Monday 27 April 2009

அதிமுகவிற்கு ஓட்டுப் போடுவது தவறா?




போன மாதம் வரை, ஈழத்தமிழன் என்று எவனும் இல்லை, போர் என்றால் சாகத்தான் செய்வார்கள் என்று அருள் வாக்கு வழங்கிய தங்கத் தாரகை, இன்று ஒரே ஒரு வீடியோ பார்த்தாராம், இப்பொழுது தனி ஈழம் அமைத்தே தீருவேன் என்று சூளுரைக்கிறாராம்..அது வரை, ஈழத்தில் மக்கள் சாகும் விஷயமே அவருக்கு தெரியாதாம்....

இப்படி ஒரு பித்தலாட்டம், அதையும் நம்பும் மக்கள் கூட்டம்! இவர் கச்சத் தீவை மீட்டெடுப்பேன் என்று சபதமிட்டது யாருக்காவது ஞாபகம் இருக்கிறதா? பத்து வருடம் முதல்வராயிருந்து தீவை மீட்க பொர்ச்சி தலைவி செய்த தீராத பொர்ச்சிகளை யாரேனும் பட்டியலிட முடியுமா?

ஈழப்பிரச்சினைக்காக குரல் கொடுத்தார் என்பதற்காகவே வைகோவை பொடாவில் உள்ளே தள்ளியது புரட்சி அம்மையாரா இல்லை அவரது உயிர்த் தோழியா? கைது செய்ய கையெழுத்திட்டது அம்மையாரா இல்லை என் கையெழுத்து இல்லை என்று மறுப்பாரா??

ஈழப்பிரச்சினையில் கலைஞரின் அணுகுமுறை குறித்து எனக்கும் கடும் விமர்சனங்கள் உண்டு...ஆனால் இன்றைக்கு அதிமுக அணிக்கு ஓட்டு போடுவது என்றால், யாருக்கு ஓட்டு?

ஈழத் தமிழருக்கு குரல் கொடுப்பது அன்புமணியின் வேலை இல்லை, அது பிரணாப் முகர்ஜியின் வேலை என்று கணக்கு பேசி, தமிழரின் பிணங்களை ஏழு சீட்டுக்காக விற்ற சாதி சங்க தலைவர் ராம தாசுக்கா?? அணு ஒப்பந்தத்திற்காக பார்லிமென்டில் கலவரம் செய்வோம், ஆனால் ஈழப்பிரச்சினையில் தி.மு.க தான் செய்ய வேண்டும் என்று பங்கு பிரித்த கம்யூனிஸ்டுக்கா?

ஒரு செல்வாக்கும் இல்லாத, ஒரு பதவி சுகமும் அனுபவிக்காத கடைக்கோடி தமிழன் கூட செத்துக் கொண்டிருக்கும் ஈழத்தமிழனுக்காக குரல் கொடுக்கும் போது இந்த பிரச்சினையில் வாயே திறக்காத ஒரு நபர் உண்டு....இல்லை, தங்கபாலு இல்லை, தமிழ் குடித்தாங்கியின் தவப்புதல்வன், கடைசி நாள் வரை பதவியில் ஓட்டிக் கொண்டிருந்த அன்புமணி!

கலைஞர் முழுமூச்சில் குரல் கொடுக்கவில்லை என்பது உண்மையே...ஆனால், சைனாவின் கட்டளைப்படி ஆதரவை வாபஸ் வாங்கிய கம்யூனிஸ்ட் உண்டியல்கள் இந்த பிரச்சினையில் குலுக்கியது என்ன?? புறக்கடை வழியே மகனை மந்திரியாக்கி, பாட்டாளி மக்களுக்காக போராடிய ராமதாஸு என்னும் நபரின் மத்திய மந்திரிகள் இதில் சாதித்தது என்ன??

ராமதாஸ் & சன்ஸ் மீண்டும் மத்திய மந்திரி ஆகவா ஓட்டு? கலைஞர் உண்ணாவிரதம் நாடகம் என்பவர்கள் எப்படி ராமதாசுக்கும், கம்யூனிஸ்டுக்கும், பொரச்சி அன்னைக்கும் ஓட்டுப் போட சொல்கிறார்கள் என்று எனக்கு புரியவில்லை...

சரி, அம்மையார் வென்று விட்டால் என்ன நடக்கும்?? வாஜ்பாயின் 13 நாள் ஆட்சி யாருக்கேனும் ஞாபகம் இருக்கிறதா?? அந்த ஆட்சி கவிழ்த்தது யார்? அம்மையார் அல்லவா? கச்சத்தீவை மீட்கவோ, தமிழ்நாட்டில் வேலை வாய்ப்பை ஏற்படுத்தவோ ஆதரவை வாபஸ் வாங்கினாரா? இல்லை தன் மீது இருந்த வழக்குகளை வாபஸ் வாங்க சொல்லி மிரட்டினாரா??

காங்கிரஸின் பதினாறு வேட்பாளர்களும் தோற்க வேண்டும்...ஆனால்.... இது வரை அம்மையார் என்ன செய்து விட்டார், இனி என்ன செய்து விடப் போகிறார்??

யாருக்கு ஓட்டுப் போடுவது என்பது உங்கள் உரிமை....ஆனால் சாத்தான்கள் ஓதும் வேதத்தை நான் நம்பத் தயாராயில்லை!

(படம் உதவி: Google.com)


==================================

Friday 17 April 2009

நான் கடவுளாதல்!



சுவாசம் முகம் படர‌

கழுத்தில் கை இறுக்கி

மேல் படர்ந்திருந்த காதலியை மெதுவே புறந்தள்ளி....

கடும் மழை அஞ்சி

காற்றும் வெளி வராத‌

இருள் மட்டுமே நிறைந்த நள்ளிரவில்

இலக்குகளின்றி இருளில் ஒருவனாக...


இருத்தலும் இல்லாமையும் இனி இணையே....


(படம் உதவி: www.quado.com)


=====================

Monday 13 April 2009

அகில இந்திய அரசியலை திசை திருப்பிய சரத்குமார்!



இந்தியா ஒளிர்கிறது என்று கும்மி அடித்து கடந்த தேர்தலில் நொண்டி ஆன பா.ஜ.க என்னும் கட்சி அகில உலக சரத்குமார் ரசிகர் மன்ற நிறுவனத் தலைவர் சரத்குமாரின் சமத்துவ மொக்கை ச்சீ சமத்துவ மக்கள் கட்சியுடன் தேர்தல் கூட்டணிக்கு முயன்றது எல்லாருக்கும் தெரிந்ததே...

இந்த கூட்டணியை உலகமே எதிர்பார்த்த நிலையில்.....

திருமங்கலம் இடைத் தேர்தலில் 800 ஓட்டுகள் பெற்று சுயேச்சையை விட கொஞ்சமே கொஞ்சம் குறைவான ஓட்டுகள் என்ற சாதனை செய்த‌ சரத்துடன் சேர்ந்து தமிழ்நாடு/பாண்டிச்சேரியின் நாற்பது தொகுதிகளையும் இருட்டுக்கடை அல்வா போல் அள்ளி விடலாம்....ஆந்திரா, கர்நாடகா, கேரளா என்று தென்னகமெங்கும் மக்கள் படை கொண்ட சமத்துவ மொக்கை கட்சியின் துணையுடன் தென்னகத்தை தேங்காய் பத்தை போல சுருட்டி விடலாம்... சரத் மொக்கை கட்சி துணையுடன் அடுத்த இந்திய ஆட்சி நமதே என்று மனப்பால் குடித்த பா.ஜ.க வுக்கு தனித்தே போட்டி என்று சரத்குமார் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்கிறார்...

சரத்தின் இந்த அதிரடி கடப்பாறை புகழ் அத்வானியை இடி போல் தாக்கியது...அதிர்ச்சியில் வாஜ்பேயி நடக்கவே ஆரம்பித்து விட்டார் என்று டெல்லியின் நம்பத்தகாத வட்டாரங்கள் தெரிவிக்கின்றன...


சரத்தின் இந்த அதிரடி முடிவால் இந்திய அரசியலே மாற்றி எழுதப்பட்டு விட்டது...தென்கிழக்கு ஆசியாவில் அரசியல் சூறாவளி வீசக்கூடும் என்று புலம்பினாலும்....சமத்துவ மொக்கை கட்சி போனால் என்ன....நாடாளும் மொக்கை கட்சி தலைவர் கார்த்திக்கை கண்டுபிடித்து கூட்டணி அமைத்தே தீருவோம்....அவரை கண்டுபிடித்து தருபவர்களுக்கு மந்திரி பதவி உறுதி...கடைசி வரை அவரை கண்டு பிடிக்க முடியாவிட்டால் லட்சக்கணக்கான தொண்டர்களை கொண்ட விசய. டி. ராசேந்தரின் லட்சிய தி.மு.க வுடன் கூட்டணி அமைப்போம் என்று அத்வானின் சென்னை தொண்டர் சூளுரைப்பதாக நமது நிருபர் "எழுத்தாணி" எருமை தெரிவிக்கிறார்....