Wednesday 2 March 2011

மாதொரு பாகன் - பெருமாள் முருகனின் பேயாட்டம்

குத்தாட்டம் எல்லாருக்கும் தெரியும். எத்தனை பேர் பேயாட்டம் பார்த்திருக்கிறீர்கள்? மோகினி ஆட்டமில்லை பேயாட்டம். ஊர் பக்கம் சில பேருக்கு பேய் பிடித்து ஆடுவார்கள். பேய் இருக்கிறதா தியாகராஜ பாகவதர் காலத்திலிருந்தே தமிழ் சினிமா பேய்கள் எல்லாம் ஏன் வெள்ளை உடையிலேயே திரிகிறது என்றெல்லாம் கேட்டால் பதில் சொல்ல மாட்டேன். ஆ.வி. மதனுக்கு எழுதி அனுப்புங்கள். பத்து ரூபாய் போஸ்டில் அடுத்த வருஷம் வரும்.  பேய் பிடிப்பதில் ஒரு பெரிய ஆச்சரியம் எனக்கு தெரிந்து பேய் பிடித்தவர்கள் எல்லாம் அப்பாவிகள். சத்தமாக பேசினாலே கொலைக்குற்றம் என்பது போல பேசுவார்கள். ஆனால் பேய் பிடித்து ஆட ஆரம்பித்து விட்டால் வண்டை வண்டையாக வரும்.  நான் ரொம்பவும் சின்ன பையன். ரெண்டாம் வகுப்பு என்று ஞாபகம். சாம்பார் சித்திக்கு பேய் பிடித்திருப்பதாக சொன்னார்கள். எப்பொழுது சாப்பிட போனாலும் வெண்டிக்காய் சாம்பார், அவரைக்காய் சாம்பார், வெங்காய சாம்பார் என்றே செய்வதால் நாங்கள் வைத்த ரகசிய பெயர். சாம்பார் சித்தி. இன்னொரு சித்தியும் உண்டு. அவள் பெயர் டப்பா. நாங்கள் வைத்த பெயரில்லை. நான் பிறக்கும் முன்னரே அந்தப் பெயர் தான். சாம்பார் சித்தி ரொம்பவே அப்பாவியாக இருப்பார்.  எதுக்கு அவனை திட்டிக்கிட்டே இருக்க என்று எனக்கு சப்போர்ட் செய்வதால் பிடிக்கும். அவருக்குத் தான் பேய் பிடித்து இருப்பதாகவும், பேயோட்ட பூசாரி வருவார் என்றும் காலையிலேயே சொல்லி விட்டார்கள். காலையில் இருந்தே எனக்கு பயமாகவும் சந்தோஷமாகவும் இருந்தது. பேய் ஓட்ட பூசாரி வந்தால் குட்டிச்சாத்தான் கூட்டி வருவான். நான் அதுவரை குட்டிச் சாத்தான் பார்த்ததே இல்லை. இப்பவும் தான். எட்டிப் பார்த்துக் கொண்டே இருந்து ஒரு வழியாக நன்றாக இருட்டிய பின் தான் வந்து சேர்ந்தார் அந்த ஆள். குட்டிச் சாத்தானை காணோம். கேட்டால் அதான் நீ இருக்கல்ல என்று சொல்லி கடுப்பேத்தியது வேறு கதை. 


குட்டி சாத்தானை நான் எட்டிப் பார்த்தது பற்றி இங்கே பேசப் போவதில்லை. ஆனால் அப்புறம் நடந்தது தான் விஷயம். கிள்ளி விட்டால் கூட பதிலுக்கு திட்டாத சாம்பார் சித்தி ஆடிய ஆட்டம். அவருக்கு அவ்வளவு பெரிய கண்கள் இருப்பதே எனக்கு அன்று தான் தெரிந்தது. என் அப்பாவின் முன் நின்று பேசவே யோசிப்பவர் அன்று அவரை எட்டி உதைத்தது. ஸ்பூனில் எடுத்து குடித்தால் சிந்தி விடுமாம். மோர் குடிப்பதையே டம்ளரில் ஊற்றி குடிப்பவர் கழுத்தில் வழிய வழிய பாட்டிலோடு பீர் குடித்தது. பீர் என்று பேர் பின்னாளில் தான் எனக்குத் தெரியும். சொன்னால் நம்ப வேண்டும். 


கவுண்டர் என்றதும் பின்னால் கம்பி போட்ட மாட்டு வண்டி, கன்கார்ட் விமானம் ஓட்டுவது போல அதுக்கு ஒரு ட்ரைவர், கண்ணு கூசுதுய்ய்யா என்று சொல்ல வைக்கும் வெள்ளைச் சட்டை, அழுக்கு ஜமுக்காளம், ஆலமரம், ஷூட்டிங் ஸ்பாட்டில் புளி போட்டு துலக்கிய சொம்பு, எட்டு பட்டி தீர்ப்பு என்று விஜயகுமாரோ விஜயகாந்தோ உங்கள் நினைவில் வந்து தொலைத்தால் கொஞ்சம் ஆசிட் ஊற்றி கண்ணை கழுவி விட்டு வாருங்கள். பெருமாள் முருகனின் கதை நாயகனும் ஒரு கவுண்டர் தான். காளியப்பன். வெள்ளை சொள்ளையெல்லாம் இல்லை. பெரும்பாலும் கோவணம் கட்டி ஆடு மாடு விவசாயம். மனைவி பொன்னா. ஈரோட்டு பக்கத்தில் இருக்கும் திருச்செங்கோடு என்று கதை களம். கதை நடப்பது ராஜாஜி முதல்வராக இருந்த வெள்ளையர் காலம் என்றாலும் இன்றைக்கும் திருச்செங்கோடு ஈரோடு தமிழ்நாட்டின் இன்னும் பல கிராம பஸ்ஸ்டாண்டுகளில் நீங்கள் பார்க்கும் எளிய மனிதர்கள். இந்த காலக் குறிப்பே கதை முடிய இருக்கும் நேரத்தில் போகிற போக்கில் சொல்லப்படுகிறது. ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எந்த பயனும் இல்லாத அதனாலேயே அது குறித்து எந்த கவலையும் இல்லாத மனிதர்கள். 


பிள்ளை இல்லாத காளிக்கும் பொன்னாவுக்கும் ஏற்படும் அவமானங்கள். வறடன் வறடி என்று பட்டப் பெயர். பக்கத்து வயலுக்கு பருப்பு விதைக்க பொன்னா உதவப் போய் மழையின்றி வெள்ளாமை சரியாக இல்லாது போக ”வயித்துலயே ஒண்ணும் முளைக்காத வறடி தொட்ட பருப்பு மட்டும் முளைச்சுடுமா”. காளி பொட்டன் என்று சொல்லாமல் சொல்லி பொன்னாவுக்கு வலை விரிக்கும் வேலை இல்லாத மைனர்கள். காளியப்பனும் பொன்னாவும் தங்களுக்கு தாங்கள் மட்டுமே என்று தங்கள் தொண்டுப்பட்டியிலும் வீட்டிலும் அடைந்து கிடக்க வேண்டிய நிலைக்கு தள்ளும் சமூகம். டவுன்ல இருக்கவனுங்க தான் சூது வாது புடிச்சவனுக கிராமத்துல மக்க மனுஷங்க எல்லாம் தங்கம் என்ற போலி பிம்பத்தை பெருமாள் முருகன் முதலில் உடைக்கிறார். காளியை இரண்டாம் மணம் செய்ய சொல்லி வற்புறுத்துகிறார்கள். அவனுக்கோ விருப்பமில்லை. அவனுக்கு பொன்னா முக்கியம். இரண்டாம் திருமணம் செய்து குழந்தை பிறந்து விட்டால் பொன்னா வறடி என்பது உறுதியாகி விடும். அதை அவளால் தாங்க முடியாது என்று பயம். அப்படி பிறக்காவிட்டால் அவன் வறடன் என்று நிச்சயமாகி விடும். ஊர் இன்னும் அசிங்கமாக பேசும் என்பது ஒரு புறமிருக்க இன்னொரு பெண்ணின் வாழ்வும் பாழாகி விடும். 


போகாத கோயில் இல்லை, செய்யாத பூஜை , நேர்த்திக் கடன் இல்லை. உயிரை பணயம் வைத்து மலை உச்சியில் ஒற்றையாக இருக்கும் வறடி கல்லையும் பொன்னா சுற்றியாகி விட்டது. ஆனாலும் குழந்தைக்கு வழி இல்லை. இப்படி குழந்தை இல்லாத காளி பொன்னாவின் பிரச்சினை குத்திக் கிழித்து ரத்தம் சுவைக்கும் சமூகம் என்று அமைதியாக போகும் கதை, சாம்பார் சித்தியின் பேயாட்டம் போல திடீரென்று விஸ்வரூபமெடுத்து கல் தோன்றி மண் தோன்றா காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்த குடியின் கலாச்சார கதைகளை கிழித்து முகத்தில் எறிகிறது. 


பொன்னாவின் குழந்தை பிரச்சினைக்கு காளியின் அம்மாவும் பொன்னாவின் அம்மாவும் கூடிப் பேசி ஒரு வழி கண்டு பிடிக்கிறார்கள். ஒட்டு மொத்த கதையே இந்த முடிவு தான். கணவன் மனைவி அவர்கள் குழந்தை என்ற அடிப்படை கருத்தியலை ஆட்டிப் பார்க்கிறது மாதொரு பாகன்.   பெண்ணுக்கு குழந்தை முக்கியமா கணவன் முக்கியமா எந்த எல்லை வரை செல்ல முடியும். தீர்மானிப்பது யார். முடிவு நோக்கி தள்ளும் சமூகத்தின் பொறுப்பு என்ன. 


எல்லாருக்கும் மரண பயம் இருக்கிறது. பயம் மரணமும் அதன் வலியும் அல்ல. உண்டு உடுத்தி சிரித்து இருந்த ஒரு வாழ்க்கை திடீரென்று ஒரு நாள் அறுந்து போகும் என்பது தான் பயமாக இருக்கிறது. நான் போனாலும் உலகம் இருக்கும். மாரில் அடித்து அழுபவர்கள் கூட இரண்டு நாள் இல்லாவிட்டால் இரண்டு மாதம் கழித்து சிரிக்கப் போகிறார்கள். என் இருப்பின் அடையாளங்கள் முற்றிலும் மறக்கப்படும். வெளிப்படையாக சொல்லாவிட்டாலும் என் இருத்தலின் தொடர்ச்சி என் மகன். மகள்.  நான் என்ற ஒருவன் வாழ்ந்ததின் ஒரே சாட்சி.  வாரிசு இல்லாவிட்டால் நிச்சய மரணம். மறுநாளே மறக்கப்படும் இருத்தலியம்.  அடிப்படையான மரண பயம் தான் குழந்தை விருப்பாக வெளிப்படுகிறதோ என்று நினைக்க தோன்றுகிறது.


காளிக்கு பயம் இருந்தாலும் அவனுக்கு பொன்னா முக்கியம்.  அவள் மீது காதலெனில் அவளுக்காக எதையெல்லாம் அவனால் ஒப்புக் கொள்ள முடியும்?  ஆனால் பொன்னாவோ அந்த முடிவுக்கு ஒப்பு கொள்வது மட்டுமல்ல அதை செயல்படுத்தவும் செய்கிறாள். காளி அந்த முடிவுக்கு இசைவாய் இருக்கிறான் என்று தவறாக நினைத்து அவள் அதில் ஈடுபட்டாலும் காளியால் ஒரு போதும் செய்ய முடியாத ஒன்றை அவள் செய்கிறாள். அர்த்த நாரீஸ்வரன் அர்த்தம் இழக்கிறான்.


 ”கொழந்தைய பெத்து எதுக்கு வளக்கறம்? அது நல்லா வளந்து ஆளாவோனும்னா? கொழந்தய கொஞ்சறதும் வளக்கறதும் நம்மளுக்கு தேவையா இருக்கு. அதுக்குதான் பெத்துக்கறதும் வளக்கறதும். அப்புறம் என்ன வயசான காலத்துல பையன் என்னை பார்க்கலை பிள்ள என்னயப் பாக்கலீன்னு பொலம்பறது? அதெல்லாம் புத்தி கெட்ட நாய்ங்க செய்யறது...” எட்டி உதைத்த என் சித்தியை போல பெருமாள் முருகன் போகிற போக்கில் உடைத்து நொறுக்குகிறார். ஒற்றைக் கதையில் இத்தனை பேயாட்டம் வேறு எதிலும் படித்த நினைவில்லை. என்ன வகையான பேயாட்டம் என்று படித்தால் தான் புரியும். இன்றைய எழுத்துக்களில் அழுத்தமாக சுவடு பதிக்கும் இந்த கதையை காலச்சுவடு வெளியிட்டிருப்பது மிகப் பொருத்தமாக இருக்கிறது.


மாதொரு பாகன். யானையின் தடம்.


=====================
பின் குறிப்பு 1: நன்றி சொல்வது அன்னியப்படுத்துவதாக இருந்தாலும் இந்த புத்தகத்தை அனுப்பி வைத்த நட்புக்களுக்கு நன்றி என்று சொல்வதை தவிர வேறு என்ன செய்வது என்று தெரியவில்லை. நீங்கள் அனுப்பியிராவிட்டால் யானையின் தடங்கள் எனக்கு தெரியாதே போய் இருக்கலாம். 


மாதொரு பாகன் குறித்து ஈரோடு கதிரின் விமர்சனத்தை இங்கே படிக்கலாம்.


பின் குறிப்பு 2: தமிழர்கள் இலக்கியத்தை கொண்டாடுவதில்லை என்று தினம் அறிக்கை விடும் பின்நவீனத்துவ பிதாமகரும் அவரது ரசிகர் மன்ற தலைமை நிலைய மூத்த உறுப்பினர்களும் மாதொரு பாகனை எப்படி கொண்டாடுகிறார்கள் என்று தெரிந்து கொள்ள ஆவலாய் இருக்கிறேன்.

26 comments:

கலகலப்ரியா said...

ம்ம்ம்... நல்லாருக்கு...

கலகலப்ரியா said...

||எல்லாருக்கும் மரண பயம் இருக்கிறது. பயம் மரணமும் அதன் வலியும் அல்ல. உண்டு உடுத்தி சிரித்து இருந்த ஒரு வாழ்க்கை திடீரென்று ஒரு நாள் அறுந்து போகும் என்பது தான் பயமாக இருக்கிறது. நான் போனாலும் உலகம் இருக்கும். மாரில் அடித்து அழுபவர்கள் கூட இரண்டு நாள் இல்லாவிட்டால் இரண்டு மாதம் கழித்து சிரிக்கப் போகிறார்கள். என் இருப்பின் அடையாளங்கள் முற்றிலும் மறக்கப்படும். வெளிப்படையாக சொல்லாவிட்டாலும் என் இருத்தலின் தொடர்ச்சி என் மகன். மகள். நான் என்ற ஒருவன் வாழ்ந்ததின் ஒரே சாட்சி. வாரிசு இல்லாவிட்டால் நிச்சய மரணம். மறுநாளே மறக்கப்படும் இருத்தலியம். அடிப்படையான மரண பயம் தான் குழந்தை விருப்பாக வெளிப்படுகிறதோ என்று நினைக்க தோன்றுகிறது.||

கொஞ்சம் தர்க்கம் செய்யலாம்... ஆனாலும்... வித்யாசமான கோணம்... அப்டியும் இருக்கலாம்லன்னு தோணுது..

கலகலப்ரியா said...

|| எட்டி உதைத்த என் சித்தியை போல பெருமாள் முருகன் போகிற போக்கில் உடைத்து நொறுக்குகிறார்.||

ஆமாம்.. :)

vasu balaji said...

என்னமா ஒரு விமரிசனம். ஒரு நல்ல கதைக்கு இதைவிட என்ன வேணும்? கதை படிச்சப்போ எப்படி ஒரு சிலிர்ப்பிரிந்துச்சோ அதே உணர்ந்தேன்.

நசரேயன் said...

//மாதொரு பாகனை எப்படி
கொண்டாடுகிறார்கள்//

Shivs regal with ஊறுகாய் or tequila with lemon

நசரேயன் said...

//நட்புக்களுக்கு நன்றி என்று சொல்வதை தவிர வேறு என்ன செய்வது என்று தெரியவில்லை//

வங்கி கணக்கு எண் கொடுத்தா பணம் அனுப்பி வையுங்க

நசரேயன் said...

//Your comment has been saved and will be visible after blog owner approval.//

இதெல்லாம் எப்ப இருந்து ?

அது சரி(18185106603874041862) said...

|| கலகலப்ரியா said...
||எல்லாருக்கும் மரண பயம் இருக்கிறது. பயம் மரணமும் அதன் வலியும் அல்ல. உண்டு உடுத்தி சிரித்து இருந்த ஒரு வாழ்க்கை திடீரென்று ஒரு நாள் அறுந்து போகும் என்பது தான் பயமாக இருக்கிறது. நான் போனாலும் உலகம் இருக்கும். மாரில் அடித்து அழுபவர்கள் கூட இரண்டு நாள் இல்லாவிட்டால் இரண்டு மாதம் கழித்து சிரிக்கப் போகிறார்கள். என் இருப்பின் அடையாளங்கள் முற்றிலும் மறக்கப்படும். வெளிப்படையாக சொல்லாவிட்டாலும் என் இருத்தலின் தொடர்ச்சி என் மகன். மகள். நான் என்ற ஒருவன் வாழ்ந்ததின் ஒரே சாட்சி. வாரிசு இல்லாவிட்டால் நிச்சய மரணம். மறுநாளே மறக்கப்படும் இருத்தலியம். அடிப்படையான மரண பயம் தான் குழந்தை விருப்பாக வெளிப்படுகிறதோ என்று நினைக்க தோன்றுகிறது.||

கொஞ்சம் தர்க்கம் செய்யலாம்... ஆனாலும்... வித்யாசமான கோணம்... அப்டியும் இருக்கலாம்லன்னு தோணுது..||

கண்டிப்பாக இதில் வேற்று பார்வைகளுக்கு இடம் உண்டு. குழ்ந்தை வேண்டும் என்பதன் அடிப்படை காரணம் உள்ளே மறைந்திருக்கும் மரண பயமோ என்று எனக்கு தோன்றுகிறது. இல்லாதும் இருக்கலாம்.

அது சரி(18185106603874041862) said...

|| கலகலப்ரியா said...
ம்ம்ம்... நல்லாருக்கு...
||

நன்றி.

அது சரி(18185106603874041862) said...

|| வானம்பாடிகள் said...
என்னமா ஒரு விமரிசனம். ஒரு நல்ல கதைக்கு இதைவிட என்ன வேணும்? கதை படிச்சப்போ எப்படி ஒரு சிலிர்ப்பிரிந்துச்சோ அதே உணர்ந்தேன்.

2 March 2011 21:34||

ஆஹா :))

ஆனா, கதை படிச்சப்போ காளிக்கிட்ட அவங்க அம்மா அந்த முடிவை சொன்னப்போ எனக்கு நிஜமாவே சிலிர்த்திருச்சி. அப்படி ஒரு ஆங்கிள் வரும்னு நான் எதிர்பார்க்கவே இல்லை.

அப்புறம் அந்த ஃபீலிங் போக ஒரு அரை மணி நேரம் ஆச்சு.

அது சரி(18185106603874041862) said...

|| நசரேயன் said...
//மாதொரு பாகனை எப்படி
கொண்டாடுகிறார்கள்//

Shivs regal with ஊறுகாய் or tequila with lemon||

நல்ல காம்பினேஷன் தான். :)) எலுமிச்சை ஊறுகா வெச்சிக்கிட்டு டெக்கீலா அடிச்சிருக்கீங்களா?

அது சரி(18185106603874041862) said...

|| நசரேயன் said...
//நட்புக்களுக்கு நன்றி என்று சொல்வதை தவிர வேறு என்ன செய்வது என்று தெரியவில்லை//

வங்கி கணக்கு எண் கொடுத்தா பணம் அனுப்பி வையுங்க||

ம்க்கும்...நான் நம்பர் தரேன். நீங்க எனக்கு அனுப்பி வைங்க. ஏழை தமிழ்ப்பதிவனை கரையேத்தின புண்ணியம் உங்களுக்கு.

அது சரி(18185106603874041862) said...

|| நசரேயன் said...
//Your comment has been saved and will be visible after blog owner approval.//

இதெல்லாம் எப்ப இருந்து ?||

அது ரொம்ப நாளா இருக்குது தளபதி. சில பேரு தொல்லை தாங்க முடியலை:( அதான் இப்படி.

அது சரி(18185106603874041862) said...

பார்ப்போம். தொல்லை குறைஞ்சா கமெண்ட் மாடரேஷன் எடுக்க முடியுதான்னு.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

அது சரி, நான் இதைப் படித்துவிட்டு பஸ்ஸில் சின்னதாக எழுதியிருந்தேன்.

என்னை இந்த நாவல் பெரிதாகக் கவரவில்லை. ஒற்றைச் சம்பவத்தை வைத்து பின்னப்பட்ட நெடுங்கதையாகத்தான் இதைப் பார்க்க முடிந்தது என்னால்.

ஈரோடு கதிர் said...

தேர்ச்சியான பார்வை!


நல்ல படைப்பாளியை அடையாளப்படுத்தியமைக்கு பாராட்டுகள்

---------------
நேற்று பெருமாள் முருகன் உரையாடினார்... மாதொருபாகன் குறித்து வரும் கருத்துகள் குறித்து மகிழ்ச்சியாக இருப்பதாகச் சொன்னார்.

பெருமாள் முருகனுக்கு இதை அனுப்பிவைத்திருக்கிறேன்

-----
//பின் குறிப்பு 2: \\
:))))

க.பாலாசி said...

ரொம்ப நல்ல விமர்சனமுங்க... இன்னும் படிக்க முடியல.. இந்த மாசத்துக்குள்ள கண்டிப்பா படிச்சிடுவேன்..

அது சரி(18185106603874041862) said...

|| ஜ்யோவ்ராம் சுந்தர் said...
அது சரி, நான் இதைப் படித்துவிட்டு பஸ்ஸில் சின்னதாக எழுதியிருந்தேன்.

என்னை இந்த நாவல் பெரிதாகக் கவரவில்லை. ஒற்றைச் சம்பவத்தை வைத்து பின்னப்பட்ட நெடுங்கதையாகத்தான் இதைப் பார்க்க முடிந்தது என்னால்.||

சுந்தர்ஜி,
நன்றி. நான் தான் பஸ்ல கவனிக்கலைன்னு நினைக்கிறேன்.

நீங்கள் சொல்வது உண்மை தான். ஒற்றைச் சம்பவத்தை வைத்து தான் பின்னப்பட்டிருக்கிறது. ஆனால், எனக்கு தெரிந்த அளவில் தமிழ்ச்சூழலுக்கு அதிக பழக்கமில்லாத மிக அடிப்படையான ஒரு விஷயம் குறித்து பெரும் கேள்வி எழுப்புகிறது. அதனாலயே இந்த நாவல் முக்கியமானதாக எனக்குப்பட்டது.

அது சரி(18185106603874041862) said...

|| ஈரோடு கதிர் said...
தேர்ச்சியான பார்வை!


நல்ல படைப்பாளியை அடையாளப்படுத்தியமைக்கு பாராட்டுகள்
||

அது சரி!!

நான் தான் அவருக்கு பாராட்டு சொல்லணும். ஆனா, அப்படி செய்றது அதிகப்பிரசங்கி தனமா இருக்கும்கிறதால நான் சொல்ல முடியலை. அடையாளப்படுத்தறது எல்லாம் இல்லை பாஸ். வலிமையான எழுத்து தன் போக்கில் தானே வெற்றி பெறும். அடையாளப்படுத்த நான் யார்?

||நேற்று பெருமாள் முருகன் உரையாடினார்... மாதொருபாகன் குறித்து வரும் கருத்துகள் குறித்து மகிழ்ச்சியாக இருப்பதாகச் சொன்னார்.||

நிச்சயமாக அவர் சந்தோஷமல்ல, பெருமையே பட்டுக் கொள்ளலாம். சில திறக்க கூடாத கதவுகளை அவர் திறந்திருக்கிறார்.

||
பெருமாள் முருகனுக்கு இதை அனுப்பிவைத்திருக்கிறேன்.
||

நன்றி பாஸ்.

அது சரி(18185106603874041862) said...

|| க.பாலாசி said...
ரொம்ப நல்ல விமர்சனமுங்க... இன்னும் படிக்க முடியல.. இந்த மாசத்துக்குள்ள கண்டிப்பா படிச்சிடுவேன்..||

கண்டிப்பா படிங்க பாலாசி. ரெண்டு மூணு நாள்ல படிச்சிடலாம். என்னவோ நாமளே உக்காந்து காளியப்பன் கிட்ட கதை கேட்கிற மாதிரியான நடை. எடுத்தா கீழ வைக்க முடியாது.

Santhini said...

நூல் அறிமுகத்திற்கு நன்றி . கண்டிப்பாய் படித்து விட வேண்டும் என தோன்ற வைக்கும் விமர்சனம்.

வால்பையன் said...

@ ஜ்யோவ்

//என்னை இந்த நாவல் பெரிதாகக் கவரவில்லை.//

பெருசு பெருசா இருந்தா தான் உங்களை கவரும்னு எல்லாருக்கும் தெரியுமே தல!

அது சரி(18185106603874041862) said...

|| Nanum enn Kadavulum... said...
நூல் அறிமுகத்திற்கு நன்றி . கண்டிப்பாய் படித்து விட வேண்டும் என தோன்ற வைக்கும் விமர்சனம்.||

நன்றி கடவுளே :))

கண்டிப்பா படிங்க. உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும்.

அது சரி(18185106603874041862) said...

|| வால்பையன் said...
@ ஜ்யோவ்

//என்னை இந்த நாவல் பெரிதாகக் கவரவில்லை.//

பெருசு பெருசா இருந்தா தான் உங்களை கவரும்னு எல்லாருக்கும் தெரியுமே தல!
||

ஓஹோ. இது எனக்கு தெரியாதே. சரி, சுந்தர்ஜி, அட்ரஸ் கொடுங்க. விஷ்ணுபுரம், கொற்றவை எல்லாம் அனுப்பி வைக்கிறேன். குறைஞ்சது 800 பக்கம்.

பெருமாள் முருகன் said...

மகிழ்ச்சி. பகிர்வுக்கு நன்றி.

அது சரி(18185106603874041862) said...

|| பெருமாள் முருகன் said...
மகிழ்ச்சி. பகிர்வுக்கு நன்றி.||

உண்மையில் இப்படி ஒரு படைப்பை தந்ததற்கு நான் சொல்ல வேண்டியது. மிக்க நன்றி.
இந்த புத்தகம் தொன்னூறு ரூபாய்க்கு வாங்கிய ஞாபகம். கலைக்கு எத்தனை விலை கொடுத்தாலும் போதாது என்பார்கள்.அது உண்மை தான்.