
யாமம் மனித மனம் என்னும் அளக்க முடியாத இரவின் கதை. வெறும் சதுப்பு நிலமாக இருந்து பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்டு பிரம்மாண்டமான நகராக வளர்ந்து நிற்கும் மதராப்பட்டிணம் என்ற சென்னையின் ஆதிக் கதை. அந்த மதராப்பட்டினத்தின் மனிதர்களின் கதை.
ஒன்றுடன் ஒன்று தொடர்பில்லாத நான்கு கதைகள். யாமம் எனும் அத்தர் தயாரிக்கும் அப்துல் கரீம் அத்தரின் தயாரிப்பு ரகசியத்தை விட்டு செல்ல ஆண் மகவு இல்லையே என்ற உளைச்சலில் குதிரைப் பந்தயத்தில் ஈடுபட்டு கடைசியில் அத்தர் தயாரிப்பையே விட்டு தலைமறைவாகிறார். அவருடன் அத்தர் தயாரிப்பும் அழிகிறது. அத்தர் வாசனையில் வாழ்ந்த அப்துல் கரீமின் மூன்று மனைவிகளும் பெண் குழந்தையும் மீன் விற்று வாழும் நிலை வருகிறது.
பிரிட்டிஷ் அரசின் நில அளவை குழுவில் வேலை பார்க்கும் பத்ரகிரி. தாயின் மறைவுக்குப் பின் தந்தையால் விரட்டப்பட்டு சித்தியிடம் வளர்ந்து நிற்பவன். தம்பி திருச்சிற்றம்பலத்திற்கு பத்ரகிரி தான் தந்தை நிலையில் இருந்து வளர்க்கிறான். லண்டனுக்கு மேல்படிப்பு படிக்கவும் வைக்கிறான். ஆனால் ஏதோ ஒரு கணத்தில் நிலை மாறி தம்பியின் மனைவியுடன் உறவு ஏற்பட்டு ஒரு குழந்தைக்கும் தந்தையாகிறான்.
தாய் வந்து கெஞ்சியும் போகாமல் எந்த ஒரு இடத்திலும் தங்காமல் நீலகண்டம் என்ற நாயின் பின்னால் அது செல்லும் இடத்துக்கெல்லாம் செல்லும் சதாசிவ பண்டாரம். கடைசியில் மதரா பட்டினத்திற்கு வந்து பட்டினத்தார் சமாதியில் தானும் சமாதி ஆகிறது.
பங்காளியுடன் நிலத்தகராறில் கிருஷ்ணப்ப கரையாளர். எலிசபெத் என்ற தாசியுடன் காதல் ஏற்பட்டு கடைசியில் அவளுடன் வாழ்வதற்காகவே வழக்கை முடித்துக் கொண்டு பங்காளியுடன் சமாதானம் ஆகிறார்.
பத்ரகிரியின் தம்பி திருச்சிற்றம்பலத்துடன் உல்லாசாத்திற்காகவே லண்டன் செல்லும் சற்குணம், கடைசியில் உல்லாசம் என்பதையே மறந்து லண்டனின் கடைநிலை தொழிலாளர்களுக்காகவும் மக்களுக்காகவும் போராடுகிறான்.
வெள்ளையர்கள் நடத்தும் ராயல் சொசைட்டி இந்தியனான திருச்சிற்றம்பலத்திற்கு தரும் படிப்பு உதவித் தொகை.
ஒன்றுடன் ஒன்று தொடர்பு இல்லாத இந்த எல்லா கதைகளிலும் எல்லாவற்றையும் இணைக்கும் சரடாக இரவு.
========================
இரவு ஆழமானது. இரவைப் பற்றிய கதையில் அதன் ஆழம் பற்றி கொஞ்சமேனும் சொல்லப்பட்டிருக்கிறதா என்றால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. தம்பி மனைவியுடன் உறவு கொள்ளும் பத்ரகிரி. வெளிப்புறமான சம்பவங்கள் வழியே சொல்லப்படுகிறதே தவிர பத்ரகிரியின் மனமோ இல்லை தம்பி மனைவி தையலின் மனமோ ஆராயப்பட முயற்சி எதுவும் செய்யப்படவில்லை.
இப்படியே பத்ரகிரியின் மனைவி விசாலா, சதாசிவ பண்டாரம், கிருஷ்ணப்ப கரையாளர், எலிசபெத், வகீதா, சுரையா, ரஹ்மானி, திருச்சிற்றம்பலம், சற்குணம் என்று எந்த கதாபாத்திரத்தின் ஆழத்திற்குள்ளும் யாமம் போக மறுக்கிறது.
முன்னூறு பக்கம் தாண்டும் இந்த நாவலை படிக்கும் போது ஏதோ ஒரு பழைய அரசு ஆவணத்தை படிக்கும் உணர்வு ஏற்படுகிறதே தவிர வாசிப்பவன் நிகழ்வில் ஒரு அங்கமாக உணரமுடியவில்லை. முக்கிய காரணம் நாவலில் சொல்லப்படும் எந்த கதையும் நிகழவில்லை.முன்னொரு காலத்தில் நிகழ்ந்ததாக ஏற்றம் இறக்கம் இல்லாத தொனியில் சொல்லப்படுகிறது. எந்த ஒரு எழுச்சிகரமான கட்டமும் இல்லாததால் மூன்றாம் பக்கம் படிக்கும் போதே முதல் பக்கம் மறந்து போகிறது.
இலக்கியம் என்பதற்கு எந்த வரையறையும் இல்லை என்றாலும் இப்படியாக நடந்தது என்று மட்டுமே சொல்வது இலக்கியமா என்ற கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை. அப்படியெனில் செய்தித் தாள்களுக்கும் இலக்கியத்திற்குமான வேறுபாடு தான் என்ன? கட்டுரையும் கதையும் எந்த புள்ளியில் பிரிகிறது?
நான் பார்த்த வரையில் இந்த நாவலுக்கு மிக நல்ல நாவல் என்ற ரீதியிலான விமர்சனங்களே இருக்கின்றன. இதைப் புரிந்து கொள்ள நுண்ணுணர்வு வேண்டும் என்றும் அவர்கள் சொல்லக் கூடும். எந்த ஆழத்திற்கும் போகாத வெறுமனே வார்த்தைகளால் ஆன ஒரு மேடை நாடகத்தை பார்க்கும் உணர்வே எனக்கு ஏற்படுகிறது என்பதால் ராஜா ஆடையே இல்லாமல் அம்மணமாக இருக்கிறார் என்று சொல்வதை தவிர்க்க முடியவில்லை.
எஸ்ராவின் எழுத்து நடையைப் பற்றி தனியாக சொல்வதற்கு ஒன்றுமில்லை. ஆங்கிலத்தில் ஒரு சொற்றொடர் உண்டு. Watching the paint dry.
யாமம். தூக்கம்.
7 comments:
அன்னைக்கு வாங்க எடுத்து திரும்ப வச்சிட்டேன். நன்னி:)))
neat! ty!
நல்ல விமர்சனம் டெல்டா.
Julyக்கு அப்புறம் December
Good, I didn't buy that. I find it very boring to read him.
You are not the only one Santhini :))
நல்ல விமர்சனம்
Post a Comment