Sunday 3 January 2010

சாரு நிவேதிதாவும் மதன்பாப்பும், பதிவுலகும் கொஞ்சூண்டு இலக்கியமும்....

டிசம்பர் முப்பத்தொன்னு இரவுக்குள் குறைந்த பட்சம் நூறு பேருக்காவது புத்தாண்டு வாழ்த்து சொல்லாவிட்டால் உன் வீட்டில் சன் டிவி தெரியாது என்று எந்த சாமியாராவது கிளப்பி விட்டு விட்டானா என்று தெரியவில்லை....எத்தனை பதுங்கினாலும் விடாது கறுப்பு ரேஞ்சுக்கு கொலை வெறியோடு துரத்தி துரத்தி வாழ்த்து சொல்ல ஆரம்பித்து விட்டார்கள்.....டிசம்பர் 31 இரவு என்றால் ஹாப்பி நியூ இயர் சொல்வதை தவிர யாருக்கும் வேறு எந்த வேலையும் இருக்கக் கூடாது என்று நினைக்கிறார்களோ என்னவோ ஃபோனை எடுக்காவிட்டால் திருப்பி சொல்ல டீஸன்ஸி கூட இல்லையா என்ற பேச்சுக்கள் வேறு...

வருடம் முழுவதும் எந்த தொடர்பும் இல்லாமல் திடீரென்று நள்ளிரவில் ஹாப்பி நியூ இயர் என்று மெஸேஜ் அனுப்புபவர்களை நினைத்தால் எரிச்சல் தான் வருகிறது....ஒரு ந(ண்)பர் இன்னும் சில படிகள் மேலே போய் ஈமெயிலில் எனக்கும் குடும்பத்திற்கும் வாழ்த்து அனுப்பி வைத்திருந்தார்.....ஆனால் டூ அட்ரஸில் என் பெயரே இல்லை....அவர் பெயர் மட்டுமே இருக்கிறது...க்ரூப் ஈமெயில்...இவர்களிடம் எல்லாம் எனக்கு ஹாப்பி நியூ இயர் சொல்லு என்று எவன் கேட்டான் என்று தெரியவில்லை...தேமேயென்று தெருவோடு போய்க் கொண்டிருப்பவனை "ஏய்...இங்க பிச்சை போட்டுக்கிட்டு இருக்கோம்ல...நீ பாட்டுக்கு போய்க்கிட்டுருக்க...இந்தா அஞ்சு காசு...நல்லா இரு" என்று வன்முறையாக பிச்சை போடுவது போல வக்கிரமாக இருக்கிறது....

ஆதலால் இதைப் படிக்கும் நண்பர்களே...இனிமேலாவது க்ரூப் ஈமெயில், க்ரூப் மெஸேஜ் அனுப்பி என்னை புதுப் பிச்சைக்காரனக்காதீர்கள்...ப்ளீஸ்...உங்கள் வாழ்த்துக்கள் இல்லாது நான் ஒன்றும் மனம் உடைந்து போய்விட மாட்டேன்...

=======================

முந்திய இரவின் எரிச்சலுடன் மறுநாள் தமிழ்மணத்தை திறந்தால் தமிழ்மண விருதுகளில் முதற்கட்டத்தை கடந்தவர்களின் பட்டியல்....கிட்டத்தட்ட எல்லாப் பிரிவுகளிலும் நான் ஓட்டுப் போட்டவர்களின் பெயர்கள்....ஏய் எங்காளு ஜெயிச்சிட்டாருல்லன்னு பயங்கர சந்தோஷம்...

ஆனாலும், படைப்பிலக்கியம் (கதை, கவிதை போன்றவை) பட்டியலில் எதிர்பார்த்தபடியே நான் ஓட்டுப் போட்ட நபரின் பெயர் இல்லை...இந்தப் பிரிவுக்கு நான் எழுதிய நான் கடவுள்.... அனுப்பி வைத்திருந்தேன்...முட்டை ஓட்டு வாங்கி, "தமிழ்மண சரித்திரத்திலேயே" என்ற வரலாறு படைக்க விருப்பமின்றி எனக்கு நானே ஓட்டுப் போட்டதால் இந்தப் பிரிவில் நான் ஓட்டளித்த நபரின் பெயர் இல்லாதது புரிந்து கொள்ளக் கூடியதே...

ஆனால், அதே பிரிவில் டாக்டர் தேவன் மாயம் எழுதிய‌ தலையணை மந்திரங்கள் 16 என்றொரு இடுகை தேர்வாகியிருக்கிறது.....மூன்று ரவுண்ட் விஸ்கி அடித்து விட்டு ரூம் போட்டு யோசித்தாலும் இந்த இடுகை இலக்கியமா இலக்கியமானால் என்ன விதமான இலக்கியம் என்று இது வரை எனக்கு புரியவில்லை...உண்மை தான்...நான் அதிகம் வாசித்ததில்லை...பதிவர்களில் பலரும் படித்திருக்கும் சுஜாதாவை கூட நான் வாசித்ததில்லை...சில சமயங்களில் அவரின் கற்றதும் பெற்றதும் தவிர...ஒரு வேளை குடிக்கும் நேரத்தில் எதையாவது படித்திருந்தால் தலையணை மந்திரங்கள் எந்த வகையில் இலக்கியமாகிறது என்று புரிந்திருக்குமோ என்னவோ...

தேர்வாகாதவனின் வயிற்றெரிச்சல், காய்த்த மரம் தான் கல்லடி படும் என்று சொல்பவர்களோ இல்லை இந்த இடுகைக்கு இலக்கியம் என்று ஓட்டுப் போட்ட பதிவர் பெருந்தகைகளோ இல்லை எழுதிய தேவன் மாயம் அவர்களோ இது எந்த வகையில் இலக்கியமாகிறது என்று அறியத் தந்தால் மிக்க தன்யனாவேன்...

இது இலக்கியமாகும் பட்சத்தில் ஜெயமோகன் சொல்வது போல ராஜேஷ்குமாருக்கு சாகித்ய அக்காடமி விருது தரப்பட வேண்டும் என்பது எனது கோரிக்கை...அகாடமி மனசு வைக்குமா என்று பார்க்கலாம்...

============================

பார்க்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருப்பது புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் ஜெயமோகன் குறித்து சாரு நிவேதிதாவின் பேச்சு... ஜெயமோகனை பற்றி அவர் என்ன சொல்லியிருந்தாலும் இலக்கியவாதி என்று அறியப்படாத மதன் பாப்பையும், தமிழ் படிக்கத் தெரியாத ஷாஜியையும் புத்தகத்தை படிக்காவிட்டாலும் எதையாவது வந்து பேசுங்கள் என்று சொல்லியிருப்பதன் மூலம் சாரு தமிழ் இலக்கிய சூழல் பற்றி மிக அழுத்தமாக ஒரு ஸ்டேட்மெண்ட் விடுத்திருக்கிறார் என்றே நினைக்கிறேன்...சரியான ஸ்டேட்மென்ட் தான்! =============================

இலக்கியமென்றால் என்னவென்றே தெரியாது என் புருஷனும் சந்தைக்குப் போனான் கதையாக எல்லா போட்டிக்கும் எதையாவது அனுப்பி வைத்து அமைப்பாளர்களை இம்சை செய்வது எனக்கே கஷ்டமாக இருப்பதால் இனி எந்த போட்டிக்கும் எதையும் அனுப்ப வேண்டாம் என்று முடிவெடுத்திருக்கிறேன்...நியூ இயர் ரிசல்யூஷன்!

அதை மட்டும் நிறுத்தினா எப்படி...நீயெல்லாம் எழுதுறதையே நிறுத்திட்டா பதிவுலகத்துலருந்து பாதாள லோகம் வரை எல்லாரும் நல்லாருப்பாங்க என்று சொல்கிறது வேதாளம்....அது கொஞ்சம் நம்பியார் டைப் தான் என்றாலும் காது வரை குடித்து விட்டு கண் கொஞ்சம் மங்கலாக தெரியும் போது அது உண்மை மட்டுமே பேசித் தொலையும் என்பதால் அதையும் தீவிரமாக யோசித்துக் கொண்டு தான் இருக்கிறேன் என்பது பதிவுலக வாசகர்களுக்கான புத்தாண்டு நற்செய்தி!