Saturday, 22 August 2009

தீராத விளையாட்டுப் பிள்ளை.....

கண்ணப்பன், கண்ணப்பன் என்று ஒருவர்....சிவனுக்கு கண்ணைக் கொடுத்தது அந்த காலத்து கண்ணப்பன்....அன்றைய‌ பொரச்சித் தலைவி ஆட்சியில் பொதுப்பணித்துறை மந்திரியாக இருந்து பொதுச் சேவையில் அன்னை தெரசாவையே மிஞ்சியவர் இந்த கண்ணப்பன்...இன்னமும் கலைச்சேவைகளெல்லாம் செய்ததாக கூட செய்திகள் உண்டு...

காலம் சென்றது...பொரச்சி இவரை புறக்கணித்தது....கொஞ்ச நாள் தனிக்கடை...ஜாதி சொல்லிப் பார்த்தும் "யாவாரம் பிச்சிக்கிட்டு" ஓடவில்லை...காலி செய்தார் கடையை...கட்டினார் பொட்டியை கோபால புரத்துக்கு....நெய்யும் பாலும் போல, பொய்யும் நானும் போல என்று அடுக்கு மொழியில் அணைத்தார் அண்ணன்....அடுத்து வந்தது அண்ணன் ஆட்சி...அமைச்சர் பதவி..மீண்டும் பொது மக்களுக்கு சேவை என்று குவாட்டர் இல்லாமலேயே கனவில் மிதந்தார் நமது கதாநாயகன்....அந்தோ பரிதாபம்...இதயத்தில் மட்டுமே இடம் கிடைத்ததே தவிர மந்திரியாகும் பாக்கியம் மீண்டும் கிட்டவில்லையே....உருண்டார் புரண்டார் அழுதார் தொழுதார்...இரங்கவில்லையே நெய்யும் பொய்யும் அண்ணன்...கொதித்தெழுந்தது பொதுப்பணியில் ஓடாய் தேய்ந்த உள்ளம்...மந்திரி பதவி வாங்க வக்கில்லாத எனக்கு எம்.எல்.ஏ பதவி ஒரு கேடா....தூக்கி எறிந்தார் பதவியை....எத்தனை கட்சிகளடா...எத்தனை கதவுகளடா....தட்டினார் தோட்டத்து கதவை...கலந்தார் பொரச்சியில்....இந்த தன்னலம் கருதா தியாகியின் சேவை எங்களுக்கு தேவை என ஓட்டளித்த இளையான்குடி தமிழர்கள் இருட்டில் நின்றனர்....

-----------------------

அடுத்து வருவதும் ஒரு கண்ணப்பரின் கதை தான்....

பாரதத்தில் தேரோட்டியவன் அந்த கண்ணன்....பாரதத்தின் மூத்த அரசியல்வாதிக்கு காரோட்டியவர் இந்த கண்ணப்பன்....அந்த கண்ணனுக்கு என்ன கிடைத்ததோ...ஆனால் இந்த கண்ணப்பனுக்கு கிடைத்தது மந்திரி பதவி...வாழ்ந்தார் வளமாக....பிற்காலத்தில் பிளந்தார் கட்சியை...ஒட்டினார் வைகோவுடன்...பெற்றார் மூத்த தலைவர் ப்ரோமோஷன்....தொண்டாமுத்தூரில் தொண்டு செய்ய தேர்ந்தெடுத்தார்கள் இவரை....கடல் மணலையும் எண்ணிவிடலாம்...ஆனால் கண்ணப்பர் தொண்டாமுத்தூருக்கு செய்த தொண்டுகள் கணக்கிலடங்கா...கணக்கிலடங்கா...கணக்கில்லா தொண்டு செய்த இந்த காரோட்டிக்கு கட்சித் தலைவருடன் வந்தது பிணக்கு...மக்களாவது மண்ணாவது...டேய் சண்டி....எட்றா வண்டி...திருப்பினார் காரை....வண்டி நின்ற இடம்.....அதே கோபாலபுரம்....தொண்டை அடைக்க நின்றனர் தொண்டாமுத்தூர் தொண்டர்கள்...

-----------------------------------

ராமனின் கண்ணப்ப அவதாரம் தான் இப்படி தீராத விளையாட்டுப் பிள்ளையாகி விட்டது என்றால், அடுத்து வருவது இரண்டு அவதாரங்கள் சேர்ந்த கதை...ஏகபத்தினி விரதன் ராமனும், ஏகப்பட்ட பத்தினி விரதன் கிருஷ்ணனும் சேர்ந்தால் கதை என்னவாகும்.....கந்தலாகும்... அப்படித்தான் ஆகிவிட்டது கம்பம் மக்களின் சனநாயகம்....போர்வாளுக்கு உறையாக இருப்பார் என்று தேர்ந்தெடுத்தால் இவரோ போர்வாள் இவர் வீட்டு சவரக்கத்தியாக இருக்க வேண்டும் என்றார்...ஏற்குமா போர்வாள்....தூக்கி எறிந்துவிட்டது....வைகோவை கம்பத்தில் அடையாளம் காட்டியவன் நான் என்று அடிக்கடி அலறும் இந்த அவதாரம் தனக்கொரு அடையாளம் தேடியது....திக்கற்றவருக்கு தெய்வமே துணை...கழுதை கெட்டால் குட்டிச்சுவர்...அடைந்தது கழகத்தை...எப்பேர்பட்ட கொள்கை வீரன்...மக்கள் தொண்டன்....தூக்கி எறிந்தானே பதவியை...கம்பம் மக்கள் கண்ணீரும் கம்பலையுமாக கதறினர்....

------------------------------------------

காலம் கலிகாலம்....அவதாரங்களால் தான் பெரும் சேதாரம்...

அப்படியும் சொல்லிவிட முடியாது...

பொரச்சித் தலைவியையே தோற்கடித்துக் காட்டி புரட்சி செய்த பர்கூரின் பங்காளியாகத் தான் இருந்தார் தம்பியான துரை...ஏழைப் பங்காளன் எண்பது கோடிக்கு அதிபதி...பஸ் முதலாளி பழனிச்சாமியை எதிர்க்க பொர்ச்சிகரமான ஆள் என்று பொரச்சித் தலைவி இட்ட கட்டளையால் ஜனநாயக் வாதிகளும் நீதிமான்களும் நிறைந்த நாடாளுமன்றத்தை நாடிப் போய்விட்டார்...ஐந்தாண்டுகள் இருப்பார் அள்ளித் தருவார் சேவையை என்று ஆர்வத்துடன் ஓட்டளித்த பர்கூர் மக்களுக்கு இவர் அளித்த சேவைகள் எண்ணிலடங்கா....ஏட்டிலடங்கா....ஆனாலும் போய்விட்டார்...

-------------------------------------------------------------------

தங்களுக்கு சேவை செய்ய பிரதிநிதி ஒருவர் இல்லாமல் மக்கள் இருப்பதா.....உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு....இப்பொழுது தான் தங்கள் திறமையை இலங்கையில் காட்டிய வல்லரசு இந்தியாவிற்கு இது இழுக்கல்லவா...

இந்தியாவில் எல்லாருக்கும் எல்லாம் இருக்கிறது....எம்.எல்.ஏ மட்டும் தான் இல்லை....சில பல கோடிகள் செலவாகும்...அதனால் என்ன...சட்டை கிழிந்திருந்தாலும் மக்கள் எல்லாரும் மெர்சிடிஸ் காரில் தானே போய்க் கொண்டிருக்கிறார்கள்....அரிசி வாங்க முடியாவிட்டாலும் ஏசி ரூமில் தானே இருக்கிறார்கள்....கிடப்பது கிடக்கட்டும்...கிழவனை தூக்கி மனையில் வை... மக்கள் இருந்தால் என்ன செத்தால் என்ன...மக்கள் பிரதிநிதி முக்கியம்....அவன் ஓடுகாலியாக இருந்தாலும்....

நடத்தி விட்டார்கள் தேர்தலை....எல்லாம் பெற்று மக்கள் பிரதிநிதி மட்டுமே இல்லாமல் வாடி வதங்கிய மக்கள் தேர்ந்தெடுத்து விட்டார்கள்....எந்த கட்சி இந்த தேர்தலுக்கு காரணமோ அதே கட்சியை....கம்பத்தில் அதே அவதாரம் மீண்டும் முடிசூடி இருப்பது மக்களின் தெளிவான தேர்வுக்கும், மக்களாட்சியின் மாண்புக்கும் மாபெரும் சான்று......

மக்கள் பிரதிநிதிகள் வந்துவிட்டார்கள்....இனி பாலாறும் தேனாறும் ஓடும்....நீச்சல் தெரியாதவர்கள் இப்பொழுதே நீந்திப் பழகுங்கள்!!!

13 comments:

பழமைபேசி said...

வெள்ளிக்கிழமை, மட்டையப் போட்டமா இருந்தமா.... நீங்க வேற ஏங்க அண்ணாச்சி..... அவ்வ்வ்வ்வ்வ்..... எல்லா மப்பும் எறங்குனா மாதிரியே இருக்கு... குடுத்த பதினஞ்சி வெள்ளி அவ்ளோதானா?

துளசி கோபால் said...

தேர்தல் முடிவு இப்படி உங்களைப் பாதிச்சுருச்சா!!!

//மக்கள் இருந்தால் என்ன செத்தால் என்ன...மக்கள் பிரதிநிதி முக்கியம்....அவன் ஓடுகாலியாக இருந்தாலும்.... //

இது:-))))

மிஸஸ்.தேவ் said...

பாதிப்பு கொஞ்சம் அதிகம் தான் போல? ??? ? இறங்கிடும் ...சுதி சில நாட்களில்,
:)

அது சரி said...

//
பழமைபேசி said...
வெள்ளிக்கிழமை, மட்டையப் போட்டமா இருந்தமா.... நீங்க வேற ஏங்க அண்ணாச்சி..... அவ்வ்வ்வ்வ்வ்..... எல்லா மப்பும் எறங்குனா மாதிரியே இருக்கு... குடுத்த பதினஞ்சி வெள்ளி அவ்ளோதானா?

22 August 2009 02:49
//

மட்டையப் போட்றது...மப்பு எறங்குறது எல்லாம் ஒங்கள மாதிரி பெரியாளுக பண்றது....நான்லாம் பிரகாஷ் ராஜ் கோலாவ விஸ்கி மாதிரி அடிக்கிறதை படத்துல மட்டும் தான் பார்த்திருக்கேன்...

சின்ன பயலுவள கெடுக்காதீக அண்ணாச்சி :0))

அது சரி said...

//
துளசி கோபால் said...
தேர்தல் முடிவு இப்படி உங்களைப் பாதிச்சுருச்சா!!!

//மக்கள் இருந்தால் என்ன செத்தால் என்ன...மக்கள் பிரதிநிதி முக்கியம்....அவன் ஓடுகாலியாக இருந்தாலும்.... //

இது:-))))

22 August 2009 03:28
//

பாதிப்பு தேர்தல் முடிவினால இல்ல டீச்சர்....இந்த தேர்தல் வந்ததே பாதிக்குது....

வருகைக்கு நன்றி...

அது சரி said...

//
மிஸஸ்.தேவ் said...
பாதிப்பு கொஞ்சம் அதிகம் தான் போல? ??? ? இறங்கிடும் ...சுதி சில நாட்களில்,
:)

22 August 2009 03:41
//

சுதி எறங்குறதா??

என்னோட இமேஜ் ரொம்பவுமே டேமேஜ் ஆயிருச்சி போலருக்கே....ம்ம்ம்ம்....சீக்கிரம் எதுனா எம்ஜியார் பத்தி எழுதி இமேஜை பில்டப் செய்ய வேண்டியது தான்...:0)))

மிஸஸ்.தேவ் said...

அது சரி said...

//ம்ம்ம்ம்....சீக்கிரம் எதுனா எம்ஜியார் பத்தி எழுதி இமேஜை பில்டப் செய்ய வேண்டியது தான்...:0)))//

எம்.ஜி ஆரெல்லாம் எந்தக் காலம் ?! எதுனா ஜே.கே ரித்திஷ் படம் பார்த்துட்டு எழுதுங்க அதுசரி .

இமேஜ் ஒரேயடியா எகிறிடும் பாருங்க.

:)))))

பதி said...

//பாதிப்பு தேர்தல் முடிவினால இல்ல டீச்சர்....இந்த தேர்தல் வந்ததே பாதிக்குது....//

:-))))

//மக்களின் தெளிவான தேர்வுக்கும், மக்களாட்சியின் மாண்புக்கும் மாபெரும் சான்று...//

இதுக்கும் ஒரு :-)))))

அது சரி said...

//
மிஸஸ்.தேவ் said...

எம்.ஜி ஆரெல்லாம் எந்தக் காலம் ?! எதுனா ஜே.கே ரித்திஷ் படம் பார்த்துட்டு எழுதுங்க அதுசரி .

இமேஜ் ஒரேயடியா எகிறிடும் பாருங்க.

:)))))
//

என்னது...ரித்தீஷ் படம் பாக்கணுமா?? அதுக்கு நான் பன்னி காய்ச்சல் வராமலேயே பொக்கிஷம் பாத்து செத்து போலாமே :0))

அது சரி said...

//
பதி said...
//பாதிப்பு தேர்தல் முடிவினால இல்ல டீச்சர்....இந்த தேர்தல் வந்ததே பாதிக்குது....//

:-))))

//மக்களின் தெளிவான தேர்வுக்கும், மக்களாட்சியின் மாண்புக்கும் மாபெரும் சான்று...//

இதுக்கும் ஒரு :-)))))

24 August 2009 10:26

//

வாங்க பதி....என்னங்க ரொம்ப நாளா கடைப் பக்கமே ஆளைக் காணோம்? பிஸியா இருக்கீங்களா?

பதி said...

//என்னங்க ரொம்ப நாளா கடைப் பக்கமே ஆளைக் காணோம்? பிஸியா இருக்கீங்களா? //

என்னங்க செய்யுறது??? இன்னமும் இவிங்க (எங்க வாத்திங்க) என்னை நம்புறாங்க.... !!!!

அதனால கொஞ்சம் பிஸி !!!!!

குடுகுடுப்பை said...

இந்த இடைத்தேர்தல் கருமம் எதுக்கு வெக்கிரானுங்க. இப்ப திருச்செந்தூர் தொகுதில அனிதான்னு யாரோ ஒரு அம்மா புது வேட்டி கட்டிருச்சாம். அடுத்த தேர்தல் ரெடி

karthick said...

கந்தசாமி போட்டியில் கலந்து கொள்ளுங்கள் .. பாரிஸுக்கு டிக்கெட் வெல்லுங்கள் www.safarikanthaswamy.com