Saturday, 13 December 2008

பொன்னியின் செல்வன் சில கேள்விகளும் ஒரு தற்குறியின் பதில்களும்


நீ என்ன படிச்சிருக்கன்னு கேக்குறது தான் இப்ப தமிழ்மணத்துல ஃபேஷனாருக்கு :0) அதனால நெறைய பேரு அவங்க படிச்சத பத்தி எழுதிகிட்டு இருக்காங்க..


இப்ப சமீபத்துல (இது டோண்டு சாரோட சமீபம் இல்ல..சமீபம்னா நேத்தி நள்ளிரவு சுமார் ஒன்றரை மணி அளவில்!) கிரிஷ் சந்துரு பொன்னியின் செல்வன் பத்தி அழகா எழுதியிருந்ததை படிச்சிட்டேன்.. அவரு எழுதினதை இங்க போடுறது காப்பி அடிக்கிற மாதிரி அநாகரீகம்கிறதுனால, தயவு செஞ்சி அவரு பிளாக்ல போய் படிச்சிக்கங்க...

இப்ப மேட்டரு அவரு பிளாக் இல்ல..அதுல கடைசியா சில கேள்விகள வச்சிருக்காரு...

அதுக்கு முன்னாடி...நீங்க பொன்னியின் செல்வன் படிச்சிருக்கீங்களா? என்னது இல்லியா? அப்பிடின்னா இந்தா இங்க போயி டவுன்லோட் பண்ணி படிங்க...

இதை படிப்பதற்கு நீண்ட நாட்களாகும், ஆனால் சுகமானது...

இப்ப படிக்காதவங்க எல்லாம் வெளிய போய்ட்டாங்களா? சரி, படிச்சவங்களுக்கு மட்டும் கேள்வி.

கேள்வியெல்லாம் கிரிஷ் சந்துருவோடது...பதில் மட்டும் தான் நம்மது!
என் பதிலெல்லாம் தப்புதப்பா இருக்கலாம்..இல்ல இல்ல, அப்பிடித்தான் இருக்கும்...அதனால எதுனா குந்தாங்கொறையா ஒரு மார்க் போட்டு விடுங்க..

1) மிகப்பெரிய குழப்பம் நந்தினி வீரபாண்டியனின் காதலியா மகளா ? நாவலின் இறுதி வரை நந்தினியை வீரபாண்டியனின் பத்தினி என்றே ஸ்தாபித்து விட்டு கடைசியில் மகள் என்று சொல்வது சரியாக நிருபிக்கப்படவில்லை. குந்தவையும் வந்தியத்தேவனும் கடைசியில் பேசும் போது ஆதித்த கரிகாலன் ஒருவேளை போர் வெறியில் சரியாக கேட்காமல் விட்டிருக்கலாம் என்று கூறுவதாக அமைத்தது ஒரு வேளை கல்கியின் சப்பைகட்டோ ? இவ்வளவு பெரிய நாவலில், இத்தனை கதாபாத்திரங்கள் வந்து போகும் இடத்தில் உறவுக்குழப்பத்தில் இந்த விஷயம் மறைந்து விடும் என்று நினைத்தாரோ ? ஒரு வேளை நந்தினி மகளாகவே இருந்தாலும், பள்ளிப்படை காட்டில் பட்டாபிஷேகம் செய்யும் குழந்தை நந்தினியை அம்மா என்று அழைக்கிறதே. அந்த குழந்தை நந்தினிக்கும் யார்க்கும் பிறந்த குழந்தை ? எனக்குத் தோன்றும் ஒரே விடை - பழுவேட்டரையர் வாயிலாக வெளிப்படும் கூற்றாலேயே நாம் நந்தினி வீரபாண்டியனின் மகள் என்று அறிகிறோம். ஆனால் அதைத் தவிர மற்ற இடங்களில் அவர்களை காதலி என்றே சொல்கிறார் - ஒருவேளை அந்த பழுவேட்டரையர் குறிக்கும் வீரபாண்டியனும், ஆதித்த கரிகாலன் கொன்ற வீரபாண்டியனும் வெவ்வேறு ஆசாமிகளா ? அப்படியென்றால் இரு வீரபாண்டியர்களுக்கும் என்ன உறவு ?இதற்கு நான் இட்ட பின்னூட்டம்:உண்மையில் அருள்மொழியின் அண்ண‌ன் ஆதித்த‌ க‌ரிகால‌னின் ம‌ர‌ண‌ம் எப்ப‌டி நிக‌ழ்ந்த‌து என்ப‌த‌ற்கு ச‌ரித்திர‌த்தில் எந்த‌ ஆதார‌மும் இல்லை.. அவ‌ன் கொல்ல‌ப்ப‌ட்டானா இல்லை த‌ற்கொலை செய்து கொண்டானா? ந‌ந்தினி வீர‌பாண்டிய‌னின் ம‌க‌ளா இல்லை காத‌லியா? அப்ப‌டியானால் ந‌ந்தினிக்கும் ஆதித்த‌ க‌ரிகால‌னுக்கும் என்ன‌ உற‌வு?

பொன்னியின் செல்வ‌ன் க‌தையின் மிக‌ முக்கிய‌ முடிச்சு இந்த‌ உற‌வு சிக்க‌லே..
நந்தினியின் தாய் ம‌ந்தாகினி. த‌ப்பியோடிய‌ வீர‌பாண்டிய‌னுக்கும் ம‌ந்தாகினிக்கும் உற‌வு (ம‌ந்தாகினியின் விருப்ப‌ம் இல்லாம‌ல்) ஏற்ப‌ட்ட‌தாக‌ சிறையில் இருக்கும் பைத்திய‌க்கார‌ன் மூல‌ம் குறிப்பால் உண‌ர்த்த‌ப்ப‌டுகிற‌து.. ம‌ந்தாகினியை சில‌ கால‌ம் காத‌லித்து கைவிட்ட‌வ‌ன் சுந்த‌ர‌ சோழ‌ன். ம‌ந்தாகினி, வீர‌பாண்டிய‌னுக்கு பிற‌ந்த‌ பிள்ளைக‌ள் தான் ந‌ந்தினியும், சோழ‌ குடும்ப‌த்தில் வ‌ள‌ர்ந்து வ‌ரும் உத்த‌ம‌ சோழ‌னும்!

அப்ப‌டியானால் ந‌ந்தினிக்கும் ஆதித்த‌ க‌ரிகால‌னுக்கும் என்ன‌ உற‌வு முறை? ஒரு வித‌த்தில் அண்ண‌ன் த‌ங்கை.

ஆதித்த‌ க‌ரிகால‌ன் சிறு வ‌ய‌திலேயே ந‌ந்தினியை காத‌லித்த‌தாக‌வும், இது த‌வ‌று என்று தெரிந்த‌ செம்பிய‌ன் மாதேவியார் அவ‌ர்க‌ளை பிரித்த‌தாக‌வும் வ‌ருகிற‌து.

இந்த‌ அண்ணன் த‌ங்கை உற‌வு முறை தெரிய‌ வ‌ருவ‌தாலேயே ஆதித்த‌ க‌ரிகால‌ன் த‌ற்கொலை செய்து கொண்டு இற‌க்கிறான்..

வீர‌பாண்டிய‌ன், ந‌ந்தினி உற‌வில் எந்த‌ குழ‌ப்ப‌மும் இல்லை. ந‌ந்தினி ம‌ந்தாகினி போல் இருப்ப‌தாக‌ க‌தையில் வ‌ருகிற‌து.
இந்த‌ க‌தை 1950க‌ளில் எழுத‌ப்ப‌ட்டிருப்ப‌தாக‌ தெரிகிற‌து..2008லும் (எந்த‌ கால‌த்திலும்) சொல்ல‌ முடியாத‌ ஒரு உற‌வு பிர‌ச்சினையை க‌ல்கி 1950க‌ளில் வெளிப்ப‌டையாக‌ சொல்ல‌ முடியாது என்ப‌தாலேயே இந்த‌ உற‌வு சிக்க‌ல் மூடி ம‌றைக்க‌ப்ப‌ட்டிருப்ப‌தாக‌ தெரிகிற‌து....கேட்க‌ செவியுள்ள‌வ‌ன் கேட்க‌ க‌ட‌வ‌ன்!

ஆதித்த‌ க‌ரிகால‌னை கொல்ல‌ சூழ்ச்சி செய்த‌தாக‌ ர‌விதாஸ‌னும், உட‌ந்தையாக‌ இருந்த‌தாக‌ ப‌ல‌ கேர‌ள‌த்து குறு நில‌ ம‌ன்ன‌ர்க‌ளும் பிற்கால‌த்தில் ராஜ‌ராஜ‌ சோழ‌னால் த‌ண்டிக்க‌ப்ப‌ட்ட‌ன‌ர். ராஜ‌ராஜ‌ன் இத‌ற்காக‌ கேர‌ள‌த்து மீது ப‌டையெடுத்து சென்று ச‌தியாலோச‌னையின் முக்கிய‌ கேந்திர‌மாயிருந்த‌ (அல்ல‌து அவ்வாறு ந‌ம்ப‌ப்ப‌ட்ட‌) காந்தாளூர் சாலையை அழித்த‌து வ‌ர‌லாறு. (காந்தாளூர் சாலை க‌ல‌ம‌றுத்த‌ருளிய‌!).

ஆனால், ந‌ந்தினி எந்த‌ கால‌த்திலும் த‌ண்டிக்க‌ப்ப‌ட‌வில்லை. அத‌ற்கு கார‌ண‌ம் அவ‌ளுக்கு ப‌ழி வாங்கும் வெறி இருந்த‌து, அத‌ற்கு கார‌ண‌மும் இருந்த‌து ம‌ட்டும‌ல்ல‌, அவ‌ள் ராஜ‌ ராஜ‌ன், குந்த‌வையின் ச‌கோத‌ரி என்ப‌தும் ஒரு கார‌ண‌மாயிருக்க‌க் கூடும்.
என‌க்கு புரிந்த‌ வ‌ரை, இந்த‌ க‌தை எழுத‌ ஆர‌ம்பிக்கும் போது க‌ல்கியின் முக்கிய‌ நோக்க‌மே இந்த‌ உற‌வு சிக்க‌லை விள‌க்குவ‌தாக‌ இருந்திருக்க்கூடும்..ஆனால், அத‌ன் அபாய‌ங்க‌ளை ம‌ன‌தில் கொண்டு தாண்டி சென்று விட்ட‌தாக‌ தெரிகிற‌து...


2) நந்தினியும் போலி மதுராந்தகனும் மந்தாகினியின் குழந்தைகள் என்று இருக்கும் பட்சத்தில், அவை பாண்டிய மன்னனுக்குப் பிறந்தவை என்ற பட்சத்தில் - மந்தாகினி ஏன் சுந்தர சோழரை காப்பாற்ற வேண்டும். ஒரே காரணம் அவர்களது முதல் காதல் தான். காதலிப்பது ஒருவனை கைப்பிடிப்பது மற்றொருவனை என்ற கலாசாரம் அந்த காலத்தில் கிடையாதே. அப்படி இருக்கும் போது இது எப்படி சாத்தியம். வீரபாண்டியன் மூலம் குழந்தை பிறந்தது என்று வைத்துக் கொண்டாலும், பாண்டிய வம்சத்தைக் காப்பாற்றாமல் அதன் பகை வம்சமாகிய சோழ வம்சத்தை காப்பாற்றுவது ஏன் ?


ம‌ந்தாகினி சுந்த‌ர‌ சோழ‌ரை காப்பாற்ற‌ கார‌ண‌ம் சுந்த‌ர‌ சோழ‌ர் அவ‌ள‌து காத‌ல‌ன்..ம‌ந்தாகினியும் சுந்த‌ர‌ சோழ‌ரை காத‌லித்த‌து உண்மை...வீர‌பாண்டிய‌ன் அவ‌ளை வ‌ற்புறுத்தியே அடைந்த‌தாக‌ தெரிகிற‌து, ம‌ந்தாகினி விரும்பி அவ‌னை கைப்பிடித்த‌தாக‌ க‌ல்கி சொல்ல‌வில்லை.
ம்ந்தாகினி சோழ‌ நாட்டுப் பெண்..(அவ‌ள‌து அண்ண‌ன் முறையான‌ திருவிட‌ங்க‌ர் கோடிய‌க்க‌ரையில் இருக்கிறார்...அவ‌ள‌து த‌ங்கையான‌ ஊமைப்பெண் செம்பிய‌ன் மாதேவியிட‌ம் வேலைப்பார்த்த‌தாக‌ சொல்ல‌ப்ப‌டுகிற‌து. அந்த‌ ஊமைப்பெண் தான் சேந்த‌ன் அமுத‌னின் தாய்.) ம‌ந்தாகினியின் குடும்ப‌மே சோழ‌ நாட்டு குடும்ப‌மாக‌ தான் தெரிகிற‌து..

3) வந்தியத்தேவனுக்கும் குந்தவைக்குமிடையிலான காதலை மிகவும் மேலோட்டமாக காட்டியிருக்கிறாரோ என்று தோன்றுகிறது. அவ்வளவு தீரணான வந்தியத்தேவனும் புத்திகூர்மையான அரசிளங்குமரியும் இவ்வளவு மேலோட்டமாகவா மோகிப்பார்கள் ? எனக்குத் தெரிந்தவரை intensity அதிகம் இருக்கும் personlityகள் காதலில் மிகவும் தீவிரமாகவே இருப்பார்கள். ஒருவேளை கல்கி இளவரசி தனது நிலையிலிருந்து இறங்கி சொல்லுதலாகாது என்று நினைத்து அந்த காதலை அதிதீவிரமாக எழுதவில்லை போலும். வானதி ராஜராஜன் மீதும், மணிமேகலை வந்தியத்தேவன் மீதும் கொண்ட காதலின் அளவு கூட இல்லாமல குந்தவையும் வந்தியத்தேவனும் கொண்ட காதலின் தீவிரத்தை மேலோட்டமாக கல்கி ஏன் எழுதினார் ?

இத‌ற்கு கார‌ண‌ம் குந்த‌வையின் அன்றைய‌ நில‌வ‌ர‌ம். ராஜ்ய‌த்தில் த‌ந்தைக்கு உட‌ல் நிலை ச‌ரியில்லை..அடுத்து ம‌ன்ன‌ன் ஆக‌ வேண்டிய‌ ஆதித்த‌ க‌ரிகால‌ன் வ‌ட‌புலத்தில் ஒதுங்கி இருக்கிறான்...ப‌ழையாறைக்கோ, த‌ஞ்சைக்கோ அவ‌ன் த‌ந்தையை பார்க்க‌க் கூட‌ வ‌ருவ‌தில்லை.. ம‌ற்றொரு த‌ம்பி க‌ட‌ல் க‌ட‌ந்து இல‌ங்கையில் போர் ந‌ட‌த்திக் கொண்டிருக்கிறான்...
இதில் ராஜ்யபார‌ம் முழுவ‌தும் குந்த‌வையின் மீது விழுகிற‌து..க‌ரிகால‌னுக்கு எதிராக‌ ச‌தி ந‌ட‌க்க‌க்கூடும் என்று அவ‌ளும் எண்ணுகிறாள்...இத்த‌கைய‌ சூழ்நிலையில் காத‌லிப்ப‌து எப்ப‌டி?
வ‌ந்திய‌த் தேவ‌னின் நிலையும் அப்ப‌டியே..
ஆனால் வான‌தி, ம‌ணிமேக‌லையின் நிலை அப்ப‌டி அல்ல‌. வான‌திக்கு இப்ப‌டி ராஜ்ய‌ க‌வ‌லைக‌ள் ஏதுமில்லை..ம‌ணிமேக‌லைக்கும் சோழ‌ ராஜ்ய‌த்தின் பிர‌ச்சினைகள் ப‌ற்றி தெரிய‌வில்லை...அர‌சு, அர‌சியாத‌ல் குறித்து அவ‌ளுக்கு விருப்ப‌மும் இல்லை.. அத‌னாலேயே அவ‌ள் பட்ட‌த்து இள‌வ‌ர‌ச‌ன் ஆதித்த‌ க‌ரிகால‌னையே ம‌ண‌ம் செய்ய‌ ம‌றுக்கிறாள்...

வேற‌ யாருக்காவ‌து எதுனா கேள்வி இருக்கா? இப்ப‌வே கேட்டுக்க‌ங்க‌..அப்புற‌ம் ப‌ரிட்சைல‌ தெரியாம‌ முழிக்க‌ப்படாது...சொல்லிட்டேன் :))

34 comments:

பழமைபேசி said...

வாழ்த்துகள்!

கபீஷ் said...

கண்டிப்பா பொன்னியின் செல்வன் படிக்கணுமா? இதுதான் கேள்வி அல்லது பின்னூட்ட ஆஜர்

சதீசு குமார் said...

நல்ல அலசல்...

நன்றி..

செந்தழல் ரவி said...

புரிஞ்சா மாதிரியும் இருக்கு புரியாத மாதிரியும் இருக்கு...

எனக்கு சந்தேகம் வரும் ஆனா வராது...

துளசி கோபால் said...

அம்பது அம்பந்தைஞ்சு வருசத்துக்கு முன்னே வந்த கதையை இப்பக்கூடப் படிச்சு ஆராயறோமுன்னா அந்த 'நடை'யைத்தான் பாராட்டணும்.

சரித்திர நிகழ்வுகளாக இருந்தாலும் சரி, தனி மனிதனின் வாழ்க்கையில் நடந்த நிகழ்வானாலும் சரி..... உண்மை என்பது மறைஞ்சுதான் இருக்கு, சம்பந்தப்பட்டவுங்க தன் வாயேலே சொல்லும்வரை.

அதுக்குப் பல நிகழ்ச்சிகளில் நோ ச்சான்ஸ். ஏன்னா அவுங்க 'சரித்திரம்' ஆயிட்டாங்க.

துளசி கோபால் said...

வாயாலேன்னு திருத்தி வாசிக்கனும்.

தட்டச்சுப் பிழை!

குடுகுடுப்பை said...

பொன்னியின் செல்வனை படிச்சாதானே கருத்து சொல்லமுடியும்.

SUREஷ் said...

ஐயா,

ஆதித்ய கரிகாலர், இறந்துதான் போனார் என்பதற்கு ஆதாரம் ஏதும் இருக்கிறதா?

சமாதி, கல்வெட்டு, இரங்கற்பா இந்த மாதிரி...........


அவர் தலைமறைவானதாக அல்லது சாமியாராய்ப் போய்விட்டதாகக் கூட சொல்லலாம்.

கிடைத்த ஆவணங்களை வைத்து எழுதப்பட்ட அற்புதமான நூல் பொன்னியின் செலவன்.

Raji said...

அட நந்தினியின் குழந்தையின் அப்பா யார் ? some confussions are there!

புருனோ Bruno said...

நான் கூட எழுதியிருக்கிறேன். என் பதிவை படித்தால் குழப்பம் தீரலாம் அல்லது அதிகரிக்கலாம்

புருனோ Bruno said...

//ஆதித்ய கரிகாலர், இறந்துதான் போனார் என்பதற்கு ஆதாரம் ஏதும் இருக்கிறதா? //

அவர் இறந்து போனார் என்பது உறுதி.

ஆனால் கொல்லப்பட்டார் என்பது உறுதியல்ல. தெளிவு பெற அல்லது மேலும் குழம்ப
என் பதிவில் இருக்கும் சரியான கேள்வி கேட்பது எப்படி என்ற இடுகையை பார்க்கவும்

சந்திரசேகரன் கிருஷ்ணன் said...

@ சுரேஷ்

ஆதித்தகரிகாலரின் உடலை (சவத்தை சம்புவரையர் முதலானோர்) ஊர்வலமாக தஞ்சைக்கு எடுத்து வந்ததையும், ஈமக்கிரையை அரச வம்சத்தினர் செய்ததையும் பொன்னியின் செல்வனில் கல்கி எழுதியிருக்கிறாரே.

@ முரண்தொடை
செம்பியன் மாதேவி பிரித்தவரை சரி. அவர் நந்தினியை ஊமையின் மகள் என்ற உண்மை தெரிந்ததாலும் - ஊமை அரச வம்சத்தவள் இல்லை என்ற உண்மை செம்பியன் மாதேவிக்குத் தெரிந்ததாலும் இருக்கலாம் அல்லவா - விவாத நோக்கு தான். அப்படிதான் என்று நிருபிக்க என்னிடம் ஆதாரம் இல்லை.

வீரபாண்டியன் - நந்தினி குறித்த கருத்துகளில் நான் வேறுபடுகிறேன். புருனோக்கு என் பதிவில் அளித்த பதிலை இங்கு ஒட்டுகிறேன்.

>>
மேலும், உங்கள் பக்கவாட்டு பார்வையை நான் பாராட்டுகிறேன். நல்ல கோணம். ஆனால் இந்த எலக்ட்ரா கம்ப்ளக்ஸும், எடிபஸ் காம்ப்ளக்ஸும் மேற்கத்திய கலாசாரத்து விஷயங்களே தவிர இந்திய கலசாரத்துக்கு அந்த காலத்தில் ஒத்து வந்து இருக்கக்கூடும் என்று நினைக்கிறீர்களா? அந்த கோணத்தில் விவாதிக்க முடியுமே தவிர அந்த கோணத்தில் தான் அது நிகழந்திருக்க வேண்டும் என் ஸ்தாபிக்க முடியாது. இந்த விஷயத்தில் நாம் தீவிரமாக ஆதாரங்களுடன் பேச வேண்டும் என்று நான் நினைக்கிறேன். யார் கண்டது - நம் உரையாடலின் இறுதியில் நமக்கே தெரியாத சில விஷயங்களை நாம் அறிந்து கொண்டவர்களாக இருக்கக்கூடும். பழந்தமிழ் கலாசாரத்தில் இந்த சம்பவங்களுக்கு பொன்னியின் செல்வனின் இந்த சம்பவத்தைத் தவிர வேறு ஏதேனும் ஆதாரம் இலக்கியத்தில் இருக்கின்றதா ? இருந்தால் பரிசிலிக்கலாம் - நிருபிக்காதவரை இதை ஒரு விவாத கோணமாக மட்டுமே ஏற்றுக்கொள்ள வேண்டும்.

எனக்கு தோன்றுவதெல்லாம், இந்த வீரபாண்டியன் இருவர் - ஏனென்றால் பழந்தமிழகத்தில் மூத்த அரசர் பெயரை இளவல்களுக்கு வைக்கும் பழக்கம் உண்டு. ஆதித்தனின் பெயர் எங்கிருந்து வந்திருக்கக் கூடும் என்பது உங்களுக்கும் தெரிந்திருக்கும். அதே போல வீரபாண்டியனின் அரச வம்சத்தில் பிறந்த மற்றொரு அரசனின் (நந்தினியை மணக்கும் உரிமை கொண்ட அரசனின்) பெயரும் வீரபாண்டியன் என்று இருந்திருக்க வேண்டும்.

தமிழ் பிரியன் said...

இது தொடர்பாக நானும் நான்கு ஆராய்ச்சி பதிவு எழுதியுள்ளேனே... :)
http://majinnah.blogspot.com/search/label/பொன்னியின் செல்வன்

புருனோ Bruno said...

//எந்த காதலை சொல்கிறீர்கள் - சேந்தன் அமுதன் பூங்குழலி மீது கொண்ட காதலையா ? அல்லது மந்தாகினி சுந்தர சோழர் மீது கொண்ட காதலையா ? இல்லை இதையும் தாண்டிய வேறொரு மகோன்னத காதல் பொன்னியின் செல்வனில் இருப்பதாக நினைக்கிறீர்களா ? உங்கள் கருத்தை அறிய ஆவல்.//

இரண்டும் தான் :)

இதில் மந்தாகினியின் காதலே எனக்கு தீவிரமாக படுகிறது. வேறு யாரும் காதலுக்காக உயிரை பணயம் வைக்க வில்லை என்றே நினைக்கிறேன்

வானதி அரசுரிமையை இழக்க துணிந்ததும் கூட பெரிய விஷயம் தான்

//ஆதித்தன் பற்றி என்ன சொல்லுகிறீர்கள் - அவன் தற்கொலை செய்து கொண்டான் என்றா ? அப்படி தற்கொலை தான் செய்து கொண்டான் என்றால் அந்த சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சியான மணிமேகலை ஏன் அந்த பழியை தன் மீது போட்டுக்கொள்ள வேண்டும்.//
மணிமேகலைக்கு என்ன நடந்தது என்றே தெரியாது

// அவள் வந்தியத்தேவன் மீது சாட்டப்பட்ட குற்றத்தை நீக்க வேண்டுமானால் - ஆதித்தன் தற்கொலை செய்து கொண்டான் என்றோ அதிர்ச்சியில் இறந்தான் என்றோ சொல்லியிருக்கலாமே. அந்த வாதம் கூட வந்தியத்தேவனை கொலைப்பழியிலிருந்து காப்பற்றியிருக்கக்கூடுமே.//
யாரும் நம்பி இருக்க மாட்டார்கள். அடுத்த விஷயம்.

// ஆக ஆதித்தன் கொல்லப்பட்டான் என்பது ஏறக்குறைய உறுதி - அதனாலேயே மணிமேகலை மாற்று கோண்த்தை கையாளவில்லை என்பது என் கருத்து.//
ஏறக்குறையத்தான் உறுதி :)

//மேலும், உங்கள் பக்கவாட்டு பார்வையை நான் பாராட்டுகிறேன். நல்ல கோணம். ஆனால் இந்த எலக்ட்ரா கம்ப்ளக்ஸும், எடிபஸ் காம்ப்ளக்ஸும் மேற்கத்திய கலாசாரத்து விஷயங்களே தவிர இந்திய கலசாரத்துக்கு அந்த காலத்தில் ஒத்து வந்து இருக்கக்கூடும் என்று நினைக்கிறீர்களா?//
ஈடிபஸ் காம்ப்ளெஸ் என்பது மேற்கத்திய கலாசாரம் என்பதை நான் முழுவதும் மறுக்கிறேன். அது மனித மனதின் அடியில் இருப்பது

எப்படி மது, புகைப்பது போன்றவை எல்லாம் அனைத்து கலாச்சாரங்களிலும் உண்டோ அது போல் தான் இதுவும்.

எப்படி ராமர்-சிதை-ராவணன் போல் மெனுலாஸ்-ஹெலன்-பாரிஸோ, அதே போல் இது கலாச்சாரத்திற்கு உட்பட்டதல்ல

பிரம்மா - சரஸ்வதி கதை பற்றி உங்களின் கருத்து என்ன

இதை தவிர 20ஆம் நூற்றாண்டு உதாரணம் தந்தால் ”இறந்தவர்களை பற்றி பேசாதீர்கள்” என்று என்னை தாளித்து எடுத்து விடுவார்கள் :) :) அல்லது தேச துரோகி ஆக்கி விடுவார்கள்

// அந்த கோணத்தில் விவாதிக்க முடியுமே தவிர அந்த கோணத்தில் தான் அது நிகழந்திருக்க வேண்டும் என் ஸ்தாபிக்க முடியாது.//

கண்டிப்பாக முடியாது. ஆனால் அதை மறுக்க முடியாது என்பது தான் விஷயம் :) :)

// இந்த விஷயத்தில் நாம் தீவிரமாக ஆதாரங்களுடன் பேச வேண்டும் என்று நான் நினைக்கிறேன். யார் கண்டது - நம் உரையாடலின் இறுதியில் நமக்கே தெரியாத சில விஷயங்களை நாம் அறிந்து கொண்டவர்களாக இருக்கக்கூடும். பழந்தமிழ் கலாசாரத்தில் இந்த சம்பவங்களுக்கு பொன்னியின் செல்வனின் இந்த சம்பவத்தைத் தவிர வேறு ஏதேனும் ஆதாரம் இலக்கியத்தில் இருக்கின்றதா ? //

இல்லை நந்தினி என்ற கதாப்பாத்திரம் வேறு புதினங்களில் இல்லை என்றே நினைக்கிறேன்

//இருந்தால் பரிசிலிக்கலாம் - நிருபிக்காதவரை இதை ஒரு விவாத கோணமாக மட்டுமே ஏற்றுக்கொள்ள வேண்டும்.

எனக்கு தோன்றுவதெல்லாம், இந்த வீரபாண்டியன் இருவர் - ஏனென்றால் பழந்தமிழகத்தில் மூத்த அரசர் பெயரை இளவல்களுக்கு வைக்கும் பழக்கம் உண்டு. ஆதித்தனின் பெயர் எங்கிருந்து வந்திருக்கக் கூடும் என்பது உங்களுக்கும் தெரிந்திருக்கும். அதே போல வீரபாண்டியனின் அரச வம்சத்தில் பிறந்த மற்றொரு அரசனின் (நந்தினியை மணக்கும் உரிமை கொண்ட அரசனின்) பெயரும் வீரபாண்டியன் என்று இருந்திருக்க வேண்டும்.//

இந்த சிக்கலுக்கு எளிதான விடை - வீரபாண்டியர் இருவர். அப்பா மகன், அல்லது சகோதரராக கூட இருக்கலாம்

அப்படி இல்லை , ஒரே வீரபாண்டியர் என்றால் அதற்கு மறுக்க முடியாத ஒரு விடை நந்தினி தன் தந்தையை காதலித்தாள் என்பது தான்

truth is sometimes bitter

நான் ஒரே விடை என்று கூற வில்லை

This is an hypothesis you cannot disprove :) :)

Saravana Kumar MSK said...

இப்பதான் பொன்னியின் செல்வன் டவுன்லோட் பண்ணினேன்.. படிச்சிட்டு வந்து பேசறேன்..

அது சரி said...

குடித்து விட்டு பதிவு எழுதறதா இல்ல பதிவு எழுதிட்டு குடிக்க போறதாங்கிற கொழப்பத்துல பதிவு எழுதி விட்டு குடிக்கப் போய்விட்டதால் பின்னூட்டங்களுக்கு உடன் பதிலிட முடியவில்லை.

அனைவரும் மன்னிக்கவும்!

அது சரி said...

//
பழமைபேசி said...
வாழ்த்துகள்!

//

வாழ்த்துகளுக்கு நன்றி அண்ணே...ஆனா, எதுக்கு வாழ்த்துறீங்கன்னு ஒண்ணும் புரியலையே?

அது சரி said...

//
கபீஷ் said...
கண்டிப்பா பொன்னியின் செல்வன் படிக்கணுமா? இதுதான் கேள்வி அல்லது பின்னூட்ட ஆஜர்
//

அவசியம் படிக்கணும்னு இல்லீங்க..ஆனா படிச்சா தான் பதிவு புரியும், அதனால அது ஒரு டிஸ்கி மாதிரி எடுத்துக்கங்களேன்!

ஆனா டைம் கிடைச்சா படிச்சு பாருங்க...ரொம்ப நல்லாருக்கும்.

அது சரி said...

//
செந்தழல் ரவி said...
புரிஞ்சா மாதிரியும் இருக்கு புரியாத மாதிரியும் இருக்கு...

எனக்கு சந்தேகம் வரும் ஆனா வராது...

//

வாங்க ரவி...வராதவங்க வந்திருக்கீக....இப்ப சந்தேகம் வந்துருச்சா இல்ல இன்னும் வரலியா? :0)

அது சரி said...

//
துளசி கோபால் said...
அம்பது அம்பந்தைஞ்சு வருசத்துக்கு முன்னே வந்த கதையை இப்பக்கூடப் படிச்சு ஆராயறோமுன்னா அந்த 'நடை'யைத்தான் பாராட்டணும்.

சரித்திர நிகழ்வுகளாக இருந்தாலும் சரி, தனி மனிதனின் வாழ்க்கையில் நடந்த நிகழ்வானாலும் சரி..... உண்மை என்பது மறைஞ்சுதான் இருக்கு, சம்பந்தப்பட்டவுங்க தன் வாயேலே சொல்லும்வரை.

அதுக்குப் பல நிகழ்ச்சிகளில் நோ ச்சான்ஸ். ஏன்னா அவுங்க 'சரித்திரம்' ஆயிட்டாங்க.

//

வாங்க டீச்சர்...என்னங்க ரொம்ப நாளா நம்ம கடை பக்கமே வரமாட்டேங்கறீங்க?

நீங்க சொல்றது உண்மை தான்...அம்பது வருஷம் கழிச்சி இன்னிக்கும் பொன்னியின் செல்வன் ரொம்ப ஹாட்டா தான் சேல்ஸ் ஆவுதாம்...இத்தனைக்கும் அந்த புக்கை ஓசியிலேயே படிக்க வசதி இருக்கு...ஆனாலும் பிரிண்டட் புக்கும் நல்ல சேல்ஸ் ஆவுதுன்னா அது கல்கியின் மிகப் பெரிய வெற்றி.


ஆனா, பொன்னியின் செல்வனை பொறுத்தவரை எனக்கு மிகப்பெரிய கேள்வி ஒன்று உண்டு..அது அப்புறம்!

அது சரி said...

//
குடுகுடுப்பை said...
பொன்னியின் செல்வனை படிச்சாதானே கருத்து சொல்லமுடியும்.

//

ஆஹா, இது நல்ல கருத்து :0)

படிச்சிட்டு வந்து கருத்து சொல்லுங்க தல..ச்சும்மா அஞ்சி பாகம் தான் இருக்கும்...எவ்ளோ நேரம் வேணும்னாலும் எடுத்துக்கங்க...ஆனா நாளைக்கு காலைக்குள்ள முடிச்சிருங்க :))

அது சரி said...

//
சதீசு குமார் said...
நல்ல அலசல்...

நன்றி..

//

வாங்க சதீஷ் குமார்...வருகைக்கு நன்றி.

அது சரி said...

//
SUREஷ் said...
ஐயா,

ஆதித்ய கரிகாலர், இறந்துதான் போனார் என்பதற்கு ஆதாரம் ஏதும் இருக்கிறதா?

சமாதி, கல்வெட்டு, இரங்கற்பா இந்த மாதிரி...........


அவர் தலைமறைவானதாக அல்லது சாமியாராய்ப் போய்விட்டதாகக் கூட சொல்லலாம்.

கிடைத்த ஆவணங்களை வைத்து எழுதப்பட்ட அற்புதமான நூல் பொன்னியின் செலவன்.

//

வாங்க சுரேஷ்..

ஆதித்ய கரிகாலர் இற்ந்து தான் போனார் என்பதற்கு ஆதாரம் இருக்கிறதா கல்கி சொல்லியிருக்கார்.

இதை பற்றி அடுத்த பாகத்தில் விளக்குகிறேன்..

மற்றபடி, பொன்னியின் செல்வன் ஒரு அற்புதமான நவீனம் என்பதில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை.

அது சரி said...

மீதி பின்னூட்டங்களுக்கு இன்னும் சில மணி நேரத்தில் பதிலிடுகிறேன்..மன்னிக்க.

நசரேயன் said...

/*மீதி பின்னூட்டங்களுக்கு இன்னும் சில மணி நேரத்தில் பதிலிடுகிறேன்..மன்னிக்க.*/
என்ன சரக்கு ஓடுது

பழமைபேசி said...

//வாழ்த்துகளுக்கு நன்றி அண்ணே...ஆனா, எதுக்கு வாழ்த்துறீங்கன்னு ஒண்ணும் புரியலையே?//

பதிவு தமிழ்மணத்துல தெரிய ஆரம்பிச்சதுமே, ஓடி வந்து படிச்சுட்டு, ஒடனே இது சூடான இடுகைல வரும்ன்னு யூகம் செய்து வாழ்த்தினேனே? அது உங்களுக்குப் புரியலையா? இஃகி!ஃகி!!

அது சரி said...

//
புருனோ Bruno said...
நான் கூட எழுதியிருக்கிறேன். என் பதிவை படித்தால் குழப்பம் தீரலாம் அல்லது அதிகரிக்கலாம்
//

வருகைக்கு நன்றி டாக்டர்...உங்கள் பதிவை படித்தேன்..நீங்கள் சொல்லியிருப்பது போல் நந்தினி தன் தந்தை என்று தெரியாமல் வீரபாண்டியனை காதலித்திருக்க வாய்ப்புகள் இருந்தாலும், அவள் வீரபாண்டியனை காதலித்தாளா என்பதிலேயே எனக்கு கேள்விகள் இருப்பதால் எடிபஸ் காம்ப்ளெக்ஸ்/எலெக்ட்ரா காம்ப்ளெக்ஸ் தியரியை என்னால் ஒப்புக் கொள்ள முடியவில்லை... ஒரு வேளை என் புரிதல் தவறாகவும் இருக்கலாம்...இதன் அடுத்த பாகத்தில் எழுதியிருக்கிறேன்..

அது சரி said...

//
தமிழ் பிரியன் said...
இது தொடர்பாக நானும் நான்கு ஆராய்ச்சி பதிவு எழுதியுள்ளேனே... :)

//

வாங்க தமிழ்ப்பிரியன்...இப்ப தான் படிச்சேன்.. ஒரு லாயர் மாதிரி பாய்ண்ட் பை பாய்ண்டா நீங்க ஆராய்ச்சி செஞ்சிருக்கீங்க...ரொம்ப நல்லா இருந்திச்சி...ஆனா, நந்தினி பாண்டியனின் காதலிங்கறத என்னால ஒப்புக்க முடியலை..:0))

உங்கள் வருகைக்கு நன்றி!

அது சரி said...

//
சந்திரசேகரன் கிருஷ்ணன் said...

எனக்கு தோன்றுவதெல்லாம், இந்த வீரபாண்டியன் இருவர் - ஏனென்றால் பழந்தமிழகத்தில் மூத்த அரசர் பெயரை இளவல்களுக்கு வைக்கும் பழக்கம் உண்டு. ஆதித்தனின் பெயர் எங்கிருந்து வந்திருக்கக் கூடும் என்பது உங்களுக்கும் தெரிந்திருக்கும். அதே போல வீரபாண்டியனின் அரச வம்சத்தில் பிறந்த மற்றொரு அரசனின் (நந்தினியை மணக்கும் உரிமை கொண்ட அரசனின்) பெயரும் வீரபாண்டியன் என்று இருந்திருக்க வேண்டும்.
//

வீரபாண்டியன் ஒருவர் தான்..இருவர் இல்லை...எனக்கு தெரிந்த வரை, வீரபாண்டியனுக்கும் நந்தினிக்கும் காதல் என்பதே இல்லை.. அதனால் எடிபஸ் காம்ப்ளெக்ஸ் தியரிக்குள் நான் வரவில்லை..

ஆனால் அப்படி இருந்திருந்தால்....வாதத்திற்காக அப்படி இருக்கவும் வாய்ப்புண்டு என்பதை மறுக்க முடியாது...டாக்டர் ப்ரூனோ சொல்வது போல் எடிபஸ் காம்ப்ளெக்ஸ் என்பது கலாச்சாரமல்ல...அது ஒரு மனோநிலை..விபத்து என்றும் சொல்லலாம்.

உங்கள் பதிவே என்னை பதிவிட தூண்டியது என்பதால் உங்களுக்கு சிறப்பு நன்றி.

அது சரி said...

//
Saravana Kumar MSK said...
இப்பதான் பொன்னியின் செல்வன் டவுன்லோட் பண்ணினேன்.. படிச்சிட்டு வந்து பேசறேன்..

//

படிங்க...படிச்சிட்டு வந்து சொல்லுங்க...ஆமா, அஞ்சி பாகத்தை எப்ப முடிப்பீங்க? :))

அது சரி said...

//
நசரேயன் said...
/*மீதி பின்னூட்டங்களுக்கு இன்னும் சில மணி நேரத்தில் பதிலிடுகிறேன்..மன்னிக்க.*/
என்ன சரக்கு ஓடுது

//

என்ன சரக்கு ஓடுதா? ஒங்களுக்கே இது அநியாயமா படல? நானே இங்க ஹேங் ஓவர்ல மண்ட காஞ்சிக்கிட்டு இருக்கேன்....எல்லா சனியனையும் கலந்துகட்டி அடிச்சா இப்பிடி தான்...

அது சரி said...

//

பழமைபேசி said...
//வாழ்த்துகளுக்கு நன்றி அண்ணே...ஆனா, எதுக்கு வாழ்த்துறீங்கன்னு ஒண்ணும் புரியலையே?//

பதிவு தமிழ்மணத்துல தெரிய ஆரம்பிச்சதுமே, ஓடி வந்து படிச்சுட்டு, ஒடனே இது சூடான இடுகைல வரும்ன்னு யூகம் செய்து வாழ்த்தினேனே? அது உங்களுக்குப் புரியலையா? இஃகி!ஃகி!!

//

அட..ஆமாங்க...நீங்க சொல்றது மாதிரி இது கொஞ்ச நேரம் நிஜமாவே சூடான இடுகைகள்ல இருந்துச்சி....எப்பிடி கரெக்டா கண்டுபிடிச்சீங்க? எங்களுக்கும் சொன்னா இனிமே நாங்க சூடான இடுகைகள் மட்டுமே போடுவோம்ல? ;0)

ஆனா ஒண்ணு, நீங்க நெம்ப வித்தியாசமா சிரிக்கிறீங்கண்ணா!

Sridhar Narayanan said...

நல்ல கேள்விகள். அருமையான விளக்கங்கள்.

மந்தாகினி சோழ வம்சம் அதனால் சோழ அரசனை காப்பாற்ற முயல்கிறார். நந்தினி பாண்டிய வம்சம் (வீரபாண்டியனின் மனைவி) அதனால் அவர் பாண்டிய ஆபத்துதவிகளுக்கு உதவி செய்து சோழகுலத்தை பூண்டோடு அழிக்க உதவுகிறார். இவர்கள் இருவருக்கும் இடையே தாய்-மகள் உறவு வேறு. ஆனால் இந்த தெளிவு பொன்னியின் செல்வனின் இறுதிப் பகுதியில்தான் தெரிகிறது. இதேத் தெளிவுடன் மீண்டும் பொன்னியின் செல்வனைப் படித்தால் சில இடங்களில் முரண் தெரியத்தான் செய்கிறது. ‘வீரபாண்டியன் எனது காதலர்’ என்று ஆதித்த கரிகாலனிடம் நந்தினி மன்றாடுவது ஒரு உதாரணம். ஆதித்த கரிகாலனுக்கு தன்மேல் இருக்கும் காதலை அறிந்திருக்கும் நந்தினிக்கு தனது தந்தையை (என்று அவருக்கு தெரிந்திருக்கும் பட்சத்தில்) காப்பாற்ற கட்டாயம் அப்படி ஒரு வாக்கியத்தை சொல்ல முடியாது. அப்படியே தெரியாமலும், புருனோ சொல்லும் ஈடிபஸ் காம்ப்ளக்ஸில் (இதுவும் இங்கு ஒத்துவராத ஒரு விசயம் என்பதை பின்னர் பார்ப்போம்) நந்தினி வீரபாண்டியனை காதலித்திருந்தாலும் ஆதித்த கரிகாலனிடம் அதைச் சொல்லி உயிர்பிச்சை கேட்டிருப்பாரா? சந்தேகம்தான்.

ஈடிபஸ் காம்பிளக்ஸின் (oedipus complex) முக்கிய விஷயமே ‘பெற்றோரின் மேல் ஏற்படும் காதல் / வெறுப்பு’தான். பெற்றோர் என்றால் தாய் / தந்தை மட்டுமல்ல. குழந்தையை பெற்று வளர்ப்பவரே பெற்றோராகிறார். ஒரு குழந்தை வளரும்போது தன் தாய் / தந்தையரை அருகிலிருந்து பார்க்கும்பொழுது இந்தக் காதல் / வெறுப்பு உண்டாக வாய்ப்பிருக்கிறது.

நந்தினியோ / மதுராந்தகன் என்று அறியப்பட்டு பின்னர் அமரபுஜங்க பாண்டியனாக மாறும் அவரது சகோதரனோ வீரபாண்டியனோடு சேர்ந்து வாழ்ந்ததில்லை. அப்படியிருக்க நந்தினிக்கு வீரபாண்டியன் மேல் ஈடிபஸ் காம்ப்ளக்ஸ் வர வாய்ப்பில்லை என்றுதான் தோன்றுகிறது.

பாண்டிய / சோழ அரசுகளின் விரோதத்தை முக்கிய களமாக வைத்து பின்னப்பட்ட பெருங்கதையாகையால் பின்னர் ஏற்பட்ட சில மாற்றங்களினால் சில குழப்பங்கள் (வெகுச் சில) ஏற்பட்டிருக்கலாம்.

இதைவிட என்னைக் கவர்ந்தது குந்தவை / வந்தியத்தேவன் காதலைப் பற்றிய கேள்வி. இக்கோணத்தில் இப்படிப்பட்ட கேள்வியை இப்பொழுதுதான் பார்க்கிறேன். உண்மைதான். குந்தவை போன்ற அதிகாரம் உள்ள நபர்களின் காதல் மிகவும் காத்திரமானதாக இருந்திருக்க வேண்டும். நந்தினிக்கு எதிராக குந்தவையின் பாத்திரத்தை கட்டமைக்க வேண்டிய நிர்பந்தத்தில் அவர் மிகவும் புனித பாத்திரமாக ஆகி விட்டிருக்கிறார் என்றுதான் தோன்றுகிறது.

இனியவள் புனிதா said...

//இதை படிப்பதற்கு நீண்ட நாட்களாகும், ஆனால் சுகமானது...//

உண்மைதான்...:-)