Monday, 8 February 2010

மரங்கொத்தி...! -1

மரங்கொத்தி...! -1

இன்றோடு எத்தனையாவது நாளென்று தெரியவில்லை...ஆனால் நேற்றும் நேற்றிய முந்திய நாளும் இதே மரத்தின் இதே இடத்தை கொத்திக் கொண்டிருந்தது ஞாபகம் இருக்கிறது...அவ்வப்பொழுது இரை தேடி விட்டு பிறகு மீண்டும் இந்த நெடிது நின்ற பனை மரத்தின் இந்த இடத்தை கொத்திக் கொண்டிருப்பதே வேலையாக இருக்கிறது...ஏனோ தெரியவில்லை...சுத்தி நிற்கும் மரங்களை அலட்சியப்படுத்தி, இந்த மரமே குறியாக...

என் மூக்கு நீண்டு மேல் உதடு தாண்டி கீழ் உதடுடன் இணைந்து கூரிய அலகாக மாறி விட்டிருக்கிறது...நீளமான கைகள் குறுகி ஆங்காங்கே எலும்பு புடைத்து அதில் மயிர் முளைத்து முதுகின் இரு புறமும் சிறகுகள் நீண்டிருக்கிறது...கால்களின் பாதம் குறுகி நகம் நீண்டு பறவைக் கால்களாக, நான் அடிக்கடி அணியும் நீலப் பூக்கள் வரைந்த வெள்ளைசட்டை என் உடல் முழுதும் பரவி சிறு மயிர்களாக.....நான் என்பதன் அடையாளமாக முகம் மட்டும்....
இல்லையே...நான் மரங்கொத்தி இல்லை...எப்படி ஆனது இப்படி...

"தூத்துக்குடி அண்ணாச்சி வந்திருக்காவ...கீழ வர்றியா தம்பி...."
எங்கோ தூரத்தில் அசரீரி போல அம்மாவின் குரல் கேட்டதும் காட்சிகள் சட்டென்று கலைந்து விட்டது....ச்சே...கனவு....

ஆழ்மன ஆசைகளும், நிறைவேறாத எண்ணங்களும், பயங்களும் தான் கனவுகளாக வருகிறது...ஸிக்மன்ட் ஃப்ராய்டோ இல்லை வேறு யாரோ சொன்னது நினைவில் வந்து போனது...அதிகாலை கனவு பலிக்குமாமே...லேசாக சிரிப்பு வந்தது...பலித்தால் நன்றாகத் தான் இருக்கும்...ஆனால் கொஞ்சம் பெரிய சிறகுகள் வேண்டும்...

===============================

டிசம்பர் மாத அதிகாலையில் தண்ணீர் சிலீரென்றது...அவசரமாக முகம் கழுவி பல் துலக்கும் போது முகத்தை கண்ணாடியில் பார்த்துக் கொண்டேன்...மூக்கு கொஞ்சம் நீளம் தான் அப்பாவைப் போல‌...ஆனால் மரங்கொத்தி என்று சொல்ல முடியாது...ச்சே...என்ன இது...

கீழே வந்த போது கிளியன் அண்ணாச்சி ஒரு சொம்பிலிருந்து ஆறிப் போன கருப்பட்டி காப்பியை கிளாஸில் ஊற்றிக் குடித்துக் கொண்டிருந்தார்...தூத்துக்குடி அண்ணாச்சி...ஒரு வகையில் தூரத்து சொந்தம்...அப்பாவுக்கு நெருங்கிய நட்பு....பெயரென்னவோ தங்கவேலன் என்றிருந்தாலும் கிளியன் அண்ணாச்சி என்று சொன்னால் தான் ஊரில் யாருக்குமே தெரிகிறது...நாலாப்பு படிக்கும் போது திட்டிய வாத்தியாரை சட்டையை பிடித்து தள்ளி விட சட்டை கிழிந்து இவர் கையோடு வந்து விட்டதாம்...கிழியன்....நாங்குனேரி மக்கள் வாயில் பட்டு கிளியன்...

"வாங்க மாமா...ரொம்ப நாளா ஆளக் காணோம்...எங்கயும் புதுசா வீடு பாத்திட்டீங்களா...."

"பிள்ளைக்கு அதே கேலிப்பேச்சு தான்....எய்யா....பாத்து நாளாச்சில்லா..அதான் ஒரு எட்டு பார்த்துட்டு போலம்னு வந்தன்..."
கிளியன் எழுந்து வந்து என் இரு கைகளையும் இறுக்கிப் பிடித்துக் கொண்டார்...

"நீங்க எங்கயோ பாம்பே போனதா சொன்னாங்க...அதான் பம்பாயில வீடு சேத்துட்டீங்களான்னு நினைச்சேன்...எப்படியாவது ஒரு தடவை தூத்துக்குடி வந்து பாக்கலாம்னு நினைக்கிறேன்...இங்க வேலையை விட்டுட்டு வரமுடியல....அத்தை எதும் தப்பா எடுத்துக்க வேணாம்......வீட்ல அத்தை எல்லாம் நல்லா தான இருக்காங்க...அந்த கால் வலி இப்ப எப்படி இருக்கு..."

"எல்லாம் இருக்கா....சாள மீனு வாங்கினா ஏன் உழுவை மீனு வாங்கியாரலன்னு...நாட்டு வாய அடைச்சாலும் நாங்குனேரிகாரிய வாய அடைக்க முடியுமா...அதான் பம்பாயிக்கு ஓடிப் போறதுண்டு...."

"அதுஞ்சரி தான்....பம்பாயில மீனு பிடிச்சீங்களாக்கும்...."

அண்ணாச்சி கையிலிருந்த காப்பியை ஒரே மடக்காக குடித்து விட்டு சர்ச்சு பாதிரியாரின் முன் பாவ மன்னிப்பு கேட்பவர் போல தலையை குனிந்து கொண்டார்....

"அது உள்ளதும்...சேட்டு மீனு....கால்ல கல்லை கட்டினதும் சிக்குன பெருச்சாளி மாதிரில்லா கத்தறான்...எள‌வு இந்த சோலி பாக்கதும் ஒளப்பலாத் தான் உண்டு....இந்தாட்டம் ஊருல பத்து குறுணியாட்டும் வாங்காட்டி ஒம்ம மவள எவன் கட்டுவான்னுட்டு ஒங்க அத்தைக்காரி பாடு முடியல போ...அதுக்காட்டியுமில்ல இந்த மீனு பிடிக்குத சோலி...என்னைக்கு எவன் நம்ம கால்ல கல்ல கட்டுவானிட்டு ஒரு பக்கமா வருது தான்...உப்புத் தோசைக்காவது வழி செய்யணுமில்லா....இந்தா ஒனக்கு கல்யாணம் வச்சிருக்கு...ஒங்கய்யன் எனக்கு செஞ்சதுக்கும் ஒங்கம்ம போட்ட சோத்துக்கும் நான் திருப்பி செய்யணுமில்லா...ஒத்த புள்ள நீ...அதுக்கும் வக்கில்லாம என்ன மசுத்துக்கு நான் மாமனாக்கும்..."

அண்ணாச்சி தலையை குனிந்து கொள்ள வேண்டியது தான்...சோலி அப்படி...பச்சையாக சொல்ல வேண்டுமானால் அண்ணாச்சி ஒரு அடியாள்...காசு கொடுத்து காலை எடுத்துரு என்றால் முடித்து விடுவார்....சில நேரங்களில் கொலை மிரட்டலும் விடுப்பதுண்டு...துணிச்சலாக பார்ட்டியாக இருந்தால் ஆளைத் தூக்கிக் கொண்டு போய் காலில் கல்லைக் கட்டி நடுக்கடலில் இறக்குவதும் உண்டு....வெறும மிரட்டிறது உண்டு, கொலை செஞ்சதில்ல என்று அண்ணாச்சி சொல்வதை எந்தளவு நம்புவது என்று எனக்குத் தெரியவில்லை...முழு போதையில் ஏதேனும் உளறினால் தான் உண்டு....

"நல்லா செஞ்சீங்க போங்க...அதெல்லாம் ஒண்ணும் வேணாம்...ஆனா பார்த்து இருங்க...இப்ப போலீஸ் கெடுபிடியெல்லாம் ஜாஸ்தியா இருக்கு...எங்கனா குடிச்சிட்டு ஒளறி வைக்காதீங்க..."

அண்ணாச்சி சிரித்தார்...

"அதெல்லாம் இருப்பம்....அதக் கொண்டில்லா இங்கன எங்கியும் மீனு பிடிக்கிறதில்ல... ஒனக்க கல்யாணத்துக்கு செய்யணும்...அத நான் ஒங்கம்மைக்கிட்ட கேட்டுக்கிடுதேன்...பொண்ணு எந்த ஊரு...நம்மூர்க்காரியாக்கும்...."

"பொண்ணு கோயம்புத்தூரு...அம்மா போயி அத்தைக்கிட்ட பத்திரிக்கை வச்சாங்களே..."

"அதை கொண்டில்லா நான் இங்க வந்துருக்கன்....கல்யாண வேலையெல்லாம் ஆரம்பிக்கணுமுல்லா...."

"நீங்க இருந்து சாப்பிட்டு போங்க மாமா...எனக்கு வெளிய வேலை கெடக்கு...சாயந்தரம் மெட்ராஸு வேற போவணும்..."

"சாப்பாடு கெடக்கட்டு... பிள்ள பாத்து போயிட்டு வரணும்...இங்க அம்ம கெடக்கா...ஒன்னிய விட்ட அவளுக்கும் நாதியில்ல...பாத்துக்கிடு.. "

"சரிங்க மாமா...நான் வர்றேன்..."

சாப்பாடு கெடக்கட்டு என்று அவர் அலட்சியமாக சொன்னாலும் குறைந்த பட்சம் இருபது இட்லியும் எட்டு தோசையும் அரைச் சட்டி கருப்பட்டி காப்பியும் குடிக்காமல் அவரது காலை நேரம் ஆரம்பமாகாது என்று எனக்குத் தெரியும்....

===========================

கோரிப்பாளையத்தில் முருகேசனை பார்த்து மாதாமாதம் ரெண்டாயிரம் கிலோ வெள்ளாட்டுக் கறி...ஒரு வேலை முடிந்தது....அடுத்து மதுரா ஹோட்டலில் தஞ்சாவூர் ஏஜென்ட்...சொன்ன டிஸைன்படி சிவன் பார்வதி அம்மையுடன் ஆடும் சிலை...கொஞ்சம் லேட்டாகும்...எப்படியும் இந்த மாதக் கடைசியில் கப்பலேற்றி விடலாம்... தலையில் கங்கையுடன் கால் தூக்கி ஆடும் சிவன் எட்டடி....பக்கத்தில் அம்மை ஆறடி...அமெரிக்கா போகிறது....வண்டிப்பாளையம் போய் வாரம் ஆறு டன் தக்காளியும் மூணு டன் பச்சை மிளகாயும் ஏற்பாடு செய்ய வேண்டும்...இது மலேசியாவுக்கு.....கொரியாவிலிருந்து ஈரோட்டு மஞ்சள் கேட்கிறார்கள்...ஆனால் ஈரோட்டுக்காரர்கள் சொல்லும் விலைக்கு மார்ஜின் நிற்காது போலிருக்கிறது...

எனக்கு எக்ஸ்போர்ட் பிஸினஸ்...இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேஷியா மற்றும் உலக நாடுகளெங்கும் என்று சொல்லிக் கொள்ள ஆசை இருந்தாலும் இப்போதைக்கு அதிகம் சிங்கப்பூரும் மலேஷியாவும் தான்....பச்சை மிளகாய், சின்ன வெங்காயம்,அரைக் கீரை, புளிச்சக் கீரை, சேப்பங்கிழங்கு, தக்காளி, முருங்கைக் காய், வெள்ளாட்டுக் கறி, சில சமயம் சாமி சிலை என்று தான் எக்ஸ்போர்ட் போய்க் கொண்டிருக்கிறது....ஏதேனும் டெக்ஸ்டைல், க்ரானைட் என்று ஆர்டர் கிடைத்தால் நானும் ஃப்ரான்ஸ், லண்டன், ஜெர்மனி, அமெரிக்கா என்று பறக்கலாம்...ஆனால் ஏற்கனவே இருப்பவர்களை தாண்டி உள்ளே புகுவது....ம்ம்ம்ம்...மீனாட்சி கண் தொறந்தால் உண்டு....

எல்லாவற்றையும் முடித்துக் கொண்டு நான் ரயில்வே ஸ்டேஷன் போய்....மதுரை ட்டூ சென்னை...பாண்டியன் எக்ஸ்பிரஸ்...ப்ளாட்ஃபார்ம் சிக்ஸ்...அறிவிப்பு கேட்டு..."கும்பலு அள்ளுது மச்சான்...இன்னிக்கு ஆம்னி பஸ்க்காரய்ங்களுக்கெல்லாம் கொள்ளை தான்...அங்க பல்லாவரத்துல நம்ம செந்தில் இருக்கான் மாப்ள...அவன்கிட்ட் நீ வர்றேன்ன்னு சொல்லிருக்கேன்...எக்மோருக்கு வர்றேன்னு சொல்லிருக்கான்..பாத்து பேசிக்க...ஏழாவது மாசம் இங்க வந்திருடி...புள்ள பொறந்தா அது வாடிப்பட்டில தான் பொறக்கணும்...." காது உரசிய குரல்களை கடந்து, முன் பதிவு செய்த என் சீட்டை அடைந்த போது மதுரை டிசம்பரின் மெல்லிய குளிரில் வியர்த்திருந்தது.....

பர்ஸ்ட் க்ளாஸ் ஏ.ஸி.....ஏற்கனவே அடித்திருந்த ஓல்டு மங்க் ரம்மும் சேர்ந்து...சரி, இன்னிக்கி நல்லாத் தூங்கலாம்.... நான் கையோடு கொண்டு போயிருந்த பெரிய டவலை போர்த்திக் கொண்டு தூங்க தயாரான போது...

"ஃபைவ் ஏ அன்ட்....ஃபைவ் பி....இந்த சீட் தான்...."

அவன் எனக்கு எதிர் சீட்டில் வந்து உட்கார்ந்தான்....
===========================
(பி.கு. இதன் முழுக் கதை ஏற்கனவே எழுதி விட்டேன்...ஆனால் வெகு நீளமாக இருப்பதால், பல பாகங்களாக பிரிக்கப்பட்டிருக்கிறது...அடுத்த பாகம் நாளை வெளியாகும்...முக்கியமான டிஸ்கி...நான் அவனில்லை!)

29 comments:

அது சரி(18185106603874041862) said...

For comments, if anybody bothers to leave a comment...If you dont bother to, thats fair enough, I dont have a complaint, but I do hope that you enjoyed the post...if not, hey, I am not as bad as Windows or Fucking Andanda Vikatan or whatever the fuck they call themselves these days....

அது சரி(18185106603874041862) said...

sorry, ignore my previous comments regarding Windows...Ofcourse they are shit, but i didn't intend to call them shit at this moment....I am just extremely pissed off...

பழமைபேசி said...

Cool Annaachi, Cool..... Let me read the post and come back.....

பழமைபேசி said...

நல்லது அண்ணாச்சி... தொடருங்கள், அடுத்த இடுகைக்காக காத்திருப்பு.....

அது சரி(18185106603874041862) said...

//
பழமைபேசி said...
நல்லது அண்ணாச்சி... தொடருங்கள், அடுத்த இடுகைக்காக காத்திருப்பு.....
//

Thanks for the first comment mate...The next part will be published tomorrow...

குடுகுடுப்பை said...

யப்பா யாரையோ சாய்க்கப்போறாங்கன்னு தெரியுது.

Unknown said...

நல்லாப் போகுது கதை..

அந்த அண்ணாச்சி பேசுறதைப் பாத்தா தூத்துக்குடிக்காரவுக பேசுற மாதிரி இல்லையே? நாகர்கோவில்க்காரவுக பேசுற மாதிரி இருக்கு??

sathishsangkavi.blogspot.com said...

நல்லாயிருக்குங்க...

vasu balaji said...

முதல் பத்தி கட்டிப்போடுகிறது. அண்ணாச்சி அறிமுகம் எதிர் பார்க்க வைக்கிறது.
/ முகிலன் said...

நல்லாப் போகுது கதை..

அந்த அண்ணாச்சி பேசுறதைப் பாத்தா தூத்துக்குடிக்காரவுக பேசுற மாதிரி இல்லையே? நாகர்கோவில்க்காரவுக பேசுற மாதிரி இருக்கு??/

ம்கும். நாகர்கோவில் அண்ணாச்சி தூத்துக்குடியில இருக்கப்படாதோ?

vasu balaji said...

//அது சரி said...

sorry, ignore my previous comments regarding Windows...Ofcourse they are shit, but i didn't intend to call them shit at this moment....I am just extremely pissed off...//

windows 7 is a beauty really.

KarthigaVasudevan said...

இன்றைய கதை படிச்சாச்சு.நல்ல ஆரம்பம் ,மீதியையும் சொல்லி முடிச்சப்புறம் திட்றதா...பாராட்டரதானு முடிவு பண்ணலாம்.:)))

vasu balaji said...

/"ஃபைவ் ஏ அன்ட்....ஃபைவ் பி....இந்த சீட் தான்...." /

மாதிக்கும் வேதாக்குமா:))

கபீஷ் said...

நல்லாருக்கு. நாளைக்கு வெயிட்டீஸ்.

கலகலப்ரியா said...

//
ஆனால் மரங்கொத்தி என்று சொல்ல முடியாது...ச்சே...என்ன இது...

சட்டை கிழிந்து இவர் கையோடு வந்து விட்டதாம்...கிழியன்....நாங்குனேரி மக்கள் வாயில் பட்டு கிளியன்...//

=))

வரிக்கு வரி அருமை... எதை சொல்றது எதை விடுறதுன்னு தெரியல... அடுத்த பாகத்துக்கு ரொம்ப வெயிட் பண்ண முடியாது... சீக்கிரம் ரிலீஸ் பண்ணிடுங்க சாமி...

//நான் அவனில்லை!//

அவனில்லை சரி...! கதைல "நான்" அப்டின்னுதானே வருது... "நான் நானில்லை" அப்டின்னு போட்டிருக்கணுமோ....

அண்ணாமலையான் said...

கலக்குங்க

Menaga Sathia said...

தொடருங்கள், அடுத்த இடுகைக்காக காத்திருப்பு.....

அது சரி(18185106603874041862) said...

//
குடுகுடுப்பை சோழன் said...
யப்பா யாரையோ சாய்க்கப்போறாங்கன்னு தெரியுது.

8 February 2010 03:42
//

ஷ்ஷ்ஷ்......
தலைவரே,

அரசியல்வாதிங்கிறதுக்காக இப்படியா எல்லாத்தையும் மைக் போட்டு சொல்லுவீங்க...சில மேட்டரையெல்லாம் தண்ணியடிச்சாலும் வெளிய சொல்லக் கூடாது...:0))))

அது சரி(18185106603874041862) said...

//
முகிலன் said...
நல்லாப் போகுது கதை..
//

நன்றி முகிலன்...

//
அந்த அண்ணாச்சி பேசுறதைப் பாத்தா தூத்துக்குடிக்காரவுக பேசுற மாதிரி இல்லையே? நாகர்கோவில்க்காரவுக பேசுற மாதிரி இருக்கு??
//

நீங்க சொல்றது கரெக்டுன்னு தான் நானும் நினைக்கிறேன்...ஆனா, திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோவில் காரங்க பேசுறது எனக்கு ஒரே மாதிரி தான் கேக்குது...தவிர, நாகர்கோவில் மாதிரி தெரியறதுக்கு அடிக்கடி ஜெயமோகனை படிக்கிறதும் காரணமாயிருக்கலாம்...

வானம்பாடிகள் சொன்ன மாதிரி, கிளியன் அண்ணாச்சி தூத்துக்குடியில இருக்க நாவர்கோவில் ஆளுன்னு வச்சிக்கங்க..:0)))

அது சரி(18185106603874041862) said...

//
Sangkavi said...
நல்லாயிருக்குங்க...

8 February 2010 04:53
//

நன்றி சங்கவி...முதல் வருகைக்கு நன்றி...நாம ஒண்ணும் அப்படி நிறைய எழுதி கொடுமைப் படுத்த மாட்டோம்...அதனால பயப்படாம அடிக்கடி வாங்க :0))))

அது சரி(18185106603874041862) said...

//
வானம்பாடிகள் said...
முதல் பத்தி கட்டிப்போடுகிறது. அண்ணாச்சி அறிமுகம் எதிர் பார்க்க வைக்கிறது.
//

நன்றி வானம்பாடிகள் ஸார்...

//
அந்த அண்ணாச்சி பேசுறதைப் பாத்தா தூத்துக்குடிக்காரவுக பேசுற மாதிரி இல்லையே? நாகர்கோவில்க்காரவுக பேசுற மாதிரி இருக்கு??/

ம்கும். நாகர்கோவில் அண்ணாச்சி தூத்துக்குடியில இருக்கப்படாதோ?

//

டிப்ஸுக்கு தேங்க்ஸூ :0))))

அது சரி(18185106603874041862) said...

//
வானம்பாடிகள் said...
//அது சரி said...

sorry, ignore my previous comments regarding Windows...Ofcourse they are shit, but i didn't intend to call them shit at this moment....I am just extremely pissed off...//

windows 7 is a beauty really.
//

I seriously hope it is, 'cos i just bought it today!

அது சரி(18185106603874041862) said...

//
KarthigaVasudevan said...
இன்றைய கதை படிச்சாச்சு.நல்ல ஆரம்பம் ,மீதியையும் சொல்லி முடிச்சப்புறம் திட்றதா...பாராட்டரதானு முடிவு பண்ணலாம்.:)))

//

இல்லை...இந்த கதைல மாதி இல்ல...ஆனா வேதாளம் உண்டு....

அது சரி(18185106603874041862) said...

//
KarthigaVasudevan said...
இன்றைய கதை படிச்சாச்சு.நல்ல ஆரம்பம் ,மீதியையும் சொல்லி முடிச்சப்புறம் திட்றதா...பாராட்டரதானு முடிவு பண்ணலாம்.:)))

//

செங்கல்லுக்கு ஆர்டர் பண்ணிட்டீங்களா? :0))))

அது சரி(18185106603874041862) said...

//
கபீஷ் said...
நல்லாருக்கு. நாளைக்கு வெயிட்டீஸ்.

//

தேங்க்ஸ் கபீஷ்...நீங்க எப்ப எழுதறதா உத்தேசம்??

அது சரி(18185106603874041862) said...

//
கலகலப்ரியா said...
//
வரிக்கு வரி அருமை... எதை சொல்றது எதை விடுறதுன்னு தெரியல... அடுத்த பாகத்துக்கு ரொம்ப வெயிட் பண்ண முடியாது... சீக்கிரம் ரிலீஸ் பண்ணிடுங்க சாமி...
//

தேங்க்ஸ் ப்ரியா...அடுத்த பாகம் இன்னிக்கு ரிலீஸ் செஞ்சாச்சு...மீதி நாளைக்கு...

//
//நான் அவனில்லை!//

அவனில்லை சரி...! கதைல "நான்" அப்டின்னுதானே வருது... "நான் நானில்லை" அப்டின்னு போட்டிருக்கணுமோ....

//

அய்யோ சாமி...ஆளை விடுங்கப்பா...இப்பிடியெல்லாம் வக்கீல் மாதிரி கேள்வி கேட்டா நான் எங்க போறது?? :0))))

அது சரி(18185106603874041862) said...

//
அண்ணாமலையான் said...
கலக்குங்க

//

நன்றி அண்ணாமலையான்...

அது சரி(18185106603874041862) said...

//
Mrs.Menagasathia said...
தொடருங்கள், அடுத்த இடுகைக்காக காத்திருப்பு.....

//

நன்றி மிஸஸ்.மேனகா ஸத்யா...

அடுத்த பாகங்கள் தொடர்ந்து வரும்...

Nathanjagk said...

வட்டார வழக்கு பிரயோகத்தில் ​தேர்ச்சி தெரிகிறது. முக்கியமாக ​கிளியன் அண்ணாச்சி பேச்சிற்கும், மதுரை வழிஅனுப்புக்காரர் பேச்சிற்கும் ​வேறுபாடு அவதானிக்க முடிகிறது.

அபூர்வ கனவுகளின் வாசத்ததோடு விடியும் காலைகள் ப்ரத்யேகமாக ஏதாவது ​செய்துவிடுமான்னு தெரியலே. பொறுத்திருந்து பார்ப்போம் மரமா கொத்தியான்னு!

மரங்கொத்தி வித்யாசமான பறவைதான். கூடுகட்டுவதில்லை. கூட்டுடைக்கிறது. இது கல்லைக் குடைந்து குகை வீடு கட்டியவனுக்கோ அல்லது சிற்பிக்கோ ஒப்பாகலாம். கதையும் அப்படி ஏதாவது கட்டுடைக்கலாம் என்ற எதிர்பார்ப்பு ​தொடர்கிறது என்னுள்!

அது சரி(18185106603874041862) said...

//
ஜெகநாதன் said...
வட்டார வழக்கு பிரயோகத்தில் ​தேர்ச்சி தெரிகிறது. முக்கியமாக ​கிளியன் அண்ணாச்சி பேச்சிற்கும், மதுரை வழிஅனுப்புக்காரர் பேச்சிற்கும் ​வேறுபாடு அவதானிக்க முடிகிறது.

அபூர்வ கனவுகளின் வாசத்ததோடு விடியும் காலைகள் ப்ரத்யேகமாக ஏதாவது ​செய்துவிடுமான்னு தெரியலே. பொறுத்திருந்து பார்ப்போம் மரமா கொத்தியான்னு!

மரங்கொத்தி வித்யாசமான பறவைதான். கூடுகட்டுவதில்லை. கூட்டுடைக்கிறது. இது கல்லைக் குடைந்து குகை வீடு கட்டியவனுக்கோ அல்லது சிற்பிக்கோ ஒப்பாகலாம். கதையும் அப்படி ஏதாவது கட்டுடைக்கலாம் என்ற எதிர்பார்ப்பு ​தொடர்கிறது என்னுள்!

//

ஜெகநாதன்,

கதையின் ஓட்டத்தை சரியாக சொல்லிவிட்டீர்கள்...முழுக் கதையும் முடித்து விட்டேன்...உங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்திருக்கிறேன் என்றே நினைக்கிறேன்...

படித்து விட்டு சொல்லுங்கள்...