Tuesday, 19 April 2011

சொல்லக்கூடாத கதை


இலக்கில்லா பாதையின் 
முடிவிலா பயணத்தில்
வழிகள் பல உண்டு
என் வழி தனிவழி அல்ல
எனக்கு முன்னே பலர் தேய்த்த தடங்கள்
பின்னே வருபவனுக்கு என் தடம் எவனோ ஒருவனின் பாதம்.
வழிப்பயணத்தில் துணையாய்
வருகிறார்கள் போகிறார்கள்
என்னைக் கேட்டு வருவதில்லை
எத்தனை கேட்டாலும் போகாது இருப்பதில்லை.
வழிப்போக்கனின் வார்த்தைகள் 
காற்றில் வரைந்த கோடுகள்
கண்ணுக்கும் தெரிவதில்லை காதிலும் கேட்பதில்லை.

என் சுவாசம் தவிர காற்றில்லாத கால் இல்லாத மண்டபத்தில்
எவனோ ஒருவன் கதை சொல்ல ஆரம்பித்தான்.
அவனுக்கு முகம் இல்லை ஆனாலும் பல முகங்கள்.

எவருக்கும் சொல்வதில்லை.
இது சொல்லக் கூடாத கதை.
கேட்பவர்களுக்கு பிடிப்பதில்லை
ஆனாலும்
வழிப்பயணத்தில் எனக்கு நானே சொல்லும் கதை.
ஏனெனில் இது என் கதை.
உனக்கு மட்டும் ரகஸியமாய்.
உறுதியாய் சொல்கிறேன் உனக்கு ரசிக்காது.

எனக்கு பூனைகளை பிடிக்காது
ஆனாலும் பூனைகளுக்கு என்னை பிடித்தே இருக்கிறது.
ஒரு போதும் விட்டு விலகுவதில்லை.
எதிர்பாராத நேரங்களில் எங்கோ ஒரு பூனைக்குரல்.

முன்னம் ஒரு பழம்பூனையின்
முன்கால் நகம் தவிர்த்து
கால் நீட்டி நானிருந்தேன் ஒர் பின்னிரவில்.

எங்கிருந்தோ ஒரு பூனை
அடக்கமாய் அமைதியாய் என் அறையில்.
வெகு நேரம் கவனிக்கவில்லை
அதன் நகங்கள் என் முகம் கிழிக்கும் வரையில்.

எரிந்த கன்னம் தடவி 
கண் சுருக்கி பார்த்தேன்.
இரவில் வந்த பூனை இருட்டின் நிறம்.
குட்டையாய் வால்
உடைந்து போய் ஒரு கால்.
பின்புறத்தில் வால் நுழைத்து
தன் கால்களின் காயத்தை தானே நக்கியபடி.

பெரிய பூனையல்ல குட்டியுமல்ல.
அதன் தலை கொஞ்சம் பிளந்திருந்தது
யாரேனும் பலமாய் அடித்திருக்கலாம்.
பிரியமானவர்களின் கால் நக்க
வெறுப்பில் உதைத்திருக்கலாம்.
உரசுதல் பூனை குணம்.
உடலெங்கும் புழுதிப் படலம்
மண்ணில் இட்டு புரட்டியது போல.
தூக்கியெறியப்பட்ட பூனைகள்
என்னைத் தேடி வருகின்றன.
நூற்றாண்டு காலமாய் தீராப்பசியுடன் என்னை தின்று தீர்க்கின்றன.
எஞ்சிய எலும்புகள் பிறிதொரு நாள் வரும் பூனைக்கு.
விரும்பி அழைப்பதில்லை
ஆனாலும் அவை வாராதும் இருப்பதில்லை.

சில பூனைகள் தூக்கி எறியவென்றே பிறக்கின்றன.
இதுவும் அதில் ஒன்றாக இருக்கக் கூடும்.
பூனையின் இருப்பை மறக்கவில்லை.
மறக்கவும் கூடாத பூனையது.
நீண்ட வழி நடந்த வலி
கால்களெங்கும் பரவ கண்மூடி தூங்கிப் போனேன்.

விழித்தெழா வண்ணம் என் மீது பூனை படர்ந்திருந்தது
இரவில் சிறிதாய் இருந்த அதன் கால் நகங்கள்
ஒற்றை இரவில் பெரு வளர்ச்சி.

அதன் பற்கள் எனக்கு வெகுநாள் பழக்கம்
ஏற்கனவே பலமுறை 
இது மீண்டும் ஒரு முறை.
செய்யக் கூடியது ஏதுமின்றி
வெறுமனே நான் இருக்க
கண் உயர்த்தி பாத்த பூனை
புன்னகையுடன் தின்ன ஆரம்பித்தது என்னை.

சொல்லி வைக்கிறேன்
நீ கேட்க வேண்டிய அவசியம் இல்லை.
எவருக்கும் சொல்லாதே
இது சொல்லக்கூடாத கதை.

சொல்லி விட்டவன் எழுந்தான்.
என் முன்னே நீண்டது பூனையின் தடம்.

8 comments:

ராஜ நடராஜன் said...

கவிதையும் அத்தி பூக்குமோ!

வானம்பாடிகள் said...

/வழிப்பயணத்தில் துணையாய்
வருகிறார்கள் போகிறார்கள்
என்னைக் கேட்டு வருவதில்லை
எத்தனை கேட்டாலும் போகாது இருப்பதில்லை./

/சில பூனைகள் தூக்கி எறியவென்றே பிறக்கின்றன.இதுவும் அதில் ஒன்றாக இருக்கக் கூடும்.பூனையின் இருப்பை மறக்கவில்லை.மறக்கவும் கூடாத பூனையது./

ம்ம். ஏதோ ஒரு லின்க் மிஸ்ஸிங் மாதிரி இருக்கு. நல்ல ஹோம்வர்க் குடுத்திருக்கீங்க:)

அது சரி(18185106603874041862) said...

|| ராஜ நடராஜன் said...
கவிதையும் அத்தி பூக்குமோ!||

ஏன், நீங்க வர்றதும் கூட தான் :))

அது சரி(18185106603874041862) said...

|| வானம்பாடிகள் said...

ம்ம். ஏதோ ஒரு லின்க் மிஸ்ஸிங் மாதிரி இருக்கு. நல்ல ஹோம்வர்க் குடுத்திருக்கீங்க:)||

ம்ம்ம்ம்....

ஹோம்வொர்க் எல்லாம் பண்ணாதீங்க. உலகத்துலயே போரான வேலை ஹோம்வொர்க் பண்றது தான். :))

கபீஷ் said...

//கவிதையும் அத்தி பூக்குமோ!//
அத்தி, குறிஞ்சி இதுல எது பூக்க அதிக காலம் பிடிக்குமோ அது மாதிரி இவர் கவிதை வரட்டும். தாங்கல

Mahesh said...

நிறைய அனுபவங்களோட பொருத்தி பார்க்க தோணுது. அருமை !!!

அது சரி(18185106603874041862) said...

|| Mahesh said...
நிறைய அனுபவங்களோட பொருத்தி பார்க்க தோணுது. அருமை !!!||

நன்றி மகேஷ்.

அது சரி(18185106603874041862) said...

|| கபீஷ் said...
//கவிதையும் அத்தி பூக்குமோ!//
அத்தி, குறிஞ்சி இதுல எது பூக்க அதிக காலம் பிடிக்குமோ அது மாதிரி இவர் கவிதை வரட்டும். தாங்கல||

எவ்ளோ லேட்டா பூக்குதோ அந்த அளவு மதிப்பு அதிகமாக்கும் :)