Monday 18 April 2011

கட்டுவிரியனின் குட்டி


மந்தையிலிருந்து பிரிந்த நொண்டி ஆட்டுக்குட்டி மிரண்டு நிற்பது போல பஸ் நிற்க வள்ளியூரெல்லாம் எறங்கு. கண்டக்டரின் குரலில் முன் சீட்டின் கம்பிகளில் அரைத் தூக்கத்தில் அழுந்தியிருந்த முகத்தை நகர்த்தி மடியிலிருந்த மஞ்சள் பையை எடுத்துக் கொண்டு இறங்கிக் கொண்டேன். மண்ணில் துளை தேடும் பூரான் போல பஸ் நகர்ந்து செல்ல வள்ளியூர் பஸ் ஸ்டாண்ட் இருண்டிருந்தது. பாலு அண்ணாச்சியின் டீக்கடை ஒரு சீனி மிட்டாய்க் கடை தவிர எல்லா கடைகளும் பூட்டி இருந்தன. தங்கசாமி ஓட்டல் சுவரில் சாய்ந்து ஒரு கிழவி தூங்கிக் கொண்டிருந்தாள். மடியில் முகம் வைத்து ஒரு சின்னப் பயல். பேரனாக இருக்கும். திருநெல்வேலிக்கு நேர் பஸ் கிடைக்கவில்லை. மெட்ராசிலிருந்து திருச்சி. அங்கிருந்து மதுரை. மதுரையிலிருந்து திருநெல்வேலி வந்து வள்ளியூருக்கு டவுன் பஸ் பிடித்து இவ்வளவு நேரம் ஆகிவிட்டது. வடலி விளைக்கு அடுத்த பஸ் எப்பொழுது என்று தெரியவில்லை.


பாலு அண்ணாச்சி கடைக்கு எதிர்ப்புறமாக பஸ் நின்றதில் நான் இறங்கியதை பார்க்கவில்லை போலிருக்கிறது. பார்த்தாலும் என்னை தெரியுமா என்று தெரியவில்லை. ஒரு வேளை தெரிந்தும் தெரியாதது போல இருக்கலாம். பாலு அண்ணாச்சி அப்பாவின் நண்பர். அண்ணாச்சி அண்ணாச்சி என்று அழைத்தாலும் பாலு அண்ணாச்சிக்கு கல்யாணம் கட்டி வைத்தது அப்பா தான் என்று அம்மா சொல்வாள். மாடு வாங்க போகணும். பரப்பாடி பக்கம். வெள்ளன வந்துடுன்னு புரோக்கர் சொல்லிருக்கான். அவனுவள நம்ப முடியாதுல்லா. ஏமாத்துறத தொழிலா பண்ணிட்டு இருக்கவனுவ. அதான் துரைய கூட்டி போகலாம்னு வந்தேன். நல்லா பல்லு பாப்பான்லா. அழுக்கு லுங்கியை தொடை வரை ஏற்றிக் கட்டி பாலு அண்ணாச்சி வாசலில் வந்து நின்றது ஞாபகம் இருக்கிறது. அப்பா இருந்த வரை அடிக்கடி வீட்டுக்கு வருவார். அப்போதெல்லாம் அவருக்கு தலையில் நிறைய முடி இருக்கும். இப்பொழுது வழுக்கையாக இருக்கிறது. அப்பா செத்து பத்து வருடமாகி விட்டது. பாலு அண்ணாச்சி இப்பொழுதெல்லாம் வீட்டுக்கு வருவதில்லை. பத்து வருடத்தில் இவ்வளவு வழுக்கையாகுமா என்று யோசித்துக் கொண்டே சீனி மிட்டாய் கடை பக்கத்தில் போய் நின்று கொண்டேன். கடை ஆள் என்னை பார்த்து விட்டு கையில் இருந்த பழைய பேப்பரை படிக்க ஆரம்பித்தான். பொட்டலம் கட்ட வந்த பேப்பராக இருக்கும். என் வயது தான். அனேகமாக கடை முதலாளியின் மச்சான். வடலி விளைக்கு பஸ் எப்பொழுது என்று கேட்கலாம்.

யோசித்துக் கொண்டே மஞ்சளான வெளிச்சத்தில் சீனி மிட்டாய்கள் குவித்து வைத்திருப்பதை பார்த்துக் கொண்டிருந்தேன். அப்பா இருக்கும் வரை எந்த ஊருக்கு போனாலும் ஓலைப் பெட்டியில் மிட்டாய் இல்லாது வர மாட்டார். அக்காக்களும் நானும் எத்தனை கருக்கல் ஆனாலும் இதற்காகவே முழித்துக் கொண்டிருப்போம். பெரிய அக்கா அவள் பங்கையும் எனக்கு தந்து விடுவாள். அவளுக்குத் தேவை டவுன் சோப்பு தான். நல்லா மணக்குது என்பாள். அவள் அப்படி தந்திருக்காவிட்டாலும் அவளை எனக்கு பிடிக்கும். வடலி விளையிலேயே ரொம்ப ஸ்டைல் என் அக்கா தான். அவள் சோட்டு பெண்கள் எல்லாம் நாலு நாளைக்கு ஒரு முறை குளிக்கும் போது அக்கா குளிக்காமல் இருந்து நான் பார்த்ததே இல்லை. அப்பா செத்த மறுவாரம் குளித்து விட்டு அம்மாவுடன் வந்து வள்ளியூரில் தான் பீடி இலை வாங்கி வந்தாள். இன்னமும் சுத்திக் கொண்டிருக்கிறாள். இப்பொழுது அவள் தூரத்தில் வரும் போதே பீடி நாற்றம் அடிக்கிறது. நாலு வருடமாக சின்ன அக்காவும் பீடி சுத்த ஆரம்பித்து விட்டாள். அவள் மீதும் அதே நாற்றம். வீடே பீடி நாற்றம் அடிக்கிறது. போன வாரம் வந்த வாகைக் குளம் மாப்பிள்ளை பீடி சுத்துற பொண்ணுன்னா சேத்து வச்சிருப்பா. நாப்பது பவுன் போட்டு அவள வெளிய திருவ கூட்டி வர வண்டி வாங்கி தர்றதுன்னா கெட்டிக்கிறேன் என்றார். அக்காவிடம் இருவது பவுன் இருக்கிறது. அதையும் அடகு வைத்து தான் அம்மையை டவுன் ஆஸ்பத்திரியில் வைத்து பார்த்தாள். அம்மைக்கு நெஞ்சிழுப்பு. நட்ட நடு ராத்திரியில் மூச்சை இழுத்துக் கொண்டு பேச்சு மூச்சில்லாது பிணம் போல் கிடந்தாள். அக்கா மட்டும் பார்த்திருக்காவிட்டால் அம்மைக்கு இன்னேரம் சோலி முடிந்திருக்கும்.

ஒரு சீனி மிட்டாய் தின்றால் நல்லாருக்கும். நினைத்துக் கொண்டே பாக்கெட்டை தடவி பார்த்தேன். ஒரே ஒரு அஞ்சு ரூபாய் இருக்கிறது. கண்டக்டர் கொடுத்த என்னை மாதிரியே கிழிந்த அழுக்கான அஞ்சு ரூபாய். மெட்ராஸ் மாமா கொடுத்ததில் மிச்சம். பதினாலு வயசாகுது இன்னும் பிராந்தன் மாதிரி உன்  சேலைய புடிச்சிக்கிட்டே திரியறான். என் கிட்ட அனுப்பு நான் வேலை எடுத்து வைக்கேன். ஒங்கம்மல்ல என்ன படிக்க போட்டா. நான் எங்கடமைய செய்யனும் பாத்துக்க. அவர் சொல்லி தான் அக்கா அனுப்பி வைத்தாள். துணிக்கடையில் வேலை. மாசம் தொள்ளாயிரம் சம்பளம்.  டீ நகரில் துணிக்கடை. மாமா வீடு மாம்பலம். மாசா மாசம் முன்னூறு கொடுத்தால் மாமா வீட்டிலயே தங்கிக் கொள்ளலாம். மதிய சாப்பாடு கடையில் கொடுப்பார்கள். அது தான் நல்ல சோறு. காலையில் சாப்பிட நேரம் இருக்காது. கடையை மூடி விட்டு வர கருக்கல் ஒரு மணி ஆகும். வீட்டில் கணியாகுளத்துக்காரி சோற்றில் தண்ணீர் ஊற்றி வைத்திருப்பாள். அத்தையை கணியாகுளத்துக்காரி என்று தான் அக்கா சொல்வாள். கூடவே ஊறுகாய் இல்லாவிட்டால் உப்பும் மிளகாயும். அதை தின்று விட்டு படுத்தால் காலையில் பல்லை விளக்கி விட்டு நடந்தே துணிக்கடை போய் விடலாம்.

பக்கத்து நகைக் கடையில் நகை சீட்டு சேர்ந்திருக்கிறேன். மாசம் இரநூறு கட்டியது போக மூணு மாசத்தில் அக்கா பேருக்கு ஆயிரத்து ஐந்நூறு அனுப்பி இருக்கிறேன். இன்னும் ரெண்டு சீட்டு போட்டால் நாலு வருசத்தில் அஞ்சு பவுன் சேர்க்கலாம். கடன் வாங்கியாவது சின்ன அக்கா கல்யாணம் பேசலாம். கணியாகுளத்துக்காரியின் மவன்காரனுக்கு எட்டாப்பு பரிட்சை வரும் வரை எல்லாம் சரியாகத் தான் போனது.

ரெண்டு வாரத்துக்கு முன்னே அவள் ஆரம்பித்து விட்டாள். படிக்க புள்ளைய இருக்க எடத்துல பிராந்தன கொண்டாந்துல்லா வச்சிருக்கு. நாலெழுத்து படிச்சவனுவன்னா தெரியும். இவன் அம்மைக்கு சீல துணி தொவைச்சி போட்டவன். இவனுக்கு வடிச்சி கொட்டணும்னு என் தலைல எழுதி வச்சிருக்காம்ல. கொற மாசம் பார்ப்பன். இவன் போகாட்டி நான் கெளம்பி போய்டறேன். எம்மொவனை படிக்க வைக்க எனக்கு தெம்பிருக்கில்லா. இப்பம் சொல்லுதன். ஒமக்கு ஒம் மொவன் படிக்கணுமா இல்ல உம்ம அக்கா மொவன் இங்க இருக்கணுமா முடிவு பண்ணிக்கும். நாள பின்ன பல்லுல நாக்க போட்டு ஒரு சொல்லு சொன்னீருன்னா நாக்க அறுத்துப்புடுவன். ஒம்ம மாதிரி வடலிவெளை சீன்ரம் புடிச்ச குடும்பம் இல்ல பாத்துக்கிடும்.

இன்றை காலை எழும்போதே மாமா எழுந்திருந்து என்னை பார்த்து என்னடே கெளம்பிட்டியா என்றார். இந்த மாசம் முடிஞ்சா வேற பெல்ட் வாங்கணும். நான் லூசாகி இருந்த பேண்ட்டை இறுக்கிக் கொண்டே ஆமா மாமா, லேட்டாகிடுச்சில்ல. இருக்கட்டும்டே, நான் உங்க மொதலாளிட்ட பேசிட்டேன். ஒனக்கு இங்க சரிப்படாது பாத்துக்க. நான் பம்பாயில வேல எடுத்து வச்சிட்டு சொல்லுதேன். நீ ஊர்ல போய் இருடே. இன்னா, ஊருக்கு போக காசு. ஒம் பைய எடுத்துக்கிட்டு கடைக்கு போ. அங்க பக்கத்துல தான பஸ் ஸ்டாண்டு. கருக்கல்ல பஸ் பிடிச்சா விடிய விடிய வள்ளியூர் போய்டலாம். அம்மைய கேட்டதா சொல்லு. கருத்தா போவணும் பாத்துக்க. பிராந்தன் மாதிரி நிக்காத.

நின்று கொண்டே இருந்ததில் எனக்கு முழங்கால் வலித்தது. மெட்ராஸிலிருந்து கால் நீட்ட முடியாமல் வந்தததால் இருக்கலாம். தங்கசாமி ஹோட்டல் மூடி இருந்தாலும் பரோட்டா குருமா வாசம் வந்தது. மதியம் சாப்பிட்டது. நான் மெதுவே நடந்து ஹோட்டலின் பக்கம் வந்தேன். கிழவி சுவற்றில் சாய்ந்து வாய் ம் பிளந்து தூங்கிக் கொண்டிருக்க இடுப்பில் சுருக்குப்பை நீட்டிக் கொண்டிருந்தது. நான் அவள் அருகில் உட்கார்ந்து சுருக்குப்பையில் இருந்த காசை எடுத்துக் கொண்டேன். சில நூறு ரூபாய் தாள்கள், சில இருவது ரூவாய், கசக்கி மடித்து கிழிந்து போன ஒரே ஒரு அஞ்சு ரூபாய் தாள். இங்கிருந்து என்னை பாலு அண்ணாச்சி மட்டுமே பார்க்க முடியும்.

மீண்டும் வந்து நின்ற என்னை மிட்டாய் கடை ஆள் ஆர்வமின்றி பார்த்து “என்ன வேணும்வே?”. நான் அவனிடம் இரண்டு அஞ்சு ரூபாய் கொடுத்து “பத்துரூவாக்கு முட்டாய் கட்டு” என்று சொல்லி பழைய பேப்பரில் அவன் பொட்டலம் கட்டி கொடுத்த சீனி மிட்டாய்களை வாங்கிக் கொண்டேன்.

தங்கசாமி ஓட்டலின் பக்கம் போகாது மூத்திர நாத்தம் அடிக்கும் சுவற்றின் பக்கமாக பஸ் ஸ்டாண்டை விட்டு வெளியே வந்து மிட்டாய் பொட்டலத்தை பிரித்து தலையும் வாலுமாக சுருண்டு இருக்கும் கட்டுவிரியன் குட்டிகள் போல இருந்த சீனி மிட்டாயை கடித்துக் கொண்டே நான் இருட்டில் நடக்க ஆரம்பித்தேன்.
======================================

17 comments:

vasu balaji said...

க்ளாஸ்!

bandhu said...

என்னமா எழுதறீங்க! நானே அந்த ராத்திரி நேரத்துல நிக்கற மாதிரி இருந்தது!

Selvaraj said...

வாழ்கையின் யதார்த்தத்தை சொல்லியுள்ளீர்கள். படிக்கும்போது பழைய ஞாபகங்கள் எல்லாம் வருகிறது. இதன் தொடர்ச்சி வருமா என்ன?

Mahi_Granny said...

வள்ளியூர் பஸ் ஸ்டாண்ட் புனைவா .interesting narration

அது சரி(18185106603874041862) said...

|| வானம்பாடிகள் said...
க்ளாஸ்!||

நன்றி பாலா.

அது சரி(18185106603874041862) said...

|| bandhu said...
என்னமா எழுதறீங்க! நானே அந்த ராத்திரி நேரத்துல நிக்கற மாதிரி இருந்தது!||

பந்து வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.

அது சரி(18185106603874041862) said...

|| Selvaraj said...
வாழ்கையின் யதார்த்தத்தை சொல்லியுள்ளீர்கள். படிக்கும்போது பழைய ஞாபகங்கள் எல்லாம் வருகிறது. இதன் தொடர்ச்சி வருமா என்ன?||

நன்றி செல்வராஜ்.

இந்த கதை இன்றும் எங்கோ தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. ஆனால், இப்பொழுது இங்கே முடிவடைந்து விட்டது. பின்னாளில் என்றேனும் தொடரக்கூடும்.

அது சரி(18185106603874041862) said...

|| Mahi_Granny said...
வள்ளியூர் பஸ் ஸ்டாண்ட் புனைவா .interesting narration||

நன்றி மஹி.

(இந்த லேஅவுட் படிக்க ஈஸியா இருக்குங்களா? முந்தைய இடுகையில் சுட்டிக்காட்டியதற்கு நன்றி)

கபீஷ் said...

//ஆனால், இப்பொழுது இங்கே முடிவடைந்து விட்டது. பின்னாளில் என்றேனும் தொடரக்கூடும்.// ஹே ஹே படைப்பு தன்னைத் தானே எழுதிக்கொள்ளும் தேவைப்படும்போதுனு சொல்லணும் அதுசரி

கபீஷ் said...

//ஒரு சீனி மிட்டாய் தின்றால் நல்லாருக்கும். நினைத்துக் கொண்டே பாக்கெட்டை தடவி பார்த்தேன்.//

அதுசரி டச் (இதான் காப்பி செய்ய டக்குனு வந்துச்சு) இனி வர போஸ்ட்ல பன்ச் டயலாக் இருந்தா அதே பேஸ்ட் செஞ்சு அதுசரி டச்னு சொல்ல வசதியா இருக்கும்

Asir said...

Good One Sir..

Mahesh said...

சீனி முட்டாய்ல கசப்பு :( யதார்த்தம்.

ஈரோடு கதிர் said...

அருமை என்ற ஒற்றை வார்த்தையில் அடக்கத் தெரியவில்லை!

எழுத்தை ரொம்பவே ரசித்தேன்

அது சரி(18185106603874041862) said...

|| Palay King said...
Good One Sir..||

நன்றி பாளை கிங்.

(ஆனா, சாரெல்லாம் இல்லை. பேர் சொல்லியே கூப்பிடுங்க..)

அது சரி(18185106603874041862) said...

|| Mahesh said...
சீனி முட்டாய்ல கசப்பு :( யதார்த்தம்.

21 April 2011 15:21||

உண்மை தான் மகேஷ். இனிப்பான நினைவுகள் உடன் இழுத்து வரும் கசப்பு.

அது சரி(18185106603874041862) said...

|| ஈரோடு கதிர் said...
அருமை என்ற ஒற்றை வார்த்தையில் அடக்கத் தெரியவில்லை!

எழுத்தை ரொம்பவே ரசித்தேன்||

ஆஹா.... நன்றி கதிர்....

அது சரி(18185106603874041862) said...

|| கபீஷ் said...
//ஆனால், இப்பொழுது இங்கே முடிவடைந்து விட்டது. பின்னாளில் என்றேனும் தொடரக்கூடும்.// ஹே ஹே படைப்பு தன்னைத் தானே எழுதிக்கொள்ளும் தேவைப்படும்போதுனு சொல்லணும் அதுசரி||

அப்படி தன்னைத் தானே எழுதற படைப்பு ஒன்னை எழுதி உங்களுக்கு மட்டும் அனுப்பறேன்.

(அதுக்கப்புறம் எதுனா படிப்பீங்க?)