Thursday 22 December 2011

பின்னம்

”இப்பிடி ஒண்ணுக்கும் ஏலாம கெடக்கனே ஏ ராசா” பாட்டியின் அலறல் கேட்டுத் தான் கண்விழித்தேனா இல்லை கண்விழித்ததும் கேட்ட முதல் குரலா என்று எனக்கு ஞாபகமில்லை. அன்றைக்கு எழும் போதே வீடு வினோதமாக இருந்தது. “சனியனுங்களுக்கு அவிச்சு கொட்டி முடியலை” திட்டிக் கொண்டே இட்லி சுடும் அம்மா மூலையில் சேரில் உட்கார்ந்திருந்தாள். அப்பாவை வழக்கம் போல காணவில்லை. காலையிலயே கடை திறக்க போயிருக்கலாம். கூடத்தில்  அக்காவின் டிவி அண்ணனின் டேப் ரிக்கார்டர் என்று எந்த சத்தமும் இல்லை. வீடு பேரமைதியாக இருக்க பாட்டியின் குரல் மட்டும் அலறலும் அழுகையுமாக கேட்டுக் கொண்டிருந்தது.
நான் கொஞ்ச நேரம் அம்மாவை பார்த்து விட்டு அவள் எதுவும் சொல்லாமல் போக கண்ணை கசக்கிக் கொண்டேன். வியாழக்கிழமை தான் ஆகிறது. ஸ்கூலுக்கு போகணும். இன்னிக்கு ஸ்கூல் இருக்கா இல்லியா. அம்மா இன்னேரத்துக்கு திட்ட ஆரம்பித்திருப்பாளே. ஒரு வேளை லீவ் எதுவும் விட்டுட்டாங்களா. யோசித்துக் கொண்டிருக்கும் போதே அக்கா வந்து உலுக்கினாள். எருமை மாடு மணி எட்டாகுது இப்பத் தான் எந்திரிச்சி நெளிஞ்சிக்கிட்டு இருக்கு. சீக்கிரம் குளிச்சிட்டு வாடா ஸ்கூலுக்கு நேரமாகுது. நான் அவிழ்ந்து கிடந்த டவுசரை மேல ஏற்றிக் கொண்டு “பாட்டி ஏன் அழறா...இட்லி சுடலியா”
அக்கா தள்ளி விட்டாள். தாத்தாவுக்கு அடிபட்டு ஆஸ்பத்திரில சேத்துருக்காம். நீ திங்கிறதிலயே இரு. இட்லியும் கிடையாது ஒண்ணும் கிடையாது. போற வழியில சாமியண்ணன் கடைல கொட்டிக்க. இல்லாட்டி ஒரு நாள் பட்டினியா கெட. ஒண்ணும் செத்துட மாட்ட.
எனக்கு ஒன்றும் புரியவில்லை. பல் விளக்காமல் வாய் கசப்பாக இருந்தது. நான் ட்ரவுசரை பிடித்து கொண்டு “தாத்தாவா. அவர் தான் செத்து போயிட்டாரே”
பளீரென்று கன்னத்தில் அறை விழுந்தது. “சனியன் சனியன் இதெல்லாம் எங்கருந்து தான் வந்திச்சுன்னு தெரியலை. காலைல எந்திருச்சதுமே எழவெடுக்குது”. அம்மா எப்பொழுது எழுந்தாள் எப்பொழுது அறைந்தாள் என்று தெரியவில்லை. எனக்கு கன்னம் எரிந்தது. நான் முகத்தைப் பொத்திக் கொண்டு “தாத்தா செத்துப் போயிட்டாருன்னு நீ தான சொன்ன”. அம்மா அடுத்து கை ஒங்குவதற்குள் அக்கா என்னை தள்ளி விட்டு கத்தினாள். “ஆமா எதுக்கெடுத்தாலும் இவனைப் போட்டு அடி. உங்கிட்ட அடி வாங்கி சாகறதுக்கு தான் இவன் பொறந்திருக்கான்”.
ஸ்கூலுக்கு போகும் போது அக்கா தான் சொன்னாள். அடிபட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்திருப்பது பாட்டியின் அண்ணன். எனக்கு தாத்தா முறை. கோலாலம்பூரில் பைக்கில் போகும் போது அடிபட்டு விட்டது. ஆஸ்பத்திரியில் சேர்த்திருப்பதாக மெட்ராசுக்கு தந்தி வந்து மெட்ராஸில் இருந்து காலையில் ஃபோன் பண்ணி சொல்லியிருக்கிறார்கள். பாட்டி அழ ஆரம்பித்து விட்டாள்.
=====================
அம்மா கதை சொல்லியிருக்கிறாள். அம்மாவின் அப்பாவுக்கு வலது கை சரியாக வராது. நொண்டி என்று சொல்ல முடியாது என்றாலும் நொண்டி என்று தான் சொல்வார்கள். அதை மறைத்து பாட்டிக்கு கல்யாணம் செய்து வைத்து விட்டார்கள். பாட்டியின் அண்ணன் மனைவி மதனிக்கு இது எல்லாம் தெரியும்.  அவள் என் அம்மாவின் அப்பாவுக்கு உறவு முறை. ”எனக்க தங்கச்சிக்கு நொண்டிப்பயலை கட்டி வச்சிட்டியேடி. தாயோளி மவளே. அமுக்குணியாட்டம் இருந்து குடிய கெடுத்துட்டியேடி”. மதனிக்கு அது பொறுக்காது. “எவம்ட்டல ஏறி வர்ற. உம்ம கண்ண பொடனிலயா  வச்சிருந்துச்சி. அவனுக்கு கைய பாக்க துப்பில்ல. எம்மிட்ட ஏறி வர்ற. கெட்டினவன்னா அப்பிடித்தாம். பிரியனுக்கு கை ஒடஞ்சாலும் காலு ஒடஞ்சாலும் இருந்து பார்க்கணும். நாளைக்கு நீரு கை காலு ஒடஞ்சி நொண்டியா கெடந்தாலும் ஒம்ம தங்கச்சி மாதிரி நான் ஆவலாதி சொல்ல மாட்டேன் பாத்துக்கிடும். யோக்கியமான பொட்டச்சின்னா கெட்டினவன பாப்பா. ஒம்ம தங்கச்சி கதை வேற மாதிரில்லா. அதான் ஊரெல்லாம் சீப்பட்டு கெடக்கு கத”.
விடம் கொண்ட பாம்பை போல பாட்டியின் அண்ணாவுக்கு ஏறி விட்டது. “தேவிடியா முண்ட. என்ன சொல்லிட்டடி. ஒன்ன மாதிரி சீப்பட்ட பரம்பரைன்னு நெனைச்சிட்டியா. நொண்டியாம்ல நொண்டி.திருவாந்தரத்து நாயர் வம்சமிடி. இப்ப சொல்லுதேன் கேட்டுக்க. ஒனக்க அண்ணன் மாதிரி நாறப் பொழப்பு நான் பொழைக்க மாட்டேன். எனக்க கை காலு போச்சின்னா நாண்டுக்கிட்டு சாவேன். ஈனப்பொழப்பு எனக்க ரத்தத்தில ஓடல”. எப்படி என்று தெரியவில்லை. அடுத்த ஒரு வாரத்தில் மலேஷியா போனவர் அதற்கப்புறம் ஊருக்கு வரவேயில்லை. பிள்ளைகளின் படிப்பு பணம் வரும். ஊரில் திருவிழா காது குத்து கல்யாணம் என்றால் தென்னநேரி கேசவன் நாயர் என்று யாரேனும் மொய் எழுதிப் போவார்கள் ஆனால் ஒரு நாளும் பாட்டியின் மதனி பேருக்கு பணம் வராது.
==================================
அன்றைக்கு ஸ்கூல் முடிந்து வீடு வந்த போது வீட்டில் கும்பலாக இருக்க வாசலில் செபாஸ்டின் நாடாரின் டாக்ஸி நின்றிருந்தது.பாட்டி இன்னமும் அழுது கொண்டிருந்தாலும் வேறு சேலை கட்டியிருந்தாள். அம்மாவும் மாமாவும் ரெடியாக இருக்க அப்பா அதிசயமாக வீட்டில் இருந்தார். தென்னநேரி பாட்டி கூடத்தின் மூலையில் குத்துக்காலிட்டு உட்கார்ந்திருந்தாள். “ஒத்த வார்த்த சொல்லிட்டன்னு ஒரு மனியன் இப்படி போவானா. ஒரு நாளு ரெண்டு நாளு இல்ல முப்பது வருசம் போயிட்டான். புள்ளைங்களுக்கு எழுதுவான் ஒரு நாளும் ஒங்கம்மா எப்பிடி இருக்கான்னு கேட்டதில்லை. மத்தவளுக மாதிரி எனக்கு அண்ணன் தம்பின்னு ஒருவனும் இல்ல நானும் ஒருத்தன்கிட்டயும் ஒத்த வார்த்த பேசினதுல்ல. ஆனாக்கும் எங்க சாமி விடுமா. வருசம் தவறாம பொங்க வக்கிறமே அவ கண்ணு அவிஞ்சா போச்சு. கேப்பாள்ல. அரசன் அன்னு கொல்வான் தெய்வம் நின்னு கொல்லும்னு சொல்லுவானுவ. இந்தா கேட்டுட்டாள்ல. ஏ வயித்தெரிச்சல கேட்டுட்டாள. கால ஒடச்சிப்புட்டா. ஒடம்புல ரெத்தம் தெடமா இருக்க வரைக்கும் ஒடலாம். ஒடஞ்சி போனா பொண்டாட்டிக்கிட்ட வர வச்சிடுவாள.”
நான் மெட்ராஸை பார்த்ததே இல்லை. திருச்செந்தூரை விட பெரிய கடல் என்று ராஜாங்கம் சொன்னான். நான் மாமாவின் கையை பிடித்துக் கொண்டு “மாமா மாமா நானும் வர்றேன். எனக்கு ஸ்கூல் டீச்சர் ஒண்ணும் சொல்ல மாட்டாங்க.”.
============================
வள்ளியூர் திருநெல்வேலி மதுரை திருச்சி. திருச்சியில் எங்கோ ஒரு இடத்தில் பஸ் நிற்க மாமா என்னை எழுப்பி டீ வேணுமாடா என்று கேட்க நான் தலையை ஆட்டி இல்ல காப்பி என்று சொன்னது ஞாபகம் இருக்கிறது. நான் கண் விழித்ததும் “இவந்தான் சின்னப்பையன். எட்டு வயசு ஆவுது. சூது வாது ஒண்ணும் தெரியலை.போனா போன எடம் வந்தா வந்தா எடம். ஒரு மாதிரி மந்தமா இருக்கான். திருச்செந்தூருக்கும் பழனிக்கும் மொட்டை போடறதா நேந்துக்கிட்டு இருக்கோம்.”. அம்மா சொல்ல பாட்டி குறுக்கிட்டு “இவனுக்க தெளியறதுன்னா அவனுக்க கொலதெய்வத்த நேந்துக்கிடணும். அதுக்கு  கும்போணம் பக்கமில்லா போவணும்”. அம்மா பதில் சொல்லாமல் பாட்டியை வெறிக்க மெட்ராஸ் மாமா “செரி செரி அப்புறம் பேசிக்கலாம். ஃப்ளைட் வர்ற டைம் ஆச்சு. இப்ப போனா சரியா இருக்கும்”.
===================================
நான் அதற்கு முன் மெட்ராஸ் ஏர்போர்ட் பார்த்ததில்லை. எப்பொழுதாவது வானத்தில் வெள்ளையாக கோடிருக்கும். அதைப் பார்த்து அந்த ஃப்ளைட் தூத்துக்குடிக்கோ மதுரைக்கோ போகிறது என்று பந்தயம் கட்டியதோடு சரி. சாரா எனக்கு முப்பது பைசா தரவேண்டும் என்று ஞாபகம் வந்தது. மெட்ராஸ் ஏர்போர்ட்டில் கடலில் அலையும் காகம் போல ஜனங்கள் இருந்தார்கள். மெட்ராஸ் மாமா என் கையை இறுக்கி பிடித்துக் கொள்ள நாங்கள் வரிசையில் நின்றோம்.
திடீரென்று ஒரு உயர்த்தி பிடிக்கப்பட்ட அட்டையை பார்த்து விட்டு மாமா கையை ஆட்டி கத்தினார். “ராஜேந்திரன். ராஜேந்திரன். ஐயம் ராஜேந்திரன்.”
மாமாவின் கூச்சலில் பயந்து போன நான் அவர் கையை இறுகப் பிடித்துக் கொண்டு அந்த பக்கமாக பார்த்தேன். கண்ணாடி பேழையில் உடல் முழுவதும் மூடி ஊதிப் போன முகம் மட்டும் தெரியும் படியாக ஒரு பிணம்.
அப்பொழுது தெரியவில்லை. ஆனால் வெகு நாட்களுக்கு பின்னரே எனக்கு தெரிந்தது. ஊருக்கு போக வேண்டியது தெரிந்ததும் தாத்தா விஷம் தின்று தற்கொலை செய்து கொண்டார் என்பது.
=====================================================

Tuesday 20 December 2011

எஸ்.ராமகிருஷ்ணனின் யாமமும் ராஜாவின் ஆடையும்......

இரவு அழகானது. இரவு ரகஸியமானது.  நனைந்த மரத்தின் இலையிலிருந்து சொட்டும் மழைத்துளிகளைப் போல இரவு நிகழும் கவிதை. இரவின்றி நிலவும் அழகல்ல. அதே சமயம் இரவு அது மட்டுமே அல்ல. இரவு குரூரமானது. பகலில் பதுங்கியிருந்த மிருகங்கள் வேட்டைக்கு வெளிக்கிளம்பும் நேரமது. பார்வையை திரையிட்டு படுகுழிகளையும் பள்ளங்களையும் மறைப்பதும் இரவு தான். இரவு இரட்டையானது. விடாது நடத்தும் ஆட்டத்தில் இரவு மீண்டும் மீண்டும் பகலை அழித்துக் கொண்டே இருக்கிறது. 

எஸ்.ராமகிருஷ்ணனின் “யாமம்” இரவையே கதையாகக் கொண்டிருக்கிறது. யாமம் காட்டும் இரவு புறவயமான இரவு மட்டுமல்ல, எல்லா மனிதர்களுக்கு உள்ளும் அடைபட்டிருக்கும் இரவு. அதில் சில அழகானவை. சில அசிங்கமானவை. சில சுகமானவை சில வலியானவை. எஸ்.ராவே சொல்வது போல “இரவென்னும் விநோத மலர் எண்ண முடியாத இதழ்கள் கொண்டது. இரவின் கைகள் உலகைத் தழுவிக் கொள்கின்றன. அதன் ஆலிங்கனத்திலிருந்து விடுபடுவது எளிதானதில்லை”.


யாமம் மனித மனம் என்னும் அளக்க முடியாத இரவின் கதை.  வெறும் சதுப்பு நிலமாக இருந்து பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்டு பிரம்மாண்டமான நகராக வளர்ந்து நிற்கும் மதராப்பட்டிணம் என்ற சென்னையின் ஆதிக் கதை. அந்த மதராப்பட்டினத்தின் மனிதர்களின் கதை.


ஒன்றுடன் ஒன்று தொடர்பில்லாத நான்கு கதைகள். யாமம் எனும் அத்தர் தயாரிக்கும் அப்துல் கரீம் அத்தரின் தயாரிப்பு ரகசியத்தை விட்டு செல்ல ஆண் மகவு இல்லையே என்ற உளைச்சலில் குதிரைப் பந்தயத்தில் ஈடுபட்டு கடைசியில் அத்தர் தயாரிப்பையே விட்டு தலைமறைவாகிறார். அவருடன் அத்தர் தயாரிப்பும் அழிகிறது.  அத்தர் வாசனையில் வாழ்ந்த அப்துல் கரீமின் மூன்று மனைவிகளும் பெண் குழந்தையும் மீன் விற்று வாழும் நிலை வருகிறது.


பிரிட்டிஷ் அரசின் நில அளவை குழுவில் வேலை பார்க்கும் பத்ரகிரி. தாயின் மறைவுக்குப் பின் தந்தையால் விரட்டப்பட்டு சித்தியிடம் வளர்ந்து நிற்பவன். தம்பி திருச்சிற்றம்பலத்திற்கு பத்ரகிரி தான் தந்தை நிலையில் இருந்து வளர்க்கிறான். லண்டனுக்கு மேல்படிப்பு படிக்கவும் வைக்கிறான்.  ஆனால் ஏதோ ஒரு கணத்தில் நிலை மாறி தம்பியின் மனைவியுடன் உறவு ஏற்பட்டு ஒரு குழந்தைக்கும் தந்தையாகிறான். 


தாய் வந்து கெஞ்சியும் போகாமல் எந்த ஒரு இடத்திலும் தங்காமல் நீலகண்டம் என்ற நாயின் பின்னால் அது செல்லும் இடத்துக்கெல்லாம் செல்லும் சதாசிவ பண்டாரம். கடைசியில் மதரா பட்டினத்திற்கு வந்து பட்டினத்தார் சமாதியில் தானும் சமாதி ஆகிறது.


பங்காளியுடன் நிலத்தகராறில் கிருஷ்ணப்ப கரையாளர். எலிசபெத் என்ற தாசியுடன் காதல் ஏற்பட்டு கடைசியில் அவளுடன் வாழ்வதற்காகவே வழக்கை முடித்துக் கொண்டு பங்காளியுடன் சமாதானம் ஆகிறார். 


பத்ரகிரியின் தம்பி திருச்சிற்றம்பலத்துடன் உல்லாசாத்திற்காகவே லண்டன் செல்லும் சற்குணம், கடைசியில் உல்லாசம் என்பதையே மறந்து லண்டனின் கடைநிலை தொழிலாளர்களுக்காகவும் மக்களுக்காகவும் போராடுகிறான். 


வெள்ளையர்கள் நடத்தும் ராயல் சொசைட்டி இந்தியனான திருச்சிற்றம்பலத்திற்கு தரும் படிப்பு உதவித் தொகை.


ஒன்றுடன் ஒன்று தொடர்பு இல்லாத இந்த எல்லா கதைகளிலும் எல்லாவற்றையும் இணைக்கும் சரடாக இரவு. 
========================


இரவு ஆழமானது. இரவைப் பற்றிய கதையில் அதன் ஆழம் பற்றி கொஞ்சமேனும் சொல்லப்பட்டிருக்கிறதா என்றால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. தம்பி மனைவியுடன் உறவு கொள்ளும் பத்ரகிரி. வெளிப்புறமான சம்பவங்கள் வழியே சொல்லப்படுகிறதே தவிர பத்ரகிரியின் மனமோ இல்லை தம்பி மனைவி தையலின் மனமோ ஆராயப்பட முயற்சி எதுவும் செய்யப்படவில்லை. 


இப்படியே பத்ரகிரியின் மனைவி விசாலா, சதாசிவ பண்டாரம், கிருஷ்ணப்ப கரையாளர், எலிசபெத், வகீதா, சுரையா, ரஹ்மானி, திருச்சிற்றம்பலம், சற்குணம் என்று எந்த கதாபாத்திரத்தின் ஆழத்திற்குள்ளும் யாமம் போக மறுக்கிறது.


முன்னூறு பக்கம் தாண்டும் இந்த நாவலை படிக்கும் போது ஏதோ ஒரு பழைய அரசு ஆவணத்தை படிக்கும் உணர்வு ஏற்படுகிறதே தவிர வாசிப்பவன் நிகழ்வில் ஒரு அங்கமாக உணரமுடியவில்லை. முக்கிய காரணம் நாவலில் சொல்லப்படும் எந்த கதையும் நிகழவில்லை.முன்னொரு காலத்தில் நிகழ்ந்ததாக ஏற்றம் இறக்கம் இல்லாத தொனியில் சொல்லப்படுகிறது. எந்த ஒரு எழுச்சிகரமான கட்டமும் இல்லாததால் மூன்றாம் பக்கம் படிக்கும் போதே முதல் பக்கம்  மறந்து போகிறது. 



இலக்கியம் என்பதற்கு எந்த வரையறையும் இல்லை என்றாலும் இப்படியாக நடந்தது என்று மட்டுமே சொல்வது இலக்கியமா என்ற கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை. அப்படியெனில் செய்தித் தாள்களுக்கும் இலக்கியத்திற்குமான வேறுபாடு தான் என்ன? கட்டுரையும் கதையும் எந்த புள்ளியில் பிரிகிறது?


நான் பார்த்த வரையில் இந்த நாவலுக்கு மிக நல்ல நாவல் என்ற ரீதியிலான விமர்சனங்களே இருக்கின்றன. இதைப் புரிந்து கொள்ள நுண்ணுணர்வு வேண்டும் என்றும் அவர்கள் சொல்லக் கூடும். எந்த ஆழத்திற்கும் போகாத வெறுமனே வார்த்தைகளால் ஆன ஒரு மேடை நாடகத்தை பார்க்கும் உணர்வே எனக்கு ஏற்படுகிறது என்பதால் ராஜா ஆடையே இல்லாமல் அம்மணமாக இருக்கிறார் என்று சொல்வதை தவிர்க்க முடியவில்லை.


எஸ்ராவின் எழுத்து நடையைப் பற்றி தனியாக சொல்வதற்கு ஒன்றுமில்லை. ஆங்கிலத்தில் ஒரு சொற்றொடர் உண்டு. Watching the paint dry.


யாமம். தூக்கம்.

Monday 25 July 2011

பிதா

    இயேசு ஞானஸ்நானம் பெற்று ஜலத்திலிருந்து கரையேறினவுடனே இதோ வானம் அவருக்கு திறக்கப்பட்டது; தேவ ஆவி புறாவைப் போல இறங்கி தம் மேல் வருகிறதைக் கண்டார். அன்றியும் வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி இவர் என் நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன் என்று உரைத்தது.
    புதிய ஏற்பாடு, மத்தேயு. அதிகாரம் 3, வசனங்கள் 16,17
    ====================
    ”வாயில கொஞ்சம் நல்லெண்ணைய ஊத்தி கட்டுங்க” என்று அத்தை சொல்லவும் தஞ்சாவூர் மாமாவும் இன்னொருவரும் அப்பாவின் வாயில் எண்ணெயை ஊற்றி வெளியே கொஞ்சமாய் வழிந்த எண்ணெயை துணியால் துடைத்து அந்த துணியை அப்பாவின் தலைவழியாக நாடியுடன் சேர்த்து இறுக்கி கட்டினார்கள். அப்பாவுக்கு நல்லெண்ணையை பொடியில் ஊற்றி இட்லி சாப்பிட பிடிக்கும். ஆனால் இதயத்தில் அடைப்பு இருந்ததால் எண்ணெய் எதுவும் சேர்க்க கூடாது என்று சொல்லி விட்டார்கள். சாகும் வரை உப்பில்லாத இட்லியை தான் சாப்பிட்டு கொண்டிருந்தார். 
    அப்பாவை அவர் வழக்கமாய் உட்காரும் பிரம்பு நாற்காலியில் தான் உட்கார வைத்திருந்தார்கள். கல்லூரி நாட்களில் இருந்தே நான் ஹாஸ்டலில் இருந்து வரும் போதெல்லாம் அவர் அதே நாற்காலியில் தான் வீட்டுக்கு வெளியே உட்கார்ந்திருப்பார்.   ஏதேனும் பேப்பர். அவர் பேப்பரை படித்து முடிக்க மதியம் ஆகும். அதிகம் படித்ததில்லை என்பதால் மெதுவாக தான் படிப்பார். எப்பொழுது படித்தாலும் எம்ஜிஆரை தவிர வேறு எந்த பெயரிலும் அவருக்கு ஜ வராது. ஜெயலலிதா கூட செயலலிதா தான். ராஜீவ் காந்தி ராசீவ் காந்தி. எம்ஜிஆர் மட்டும் என்னவோ ஸ்பெஷல். இறுக்கி கட்டியதும் அவர் முகம் இறுகியது போல தெரிந்தது. “நேத்து நைட் குடிச்சிட்டு வந்தியா” என்று கேட்ட பொழுது அவர் முகம் இப்படி தான் இருந்தது. கோபமா துக்கமா என்று சொல்ல முடியாத முகம். “இல்ல.....அது சுந்தர மூர்த்தி பர்த்டே...அதான்.....” நான் இழுத்ததை கவனிக்காதவர் போல தலையை ஆட்டி விட்டு போய்விட்டார். 
    நாலு பேருக்கு அப்புறம் ஐந்தாவது ஆள் நான் என்பதலோ என்னவோ அப்பா இப்படித் தான். என்னிடம் அதிகம் பேசியதேயில்லை. அண்ணா அக்கா எல்லாரிடமும் ஏதேனும் சொல்லிக் கொண்டே இருப்பவர் என்னிடம் இரண்டு வார்த்தைகள் தான். சாப்பிட்டியா என்பது தான் அதிகமாய் பேசிய வார்த்தை. அதுவும் மருத்துவம் படிக்க நான் சென்னை சென்ற பின் பேசுவதற்கு விஷயங்களே இல்லை என்று ஆகிவிட்டது. 
    சுந்தர மூர்த்தி பின்னால் இருந்து தோளைத் தொட்டான். மெல்லிய குரலில் ”வாடா. பின்னாடி போய் ஒரு தம்மடிச்சிட்டு வரலாம்” என்றவனை தொடர்ந்து வீட்டை சுற்றி பின்னால் இருந்த தோட்டத்திற்கு போனோம். மூர்த்தி சிகரெட்டை பற்ற வைத்து விட்டு “உங்க அப்பாவுக்கு தெரிஞ்சா திட்டுவாருன்னு எத்தனை தடவை [பயந்துக்கிட்டே இங்க நின்னு அடிச்சிருக்கோம்....ஞாபகம் இருக்கா...” என்றான். நான் அவனை வெறுமனே பார்த்துவிட்டு “ம்ம்ம்...ஆமா” என்றேன். அதற்கு மேல் என்ன சொல்வது என்று தெரியவில்லை. அவன் புகையை வெளியே விட்டு விட்டு தோளைத் தட்டினான். “மாப்ள. ரொம்ப அப்செட் ஆகி இருக்க போல. ரொம்ப நாளா ஹார்ட்ல ப்ராப்ளம். எப்ப வேணும்னாலும் இப்படி நடக்கும்னு தெரிஞ்சது தான...நான் காலைல இருந்து பார்த்துக்கிட்டே தான் இருக்கேன். நீ அழவே இல்ல. மனசு விட்டு அழுதுருடா. உள்ள வெச்சிக்காத. அது பின்னாடி ரொம்ப கஷ்டமாயிடும்...”
    நான் சிகரட்டின் நுனியில் இருந்த சாம்பலை தட்டி விட்டு “அப்படி எதும் இல்லடா....எனக்கு எதுக்கு அழறதுன்னு தெரியலை. வேண்டா வெறுப்பா புள்ள பெத்து காண்டாமிருகம்னு பேரு வச்ச மாதிரின்னு சொல்வாங்க. இருந்தப்பவே என்ட்ட அவரு சரியா பேச மாட்டாரு.  ஸ்கூல்லயே ஃபர்ஸ்ட் ராங்க் எடுத்தாலும் ராங்க் கார்ட் கூட என் கிட்ட கேட்டதில்லை. எந்த ஸ்கூல் ஃபங்ஷனுக்கும் வர மாட்டாரு. உனக்கு தான் தெரியுமே. மூணாவது படிக்கும் போது எனக்கு ஹார்ட் ஆப்பரேஷன் பண்ணாங்க. அப்போ கூட இவரு இப்படி தான் இருந்தாரு. ஹாஸ்டல்ல இருந்து வீட்டுக்கு வந்தா கூட எப்ப வந்த, எப்போ போகணும் அவ்ளோ தான். ஒரு மாதிரி டிஸ்டன்ஸ் ஆகிப் போச்சுடா. இப்போ அவரு இல்லை. ஆனா எப்பவுமே அப்படி தான இருந்தது. அதான் எனக்கு தெரியலை. என்ன பண்றதுன்னு. ஆனா ஒரு மாதிரி டல்லா தான் இருக்கு...”
    சிகரெட்டை முடித்து விட்டு நாங்கள் வரவும் அப்பா ரெடியாக இருந்தார். கடைசி பயணம். “கழுத்துல கைல போட்ருக்க தங்கத்தை கழட்டிட்டு அவருக்கு பிடிச்சதை கொண்டு வாங்க” யாரோ சொல்ல அண்ணன் வீட்டிற்குள் போய் அப்பாவின் பெட்டியை எடுத்து வந்தான். கனமாய் பூட்டு போட்ட பழைய தகரப் பெட்டி. திண்டுக்கல் பூட்டு என்று அப்பா சொல்லியிக்கிறார். அதை யாரும் திறக்க விட்டதேயில்லை. ஒவ்வொரு தீபாவளிக்கும் மட்டும் அதை திறந்து அந்த கறுப்பு துண்டை எடுத்து படையல் வைப்பார். எம்ஜியார் அவருக்கு கொடுத்த துண்டு. எம்ஜியார் கட்சி ஆரம்பித்த காலத்தில் அப்பா அவரை ஊருக்கு கூட்டி வந்து கூட்டம் போட்டிருக்கிறார். அதில் யாரோ கல்லடித்து அப்பா முகத்தில் காயமாகி ரத்தம் ஒழுக எம்ஜியார் போட்டிருந்த துண்டால் அதை துடைத்து விட்டு கட்டு போட்டாராம். அப்பா படுத்திருந்த ஆஸ்பத்திரிக்கு வந்து “உனக்கு என்ன வேணும்னு சொல்லு. இப்பவே செய்றேன்” என்றவரிடம் “இந்த துண்டு மட்டும் ஆயுசுக்கும் போதும் தலைவரே” என்று சொல்லி வாங்கிய துண்டு. அப்பா அடிக்கடி சொல்லும் கதை. அவர் வேறு எதுவும் கதை சொல்லி எனக்கு ஞாபகம் இல்லை.
    அண்ணா தகரப்பெட்டியை அப்பாவின் காலடியில் வைத்து திறந்து எம்ஜியாரின் கறுப்பு துண்டை எடுத்து வெளியே வைத்தான். அப்பாவின் ரத்தம் எம்ஜிஆர் துண்டில் ஊடுருவிய இடங்கள் மட்டும் தனியாக தெரிந்தது. எம்ஜியார் போட்டிருந்த துண்டு என்று அப்பா அதை துவைத்ததே இல்லை. பழைய பேப்பர்கள். கிறுக்கலாய் அப்பாவின் எழுத்து. அப்பாவின் தோளில் கை போட்ட எம்ஜியார் ஃபோட்டோ.
    எல்லாவற்றுக்கும் கீழே குட்டியாய் ஒரு சின்ன பையனின் வெள்ளை கலர் சட்டை. அதன் இடது மார்பு பக்கத்தில் ரத்தம் படிந்து கறுப்பாகி இருந்தது. அதன் அடியில் பழுப்பேறி கலர் மாறிப் போன ஒரு ஃபோட்டோ. பிண்ணனியில் ஜெயண்ட் வீலும் கூடாரங்களும் மக்களுமாக ஏதோ பொருட்காட்சி. பஞ்சு மிட்டாயுடன் ஒரு குட்டிப் பையன் நின்றிருக்க மண்டியிட்டு அவன் சட்டை பொத்தானை சரி செய்யும் அப்பா. 
    அந்த பையனை எனக்குத் தெரியும். அது என் படம். அது ஹார்ட் ஆப்பரேஷனுக்கு பின்னால் நான் போட்டிருந்த சட்டை.
    =================================================

Saturday 16 July 2011

எஸ்.ராமகிருஷ்ணனின் “உறுபசி”

பல தற்கொலைகள் ஏதோ ஒற்றைக் கணத்தின் முடிவல்ல. மிக மெதுவாக தன் போக்கில் நடக்கும் தொடர் நிகழ்வு. வெற்று சடலங்களாக மனிதர்கள் நடந்து கொண்டே இருக்கிறார்கள் எங்கும் செல்லாத ஒரு முட்டுச் சந்தை நோக்கி.


உறுபசி சம்பத்தின் மரணத்தில் தான் கதை ஆரம்பிக்கிறது. அழகர், ராமதுரை, மாரியப்பன், யாழினி என்று கல்லூரி நண்பர்கள், சம்பத்தின் மனைவி ஜெயந்தி என்று காய்ந்து போன எலும்புத் துண்டங்களாக சம்பத்தின் வாழ்க்கை சிதறிக் கிடக்கிறது.


பரீட்சைக்கு படிக்காமல் பரவி இருக்கும் பசுமைக்காகவே தமிழ் இலக்கியம் படிக்க வேண்டும் என்று சொல்லும் சம்பத், கம்பராமாயணத்தை கொளுத்தும் சம்பத், கறுப்பு சட்டை போட்டு பேராசிரியரிடம் வாக்குவாதம் செய்யும் கலகக்கார சம்பத், யாழினியிடம் ஒரே ஒரு முத்தத்திற்காக கெஞ்சும் சம்பத், குடித்து விட்டு லாட்ஜ் அறையில் வாந்தி எடுக்கும் சம்பத், மதுரையில் நட்டு போல்ட்டு விற்கும் சம்பத்...நண்பர்கள் கொடுத்த பணத்தில் பூச்செடி வியாபாரம் ஆரம்பித்து திடீரென்று அத்தனை பூந்தொட்டிகளையும் காணாமல் செய்யும் சம்பத்...பெரிய கலக பேச்சாளராக உயர்ந்து வீழ்ச்சி அடையும் சம்பத்......திடீரென்று ஒரு பெண்ணை பார்த்து இரண்டாம் நாளே அவளை மணம் செய்யும் சம்பத், அப்பனை விறகு கட்டையால் அடித்து நொறுக்கும் சம்பத், மரண படுக்கையில் பெற்றவர்களை நினைத்து அழும் சம்பத்.


சம்பத் ஓடிக் கொண்டே இருக்கிறான், மாறிக் கொண்டே இருக்கிறான். உண்மையில் அவன் ஓடுவது அவனிடமிருந்தே. அவன் வெறுப்பது அவனைத் தான்.அந்த வெறுப்பே மற்றவர்கள் மேல் தொடர்ந்து உமிழ்ப்படுகிறது. யாருமே அரவணைக்க முடியாத கற்றாழைப் போல ஆகிவிட்டேன் என்கிறான். உண்மையில் அவன் விரும்பியது அது தான். அதனாலேயே தொடர்ந்து மற்றவர்களை துரத்தியடிக்கிறான்.


சிறு வயதில் தங்கையின் மரணம் அவனை பாதித்திருக்க கூடும். மரணத்திடமிருந்து ஓட அவன் அதை நோக்கியே ஓடுகிறான். மரணத்தின் மீதான அவன் விருப்பம் பசியைப் போல உறுத்திக் கொண்டே இருக்க அவனது அத்தனை செயல்களும் தோற்றுப் போன ஒருவனின் கடைசி நேர முயற்சி போலவே இருக்கிறது.


மரண பயம் எல்லா மனிதனுக்கும் எப்பொழுதுமே இருக்கும் என்று தோன்றுகிறது. சில நேரங்களில் கூட்டில் அடங்கிய ஆமை போல அமைதியாக சில நேரங்களில் கரையில் மோதும் அலையைப் போல பேரிரைச்சலுடன் ஏதோ ஒரு விதமாக அது இருந்து கொண்டே தான் இருக்கிறது. வயதில் மூத்தவர்கள் மரணிக்கும் போது கடந்து போகும் பயம் ஒத்த வயதுடைய நண்பன் இறந்து போகும் போது வாலை குழைக்கும் நாயைப் போல ஒடுங்கிப் போகிறது, சொல்லப்படாத லட்சம் வார்த்தைகளுடன். யானையின் காலில் கட்டும் சங்கிலிப் போல மரணத்தை மறுக்க தான் குடும்பம் குழந்தை கோயில் மதம் பணம் வெற்றி தோல்வி என்று விதம் விதமான கட்டுக்கள். கீழே விழுகையில் கையில் எட்டும் மரக்கிளைகளை பற்றிக் கொள்வது போல.


”உங்களுக்கு தெரிஞ்ச யாரோ சம்பத்தாம். மெட்ராஸ்ல இறந்துட்டாராம்” தலைவலிக்கு தைலம் தேய்த்துக் கொண்டே ஒரு பெண் அறிவிக்கிறாள். உண்மையில் இதை தவிர்க்கவே சம்பத் கடைசி வரை போராடி தோற்றுப் போனான் என்று தோன்றுகிறது.


நண்பகல் பாலையின் வழியும் வெயிலைப் போல நாவல் முழுவதும் வெறுமையும் கசப்பும் வழிந்து கொண்டே இருக்கிறது. மலையை ஊர்ந்து அரிக்கும் எறும்புக் கூட்டமாக காலம் ஒவ்வொருவர் மீதும் ஊர்ந்து கொண்டே தான் இருக்கிறது.


கடலில் கரைந்து காணாமல் போகும் சம்பத்தின் சாம்பலைப் போன்று வாழ்க்கையின் தோல்வியாகவே உறுபசியை எடுத்துக் கொள்ளலாம்.


உறுபசி. சிதைவுகளின் சித்திரம்.


====================



Tuesday 21 June 2011

And.......

Not that I understood it when I read it, but Newton's third law is pretty simple. For every action, there is an equivalent and opposite reaction. Chinese Yin-Yang. Birth and death as in Hinduism. May be, this is the point, where religion meets science. 


But, no, I am not going to talk about Yin Yang or Newton for that matter, but if there is a start there must be an end. Some ends may be once for ever, some may not. I dont know. But this blog is temporarily closed until I feel like writing. May be tomorrow. May be never. Until then thank you all for your support, opinions, discussions.


See you later. Bye for now.

Wednesday 1 June 2011

கொல்கத்தா சேரிகளும் ஜெயமோகனும் கொஞ்சம் அறச்சீற்றமும் (அ) அய்யாங்...ட்ட்டொய்ங் 5

இந்த தலைப்பிலேயே ஒரு பிரச்சினை இருக்கிறது. அய்யாங் டொய்ங் என்பதை விட அய்யகோ ட்ட்டொய்ங் என்பது தான் சரியாக இருக்கும். போய்த் தொலைகிறது விடுங்கள். கெடப்பது கெடக்கட்டும் கெழவனை தூக்கி மனையில் வை என்பது போல ஆகிவிடும்.

என்ன கருமத்துக்கு இந்த பழமொழி என்று உடனடியாக சீறாதீர்கள். நிறைய பேர் காத்திருக்கிறார்கள். போய் க்யூவில் நில்லுங்கள். டோக்கன் அப்புறம் தருவார்கள். சேரின்னு சொன்னா, ஆஹா வாழ்க்கைன்னா அங்க தான்யா இருக்கு என்று வெளம்பர ஃபீலிங். அப்படில்லாம் இல்லை என்று சொன்னால் போச்சு. அதெப்படி சொல்லலாம் சேரின்னா முகம் சுளிக்கிறது பார்ப்பானீயம் பாட்டி சுட்ட பணியாரம். கெளம்பி விடுவார்கள். ஓவர் டைமெல்லாம் உண்டாம். 

 எனக்கு வாசிப்பறிவும் இல்லை. புண்ணாக்கும் விற்பதில்லை. கருவாடு வேண்டுமானால் கிடைக்கும். அய்யா சேரியில் வாழ்வதற்கு க்யூவில் நிற்பவர்கள் எத்தனை பேர். அப்பார்ட்மெண்டில் இருப்பவர்களும் கடன் வாங்கியாவது வீடு கட்டுபவர்களும் சேரியில் இடம் கிடைக்காமல் வேறு வழியில்லாமல் தான் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். எல்லாம் ஒரு டவுட்டு தான்.அய்யகோ அம்மாவின் அரசு இந்த நிலையை மாற்றுமா.  ஏழையாய் வாழ்வதில் ஒரு சுகம் இருக்கிறது என்று உருகும் இலக்கியவாதிகளும் முற்போக்கு என்னய்யா முற்போக்கு எனக்கு பிற்போக்கு தான் தெரியும் முற்போக்கு பதிவர்களும் அதை சேரியில் இருக்க நேர்பவர்களிடம் போய் அறிக்கை விட்டு பாருங்கள். அப்புறம் தெரியும் சேதி. 

எட்டுக்கு எட்டு அறை அதில் மூணு பேர். அறை என்றால் ஒரு ரூமில் பத்து பேர் இருக்கும் சென்னை மேன்ஷன் என்று நினைத்துக் கொண்டால் நீங்கள் மேல்தட்டு சுகவாசி. அறைக்கு கீழே சாக்கடை. அதன் மேல் ஒரு சிமெண்ட் தட்டு. அதற்கு மேல் ஒரு கிழிந்த கட்டில். அதில் நீங்கள் உட்கார்ந்தால் உங்களுக்கு மேலே ஒருத்தன் படுத்திருப்பான். அவன் பெயர் ரங்கநாதன் இல்லை. இப்படி ஒரு அறை இருந்தாலே அது ஆகப்பெரிய விஷயம். இதைத் தான் நமது இலக்கியவாதிகள் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அங்கு போய் குடித்தனம் நடத்துவார்களா. அய்ய்ய்ய்ய்யாங்ங்ங்ங்....

சேரியில் சுகம் காணும் ஏழைப் பங்காளர்கள் எப்படியோ சுகமாய் இருக்கட்டும். பிரச்சினை அதுவல்ல.  வடகிழக்கு போன ஜெயமோகன் அங்கயே இருந்திட கூடாதா என்று கேட்காதீர்கள். அமெரிக்கா போனாலும் ஆஸ்ட்ரேலியா போனாலும் கம்ப்யூட்டர் கிடைக்காத பூட்டான் போனாலும் அவர் எழுதிக் கொண்டு தான் இருப்பார்.  என்ன சொல்ல வந்தேன்.  வட கிழக்கு போன ஜெயமோகன் கொல்கத்தா ஆமாம் கல்கத்தா என்று இருந்தால் மக்கள் வாழ்வில் வறுமை. கொல்கத்தா என்று மாற்றியதால் எல்லாரும் ப்ரைவேட் ஜெட்டில் போய்க் கொண்டிருக்கிறார்கள், ஒன்று எழுதியிருக்கிறார்.

||முப்பதாண்டுகளாக ஒரு இடதுசாரி மனிதவிரோதக்கும்பலால் மனசாட்சியே இல்லாமல் சீரழிக்கப்பட்ட நரகம் இது. இதை எப்படி மீட்டெடுப்பதென்பது எவருக்கும் தெரியவில்லை. கல்கத்தா அதன் சணல் தொழில், துறைமுகம் இரண்டையும் மட்டுமே நம்பி இருந்த நகரம். இரண்டுமே தொழிற்சங்க குண்டர் அரசியலால் முழுமையாக அழிக்கப்பட்டுவிட்டன. கிராமங்களில் நிலஉடைமைச் சமூக அமைப்பு இடதுசாரி பௌடர்பூச்சுடன் அப்படியே பேணப்பட்டமையால் தலித்துக்கள் கூட்டம் கூட்டமாகக் கிளம்பி அவர்களுக்கு இருக்கும் ஒரே பெருநகரமான கல்கத்தாவை நிரப்பி அதை மாபெரும் சேரியாக ஆக்கிவிட்டார்கள்.||
படித்த உடனே உங்கள் ரத்தம் கொதிக்க வேண்டும். எதற்கு என்றெல்லாம் யோசித்தால் நீங்கள் ஜாதி வெறியன். வக்கிரம் பிடித்தவன். அல்லது பிடித்தவள். ஆணாதிக்க வாதி பட்டம் இலவசமாய் எனக்கு கிடைக்க வேண்டாம். 

தெளிவாகவே இருக்கிறது. கிராமங்களில் நில உடைமை சமூக அமைப்பு அப்படியே பேணப்பட்டதால் தலித்துகள் இடம் பெயர்ந்தார்கள். இதையெல்லாம் கவனித்தால் அறம் சீற முடியாது. சீறி விட்டு அப்புறமாக யோசிப்பது தான் அறம்.

ரொம்ப நேரம் வேண்டாம். ஒரு தம்மடிக்கும் நேரம் போதும். அய்யோ நான் தம்மடிக்க மாட்டேன் என்று சொல்லும் அம்மா பிள்ளைகள் நகத்தை கடிக்கலாம். பிரச்சினை இல்லை. யோசியுங்கள். நில உடைமை சமூகத்தில் அதிக பாதிப்பு யாருக்கென்று. குறிப்பாக எந்த வர்க்கத்தினர் எந்த சாதியினர் அதிகம் பாதிக்கப்பட்டார்கள் என்று. ஜாதி வெறியன் பூணுலை நகர்த்தி போடுகிறான் என்று ஒரு பின்னூட்டம் வரப்போகிறது.  ஆனால் உண்மை என்னவெனில் நில உடைமை சமூகம்   ஜமீந்தார் சமூகம் என்று சொன்னால் புரியும் இந்த அமைப்பால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் தலித்துகளே. அவர்கள் நிலம் வைத்திருந்தாலும் குற்றம் என்ற நிலை தான் இருந்தது. இன்னும் சில இடங்களில் இருக்கிறது. இந்த கொடூரத்திற்கு ஆட்படாது வேறு வழியின்றி கல்கத்தாவுக்கு இடம் பெயர்ந்தார்கள் என்று ஜெயமோகன் சொன்னால் தலித்துகள் போய் கொல்கொத்தா சேரியாகி விட்டதா  என்று பொங்குகிறார்கள்.

தலித்துகள் இடம் பெயர்ந்தால் சேரியாகி விடுமா என்றால் தலித்துகள் இடம் பெயர்ந்ததால் அல்ல, பெரும் அளவிலான மக்கள் இடம் பெயரந்தால் எந்த இடமும் அப்படித் தான் ஆகும். திருவிழா முடிந்து ஊரெல்லாம் குப்பை.  தொழில் வசதியும் வளமையும் இல்லாத நகரம் மக்கள் இடப்பெயர்ச்சியால் சேரியாக தான் மாறும். தினமும் வீட்டை துடைத்து வைக்க மாதம் ரெண்டு லட்சம் சம்பளம் கிடைப்பது இல்லை. 

அம்மா ஆடு இலை ஈ உடுக்கை ஊஞ்சல். ஏ ஃபார் ஆப்பிள் பீ ஃபார் பிஸ்கட். ஜெயமோகன் சொல்ல வருவது மேற்குவங்க இடதுசாரிகள் போலி சமத்துவம் பேசிக் கொண்டே நிலப்பிரப்புத்துவ சமூகத்தையே நிலைநிறுத்தினார்கள். இதில் அதிகம் பாதிக்கப்பட்ட தலித்துகள் வங்காளத்தின் ஒரே பெரு நகரமான கொல்கத்தாவுக்கு இடம் பெயர்ந்தார்கள். ஏற்கனவே தொழில் வளம் அழிக்கப்பட்டிருந்த கல்கத்தா இடப்பெயர்ச்சிக்கு ஈடு கொடுக்கவில்லை. இடம் பெயர்ந்தவர்களின் வறுமை காரணமாக சேரி போன்ற நிலை ஏற்பட்டது. ஒன்னாங்கிளாஸ் பாடம். இதற்கும் கோனார் நோட்ஸ் போட வேண்டி இருக்கிறது. 

கம்யூனிஸ்டுகள் மனிதகுல விரோதிகளா முப்பது ஆண்டுகளாக ஒரு மாநிலத்தை ஆண்டவர்கள் மனித குல விரோதிகளா. என்று கேட்கிறார்கள். நான் மூணாங்கிளாஸ் ஃபெயில். அய்யா மாநிலம் அல்ல, சோவியத் யூனியன் என்ற மாபெரும் நாட்டையே ஆண்டார்கள். எத்தனை வருஷம். அவர்கள் மனித குல தொண்டர்களா. ஸ்டாலினால் புதைக்கப்பட்டவர்களின் கால் நகம் கூட உங்களை மன்னிக்காது. மாவோவால் கொல்லப்பட்டவர்களின் புதை குழி மீது நின்று உங்கள் அறிவுஜீவி கேள்விகளை எழுப்புங்கள். ரொம்ப நோண்டாத உள்ள இருக்கவன் வெளிய வந்து அப்பிட போறான். நான் சொல்லவில்லை. ஒரு படத்தில் கவுண்டமணி சொல்வது. 

விக்ரமுக்கு டாக்டர் பட்டம் கிடைத்திருக்கிறது. எனக்கு முற்போக்கு பட்டம் கூட கிடைக்காமல் இருப்பது என்னால் பொறுக்க முடியவில்லை. எத்தனை நாள் பிற்போக்கு பதிவனாக இருப்பது. எதையாவது பார்த்தோ பார்க்காமலோ அறச்சீற்றம் அடந்து நானும் முற்போக்காக போகிறேன். சமத்துவம், சமூக நீதி, கேள்வி கேட்பவன் ஆதிக்க வாதி, குற்றம் சாட்டுபவன் சாதி வெறியன். ஒரு லட்சம் கோடி ஊழல் செய்த மந்திரி மீது வழக்கு போட்டால் அது பார்ப்பன சதி. சரியாக சொல்கிறேனா? இனி நானும் ஒரு முற்போக்கு பதிவன். 
===============================

Wednesday 25 May 2011

தட்டுங்கள் திறக்கப்படும்....

தட்டுங்கள் திறக்கப்படும்
தவறாக புரிந்து கொண்டு யாரேனும் 
தட்டிக் கொண்டே இருக்கிறார்கள்.


அவர்கள் மீது பிழையில்லை
தட்டச் சொன்னவன் நான் தான்.
ஆனால்

கவனியுங்கள்
என் கதவுகள் வெளிப்புறமாக பூட்டி இருக்கின்றன.

அந்த கதவுகளின் சாவி 
தொலைந்து போய் வெகுநாட்களாகி விட்டது.
இன்னேரம் எங்கோ இருக்க கூடும்
இல்லையேல் துருப்பிடித்தும் போயிருக்கலாம்.

இவ்விடத்தில் ரகஸியமாய் ஒன்று
அதை தூக்கி எறிந்தது நான் தான் என்று
எனக்கு தனியே ஒரு சந்தேகம் உண்டு.
ஒரு வேளை
அந்த சாவி என் முகத்தின் முன்னரே இருக்க கூடும்.
அறையின் கண்ணாடிகள் உடைந்து போனதில் 
எனக்கு என் முகம் மறந்து விட்டது.
அப்படியே சாவியும்.

வறண்ட குளத்தில் மூழ்கும் 
காற்றில்லா பந்தை பார்த்து 
காலில்லா ஒற்றைத் தவளை கத்திக் கொண்டே இருக்கிறது.
அதற்குத் தெரியும்
மெளனத்தின் பேரிரைச்சல் அதன் 
சத்தங்களை மென்று விழுங்கும் என்று.

தட்டுங்கள் திறக்கப்படும்.
ஆனால் 
கவனியுங்கள்.
என் கதவுகள் வெளிப்புறமாக பூட்டி இருக்கின்றன.

இருங்கள் வருகிறேன்.
இன்றைக்கும் யாரோ தட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

Wednesday 18 May 2011

குட்பை மிஸ்டர் கருணாநிதி!

எவருடைய நேரத்தையும் வீணாக்க எனக்கு விருப்பமில்லை.ஷா ஜஹான் தாரா ஷிகோ ஒளரங்கசேப் என்றால் உங்களுக்கு தாஜ்மஹாலும் மும்தாஜும் நினைவில் வந்தால் தயவு செய்து இந்த இடுகையை மூடிவிட்டு மானாட மயிலாட பார்க்க போங்கள். அது உங்களுக்கு நல்லது.  எனக்கும் நல்லது. 

யாருக்கும் தெரியாத ரகசிய வரலாறு இல்லை என்றாலும் மொகலாய பேரரசை பற்றி சொல்வதற்கு காரணம் இருக்கிறது. பாபரில் ஆரம்பித்து ஒளரங்கசேபில் முடிந்த மொகலாய பேரரசு வரலாறுகளின் வரலாறாக நிற்கிறது. திராவிடர் கழகத்தின் அண்ணா துரையில் இருந்து தோன்றி திருக்குவளை மு கருணாநிதி வரை நீண்ட திமுக போல.

மறுக்க முடியாத உண்மை. திமுகவுக்கு தோல்விகள் புதிதல்ல. திமுகவின் ஆரம்பமே வெற்றியில் ஆரம்பிக்கவில்லை. அன்றைய காங்கிரஸ் கட்சியிடம் தோல்வியில் தான் ஆரம்பித்தது. அடுத்த தேர்தலில் கட்சி தலைவர் அண்ணாதுரையே தோற்றார். அண்ணாதுரைக்கு பின் கருணாநிதி முதல்வர் ஆகி சில வருடங்களிலேயே எம்.ஜி.ஆரிடம் தோல்வி. எம்.ஜி.ஆர் மறையும் வரை  பதிமூன்று வருடங்கள் தோல்வி. வெற்றிக்கு வாய்ப்பே இல்லாத தொடர் தோல்வி. 

ஒரே தோல்வியில் சிதறிப் போகும் கட்சிகள் மத்தியில் தொடர் தோல்விகளாலும் திமுக துவண்டு விடவில்லை. எம்.ஜி.ஆரின் அதிமுகவுக்கு ஒரே மாற்று சக்தி என்ற நிலையில் தொடர்ந்து கோட்டை போல இயங்கிக் கொண்டே தான் இருந்தது. அதற்கு பின் வெற்றிகளும் தோல்விகளும். 1991ல் ராஜீவ் காந்தி மரணத்திற்கு பின் ஏற்பட்ட படுதோல்வி. கருணாநிதி மட்டுமே தப்பி பிழைத்த தேர்தல் அது. வேறு எந்த கட்சியும் சிதறுண்டு போய் இருக்கும். ஆனால் திமுக பீனிக்ஸ் பறவை போல சிலிர்த்து எழுந்து அடுத்த தேர்தலில் மீண்டும் ஆளுங்கட்சி.

ஆனால்....

பீனிக்ஸ் பறவை இப்பொழுது உரிக்கப்பட்ட கோழியாக நிற்கிறது.  எண்களை மட்டும் பார்த்தால் மற்ற தோல்விகளுடன் ஒப்பிடும் போது இது மாபெரும் தோல்வி இல்லை தான்.  ஆனால், மற்ற தோல்விகளுக்கும் இதற்கும் இருக்கும் பெரிய வித்தியாசம் மற்ற தேர்தல்களில் திமுக கிட்டத்தட்ட தனியாக நின்றது. இந்த தேர்தலிலோ காங்கிரஸ், பாமக என்ற பலமான கூட்டணி கட்சிகள், சன் டிவி கலைஞர் டிவி தினகரன் என்று ஊடக பலம். பல்வேறு நடிகர்கள் நடிகைகள் பிரச்சாரம் வீட்டுக்கு வீடு இலவசம் பண வினியோகம்.

இத்தனை இருந்தும் குறைந்த பட்சம் எதிர்கட்சியாக கூட வர முடியாத அளவுக்கு கருணாநிதியின் கட்சி தோற்கடிக்கப்பட்டிருக்கிறது. கருணாநிதியின் கட்சி தான். அண்ணாதுரை ஆரம்பித்த திமுகவுக்கும் கருணாநிதி அழகிரி ஸ்டாலின் தயாநிதி கனிமொழி குடும்பம் நடத்தும் கட்சிக்கும் அதிகம் தொடர்பில்லை. கரையான் புற்றெடுக்க கருநாகம் குடிபுகுந்த கதை நினைவில் வந்தால் நான் பொறுப்பல்ல.

ஐந்தே வருடம் மத்திய மந்திரியாக இருந்த ஒருவர் ஒரு லட்சம் கோடிக்கு மேல் ஊழல் செய்தது சமூக சேவை. அவர் மேல் வழக்கு போட்டால் அது பார்ப்பன சதி. ஆதிக்க சக்திகளின் சூழ்ச்சி. பட்டப்பகலில் பத்திரிக்கை அலுவலகத்தில் நுழைந்து மூன்று பேரை எரித்துக் கொன்ற பின்னர் கண்கள் பனித்தது இதயம் இனித்தது. கடன் வாங்கி பிஎஸ்ஸியும் பொறியியலும் படித்தவன் சென்னை மேன்ஷனில் தங்கி ஆயிரம் ரூபாய் சம்பளத்திற்கு அலைந்து கொண்டிருக்கும் போது கருணாநிதியின் பேரன்கள் நூறு கோடிக்கு படம் எடுப்பார்கள். ரெட் ஜெயண்ட் மூவிஸ், க்ளவுட் நைன் மூவிஸ், சன் பிக்சர்ஸ் என்று தங்கள் நிறுவனங்களுக்கு பெயர் வைத்து தமிழ் வளர்த்தது தனிக்கதை. எந்த நேரம் மின்சாரம் வரும் எந்த நேரம் மின்சாரம் போகும் என்று தெரியாமல் திணறிக் கொண்டிருக்கும் போது  கருணாநிதி ஏதேனும் பாராட்டு விழாவில் மூழ்கி இருப்பார். உன் உமிழ்நீர் அது தமிழ்நீர் என்று ஏதேனும் அல்லக்கை தமிழின் முகத்தில் மலத்தை கரைத்து ஊற்றிக் கொண்டிருக்கும்.

என்ன சொன்னாலும் காலை டிஃபன் முடித்து விட்டு மதிய உணவு நேரத்துக்குள் உண்ணாவிரதம் இருந்து உலக சாதனை புரிந்தவர் கருணாநிதி ஒருவர் தான். ஆணும் பெண்ணும் குழந்தைகளும் துரத்தி துரத்தி கொல்லப்படுவதைப் பற்றி கேட்டால் மழை விட்டாலும் தூவானம் விடாது என்று திமிரான பதில் வரும். கொத்து கொத்தாக கொல்லப்படுவது அவருக்கு தூவானம். கருணாநிதியின் தூவானத்திற்கு பின்னரே இரண்டு இனவெறி கொலைவெறி பேயரசுகளால் நாற்பதாயிரம் மக்கள் குடும்பம் குழந்தைகளுடன் ஒரே இரவில் கொன்று புதைக்கப்பட்டனர். இதையும் சில கொடூர மனம் கொண்ட அல்லக்கைகள் மறுக்க கூடும் என்பது வேறு கதை.

இந்த கருணாநிதி தான் இன்று மண்ணை கவ்வி இருக்கிறார்.  தன் மகனுக்கு இந்த இலாகா வேண்டும் மகளுக்கு மந்திரி பதவி வேண்டும் என்று டெல்லிக்கு ஓடி விட்டு தமிழ்நாட்டு மீனவன் சிங்கள இனவெறி அரசால் சுட்டு கொல்லப்பட்டு சடலம் கூட கிடைக்காவிட்டாலும் கடிதம் மட்டுமே எழுதும் கருணாநிதி தான் மண்ணை கவ்வி இருக்கிறார். நாடாளுமன்ற தேர்தல் வரை உண்ணாவிரதம் அறிக்கை என்று நாடகம் ஆடிவிட்டு குடும்பத்திற்கு மந்திரி பதவி வாங்கிய கருணாநிதி தான் மண்ணை கவ்வியிருக்கிறார். 

தன் மகளின் பெயரை சிபிஐ குற்றப்பத்திரிகையில் சேர்த்ததும் இலங்கை பிரச்சினையை தீர்மானம் போட்ட கருணாநிதியின் முகத்தில் தான் மண் அடிக்கப்பட்டிருக்கிறது. குடும்பம் குடும்பமாக கொல்லப்பட்டவர்களை கூட தன் ஊழல் குடும்ப அரசியலுக்கு கேடயமாக பயன்படுத்திய கருணாநிதியின் முடிவுரை தான் எழுதப்பட்டிருக்கிறது.

முடிவுரை தான்.  பண பலம் கூட்டணி பலம் ஊடக பலம்  மத்திய அரசு மாநில அரசு என்று அதிகார பலம் அதிகார வர்க்கத்தின் ஒட்டு மொத்த ஆதரவு என்று எல்லாம் இருந்தும் எதிர்கட்சி என்ற நிலையை கூட பெற முடியாத கேவலமான தோல்வி. போன தேர்தலில் கொசு என்று இவரின் கூட்டணிக் கட்சிகளால் வர்ணிக்கப்பட்ட அதே விஜயகாந்தின் கட்சியை விட கீழான நிலை. மக்களுக்கு இந்த நபரின் மீதான நம்பிக்கை முற்றிலும் அழிந்து போய்விட்டது. இரண்டாவது இடத்தை கூட இவருக்கும் இவரது மகன்கள், மகள்கள், பேரன்களுக்கு தர மக்களுக்கு விருப்பமில்லை. 

மிக நிச்சயமாக இது திமுகவின் முடிவு அல்ல. முடிவின் ஆரம்பம். நீதிக்கட்சி போல சோனியாவின் காங்கிரஸ் போல திமுக மெல்ல தேய்ந்து அழியும்.   மொகலாய பேரரசின் அழிவுக்கு அடிக்கல் நாட்டிய ஒளரங்கசேப் போல திமுகவின் அழிவுக்கு அடிக்கல் நாட்டிய பெருமகன் என்றே கருணாநிதியின் வரலாறு எழுதப்படும். 

பூம்புகார் வசனம் எழுதிய கருணாநிதிக்கு கண்டிப்பாக சிலப்பதிகாரம் தெரிந்திருக்கும். அப்படியே அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் என்ற கருதுகோளும். பகுத்தறிவின் போலி பகலவன்கள் மறுத்தாலும் இன்றில்லாவிட்டாலும் என்றாவது ஒருநாள் அறம் கூற்றாகும். ஆகட்டும்!

மழை விட்டும் தூவானம் விடவில்லை என்று சொன்ன அரசியல் சாணக்கியரே, உங்களுக்கான தூவானம் கூட இன்னும் ஆரம்பிக்கவில்லை. ஆனால் அறம் கூற்றாகும் எனில் மிக நிச்சயம் ஆரம்பித்து பெருமழையாக உம்மை மூழ்கடிக்கும். ஆகவே இப்பொழுதே சொல்லிக் கொள்கிறேன்.

குட்பை மிஸ்டர் கருணாநிதி!

==========================================================

Tuesday 19 April 2011

சொல்லக்கூடாத கதை


இலக்கில்லா பாதையின் 
முடிவிலா பயணத்தில்
வழிகள் பல உண்டு
என் வழி தனிவழி அல்ல
எனக்கு முன்னே பலர் தேய்த்த தடங்கள்
பின்னே வருபவனுக்கு என் தடம் எவனோ ஒருவனின் பாதம்.
வழிப்பயணத்தில் துணையாய்
வருகிறார்கள் போகிறார்கள்
என்னைக் கேட்டு வருவதில்லை
எத்தனை கேட்டாலும் போகாது இருப்பதில்லை.
வழிப்போக்கனின் வார்த்தைகள் 
காற்றில் வரைந்த கோடுகள்
கண்ணுக்கும் தெரிவதில்லை காதிலும் கேட்பதில்லை.

என் சுவாசம் தவிர காற்றில்லாத கால் இல்லாத மண்டபத்தில்
எவனோ ஒருவன் கதை சொல்ல ஆரம்பித்தான்.
அவனுக்கு முகம் இல்லை ஆனாலும் பல முகங்கள்.

எவருக்கும் சொல்வதில்லை.
இது சொல்லக் கூடாத கதை.
கேட்பவர்களுக்கு பிடிப்பதில்லை
ஆனாலும்
வழிப்பயணத்தில் எனக்கு நானே சொல்லும் கதை.
ஏனெனில் இது என் கதை.
உனக்கு மட்டும் ரகஸியமாய்.
உறுதியாய் சொல்கிறேன் உனக்கு ரசிக்காது.

எனக்கு பூனைகளை பிடிக்காது
ஆனாலும் பூனைகளுக்கு என்னை பிடித்தே இருக்கிறது.
ஒரு போதும் விட்டு விலகுவதில்லை.
எதிர்பாராத நேரங்களில் எங்கோ ஒரு பூனைக்குரல்.

முன்னம் ஒரு பழம்பூனையின்
முன்கால் நகம் தவிர்த்து
கால் நீட்டி நானிருந்தேன் ஒர் பின்னிரவில்.

எங்கிருந்தோ ஒரு பூனை
அடக்கமாய் அமைதியாய் என் அறையில்.
வெகு நேரம் கவனிக்கவில்லை
அதன் நகங்கள் என் முகம் கிழிக்கும் வரையில்.

எரிந்த கன்னம் தடவி 
கண் சுருக்கி பார்த்தேன்.
இரவில் வந்த பூனை இருட்டின் நிறம்.
குட்டையாய் வால்
உடைந்து போய் ஒரு கால்.
பின்புறத்தில் வால் நுழைத்து
தன் கால்களின் காயத்தை தானே நக்கியபடி.

பெரிய பூனையல்ல குட்டியுமல்ல.
அதன் தலை கொஞ்சம் பிளந்திருந்தது
யாரேனும் பலமாய் அடித்திருக்கலாம்.
பிரியமானவர்களின் கால் நக்க
வெறுப்பில் உதைத்திருக்கலாம்.
உரசுதல் பூனை குணம்.
உடலெங்கும் புழுதிப் படலம்
மண்ணில் இட்டு புரட்டியது போல.
தூக்கியெறியப்பட்ட பூனைகள்
என்னைத் தேடி வருகின்றன.
நூற்றாண்டு காலமாய் தீராப்பசியுடன் என்னை தின்று தீர்க்கின்றன.
எஞ்சிய எலும்புகள் பிறிதொரு நாள் வரும் பூனைக்கு.
விரும்பி அழைப்பதில்லை
ஆனாலும் அவை வாராதும் இருப்பதில்லை.

சில பூனைகள் தூக்கி எறியவென்றே பிறக்கின்றன.
இதுவும் அதில் ஒன்றாக இருக்கக் கூடும்.
பூனையின் இருப்பை மறக்கவில்லை.
மறக்கவும் கூடாத பூனையது.
நீண்ட வழி நடந்த வலி
கால்களெங்கும் பரவ கண்மூடி தூங்கிப் போனேன்.

விழித்தெழா வண்ணம் என் மீது பூனை படர்ந்திருந்தது
இரவில் சிறிதாய் இருந்த அதன் கால் நகங்கள்
ஒற்றை இரவில் பெரு வளர்ச்சி.

அதன் பற்கள் எனக்கு வெகுநாள் பழக்கம்
ஏற்கனவே பலமுறை 
இது மீண்டும் ஒரு முறை.
செய்யக் கூடியது ஏதுமின்றி
வெறுமனே நான் இருக்க
கண் உயர்த்தி பாத்த பூனை
புன்னகையுடன் தின்ன ஆரம்பித்தது என்னை.

சொல்லி வைக்கிறேன்
நீ கேட்க வேண்டிய அவசியம் இல்லை.
எவருக்கும் சொல்லாதே
இது சொல்லக்கூடாத கதை.

சொல்லி விட்டவன் எழுந்தான்.
என் முன்னே நீண்டது பூனையின் தடம்.

Monday 18 April 2011

கட்டுவிரியனின் குட்டி


மந்தையிலிருந்து பிரிந்த நொண்டி ஆட்டுக்குட்டி மிரண்டு நிற்பது போல பஸ் நிற்க வள்ளியூரெல்லாம் எறங்கு. கண்டக்டரின் குரலில் முன் சீட்டின் கம்பிகளில் அரைத் தூக்கத்தில் அழுந்தியிருந்த முகத்தை நகர்த்தி மடியிலிருந்த மஞ்சள் பையை எடுத்துக் கொண்டு இறங்கிக் கொண்டேன். மண்ணில் துளை தேடும் பூரான் போல பஸ் நகர்ந்து செல்ல வள்ளியூர் பஸ் ஸ்டாண்ட் இருண்டிருந்தது. பாலு அண்ணாச்சியின் டீக்கடை ஒரு சீனி மிட்டாய்க் கடை தவிர எல்லா கடைகளும் பூட்டி இருந்தன. தங்கசாமி ஓட்டல் சுவரில் சாய்ந்து ஒரு கிழவி தூங்கிக் கொண்டிருந்தாள். மடியில் முகம் வைத்து ஒரு சின்னப் பயல். பேரனாக இருக்கும். திருநெல்வேலிக்கு நேர் பஸ் கிடைக்கவில்லை. மெட்ராசிலிருந்து திருச்சி. அங்கிருந்து மதுரை. மதுரையிலிருந்து திருநெல்வேலி வந்து வள்ளியூருக்கு டவுன் பஸ் பிடித்து இவ்வளவு நேரம் ஆகிவிட்டது. வடலி விளைக்கு அடுத்த பஸ் எப்பொழுது என்று தெரியவில்லை.


பாலு அண்ணாச்சி கடைக்கு எதிர்ப்புறமாக பஸ் நின்றதில் நான் இறங்கியதை பார்க்கவில்லை போலிருக்கிறது. பார்த்தாலும் என்னை தெரியுமா என்று தெரியவில்லை. ஒரு வேளை தெரிந்தும் தெரியாதது போல இருக்கலாம். பாலு அண்ணாச்சி அப்பாவின் நண்பர். அண்ணாச்சி அண்ணாச்சி என்று அழைத்தாலும் பாலு அண்ணாச்சிக்கு கல்யாணம் கட்டி வைத்தது அப்பா தான் என்று அம்மா சொல்வாள். மாடு வாங்க போகணும். பரப்பாடி பக்கம். வெள்ளன வந்துடுன்னு புரோக்கர் சொல்லிருக்கான். அவனுவள நம்ப முடியாதுல்லா. ஏமாத்துறத தொழிலா பண்ணிட்டு இருக்கவனுவ. அதான் துரைய கூட்டி போகலாம்னு வந்தேன். நல்லா பல்லு பாப்பான்லா. அழுக்கு லுங்கியை தொடை வரை ஏற்றிக் கட்டி பாலு அண்ணாச்சி வாசலில் வந்து நின்றது ஞாபகம் இருக்கிறது. அப்பா இருந்த வரை அடிக்கடி வீட்டுக்கு வருவார். அப்போதெல்லாம் அவருக்கு தலையில் நிறைய முடி இருக்கும். இப்பொழுது வழுக்கையாக இருக்கிறது. அப்பா செத்து பத்து வருடமாகி விட்டது. பாலு அண்ணாச்சி இப்பொழுதெல்லாம் வீட்டுக்கு வருவதில்லை. பத்து வருடத்தில் இவ்வளவு வழுக்கையாகுமா என்று யோசித்துக் கொண்டே சீனி மிட்டாய் கடை பக்கத்தில் போய் நின்று கொண்டேன். கடை ஆள் என்னை பார்த்து விட்டு கையில் இருந்த பழைய பேப்பரை படிக்க ஆரம்பித்தான். பொட்டலம் கட்ட வந்த பேப்பராக இருக்கும். என் வயது தான். அனேகமாக கடை முதலாளியின் மச்சான். வடலி விளைக்கு பஸ் எப்பொழுது என்று கேட்கலாம்.

யோசித்துக் கொண்டே மஞ்சளான வெளிச்சத்தில் சீனி மிட்டாய்கள் குவித்து வைத்திருப்பதை பார்த்துக் கொண்டிருந்தேன். அப்பா இருக்கும் வரை எந்த ஊருக்கு போனாலும் ஓலைப் பெட்டியில் மிட்டாய் இல்லாது வர மாட்டார். அக்காக்களும் நானும் எத்தனை கருக்கல் ஆனாலும் இதற்காகவே முழித்துக் கொண்டிருப்போம். பெரிய அக்கா அவள் பங்கையும் எனக்கு தந்து விடுவாள். அவளுக்குத் தேவை டவுன் சோப்பு தான். நல்லா மணக்குது என்பாள். அவள் அப்படி தந்திருக்காவிட்டாலும் அவளை எனக்கு பிடிக்கும். வடலி விளையிலேயே ரொம்ப ஸ்டைல் என் அக்கா தான். அவள் சோட்டு பெண்கள் எல்லாம் நாலு நாளைக்கு ஒரு முறை குளிக்கும் போது அக்கா குளிக்காமல் இருந்து நான் பார்த்ததே இல்லை. அப்பா செத்த மறுவாரம் குளித்து விட்டு அம்மாவுடன் வந்து வள்ளியூரில் தான் பீடி இலை வாங்கி வந்தாள். இன்னமும் சுத்திக் கொண்டிருக்கிறாள். இப்பொழுது அவள் தூரத்தில் வரும் போதே பீடி நாற்றம் அடிக்கிறது. நாலு வருடமாக சின்ன அக்காவும் பீடி சுத்த ஆரம்பித்து விட்டாள். அவள் மீதும் அதே நாற்றம். வீடே பீடி நாற்றம் அடிக்கிறது. போன வாரம் வந்த வாகைக் குளம் மாப்பிள்ளை பீடி சுத்துற பொண்ணுன்னா சேத்து வச்சிருப்பா. நாப்பது பவுன் போட்டு அவள வெளிய திருவ கூட்டி வர வண்டி வாங்கி தர்றதுன்னா கெட்டிக்கிறேன் என்றார். அக்காவிடம் இருவது பவுன் இருக்கிறது. அதையும் அடகு வைத்து தான் அம்மையை டவுன் ஆஸ்பத்திரியில் வைத்து பார்த்தாள். அம்மைக்கு நெஞ்சிழுப்பு. நட்ட நடு ராத்திரியில் மூச்சை இழுத்துக் கொண்டு பேச்சு மூச்சில்லாது பிணம் போல் கிடந்தாள். அக்கா மட்டும் பார்த்திருக்காவிட்டால் அம்மைக்கு இன்னேரம் சோலி முடிந்திருக்கும்.

ஒரு சீனி மிட்டாய் தின்றால் நல்லாருக்கும். நினைத்துக் கொண்டே பாக்கெட்டை தடவி பார்த்தேன். ஒரே ஒரு அஞ்சு ரூபாய் இருக்கிறது. கண்டக்டர் கொடுத்த என்னை மாதிரியே கிழிந்த அழுக்கான அஞ்சு ரூபாய். மெட்ராஸ் மாமா கொடுத்ததில் மிச்சம். பதினாலு வயசாகுது இன்னும் பிராந்தன் மாதிரி உன்  சேலைய புடிச்சிக்கிட்டே திரியறான். என் கிட்ட அனுப்பு நான் வேலை எடுத்து வைக்கேன். ஒங்கம்மல்ல என்ன படிக்க போட்டா. நான் எங்கடமைய செய்யனும் பாத்துக்க. அவர் சொல்லி தான் அக்கா அனுப்பி வைத்தாள். துணிக்கடையில் வேலை. மாசம் தொள்ளாயிரம் சம்பளம்.  டீ நகரில் துணிக்கடை. மாமா வீடு மாம்பலம். மாசா மாசம் முன்னூறு கொடுத்தால் மாமா வீட்டிலயே தங்கிக் கொள்ளலாம். மதிய சாப்பாடு கடையில் கொடுப்பார்கள். அது தான் நல்ல சோறு. காலையில் சாப்பிட நேரம் இருக்காது. கடையை மூடி விட்டு வர கருக்கல் ஒரு மணி ஆகும். வீட்டில் கணியாகுளத்துக்காரி சோற்றில் தண்ணீர் ஊற்றி வைத்திருப்பாள். அத்தையை கணியாகுளத்துக்காரி என்று தான் அக்கா சொல்வாள். கூடவே ஊறுகாய் இல்லாவிட்டால் உப்பும் மிளகாயும். அதை தின்று விட்டு படுத்தால் காலையில் பல்லை விளக்கி விட்டு நடந்தே துணிக்கடை போய் விடலாம்.

பக்கத்து நகைக் கடையில் நகை சீட்டு சேர்ந்திருக்கிறேன். மாசம் இரநூறு கட்டியது போக மூணு மாசத்தில் அக்கா பேருக்கு ஆயிரத்து ஐந்நூறு அனுப்பி இருக்கிறேன். இன்னும் ரெண்டு சீட்டு போட்டால் நாலு வருசத்தில் அஞ்சு பவுன் சேர்க்கலாம். கடன் வாங்கியாவது சின்ன அக்கா கல்யாணம் பேசலாம். கணியாகுளத்துக்காரியின் மவன்காரனுக்கு எட்டாப்பு பரிட்சை வரும் வரை எல்லாம் சரியாகத் தான் போனது.

ரெண்டு வாரத்துக்கு முன்னே அவள் ஆரம்பித்து விட்டாள். படிக்க புள்ளைய இருக்க எடத்துல பிராந்தன கொண்டாந்துல்லா வச்சிருக்கு. நாலெழுத்து படிச்சவனுவன்னா தெரியும். இவன் அம்மைக்கு சீல துணி தொவைச்சி போட்டவன். இவனுக்கு வடிச்சி கொட்டணும்னு என் தலைல எழுதி வச்சிருக்காம்ல. கொற மாசம் பார்ப்பன். இவன் போகாட்டி நான் கெளம்பி போய்டறேன். எம்மொவனை படிக்க வைக்க எனக்கு தெம்பிருக்கில்லா. இப்பம் சொல்லுதன். ஒமக்கு ஒம் மொவன் படிக்கணுமா இல்ல உம்ம அக்கா மொவன் இங்க இருக்கணுமா முடிவு பண்ணிக்கும். நாள பின்ன பல்லுல நாக்க போட்டு ஒரு சொல்லு சொன்னீருன்னா நாக்க அறுத்துப்புடுவன். ஒம்ம மாதிரி வடலிவெளை சீன்ரம் புடிச்ச குடும்பம் இல்ல பாத்துக்கிடும்.

இன்றை காலை எழும்போதே மாமா எழுந்திருந்து என்னை பார்த்து என்னடே கெளம்பிட்டியா என்றார். இந்த மாசம் முடிஞ்சா வேற பெல்ட் வாங்கணும். நான் லூசாகி இருந்த பேண்ட்டை இறுக்கிக் கொண்டே ஆமா மாமா, லேட்டாகிடுச்சில்ல. இருக்கட்டும்டே, நான் உங்க மொதலாளிட்ட பேசிட்டேன். ஒனக்கு இங்க சரிப்படாது பாத்துக்க. நான் பம்பாயில வேல எடுத்து வச்சிட்டு சொல்லுதேன். நீ ஊர்ல போய் இருடே. இன்னா, ஊருக்கு போக காசு. ஒம் பைய எடுத்துக்கிட்டு கடைக்கு போ. அங்க பக்கத்துல தான பஸ் ஸ்டாண்டு. கருக்கல்ல பஸ் பிடிச்சா விடிய விடிய வள்ளியூர் போய்டலாம். அம்மைய கேட்டதா சொல்லு. கருத்தா போவணும் பாத்துக்க. பிராந்தன் மாதிரி நிக்காத.

நின்று கொண்டே இருந்ததில் எனக்கு முழங்கால் வலித்தது. மெட்ராஸிலிருந்து கால் நீட்ட முடியாமல் வந்தததால் இருக்கலாம். தங்கசாமி ஹோட்டல் மூடி இருந்தாலும் பரோட்டா குருமா வாசம் வந்தது. மதியம் சாப்பிட்டது. நான் மெதுவே நடந்து ஹோட்டலின் பக்கம் வந்தேன். கிழவி சுவற்றில் சாய்ந்து வாய் ம் பிளந்து தூங்கிக் கொண்டிருக்க இடுப்பில் சுருக்குப்பை நீட்டிக் கொண்டிருந்தது. நான் அவள் அருகில் உட்கார்ந்து சுருக்குப்பையில் இருந்த காசை எடுத்துக் கொண்டேன். சில நூறு ரூபாய் தாள்கள், சில இருவது ரூவாய், கசக்கி மடித்து கிழிந்து போன ஒரே ஒரு அஞ்சு ரூபாய் தாள். இங்கிருந்து என்னை பாலு அண்ணாச்சி மட்டுமே பார்க்க முடியும்.

மீண்டும் வந்து நின்ற என்னை மிட்டாய் கடை ஆள் ஆர்வமின்றி பார்த்து “என்ன வேணும்வே?”. நான் அவனிடம் இரண்டு அஞ்சு ரூபாய் கொடுத்து “பத்துரூவாக்கு முட்டாய் கட்டு” என்று சொல்லி பழைய பேப்பரில் அவன் பொட்டலம் கட்டி கொடுத்த சீனி மிட்டாய்களை வாங்கிக் கொண்டேன்.

தங்கசாமி ஓட்டலின் பக்கம் போகாது மூத்திர நாத்தம் அடிக்கும் சுவற்றின் பக்கமாக பஸ் ஸ்டாண்டை விட்டு வெளியே வந்து மிட்டாய் பொட்டலத்தை பிரித்து தலையும் வாலுமாக சுருண்டு இருக்கும் கட்டுவிரியன் குட்டிகள் போல இருந்த சீனி மிட்டாயை கடித்துக் கொண்டே நான் இருட்டில் நடக்க ஆரம்பித்தேன்.
======================================

Tuesday 5 April 2011

ஓர் இரவு


அதாவது நீங்காப் பெருவெளியை புறந்தள்ளி நீல நிழல்களை கடந்து அங்கே ஒரு எறும்பின் துதிக்கை பிடித்து தொங்கும் போது அது துதிக்கை இல்லை அறுந்து விழுந்த பல்லியின் வால் என்று தெரிந்து அதை கையோடு எடுத்துக் கொண்டு எதிரில் வந்த ஏசுவை பார்த்து குட் மார்னிங் சொல்லிவிட்டு செல்லும் கவிதை பற்றி ஜி நாகராஜன் என்ன சொல்றாருன்னு கோணங்கியை கேட்டா அவரை ஏன் கேக்கறீங்க சுஜாதா எதுவுமே எழுதலைன்னு ஜெயமோகன் சத்தம் போடற அதே டைம்ல உத்தம தமிழ் எழுத்தாளன் குற்றாலத்துல குளிச்சதுக்கு காரணமே நான் தான் அப்படின்னு சாரு டவுசரை அவரோட டவுசரை தான் அவுத்துட்டு சொல்றப்ப கோணங்கி அப்படியெ மெரண்டு போயி தருமு சிவராமு கைய பிடிச்சிண்டு நகுலனோட வீடு எங்கன்னு கேட்டா அவரு காட்டுனது இந்திரா பார்த்தசாரதியோட வீடுன்னு நான் சொன்னேன்.

ரொம்ப நாளா ஆளையே காணோம். நேத்து சுப்புணி திடீர்னு வீட்டுக்கு வந்து ஏண்ணா நல்லா கருவாட்டு கொழம்பு வைப்பேளான்னு கேக்கரான் கடங்காரன். ஒரு எழுத்தாளனை பாத்து கேக்க வேண்டிய கேள்வியாய்யா இது? அப்படின்னா ஒனக்கு கருவாட்டு கொழம்பு வைக்கத் தெரியாதான்னு எனக்கு ஈமெயில் வருது. என்ன எழவுடா இது. எனக்கு கருவாட்டுக் கொழம்பு வைக்கத் தெரியும்னு நான் என்ன போஸ்டர் அடிச்சா ஓட்ட முடியும்?

இவங்களோட இதே எழவா போச்சின்னு வெளிய கெளம்புனா அங்க கருணாநிதி வந்திட்ருக்காரு. அவரு பாடு என்னை விட மோசம். எம் பையனை கொலைகாரன்னு சொல்லிட்டாங்க, கொலைகாரன்னு சொல்லிட்டாங்கன்னு ஒரே பொலம்பல். என்னை இருந்தாலும் தெரிஞ்சவா பாருங்க. என்னங்கய்யா ஆச்சுன்னு கேட்டேன்.

யதா யதா யதாய. அபிஷ்ட்டு. நான் சொல்லலை. மஹாபாரதத்துல கிருஷ்ண பரமாத்மா சொல்றார். அவரு ஆயிரஞ் சொல்வார். ஒமக்கென்னவோய். அதில்லங்காணும். விதி விதின்னு சொல்றால்லியா. அதான். என்னங்கய்யா ஆச்சுன்னு கருணாநிதிய கேட்டா அவரு ஒரு பாட்டம் பொலம்பி தள்ளிட்டு துணிஞ்சவனுக்கு சுடுகாடு. தள்ளாடுறதுக்கு தமிழ்நாடு. தம்பி வா. டாஸ்மாக்கு போகலாம் வான்னு கூப்ட்டாரு. இதுக்கே அசந்து போயிடாதேள். தா கிருஷ்ணன் தானே வெட்டிண்டு செத்தாருன்னு சொல்லிட்டாருன்னா என்ன பண்ணுவேள். அவா சொன்னா அப்பீலு ஏதுன்னேன். குடும்பத்துக்கு பெரியவா இல்லியோ?

தமிழர்கள் கலையுணர்வு இல்லாத மொன்னைகள். ஃப்ரான்ஸில் யாரும் டாஸ்மாக்கில் குடிப்பதில்லை. நான் டப்ளின்ல மட்டும் தான் குடிப்பேன்னு சாரு சண்டைக்கு வந்துட்டார். அவரு கைல டவுசர் வேற. அந்த டவுசரை போட்டா தான் உங்களுக்கு அடுத்த நோபல் பரிசுன்னு சொல்லிட்டேன். நிஜமா சொல்றியா நிஜமாவே சொல்றியா அப்ப அடுத்த நோபல் எனக்கு தான்னு என்னோட எல்லா ஃப்ரண்டுக்கும் சொல்லிடவான்னு அவரு ஒரே அஜால் குஜால் மூடுக்கு வந்துட்டாரு.

அடிக்கடி அதை கழட்டி ஆட்டாதேள். நாத்தம் பிடுங்கறதுன்னு சொன்னா யூ ஃபக்கர்னு சாரு திட்ட ஆரம்பிச்சிட்டார். ஷிவாஸ் ரீகல்னு சொன்ன பின்னாடி தான் அடங்கினார் போங்கோ. ஆனா விதி யாரை ஓய் விட்டது? சிவனே வெறும் கோமணத்தோட அலைஞ்சாரு இல்லியோ?

எல்லாரையும் கூட்டிண்டு டாஸ்மாக் போனா கூட வர்றது கருணாநிதின்னு அங்க எல்லா பேருக்கும் தெரிஞ்சு போச்சு. என்ன இருந்தாலும் கடை முதலாளி இல்லியோ. அதனால அவருக்கு பிடிச்ச கேசட்டு போட ஆரம்பிச்சிட்டா. மாதமோ சித்திரை, மணியோ பத்தரை, மறக்காது எமக்கு இடுவீர் முத்திரைன்னா அது துரை முருகன் சொல்றார். நம்ம டி.ராஜேந்தர் எப்பிடில்லாம் எழுதிருக்கார் பார்த்தீங்களா தலைவரேன்னு.

நாசமா போச்சு. அய்யா அது அண்ணா துரை இல்லியான்னு நான் கேட்டா துரை முருகனுக்கு செம குழப்பம். என்னா துரையா...அண்ணன் எப்ப வந்தாரு..ஒருத்தரும் ஒண்ணும் சொல்லலியேன்னு அழகிரி பையனை தேட ஆரம்பிச்சிட்டார். ஒரே எழவு போங்கோ.
இங்க இத்தனை குழப்படி நடக்குது. பக்கத்துல ஒரு ஆளு உக்காந்து அவரு பாட்டுக்கு குடிச்சிண்டு இருந்தார். மக்களுக்கு சொரணையே இல்ல பாருங்கோ. எனக்குன்னா பத்திண்டு வர்றது. என்னவோய் எருமை தண்ணி குடிச்சா மாதிரி குடிக்கறேள்னு கேட்டுட்டேன். அதுக்கு அவரு சொல்றாரு, எம் பேரு குமாரு. குவாட்டர் குமாருன்னு.

குமாருன்னா என்னவோய். என்ன நடந்தாலும் குடிப்பேளான்னு கேட்டுட்டேன். அவரு குவாட்டர் பாட்டிலை காலி பண்ணிண்டு அந்த கடங்காரன் வடிவேலு மாதிரி அவ்வ்வ்னு அழ ஆரம்பிச்சிட்டார். அழுதுண்டே சொன்னது. இப்ப தான் என்னை எல்லாரும் குவாட்டர் குமாரு குவாட்டர் குமாருன்னு கூப்பிடறா. அதுலயும் சில நீசாள் குவாட்ட்ருன்னுன்னு சொல்றா. என்னோட பேரு குமரன். எங்காப்பாருட்ட ஒரு மாம்பழம் கேட்டேன். அந்தாளு எப்பவுமே ஒன் சைடு. எங்கண்ணனுக்கு கொடுத்துட்டான். அன்னைக்கு கடுப்பாயி அடிக்க ஆரம்பிச்சவன் இன்னை வரைக்கும் அடிச்சிட்டே இருக்கேன். என்னைய யாரும் புரிஞ்சிக்க மாட்டேங்குறா மாங்கா ஊறுகா கூட கிடைக்க மாட்டேங்கிறதுன்னு புலம்ப ஆரம்பிச்சிட்டான்.

விதின்னு சொன்னா யாரு நம்பறேள். குமரனோட விதி அன்னைக்கு அப்படி இருந்துருக்கு. பின்ன என்ன ஓய்? அவரு சொல்லி முடிச்சதும் என்டர் ஆனது ஜெயமோகன். சாருவை தேடி வந்தவரு குமரனை கண்டதும் குஜால் ஆகிட்டார்.

அப்பனுக்கு சொன்ன சுப்பனா இருந்தா ஜெயமோகனுக்கு என்னவோய்? சுஜாதாவையே எழுத தெரியுமான்னு கேட்டவரு.சுப்பனை விடுவாரா. இது தாண்டா இந்து ஞான மரபுன்னு பறந்து பறந்து அடிக்க ஆரம்பிச்சிட்டார். அவரு ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட்டு, தெரியுமோல்லியோ?

வெயிட்டுன்னா விஷ்ணுபுரம்னு நினைச்சிடாதேள். அந்த வெயிட்டு விழுந்தா மனுஷா பொழைப்பாளா? நசுங்கிப் போய்டுவா ஓய். காலத்தை வட்டமின்னு சொல்றேளே நேக்கு புரியலைன்னு ஜெயமோகண்ட்ட கேப்பாளா ஓய்? இல்ல தெரியாம தான் கேக்குறேன் கேப்பாளா? இதாண்டா அதுன்னு சுத்தி சுத்தி அடிக்க ஆரம்பிச்சுட்டார். நேக்கே கண்ணை இருட்டிண்டு வந்தது போங்கோ.

இவ பண்ண கூத்துல குடலு கலங்கி போயிருக்கச்ச ட்வீட்டர்ல மெசேஜ் வருது. லெதர் பார்ல இருக்கேன். மயில் கால் சூப்பு வச்சிருக்கான் பாருங்க. நாகூர்ல கூட நான் இப்படி சாப்பிட்டதில்லை. முழு மயிலை அப்படியே உப்பு, பச்சை மிளகாய் தடவி சுட்டு கொடுக்கிறார்கள். எழுத்து தான் என் உயிர். நான் வெளிய எட்டிப் பார்த்தே நாலு நாளாச்சி. இப்பொழுது கூட கேரள கிழமூதிக்கு எட்டு கட்டுரை எழுதிக்கிட்டு தான் இருக்கேன்னு மெஸேஜ். என்னடா இதுன்னு பார்த்தா சாரு. இவரு இங்கன்னா இருக்காரு. அப்புறம் என்ன லெதர் பாருன்னு அவராண்ட போய் கேட்டுட்டன்.

அவரு சொல்றாரு. நான் இந்த வேலிமுட்டி, கள்ளு, பட்டசரக்கு எல்லாம் அடிப்பேன். அதில்லங்காணும் இங்க எங்க லெதர் பாரு வந்துச்சின்னேன். அதைக் கேட்டா நான் பாரிஸ் போனப்ப பாரிஸ் கார்னர் இல்லவோய் பாரீசு பிரான்ஸ் பக்கத்துல இருக்குன்னார். சரி போனப்ப அங்க ஒரு லேடி மெட்ரோல மூத்திரம் அடிக்குது. நான் அந்த மூத்திரத்தை முத்தமிடுகிறேன்னு சொல்றாரு. அய்யே அந்த கருமத்துக்கு எதுக்கு அவ்வளவு செலவு பண்ணுவானேன்? மெட்ராஸிலயே செய்யலாமேன்னேன். இது ஒரு தப்பா ஓய். அப்படின்னா நீ தேகம் படின்னு சொல்லிட்டு அவரு மயில் தலையை கடிக்க ஆரம்பிச்சுட்டார். என் மூஞ்சில விளம்பர போஸ்டர் ஒட்டலையோன்னோ அதுவரைக்கும் சந்தோஷம் போங்கோ.

பெருமாளே இதுக்கு மேல நம்மாள முடியாதுன்னு ஒரு ஓரமா ஒளிஞ்சிக்கலாம்னு போனா அங்க ஒருத்தர் டேபிளுக்கு கீழ உக்காந்து ஆட்டுக்காலை கடிச்சிண்டு இருக்கார். துஷ்டன்னு நினைச்சிண்டே எனக்கு ஓட்டை வாய் கேட்டேளா துஷ்டன்னு நினைச்சிண்டே என்ன ஓய் இங்க உக்காந்திருக்கேள் அப்படின்னா அவரு சொல்றாரு நான் எஸ்.ரா. என்ன நடந்தாலும் கண்டுக்க மாட்டேன்னு. இதென்னடா எழவா போச்சின்னு பார்த்தா காலை தூக்கி காமிச்சி அவரு காலு இல்லவோய் ஆட்டுக்காலு ஆட்டுக்காலை தூக்கி காமிச்சி இது பழனி மலை ஆடு அப்படின்னார். எனக்கு கேடு காலம் பாருங்கோ. மலைல நின்னு உங்களுக்காக பாலே நடனம் ஆடுச்சே அந்த ஆடான்னு கேட்டுட்டேன். அம்மா செஞ்சா அடை பாட்டி சுட்டா வடை அதை சுட்டுடுச்சி ஒரு நரி இந்த கதை அதோட சரி அப்படிங்கிறார். எங்காத்துக்காரி அடை செஞ்சா எருமை சாணில தட்டின வறட்டி மாதிரின்னா இருக்கும்னு நினைச்சிண்டே படுத்தாதீங்க வோய்னு சொல்லிட்டேன். விடுவாரா? அவரு விடுவாரா? விட்டா என்ன எஸ்ரா அது வெறும் ரா. நான் உறுபசில இருக்கேன். கீழ கிடந்த ஒரு இலையை வச்சே ஒம்போது பக்கத்துக்கு கட்டுரை எழுதுவேன். இன்னைக்கு இவ்ளோ பெரிய காலு அதுவும் ஆட்டுக்காலு சிக்கிடுச்சி. அடுத்து வருது பாரு பத்தாயிரம் பக்கத்துக்கு என்னோட புக்கு. ஒனக்கு மட்டும் சொல்றேன். அதுக்கு டைட்டிலு பெரும்பசி. முன்னுரையே முன்னூறு பக்கத்துக்குன்னார். நேக்கு பீதியில பசியே அடங்கிப் போச்சு.

கருவாட்டு கொழம்பு வைக்கலாமான்னு எந்திரிச்சா கருணாநிதி ரொம்ப கோவமா முன்னாடி நிக்கிறாரு. உளியின் ஓசை தந்த இடிச்ச புளி இப்படி நிக்கலாமாங்கய்யான்னு கேட்டேன். நான் தான் சொன்னேனில்லையோ எனக்கு ராகு எட்டுல சட்டமா உக்காந்துட்டான். நான் யானை இவன் எறும்பு. என்னை இலக்கியவாதியில்லைன்னு சொல்லிட்டான்னு ஜெயமோகனை பார்த்து ஒரே சத்தம். இல்லைங்கய்யான்னு நான் சொல்ல வாய் தான் திறந்தேன். இதெல்லாம் அவா சதி நீ போய் பெண் சிங்கம் பாருன்னார். எனக்கு ஏழரைல சனி எட்டுல ராகு. எப்படி விடும். அதில்லைங்கய்யா குமரிமுத்து இலக்கியவாதின்னா நீங்களும் பெரிய இலக்கியவாதிதாங்கய்யான்னு சொல்லிட்டேன்.

அதுக்குள்ள டாஸ்மாக்கை மூட ஆரம்பிச்சிட்டா. அப்பாடா இன்னைக்கு தப்பிச்சோம்னு நினைச்சா ஒரு ஆட்டோ வந்து நின்னது. இதென்னான்னு பார்த்திண்டு இருக்கும் போதே ஜெயமோகன் யார்ட்டயோ போன்ல சொல்றார். இவய்ங்களை ஊட்டி குருகுலத்துக்கு அனுப்பி வைக்கிறேன். அங்க வச்சி கவனிச்சிக்கோன்னு. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.