Wednesday, 10 February 2010

மரங்கொத்தி...! - 4மரங்கொத்தி...! - 4

முந்திய பாகங்கள்: பாகம் 1, பாகம் 2, பாகம் 3

ரயில் விழுப்புரத்தை நெருங்கிக் கொண்டிருக்க நான் ஏஸி கம்ப்பார்ட்மெண்டில் சூடு தாங்காமல் என் கைகளை இறுக்கிக் கட்டிக் கொண்டேன்...

இத்தனை நாளாக நான் அடைகாத்த நெருப்பு....ஐந்து வருடங்களாக என்னை விறகாக்கி எரித்த எல்லா நெருப்பும்...என்னால் மனம் உடைந்து செத்துப் போன என் அய்யனை எரித்த நெருப்பு....காதல், காமம், வெறுப்பு, அன்பு, விஷம், இதழ்கள், மது,முத்தம்,துக்கம்...அண்டத்தின் அத்தனை அக்னியும் உள்ளே பீறிட....எனக்கு சங்கீதா மேல் பாய்ந்து அவள் முகம் தாங்கி முத்தமிட வேண்டும் என்று தோன்றியது...ஏண்டி விட்டுட்டு போன...அவள் கன்னத்தில் விரல் பதிய‌ அறைய வேண்டும் என்று தோன்றியது....சொல்...பதில் சொல்...நான் குடித்த விஷத்திற்கு பதில் சொல்...எரிந்து போன என் அப்பனுக்கு பதில் சொல்....எரிந்து கொண்டிருக்கும் எனக்கு பதில் சொல்...தோள் பிடித்து உலுக்க கைகள் பரபரத்தன‌....

முழங்கால் உரசும் தூரத்தில் சங்கீதா...இல்லை..மதிவாணனின் மனைவி உட்கார்ந்திருக்க...எதுவும் செய்ய முடியாமல்...

என்னால் முடியாது...எதுவும் முடியாது...தொடும் தொலைவில் இருந்தாலும் எட்டாது இருக்கிறாள்....நான் காதலும் வெறுப்பும் தாங்காது கைகளால் முகம் பொத்திக் கொண்டேன்...........

=================

மதிவாணனுக்கு ஏதோ புரிந்திருக்க வேண்டும்...

"என்ன செந்தில்...உங்க மொகமே சரியில்லை...பேயடிச்ச மாதிரி இருக்கீங்க....என்னாச்சு...."

என்ன சொல்வதடா...என்ன சொல்ல சொல்கிறாய்...தேடிக் கொண்டிருந்த என் மரண தேவதையை பார்த்தேன் என்றா...இல்லை உன் மனைவி...உன் அழகு மகளின் அம்மா என் முன்னாள் காதலி...இல்லை...இன்றும் நான் காதலிக்கும் காதலி என்றா...என்ன சொல்ல உன்னிடம்...

இதற்கு மேல் என்னால் முடியாது...இங்கிருக்க முடியாது...நான் போக வேண்டும்...

"அது...ஒண்ணும் இல்ல மதி....திடீர்னு கொஞ்சம் ஃபீவரிஷ்ஷா இருக்கு...நான் விழுப்புரத்துல எறங்கிக்கிறேன்...அங்க ஃப்ரன்ட் வீடு இருக்கு..."

என் வார்த்தைகள் தடுமாறியது...

இத்தனை நேரமும் வெளியில் இருட்டை வெறித்துக் கொண்டிருந்த சங்கீதா என் பக்கமாக திரும்பினாள்...

ஏதேனும் சொல் சங்கீதா....கடைசியாக ஒரு முறை....என் பெயரையாவது சொல்...ப்ளீஸ்....

வெளியில் இருந்த‌ இருட்டும் கம்பார்ட்மெண்ட்டின் மங்கலான மஞ்சள் வெளிச்சமும் அவள் முகத்தில் படர்ந்திருக்க‌ அவளின் இமைகள் ஆழ்ந்த துக்கத்துடன் ஒரு முறை மூடித் திறந்தன...சத்தம் வெளி வராது உதடுகள்....நான் முதலும் கடைசியுமாக முத்தமிட்ட அவளின் உதடுகள் மட்டும் அசைத்து "ஸாரி ரியல்லி ஸாரி"

மதிவாணன் முன்விழுந்த மயிர்கற்றையை இடது கையால் ஒதுக்கி விட்டு எழுந்து கொண்டு கைநீட்டினான்...

"உங்க கம்பெனிக்கு ரொம்ப தேங்க்ஸ் செந்தில்...இன்னும் ரெண்டு நிமிஷத்துல விழுப்புரம் வந்துரும்...ஒடம்பை பார்த்துக்கங்க...ஒரே நைட்ல ரொம்ப க்ளோஸாயிட்டோம் இல்ல....நான் வைசாக் போய்ட்டு ஃபோன் பண்றேன்....கல்யாணத்துக்கு கண்டிப்பா வந்துருவேன்...எக்ஸ்ட்ராவா சமைக்க சொல்லுங்க..."

அவன் கண்ணடித்து சிரித்தான்....
===============================

விழுப்புரத்தில் நான் என் ஃப்ரீப்கேஸூடன் இறங்கி ஓரமாக நின்று ரயில் கிளம்பும் வரை ஜன்னலில் தெரிந்த சங்கீதாவையே பார்த்துக் கொண்டிருந்தேன்...நான் பார்ப்பேன் என்று அவளுக்குத் தெரியும் என்று எனக்கும் தெரியும்...ரயில் நகரும் வரை அவள் முகம் ப்ளாட்பாரத்தின் இருட்டில் நிற்கும் என்னையே வெறித்துக் கொண்டிருந்தது...

நான் அவளைப் பார்ப்பது இதுவே கடைசி முறையாக இருக்கலாம்...இனி ஒருவேளை அடுத்தப் பிறவியில்....

ரயில் நகர நகர அடிவயிற்றில் ஒரு துக்கம் சுழன்று என் கழுத்து உக்கிரமாக சுட ஆரம்பித்தது...பிறந்த நாளில் நான் குடித்த தாய்ப்பாலிலிருந்து திருச்சியில் குடித்த காப்பி வரை ஒன்றாக வாயில் வர கடும் ஜூரத்தில் கால்கள் மெதுவாக நடுங்க ஆரம்பிக்க நான் விழுப்புரம் ஜங்ஷனின் மூன்றாவது ப்ளாட்ஃபாரத்தில் வாந்தியெடுத்து அதன் பக்கத்திலேயே தொப்பென்று உட்கார்ந்தேன்.....

=======================

ஒரு வழியாக நான் சமாளித்து எழுந்த போது ப்ளாட்ஃபாரம் யாருமில்லாமல் இருள் அப்பியிருந்தது...மணி இரண்டு இருக்கலாம்...எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை...

விழுப்புரம் எனக்கு ஒன்றும் புதிதில்லை தான்....அவ்வப்பொழுது வந்து போயிருக்கிறேன்....
நான் ஸ்டேஷனை விட்டு வெளியே வந்து இரவுமில்லாது பகலும் இல்லாத அந்த இருட்டில் தள்ளாடி நடந்து....டாஸ்மாக் பூட்டியவுடன் கள்ளமார்க்கெட்டில் தண்ணி விற்கும் இடத்தில் அரை பாட்டில் மெக்டொவல் வாங்கிக் கொண்டு வழக்கமாக தங்கும் ஹோட்டலுக்கு போன போது மானேஜர் வித்தியாசமாக பார்த்தார்...

"செந்தில் ஸாரா...என்ன ஸார்...இந்த நேரத்தில..."

ஆயிரம் அர்த்தம் வாய்ந்த கேள்வி...தமிழ்நாட்டில் எல்லா ஹோட்டல் மேனேஜர்களும் எவன் எப்பொழுது எந்த ரூமில் தற்கொலை செய்து கொள்வானோ என்ற நிரந்தர‌ பயத்துடனே இருக்கிறார்கள்...ஹோட்டலின் பெயர் நிரந்தரமாக அடிபட்டு போவது மட்டுமல்ல...அவர்களின் வேலை போய்விடும்....ஆனால் அதற்கு காரணமானவர்களோ டெல்லி, பெங்களூர், ஹைதராபாத் சில சமயம் விசாகப்பட்டினம் என்று போய் விடுகிறார்கள்....

என் கலைந்த தலையும் தள்ளாட்டமான நடையும் சிவந்த வெறித்த கண்களும் சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்க வேண்டும்....

"ஒண்ணுமில்ல...ட்ரைன்ல மெட்ராஸ் போயிட்டுருந்தேன்...ஃபீவரிஷா இருந்துச்சி...அதான் வழியில எறங்கிட்டேன்...ரூம் காலியா இருக்கா...."

நம்பாதவன் போல‌ என் கழுத்தில் கைவைத்து பார்த்தார்...

"அடடா...நெருப்பா கொதிக்குது ஸார்...ரூம் இருக்கு...நீங்க ஒரு க்ரோசினை போட்டுக்கிட்டு படுங்க...காலையில மொத வேலையா டாக்டரை வரச் சொல்றேன்..."

===================================

நான் மேனேஜரிடம் சாவி வாங்கி என் அறைக்குப் போய்....இருண்டிருந்த அறையில் இரவு விளக்கை போட்டு விட்டு மெல்லிய வெளிச்சத்தில் தரையில் உட்கார்ந்தேன்...இனி என்னால் தூங்க முடியாது....குடிக்கலாம்...விடியும் வரை குடிக்கலாம்...இல்லை....என் சிறுநீரகமும் கல்லீரலும் அழுகி நான் சாகும் வரை குடிக்கலாம்...

உள்ளிருந்த வெப்பமும் அறையின் குளிரும் சேர்ந்து தாக்க நான் அறையிலிருந்த மெத்தையை உடல் முழுதும் சுற்றிக் கொண்டு....தரையில் உட்கார்ந்து குடிக்க ஆரம்பித்தேன்.....வீடிருக்க நாடிருக்க ஊரிருக்க உறவிருக்க..ஏன் என் வாழ்க்கை இப்படி ஆனது....சங்கீதா....தொலைந்து போன என் உன்னத சங்கீதம்...இனி எங்கு பார்ப்பேன் உன்னை....கசப்பான மது உள்ளே இறங்க....ஜூர வேகம் ஏற....எனக்கு அழுகை வந்தது...அறையிலிருந்த துண்டை வாயில் திணித்து நான் சத்தம் வராமல் பெரும் ஓலத்துடன் அழும்போது சட்டென்று தோன்றியது....

நான் ஏன் சாகக் கூடாது?..........

இந்த நேரத்துக்கு தூக்க மாத்திரையோ எலி விஷமோ கிடைக்காது....கை நரம்பை அறுத்துக் கொண்டால்....சூட்கேஸில் பிளேடு இருக்கிறது....

தீவிரமாக யோசிக்கும் போதே திடீரென்று ஒரு குரல் ஊடறுத்தது...

"பிள்ள பாத்து போயிட்டு வரணும்...இங்க அம்ம கெடக்கா...ஒன்னிய விட்ட அவளுக்கும் நாதியில்ல...பாத்துக்கிடு.."

யார்...யார் சொன்னது...கிளியன்...கிளியன் அண்ணாச்சி....

================================

இரவும் பகலும் கலந்த அந்த இருள் பிரியாத முன்காலையில் நான் அழைத்த போது கிளியன் அண்ணாச்சி நன்றாக தூங்கிக் கொண்டிருந்திருக்க வேண்டும்...ஃபோனை எடுக்க சில நிமிடங்கள் ஆனது....

"ஏ....கிளியன் பேசுதேன்...ஆரு....."

தூக்கத்தில் அண்ணாச்சி....

"மாமா...நான் செந்தில் பேசுதேன்...விழுப்புரத்திலருந்து...."

"ஆ...பிள்ள இன்னியும் மெட்ராஸு சேரலையாக்கும்...சொகமாட்டு உண்டா...பஸ்க்காரனுவ நிறுத்திட்டானுவளோ...."

"சொகமுண்டு....அதில்லா...எனக்கு ஒரு சோலியாகணும்...."

"ஆ..அதா....ஒன்னம்ம தூங்கியாச்செ....எழுப்பட்டோ...."

"அம்மையிட்டில்லா...சோலி ஒங்களுத் தான்...."

"பிள்ளக்கில்லா சோலியுண்டா....வெளுத்ததும் முடிக்கேன்...என்ன சோலியாக்கும்..."

நான் ஒரு நிமிடம் தயங்கி மூச்சை ஆழமாக இழுத்துக் கொண்டேன்...

"எனிக்கு ஒரு மீனு பிடிக்கணும்...."

மீனு பிடிக்கணும் என்ற வாக்கியம் அண்ணாச்சியின் தூக்கத்தை முற்றிலுமாக கலைத்திருக்க வேண்டும்...குரல் ரகசியமாக மாறியிருந்தது...

"பிள்ள என்ன சொல்லுது....சாள‌ மீனு குட்டையிலயுண்டு...வாள மீனு கடலுக்கில்லா போவணும்...."

சாள‌ மீன் ரிஸ்க்க்கும் குறைவு...செலவும் குறைவு...வாள மீன்...ரிஸ்க் அதிகம்...செலவும் அதிகம்...

யாருமற்ற அந்த அறையின் மெல்லிய இருட்டில் என் வெளிப்புற பூச்சுக்கள் முற்றிலும் உதிர்ந்து என் மூக்கு மேலுதடு தாண்டி கீழுதடுடன் இணைந்து கூரிய அலகாக மாறியிருந்தது.....என் வாயின் இருபுறமும் அழகான சிங்கப் பற்கள் மேலும் நீண்டு உருமாறி கோரைப் பற்களாக மாறியிருக்க குடி போதையிலும் ஜூர வேகத்திலும் ஆடிக் கொண்டிருந்த என் கைகள் சுருங்கி கைகள் முழுதும் தசை கிழித்து எலும்புகள் புடைத்து முதுகின் இருபுறமும் இரு சிறகுகள் முளைக்க தரையின் சில்லிப்பில் ஏற்கனவே குறுகியிருந்த‌ என் பாதங்கள் மேலும் சுருங்கி விரல்கள் நீண்டு நகங்கள் வளைந்து பறவையின் கால்களாக நான் போர்த்தியிருந்த வெள்ளை நிற மெத்தை கிழிந்து உடல் முழுதும் என்னைப் படர....ஆறடி உயர பிரம்மாண்டமான மரங்கொத்தியாகி....நான் கையிலிருந்த விசிட்டிங் கார்டைப் பார்த்துக் கொண்டே சொல்ல ஆரம்பித்தேன்....

"மீனு வாள மீனாக்கும்....பேரு மதிவாணன்.க்கே. ரெட்டி...ஊரு விசாகப்பட்டினம்....சோலிய முடிச்சிடலாமில்லா..."

=============முற்றும் ============

24 comments:

பழமைபேசி said...

ஆகா... இன்னைக்கு அண்ணாச்சி, நல்ல மனநிலையில இருக்காருங்க மக்களே.... இருக்காருங்க...

அது சரி said...

For comments....

அது சரி said...

//
பழமைபேசி said...
ஆகா... இன்னைக்கு அண்ணாச்சி, நல்ல மனநிலையில இருக்காருங்க மக்களே.... இருக்காருங்க...
//

அட....நான் எப்பவும் நல்ல மனநிலை தான்...இன்னிக்கு வின்டோஸ் இன்னும் பிரச்சினை தர ஆரம்பிக்கலை...அதான்...:0))))

பழமைபேசி said...

நான் சாப்பிட்டுட்டு வந்து மறுக்காவும் படிக்கணும்... கலக்குறீங்க அண்ணாச்சி!

குடுகுடுப்பை said...

ஆகா, நான் நெனச்சதும் நடக்கும் போலருக்கே.

விழுப்புரம்னாலே விழுந்து எந்திரிக்கனும்தானே.

முகிலன் said...

ஆகா...


கலக்கல் முடிவு. மரங்கொத்தி கொத்திரிச்சி.. :))

வானம்பாடிகள் said...

சாமி. எங்க அந்தக் கை. யப்பா. கொன்னுட்டீரு. Superb.

கபீஷ் said...

நல்லாருக்கு. ஜுப்பர்:-):-)

கபீஷ் said...

//பழமைபேசி said...
நான் சாப்பிட்டுட்டு வந்து மறுக்காவும் படிக்கணும்... கலக்குறீங்க அண்ணாச்சி!
//

இவர நம்பாதீங்க. மொத தடவ படிச்சாரான்னே சந்தேகமா இருக்கு.:-):-)

பேநா மூடி said...

நெக்ஸ்ட் என்ன.....??????

கலகலப்ரியா said...

//என்னால் முடியாது...எதுவும் முடியாது...தொடும் தொலைவில் இருந்தாலும் எட்டாது இருக்கிறாள்....நான் காதலும் வெறுப்பும் தாங்காது கைகளால் முகம் பொத்திக் கொண்டேன்...........//

அருமை...

////காதலும் வெறுப்பும் தாங்காது//

என்ன ஒரு உணர்வுக் கலவை...

//ஆயிரம் அர்த்தம் வாய்ந்த கேள்வி...தமிழ்நாட்டில் எல்லா ஹோட்டல் மேனேஜர்களும் எவன் எப்பொழுது எந்த ரூமில் தற்கொலை செய்து கொள்வானோ என்ற நிரந்தர‌ பயத்துடனே இருக்கிறார்கள்...ஹோட்டலின் பெயர் நிரந்தரமாக அடிபட்டு போவது மட்டுமல்ல...அவர்களின் வேலை போய்விடும்....ஆனால் அதற்கு காரணமானவர்களோ டெல்லி, பெங்களூர், ஹைதராபாத் சில சமயம் விசாகப்பட்டினம் என்று போய் விடுகிறார்கள்....//

ரொம்ப வாஸ்தவமான வரிகள்... விசாகப்பட்டினம் தூள்...

//"பிள்ள பாத்து போயிட்டு வரணும்...இங்க அம்ம கெடக்கா...ஒன்னிய விட்ட அவளுக்கும் நாதியில்ல...பாத்துக்கிடு.."

யார்...யார் சொன்னது...கிளியன்...கிளியன் அண்ணாச்சி....//

ம்ம்...

//
"மீனு வாள மீனாக்கும்....பேரு மதிவாணன்.க்கே. ரெட்டி...ஊரு விசாகப்பட்டினம்....சோலிய முடிச்சிடலாமில்லா..."//

கதைங்கிறதால ஜட்ஜ் பண்ணலை...

மொத்தத்ல மிக மிக அருமை..! மரங்கொத்தி.... மீன்கொத்தி ஆயிடிச்சே...!!! =)))...

KarthigaVasudevan said...

மரங்கொத்தியாவது மண்கொத்தியாவது !!! மதிவாணனை கொல்றது எனக்குப் பிடிக்கலை,ஏன் அவன் என்ன பாவம் பண்ணான்!!!.கதையானாலும் நிகழ்தகவா இப்படியும் நடக்கலாம்.ஆனா கதைல கூட ஜீரணம் பண்ணிக்க முடியாத முடிவு.
:(((

Anyway Climax ரீட் பண்ணினதுக்கப்புறம் கதை நல்லா இருக்குன்னு இப்ப சொல்ல மாட்டேன்.

நீங்க நல்லா எழுதறிங்க, :))) அவ்ளோ தான்.

அது சரி said...

//
பழமைபேசி said...
நான் சாப்பிட்டுட்டு வந்து மறுக்காவும் படிக்கணும்... கலக்குறீங்க அண்ணாச்சி!
//

சாப்பிட்டு வந்து மறுக்கா படிக்கணுமா இல்ல படிக்கணுமா? :0))))

அது சரி said...

//
குடுகுடுப்பை said...
ஆகா, நான் நெனச்சதும் நடக்கும் போலருக்கே.
//

அதுவும்!

//
விழுப்புரம்னாலே விழுந்து எந்திரிக்கனும்தானே.
//

விழுந்து எந்திரிச்சாத் தான் அது விழுப்புரம் :0))))

அது சரி said...

//
முகிலன் said...
ஆகா...


கலக்கல் முடிவு. மரங்கொத்தி கொத்திரிச்சி.. :))
//

:0)))) நன்றி முகிலன்...

அது சரி said...

//
வானம்பாடிகள் said...
சாமி. எங்க அந்தக் கை. யப்பா. கொன்னுட்டீரு. Superb.

//

கையை கேட்டுட்டு அடுத்த வார்த்தையில கொன்னுட்டீருன்னு சொன்னா எனக்கு பயமா இருக்கே...:0))))

அது சரி said...

//
கபீஷ் said...
நல்லாருக்கு. ஜுப்பர்:-):-)

//

நன்றி கபீஷ்...

அது சரி said...

//
கபீஷ் said...
//பழமைபேசி said...
நான் சாப்பிட்டுட்டு வந்து மறுக்காவும் படிக்கணும்... கலக்குறீங்க அண்ணாச்சி!
//

இவர நம்பாதீங்க. மொத தடவ படிச்சாரான்னே சந்தேகமா இருக்கு.:-):-)

//

நீங்க சொன்னதும் எனக்கும் அந்த டவுட் வந்துடுச்சி....:0)))

அது சரி said...

//
பேநா மூடி said...
நெக்ஸ்ட் என்ன.....??????

//

நெக்ஸ்ட் என்னன்னா?? எனக்கு புரியலை பாஸ்...கதை முடிஞ்சிடுச்சி....

அது சரி said...

//
கலகலப்ரியா said...

கதைங்கிறதால ஜட்ஜ் பண்ணலை...
//

எதை ஜட்ஜ் பண்ணலைன்னு சொன்னா ஒங்க ஜட்ஜ்மென்ட்டு ரொம்ப தப்புன்னு சொல்ல எனக்கு வசதியா இருக்கும்...:0)))


//
மரங்கொத்தி.... மீன்கொத்தி ஆயிடிச்சே...!!! =)))...
//

இல்லியே...மீன்கொத்தியோட நோக்கம் எப்பவுமே மீனைக் கொல்றது...மரங்கொத்தி என்னைக்குமே மரத்தை சாய்க்காது....

அது சரி said...

//
KarthigaVasudevan said...
மரங்கொத்தியாவது மண்கொத்தியாவது !!!
//

மரங்கொத்தியாவது மண்ணாங்கட்டியாவதுன்னு சொல்ல வந்தீங்களா? :0)))

//
மதிவாணனை கொல்றது எனக்குப் பிடிக்கலை,ஏன் அவன் என்ன பாவம் பண்ணான்!!!.
//

அவன் பாவம் செஞ்சானா புண்ணியம் செஞ்சானாங்கிறது கதைக்கு தேவையில்லைன்னு நினைக்கிறேன்...இது இப்படி நடந்ததுன்னு மட்டும் தான் சொல்ல வந்தது....மத்தபடி பாவ புண்ணியம் பார்க்க யாருக்கும் எந்த தண்டனையும் குடுக்கற மாதிரி வரலையே??

//
கதையானாலும் நிகழ்தகவா இப்படியும் நடக்கலாம்.ஆனா கதைல கூட ஜீரணம் பண்ணிக்க முடியாத முடிவு.
:(((
//

உண்மை தான்...உங்க விமர்சனம் படிச்சதும் இந்த கதையோட பார்ட் டூ எழுதின நோக்கம் நிறைவேறிடுச்சின்னு நினைக்கறேன்...:0))).

இன்னொரு விஷயம், இந்த கதையை முடிவில்லா முடிவோட தான் முடிச்சிருக்கிறேன்...முற்றும் போட்டது ஒரு ஆரம்பத்தில...அந்த ஆரம்பம் எப்படி முடியும்னு வாசிக்கிறவங்களே அவங்க விருப்பத்துக்கு ஏத்த மாதிரி முடிச்சிக்கலாம்...

//
Anyway Climax ரீட் பண்ணினதுக்கப்புறம் கதை நல்லா இருக்குன்னு இப்ப சொல்ல மாட்டேன்.
//

நல்லா இல்லைன்னு நேர்மறையாவே சொல்லலாம்...:0)))

//
நீங்க நல்லா எழுதறிங்க, :))) அவ்ளோ தான்.
//

இது ஏதோ போனாப் போகுதுன்னு ஆறுதல் பரிசா?? :0)))) தேங்க்ஸ்...

விமர்சனத்திற்கு நன்றி மிஸஸ்.தேவ்...

Ravi said...

good story. smooth writing.. congrats!

Bogy.in said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

இவன்
http://www.bogy.in

ராஜ நடராஜன் said...

இன்னும் சாத்தனார விட்டு தாண்டுல போல இருக்குதே:)

சொல்ல வந்தது என்னன்னா கடைப்பக்கம் வந்தீங்க பெத்சியா?தண்ணீரா?தண்ணியா குடிச்சீங்களா?

வராமப் போயிருந்தா ட்க்கீலா வேதாளம் கோபிச்சுக்கும்:)