"எந்த சக்களத்தி முண்ட எனக்கு பொண்ணு தரேங்குறா சொல்லு..."
என்னது அசிங்கமா..எடுத்த உடனேயே சக்களத்தி..முண்டைன்னு...முகம் சுளிக்கிறீர்கள் என்றால் உங்களுக்கு மாணிக்கத்தை தெரியாது என்று அர்த்தம்....
மாணிக்கம் இப்படித் தான் வர்ஜா வர்ஜமில்லாமல்...உங்களுக்கும் எனக்கும் தெரிந்த நாகரீகம் தெரியாமல் பேசுவான்...இடுப்பில் ஒரு அழுக்கு பச்சை லுங்கியும் தோளில் ஒரு துண்டும்...சட்டையில்லாமல் கறுப்பு உடம்புடன் திரிவான்..என் மாமனின் நட்பு என்பதால் எனக்கும்...முதலில் சகித்துக் கொண்டு இப்பொழுது எனக்கு பழகி விட்டது...மாணிக்கத்துக்கு தொழில் மாடு வளர்ப்பது, வீடு வீடாக சென்று பால் ஊற்றுவது...நாலு பசு மாடு, மூணு எருமை...அவற்றின் கன்றுகள்...பத்து பதினைந்து கோழிகள்..அவற்றின் குஞ்சுகள்...இறைந்து கிடக்கும் வைக்கோல்..ஒரு ஓரமாய் அவிழ்ந்து கிடக்கும் புண்ணாக்கு மூட்டை...அவனது வீட்டை வீடு என்று யாரும் ஒப்புக் கொள்ள மாட்டார்கள்...சீக்கிரம் நாலு ஆடு வாங்குனா நல்ல காசு என்று சொல்லிக் கொண்டிருக்கிறான்...அனேகமாய் அடுத்த வாரம் இங்கு சில ஆடுகளும்...
நான் போன போது கோழிகளை பிடித்து கூண்டில் அடைத்துக் கொண்டிருந்தான்...
"ஏண்ணே...வயசு முப்பத்தஞ்சாச்சி...ஒரு கல்யாணம் பண்ணிக்க வேண்டியது தான" என்று கேட்டதற்கு தான் இந்த "சக்களத்தி முண்டை" பதில்...
"ஆமா...இப்பிடியே சொல்லிக்கிட்டு இரு...ஒரு நாளு யாரும் இல்லாம தான் சாவப் போற..."
"ஆட்டிக்கிட்டு வந்துட்டியா சாபம் குடுக்க....வர்றவ எல்லாம் ஒரு ச்சின்ன வேலையா இருந்தாலும் பரவால்ல...ஆனா மாடு வளக்குறவனுக்கு எப்பிடி பொண்ணு குடுக்கிறதுங்கிறாளுவ...ஒன்ன மாதிரி வெள்ளையும் சொள்ளையுமா மினுக்கிக்கிட்டு இருந்தா தான் பிடிக்கிது...இவளுங்களுக்காவ மாட்ட வித்துட்டு நான் என்ன செய்றது...பிச்ச எடுக்க தான் போவணும்...இதுல செவ்வாய் தோஷம் வேற...அப்புறம் எங்க இருந்து கல்யாணம்...பெருசா பேசுறான் கூமுட்ட....."
கல்யாணம் என்று யார் சொன்னாலும் அவனுக்கு கோபம் வருவதில் நியாயம் இருந்தது...இதற்கு மேல் பேசினால் என் டவுசர் கிழியும் அபாயம் இருப்பதால்...
"சரிண்ணே...டென்ஷன் ஆவாத...இன்னும் சாப்பிடல இல்ல...சரி சரி வா...பஸ் ஸ்டாண்டு வரைக்கும் போயி முட்ட பரோட்டா சாப்டலாம்..."
"முட்ட பரோட்டாவா.... கொஞ்ச இரு, இந்தா வந்துர்றேன்...."
"சாப்பிட மட்டும் ஒடனே கெளம்பிருவியே..."
"காலைலருந்து காஞ்சி போயி கெடக்கேன்...எம் பசி எனக்கு தான்டா தெரியும்..."
------------------------------------------------------------------------
கொஞ்ச நாளிலேய மாணிக்கம் வாயெல்லாம் பல்லாக எங்கள் வீட்டுக்கு வந்தான்...
"டேய் ரொம்ப படிச்சவனே...நீ சொன்ன மாதிரியே கல்யாணம் பண்ணிக்க போறேன்டா...பொண்ணெல்லாம் பார்த்தாச்சி...கரூர் பக்கத்துல..."
நிஜமாகவே சந்தோஷமாயிருந்தது...அதுக்காக வம்பிழுக்கிற சான்ஸை விட முடியுமா...
"இதப் பார்ரா...பெரிய நியூஸ் தான்...ஆமா, பொண்ணுக்கிட்ட ஒன் வீட்ல பத்து பசுவும் எட்டு எருமையும் இருக்கறத சொல்லிட்டியா..இல்ல ஏமாத்திட்டியா..."
"ஒம் புத்தி ஒன்னை விட்டு எங்க போகும்...எல்லாம் சொல்லியாச்சி...."
ஆனால் அவன் என்னிடம் சொல்லாதது...அந்த பெண்ணுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி ரத்தான விஷயம்...
கல்யாணமும் நடந்தது...தெருவில் எல்லாருக்கும் பத்திரிக்கை வைத்து...சோறு போட்டு...மாணிக்கம் இள மஞ்சள் நிற பட்டு வேட்டியும் இள மஞ்சள் நிற பட்டு சட்டையும் உடுத்தி...மாரியம்மன் கோவிலில் இரவு கலை நிகழ்ச்சி என்ற பெயரில் மைக் செட்டு வைத்து...குத்தாட்டம் நடத்தி...
கல்யாணம் ஆகி மூன்று நாட்களுக்கு மாணிக்கத்தை ஆளையே பார்க்க முடியவில்லை...
----------------------------------------------------------------------------
நாலு நாள் கழித்து அன்று சாயந்தரம் வீட்டுக்கு பால் கொண்டு வந்திருந்தான்...முகத்தில் உற்சாகம் இல்லை...
"எண்ணன்ணே...ஒன்ன பார்த்தா கல்யாண களையே இல்லியெ...பொண்ணுக் கூட எதுனா பிரச்சினையா..."
"ஒண்ணுமில்லடா...ஒரு சின்ன பிரச்சினை...அவ கோவிச்சிக்கிட்டு அவங்க ஊருக்கு போயிட்டா..."
கல்யாணம் ஆன புதிதில் பெண்கள் தாய் வீட்டுக்கு போக துடிப்பது சகஜம் தான்...ஆனால் மூன்றே நாளில்??
"ஏன்ணே...நீ எதுனா சண்டை போட்டியா..."
"எல்லாம் அதே கருமம் தான்டா...அவளுக்கு வீட்ல மாடு இருக்கது பிடிக்கலை...என் மேல சாணி நாத்தம் வருதாம்...எல்லா மாட்டையும் வித்துரு....இல்லாட்டி ஒன்னைய சாணின்னு தான் கூப்பிடுவேன்னா...ரெண்டு நாளா அப்பிடி தான் கூப்பிட்டா...நேத்தி எனக்கு கோவம் வந்திடுச்சி...திட்டிட்டேன்...கோவிச்சிக்கிட்டு ஊருக்கு போயிட்டா..."
"ஒனக்கு அறிவே இல்ல...சரி வுடு...காலையில மாமா, நானெல்லாம் கருரூக்கு போய் பேசி கூட்டி வந்துருவோம்..."
எத்தனை கோர்த்தாலும் அந்த கல்யாணம் ஒரு வருடத்திற்கு மேல் ஒட்டவில்லை...அவன் மனைவி தாய் வீட்டுக்கு போனவள் அங்கே தங்கிவிட மாணிக்கம் திருவண்ணாமலை, திருப்பதி, பழனி, திருப்பரங்குன்றம் என்று போக ஆரம்பித்தான்...திடீரென்று கடவுளே இல்லை என்பான்...கொஞ்ச நாள் கழித்து மீண்டும் திருவண்ணாமலை, திருப்பதி, பழனி, திருப்பரங்குன்றம்...
-----------------------------------------------------------------------
இந்த முறை லீவில் வீட்டுக்கு போன போது மாணிக்கத்தை பார்க்க முடியவில்லை. வேறு யாரோ பால் கொண்டு வந்தார்கள்...
"எங்க மாமா...மாணிக்கம் அண்ணனை காணோம்...மாட்டெல்லாம் வித்துட்டாரா...."
மாமா கொஞ்ச நேரம் பேசாமல் இருந்தார்...
"மாணிக்கத்தை ஹாஸ்பிடல்ல சேத்துருக்கு...அதனால வர மாட்டான்..."
"ஏன் என்னாச்சி...ஒடம்பு எதுவும் சரியில்லையா..."
"ஆமா...அவனுக்கு..ம்ம்ம்ம்...அதெல்லாம் ஒனக்கெதுக்கு...விடு..."
"சொல்லுங்க...என்னாச்சி..."
"அவனுக்கு எய்ட்ஸ்டா...எங்கயோ போயி நோய வாங்கிட்டு வந்துட்டான்...இப்ப ஹாஸ்பிடல்ல வச்சி பாத்துக்கிட்டு இருக்காங்க...."
============
இந்த கதை,உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு நடத்தும் சிறுகதைப் போட்டிக்காக எழுதப்பட்டது.
========================================================
Wednesday, 3 June 2009
Monday, 27 April 2009
அதிமுகவிற்கு ஓட்டுப் போடுவது தவறா?

போன மாதம் வரை, ஈழத்தமிழன் என்று எவனும் இல்லை, போர் என்றால் சாகத்தான் செய்வார்கள் என்று அருள் வாக்கு வழங்கிய தங்கத் தாரகை, இன்று ஒரே ஒரு வீடியோ பார்த்தாராம், இப்பொழுது தனி ஈழம் அமைத்தே தீருவேன் என்று சூளுரைக்கிறாராம்..அது வரை, ஈழத்தில் மக்கள் சாகும் விஷயமே அவருக்கு தெரியாதாம்....
இப்படி ஒரு பித்தலாட்டம், அதையும் நம்பும் மக்கள் கூட்டம்! இவர் கச்சத் தீவை மீட்டெடுப்பேன் என்று சபதமிட்டது யாருக்காவது ஞாபகம் இருக்கிறதா? பத்து வருடம் முதல்வராயிருந்து தீவை மீட்க பொர்ச்சி தலைவி செய்த தீராத பொர்ச்சிகளை யாரேனும் பட்டியலிட முடியுமா?
ஈழப்பிரச்சினைக்காக குரல் கொடுத்தார் என்பதற்காகவே வைகோவை பொடாவில் உள்ளே தள்ளியது புரட்சி அம்மையாரா இல்லை அவரது உயிர்த் தோழியா? கைது செய்ய கையெழுத்திட்டது அம்மையாரா இல்லை என் கையெழுத்து இல்லை என்று மறுப்பாரா??
ஈழப்பிரச்சினையில் கலைஞரின் அணுகுமுறை குறித்து எனக்கும் கடும் விமர்சனங்கள் உண்டு...ஆனால் இன்றைக்கு அதிமுக அணிக்கு ஓட்டு போடுவது என்றால், யாருக்கு ஓட்டு?
ஈழத் தமிழருக்கு குரல் கொடுப்பது அன்புமணியின் வேலை இல்லை, அது பிரணாப் முகர்ஜியின் வேலை என்று கணக்கு பேசி, தமிழரின் பிணங்களை ஏழு சீட்டுக்காக விற்ற சாதி சங்க தலைவர் ராம தாசுக்கா?? அணு ஒப்பந்தத்திற்காக பார்லிமென்டில் கலவரம் செய்வோம், ஆனால் ஈழப்பிரச்சினையில் தி.மு.க தான் செய்ய வேண்டும் என்று பங்கு பிரித்த கம்யூனிஸ்டுக்கா?
ஒரு செல்வாக்கும் இல்லாத, ஒரு பதவி சுகமும் அனுபவிக்காத கடைக்கோடி தமிழன் கூட செத்துக் கொண்டிருக்கும் ஈழத்தமிழனுக்காக குரல் கொடுக்கும் போது இந்த பிரச்சினையில் வாயே திறக்காத ஒரு நபர் உண்டு....இல்லை, தங்கபாலு இல்லை, தமிழ் குடித்தாங்கியின் தவப்புதல்வன், கடைசி நாள் வரை பதவியில் ஓட்டிக் கொண்டிருந்த அன்புமணி!
கலைஞர் முழுமூச்சில் குரல் கொடுக்கவில்லை என்பது உண்மையே...ஆனால், சைனாவின் கட்டளைப்படி ஆதரவை வாபஸ் வாங்கிய கம்யூனிஸ்ட் உண்டியல்கள் இந்த பிரச்சினையில் குலுக்கியது என்ன?? புறக்கடை வழியே மகனை மந்திரியாக்கி, பாட்டாளி மக்களுக்காக போராடிய ராமதாஸு என்னும் நபரின் மத்திய மந்திரிகள் இதில் சாதித்தது என்ன??
ராமதாஸ் & சன்ஸ் மீண்டும் மத்திய மந்திரி ஆகவா ஓட்டு? கலைஞர் உண்ணாவிரதம் நாடகம் என்பவர்கள் எப்படி ராமதாசுக்கும், கம்யூனிஸ்டுக்கும், பொரச்சி அன்னைக்கும் ஓட்டுப் போட சொல்கிறார்கள் என்று எனக்கு புரியவில்லை...
சரி, அம்மையார் வென்று விட்டால் என்ன நடக்கும்?? வாஜ்பாயின் 13 நாள் ஆட்சி யாருக்கேனும் ஞாபகம் இருக்கிறதா?? அந்த ஆட்சி கவிழ்த்தது யார்? அம்மையார் அல்லவா? கச்சத்தீவை மீட்கவோ, தமிழ்நாட்டில் வேலை வாய்ப்பை ஏற்படுத்தவோ ஆதரவை வாபஸ் வாங்கினாரா? இல்லை தன் மீது இருந்த வழக்குகளை வாபஸ் வாங்க சொல்லி மிரட்டினாரா??
காங்கிரஸின் பதினாறு வேட்பாளர்களும் தோற்க வேண்டும்...ஆனால்.... இது வரை அம்மையார் என்ன செய்து விட்டார், இனி என்ன செய்து விடப் போகிறார்??
யாருக்கு ஓட்டுப் போடுவது என்பது உங்கள் உரிமை....ஆனால் சாத்தான்கள் ஓதும் வேதத்தை நான் நம்பத் தயாராயில்லை!
(படம் உதவி: Google.com)
==================================
Labels:
அரசியல்,
ஈழப் பிரச்சினை
Subscribe to:
Posts (Atom)