Sunday, 14 December 2008

பொன்னியின் செல்வன்: சில கேள்விகளும் ஒரு தற்குறியின் (மேலும்) சில பதில்களும்


எவ்ளோ நேரம் நான் வெய்ட் பண்றது...நேரமாச்சி கிளப்புக்கு போலாம் வா....இப்படி ஒருவர் படுத்தியதால் பொன்னியின் செல்வன் பற்றிய நேற்றைய பதிவு ஒரு அவசர ஆர்வ‌ பதிவு.. கிளப்புக்கு போய்விட்டு திரும்பி வந்து ஒரு ச்சின்ன குட்டி தூக்கம் போட்டு விட்டு எழுந்தால் ஞாயிறு மதியம் ஆகியிருக்கிறது...

என‌க்கு இருப்ப‌தை போன்றே ப‌ல‌ருக்கும் கேள்விக‌ள் இருப்ப‌து பெரிய‌ ம‌கிழ்ச்சி..பின்ன, ஒண்ணியும் பிரியலயேன்னு பொல‌ம்புன‌து என‌க்கு மட்டும் தான‌ தெரியும்..இப்ப‌ க‌ம்பெனிக்கு இவ்ளோ பேரு இருக்காங்க‌ளா..அதான் ஒரே குஜாலாக்கீது....

டாக்ட‌ர் ப்ரூனோ, ஒரிஜின‌லாக‌ கேள்விக‌ளை எழுப்பிய‌ ச‌ந்திர‌சேக‌ர‌ன் கிருஷ்ண‌ன், ம‌ற்றும் ப‌ல‌ர் கேள்விக‌ளுக்கு என‌க்கு தெரிந்த‌தை சொல்கிறேன்..

1) ஆதித்ய கரிகாலர், இறந்துதான் போனார் என்பதற்கு ஆதாரம் ஏதும் இருக்கிறதா? சமாதி, கல்வெட்டு, இரங்கற்பா இந்த மாதிரி...........அவர் தலைமறைவானதாக அல்லது சாமியாராய்ப் போய்விட்டதாகக் கூட சொல்லலாம். (சுரேஷ்..)

ஆதித்ய‌ க‌ரிகால‌ர் இற‌ந்து தான் போனார் என்று திருவால‌ங்காட்டு செப்பேடுக‌ளை ஆதார‌ம் காட்டி க‌ல்கி வாதிக்கிறார்...மேலும் ச‌ரித்திர‌த்திலும் இது உறுதிப்ப‌டுத்த‌ப் ப‌ட்டிருக்கிற‌து..

ஆனால் டாக்ட‌ர் ப்ரூனோ சொல்லியிருப்ப‌து போல் அவ‌ர் எப்ப‌டி இற‌ந்தார் என்ப‌த‌ற்கு ஆதார‌ங்க‌ள் இல்லை...அவ‌ர் கொல்ல‌ப்ப‌ட்டாரா இல்லை த‌ற்கொலை செய்து கொண்டாரா?

க‌ல்கியின் க‌தைப்ப‌டி, க‌ரிகால‌ர் நெஞ்சில் வீர‌பாண்டிய‌ன் வாள் பாய்ந்திருக்கிற‌து...(ப‌ல‌ரும் நினைப்ப‌து போல் இடும்ப‌ன் காரியின் சுருள் க‌த்தி அல்ல‌...).. அந்த‌ வாளை க‌டைசியாக‌ கையில் வைத்திருப்ப‌து க‌ரிகால‌ர் தான்...அதுவுமில்லாம‌ல் நிக‌ழ்ச்சி ப‌ல‌ நாட்க‌ளுக்கு முன்ன‌ரே ஆதித்த‌ க‌ரிகால‌ரின் ம‌ன‌ நிலை நிலைய‌ற்று இருந்த‌தாக‌ வ‌ருகிற‌து..(பார்க்க‌ பார்த்திபேந்திர‌ன் உட‌னான‌ அவ‌ர் உரையாட‌ல்க‌ள், ம‌ற்றும் இளமையில் இற‌ப்ப‌து குறித்து அவ‌ர் சிந்த‌னைக‌ள்).

க‌ல்கியின் க‌தைப்ப‌டி, நந்தினியுடன் வாதித்து கொண்டிருக்கும் ஆதித்த‌ரின் க‌டைசி வாக்கிய‌ம் "ந‌ல்ல‌து! ந‌ம் இருவ‌ருடைய‌ வாழ்க்கைக்கும் ப‌ரிகார‌ம் ஒன்று தான்! விமோச‌ன‌ம் ஒன்று தான்..இதோ, ந‌ந்தினி! என் பிராய‌ச்சித்த‌ம்!.."

இந்த‌ வ‌ச‌ன‌ம் வ‌ரும்போது தான் வ‌ந்திய‌த்தேவ‌னுடைய‌ க‌ழுத்தை நெறித்து விட்டு காள‌முக‌ வேட‌த்துட‌ன் பெரிய‌ ப‌ழுவேட்ட‌ரைய‌ர் வ‌ருகிறார்..ஆனால் அதே ச‌ம‌ய‌ம் த‌ன் முன்னே பார்க்கும் ந‌ந்தினி க‌ரிகால‌ன் த‌ரையில் கிட‌ப்ப‌தையும் அவ‌ன் மார்பில் வீர‌பாண்டிய‌ன் வாள் பாய்ந்திருப்ப‌தையும் பார்க்கிறாள்..
இனி க‌ல்கியின் வ‌ரிக‌ளிலேயே...

"(ந‌ந்தினி) க‌ண்க‌ளை துடைத்துக் கொண்டு எதிரே பார்த்தாள்.க‌ரிகால‌ன் கீழே விழுந்து கிட‌ப்ப‌தை பார்த்தாள்.அவ‌ன் உட‌லில் வீர‌பாண்டிய‌ன் வாள் பாய்ந்திருப்ப‌தையும் பார்த்தாள்"

இத‌ற்கு பின்ன‌ரே ர‌வி தாஸ‌ன் சீனில் வ‌ருகிறான்..என‌வே ர‌வி தாஸ‌ன் கொன்றிருக்க‌ முடியாது..ப‌ழுவேட்ட‌ரைய‌ர் அப்பொழுது தான் பிர‌வேசிக்கிறார்..க‌ரிகால‌ன் கையில் இருந்த‌ க‌த்தியை பிடுங்கி அவ‌ர் க‌ரிகால‌னை கொல்ல‌ கார‌ண‌ங்க‌ள் இல்லை..வ‌ந்திய‌தேவ‌னோ தூர‌மாக‌ ஒளிந்திருக்கிறான்..ம‌ணிமேக‌லை சீனிலேயே இல்லை..இருந்தாலும் க‌ரிகால‌னை கொல்ல‌ அவ‌ளுக்கு கார‌ண‌ங்க‌ள் இல்லை..
எஞ்சியிருப்ப‌து ந‌ந்தினி, க‌ரிகால‌ன் ம‌ட்டும் தான்..ஒன்று ந‌ந்தினி கொன்றிருக்க‌ வேண்டும்..இல்லை க‌ரிகால‌ன் த‌ற்கொலை செய்து கொண்டிருக்க‌ வேண்டும்..

இத‌ற்கு பின்ன‌ர் பாட்ஷா ரேஞ்சில் நான் தான் கொன்னேன் என்று ப‌ழுவேட்ட‌ரைய‌ர், ம‌ணி மேக‌லை என்று ப‌ல‌ர் சாட்சி சொல்வ‌து ந‌ம்பும்ப‌டி இல்லை..

2) அட நந்தினியின் குழந்தையின் அப்பா யார் ? some confussions are there! (ராஜி)

அது யாரென்று க‌தையில் இல்லை..ஆனால், அது ந‌ந்தினியின் குழ‌ந்தை இல்லை என்ப‌து உறுதி... கரிகால‌னுக்காக‌ காத்திருக்கும் க‌டைசி காட்சியில் "அன்று ப‌ள்ளிப்ப‌டை காட்டில் யாரோ ஒரு சிறுவ‌னை உன் ம‌க‌ன் என்று கொண்டு வ‌ந்தார்க‌ள்" என்று அவ‌ள் புல‌ம்புவ‌தாக‌ வ‌ருகிற‌து.. என‌வே அந்த‌ குழ‌ந்தை ந‌ந்தினியின் ம‌க‌ன் அல்ல‌ என்ப‌து உறுதி.

3) வீர‌பாண்டிய‌னுக்கும் ந‌ந்தினிக்கும் என்ன‌ உற‌வு? ம‌க‌ளா இல்லை காத‌லியா இல்லை இர‌ண்டுமேவா? (என்னை அடிக்க‌ வராதீர்க‌ள்..க‌தையில் வ‌ரும் பெரும் குழ‌ப்ப‌ம் இது).. க‌தையில் இர‌ண்டு வீர‌பாண்டிய‌ர்க‌ளா இல்லை ஒரே வீர‌ பாண்டிய‌னா?

முத‌லில், க‌தையில் இர‌ண்டு வீர‌பாண்டிய‌ர்க‌ள் இல்லை.. வீர‌பாண்டிய‌ ம‌ன்ன‌ர் போரில் தோற்று இல‌ங்கை ஓடுகிறார்..அங்கு பிச்சியாக‌ சுற்றிக் கொண்டிருக்கும் ம‌ந்தாகினியுட‌ன் உற‌வு ஏற்ப‌டுகிற‌து..அதில் பிற‌ந்த‌ குழ‌ந்தைக‌ள் தான் ந‌ந்தினியும், ம‌துராந்த‌க‌ சோழ‌னாக‌ வ‌ள‌ர்ந்து வ‌ரும் உத்த‌ம‌ சோழ‌னும்... ஆக மகள் என்பது உறுதி.. இதையே நந்தினியும் கடைசி காட்சியில் சொல்கிறாள்..

இதே வீர‌பாண்டிய‌ன் இல‌ங்கை அர‌ச‌னின் உத‌வியுட‌ன் ப‌டை திர‌ட்டி மீண்டும் போர் வ‌ருகிற‌து..இந்த‌ போரில் தான் ஆதித்த‌ க‌ரிகால‌னால் த‌லை வெட்ட‌ப்ப‌ட்டு இற‌க்கிறார். இந்த‌ இட‌த்தில் ந‌ந்தினி ஆதித்த‌னிட‌ம் கெஞ்சுவ‌து "இவ‌ர் என்னை ம‌ண‌ந்து கொள்ள‌ப் போகிற‌வ‌ர்...என‌க்காக‌ விட்டுவிடுங்க‌ள்..."

குழ‌ப்ப‌ம் இப்பொழுது தான் வ‌ருகிற‌து...ந‌ந்தினிக்கு வீர‌ பாண்டிய‌ன் த‌ன் த‌ந்தை என்று தெரியுமா? தெரிந்திருக்க‌ வாய்ப்பில்லை என்றே தோன்றுகிற‌து..ஆனால் வீர‌பாண்டிய‌னுக்கு க‌ண்டிப்பாக‌ தெரிந்திருக்க‌ வேண்டும்...அத‌னாலேயே அவ‌ன் ந‌ந்தினியை அர‌சியாக்குவேன் என்று சொல்லியிருக்க‌ வேண்டும்..ஏனெனில் அவ‌ள் தான் வாரிசு! ஆனால் ந‌ந்தினி அதை த‌ப்பாக‌ நினைத்துக் கொண்டிருக்க‌ இட‌ம் இருக்கிற‌து..ஏனெனில் அவ‌ளுக்கு த‌ன் பிற‌ப்பு ப‌ற்றி உண்மை தெரியாது...

ஆனால் க‌டைசி காட்சியில் ந‌ந்தினி வீர‌பாண்டிய‌ன் த‌லையை அன்பே என்று விளிப்ப‌த‌ன் அர்த்த‌ம் என்ன‌? த‌ன் த‌ந்தை என்று தெரிந்த‌ பின்னும் "அன்று என் காத‌லை கொன்றீர்க‌ள், பின் என்னை காத‌லித்த‌வ‌ரை கொன்றீர்க‌ள்" என்று க‌ரிகால‌னிட‌ம் சொல்வ‌த‌ன் அர்த்த‌ம் என்ன‌?? என்னை காத‌லித்த‌வ‌ரை என் மேல் அன்பு செலுத்திய‌வ‌ர் என்றும் அர்த்த‌ம் சொல்ல‌லாம்..(வாத‌த்திற்காக‌!)

இதில் க‌வ‌னிக்க‌ வேண்டிய‌து க‌டைசி வ‌ரை தான் வீர‌பாண்டிய‌னை காத‌லித்த‌தாக‌ ந‌ந்தினி எங்கும் சொல்ல‌வில்லை..யாரிட‌மும் சொல்ல‌வில்லை..(இல்ல‌ நான் எங்க‌னா மிஸ் ப‌ண்ணிட்டேனா?)
"என் நெஞ்சை கிழித்து பாருங்க‌ள், நீங்க‌ள் தான் இருப்பீர்க‌ள்" என்று க‌ரிகால‌ன் சாகும் முன் அவ‌னிட‌ம் சொல்கிறாள்..."அடுத்த‌ முறை பிற‌ந்தால் உங்க‌ளையே க‌ண‌வ‌னாக‌ அடைவேன்" என்று பெரிய‌ ப‌ழுவேட்ட‌ரைய‌ரிட‌ம் சொல்கிறாள்..

ஆக‌, வீர‌பாண்டிய‌ன் மேல் அவ‌ளுக்கு காத‌ல் இருந்த‌து என்று என்னால் சொல்ல‌ முடிய‌வில்லை..ஆனால் வீர‌பாண்டிய‌ன் த‌ன்னை காத‌லித்த‌தாக‌ அவ‌ள் எண்ணியிருக்க‌ வாய்ப்புண்டு..

என‌க்கு என்ன‌வோ அவ‌ள் உண்மையில் காத‌லித்த‌து க‌ரிகால‌னை ம‌ட்டுமே என்று தோன்றுகிற‌து...அவ‌ன் த‌ன்னை ஏமாற்றிவிட்டான் என்ற‌ எண்ண‌த்திலே அவ‌னை ப‌ழிவாங்க‌ விழைகிறாள்..

அண்ண‌ன் த‌ங்கை என்று ஆகிவிட்ட‌ பின் எந்த‌ கால‌த்திலும் ம‌ண‌க்க‌ முடியாது என்ப‌தாலும் அந்த‌ உற‌வின் மோச‌மான‌ நிலையும் எண்ணியே க‌ரிகால‌ன் உயிர் துற‌க்கிறான்..
டாக்ட‌ர் ப்ரூனோ சொல்லும் எடிப‌ஸ் காம்ப்ளெக்ஸ், எல‌க்ட்ரா காம்ப்ளெக்ஸ் இந்த‌ க‌தையில் இருப்ப‌தாக‌ தெரிய‌வில்லை..

4) க‌தையின் தீவிர‌மான‌ காத‌ல் எது?

என‌க்கு தெரிந்த‌ வ‌ரை, ம‌ணிமேக‌லையின் காத‌ல்.. காத‌ல‌னுக்காக‌ கொலைப் ப‌ழியை சும‌க்க‌ தானே முன்வ‌ந்த‌வ‌ள்...காத‌ல‌னுக்கு அபாய‌ம் செய்தால் த‌ன் ச‌கோத‌ர‌னையே கொல்வேன் என்ற‌வ‌ள்...பின் காதலன் இறந்து விட்டான் என்றவுடன் அவனை எண்ணி பைத்தியம் ஆனவள்..
இதைப் போன்றே தீவிர‌மான‌ இன்னொரு காத‌ல் ம‌ந்தாகினியின் காத‌ல்.

ச‌ரி...ஏதோ என்னால் முடிந்த‌ விள‌க்க‌ங்க‌ள்...

இனி யாரும் கேட்காத‌, ஆனால் என்னை ப‌டித்த நாளிலிருந்து உறுத்திக் கொண்டிருக்கும் கேள்வி..

பொன்னியின் செல்வ‌ன் என்று த‌லைப்பு இருந்தாலும் இந்த‌ க‌தையின் முக்கிய‌ பாத்திர‌ங்க‌ள் வ‌ந்திய‌த் தேவ‌ன், ஆழ்வார்க்க‌டியான் ம‌ற்றும் ந‌ந்தினி..

இதில் வ‌ந்திய‌த் தேவ‌ன் ம‌ட்டுமே உண்மை, ம‌ற்ற‌வை க‌ற்ப‌னைப் பாத்திர‌ங்க‌ள்.. ந‌ந்தினி என்று ஒருவ‌ர் இருந்த‌தாக‌ சோழ‌ வ‌ம்ச‌ம் தொட‌ர்புடைய‌ எதிலும் ஆதார‌ம் இல்லை.

இப்ப‌டி இருக்கையில் ஒரு க‌ற்ப‌னை பாத்திர‌த்தை ப‌டைத்து அதில் உற‌வுச் சிக்க‌லை க‌ல்கி உருவாக்க‌ கார‌ண‌ம் என்ன‌? அவ‌ரின் நோக்க‌ம் வ‌ர‌லாற்று புதின‌மா இல்லை உற‌வுச்சிக்க‌லை ச‌ரித்திர‌ப் பிண்ண‌னியில் சொல்லும் முயற்சியா? அது ர‌சிக‌ர்க‌ளால் த‌வ‌றாக‌ புரிந்து கொள்ள‌ப்ப‌ட்டு திசை திரும்பி விட்ட‌தா?

டாக்ட‌ர் ப்ருனோ சொல்வ‌து போல் இது எடிப‌ஸ் காம்ப்ளெக்ஸ்/எல‌க்ட்ரா காம்ப்ளேக்ஸ் அடிப்ப‌டையான‌ க‌தையா? இந்த‌ க‌தையின் இன்ஸ்பைரேஷ‌ன் ஷேக்ஸ்பிய‌ரின் ஹாம்லெட்டா?

சிறிய‌ வ‌ய‌தில் ஒரே ஒரு பாக‌ம் ம‌ட்டும் ப‌டித்திருந்தாலும், பொன்னியின் செல்வ‌னை நான் சென்ற‌ வ‌ருட‌ம் தான் ப‌டித்தேன்.. என‌க்கென்ன‌வோ இது உற‌வுச்சிக்க‌லை சொல்லும் க‌தையாக‌ தான் ப‌டுகிற‌து!

யாரேனும் விள‌க்கினால் ந‌ல‌ம்!

(எல்லாரும் கேட்கும் போது எனக்கு மட்டும் என்ன மானம் வாழுது...அதனால கேட்கிறேன்...பிடிச்சிருந்தா ஓட்டுப் போட்டுட்டு போங்க!)

41 comments:

குடுகுடுப்பை said...

ஆனாலும் எங்க எள்ளூளூளூளூளூளூளூளூ தாத்தா பத்தி அதிக ஆர்வமாதான் இருக்காங்க

பழமைபேசி said...

//சிறிய‌ வ‌ய‌தில் ஒரே ஒரு பாக‌ம் ம‌ட்டும் ப‌டித்திருந்தாலும், பொன்னியின் செல்வ‌னை நான் சென்ற‌ வ‌ருட‌ம் தான் ப‌டித்தேன்.. //

ஓ, அப்பிடியா?

துளசி கோபால் said...

நந்தினி வீரபாண்டியன் மகளேன்றால் கரிகாலனுக்கும் நந்தினிக்கும் அண்ணன் தங்கை உறவு எப்படி வருது?

நந்தினியின் அம்மாவுக்குச் சுந்தர சோழரின் தொடர்பு இருந்ததாலா?

கபீஷ் said...

//எல்லாரும் கேட்கும் போது எனக்கு மட்டும் என்ன மானம் வாழுது...அதனால கேட்கிறேன்...பிடிச்சிருந்தா ஓட்டுப் போட்டுட்டு போங்க!)//

Voted.

பழமைபேசி said...

//கபீஷ் said...
//எல்லாரும் கேட்கும் போது எனக்கு மட்டும் என்ன மானம் வாழுது...அதனால கேட்கிறேன்...பிடிச்சிருந்தா ஓட்டுப் போட்டுட்டு போங்க!)//

Voted.

//

நானும்! ஆனா, இன்னும் காசு வந்து சேரலையே?

Dr.Sintok said...

//நந்தினியின் அம்மாவுக்குச் சுந்தர சோழரின் தொடர்பு இருந்ததாலா?//
ethu vera eruka

புருனோ Bruno said...

//டாக்ட‌ர் ப்ரூனோ சொல்லும் எடிப‌ஸ் காம்ப்ளெக்ஸ், எல‌க்ட்ரா காம்ப்ளெக்ஸ் இந்த‌ க‌தையில் இருப்ப‌தாக‌ தெரிய‌வில்லை..//

நான் சொல்லும் எலக்ட்ரா காம்ப்ளெக்ஸ் குறித்து நீங்கள் சரியாக புரிந்து கொண்டீர்களா என்பதை சரிபார்க்கவும் :) :)

தன் தந்தையை போலுள்ள ஆண்களை பெண்கள் விரும்புவதும், தன் தாயைப்போலுள்ள பெண்களை ஆண்கள் விரும்புவதும் மனித இயல்பு

--
நான் கூறியது - நந்தினி, வீரபாண்டியனை தன் தந்தை என்று அறியாமல் காதலித்திருக்க வேண்டும் என்று தானே தவிர அறிந்து காதலித்தாள் என்று அல்ல
--
அறிந்த காதலித்தால் அதன் பெயர் எலக்ட்ரா காம்ப்ளெக்ஸ் அல்ல - இன்செஸ்ட் - INCEST :) :) :)

இரண்டிற்கும் நிறைய வேறுபாடு
--
என் தந்தையை போல் ஒரு மாப்பிள்ளை வேண்டும் என்பது தான் எலக்ட்ரா காம்ப்ளெக்ஸ்
--
என் தந்தையை கல்யாணம் செய்து கொள்வேன் என்பது இன்செஸ்ட்
--
மேலும் அந்த காலத்தில் 40 வயது ஆணும் 18 வயது பெண்ணும் காதலிப்பது தவறில்லையே

புருனோ Bruno said...

நந்தினி தன் தந்தை என்று தெரிந்தும் வீரபாண்டியரை காதலித்தாள் என்று வாதிட்டால் அதை நானே ஏற்றுக்கொள்ள மாட்டேன்

நான் கூற வந்தது வேறு :) :)

என் பதிவின் மறுமொழிகளில் தெளிவாக விளக்கி யுள்ளேன்

புருனோ Bruno said...

//.ஒன்று ந‌ந்தினி கொன்றிருக்க‌ வேண்டும்..இல்லை க‌ரிகால‌ன் த‌ற்கொலை செய்து கொண்டிருக்க‌ வேண்டும்..

இத‌ற்கு பின்ன‌ர் பாட்ஷா ரேஞ்சில் நான் தான் கொன்னேன் என்று ப‌ழுவேட்ட‌ரைய‌ர், ம‌ணி மேக‌லை என்று ப‌ல‌ர் சாட்சி சொல்வ‌து ந‌ம்பும்ப‌டி இல்லை..//

கிட்ட தட்ட என் நிலைப்பாடும் இது தான் :)

புருனோ Bruno said...

//என‌வே அந்த‌ குழ‌ந்தை ந‌ந்தினியின் ம‌க‌ன் அல்ல‌ என்ப‌து உறுதி.//

அப்படித்தான் நானும் நினைக்கிறேன். ஒரு வேளை அது வீரபாண்டியனின் மகனாக இருக்கலாம்

//டாக்ட‌ர் ப்ருனோ சொல்வ‌து போல் இது எடிப‌ஸ் காம்ப்ளெக்ஸ்/எல‌க்ட்ரா காம்ப்ளேக்ஸ் அடிப்ப‌டையான‌ க‌தையா? இந்த‌ க‌தையின் இன்ஸ்பைரேஷ‌ன் ஷேக்ஸ்பிய‌ரின் ஹாம்லெட்டா?//
இல்லை இது எலக்ட்ரா காம்ளெக்சின் அடிப்படையிலான கதை அல்ல.

ஆனால் கல்கி சிறந்த உளவியலாளர் என்பதால் கண்டிப்பாக அது அவருக்கு தெரிந்திருக்கும் என்ற எண்ணத்தில் தான் நான் எனது hypothesisஐ முன் வைத்தேன்
--

மேலும் எலக்ட்ரா காம்ப்ளெக்ஸ் என்பதை நந்தினி வீரபாண்டியனை காதலிப்பதற்கு ஒரு காரணமாகத்தான் கூறினேனே தவிர, தனது தந்தை என்று தெரிந்த பின் காதல் வருவதற்கு வாய்ப்பு மிக மிக குறைவு. தெரியாமல் காதலித்திருக்கத்தான் வாய்ப்பு அதிகம்

CA Venkatesh Krishnan said...

பொன்னியின் செல்வன் குறித்த கேள்விகளுக்கும் விரிவான அலசல்களுக்கும் யாஹூவில் பொன்னியின் செல்வன் என்று ஒரு க்ரூப் இருக்கிறது. இதில் அத்துணை கேள்விகளுக்கும் விரிவான விடை கிடைக்கும். க்ரூப் முகவரி : http://groups.yahoo.com/group/ponniyinselvan/

நந்தினியைப் பொறுத்த வரை அது கல்கியின் கற்பனைத் திறமை. இப்படி பலப்பல ட்விஸ்ட்களைச் சேர்த்து இப்போதும் நம்மைப் பேச வைத்துள்ளார்.

நந்தினி கரிகாலனின் சகோதரி அல்ல என்பதை பொ.செ.விலேயே தெளிவுபடுத்தப் படுகிறது. சுந்தர சோழர் அந்தத் தீவை விட்டு வெளியேறிய இரண்டு ஆண்டுகள் கழித்துத்தான் நந்தினி பிறந்ததாக அருள்மொழி வர்மனும், குந்தவையும் பேசிக் கொள்கிறார்கள். ஆகவே அவள் வீர பாண்டியன் மகள் அல்லது காதலி என்பதாக யூகப் படுத்தப் படுகிறதே ஒழிய யாரும் நிச்சயிக்க வில்லை. நந்தினியின் தாய் மந்தாகினி என்பது மட்டும் உறுதியாக்கப் பட்டுள்ளது.

CA Venkatesh Krishnan said...
This comment has been removed by the author.
ஆட்காட்டி said...

நான் இரு முறை படித்திருக்கிறேன். எனக்கெல்லாம் இந்த மாதிரி சந்தேகங்கள் வந்ததில்லை. அது ஒரு வரலாற்று நாவல். அவ்வளவு தான். ஆராய வேண்டுமானால் உண்மை வரலாற்றை நோண்டலாம். எதுக்கு கல்கியை தோண்ட வேண்டும். வேண்டுமானால் விமர்சிக்கலாம்.

குடுகுடுப்பை said...

இவ்வளவு சந்தேகம் வரனும்னா ரொம்ப உன்னிப்பா படிக்கனுமே.

அது சரி(18185106603874041862) said...

//
குடுகுடுப்பை said...
ஆனாலும் எங்க எள்ளூளூளூளூளூளூளூளூ தாத்தா பத்தி அதிக ஆர்வமாதான் இருக்காங்க

//

அப்ப நம்ம ரெண்டு பேரும் உறவுக்காரங்க போலருக்கு...பின்ன, நானும் சோழ பரம்பரை தான் :0)

அது சரி(18185106603874041862) said...

//
பழமைபேசி said...
//சிறிய‌ வ‌ய‌தில் ஒரே ஒரு பாக‌ம் ம‌ட்டும் ப‌டித்திருந்தாலும், பொன்னியின் செல்வ‌னை நான் சென்ற‌ வ‌ருட‌ம் தான் ப‌டித்தேன்.. //

ஓ, அப்பிடியா?

//

ஆமா, அதனால தான் இத்தினி கேள்வி...தவிர ச்சின்ன வயசுல நமக்கு அறிவு போறாது..இப்பவும் அப்படித்தான்..ஆனா ச்சின்ன வயசுல இன்னும் ரொம்ப மோசம்!

அது சரி(18185106603874041862) said...

//
துளசி கோபால் said...
நந்தினி வீரபாண்டியன் மகளேன்றால் கரிகாலனுக்கும் நந்தினிக்கும் அண்ணன் தங்கை உறவு எப்படி வருது?

நந்தினியின் அம்மாவுக்குச் சுந்தர சோழரின் தொடர்பு இருந்ததாலா?

//

ஆமாங்க டீச்சர்...நந்தினியின் தாய் மந்தாகினியும், சுந்தர சோழரும் ஏறக்குறைய காந்தர்வ மணம் செஞ்சிகிட்டதா வருது...அப்படின்னா நந்தினி கரிகாலனுக்கு சகோதரி தானே? Half Sister மாதிரி!

அது சரி(18185106603874041862) said...

//
கபீஷ் said...

Voted.

//

ஓட்டுப் போட்ட ஐயாவுக்கு நன்றிங்கோ!

அது சரி(18185106603874041862) said...

//
பழமைபேசி said...
//கபீஷ் said...
//எல்லாரும் கேட்கும் போது எனக்கு மட்டும் என்ன மானம் வாழுது...அதனால கேட்கிறேன்...பிடிச்சிருந்தா ஓட்டுப் போட்டுட்டு போங்க!)//

Voted.

//

நானும்! ஆனா, இன்னும் காசு வந்து சேரலையே?

//

அது போன வாரமே அனுப்பி வைச்சேனே...இன்னுமா வரல?

அது சரி(18185106603874041862) said...

//
Dr.Sintok said...
//நந்தினியின் அம்மாவுக்குச் சுந்தர சோழரின் தொடர்பு இருந்ததாலா?//
ethu vera eruka

//

ஆமா..

அது சரி(18185106603874041862) said...

//
//டாக்ட‌ர் ப்ரூனோ சொல்லும் எடிப‌ஸ் காம்ப்ளெக்ஸ், எல‌க்ட்ரா காம்ப்ளெக்ஸ் இந்த‌ க‌தையில் இருப்ப‌தாக‌ தெரிய‌வில்லை..//

நான் சொல்லும் எலக்ட்ரா காம்ப்ளெக்ஸ் குறித்து நீங்கள் சரியாக புரிந்து கொண்டீர்களா என்பதை சரிபார்க்கவும் :) :)

தன் தந்தையை போலுள்ள ஆண்களை பெண்கள் விரும்புவதும், தன் தாயைப்போலுள்ள பெண்களை ஆண்கள் விரும்புவதும் மனித இயல்பு
//

டாக்டர்,

நீங்கள் சொல்லும் எலக்ட்ரா காம்ப்ளெக்ஸ் எனக்கும் புரிகிறது..ஆனால், இந்த கதையில் நந்தினி வீரபாண்டியனை காதலித்தால் என்பதையே என்னால் ஒப்புக் கொள்ள முடியவில்லை..அதனால் தான் அந்த காதலின் அடிப்படை என்ன என்று நான் ஆராயவில்லை.

உங்கள் வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி!

அது சரி(18185106603874041862) said...

//
புருனோ Bruno said...

மேலும் எலக்ட்ரா காம்ப்ளெக்ஸ் என்பதை நந்தினி வீரபாண்டியனை காதலிப்பதற்கு ஒரு காரணமாகத்தான் கூறினேனே தவிர, தனது தந்தை என்று தெரிந்த பின் காதல் வருவதற்கு வாய்ப்பு மிக மிக குறைவு. தெரியாமல் காதலித்திருக்கத்தான் வாய்ப்பு அதிகம்

//

எனக்கு தெரிந்த வரையில் நந்தினி எந்த இடத்திலும் தான் வீரபாண்டியனை காதலிப்பதாக சொல்லவில்லை. மற்றவர்கள் தான் அவ்வாறு நினைத்துக் கொள்கிறார்கள்..கதையில் அவளுக்கு ஒரே காதல் தான்..அது கரிகாலனுடன் தான்...இது தான் எனக்கு புரிந்தது!

அது சரி(18185106603874041862) said...

//
இளைய பல்லவன் said...
நந்தினி கரிகாலனின் சகோதரி அல்ல என்பதை பொ.செ.விலேயே தெளிவுபடுத்தப் படுகிறது. சுந்தர சோழர் அந்தத் தீவை விட்டு வெளியேறிய இரண்டு ஆண்டுகள் கழித்துத்தான் நந்தினி பிறந்ததாக அருள்மொழி வர்மனும், குந்தவையும் பேசிக் கொள்கிறார்கள். ஆகவே அவள் வீர பாண்டியன் மகள் அல்லது காதலி என்பதாக யூகப் படுத்தப் படுகிறதே ஒழிய யாரும் நிச்சயிக்க வில்லை. நந்தினியின் தாய் மந்தாகினி என்பது மட்டும் உறுதியாக்கப் பட்டுள்ளது.

//

இளைய பல்லவன்,

சகோதரி என்றால் உடன் பிறந்த சகோதரி அல்ல.. ஆதித்த கரிகாலனின் தந்தை சுந்தர சோழன்...நந்தினியின் தாய் மந்தாகினி..சுந்தர சோழரின் காதலி/காந்தர்வ முறைப்படி மணந்த பெண் மந்தாகினி... அப்படியானால் நந்தினிக்கும் ஆதித்த கரிகாலனுக்கும் என்ன உறவுமுறை? சகோதரி முறை தானே வேண்டும்?

அது சரி(18185106603874041862) said...

//
ஆட்காட்டி said...
நான் இரு முறை படித்திருக்கிறேன். எனக்கெல்லாம் இந்த மாதிரி சந்தேகங்கள் வந்ததில்லை. அது ஒரு வரலாற்று நாவல். அவ்வளவு தான். ஆராய வேண்டுமானால் உண்மை வரலாற்றை நோண்டலாம். எதுக்கு கல்கியை தோண்ட வேண்டும். வேண்டுமானால் விமர்சிக்கலாம்.

//

ஐயா,
உங்களுக்கு சந்தேகம் வரவில்லை என்பது நல்ல விஷயம்..ஆனால் எனக்கு வந்தது...எனக்கு தெரிந்த வரையில் நந்தினி வீரபாண்டியன் உறவு குறித்து பலருக்கு சந்தேகம் இருக்கிறது...இது தெளிவுபடுத்திக் கொள்ள என்னால் இயன்ற முயற்சி!

இங்கு நான் வரலாற்றை ஆராய முற்படவில்லை..வரலாறு வேறு, இந்த கதை வேறு.. கல்கியை விமர்சிப்பதும் என் நோக்கம் அல்ல...கதையை புரிந்து கொள்ள முயற்சிக்கிறேன்...அவ்வளவே!

அது சரி(18185106603874041862) said...

//
குடுகுடுப்பை said...
இவ்வளவு சந்தேகம் வரனும்னா ரொம்ப உன்னிப்பா படிக்கனுமே.

//

அப்படி இல்ல தல! நமக்கெல்லாம் எதுவும் அவ்வளவு சீக்கிரம் மண்டைல ஏறாது.. மூணும் நாலும் ஆறுதானன்னு ரொம்ப நாளு நெனச்சிக்கிட்டு இருந்தேன் :))

அத விடுங்க...படிச்சி பாருங்க...உங்களுக்கு ரொம்ப பிடிக்கும்..அதுவும் நீங்க தஞ்சாவூரு வேற!

குடுகுடுப்பை said...

அய்ய உங்கள கும்மோணம் பதிவெழுத கூப்பாடு போட்டமே கொஞ்சம் நேரம் இருந்தா பாருங்க.

மு.வ.மு

அது சரி(18185106603874041862) said...

//
வருங்கால முதல்வர் said...
அய்ய உங்கள கும்மோணம் பதிவெழுத கூப்பாடு போட்டமே கொஞ்சம் நேரம் இருந்தா பாருங்க.

மு.வ.மு
//

கும்மோண‌த்த‌ ப‌த்தியா? நானா? எழுத‌லாம்...ஆனா என‌க்கு கும்மோண‌ம் ப‌த்தி எதுவுமே தெரியாதே..என்ன‌ ப‌ண்ண‌? கும்மோண‌ம் த‌ஞ்சாவூரு ப‌க்க‌த்துல‌ இருக்குன்னு தெரியும்..அங்க‌ காவிரி ஓடுதுன்னு தெரியும்...எல்லாம் ம‌க்க‌ள்கிட்ட‌ கேட்டு தெரிஞ்சிகிட்ட‌து.. :0))

குடுகுடுப்பை said...

அது சரி அப்ப சும்மா விடுங்க.

அது சரி(18185106603874041862) said...

//
குடுகுடுப்பை said...
அது சரி அப்ப சும்மா விடுங்க.
//

தப்பா எடுத்துக்காதீங்க... நான் நிஜமாவே கும்பகோணம் இல்ல...

பழமைபேசி said...

//அது சரி said...
//
கபீஷ் said...
Voted.
//

ஓட்டுப் போட்ட ஐயாவுக்கு நன்றிங்கோ!
//

Objection, your Honor!
ஓட்டுப் போட்ட உங்களுக்கு நன்றிங்கோன்னு சொல்லணும்! இஃகி!

பழமைபேசி said...

// குடுகுடுப்பை said...
அது சரி அப்ப சும்மா விடுங்க.
//

அதெப்படி விட முடியும்? அவரு எந்த ஊரோ அதப் பத்தி எழுதட்டும். இல்லாட்டி சபையக் கூட்டுங்க நாட்டாமை!!

Sridhar Narayanan said...

//அவளுக்கு ஒரே காதல் தான்..அது கரிகாலனுடன் தான்...இது தான் எனக்கு புரிந்தது!//

நீங்கள் தவறாக புரிந்து கொண்டுள்ளீர்கள் என்று தோன்றுகிறது.

நந்தினி என்ற பாத்திரம் ஒரு அழகான, சாமர்த்தியசாலியான பெண். பெரிய பழுவேட்டரையர், வந்தியத்தேவன், ஆதித்த கரிகாலன், கந்தமாறன் என்று பலரோடும் அவள் மயக்கும் விதத்தில் பேசுவதை கல்கி அருமையாக எழுதியிருப்பார். மந்தாகினிக்கு பேசவே தெரியாது. ஆனால் அவரை இருவர் காதலித்து கைவிட்டுவிட்டனர். அவர் மகளோ பேசிப் பேசி பல சாம்ராஜ்யாதிபதிகளை குப்புற விழச் செய்துவிடுகிறாள்.

பின்னர் ஓரிடத்தில் குந்தவை கூறுவது போல் எழுதியிருப்பார். இப்படி பலரின் சித்தத்தை சுத்தவிட்ட நந்தினி உண்மையிலேயே தடுமாறியது வந்தியத்தேவனிடம் மட்டும்தான் என்று.

ஆதித்த கரிகாலன் கொலையைப் பற்றிய விவரணையிலும் சிறுபிழை இருக்கிறது. ஆதித்த கரிகாலன் கத்தியோடு சுற்றும்பொழுதே ரவிதாஸன் உள்ளே நுழைந்து விளைக்க அணைத்துவிடுகிறான். போதாததற்கு காளாமுகன் வேடத்தில் இருக்கும் பழுவேட்டரையரும் விளக்கொளி இருக்கும்போதே உள்ளே நுழைந்துவிடுகிறார். பிறகு என்ன நடக்கிறது என்பதை அவரவர் கோணத்தில் சொல்கிறார்கள். ரஷோமோன் திரைப்படம்போல.

Anonymous said...

read 'Kaveri mainthan'(3 parts) by anusha venkatesh. intha novel-l veerapandian maganai, than thamibe thannai ammavaga alaikka solkiral nandhini. athe pol, idumban kaari than karikalanai kolvathagavum ullathu. padikkalam intha novel nalla irruku.

குடுகுடுப்பை said...

பழமைபேசி said...

// குடுகுடுப்பை said...
அது சரி அப்ப சும்மா விடுங்க.
//

அதெப்படி விட முடியும்? அவரு எந்த ஊரோ அதப் பத்தி எழுதட்டும். இல்லாட்டி சபையக் கூட்டுங்க நாட்டாமை!!//

அப்படியெல்லாம் கூடாது பழமையாரே.அவருக்கென்று தனித்துவம்/சுதந்திரம் உள்ளது உள்ளது. அதனால் அவர் வீட்டுக்கு ஆட்டோ அனுப்ப நாம் காரணமாக கூடாது.

அது சரி(18185106603874041862) said...

//
குடுகுடுப்பை said...
பழமைபேசி said...

// குடுகுடுப்பை said...
அது சரி அப்ப சும்மா விடுங்க.
//

அதெப்படி விட முடியும்? அவரு எந்த ஊரோ அதப் பத்தி எழுதட்டும். இல்லாட்டி சபையக் கூட்டுங்க நாட்டாமை!!//

அப்படியெல்லாம் கூடாது பழமையாரே.அவருக்கென்று தனித்துவம்/சுதந்திரம் உள்ளது உள்ளது. அதனால் அவர் வீட்டுக்கு ஆட்டோ அனுப்ப நாம் காரணமாக கூடாது.

//

நாட்டாமையின் தீர்ப்பை நான் ஏற்றுக் கொள்கிறேன்...விஷயம் ஆட்டோ அல்ல, ஆனால் வேறு காரணங்கள் உண்டு...

நாட்டாமையின் தீர்ப்பை எதிர்த்து பேசிய பழமைபேசியாரை ஊரை விட்டு மூன்று தலைமுறைக்கு ஒதுக்கி வைக்குமாறு சபையினரை கேட்டுக் கொள்கிறேன்.. :0))

கயல்விழி said...

அதுசரி

நீங்க சொல்வதற்கு முன்பே உங்க பொட்டிக்கடைப்பக்கம் வந்து, விக்ரமாதித்யன் பகுதிகளில் விமர்சனமும் எழுதியாச்சு. நீங்க பார்க்கல. :)

பொன்னியின் செல்வன் ரொம்ப ஓல்ட் ஸ்டோரி மாதிரி இருக்கு, அதான் யோசிக்கிறேன். But don't worry, ரொம்ப போரடிக்கும் போது அதையும் படித்து கமெண்ட் எழுதறேன்.:)

Anonymous said...

//இதை படிப்பதற்கு நீண்ட நாட்களாகும், ஆனால் சுகமானது...//

நல்ல அலசல்.. :-)

அது சரி(18185106603874041862) said...

//
கயல்விழி said...
அதுசரி

நீங்க சொல்வதற்கு முன்பே உங்க பொட்டிக்கடைப்பக்கம் வந்து, விக்ரமாதித்யன் பகுதிகளில் விமர்சனமும் எழுதியாச்சு. நீங்க பார்க்கல. :)

பொன்னியின் செல்வன் ரொம்ப ஓல்ட் ஸ்டோரி மாதிரி இருக்கு, அதான் யோசிக்கிறேன். But don't worry, ரொம்ப போரடிக்கும் போது அதையும் படித்து கமெண்ட் எழுதறேன்.:)

//

பொன்னியின் செல்வன் ஓல்ட் ஸ்டோரி இல்ல...இப்ப சமீபத்துல 1017லில் நடந்த கதை :))

படிச்சி பாருங்க...ரொம்ப நல்லாருக்கும்...ஜாவா மல்டி த்ரெடிங் எவ்ளோ போர்..அதையெல்லாம் படிக்கிறீங்க....வந்தியத் தேவன் பத்தி படிக்க மாட்டீங்களா? :0))

அது சரி(18185106603874041862) said...

//
இனியவள் புனிதா said...
//இதை படிப்பதற்கு நீண்ட நாட்களாகும், ஆனால் சுகமானது...//

நல்ல அலசல்.. :-)

//

வாங்க புனிதா...உங்களின் முதல் வருக்கைக்கு நன்றி...அடிக்கடி வாங்க :))

ராஜ நடராஜன் said...

விட்டா PHD பட்டமே வாங்கிடுவீங்க போல இருக்குது:) நம்ம புத்திக்கெல்லாம் இது தெரியல.திகிலோட கதையைப் படிச்சமா,தூங்கி எந்திருச்சு மறுபடியும் அடுத்த பாகத்துக்கு தாவுனாமான்னு நுனிப்புல் மேய்ச்சல் தானுங்க.அதுவும் படிப்பகத்துல அம்புட்டு புத்தகமும் இருக்கும் போது இதுக்கின்னே ஆராய்ச்சியா செய்ய முடியுமிங்கிற மனப்பான்மைப் படிப்பு புத்திதான்.

ராஜ நடராஜன் said...

//(எல்லாரும் கேட்கும் போது எனக்கு மட்டும் என்ன மானம் வாழுது...அதனால கேட்கிறேன்...பிடிச்சிருந்தா ஓட்டுப் போட்டுட்டு போங்க!)//

இந்த டயலாக் நல்லாயிருக்கே:)))