கத்த. நான் எங்க ஆஃபிஸ்ல கேட்டு பாக்குறேன்"
கழுத்தை நொடித்து கொண்ட மாமியார் அத்துடன் பேச்சை முறித்து கொண்டு நகர்ந்தாள்.
விஜிக்கு ஆன்டர்சனின் ஞாபகம் வந்தது. அவனிடம் என்ன சொல்வது? இவர்களிடம் எப்படி ஆரம்பிப்பது? உள்ளே நடுங்கி கொண்டிருந்த விஜிக்கு அதற்கான நேரமும் அன்றிரவே வந்தது.....
========================
"விக்கிரமாதித்தா, என்றைக்கு மதுவை மனிதன் கண்டுகொண்டானோ, அன்றிலிருந்தே மதுவும், மாதுவும் இணைபிரியாமல் ஆகிவிட்டன. தினமும் ஒரு பெண்ணுடன் சல்லாபிக்கும் உனக்கு நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை".
"முட்டாள் வேதாளமே. என் சொந்த வாழ்க்கையை பற்றி பேச உன்னிடம் வரவில்லை. நீ என்ன டாக்டர் நாராயண ரெட்டியா? உன் கதைய மட்டும் சொல். என் கதை எனக்கு தெரியும்".
"உண்மையைச் சொன்னால் உடம்பெரிச்சல். உன்னை சொல்லவில்லை விக்கிரமா, நான் பொதுவாக சொன்னேன்"
"இப்பொழுது நீ கதையை தொடராவிடில் உன் உடம்பில் எரிச்சலெடுக்கும். கதையை சொல்"
நக்கலாக தன் உடம்பை சொறிந்து கொண்ட வேதாளம் கதையை தொடர்ந்தது.
=======
"கேள் விக்கிரமா. மாலையில் வெளியே சென்ற கணவன் இரவு தான் திரும்பி வந்தான். அவனுக்கு குடியுடன் மோக வெறியும் ஏறியிருந்தது. காவி உடுத்திய பல காஞ்சிவாசிகளே காமத்தில் தோற்கும் போது, அவனையும் நம்மால் குறை சொல்ல முடியாது. கடந்த ஒரு மாதமாக விஜி இல்லாமல் அவன் பட்ட அவஸ்தை அவனுக்கு மட்டுமே, இல்லை அவன் பாட்டிலுக்கும் மட்டுமே தெரியும்".
வீடு வந்த அவனுக்கு, விஜியுடன் உடனே போகம் அனுபவிக்க தோன்றியது.
"விஜி , ரொம்ப டயர்டா இருப்ப. வா, படுத்துக்கலாம்"
விஜிக்கு அவன் அழைப்பதன் நோக்கம் புரிந்தது.
"ம்ம்ம், நீங்க படுங்க. நான் கொஞ்சம் வேலைய முடிச்சிட்டு வர்றேன்".
"அதெல்லாம் நாளைக்கி பாக்கலாம் விஜி. இப்ப வா..."
கைப்பிடித்து படுக்கைக்கு இழுக்கும் கணவனிடம் என்ன சொல்வது என்று விஜிக்கு தெரியவில்லை.
விக்கிரமா, திருமணத்திற்கே பெண்ணிடம் சம்மதம் கேட்காத தமிழ்னாட்டில், படுக்கைக்கும் மனைவியிடம் யாரும் சம்மதம் கேட்பதில்லை.அழுக்கு துணிகளை துவைப்பது போல், கணவனுடன் முயங்குவதும் அவளது அன்றாட கடமைகளில் ஒன்று என்பது தான் தமிழ் கலாச்சார கோட்பாடு என்பதால் இதில் நாம் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.
விஜியை படுக்கைக்கு அழைத்து சென்ற சந்திரனுக்கு பொறுக்கவில்லை. அவளை படுக்கையில் தள்ளி மேலே படர்ந்தான்.
மதுவின் நாற்றமும், சந்திரனின் அழுக்கான உடம்பும் விஜிக்கு அருவெறுப்பை ஏற்படுத்தியது.
"வேணாங்க... இப்ப வேண்டாம்"
"என்னடி ச்சும்மா வேணாம் வேணாம்னுட்டு.... ஒரு மாசம் ஒன்னுமில்லாம கெடக்குறேன்... பேசாம இருடி..."
"வேணாங்க. எனக்கு இஷ்டமில்ல. என்ன விட்ருங்க"
படுக்கையில், மனைவியால் மறுக்கப்பட்ட சந்திரனுக்கு வெறி ஏறியது.
"என்னது இஷ்டமில்லையா? ஏண்டி உனக்கு புருஷன் கூட படுக்க இஷ்டமில்லையா? அப்ப எவன் கூட படுக்க இஷ்டம்? சொல்லுடி, சொல்லு".
அவளது முடியை பிடித்து உலுக்கினான்.
விஜிக்கு உடலும், மனமும் வலித்தது. இப்படி நாயினும் கேவலமாக வண்புணர்ச்சி செய்யப்படுவதா என் வாழ்க்கை?
"ஆமா, இஷ்டமில்ல தான். விடுங்க என்ன"
"என்னடி சிலுத்துக்குற. இஷ்டமில்லன்ன விட்ருவாங்களா? இப்ப படுக்க போறியா இல்ல வேற எவன் கூடயாவது படுத்துக்கிட்டு இருக்கியா??"
"ஆமா, அப்படி தான் வச்சுக்கங்க. நான் வேற ஒருத்தன் கூட படுத்துகிட்டு தான் இருக்கேன். இப்ப போதுமா? விடுங்க என் முடிய"
சந்திரனுக்கு தன் கேட்டதை நம்ப முடியவில்லை. கடும் போதையிலும், காம வெறியிலும் இரு ந்த அவனால் சிந்திக்கவும் முடியவில்லை.
"என்னடி சொன்ன, தேவடியா நாயே. புருஷன்கிட்டயே இன்னொருத்தன் கிட்ட படுத்துகிட்டு இருக்கேன்னு சொல்ற, அவ்வளவு திமிரா உனக்கு.."
விஜியின் முடியை பிடித்து உலுக்கிய அவன், அவள் கன்னத்தில் பலமாக அறைந்தான். அவளை எட்டி உதைத்தான்.
வலியில் விஜியால் அழாமல் இருக்க முடியவில்லை.
"வேணாங்க, என்ன விட்ருங்க, வலிக்குது..."
விஜியின் அழுகுரல் கேட்டு அவள் மாமியார் ஓடி வந்தாள்.
"என்னடி, இங்க சத்தம் போட்டுகிட்டு இருக்க? என்னடி, என்ன ஆச்சி"
சந்திரனுக்கு வெறி அடங்கவில்லை. அவளை மீண்டும் எட்டி உதைத்தான்."நீயே கேளும்மா. இவ எவனையோ வச்சிகிட்டு இருக்கா"
"என்னடா சொல்ற... ஏண்டி வாய தொறந்து பேசேண்டி. இவன் என்ன சொல்றான்?"
விஜியால் வாய் திற ந்து பேச முடியவில்லை. அடி வாங்கி எரிந்த கன்னத்தை பொத்திக்கொண்டு முனகினாள்.
"ஆமா, நான் ஒருத்தர லவ் பண்றேன்"
கேட்ட சந்திரன் மீண்டும் அவளை அறை ந்தான். அவனால் ஒழுங்காக நிற்க முடியாததாலும், கை நடுங்கியதாலும் அந்த அறை குறி தவறி அவளது மாமியார் மீது பலமாக விழுந்தது.
மாமியார் அலற ஆரம்பித்தாள்.
"நாசமா போனவனே, என்ன ஏண்டா அடிக்கிற. அவள கொல்லுடா. தட்டுவானி முண்ட. ஓடுகாலி நாயி. இப்பிடி பண்ணிட்டாளே, நான் என்ன பண்ணுவேன். எங்குடிய கெடுத்துப்புட்டாளே.... யாருடி அவன், சொல்லுடி, சொல்லு"
மாமியார் விஜியை உலுக்க ஆரம்பித்தாள்.
"அவரு என் கூட வேலை பாக்குறாரு".
"இதுக்கு தாண்டா இவள வேலைக்கு அனுப்ப வேண்டாம்னு சொன்னேன். கேட்டியா நீ? வேல பாக்குறான்னா யாருடி அவன்? கும்மோனத்து காரனா? பேசி வச்சிகிட்டு தான் நீ லண்டன் போனியா? சொல்லுடி"
"இல்ல. அவரு லண்டன் காரரு...."
"என்னது, லண்டன் காரனா? அப்பிடின்னா, வெள்ளக்காரனா??"
"ஆமா" விஜி முனகினாள்....
"அடி நாசமத்து போறவளே. அய்யய்யோ இப்பிடி பண்ணிட்டாளே. வெள்ளக்காரங்கூட படுத்துட்டு வந்துருக்காளே. நான் என்ன பண்ணுவேன்... அய்யோ என் மானம் போச்சே. டேய், இவள தூக்குடா. கும்மோனத்துக்கு போயி, ஓடுகாலிய பெத்து வச்சிருக்க இவ அப்பன்கிட்ட பேசிக்குவோம்..."
விஜிக்கு மேலும் அடியும் உதையும் விழுந்தது, அவள் அப்பாவுக்கும் ஃபோன் செய்து விஷயம் சொல்லப்பட்டது.
விஜியால் எதுவும் செய்ய முடியவில்லை. ஆன்டர்சனுக்கு ஃபோன் செய்யலாம் என்று கூட அவளுக்கு தோன்றவில்லை. அடி வாங்கி அவளது உடலும், மனமும் மரத்து போயிருந்தது.
======================
விக்கிரமாதித்தா, படித்த பெண்ணான விஜி, மவுனமாக அடி வாங்கியது ஏன் என்று கேட்காதே. அவள் சினிமாவில் காட்டும் புரட்சி பெண்ணல்ல. எல்லாரையும் போல, அன்புக்கு ஏங்கும் ஒரு சாதாரண பெண்ணே!பெண்ணை வலுக்கட்டாயமாக படுக்கைக்கு இழுக்கும் தமிழ் கலாச்சார கணவர்களுக்கு எதிராக தான் செய்வது புரட்சி என்று கூட அவளுக்கு தெரியவில்லை.
================================================
பார்க் ஷெராட்டனில், ஆன்டர்சன் மன உளைச்சலின் இருந்தான். காலையில் பிரி ந்த விஜியிடமிருந்து எந்த தகவலும் இல்லை. தானே கூப்பிடலாமா?? இன்னும் முழுதாக ஒரு நாள் கூட ஆகவில்லை. அதற்குள் அவளை அவசரப்படுத்த அவனுக்கு விருப்பமில்லை. ஒரு வேளை, அவள் வீட்டில் சொல்லி அவர்கள் மறுத்து விட்டார்களோ?? ஏதேனும் ஆகியிருக்குமோ?? அவனுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.
எப்படியானாலும் சரி, நாளை அவளை டெலிஃபோனில் அழைப்பது என்று முடிவு செய்தான். லண்டனிலிருந்து பயணம் செய்த களைப்பில் இருந்த அவன் உடனடியாக ஆழ் ந்த தூக்கத்திற்கு போனான்!
============================================
மாமியாரின் ஏற்பாட்டின் பேரில் அவசரமாக ஒரு வாடகைக்கார் அழைக்கப்பட்டது. விஜி காருக்குள் திணிக்கப்பட்டாள்.
கடும் போதையில் இருந்ததாலும், மானப்பிரச்சினை என்பதாலும், சந்திரன் வர மறுத்துவிட்டான்.
மாமியாரும் மாமானாரும் மட்டும் ஏறிக்கொள்ள, கார் அந்த இரவு நேரத்தில் சென்னையில் இருந்து கும்பகோணம் நோக்கி விரைந்தது.
=====================================
வேகமாக கதையை சொல்லிக் கொண்டு வந்த வேதாளம் விக்கிரமாதித்தன் எந்த சத்தமும் இல்லாமல் இருக்கவே கதையை நிறுத்தியது.
"விக்கிரமா, என்ன தூங்கி விட்டாயா??"
"இல்லை வேதாளமே. இல்லை. விருப்பமில்லா பெண்ணை படுக்கைக்கு இழுக்கும் கணவர்களைப் பற்றி கலாச்சார காவலர்கள் என்ன சொல்வார்கள் என்று யோசித்து கொண்டிருந்தேன். நீ கதையை சொல். விஜிக்கு என்ன ஆயிற்று? ஆன்டர்சன் என்ன செய்தான்?"
வேதாளம் சோகமாக சிரித்தது.
"புண்பட்ட நெஞ்சை புகை விட்டு ஆற்று. நீ ஒரு தம்மை எடு. நான் மீதிக்கதையை சொல்கிறேன்".
விக்கிரமாதித்தன் ஒரு தம்மை வேதாளத்து கொடுத்து விட்டு, தானும் ஒரு தம்மை பற்ற வைத்தான்.
அவர்களை சுற்றி யார்க் ஷயரின் நவம்பர் மாத காரிருள் சூழ் ந்தது.
=============== தொடரும் ================