Monday 25 July 2011

பிதா

    இயேசு ஞானஸ்நானம் பெற்று ஜலத்திலிருந்து கரையேறினவுடனே இதோ வானம் அவருக்கு திறக்கப்பட்டது; தேவ ஆவி புறாவைப் போல இறங்கி தம் மேல் வருகிறதைக் கண்டார். அன்றியும் வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி இவர் என் நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன் என்று உரைத்தது.
    புதிய ஏற்பாடு, மத்தேயு. அதிகாரம் 3, வசனங்கள் 16,17
    ====================
    ”வாயில கொஞ்சம் நல்லெண்ணைய ஊத்தி கட்டுங்க” என்று அத்தை சொல்லவும் தஞ்சாவூர் மாமாவும் இன்னொருவரும் அப்பாவின் வாயில் எண்ணெயை ஊற்றி வெளியே கொஞ்சமாய் வழிந்த எண்ணெயை துணியால் துடைத்து அந்த துணியை அப்பாவின் தலைவழியாக நாடியுடன் சேர்த்து இறுக்கி கட்டினார்கள். அப்பாவுக்கு நல்லெண்ணையை பொடியில் ஊற்றி இட்லி சாப்பிட பிடிக்கும். ஆனால் இதயத்தில் அடைப்பு இருந்ததால் எண்ணெய் எதுவும் சேர்க்க கூடாது என்று சொல்லி விட்டார்கள். சாகும் வரை உப்பில்லாத இட்லியை தான் சாப்பிட்டு கொண்டிருந்தார். 
    அப்பாவை அவர் வழக்கமாய் உட்காரும் பிரம்பு நாற்காலியில் தான் உட்கார வைத்திருந்தார்கள். கல்லூரி நாட்களில் இருந்தே நான் ஹாஸ்டலில் இருந்து வரும் போதெல்லாம் அவர் அதே நாற்காலியில் தான் வீட்டுக்கு வெளியே உட்கார்ந்திருப்பார்.   ஏதேனும் பேப்பர். அவர் பேப்பரை படித்து முடிக்க மதியம் ஆகும். அதிகம் படித்ததில்லை என்பதால் மெதுவாக தான் படிப்பார். எப்பொழுது படித்தாலும் எம்ஜிஆரை தவிர வேறு எந்த பெயரிலும் அவருக்கு ஜ வராது. ஜெயலலிதா கூட செயலலிதா தான். ராஜீவ் காந்தி ராசீவ் காந்தி. எம்ஜிஆர் மட்டும் என்னவோ ஸ்பெஷல். இறுக்கி கட்டியதும் அவர் முகம் இறுகியது போல தெரிந்தது. “நேத்து நைட் குடிச்சிட்டு வந்தியா” என்று கேட்ட பொழுது அவர் முகம் இப்படி தான் இருந்தது. கோபமா துக்கமா என்று சொல்ல முடியாத முகம். “இல்ல.....அது சுந்தர மூர்த்தி பர்த்டே...அதான்.....” நான் இழுத்ததை கவனிக்காதவர் போல தலையை ஆட்டி விட்டு போய்விட்டார். 
    நாலு பேருக்கு அப்புறம் ஐந்தாவது ஆள் நான் என்பதலோ என்னவோ அப்பா இப்படித் தான். என்னிடம் அதிகம் பேசியதேயில்லை. அண்ணா அக்கா எல்லாரிடமும் ஏதேனும் சொல்லிக் கொண்டே இருப்பவர் என்னிடம் இரண்டு வார்த்தைகள் தான். சாப்பிட்டியா என்பது தான் அதிகமாய் பேசிய வார்த்தை. அதுவும் மருத்துவம் படிக்க நான் சென்னை சென்ற பின் பேசுவதற்கு விஷயங்களே இல்லை என்று ஆகிவிட்டது. 
    சுந்தர மூர்த்தி பின்னால் இருந்து தோளைத் தொட்டான். மெல்லிய குரலில் ”வாடா. பின்னாடி போய் ஒரு தம்மடிச்சிட்டு வரலாம்” என்றவனை தொடர்ந்து வீட்டை சுற்றி பின்னால் இருந்த தோட்டத்திற்கு போனோம். மூர்த்தி சிகரெட்டை பற்ற வைத்து விட்டு “உங்க அப்பாவுக்கு தெரிஞ்சா திட்டுவாருன்னு எத்தனை தடவை [பயந்துக்கிட்டே இங்க நின்னு அடிச்சிருக்கோம்....ஞாபகம் இருக்கா...” என்றான். நான் அவனை வெறுமனே பார்த்துவிட்டு “ம்ம்ம்...ஆமா” என்றேன். அதற்கு மேல் என்ன சொல்வது என்று தெரியவில்லை. அவன் புகையை வெளியே விட்டு விட்டு தோளைத் தட்டினான். “மாப்ள. ரொம்ப அப்செட் ஆகி இருக்க போல. ரொம்ப நாளா ஹார்ட்ல ப்ராப்ளம். எப்ப வேணும்னாலும் இப்படி நடக்கும்னு தெரிஞ்சது தான...நான் காலைல இருந்து பார்த்துக்கிட்டே தான் இருக்கேன். நீ அழவே இல்ல. மனசு விட்டு அழுதுருடா. உள்ள வெச்சிக்காத. அது பின்னாடி ரொம்ப கஷ்டமாயிடும்...”
    நான் சிகரட்டின் நுனியில் இருந்த சாம்பலை தட்டி விட்டு “அப்படி எதும் இல்லடா....எனக்கு எதுக்கு அழறதுன்னு தெரியலை. வேண்டா வெறுப்பா புள்ள பெத்து காண்டாமிருகம்னு பேரு வச்ச மாதிரின்னு சொல்வாங்க. இருந்தப்பவே என்ட்ட அவரு சரியா பேச மாட்டாரு.  ஸ்கூல்லயே ஃபர்ஸ்ட் ராங்க் எடுத்தாலும் ராங்க் கார்ட் கூட என் கிட்ட கேட்டதில்லை. எந்த ஸ்கூல் ஃபங்ஷனுக்கும் வர மாட்டாரு. உனக்கு தான் தெரியுமே. மூணாவது படிக்கும் போது எனக்கு ஹார்ட் ஆப்பரேஷன் பண்ணாங்க. அப்போ கூட இவரு இப்படி தான் இருந்தாரு. ஹாஸ்டல்ல இருந்து வீட்டுக்கு வந்தா கூட எப்ப வந்த, எப்போ போகணும் அவ்ளோ தான். ஒரு மாதிரி டிஸ்டன்ஸ் ஆகிப் போச்சுடா. இப்போ அவரு இல்லை. ஆனா எப்பவுமே அப்படி தான இருந்தது. அதான் எனக்கு தெரியலை. என்ன பண்றதுன்னு. ஆனா ஒரு மாதிரி டல்லா தான் இருக்கு...”
    சிகரெட்டை முடித்து விட்டு நாங்கள் வரவும் அப்பா ரெடியாக இருந்தார். கடைசி பயணம். “கழுத்துல கைல போட்ருக்க தங்கத்தை கழட்டிட்டு அவருக்கு பிடிச்சதை கொண்டு வாங்க” யாரோ சொல்ல அண்ணன் வீட்டிற்குள் போய் அப்பாவின் பெட்டியை எடுத்து வந்தான். கனமாய் பூட்டு போட்ட பழைய தகரப் பெட்டி. திண்டுக்கல் பூட்டு என்று அப்பா சொல்லியிக்கிறார். அதை யாரும் திறக்க விட்டதேயில்லை. ஒவ்வொரு தீபாவளிக்கும் மட்டும் அதை திறந்து அந்த கறுப்பு துண்டை எடுத்து படையல் வைப்பார். எம்ஜியார் அவருக்கு கொடுத்த துண்டு. எம்ஜியார் கட்சி ஆரம்பித்த காலத்தில் அப்பா அவரை ஊருக்கு கூட்டி வந்து கூட்டம் போட்டிருக்கிறார். அதில் யாரோ கல்லடித்து அப்பா முகத்தில் காயமாகி ரத்தம் ஒழுக எம்ஜியார் போட்டிருந்த துண்டால் அதை துடைத்து விட்டு கட்டு போட்டாராம். அப்பா படுத்திருந்த ஆஸ்பத்திரிக்கு வந்து “உனக்கு என்ன வேணும்னு சொல்லு. இப்பவே செய்றேன்” என்றவரிடம் “இந்த துண்டு மட்டும் ஆயுசுக்கும் போதும் தலைவரே” என்று சொல்லி வாங்கிய துண்டு. அப்பா அடிக்கடி சொல்லும் கதை. அவர் வேறு எதுவும் கதை சொல்லி எனக்கு ஞாபகம் இல்லை.
    அண்ணா தகரப்பெட்டியை அப்பாவின் காலடியில் வைத்து திறந்து எம்ஜியாரின் கறுப்பு துண்டை எடுத்து வெளியே வைத்தான். அப்பாவின் ரத்தம் எம்ஜிஆர் துண்டில் ஊடுருவிய இடங்கள் மட்டும் தனியாக தெரிந்தது. எம்ஜியார் போட்டிருந்த துண்டு என்று அப்பா அதை துவைத்ததே இல்லை. பழைய பேப்பர்கள். கிறுக்கலாய் அப்பாவின் எழுத்து. அப்பாவின் தோளில் கை போட்ட எம்ஜியார் ஃபோட்டோ.
    எல்லாவற்றுக்கும் கீழே குட்டியாய் ஒரு சின்ன பையனின் வெள்ளை கலர் சட்டை. அதன் இடது மார்பு பக்கத்தில் ரத்தம் படிந்து கறுப்பாகி இருந்தது. அதன் அடியில் பழுப்பேறி கலர் மாறிப் போன ஒரு ஃபோட்டோ. பிண்ணனியில் ஜெயண்ட் வீலும் கூடாரங்களும் மக்களுமாக ஏதோ பொருட்காட்சி. பஞ்சு மிட்டாயுடன் ஒரு குட்டிப் பையன் நின்றிருக்க மண்டியிட்டு அவன் சட்டை பொத்தானை சரி செய்யும் அப்பா. 
    அந்த பையனை எனக்குத் தெரியும். அது என் படம். அது ஹார்ட் ஆப்பரேஷனுக்கு பின்னால் நான் போட்டிருந்த சட்டை.
    =================================================

15 comments:

கபீஷ் said...

அருமை. இதே மாதிரி ஒரு சம்பவத்தை ஞாபகப்படுத்திடுச்சு :((

அது சரி(18185106603874041862) said...

|| வானம்பாடிகள் said...
Class!||

பாலா, நன்றி.

அது சரி(18185106603874041862) said...

|| கபீஷ் said...
அருமை. இதே மாதிரி ஒரு சம்பவத்தை ஞாபகப்படுத்திடுச்சு :((||

கபீஷ், நன்றி.

அது என்னன்னு நீங்க எழுதலாமே?

கலகலப்ரியா said...

கனம் அதிகம்..

Anonymous said...

கண்ணின் ஓரம் கசிகிறது.

Anonymous said...

கண்ணின் ஓரம் கசிகிறது.

Mahi_Granny said...

எழுதா விரதத்தை முடித்துக் கொண்டதற்கு தேங்க்ஸ் . பிதாவின் நேச குமாரன் புனைவே ஆனாலும் அருமையோ அருமை

Mahesh said...

அருமை.. .அருமை.... அருமை...

நான் வேற மாதிரி ட்விஸ்ட் எதிர்பார்த்தேன்....

அடாடா... கடையை மூடிட்டாரேன்னு வருத்தப்பட்டேன்... இந்த மாதிரி அப்பப்ப எழுதுங்க தல...

Mahi_Granny said...

இந்த பிதாவின் நேச குமாரன் புனைவு அற்புதம் .thanks for coming back soon and " the feel like writing "

அது சரி(18185106603874041862) said...

|| அனாமிகா துவாரகன் said...
கண்ணின் ஓரம் கசிகிறது.||

அனாமிகா, நன்றி....

அது சரி(18185106603874041862) said...

|| Mahesh said...
அருமை.. .அருமை.... அருமை...

நான் வேற மாதிரி ட்விஸ்ட் எதிர்பார்த்தேன்....

அடாடா... கடையை மூடிட்டாரேன்னு வருத்தப்பட்டேன்... இந்த மாதிரி அப்பப்ப எழுதுங்க தல...||

மகேஷ், நன்றி...

வேற மாதிரி ட்விஸ்ட்னா என்னன்னு சொல்லுங்க. :))

கடையை மூடறது....ம்ம்...தோணினா மூடறது தோணினா தொறக்கறது...:)))

அது சரி(18185106603874041862) said...

|| Mahi_Granny said...
எழுதா விரதத்தை முடித்துக் கொண்டதற்கு தேங்க்ஸ் . பிதாவின் நேச குமாரன் புனைவே ஆனாலும் அருமையோ அருமை||

மஹி, உற்சாகம் ஊட்டும் வார்த்தைகளுக்கு நன்றி...

விரதம் இருக்கதே முடிக்கிறதுக்கு தான? :))

அது சரி(18185106603874041862) said...

|| Mahi_Granny said...
இந்த பிதாவின் நேச குமாரன் புனைவு அற்புதம் .thanks for coming back soon and " the feel like writing "||

பாராட்டிற்கு நன்றி மஹி க்ரான்னி...உற்சாகமாக இருக்கிறது....

bandhu said...

superb! excellent!

Santhini said...

I came back too. Expected ending but Nice flow and work.