இதையெல்லாம் இப்ப எவன் கேட்டான் பேசாம பொத்திக்கிட்டு போவியா ஆத்து ஆத்துன்னு ஆத்தற. நீங்கள் சொல்வது புரிகிறது. ஆனால் ஆண்கள் பெண்கள் குழந்தைகளே இப்படி எந்த எழவு வரையறையும் இல்லாமல் சாதாரண மிடில் கிளாஸ் மாதவனாக இருப்பதில் பல பிரச்சினைகள் இருக்கிறது. நல்ல வேளையாக நான் மிடில் கிளாஸ் இல்லை. தரை டிக்கட். சத்யத்தில் படம் பார்த்துவிட்டு தக்காளி சாஸுடன் சமோசா சாப்பிடுகிறார்கள். சிவாஜி படத்துக்கு பெரும்பாலும் பாட்டிகள். அப்பவே அப்படித் தான். நானாடவில்லையம்மா சதையாடுது அப்பனென்றும் பிள்ளையென்றும் விளையாடுது டி எம் சவுந்தர்ராஜன் பாட்டுக்கு சிவாஜியின் முகத்து சதை ஆடும் போது இவர்களும் அய்யகோவென்று அழுது கொண்டிருப்பார்கள். எம்ஜியார் படம் தான் ஸ்பெஷல். ஒரு ரூபாய்க்கு தரை டிக்கட். பெரும்பாலும் பீடி. ரொம்ப கொஞ்சமாய் கடைசிவரை இழுக்கப்பட்ட ஃபில்டர் இல்லாத சிகரெட்.எல்லாவற்றையும் ஒதுக்கி விட்டு மணலை குவித்து (ஒரு வழியா டைட்டில கொண்டு வந்துட்டாண்டா - கோவிந்தன்) நமக்கு நாமே சீட் செய்து கொள்ளவேண்டும். ஒரே பிரச்சினை புதிய வானம் ட்ட்ட்ட்டாடாய்ங்ங். எம்ஜியார் கையை ஒரு சுத்து சுத்தி வானம் எங்க இருக்குன்னு காமிக்கும் போது பக்கத்தில இருக்க பிக்காலியும் கைய சுத்தி நம்ம மூஞ்சில மணல் விழும். எம்ஜியார் ஜெயலலிதாவுடனோ சரோஜாதேவியுடனோ காதல் செய்யும் போது கவனமா தள்ளி உக்கார்ந்து கொண்டால் நமக்கு நல்லது. சினிமா தியேட்டரில் அழகனின் (அழகிக்கு எதிர்ச்சொல் அழகன் தான?) கற்பு சூறையாடல்.போலீஸ் வலைவீச்சு.தினத்தந்தியில் கொட்டை எழுத்தில் செய்தி வராமல் இருக்கும்.
ஒருவாய்க்கோ ரெண்ட்ருவாய்க்கோ டிக்கட் எடுத்ததோட நின்னிருக்கலாம் தான். ஆனா உலகம் சுத்திக்கிட்டே இருக்கு. அதையும் கூட தட்டைன்னு ரொம்ப பேரு சொல்லிட்டுருந்தான். இல்லடா அது ஒரு மாதிரி உருண்டைன்னு கலிலியோ கலிலீன்னு ஒருத்தர் சொல்லி அவரை ரெண்டு தட்டு தட்டி வீட்டோட உக்கார வச்சிட்டானுங்க. இன்னிக்கும் உலகம் உருண்டைங்கிறது அறிவியல் பரப்புற தவறான செய்தி. எங்க மதப்புத்தகத்துல அதை தட்டைன்னு கடவுளே சொல்லிட்டாரு. அதனால அது தட்டை தான் உருண்டையா இருந்தா நீ எப்பிடி கீழ விழாம ப்ளாக் எழுதற அப்படின்னு சில பேரு சொல்லிக்கிட்டு தான் இருக்காங்க. பிதாவே இவர்களை மன்னியாதீம்.
என்ன சொல்லிட்டு இருந்தேன்? ஆமா தர டிக்கட்டு. அதோட நின்னிருக்கலாம். ஆனா நாலு எழுத்து படிச்சி வைப்போம்டா கோவிந்தான்னு எப்பனா எப்பனா தான் மக்களே எதுனா புக் படிக்கிறது. பெரும்பாலும் ஓசி புக் தான். வாங்கற அளவுக்கு ஒரு ப்ளாக் எழுத்தாளனை என்னிக்கு தமிழ் சமூகம் வச்சிருக்குது? கம்பனோட தாத்தா காலத்திலருந்து நடக்கற கதை.
தாத்தான்னா ஞாபகம் வருது. சின்ன புள்ளையா இருக்கும் போது அதாவது நான் சின்ன புள்ளையா இருக்கும் போது தாத்தாட்ட இருந்து இங்கிலாந்து லெட்டர்ல கடுதாசி வரும். அன்புள்ள மகளுக்கு, இங்க எல்லாரும் நல்ல சுகம். அங்கே சுகம் அறிய ஆவல். ஊரில் மழை இல்லை. இப்படி ஆரம்பித்து உன்னை பார்த்து ரொம்ப நாளாகி விட்டது. உடனடியாக குடும்பத்துடன் வந்து போகவும். ஸ்டார்டிங் மட்டுமல்ல ஃபினிஷிங் கூட நல்லாத் தான் இருக்கும். ஆனா நடுவுல இருக்கறது வேற விஷயம். நீ காசு வாங்கி ரொம்ப நாளாச்சு. சோத்துல உப்பு போட்டுத் தான் திங்கிறியா இதை விட அசிங்கமா பேச என்னோட மனசு எடம் கொடுக்க மாட்டேங்குது.
அப்புறம் என்ன மயிருக்கு நல்ல சுகம் நொள்ளா சுகம் உன்னை பார்க்க ஆவல் அவல்னு அள்ளி விடறது? எல்லாம் மொதல்ல அதாவது இந்த ப்ளாக்கோட மொதல்ல சொன்னது தான். லெட்டர்னா இப்பிடித் தான் இருக்கணும்னு ஒரு வரையறை இருக்குல்லா? அதுக்கு தான இப்பிடி எழுதறது.
எம் கோபால கிருஷ்ணனின் மணல் கடிகை பற்றி இதுவரை எழுதியிருப்பதும் அப்படித் தான் இருக்கிறது. (ங்கொய்யால இது சொல்றதுக்கு தான் இந்த சுத்து சுத்தினியா - கோவி) ஒசி புத்தகம் படித்து விட்டு இது பத்தி பழம் தின்னு கொட்டை போட்டவங்க எதுனா சொல்லிருக்காங்களான்னு தேடிப் பார்த்தா எல்லாரும் சொல்லி வச்ச மாதிரி தமிழ் இலக்கியத்துல முக்கியமான புக். அவ்ளோ தான். அதுக்கு மேல ஒருத்தரும் ஏன் முக்கியமான புக்கு எதுக்கு முக்கியமான புக்குன்னு சொன்னா மாதிரி தெரியலை. ராஜாவோட சட்டை சூப்பர். அந்தா அந்த காலர்ல தெச்சிருக்கற பச்சை கல்லு சும்மா தக தகன்னு எம்ஜியார் கலர்ல ஜொலிக்குது. ராசா குண்டி தெரிய அம்மணமா இருக்கறாருன்னு உண்மையை சொன்னா நம்மளை ஒரு பய மதிக்க மாட்டான். எல்லா பேரும் என்னா சொல்றாய்ங்களோ அதையே சொல்லி வச்சா நோ டேஞ்சரு. அந்த பட்டன் வைரத்துல செஞ்ச மாதிரி இருக்கேன்னு சொன்னா இன்னும் சூப்பரு. ஒரே ஒருத்தர் மட்டும் கற்பனை குதிரைல ஏறி மெதக்கிற ஆரம்ப கட்ட வாசகர்களுக்கு மணல் கடிகை சலிப்பூட்டும்னு டிக்ளேர் பண்ணிருக்காரு. இனிமே எவனாவது அது சலிப்பா இருக்குன்னு சொல்லுவீங்க? சுமால் பாய்ஸ் அண்ட் கேள்ஸ். சிறுவர் மலர் படிங்க. ராஜா சட்டை சூப்பர் சூப்பர் சூப்பரோ சூப்பர்.ஆனா என்ன மாதிரி தரை டிக்கட்டுக்கு பிரச்சினை என்னன்னா என்னய்யா சிவாஜி எப்ப பார்த்தாலும் அழுதுக்கிட்டே இருக்காருன்னு சொல்றது தான். சொல்லாம இருக்க முடியாது பாருங்க. இல்லாட்டி நானும் சத்யத்துல டொமட்டோ சாஸோட சமோஸா தின்னுட்டு இட்ஸ ஃபண்டாஸ்டிக் ஃபில்ம் அப்படின்னு அறிக்கை விட்டுக்கிட்டு இருப்பனே. பிரச்சினை புக் இல்லை, நான் தர டிக்கட். அதான்.
மணல் கடிகையின் பிரச்சினை அதன் பின்னட்டையில் ஆரம்பிக்கிறது. (பின் நவீனத்துவம்னா இதானாடா? - கோவிந்தன்). ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கை அவன் எண்ணப்படியே அமைகிறது. உறவுகளின் அடி வேர் சிக்கல்களை அலசும் நவீனம் இதுவே. பின்னட்டையின் டிக்ளரேஷன். (இனிமே பின்னட்டை பார்த்துட்டு எதுனா புக் படிப்ப நீ? - கோவி). சிக்கல்களை அதுவும் அடிவேர் சிக்கல்களை அலசும் நாவல் எம்ஜியார் படமாக இருந்தால் என்ன செய்வது?
திருப்பூரின் பிண்ணனியில் (அது வெறும் பிண்ணனி மட்டுமே, திருப்பூரின் கதை அல்ல, உலகமெங்கும் இருக்கும் மனிதர்களின் கதை என்று ஆரம்பத்தில் நாவலாசிரியர் குறிப்ப்பிடுகிறார்), ஐந்து நண்பர்களின் கதை. ப்ளஸ் டூ படித்து முடிக்கும் கட்டத்தில் ஆரம்பிக்கும் கதை அவர்களின் வாழ்க்கையை பின் தொடருகிறது. அது வரை சரி தான். ஆனால் எந்த ஒரு விஷயத்திலாவது ஆழமாக செல்கிறதா என்றால் இல்லை. அம்மா செத்ததும் அம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா என்று கத்தி விட்டு முகத்தை குனிந்து கொள்ளும் எம்ஜியார் ட்ரிக்.
தொழில் நகரத்தின் பிண்ணனியில் அமைந்த நாவல், அந்த தொழிலின் சிக்கல்களை வெறுமனே விஜய் படம் போல தொட்டு செல்கிறது என்பது முக்கிய பிரச்சினை. வெறும் தொழிலாளியாக சேரும் சரத் குமார் ச்சே சிவாவை அடுத்த சில பக்கங்களில் ரத்தின வேல் செட்டியார் முதலாளியாக உயர்த்துகிறார் (சரத்குமார் மட்டும் தான் ஒரே பாட்டுல தொழில் அதிபர் ஆகணுமாடா - கோவிந்தன்). முக்கியமான கேள்வி, சிவாவை உயர்த்த ரத்தினவேல் செட்டியாருக்கு என்ன காரணம்?? அவருக்கும் சிவாவுக்கும் என்ன உறவு? டியர் ரைட்டர், பல கோடி முதலீடு செய்து தொழில் ஆரம்பிப்பவன் அழுத்தமான காரணம் இல்லாமல் யாரையும் தேர்வு செய்ய மாட்டான். அது உளவியல் பிரச்சினை. ஆனால் மணல் கடிகை இந்த இடத்தில் மட்டுமல்ல, இன்னும் பல பல இடங்களில் வெறுமனே நிற்கிறது. சிவா மட்டுமல்ல, வண்ணாரின் மகளான சம்பங்கி, தையல் தொழிலாளியாக சேர்ந்து தொழில் அதிபராக உயர்கிறார். சாதாரண நிலை மக்களையும் சமத்துவ முற்போக்கு ஜாதி வெறியர்களுக்காக குறிப்பு - இங்கு சாதாரண நிலை என்று நான் குறிப்பிடுவது கேரக்டரின் ஜாதி அல்ல, பொருளாதார நிலை, சாதாரண மக்களையும் திருப்பூர் தொழில் அதிபர் ஆக்கும் திருப்பூரின் சூழல். ஆனால் கோபால கிருஷ்ணன், ஒரு தொழில் ஆரம்பித்து பாருங்கள். தொழில் அதிபர் ஆவது ஏதோ இரண்டு அத்தியாத்தில் நடக்கும் காரியம் அல்ல. ஒரு ஜட்டி தைக்க ஆர்டர் பிடிப்பது கூட பெரும்பாடு. அதன் பின் தொழில் நடத்துவதன் பெரும்பாடுகள். மூலதனம், ஆர்டர் பிடிப்பது, ஆட்களை வேலை வாங்குவது, கேன்ஸல் ஆர்டர் பிரச்சினை, அரசு அதிகாரிகளின் லஞ்ச ஊழல், ஏற்கனவே பரவிவிட்ட போட்டியாளர்கள் ஏற்படுத்தும் பல்வேறு பிரச்சினைகள்....ம்ஹூம்...மணல் கடிகைக்கு அதெல்லாம் கண்ணில் படவே இல்லை.
அந்தரங்க வாழ்க்கை என்றால் செக்ஸ் லைஃப் மட்டுமே என்று கோபால கிருஷ்ணனிடம் யாரோ சொல்லிவிட்டார்கள் போலிருக்கிறது. இரண்டாவது அத்தியாயத்தில் உமா குளிப்பதை பார்க்கும் சிவாவில் ஆரம்பிப்பது ஒவ்வொரு மாற்று அத்தியாத்திலும் தொடர்கிறது (ஆல்டர்நேடிவ் எபிஸோடுக்கு மாற்று அத்தியாயம் சரியா தமிழா? - கோவி). யாராவது யாருடனாவது ஓடிக் கொண்டே இருக்கிறார்கள். இந்தா இந்த எபிசோட்ல யார்னா யார் கூடயாவது ஓடிருவாங்க பாரேன்னு பெட் கட்டினால் ஜெயம் உங்களுக்கே. கோபால கிருஷ்ணன் அய்யா, பெர்ஸனல் லைஃப் என்றால் படுக்கையறை மட்டுமே அல்ல.
உமா, விமலா, லிடியா பெகாஸி, அருணா, சித்ரா என்று தொடரும் சிவாவின் செக்ஸ் லைஃப், எந்த இடத்திலும் அதன் உளவியல் ஆழத்தை தொடக்கூட முயற்சிக்கவே இல்லை. சிவாவை எதேச்சையாக சந்திக்கும் அருணா அடுத்த சில அத்தியாத்தில் அவனுடன் உடலுறவு. அதெப்படி செய்யலாம் என்பதல்ல என் கேள்வி. ஆனால் கோபால கிருஷ்ணன் அதன் உளவியல் ஆதாரத்திற்குள் நுழையக் கூட முயற்சிக்கவில்லை. அதே போல ஆர்டர் பிடிக்க போகும் இடத்தில் லிடியா பெகாஸியுடனான சிவாவின் படுக்கையறை நிகழ்வுகள். கடைசியில் இவர்களையெல்லாம் தவிர்த்து விட்டு சித்ராவை திருமணம் செய்யும் சிவா. விமலா, அருணாவையெல்லாம் சிவா வெறும் உடல் பசிக்காக உபயோகித்தான் என்றால் அது வேறு. ஆனால் சிவாவின் கேரக்டர் அப்படியாக இல்லை. சித்ராவை தனது தொழில், இமேஜை அடுத்த கட்டத்துக்கு நகர்த்த திருமணம் செய்கிறான் என்றாலும் சிவாவின் மனநிலை பற்றி எந்த ஒரு ஆழத்திற்கும் நாவல் செல்லவில்லை. கடைசியில் சிவாவின் தொழில் முழுவதும் அவன் மனைவி சித்ராவின் கட்டுப்பாட்டில் (ஸோல் ப்ரொப்பரைட்டர்) இருக்கிறது. (ரொம்ப பழைய படம் தான், ஆனா கடைசியில நம்பியாரும் அசோகனும் சாவணும் இல்லாட்டி திருந்தனும். அப்பிடி இருந்தா தான் அது எம்ஜியார் படம், அதைத் தான் மக்கள் ஏத்துப்பாங்க - கோவிந்தன்). இந்த இடத்திலும் கூட நாவல் சிவாவின் ஆழ்மன போராட்டங்களுக்குள் கொஞ்சம் கூட செல்லவில்லை. என்ன தான் சாமியாருடன் தொடர்பு, நாட்டு மக்களுக்க்கு இனிமே நல்லது செய்யப் போறேன் என்று ஆரம்பித்தாலும் சிவா போன்ற ஒரு கேரக்டர் தொழில் இழப்பை வெகு எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. அது அவ்வளவு சுலபமும் அல்ல.
இன்னொரு காமெடி சண்முகம் கேரக்டர். பேன்ஸி ஸ்டோர் நடத்தும் சண்முகம் ஜாக்கெட்டும் ப்ராவும் கொடுத்தே பெண்களை கவர்வதாக வருகிறது. அய்யா கோபால கிருஷ்ணன், அப்படி இருந்தால் தமிழ்நாட்டில் தெருவுக்கு தெரு வீடு இருக்காது, ஃபேன்ஸி ஸ்டோர் தான் இருக்கும். எந்த ஆழத்திற்கும் போகாது வெறுமனே பெண்களை படுக்கையறைக்கு கொண்டு வருவதாக சொல்வது மஞ்சள் பத்திரிக்கைகளையே நினைவுபடுத்துகிறது.
அடுத்த எரிச்சல் உமாவின் கேரக்டர். ஒரு மாநாட்டுக்கு வரும் எம்ஜியாருக்கு மாலை போடும் உமாவின் விரல் மீது எம்ஜியாரின் விரல் உரசுகிறது. அதன் விளைவு, உமாவுக்கு யாருடன் படுத்தாலும் ஒன்று தான், பிரச்சினை இல்லை. எம்ஜியாரின் ஆளுமையும் கவர்ச்சியும் தெரிந்த விஷயம் தான் என்றாலும் அவர் விரல் பட்டுடுச்சி இனிமே எவன் தொட்டாலும் ஒன்னு தான் என்று எல்லாருடனும் படுக்கும் உமாவின் உளவியல். எம்ஜியார் மட்டுமே எனக்கு பிடிக்கும், அவர் தொட்டதுமே எனது பிறவி முழுமை அடைந்து விட்டது என்று இதை எடுத்துக் கொள்ளலாம் என்றாலும் அதற்காக எல்லாருடனும் படுப்பாள் என்பது உளவியல் ரீதியாக இடிக்கவே செய்கிறது.
திருப்பூரில் தோல்வி அடைந்து ஏஜெண்ட்டாக மும்பை புனேயில் சுற்றி அலையும் அன்பழகன். ஏஜெண்ட்டின் வாழ்க்கை ரூமில் இருப்பது, வாழைப்பழம் சாப்பிடுவது, இடம் தெரியாமல் சுற்றுவது என்பதுடன் முடிந்திருக்கிறது. ஆனால் இது மட்டும் தானா பிரச்சினை?? எங்கோ மொழி தெரியாத பிரதேசத்தில் தெரியாத இடத்தை தேடியலைவதன் பிரச்சினை, ஏதோ ஒரு ஹோட்டலில் இடுக்கு அறையில் தங்கியிருப்பவன் மனநிலை இவ்வளவு எளிதானதா? ஸோ ஸேட். ஸோ ஸேட். அன்பழகன் வராததால் தொந்தரவு தாங்காமல் தற்கொலைக்கு முயற்சித்து அன்பழகனின் நண்பர் குடுமி அண்ணாச்சியால் காப்பாற்றப்பட்டு அவருடன் பந்தத்தில் முடியும் அன்பழகனின் அக்கா. செக்ஸுவல் தொந்தரவு, கடன் தொல்லையில் இருந்து காப்பாற்றியவர் என்றாலும் இரண்டே இரவுகளில் ஒரு பெண் ஒரு ஆளின் மார்பில் சாய்வாளா? (மீண்டும் செக்ஸ் புத்தகம் ஞாபகம் வந்தால் நான் பொறுப்பல்ல) குறைந்த பட்சம் அதை அந்த பெண்ணின் மனநிலையில் இருந்து சொல்லப்ப்ட்டிருந்தால் அது வேறு கதை. அப்படி எந்த முயற்சியும் இல்லை.
சிட்பண்ட்ஸ் நடத்தி பிரச்சினையில் மாட்டிக் கொள்ளும் திரு பற்றி சொல்ல எதுவும் இல்லை. நல்லவனுக்கு பிரச்சினை வருகிறது என்ற அளவில் தான் இருக்கிறது. அடுத்து பரந்தாமன். இரண்டு திருமணம் செய்து ஒரு மனைவி விலகிப் போகிறாள், இன்னொரு மனைவி தற்கொலை செய்து கொள்கிறாள். எல்லாம் சரி தான். ஆனால் எந்த கேரக்டரின் ஆழத்திற்குள்ளும் மணல் கடிகை நகரவே இல்லை.
தொழில் போட்டி, தொழில் துரோகம், நல்லது செய்ய நினைக்கும் ஊருக்கு வெளியில் சாமியார் போல உட்கார்ந்திருக்கும் முன்னாள் தொழில் அதிபர். டிபிக்கல் தமிழ் சினிமா. அல்லது உலக சினிமா.
தொழில் பற்றிய ஆழமும் இல்லை, தனி மனிதர்களின் வாழ்க்கை பற்றிய ஆழமும் இல்லை. ஆனால் நாவலின் முக்கிய ப்ள்ஸ் பாய்ண்ட் தொடர்ந்து வேகமாக படிக்க வைப்பது. வாசிப்பவன் எந்த இடத்திலும் யோசிக்க தேவையில்லாமல் மேலோட்டமாக இருப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்.
நீட்டிக் கொண்டே இருக்க விருப்பம் இல்லாததால் இத்துடன் முடிக்கிறேன்.
மணல் கடிகை. மணல் மட்டும்.