Friday, 9 January 2009

கலைஞருக்கு ஒரு கடைக்கோடி (முன்னாள்) தொண்டனின் கடிதம்




தமிழகத்தின் மூத்த தலைவருக்கு,
வணக்கம் ஐயா.நீங்கள் உங்கள் குடும்பத்தோடு மிக்க சுகமாய் இருப்பீர்கள் என்று நம்புகிறேன். இவ்விடம் எல்லாம் சுகம் என்று சொல்ல முடியாத நிலையில்...இருந்தாலும் தோழைமையோடும் ஏழமை பேசுதல் நம் பண்பாடு இல்லையே..அதனால் சுகம் என்றே சொல்லி வைக்கிறேன்..

யாரடா நீ என்று நீங்கள் கேட்பதற்குள்...உங்களுக்கு என்னை தெரியாது...ஆனால் உங்களை எனக்கு சிறுவயதிலிருந்தே தெரியும்..ஏழு வயது இருக்குமென்று நினைக்கிறேன்.."போடுங்கம்மா ஓட்டு சூரியனப் பாத்து" என்று ஓட்டு சாவடியில் நின்று உங்களுக்காக ஓட்டு கேட்டு இருக்கிறேன்..அதற்காக எம்.ஜி.யார் பக்தரான என் தந்தையிடம் அடியும் வாங்கி இருக்கிறேன். 

அத்துடன் நின்றதா என் பைத்தியக்காரத் தனம்? கல்லூரி சேர்ந்த முதல் வருடம் ஒரு தேர்தல் வந்தது...அன்று நடந்த அராஜக ஆட்சியை ஒழிக்க வேண்டும் என்று உங்களுக்காகவும் உங்கள் ஆதரவு பெற்ற தம்பிகளுக்காகவும் கல்லூரியை புறக்கணித்து விட்டு கிராமம் கிராமமாக திரிந்திருக்கிறேன்...கட்சி என்னவோ வென்றது...ஆனால்....

உங்களை ஜெயலலிதா அரசு அதிகாலையில் கைது செய்த‌ போது அய்யோ கொல்றாங்களே...கொல்றாங்களே என்று அலறிய போது...ரத்தம் கொதித்த கோடிக்கணக்கான மக்களில் நானும் ஒருவன்....பேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்...அன்று கொல்லும் அரசன் ஆணை வென்றுவிட்டது...என்று துடித்தவர்களில் நானும் ஒருவன்...உங்களை விடுவிக்க வேண்டும் என்று உண்ணாவிரதம் இருந்து போலீசிடன் அடிவாங்கிய அப்பாவிகளில் நானும் ஒருவன்...லண்டன்ல இருந்து லீவுக்கு வந்துருக்க...உனக்கு ஏண்டா இந்த ஊர் அரசியல் என்று என் தந்தை கண்டித்த போதும் அவரிடம் சண்டை போட்டிருக்கிறேன்...எனக்கு அவர் எப்படியோ அப்படியே நீங்களும் ஒரு தந்தையே...

என்னவென்று தெரியவில்லை...உங்கள் மீது அப்படி ஒரு நம்பிக்கை...தமிழினத்திற்கு இருக்கும் ஒரே தலைவன் என்ற நம்பிக்கை...நீங்களும், அறிஞர் அண்ணாவும், நெடுஞ்செழியன், மதியழகன், பேராசிரியர் அன்பழகன், மற்றும் பல எண்ணற்ற தொண்டர்கள் இல்லாதிருந்தால் தமிழ்நாட்டில் இந்தி திணிக்கப்பட்டிருக்கும்...தமிழுக்கு சவக்கிடங்கு தோண்டப்பட்டிருக்கும் என்று இன்னமும் நம்புபவர்களில் நானும் ஒருவன். 


உங்களுக்கு தெரியுமா ஐயா, என் தாயின் சகோதரன், என் தாய் மாமன் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் போலீசார் அடித்த அடியில் கால் முடமாகிப் போனான்...அவனுக்கு அப்பொழுது வயது பதினைந்தோ என்னவோ...பிற்காலத்தில் இதனாலயே அவன் திருமணம் தடைப்பட‌ இருபத்தைந்து வயதில் தற்கொலை செய்து கொண்டான்...அவன் வீழ்ந்தாலும் ஒவ்வொரு மனிதனின் கடமையான தாய் மொழியை காப்பதில் அவன் தன் கடமையை செய்து விட்டே வீழ்ந்தான்...வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும்...உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு...

ஆனால் ஐயா, திரும்பி பார்க்கையில் நான் செய்தது சரிதானா என்று எனக்குள் பெரும் கேள்விகள் எழுந்த வண்ணமே இருக்கின்றன...

உண்மையில் தவறு என்று ஆரம்பித்தது? 
அடைந்தால் திராவிட நாடு, இல்லையேல் சுடுகாடு என்ற கொள்கையிலிருந்து பின்வாங்கி இன்றைக்கு முப்பது உறுப்பினர்கள், நாளை நாம் தான் நாடாள வேண்டும் என்று ஆரம்பித்த பதவி ஆசையிலா?
இல்லை என் கட்சி, என் பதவி, என் குடும்பம் என்று நீங்கள் எம்.ஜி.ஆரை ஓரம் கட்டிய போதா?

நீங்கள் எம்.ஜி.யாரை எதற்கு ஓரம் கட்டினீர்கள் என்று எனக்கு தெரியாது ஐயா..அப்பொழுது நான் பிறக்கவேயில்லை...ஆனால் நீங்கள் வை.கோ.வை கட்சியை விட்டு நீக்கினீர்களே...அன்று தான் உறவு உடைந்தது ஐயா...அன்று தான் உடைந்தது...

சரி, கட்சியை விட்டு நீக்க உங்களுக்கு உரிமை இருக்கலாம்...ஆனால் அதற்கு நீங்கள் சொன்ன காரணம்? 

"விடுதலைப் புலிகளின் துணையுடன் என்னை கொல்ல முயற்சி" என்று கொலைப்பழி சுமத்தினீர்களே?? நெஞ்சுக்கு நீதி எழுதிய உங்கள் நெஞ்சைத் தொட்டு சொல்லுங்கள்...ஜெயலலிதா அரசால் உங்களுக்கு அனுப்பப்பட்ட இந்த செய்தி உண்மை என்று நீங்கள் உண்மையிலேயே நம்பினீர்களா இல்லை நொண்டி குதிரைக்கு சறுக்கியதே சாக்கு என்று இதை காரணமாக வைத்து ஸ்டாலினுக்கு எதிர்கால போட்டி என்று கருதப்பட்ட வைகோவை வெளியே அனுப்பினீர்களா??

எத்தனையோ காரணங்கள் சொல்லியிருக்கலாம்...ஆனால் கொலைப் பழி?? கட்சிக்கு ரத்தமும் சதையுமாக இருந்த வைகோ மேல் உங்களுக்கு இப்படி ஒரு பழி சுமத்த எப்படி மனம் வந்தது?? இது முதுகில் குத்தும் துரோகம் அல்லவா?

நடந்தது பழங்கதை...அதை ஏன் அல்பமாக கேள்வி கேட்கிறாய் என்று நீங்கள் சொல்லக்கூடும்....ஆனால் இப்பொழுது நடப்பது என்ன?

தயாநிதி மாறனுக்கு எதற்கு பதவி கொடுத்தீர்கள்? முரசொலி மாறனின் மகன், உங்களுக்கு பேரன் என்பதை தவிர, அவர் கட்சிக்கும் நாட்டுக்கும் ஆற்றிய அரும்பணிகள் என்ன?? எந்த தகுதியில் அவர் எம்.பி. சீட்டுக்கு நிறுத்தப்பட்டு உடனடியாக மத்திய மந்திரி ஆக்கப்பட்டார்??

அது தான் அப்படி என்றால்....எந்த அடிப்படையில் எதன் காரணமாக அவர் மந்திரி பதவியிலிருந்து விலக்கப்பட்டார்? எதனால் ஒருவர் மந்திரியாகிறார், எதனால் ஒருவர் நீக்கப்படுகிறார் என்று மக்களுக்கு சொல்ல வேண்டாமா?? இது அடிப்படை ஜனநாயகம் அல்லவா?? ஜனநாயகம் பற்றி அடிக்கடி பேசும் உங்களுக்கு இது ஏன் மறந்து போயிற்று???

இப்பொழுது திடீரென்று பனித்தது...இனித்தது...கூவத்தில் பன்றி குளித்தது என்றெல்லாம் பேட்டி கொடுக்கிறீர்கள்... ஆனால் முதலில் ஏன் புளித்தது என்றே நீங்கள் சொல்லவில்லையே ஐயா??

மாநில பொறுப்பை கவனிக்க ஸ்டாலின், மத்திய பொறுப்புக்கு முரசொலி மாறன்...அவர் இறந்து விட்டால் அடுத்து என் பேரன்...அது தான் தயாநிதி மாறன்....அவனை தூக்கிவிட்டால் வேறு எவனுக்கும் தகுதியில்ல்லை...என் மகளே என்று நீங்கள் திரு.கனிமொழியை அவசர அவசரமாக எம்.பி.ஆக்கியது நியாயமா?? 

நான் தான் தி.மு.க தலைவர்...அதுவும் போட்டியின்றி தேர்ந்து எடுக்கப்பட்ட தலைவர்..என்று நீங்கள் சொல்லலாம்...ஆனால் தி.மு.க உங்கள் கட்சியில்லையே? அது அண்ணாதுரையால், லட்சக்கணக்கான தி.மு.க தொண்டர்களால் அன்றைக்கிருந்த காங்கிரஸ் அரசிடம் அடியும் உதையும் வாங்கி வளர்க்கப்பட்ட கட்சியல்லவா?? இது உங்கள் குடும்ப வியாபாரம் அல்லவே மகளுக்கு, மகனுக்கு, பேரனுக்கு என்று பங்கு பிரிக்க??

உனக்கு அரசியல் தெரியாது என்று நீங்கள் என்னை ஒரே சொல்லில் ஒதுக்கலாம்...உண்மை தான் எனக்கு குடும்ப அரசியல் தெரியவில்லை...புரியவும் இல்லை...

உலகத் தமிழர்களின் ஒரே தலைவர் என்று இன்னமும் உங்களை சிலர் சொல்கிறார்கள்...அதை இன்னமும் சிலர் நம்பிக் கொண்டிருக்க கூடும்.... இன்றைக்கு இலங்கை பிரச்சினையில் நீங்கள் செய்யும் செயல்கள் வெந்த புண்ணில் வெங்காயத்தைத் தேய்ப்பது போல் இருக்கிறது....

டி.ஆர். பாலுவுக்கு கப்பல் துறை, போக்குவரத்து துறை இல்லையென்றால் அரசில் சேர மாட்டோம் என்று அடம்பிடித்த நீங்கள் இலங்கையில் சின்னஞ்சிறு குழந்தைகள் வரை கொன்று குவிக்கப்படும் போது, மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதுகிறீர்கள்...கம்யூனிஸ்டுகள் கூட்டம் நடத்திய பின், மனித சங்கிலி என்று அறிவிக்கிறீர்கள்....மற்ற நாட்டு பிரச்சினையில் இந்தியா தலையிட முடியாது என்று அறிக்கை விடுகிறீர்கள்....


மத்திய வெளியுறவு மந்திரி இலங்கை செல்வார் என்று அறிக்கை விட்டீர்கள்...உங்கள் அடிப்பொடிகள் அதையும் கொண்டாடினார்கள்....ஆனால் நடப்பது என்ன?? மந்திரி இன்னமும் மந்தியாக இங்கு தான் இருப்பார்....எப்பொழுது செல்வார்....எல்லாரும் செத்த பின் அனுதாபம் தெரிவிக்கவா? மலர் வளையம் வைக்கவா? எவனுக்கு வேண்டும் உங்கள் அனுதாபமும் மலர் வளையமும்??

என்னை என்ன தான் செய்ய சொல்கிறாய்...ஆதரவை வாபஸ் வாங்கினால் இந்திய அரசு கவிழும் ஆனால் இலங்கை பிரச்சினை தீராது என்று நீங்கள் வாதாடக் கூடும்...

உண்மை தான் ஐயா....


ஆனால், நீங்கள் ஏன் இலங்கை அரசுக்கும், விடுதலைப்புலிகளுக்கும் ஒரு சமரச தீர்வு காண முயற்சிக்கக் கூடாது?? 

இந்திய அரசு தலையிட வேண்டாம்...குறைந்த பட்சம் சிங்கள ராணுவத்திற்கு பயிற்சியும், ஆயுதங்களும், ஆலோசனைகளும் கொடுப்பதை நிறுத்தலாமே?? 

இந்தி எதிர்ப்புக்காக போரடிய உங்களால் இதை ஏன் ஒரு மக்கள் இயக்கமாக எடுத்து செல்ல முடியாது?? நீங்கள் தலைமை ஏற்றால் இன்றும் கோடிக்கணக்கான மக்கள் குவிவார்களே?? மக்கள் திரண்டால் இந்திய அரசால் அதை புறக்கணிக்க முடியுமா? ஒரு வேளை எதிர்க்கட்சியாக இருந்தால் தான் அதையெல்லாம் செய்வீர்களா??

இதுவரை இத்தனை நடந்தும் ஒரு துரும்பைக் கூட நகர்த்தாமல் படுகொலையை ஊக்குவிக்கும் இந்திய அரசில் நான்கு மந்திரிகளுடன் நீங்களும் ஒரு அங்கம்....உண்மையில் தமிழ்நாட்டை பொறுத்தவரை இந்திய அரசு என்றால் நீங்கள் தான்....மறந்து விடாதீர்கள்..

விடுதலைப் புலிகள் வன்முறைவாதிகள் என்ற பல்லவியை பாடாதீர்கள்....அஹிம்சை முறையில் போராடிய தந்தை செல்வா, உண்ணாவிரதம் இருந்தே உயிர்விட்ட திலீபன் என்ன ஆனார்கள் என்று உங்களுக்கு தெரியும்...விடுதலைப் புலிகள் எந்த சூழ்நிலையில் உருவானார்கள் என்றும் உங்களுக்கு தெரியும்....கண் முன்னே தாயும், சகோதரியும் கற்பழிக்கப்படுவதை பார்க்கும் எவனும் புலியாகத் தான் மாறுவான்...1980களில் ஜே.வி.பியும், இலங்கை அரசும் செய்த இனப்படுகொலைகள் உங்களுக்கு தெரியாதா?? எத்தனை தாய்களும், அவர்கள் வயது வராத மகள்களும் கற்பழிக்கப்பட்டு, லாரி டயருடன் கட்டி, பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டனர்??? இந்த சூழ்நிலையில் அவர்கள் துப்பாக்கி எடுப்பதை தவிர உண்ணாவிரதமா இருக்க முடியும்??

அது எல்லாம் பழங்கதை..இப்பொழுது நடப்பது என்ன?? ராஜீவ் காந்தியை கொலை செய்தார்களே என்று நீங்கள் சொல்லக்கூடும்....

இருக்கலாம்...அதே சமயம் ராஜீவை கொன்றது சந்திராசாமி என்று கூட சில தகவல்கள் உண்டு....ஆனால், இப்பொழுது நடப்பது புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் நடக்கும் போர் என்று நீங்கள் சொல்கிறீர்களா?? அப்படியானால், பள்ளி மீது குண்டு வீசி, குழந்தைகளை கொன்றது?? 

அதற்கெல்லாம் நான் ஒன்றும் செய்ய முடியாது...என்று நீங்கள் நினைத்தால் அதையாவது சொல்லி விடுங்கள்....மறக்குலத்தில் வந்த உங்களுக்கு இதை சொல்ல மனத் துணிச்சல் உண்டு என்று நம்புகிறேன்...ஆனால், கடிதம் எழுதுகிறேன், கோரிக்கை வைக்கிறேன் என்று ஊருக்காகவும், அரசியலுக்காகவும் நடிக்காதீர்கள்..

மற்றவர்களிடம் கேட்க வேண்டியது தானே...என்னிடம் ஏன் கேட்கிறாய் என்று நீங்கள் கேட்கலாம்...உண்மை தான்...ஆனால், தமிழ்நாட்டில் பெரும் இயக்கங்கள் என்றால் நீங்களும், ஜெயலலிதா அம்மையாரும் தான்...அவர் நிலைப்பாடு தெரிந்த விஷயம்....எப்படியாவது எல்லா தமிழர்களும் ஒழிந்தால் சரி என்பது அவரது வெளிப்படையான நிலை....உங்கள் நிலையும் அது தான் என்றால் சொல்லிவிடுங்கள்... அவரை மன்னிக்கலாம்....ஏனெனில் அவர் நெஞ்சில் குத்துகிறார்...ஆனால் நீங்கள் ஐயா....முதுகில் அல்லவா குத்துகிறீர்கள்???

எதிர்காலத்தில் தமிழ்நாட்டின் சரித்திரத்தை எழுதும் எவரும் திருக்குவளை முத்துவேலர் கருணாநிதியை புறக்கணித்து எழுதிவிட முடியாது...ஆனால் நீங்கள் தமிழின தலைவராக எழுதப்படுவீர்களா இல்லை தமிழ்நாட்டில் வந்து சென்ற மற்றொரு அரசியல்வாதியாக இனம் காணப்படுவீர்களா என்பது உங்கள் கையில் தான் உள்ளது...

திருக்குறளுக்கு உரையெழுதிய உங்களுக்கு நான் சொல்ல வேண்டியதில்லை...ஆனாலும் உங்கள் பணிச்சுமைகளால் நீங்கள் மறந்துவிட்டிருக்கலாம் என்பதால் ஒன்றே ஒன்று சொல்ல விரும்புகிறேன்...

தக்கார் தகவிலார் என்பதவரவர்
எச்சத்தாற் காணப்படும்

====================================

68 comments:

நட்புடன் ஜமால் said...

மிகவும் வேதனையான விடயங்கள் ...

பழமைபேசி said...

அண்ணாவும், நாற்பது ஆண்டு கால நண்பரும் இப்படி என்னைத் தவிக்க விட்டு விட்டுச் சென்றுவிட்டனரே?

வெத்து வேட்டு said...

1980களில் ஜே.வி.பியும், இலங்கை அரசும் செய்த இனப்படுகொலைகள் உங்களுக்கு தெரியாதா?? எத்தனை தாய்களும், அவர்கள் வயது வராத மகள்களும் கற்பழிக்கப்பட்டு, லாரி டயருடன் கட்டி, பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டனர்??? இந்த சூழ்நிலையில் அவர்கள் துப்பாக்கி எடுப்பதை தவிர உண்ணாவிரதமா இருக்க முடியும்??

are you loosu? or LTTE's Propaganda machine?

குடுகுடுப்பை said...

கலைஞர் மனசு வைத்தால் இலங்கையில் சமாதானப்பேச்சு வார்த்தை தொடங்க முடியும்.

Senthil said...

I am one of those who believed in
தமிழினத் தலைவர்.
As you told I too think he cheated us...:-(

நிலவு பாட்டு said...

சரியான பதிவு, கலைஞரே கண்டிப்பாக இவரை(முரண் தொடை) போன்று லட்சக்கணக்கானோர் இப்படி எண்ண துவங்கி விட்டனர்.

கபீஷ் said...

//உங்களை விடுவிக்க வேண்டும் என்று உண்ணாவிரதம் இருந்து போலீசிடன் அடிவாங்கிய அப்பாவிகளில் நானும் ஒருவன்//

நீங்க உண்மையிலேயே அப்பாவிதான் போலிருக்குது. :-):-)
கொஞ்சம் விவரமானவர்னு தப்பா புரிஞ்சிகிட்டேன் :-):-)

Anonymous said...

//இப்பொழுது நடப்பது புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் நடக்கும் போர் என்று நீங்கள் சொல்கிறீர்களா?? அப்படியானால், பள்ளி மீது குண்டு வீசி, குழந்தைகளை கொன்றது?? //
புலிகள் தமிழ் குழந்தைகளை பலவந்தமாக கடத்தி கொண்டு சென்று பள்ளியில் வைத்து தங்கள் யுத்தத்திற்காக பயிற்சி கொடுத்த போது தான் அந்த அநியாயம் நடந்தது.

Anonymous said...

சும்மா நச் நச்சுன்னு கேட்டிருக்கீங்க. நம்ம தலைவருக்கு யாராவது அனுப்பி வையுங்கப்பா.

Anonymous said...

திருமங்கலம் தேர்தல் முடிவுக்கு பின்பு நடக்கப் போகும் நாடகம்!!!
தி.மு.க வென்றால் மீண்டும் காங்கிரசுக்கு கட்டுப்பட்டுக் கழக(கலக) ஆட்சி தொடரும். இல்லை என்றால் இலங்கையில் நடக்கும் இன அழிப்பு மீண்டும் கண்ணை உருத்தும். உடனே தமிழ்மான உணர்வு மேலிட உலகத் தமிழர் தலைவன் உரை நிகழ்த்துவார் தன் கரை படிந்த குரலால்....

1.என் இனம் இத்தனை நாட்களாகச் செத்துக் கொண்டிருக்கிறது. தந்தி கொடுத்தோம், மனிதச் சங்கிலி ஊர்வலம் நடத்தினோம், (ஜெயலலிதா குடைச்சல் கொடுத்தும் இராமேசுவர‌த்தில் பேசிய தம்பி சீமான், அமீரை, வைகோ மற்றும் விமானத்தில்போய் ஏற்றி வந்து கண்ணப்பனை கைது செய்தோம்). இப்படி ஏகக் காலத்தில் ஆளும் கட்சி எதிரிக் கட்சி என வித்தியாசம் பாராது கழகம் தமிழனுக்கு கண்ணீர் வடித்து கருணை செய்யக் கேட்கிறது ஆனால் இந்த மத்திய ஆளும் தோழமை மன்(ண்)மோகன்சிங் அரசு மனசு இறங்கவில்லை. இனியும் தமிழன் நாதியற்றுப் போய்விடக்கூடாது (என் ம‌ன்னராட்சி என்னோடு முடிந்து என் குடும்பம் நாதியற்று விடும்) என்கிற வருத்ததில் விடுதலை வேண்டி நிற்கும் ஈழத்திற்காக மத்திய அரசிலிருந்து விலகிவிடலாம் என்று கழகப் பொதுக்குழு முடிவு செய்துள்ளது.

2.அத்துடன் வரும் தேர்தலில் ஈழத்தமிழ் உறவுகளின் உரிமைக்காக !!! குரல் கொடுத்துவரும் பா.ஜ.க வுடன் கூட்டணி அமைத்து பா.ம.க, விடுதலைச் சிறுத்தை கட்சி மற்றும் மதிமுக உடன் வரும் தேசியத் தேர்தலை சந்தித்து நாற்பதும் நமதாக்கி அன்பு நண்பர் அத்வானியை பிரதமராகவும் கழகக் (என்) குடும்பத்தில் அனைவரும் மந்திரியாகவும் சபதம் செய்யப்பட்டுள்ளது.

3. ஆகவே தமிழ் மக்களே !!! தமிழ்க்குடும்பங்கள் !!! நிம்மதியாக தமிழீழதில் வாழ வரும் தேர்தலில் மத்தியில் மாறுதல் செய்து தமிழனின் உணர்வினை உலகறிந்திட உதய சூரியனில் வாக்களிக்க கேட்டுக் கொள்கிறேன்.

4. தமிழன் நிம்மதியாக வாழ தமிழீழமே சரியா தீர்வு என்று தீர்மானம் போட்டுளோம்.

Anonymous said...

கடிதம் மிகச்சரி. அவர் நினைத்து இருந்தால் எப்படியும் ஏதாவது செய்திருக்கலாம். சாதாரண அரசியல் வாதி(வியாதி) ஆகி விட்டார்.

குடும்ப சண்டைகளை தீர்க்கவே நேரம் போதவில்லை போலும்.

பணம்.. பதவி இதை தவிர வேறு எதுவும் இல்லாது குடும்பம் போல இருக்கு.

குடும்ப தாத்தா வாக கடமை ஆற்று ஆற்று என்று உழைக்கிறார்.


"வலைப் பேச்சு பேச... வா "

சொல்வது மிக மிக சரி..

எதிர்பார்த்தது தான்..

இன்னுமா இந்த உலகம் நம்பி கொண்டு இருக்கிறது... ???

Anonymous said...

நீங்கள் கூறும்
'ஜெயலலிதாவை மன்னிக்கலாம் .அவர் நிலைப்பாடு தெரிந்தது தான் .அவர் நெஞ்சில் குத்துகின்றார் '...

எனபது மிகவும் கண்டிக்க தக்கது .. இப்படி பெரிய கட்சியாக இருந்து கொண்டு .. தமிழர் விசயத்தில் பட்டும்படாமல் நடந்து கொள்ளும் துரோகி ஜெயலலிதாவை பலர் 'அவர் அப்படிதான் ' என்று சொல்வதை பார்த்து ..
போயஸ் தோட்டத்தில் ஜெயா 'இதை இதை தான் எதிர்ப்பார்த்தேன் ' என்று கூறுவார்...

திமுக மத்திய அரசினை கண்டித்து பதவி விலகினால் மட்டும் தமிழ் மக்கள் என்ன உணர்ச்சி போங்க மீண்டும் திமுக வை தேர்ந்து எடுபார்களா என்ன ?

அப்பாவி முரு said...

மிக மிக நடு நிலையுடன், மிகுந்த எதிபார்ப்புடன் எழுதப்பட்டக் கடிதம்.
ஆனால் இந்த மாதிரியான கடிதங்களை படிக்கும் நிலையில் தமிழினத் தலைவரின் மன நிலை இல்லை என்பதே உண்மை.

தமிழ் தாத்தா இதைப் பற்றி ஒரு முடிவெடுத்துவிட்டார் எண்ட்றே நான் நினைக்கிறென். மலர் வளையங்கலுக்கு தாத்தா பெரும் ஆர்டெர் கொடுத்துவிட்டதாக கெள்வி...

முடிந்தால் நீங்களும் ஆர்டெர் கொடுத்துவிடுங்கள்.

KarthigaVasudevan said...

கடிதம் "நறுக்"குனு இருக்கு ,ஆனா படிக்க வேண்டியவங்களைப் போய்ச்சேருமா?அவங்கல்லாம் குடும்பச் சண்டைக்காக மத்தவங்களைப் பலிகொடுத்துட்டு மறுபடி அவங்களே ஒன்னு சேர்ந்துப்பாங்க,இதுல ஈழம் பத்தியெல்லாம் யோசிக்க டைம் இருக்குமா?இதான் என்னோட டவுட்?

Anonymous said...

mr m.k should read this letter.
babu from melbourne

Anonymous said...

உங்கள் பதிவைப் படித்த பின்னர் சிலர் எழுதிய கிண்டல் பதிவுகள் தொடரும்வரை கலைஞரும் மாறமாட்டார். முடிந்தால் உங்கள் பதிவை குமுதம்/விகடனுக்கு அனுப்பிவைக்க வேண்டும்.

ஆகக் குறைந்தது கனிமொழியிக்கு அனுப்பவும்.

மிக நேர்மையான பதிவு. கலைஞர் வாசித்தால் நிச்சயம் வருந்துவார்.

உங்களைப்போன்ற பல இலட்சம் உடன்பிறப்புக்களை கழகம் இழந்துகொண்டு வருகின்றது.

ஜெயலலிதாவின் வளர்ச்சிக்கு கலைஞரின் அலட்சிய்மே உரமாக அமைந்துவிடுகின்றது.


வ‌ர‌லாறு என்ன‌ கூற‌ப்போகிற‌து என்ப‌தை க‌லைஞ‌ர் யோசிக்க‌ வேண்டிய‌ கால‌ம் இது.
கால‌த்திற்காக‌ க‌லைஞ‌ர் காத்திருக்கின்றாரா? ஆனால்
கால‌ம் க‌லைஞ‌ருக்காக‌ காத்திருக்குமா?


ஒரு ஈழ‌த்து உற‌வு

பழமைபேசி said...

பழமைபேசி said...
//
மொழிக்கும், தமிழ் இனத்திற்கும், சமுதாயத்திற்குமான‌ ஒரு அறப் போராட்டம்ன்னு வந்தா, கிடைச்ச‌து வாய்ப்புன்னு நல்லா ஒக்காந்து வடை போண்டா சாப்ட்டுட்டு காணொளியில காலத்தை ஓட்டுற நாம, சங்கத் தலைவனுக்கு ஒன்னுன்னா கெடந்து தவிக்கறமே?
//

அது சரி said...
மொழி, இன‌ம் என்ப‌த‌ன் மேலும் குறுகிய‌ பார்வையே என் ஜாதி, என் ம‌த‌ம், என் மாநில‌ம், என் ஊரு, என் தெரு, என் வீடு என்ப‌து என் க‌ருத்து. நீங்க‌ள் மொழிக்காக‌ போராடுவீர்க‌ள்..அதை மேலும் குறுக்கு சில‌ர் ஜாதிக்காக‌ போராடுகிறார்க‌ள்.


அது சரி அண்ணாச்சி,

மேல குடுத்து இருக்கிறது என்னோட கேள்வியும் உங்க பதிலும். கேள்வியில ஆதங்கப்பட்ட மாதிரி, மொழி, இனத்துக்காக மக்கள் குரல் கொடுக்காத வரை கலைஞர்னால பெரிசா ஒன்னும் செய்ய முடியாது இராசா. மக்கள்கிட்ட எழுச்சி இருக்குன்னு தெரிஞ்சாப் போதும், எதிர் அணியே கூட தமிழருக்கு ஆதரவா களத்துல இறங்கும்.

அதை விடுங்க, இன உணர்வு கொள்ளுறதை ஆதரிக்கிறீர்களா இல்லையா?

அது சரி(18185106603874041862) said...

மறுமொழியிட்ட அனைவருக்கும் நன்றி... இன்னும் சிறிது நேரத்தில் விளக்கமாக மறுமொழி சொல்கிறேன்...

பழமைபேசி அண்ணாச்சி, நீங்கள் எனக்கு ஒரு கேள்வி வைத்திருக்கிறீர்கள்...உங்களுக்கான உடனடி பதில், இன உணர்வை நான் ஆதரிக்கவில்லை...என்னுடைய இந்த பதிவு இன உணர்வின் பேரில் எழுதியது அல்ல..

விளக்கமான பதில் பின்னர்....

குப்பன்.யாஹூ said...

நீங்க காமெடி கீமடி பண்ணலியே.

தமிழினத் தலைவர்க்கு சோனியா அம்மையார் கோபம் கொள்ள கூடாதே என்ற பெரிய பொறுப்பு உள்ளபோது நீங்க என்னடான்னா தமிழினம், இலங்கை தமிழார் இன்னல் ன்னு சொல்லி காமிடி பண்றீங்களே.

தமிழ் இனத் தலைவர்க்கு பேரன் தயாரித்து வெளி வரும் தெனாவட்டு, படிக்காதவன் ப்ரிவியூ பாக்கவே நேரம் போத வில்லை, இதில் இலங்கை பிரச்னைக்கு, மின் வெட்டு பிரச்சனைக்கு, பெட்ரோல் பிரச்சனைக்கு எங்கு நேரம்.

தாத்தாவை விட பேரன்மார்கள் ௧௬ அடி பாய்கிறார்கள்.

தங்கள் நிறுவனத்தின் (தினகரன் மதுரை) மூன்று ஊழியர்கள் கொலைக்கு மூல காரணமான அழகிரி யுடன் தோளோடு தோள் சாய்ந்து காட்சி கொடுக்கிறார்கள். எங்களுக்குள் காற்று கூட புக முடியாது, நாங்கள் ஒற்றுமையாக உள்ளோம் என்று முழ்க்கம் வேறு.


ஊழியர்கள் இருந்தால் என்ன இறந்தால் என்ன , என்று பேரன்மார்கள் என்ன அழகாக தாத்தா கற்று தந்த கம்யூனிச கொள்கைகளை கடை பிடிக்கிறார்கள்.

அது சரி(18185106603874041862) said...

//
நட்புடன் ஜமால் said...
மிகவும் வேதனையான விடயங்கள் ...
09 January 2009 23:47
//

வருகைக்கு நன்றி ஜமால்...இது ஒரு துக்கத்தின் காரணமாக எழுதப்பட்ட பதிவே.

அது சரி(18185106603874041862) said...

//
பழமைபேசி said...
அண்ணாவும், நாற்பது ஆண்டு கால நண்பரும் இப்படி என்னைத் தவிக்க விட்டு விட்டுச் சென்றுவிட்டனரே?

09 January 2009 23:55
//

தெரியவில்லை...ஆனால் அதிகம் தவிப்பது மக்களாகத் தான் இருக்கக்கூடும்.

அது சரி(18185106603874041862) said...

//
வெத்து வேட்டு said...
1980களில் ஜே.வி.பியும், இலங்கை அரசும் செய்த இனப்படுகொலைகள் உங்களுக்கு தெரியாதா?? எத்தனை தாய்களும், அவர்கள் வயது வராத மகள்களும் கற்பழிக்கப்பட்டு, லாரி டயருடன் கட்டி, பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டனர்??? இந்த சூழ்நிலையில் அவர்கள் துப்பாக்கி எடுப்பதை தவிர உண்ணாவிரதமா இருக்க முடியும்??

are you loosu? or LTTE's Propaganda machine?
//

எனக்கு தெரிந்தததை நான் நம்புவதைத் தான் நான் எழுத முடியும்...நீங்கள் நினைப்பதை நான் எப்படி எழுத முடியும்??

உங்களுடன் எனக்கு எந்த அறிமுகமும் இல்லை.. உங்களுக்கு மாற்று கருத்துக்கள் இருக்கலாம், தவறில்லை....எந்த கருத்தும் சொல்லாமல்,ஆனால் அறிமுகம் இல்லாத ஒருவரை லூசு என்று அழைக்கும் உங்களைப் போன்றவர்களுக்கு பதில் சொல்ல எனக்கு விருப்பமில்லை!!!

அது சரி(18185106603874041862) said...

//
குடுகுடுப்பை said...
கலைஞர் மனசு வைத்தால் இலங்கையில் சமாதானப்பேச்சு வார்த்தை தொடங்க முடியும்.
//

கருத்துக்கு நன்றி குடுகுடுப்பை...என் விருப்பமும் அது தான்...யார் ஜெயிக்கிறார்கள் என்பதை விட, சாதாரண மக்கள் தங்கள் சாதாரண வாழ்க்கையை மரண பயமில்லாமல் வாழ வழி செய்ய வேண்டும் என்பது மட்டுமே என் விருப்பம்..

தி.மு.க தலைவர் முனைந்தால் அது நடக்கக் கூடியதே என்றும் நான் நினைக்கிறேன்..

அது சரி(18185106603874041862) said...

//
Sen said...
I am one of those who believed in
தமிழினத் தலைவர்.
As you told I too think he cheated us...:-(
//

கருத்துக்கு நன்றி சென். அவரது நடவடிக்கைகள் குறித்து எனக்கு வருத்தமே.

அது சரி(18185106603874041862) said...

//
நிலவு பாட்டு said...
சரியான பதிவு, கலைஞரே கண்டிப்பாக இவரை(முரண் தொடை) போன்று லட்சக்கணக்கானோர் இப்படி எண்ண துவங்கி விட்டனர்.

10 January 2009 00:13
//

உண்மை...எனக்கு தோன்றிய கேள்விகள் எனக்கு மட்டுமே தோன்றியது என்று நான் எண்ணவில்லை... பல லட்சக்கணக்கான மக்கள்/தி.மு.க தொண்டர்களுக்கு இதே கேள்விகள் இருக்கக்கூடும்.

அது சரி(18185106603874041862) said...

//
கபீஷ் said...
//உங்களை விடுவிக்க வேண்டும் என்று உண்ணாவிரதம் இருந்து போலீசிடன் அடிவாங்கிய அப்பாவிகளில் நானும் ஒருவன்//

நீங்க உண்மையிலேயே அப்பாவிதான் போலிருக்குது. :-):-)
கொஞ்சம் விவரமானவர்னு தப்பா புரிஞ்சிகிட்டேன் :-):-)

10 January 2009 00:18
//

வாங்க கபீஷ்....சில நேரங்களில் எல்லாரும் அப்பாவி தான் என்று நினைக்கிறேன்...

ஆனால், நான் குறிப்பிட்ட விஷயம் அப்பாவித் தனம் மட்டும் காரணமல்ல. ஒரு எண்பது வயது முதியவரை அதிகாலையில் வீடு புகுந்து கைது செய்வது, தர தரவென்று இழுத்து போவது போன்ற செயல்களை என்னால் ஒப்புக் கொள்ள முடியவில்லை.

அவரது அரசியல் மீது எனக்கு எப்பொழுதோ நம்பிக்கை போய்விட்டது...ஆனால் அதற்காக அன்று அவர் கைது செய்யப்பட்ட விதம் இன்றைக்கும் எனக்கு ஒப்புதல் இல்லை.

அது சரி(18185106603874041862) said...

//
Anonymous said...
//இப்பொழுது நடப்பது புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் நடக்கும் போர் என்று நீங்கள் சொல்கிறீர்களா?? அப்படியானால், பள்ளி மீது குண்டு வீசி, குழந்தைகளை கொன்றது?? //
புலிகள் தமிழ் குழந்தைகளை பலவந்தமாக கடத்தி கொண்டு சென்று பள்ளியில் வைத்து தங்கள் யுத்தத்திற்காக பயிற்சி கொடுத்த போது தான் அந்த அநியாயம் நடந்தது.
//

நடந்தது அநியாயம் என்று ஒப்புக் கொண்டமைக்கு நன்றி...இதற்கு காரணம் புலிகளா இல்லை இலங்கை அரசா என்று ஆராய்வதை விட இத்தகைய செயல்கள் இனி நடக்கக்கூடாது என்பது மட்டுமே என் விருப்பம்...

இரண்டு பக்கத்திற்கும் இடையில் மாட்டி நசுங்குவது மக்கள் தானே?

அது சரி(18185106603874041862) said...

//
Viswanarayan said...
சும்மா நச் நச்சுன்னு கேட்டிருக்கீங்க. நம்ம தலைவருக்கு யாராவது அனுப்பி வையுங்கப்பா.

10 January 2009 00:56
//

வருகைக்கு நன்றி விஸ்வநாரயண்... முன்பே சொல்லியபடி அது என் தனிப்பட்ட ஒருவனின் கேள்விகள் என்று நான் நினைக்கவில்லை...பலருக்கும் இதே போன்று கேள்விகள் இருக்கலாம்..

அது சரி(18185106603874041862) said...

//
வலைப் பேச்சு பேச... வா !!! said...
திருமங்கலம் தேர்தல் முடிவுக்கு பின்பு நடக்கப் போகும் நாடகம்!!!
தி.மு.க வென்றால் மீண்டும் காங்கிரசுக்கு கட்டுப்பட்டுக் கழக(கலக) ஆட்சி தொடரும். இல்லை என்றால் இலங்கையில் நடக்கும் இன அழிப்பு மீண்டும் கண்ணை உருத்தும். உடனே தமிழ்மான உணர்வு மேலிட உலகத் தமிழர் தலைவன் உரை நிகழ்த்துவார் தன் கரை படிந்த குரலால்....
//

வலைப் பேச்சு,

இது வரை நடப்பதை வைத்துப் பார்க்கும் போது நீங்கள் சொல்வதும் நடக்கலாம்..

அது சரி(18185106603874041862) said...

//
Anonymous said...
கடிதம் மிகச்சரி. அவர் நினைத்து இருந்தால் எப்படியும் ஏதாவது செய்திருக்கலாம். சாதாரண அரசியல் வாதி(வியாதி) ஆகி விட்டார்.


இன்னுமா இந்த உலகம் நம்பி கொண்டு இருக்கிறது... ???

10 January 2009 07:49
//

உங்களின் கடைசிக் கேள்வி, உண்மையில் அவர் கேள்வியாகவும் இருக்கலாம்..

அது சரி(18185106603874041862) said...

//
muru said...
மிக மிக நடு நிலையுடன், மிகுந்த எதிபார்ப்புடன் எழுதப்பட்டக் கடிதம்.
ஆனால் இந்த மாதிரியான கடிதங்களை படிக்கும் நிலையில் தமிழினத் தலைவரின் மன நிலை இல்லை என்பதே உண்மை.
//

வருகைக்கு நன்று முரு.

நான் ஒரு சாதாரண மனிதனின் நிலையில் இருந்து எழுதியிருக்கிறேன்...சாதாரண மனிதனுக்கு ஏது கட்சியும் கொடியும்? அதனால் நடுநிலையாக தோன்றலாம்.

ஆனால் எதிர்பார்ப்புடன் எழுதவில்லை...நம்பிக்கை இழந்த நிலையில் எழுதப்பட்டது இது.

அது சரி(18185106603874041862) said...

//
மிஸஸ்.டவுட் said...
கடிதம் "நறுக்"குனு இருக்கு ,ஆனா படிக்க வேண்டியவங்களைப் போய்ச்சேருமா?அவங்கல்லாம் குடும்பச் சண்டைக்காக மத்தவங்களைப் பலிகொடுத்துட்டு மறுபடி அவங்களே ஒன்னு சேர்ந்துப்பாங்க,இதுல ஈழம் பத்தியெல்லாம் யோசிக்க டைம் இருக்குமா?இதான் என்னோட டவுட்?
//

வாங்க மிஸஸ் டவுட்..

உங்கள் கேள்விகள் மிகச்சரியே.. ஆனால் அதற்கு அவர் எதிர்கால செயல்கள் மட்டுமே பதில் சொல்ல முடியும்.

ராஜ நடராஜன் said...

கலைஞரின் தடம் புரளுக்கு ஏதாவது ஆழ்ந்த நமக்கெல்லாம் தெரியாத காரணங்கள் இருக்கக்கூடும்.மத்திய அரசு வேறு முனையில் நெருக்குகிறதோ என்னவோ?ஈழத்துக்கு வெளிப்படையாக மக்கள் குரல் ஒலிப்பதற்கு துவக்கமாக இருந்ததே கலைஞரின் குரல்தான்.அனைத்து கட்சிகளின் ஆதரவோடு சட்டசபையிலேயே ஆதரவு நிலையெடுத்தும் பின் தமிழக பல்வித கவன ஈர்ப்பு போராட்டங்கள் நடந்தும் பின் கலைஞரின் நிலையும்,மத்திய அரசின் பாராமுகமும் கவலைக்கும் கண்டனத்துக்கும் உரியது.கூடவே இலங்கை அரசு போர் முனையில் முன்னேறினாலும் அரசியல் ரீதியாக தமிழகத்தின் வெறுப்பினை ஈட்டுவது இலங்கையின் எதிர்காலத்துக்கு நல்லதல்ல.

அது சரி(18185106603874041862) said...

//
Anonymous said...
நீங்கள் கூறும்
'ஜெயலலிதாவை மன்னிக்கலாம் .அவர் நிலைப்பாடு தெரிந்தது தான் .அவர் நெஞ்சில் குத்துகின்றார் '...

எனபது மிகவும் கண்டிக்க தக்கது .. இப்படி பெரிய கட்சியாக இருந்து கொண்டு .. தமிழர் விசயத்தில் பட்டும்படாமல் நடந்து கொள்ளும் துரோகி ஜெயலலிதாவை பலர் 'அவர் அப்படிதான் ' என்று சொல்வதை பார்த்து ..
போயஸ் தோட்டத்தில் ஜெயா 'இதை இதை தான் எதிர்ப்பார்த்தேன் ' என்று கூறுவார்...

திமுக மத்திய அரசினை கண்டித்து பதவி விலகினால் மட்டும் தமிழ் மக்கள் என்ன உணர்ச்சி போங்க மீண்டும் திமுக வை தேர்ந்து எடுபார்களா என்ன ?
//

அனானிமஸ்,

உங்கள் எண்ணங்கள் ஒப்புக் கொள்ளக்கூடியதே... உங்கள் கண்டனத்தை ஏற்றுக் கொள்கிறேன்.

ஆனால் தனிப்பட்ட முறையில் ஜெயலலிதா மீது எனக்கு எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லை...அதனால் ஏமாற்றமும் இல்லை.

மற்றபடி மத்திய அரசில் இருந்து தி.மு.க விலகினால் அதனால் எந்த பயனும் இல்லை என்று எனக்கும் தெரியும்....அவர்கள் விலக வேண்டும் என்று நான் சொல்லவும் இல்லை...

ஆனால் போரிடும் இரண்டு பக்கங்களுக்கு நடுவில் மாட்டிக் கொண்டு விழிக்கும் மக்களுக்கு உதவும் வகையில் ஒரு சமரச தீர்வுக்கு முயற்சிக்க வேண்டும் என்பதே என் வேண்டுகோள்...

ஆனால் அவர் இதுவரை செய்தது வெறும் பேச்சளவில் தானே இருக்கிறது??

அது சரி(18185106603874041862) said...

//
Anonymous said...
உங்கள் பதிவைப் படித்த பின்னர் சிலர் எழுதிய கிண்டல் பதிவுகள் தொடரும்வரை கலைஞரும் மாறமாட்டார். முடிந்தால் உங்கள் பதிவை குமுதம்/விகடனுக்கு அனுப்பிவைக்க வேண்டும்.

ஆகக் குறைந்தது கனிமொழியிக்கு அனுப்பவும்.

மிக நேர்மையான பதிவு. கலைஞர் வாசித்தால் நிச்சயம் வருந்துவார்.

உங்களைப்போன்ற பல இலட்சம் உடன்பிறப்புக்களை கழகம் இழந்துகொண்டு வருகின்றது.

ஜெயலலிதாவின் வளர்ச்சிக்கு கலைஞரின் அலட்சிய்மே உரமாக அமைந்துவிடுகின்றது.


வ‌ர‌லாறு என்ன‌ கூற‌ப்போகிற‌து என்ப‌தை க‌லைஞ‌ர் யோசிக்க‌ வேண்டிய‌ கால‌ம் இது.
கால‌த்திற்காக‌ க‌லைஞ‌ர் காத்திருக்கின்றாரா? ஆனால்
கால‌ம் க‌லைஞ‌ருக்காக‌ காத்திருக்குமா?


ஒரு ஈழ‌த்து உற‌வு

10 January 2009 12:20
//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அனானிமஸ்.

கலைஞரோ திரு.கனிமொழியோ இதை வாசிப்பார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை...இதில் சொல்லியிருக்கும் விஷயங்கள் எதுவும் அவர்களுக்கு தெரியாததும் இல்லை...

ஆனால் எந்த காரணத்திற்காகவது துயரத்தில் இருக்கும் மக்களுக்கு விடிவு பிறந்தால் அது நல்லது என்பதே என் விருப்பம்...

அது சரி(18185106603874041862) said...

//
babu said...
mr m.k should read this letter.
babu from melbourne

10 January 2009 11:05
//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மெல்போர்ன் பாபு.

அது சரி(18185106603874041862) said...

//
அது சரி அண்ணாச்சி,

மேல குடுத்து இருக்கிறது என்னோட கேள்வியும் உங்க பதிலும். கேள்வியில ஆதங்கப்பட்ட மாதிரி, மொழி, இனத்துக்காக மக்கள் குரல் கொடுக்காத வரை கலைஞர்னால பெரிசா ஒன்னும் செய்ய முடியாது இராசா. மக்கள்கிட்ட எழுச்சி இருக்குன்னு தெரிஞ்சாப் போதும், எதிர் அணியே கூட தமிழருக்கு ஆதரவா களத்துல இறங்கும்.

அதை விடுங்க, இன உணர்வு கொள்ளுறதை ஆதரிக்கிறீர்களா இல்லையா?
//

நான் முன்பே சொல்லியது போல் பாதிக்கப்படுபவர்கள் தமிழர்கள் என்பதால் நான் இதை எழுதவில்லை...இன உணர்வு காரணமாகவும் எழுதவில்லை.. பாதிக்கப்படுபவர்கள் சாதாரண தனிமனிதர்கள் என்பதாலேயே எழுதினேன்.

டார்ஃபரில் பாதிக்கப்படும் குழந்தைகளும், சோமாலியாவில் அடுத்த வேளை உணவுக்கு வாடும் குழந்தைகளும், பாலஸ்தீனத்தில் குண்டடி பட்டு மருந்துக்கு வழியின்றி அழும் குழந்தைகளும் எனக்கு இதே துக்க உணர்வையே தோற்றுவிக்கின்றனர்.

இதற்கு குரல் கொடுக்க இன உணர்வு, மொழி உணர்வு தேவையில்லை என்பது என் கருத்து..

உண்மையில், இலங்கைப்பிரச்சினையின் அடிப்படையே சிங்கள இன உணர்வு அல்லவா?? காவிரிப் பிரச்சினையின் அடிப்படை கன்னட இன உணர்வு அல்லவா??

என் இனம் என்பதை விட, மனித இனம் என்பதே என்னால் ஒப்புக் கொள்ள முடிகிறது..

நான் உண்மையில் இந்தியை எதிர்க்கவில்லை..ஆனால் இந்தி திணிப்பை கடுமையாக எதிர்க்கிறேன்... யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் படிக்கலாம்...ஆனால் இந்த மொழியை தான் படிக்க வேண்டும் என்று சொல்வது திணிப்பாகிறது...

மற்றபடி, தமிழ் மொழி என்று அல்ல, கன்னட மொழி, தெலுங்கு மொழி என்று மற்ற மொழிகளும் அழிக்கப்பட்டால் அதை ஒப்புக் கொள்ள முடியாது...

என் மொழிக்காகத் தான் குரல் கொடுப்பேன், என் இனத்துக்காக தான் குரல் கொடுப்பேன் என்பது எனக்கு சரியாக படவில்லை...அந்த வட்டத்தை விட்டு வெளியே வந்து வெறும் மனிதனாக இருந்து பாருங்களேன்!

உங்கள் பதிவுக்கான பின்னூட்டத்தில் சொல்லியபடி, மொழி/இன உணர்வுகள் முக்கியம் என்றால் விரைவில் அது ஜாதி, தெரு என்று நிறம் மாற அதிக நாளாகாது.

அது சரி(18185106603874041862) said...

//
குப்பன்_யாஹூ said...
நீங்க காமெடி கீமடி பண்ணலியே.

தமிழினத் தலைவர்க்கு சோனியா அம்மையார் கோபம் கொள்ள கூடாதே என்ற பெரிய பொறுப்பு உள்ளபோது நீங்க என்னடான்னா தமிழினம், இலங்கை தமிழார் இன்னல் ன்னு சொல்லி காமிடி பண்றீங்களே.

தமிழ் இனத் தலைவர்க்கு பேரன் தயாரித்து வெளி வரும் தெனாவட்டு, படிக்காதவன் ப்ரிவியூ பாக்கவே நேரம் போத வில்லை, இதில் இலங்கை பிரச்னைக்கு, மின் வெட்டு பிரச்சனைக்கு, பெட்ரோல் பிரச்சனைக்கு எங்கு நேரம்.

தாத்தாவை விட பேரன்மார்கள் ௧௬ அடி பாய்கிறார்கள்.

தங்கள் நிறுவனத்தின் (தினகரன் மதுரை) மூன்று ஊழியர்கள் கொலைக்கு மூல காரணமான அழகிரி யுடன் தோளோடு தோள் சாய்ந்து காட்சி கொடுக்கிறார்கள். எங்களுக்குள் காற்று கூட புக முடியாது, நாங்கள் ஒற்றுமையாக உள்ளோம் என்று முழ்க்கம் வேறு.


ஊழியர்கள் இருந்தால் என்ன இறந்தால் என்ன , என்று பேரன்மார்கள் என்ன அழகாக தாத்தா கற்று தந்த கம்யூனிச கொள்கைகளை கடை பிடிக்கிறார்கள்.
10 January 2009 14:09
//

காமெடி எல்லாம் இல்லை குப்பன் யாஹூ!

நீங்கள் கோபத்துடன் சொல்லியிருக்கிறீர்கள்...கிட்டத்தட்ட அதே விஷயத்தை நான் வேறு விதமாக சொல்லியிருக்கிறேன்.

அது சரி(18185106603874041862) said...

//
ராஜ நடராஜன் said...
கலைஞரின் தடம் புரளுக்கு ஏதாவது ஆழ்ந்த நமக்கெல்லாம் தெரியாத காரணங்கள் இருக்கக்கூடும்.மத்திய அரசு வேறு முனையில் நெருக்குகிறதோ என்னவோ?ஈழத்துக்கு வெளிப்படையாக மக்கள் குரல் ஒலிப்பதற்கு துவக்கமாக இருந்ததே கலைஞரின் குரல்தான்.அனைத்து கட்சிகளின் ஆதரவோடு சட்டசபையிலேயே ஆதரவு நிலையெடுத்தும் பின் தமிழக பல்வித கவன ஈர்ப்பு போராட்டங்கள் நடந்தும் பின் கலைஞரின் நிலையும்,மத்திய அரசின் பாராமுகமும் கவலைக்கும் கண்டனத்துக்கும் உரியது.கூடவே இலங்கை அரசு போர் முனையில் முன்னேறினாலும் அரசியல் ரீதியாக தமிழகத்தின் வெறுப்பினை ஈட்டுவது இலங்கையின் எதிர்காலத்துக்கு நல்லதல்ல.

10 January 2009 18:51

//

வாங்க நடராஜன்...வேறு ஏதேனும் ஆழ்ந்த காரணங்கள் இருக்கக் கூடும்...ஆனால் எனக்கு நம்பிக்கையில்லை....நம்பிக்கை இழப்பின் வெளிப்பாடே இந்த பதிவு...

ஆனால் நீங்கள் சொல்வதில் ஒரு விஷயம் உணமை...கலைஞரின் குரலுக்கு மற்ற குரல்களை விட அதிக பலமுண்டு...அதனாலேயே அவர் முக்கிய பங்காற்ற வேண்டும் என்று எனக்கு தோன்றுகிறது..

Anonymous said...

//நடந்தது அநியாயம் என்று ஒப்புக் கொண்டமைக்கு நன்றி...இதற்கு காரணம் புலிகளா இல்லை இலங்கை அரசா என்று ஆராய்வதை விட இத்தகைய செயல்கள் இனி நடக்கக்கூடாது என்பது மட்டுமே என் விருப்பம்...//
தங்கள் பதிலுக்கு நன்றி.நிச்சியமாக இப்படியான இத்தகைய செயல்கள் இனி நடக்கக்கூடாது.அதற்கு யுத்த வெறி பிடித்த புலியை ஆதரிக்க முடியாது. தங்களுடைய யுத்தத்தினால் நடக்கும் எதிர் விளைவுகளை மட்டும் தமிழ்நாட்டில் மிக தந்திரமாக பிரசாரமாக்குகிறார்கள்.
தங்கள் குழந்தைகளை புலிகள் யுத்ததிற்க்கு பல கடத்தி சென்று விடுவார்களே என்ற பயத்தில் இலங்கை தமிழ் பெற்றேர்கள் இருக்கிறார்கள்.வெளிநாட்டில் பாதுகாப்பாகவும் வசதியாகவும் இருப்பவர்கள் தான் யுத்த படம் காட்டி கொண்டு இருக்கிறார்கள்.

பழமைபேசி said...

//நீங்கள் தமிழின தலைவராக எழுதப்படுவீர்களா, இல்லை தமிழ்நாட்டில் வந்து சென்ற மற்றொரு அரசியல்வாதியாக இனம் காணப்படுவீர்களா என்பது உங்கள் கையில் தான் உள்ளது...
//

//என் மொழிக்காகத் தான் குரல் கொடுப்பேன், என் இனத்துக்காக தான் குரல் கொடுப்பேன் என்பது எனக்கு சரியாக படவில்லை...அந்த வட்டத்தை விட்டு வெளியே வந்து வெறும் மனிதனாக இருந்து பாருங்களேன்!//

இந்த இரண்டிலும் உள்ள இன என்ற சொல் முரணாக உள்ளதே நண்பரே! இன உணர்வு என்றால் மற்றவற்றை எதிர்ப்பது என்பது அல்ல, காப்பது என்றும் எடுத்துக் கொள்ளலாம். நீங்கள் சொல்வது வெறித்தனம்!

உங்களைப் போன்று காப்பதை, எதிர்த்தல் என்று எண்ணியும், எண்ண வைக்கப்பட்டதும்தான் இன்று பார தூர விளைவுகளும், கலைஞர் இன்னும் ஒரு படி மேல் சென்று போராட முடியாததின் காரணமும் ஆகும்.

வெண்காட்டான் said...

அருமையான கடிதம்.

// வெத்துவேட்டு
are you loosu? or LTTE's Propaganda machine? //

வலைப்பதிவர்களே கவனியுங்கள். அதாவது ஏகாதிபத்தியத்தின் பிராமணியத்தின் இந்திய நடுவன் அரசின் பாசிச சிறிலங்கா அரசின் அமெரிக்காவின் குரல் தான் அது. இப்படித்தான் இன்றய உலகம் போராட்டத்தை மழுங்கடிக்கின்றது. உண்மையை சொன்னால் உடனே அவன் தீவிரவாதி.


// புலிகள் தமிழ் குழந்தைகளை பலவந்தமாக கடத்தி கொண்டு சென்று பள்ளியில் வைத்து தங்கள் யுத்தத்திற்காக பயிற்சி கொடுத்த போது தான் அந்த அநியாயம் நடந்தது. //

அப்படியென்றால் பள்ளிப்பிள்ளையும் கொல்லலாம். உங்கள் பி்ள்ளை அதில் உடல் சிதறி இறந்திருந்தால் இப்படி ஈனத்தனமாக சொல்வீர்களா. இதில் ஒரு விடயம் ஞாபகம் வருகிறது.
இதே கருத்தை கெகலிய ரம்புக்கல (சிறிலங்கா அரசின் ஊதுகுழல் அமைச்சர்) சிறுவர்களோ சிறுமிகளோ ஆயுதம் ஏந்தினால் அவர்கள் தீவிரவாதிகளே. ஏனய்யா ஜுலியன் வாலா பாக்கில் கொன்றது நியாயமா? அது நியாயம் என்று சொன்னவர் மகாத்மா காந்தி. அவர் சொன்ன காரணம் அகிம்சை வழியில் போராடினவர்கள் போக சொன்னபோது போகாதது. அப்படிப்பட்ட நியாயத்தில் பார்த்தால் நீங்கள் சொல்வது நியாயம் தான். ஆனால் அனுராதபுரத்த்தில் புலிகள் 200 இராணுவத்தை கொன்றபோது இதே கெகலிய சொன்னார் ஆயுதமற்ற இராணுவத்தை புலிகள் கொன்றுவிட்டனர் என்று. இதுதான் ஆளும்வர்க்கம். வேத்துவேட்டின் கருத்துக்கும் உங்களின் கருத்துக்கும். வித்தியாசம் இல்லை. வெத்து வேட்டு ஒரு முழுஎதிர்ப்பாளர். இப்போது உங்களின் முகமும் தெரிகிறது. ஆனால் விடுதலைப்புலிகளை எதிர்பதற்கு ஏதாவது புதிதாக சொல்லுங்களேன்.
நடத்ததை திருப்பித் திருப்பி திரித்துக் கூறினால் அது உண்மையாகிவிடும் வேதங்களிலும் வரலாற்றிலும். தனிப்பட்ட காரணங்ககளுக்காக அப்பாவி குழந்தைகள் பலியானதை உங்கள் காலில் விழுந்து கேட்கிறேன். எம் மக்களின் சாவிலும் பிணத்தித்திலும் பிழைப்பு நடத்தாதீர்கள். அந்த பாவம் உங்களை சும்மா விடாது என்று மூட்டாள்தனமாக நான் சொல்லமாட்டேன். அங்கு காயப்படட பெண் ஒருவரை சிறிலங்கா அரசு கண்டி மருத்துவமனையில் எடுத்துச் சென்று பொய்வாக்குமூலம் வாங்கி டிவியில் காட்டியது. பின் அந்த குழந்தை வவுனியாவில் (இராணுவ கட்டுப்பாடு பகுதி) இறந்தது. ஏன் அந்த குழந்தைக்கு உரிய சிகிச்சை அழிக்கவில்லை. காரணம் அது தமிழ்க்குழந்தை. அவர்களுக்கு தேவை உங்கள் மாதிரி பிண்ந்தின்னிகளுக்கும் பிணந்தின்னிகளின் கதையைக்கேட்டு சொல்லும் வெத்துவேட்டுக்களுக்கும் ஒரு பிடி அவல். அதை நீங்கள் நன்றாக மெல்லுவீர்கள். நல்லவேளை அந்த பிள்ளை வவுனியாவில் இறந்தது. வன்னியில் உள்ள வீட்டில் இறந்திருந்தால் இன்று நீங்கள் இதே பின்னுட்டத்தில் புலிகள் கொன்றுவிட்டார்கள் என்று சொல்லியிருப்பீர்கள். அவர்கள் என்ன சொன்னாலும் நீங்கள் செய்விர்கள்தானே.

பழமைபேசி said...

//நான் முன்பே சொல்லியது போல் பாதிக்கப்படுபவர்கள் தமிழர்கள் என்பதால் நான் இதை எழுதவில்லை...இன உணர்வு காரணமாகவும் எழுதவில்லை.. பாதிக்கப்படுபவர்கள் சாதாரண தனிமனிதர்கள் என்பதாலேயே எழுதினேன்.//

நீங்கள் முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கப் பார்க்கிறீர்கள். தமிழினம் என்பதனாலேயே, இனைத்தின் மேல் பற்றுக் கொண்ட தலைவரைச் சாடி உள்ளீர்கள். தனி மனிதர்களுக்காகப் போராட, வேறு தலைவரே இல்லையா? கலைஞர் மட்டும்தான் இருக்கிறாரா??

வெண்காட்டான் said...

முரண்தொடை அவர்களே உங்களின் பதிவில் கொஞ்சம் அதிகமாகவே எழுதிவிட்டேன். மன்னித்துக்கொள்ளுங்கள்.

அது சரி(18185106603874041862) said...

//
பழமைபேசி said...
//நீங்கள் தமிழின தலைவராக எழுதப்படுவீர்களா, இல்லை தமிழ்நாட்டில் வந்து சென்ற மற்றொரு அரசியல்வாதியாக இனம் காணப்படுவீர்களா என்பது உங்கள் கையில் தான் உள்ளது...
//

//என் மொழிக்காகத் தான் குரல் கொடுப்பேன், என் இனத்துக்காக தான் குரல் கொடுப்பேன் என்பது எனக்கு சரியாக படவில்லை...அந்த வட்டத்தை விட்டு வெளியே வந்து வெறும் மனிதனாக இருந்து பாருங்களேன்!//

இந்த இரண்டிலும் உள்ள இன என்ற சொல் முரணாக உள்ளதே நண்பரே! இன உணர்வு என்றால் மற்றவற்றை எதிர்ப்பது என்பது அல்ல, காப்பது என்றும் எடுத்துக் கொள்ளலாம். நீங்கள் சொல்வது வெறித்தனம்!

உங்களைப் போன்று காப்பதை, எதிர்த்தல் என்று எண்ணியும், எண்ண வைக்கப்பட்டதும்தான் இன்று பார தூர விளைவுகளும், கலைஞர் இன்னும் ஒரு படி மேல் சென்று போராட முடியாததின் காரணமும் ஆகும்.
10 January 2009 20:02
//

என்ன முரண் என்று எனக்கு தெரியவில்லை....ஆனால் இனத்துக்காக குரல் கொடுங்கள் என்பதை விட, பாதிக்கப்பட்ட மனிதர்களுக்கு என்று குரல் கொடுங்கள் என்பது தான் நான் சொல்ல வருவது....ஒட்டு மொத்தமாக அப்படி இல்லை என்றாலும், அவரே சொல்லிவரும் தமிழின தலைவராகவாவது இருக்கலாமே??

ஒரு காலத்தில் எனக்கும் அது போன்ற இன உணர்வுகள் இருந்தது உண்மையே...ஆனால் இப்பொழுது தமிழினம் என்று பார்ப்பதை விட, மனித இனம் என்று பார்க்கவே என்னால் முடிகிறது.

பாதிக்கப்பட்டவர்கள் தமிழர்கள் இல்லாதிருந்து மற்றவர்களாய் இருந்தால் மட்டும் நாம் சந்தோஷப்பட முடியுமா?? போரிடும் இரண்டு பக்கங்களுக்கும் வேறு விதமான நியாயங்கள் இருக்கலாம்...ஆனால் நடுவில் மாட்டிக் கொண்டவர்களுக்கு??

அது சரி(18185106603874041862) said...

//
பழமைபேசி said...
//நான் முன்பே சொல்லியது போல் பாதிக்கப்படுபவர்கள் தமிழர்கள் என்பதால் நான் இதை எழுதவில்லை...இன உணர்வு காரணமாகவும் எழுதவில்லை.. பாதிக்கப்படுபவர்கள் சாதாரண தனிமனிதர்கள் என்பதாலேயே எழுதினேன்.//

நீங்கள் முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கப் பார்க்கிறீர்கள். தமிழினம் என்பதனாலேயே, இனைத்தின் மேல் பற்றுக் கொண்ட தலைவரைச் சாடி உள்ளீர்கள். தனி மனிதர்களுக்காகப் போராட, வேறு தலைவரே இல்லையா? கலைஞர் மட்டும்தான் இருக்கிறாரா??
10 January 2009 20:16
//

எந்த காயும் எந்த சோற்றிலும் மறைக்கவில்லை...வேறு தலைவர்கள் இருக்கிறார்கள் என்பது உண்மையே...ஆனால் பதிவில் சொன்னது போன்று மற்றவர்கள் மீது முதலிலேயே நம்பிக்கையில்லை...இவர் மீது நம்பிக்கை இருந்தது ஏமாற்றமாக போனது என்பதால் தான் இந்த பதிவே. In the end we remember not the words of our enemies but the silence of our friends.

இனத்தின் மேல் பற்றுக் கொண்டவர் என்று சொல்கிறீர்கள்....உண்மையில் அது கூட வேண்டாம், பாதிக்கப்பட்ட மக்களுக்கு என்று எடுத்துக் கொண்டாவது அவர் நினைத்தால் இதற்கு ஒரு தீர்வு கொண்டு வர முடியாதா?

பலர் முயற்சிக்கலாம், ஆனால் இலங்கை பிரச்சினையை தீர்க்க அவர் முயற்சித்தால் முடியும் என்று நான் இன்னமும் நம்புவதால் தான் அவருக்கு கேள்விகள்....

தவிர, அவரது தற்கால அரசியல் நம்பிக்கை ஊட்டும் விதமாக உள்ளதா? உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் நல்லதே..ஆனால் எனக்கு அவரது அரசியல் குறித்து நம்பிக்கையில்லை! அவநம்பிக்கையில் எழுதும் போது சாடுவதாகத் தான் அமையும்....நான் எழுதியிருக்கும் அவர் அரசியல் சம்பந்தமான கேள்விகள் இன்னும் பலருக்கு இருக்கக்கூடும்...எனக்கு தெரிந்து பலருக்கு அவரது சமீபத்திய அரசியல் ஏமாற்றத்தையே தருகிறது...என்ன செய்ய??

அது சரி(18185106603874041862) said...

//
வெண்காட்டான் said...
முரண்தொடை அவர்களே உங்களின் பதிவில் கொஞ்சம் அதிகமாகவே எழுதிவிட்டேன். மன்னித்துக்கொள்ளுங்கள்.
10 January 2009 20:18
//

இதற்கு மன்னிப்பு கேட்க அவசியம் இல்லை நண்பரே...நீங்கள் சொல்லவரும் எந்த கருத்தையும் எழுதுங்கள்...ஆனால், தனிமனித தாக்குதல்கள் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்று மட்டும் கேட்டுக் கொள்கிறேன்.

Anonymous said...

வெண்காட்டான், ஈழமக்களுக்கு
சாவை,அழிவை உண்டு பண்ணி அவர்கள் பிணத்தின் மீது பிழைப்பு நடத்துபவர்கள் யார் என்பது உங்களுக்கு தெரியும்.

Anonymous said...

பேரன்பும் பெருமதிப்புக்குமுரிய கலைஞர் கருணாநிதிக்கு, பாழடைந்துபோன எங்களுர் மாரியம்மனுக்கு ஒருவேளை கூழ் ஊற்றக்கூட வழியில்லாத துர்ப்பாக்கியர்களாய் சோதனை சுமந்து கொண்டிருக்கிறோம். ஏதோ உயிர்வாழ்கிறோம் என்பதைத் தவிர குறிப்பிட்டுச் சொல்லும்படியாக எதுவுமில்லை. உலகத்தமிழரின் தலைவர் என்று புகழப்படும் நீங்கள் நலமாயிருந்தால் தான் எம்மைப்போன்ற தமிழர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்பதால் உங்கள் நலத்துக்கு ஏக இறைவனை பிரார்த்திக்கிறேன்.
நிற்க, பட்ட கஷ்டமெல்லாம் சற்றும் விலகாமல் ஒட்டியுறைந்து தினமும் மனதை தைத்துக் கொண்டிருக்கின்றன. தாகம் தீர்க்க மழையில்லை. இரத்தம் குடிக்க குண்டு மட்டும் பொழிகிறது. எல்லாரும் ஏமாற்றுகிறார்கள். ஏன் நீங்கள் கூடத்தான். எம்மைப்பற்றி ஆக்ரோஷமாக பேசும் போதெல்லாம் எல்லாவற்றையும் மறந்து மனம் நிறைந்து களிக்கிறேன். காலம் தள்ளிப் போகும்போது உங்கள் வார்த்தைகளும் புளித்துப் போகின்றன. ஆயிரம் நுண் ஈட்டிகள் சேர்ந்து ஆழ்கலங்களை துளையிட்டு நகரும் ஒவ்வொரு நிமிடங்களிலும் மரண வேதனை தருவதுபோன்ற உணர்வுகள்... அதைத் தாங்க முடியாமல்...
உங்களுக்குத் தெரியாது ஐயா. அனுபவித்தால் தான் தெரியும்.

கண்ணீர் வடித்து வடித்து ஒருவேளை தண்ணீருக்கே தாய் தவித்திருக்க வற்றிப்போன அவள் மார்முலையை ஏக்கத்துடன் பார்க்கும் பிஞ்சுக்கு காலம் சொல்லப்போகும் பதில்தான் என்ன?

நாம் யாருக்கு என்ன கொடுமை செய்தோம்? யார் நிலத்தை நாம் பறித்தோம்? யார் உரிமைக்கு இடம் கொடுக்க மறுத்தோம்? சோதனை மாறிமாறி வரும் என்பார்கள். வருவதெல்லாம் இங்கு சோதனையாகத்தான் இருக்கிறது. போகட்டும்

இலங்கை அரசாங்கத்துக்கு நீங்கள் இருவார காலக்கெடு கொடுத்தீர்கள் அப்பாவி மக்கள் மீதான தாக்குதலை நிறுத்தாவிட்டால் தமிழ் அமைச்சர்கள் பதவி விலகுவார்கள் என்றும் அறிவித்தீர்கள் ஏன் இப்போது மெளனம் காக்கிறீர்கள்?

இந்தியப் பிரதமரை சந்தித்தீர்கள் தீர்வு கிடைக்கும் என நம்பிக்கை கூறினீர்கள் ஏன் இப்போது பதில்கேட்க மறுக்கிறீர்கள்? போராட்டத்துக்கு அழைத்தீர்கள் சங்கிலியாய் இணைந்த எம்சொந்தங்களைக் கண்டு அகமகிழ்ந்து ஆனந்தமடைந்தோம். ஏன் இடைநிறுத்தினீர்கள்?

எமது பிரச்சினை பற்றி நீங்கள் ஆற்றிய உரையை நெய்வேலி, அருப்புக்கோட்டை, பாலையப்பட்டி, மேட்டுப்பாளையம், விருதுநகர், சாத்தூர், சிவகாசி, இராசபாளையம், திருவில்லிப்புத்தூர் என எல்லா ஊர்களிலும் பிரசாரம் செய்து அந்த உரையை போட்டுக் காட்டினீர்கள். என்ன பயனாயிற்று?

எமது நாட்டின் தமிழ் அமைச்சர்கள் மீது எனக்கு துளியளவும் நம்பிக்கையும் இல்லை. அதனால் தான் உரிமையோடு உங்களிடம் கேட்கிறேன். நான் மட்டுமல்ல இங்கு இலட்சக்கணக்கானோர் உங்களின் மறுமொழிக்காகவும் அடுத்த அடிக்காகவும் காத்திருக்கிறோம்

காடு எம்மை அடைகாத்துக் கொண்டிருக்கிறது அந்தகாடு அழியும் நிலை என்று வருகிறதோ அன்று இடுகாட்டில்தான் நாம் தூங்கிக் கொண்டிருப்போம். அப்போது எமக்காக ஒரு கவிதை எழுதி தப்பித்து விடாதீர்கள்.

எம்மை ஏமாற்றத் துணிந்து எதிர்பார்ப்புகளை ஏமாற்றங்களாக்கிய ஒவ்வொருவருக்கும் இறந்த பின்னும் எம் ஆன்மா சாபமிடும். இது நிச்சயமான உண்மை.

கலைஞரே, நீங்கள் தூங்கிக் கொண்டிருப்பதாக பலர் சொல்லிக் கொள்கிறார்கள். எமது ஓலக்குரல் உங்களுக்கு தாலாட்டாய் கேட்கும் என நான் நினைக்கவில்லை. எம்மைக் காப்பாற்ற முடியாவிட்டால் சொல்லி விடுங்கள். கறைபடிந்த எமது வாழ்க்கைப் பயணத்தை அந்தக் கறையைக் கொண்டே புள்ளி வைத்து முடித்து விடுகிறோம். கோரத்தின் கைகளில் சிக்குண்டு அகோரமாய் கொடுமைப்படுத்தப்படுவதை விட மரணம் எவ்வளவோ சுகமானது

இந்தக் கடிதத்தை நீங்கள் வாசிக்கும்போது நான் உயிரோடு இல்லாமலிருக்கலாம் ஆனாலும் உயிருள்ள இந்த வரிகள் உங்கள் பதிலுக்காக காத்திருக்கும்
அன்பான நன்றிகள் எங்கள் மண் சார்பிலும் மக்கள் சார்பிலும் உங்களுக்கு! எங்களுர் மாரியம்மன் உங்களுக்கு என்றும் துணைநிற்கட்டும்

இப்படிக்கு,
ஓர் ஈழத்தமிழன்

இவன் said...

அருமையான கடிதம்! தமிழனத்துக்காக தங்களது குரல் ஒலித்துக்கொண்டே இருக்கட்டும்.

சூனிய விகடன் said...

முத்துவேலர் கருணாநிதி செத்துப் போய் ரொம்ப நாட்கள்ளகிறது பிரதர். இப்போது எஞ்சியிருப்பது "திருதராஷ்ட்ரன்" மட்டுமே. இவருக்கு துரியோதனாதிகளின் பதவி சுகமும், எதிர்காலமுமே எண்ணங்க்ளாகிப் போனது. ஈழமா ...எத்தனை ஓட்டு, பகுத்தறிவா ...எத்தனை ஓட்டு, தலித்தா .....எத்தனை ஓட்டு, தமிழா .....எத்தனை ஓட்டு..என்று ஓட்டுகளை என்னும் " கால்குலேட்டர்" ஆகிவிட்டார்.....யோசித்துப் பார்த்தால், அவர் இப்படியே தான் ஆரம்பம் முதல் இருந்துள்ளார். குட்டியாகப் பார்க்கும் போது அழாகாக இருப்பது, வயதானதும் விகாரமாகத் தெரிவது போல் , முத்துவேலர் கருணாநிதியின் விகாரம் இப்போது நம்மை உறுத்துகிறது.....அவ்வளவுதான்

வெத்து வேட்டு said...

"எனக்கு தெரிந்தததை நான் நம்புவதைத் தான் நான் எழுத முடியும்..."
this is why i said "you are loosu" (sorry for my language) because your believes about LTTE is wrong and you are believing their propaganda "stories"


ஈழ தமிழர்களும் தமிழ்நாட்டு தமிழர்களும் ஒரே இரத்தம் என்றால் ஏன் ஈழத்தை தமிழ்நாட்டோடு இணைக்க கூடாது? இதன் மூலம் ஈழ தமிழர்களின் படுகொலைகளை நிறுத்தலாம் இல்லையா?>

Anonymous said...

தன்மானம்(குடுமபம்) காக்கும் தமிழினத் தலைவருக்கு தங்களின் மடல் அருமையிலும் அருமை.

ஆனால் நீங்கள் அவரைப் பார்ப்பது எம்ஜீஆரின் மறைவுக்குப் பின் என எண்ணுகிறேன்.

அவர் முதலில் திருக்குவளையில் இருந்து ஒரு சாதாரன குடுபத்திலிருந்து வந்த சாமானியன்.(அவரே அப்படித்தான் சொல்வார்)
அவர் தஞ்சை மாவட்டதில் வாழும் ஒரு சிறு பிரிவை சேர்ந்தவர்.
அவரது சமுகப் பிரிவுக்கு பெரிய ஒட்டு வங்கி ஒன்றும் கிடையாது.

பின் எப்படி இவ்வளவு உயர்ந்த நிலைக்கு வந்தார்

அதுதான் அவர் கற்ற ராஜ (கவிழ்ப்பு)தந்திரம்

1. முதலில் சொல்லின் செல்வர் சம்பத்தை விரட்டியது.( வஞ்சக வலை பின்னி)
2.நாவலர் நெடுஞ்செழியனை பின்னுக்கு தள்ளியது( கூட்டணி தினத் தந்தி ஆதித்தனாருடன்)
3.எம்ஜீஆரை வெளியேற்றியது( முக.முத்துக்காக)
4.பேராசிரியரை கைக்குள் போட்டுக் கொண்டது(பதவி ஆசை காட்டி)
5.வைகோவை கட்சியை விட்டு நீக்கியது.( ஸ்டாலினுக்கு போட்டியாக இருக்கக் கூடாது என்பதற்காக).


எல்லாத் தடைகளையுயும் தாண்டிய நிலையில்
மகன் ஸ்டாலினுக்கு பட்டாபிஷேகம்
நடத்தி அழகு பார்க்க வேண்டிய நேரத்தில்

இலங்கை யாவது
தமிழராவது

யார் என்ன சொன்னாலும் அது செவிடன் காதில் ஊதிய சங்கு போலத்தான் .

குடுகுடுப்பை said...

வெத்து வேட்டு said...

"எனக்கு தெரிந்தததை நான் நம்புவதைத் தான் நான் எழுத முடியும்..."
this is why i said "you are loosu" (sorry for my language) because your believes about LTTE is wrong and you are believing their propaganda "stories"


ஈழ தமிழர்களும் தமிழ்நாட்டு தமிழர்களும் ஒரே இரத்தம் என்றால் ஏன் ஈழத்தை தமிழ்நாட்டோடு இணைக்க கூடாது? இதன் மூலம் ஈழ தமிழர்களின் படுகொலைகளை நிறுத்தலாம் இல்லையா?>
//
அதற்கான முயற்சிகளை ஆரம்பித்து வையுங்கள்.ஏன் இலங்கையை இந்தியாவின் ஒரு மாநிலமாக்கினாலும் சந்தோசம்தான்.கண்டிப்பாக முயற்சி செய்யுங்கள்

nimmie said...

Very touching letter.As someone said , one must look at the rise of MK or even DMK in historical contest. When they deserted EVR on frivolous charges and started to concentrate capturing political power, they have already changed from a social reforms movement to those who would compromise everything to attain state power. And 30 and more years of state power... what have they done with it?A dispassionate analysis would lead us to the same conclusion as yours, that they are the usurpers of political power solely to benefit one family and the cronies of the family.All else is window dressing.It is even more a pity that communist parties aligning with either him or Jaya in turns solely to get a few parliamentary and assembly seats.If at all there is to be a future for the Tamil people it will be from forces other than these.Amalorpavanahtna

Sundar சுந்தர் said...

உங்கள் ஆதங்கம் புரிகிறது, ஆனால் என்ன பச்சோந்தியிடம் உங்களுக்கு பிடித்த நிறத்தை மட்டும் எதிர்ப்பார்த்தால் எப்படி?

Anonymous said...

கடைந்தெடுத்த சுயநலவாதியாய் முழுவதும் மாறிவிட்ட கலைஞருக்கு கடைக்கோடி தொண்டனின் குரல் நிச்சயம் கேட்காது.அவர் உழல்வது கோடிகளில் அல்லவா?
கோபாலபுரத்துக் கோடீஸ்வரின்
இந்தப் பாராமுகத்திற்கு அவருக்கு தமிழன்னை என்ன தண்டனை தரப்போகிறாளோ?
அநியாயமாய் உயிர் விடும் இலங்கை தமிழ்ச் சகோதரர்களின் ஆன்மா நிச்சயம் இந்த கபட வேடதாரியை ஒரு போதும் மன்னிக்காது.

பழமைபேசி said...

//என்னவென்று தெரியவில்லை...உங்கள் மீது அப்படி ஒரு நம்பிக்கை...தமிழினத்திற்கு இருக்கும் ஒரே தலைவன் என்ற நம்பிக்கை...நீங்களும், அறிஞர் அண்ணாவும், நெடுஞ்செழியன், மதியழகன், பேராசிரியர் அன்பழகன், மற்றும் பல எண்ணற்ற தொண்டர்கள் இல்லாதிருந்தால் தமிழ்நாட்டில் இந்தி திணிக்கப்பட்டிருக்கும்...தமிழுக்கு சவக்கிடங்கு தோண்டப்பட்டிருக்கும் என்று இன்னமும் நம்புபவர்களில் நானும் ஒருவன். //

அது சரி அண்ணாச்சி, போகிற போக்கில் கலைஞர் தமிழினத்தின் தலைவர் என்று நான் சொல்வதாகச் சொல்லி இருக்கிறீர்கள். தமிழ் இனம், இனத்திற்கு தலைவன் என்று இன்னமும் நம்புவதாய் எழுதி இருப்பது நீங்கள். நான் இட்ட பின்னூட்டங்களின் வாயிலாகச் சொல்ல வருவது ஒன்றே ஒன்றுதான். உங்களுக்கு இன உணர்வு உள்ளது. அந்த இன உணர்வு தமிழகமெங்கும் மேலோச்சினால், தமிழனுக்கு விடிவு பிறக்கும், பிறக்க வேண்டும் என்பதே என் ஆவல்.

Anonymous said...

veththuvettu,
here you are again.defending the the srilankan govt and it's army. are you doing a part time or full time service to Srilanka govt?
Would you kindly let me know?

நசரேயன் said...

எல்லோரும் கேட்க வேண்டிய கேள்வி

Anonymous said...

Anonymous-veththuvettu,
here you are again.defending the the srilankan govt and it's army.

LTTEக்கு எதிரான கருத்து யாருமே கூறமுடியாதோ?

ஸ்வாதி said...

இந்தக் கடிதம் எங்களுக்கு வாசிக்கக் கிடைத்ததைப் போல கலைஞருக்கும் வாசிக்கக் கிடைத்திருத்தல் அவசியம். நான் இதை 10 பிரதி எடுத்து நியூயோர்க்கிலிருந்து அத்தனையையும் கலைஞரின் முகவரிக்கு அனுப்புகிறேன். இப்படி இந்தக் கடிதத்தை வாசிக்கக் கிடைத்த அனைத்து தமிழ் உணர்வாளர்களும் ஆளுக்கு 10 பிரதி அனுப்பி வையுங்களேன்... அத்தனை பத்துக்களிலும் ஒன்றாவது கலைஞர் கைதுடைக்கும் கஞ்சலாகவாவது போய் அவர் கண்களில் இந்த வரிகள் தென்படாதா என்ற அற்ப நம்பிக்கை தான். அப்போதாவது கலைஞருக்கு உறுத்துகிறதா என்று பார்க்கலாம்.
ஈழத் தமிழருக்காக அவர் எதுவுமே செய்யவில்லை என்பதற்காக மட்டுமல்ல அவருக்கு வாக்குப் போடும் மக்களின் மனநிலை இப்போது தன்னைப் பற்றி எப்படியிருக்கிறது என்பதை உணர்த்தவாவது ....இந்த மடல் அவர் கண்ணில் படுவது மிகவும் நல்லது என்று எண்ணுகிறேன்.

Anonymous said...

இன்னுமா கலைஞரை நம்புறீங்க?
அவரு அடுத்த தேர்தலில் பாஜகவிடம் பேரம் பேச போயாச்சு!
அவர் பொழ்ப்பை அவர் பார்க்கமால் அப்புறம்................

பணம் கொட்டி கிடக்கு
இனிமே ஓட்டுக்களை எல்லம் விலைபேசி வாங்கிடலாம்

நம்ம பயலுவகளும் பாசக்கரா பயலுவ

எல்லோரும் மறந்து அவரை ரொம்ம்ப நல்லவங்க சொல்லிருவான்லா

அப்புறம் சும்மாவா துட்டு கொடுப்பாரில்ல

SPIDEY said...

அண்ணே இப்ப ஓடிட்டு இருக்கறது TRAILER மட்டும் தான். MAIN FILM கலைஞரின் மரணத்திற்குப் பிறகு RELEASE ஆகும்.வாரிசுகள் சொத்து(தமிழ்நாடு) பிரிக்கும் போது நடக்கும் ACTION காட்சிகள் மெய்சிலிர்க்க வைக்க போகுது. அதனால நான் என்ன சொல்றேன இப்பவே கனிமொழி, அழகிரி, ஸ்டாலின்,maran brothers அப்பறம் நேரம் இருந்தா மு.க.முத்து எல்லாத்துக்கும் ஒரு கடிதம் எழுதி main film release ஆனதுக்குப்பரம் உங்க பதிவுல release பண்ணிருங்க . தலைவர் இங்க இருக்கிற தமிழன்களுக்கே ஒன்னும் பண்ணல இதுல அங்க இருக்குற தமிழ் சகோதரர்களுக்கு எல்லாம் பண்ணுவாருனு ஏன் பேராச படுறிங்க.
வாழ்க கலைஞர் ஒழிக தமிழ்நாடு.

Madhu Ramanujam said...

//ஈழத் தமிழருக்காக அவர் எதுவுமே செய்யவில்லை என்பதற்காக மட்டுமல்ல அவருக்கு வாக்குப் போடும் மக்களின் மனநிலை இப்போது தன்னைப் பற்றி எப்படியிருக்கிறது என்பதை உணர்த்தவாவது ....இந்த மடல் அவர் கண்ணில் படுவது மிகவும் நல்லது என்று எண்ணுகிறேன்.//

அட நீங்க வேற.... திருமங்கலத்துல ஜெயிக்கவே தலைக்கு ஐயாயிரம் ஆகுது. இதுல நாற்பதும் நமதேன்னு சொல்லணும்னா இன்னும் எத்தனை கோடி ஆகும்னு ஐயா கணக்கு பண்ணிகிட்டிருப்பாரு. அதை விட்டுட்டு, நீங்க கஞ்சல் வெங்காயம்னு கதை பேசிகிட்டிருக்கீங்க.

அது சரி(18185106603874041862) said...

பின்னூட்டமிட்டு கருத்துக்களை பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் நன்றி...தனித்தனியே மறுமொழி சொல்லாததற்கு மன்னிக்கவும்...ஆனால் நான் படித்தவரை மிகுதியான நண்பர்கள் கலைஞர் மீது வருத்தத்துடன் இருப்பதாக தெரிகிறது...இது அவருக்கும் தெரியும் என்று நம்புவோம்...நன்றி!

Anonymous said...

அது சரி, கலைஞர் ஈழ தமிழர்கள் பிரச்சினை மற்றும் அல்ல, எந்த ஒரு பிரச்சினையிலும் ஈடுபாடு காட்டுவது இல்லை என்றே தோன்றுகிறது. என்ன செய்வது?

Unknown said...

kalaizhar sariyana mudivai than edduthtirukkirar enpathe ennudava parvai. kalaizhar muthalamaisaraka illai entral nitchayamaaka namm nammudaiya shinkala ethirpai intha allavukku ullaka nattukku eduththu solli irukka mudiyadhu enpathe unmai. intha unmai kadanthakala nikalvukalil irunthu therinthu kollalam.jayalalithavin atchi kalaththil vaiko matrum nedumaran pontrorin nilamai enna enpathai neenaithu parthiramal nanmar karuthukalai pathivu seaithullar.jayalalitha mudhalvarai irukkum patchathil nam shinkla ethirppai intha allvukku pathivu seithirukka mudiyadhu.nanri