Monday 6 December 2010

நந்தலாலாவும் தரை டிக்கட்டும்

நான் படம் பார்ப்பதில்லை. பொய் போல தெரிந்தாலும் அது தான் உண்மை. நான் பொழுதுபோக்குகிறேன்.  யோசித்துப் பார்த்தால் இசை மழையில் நனையவோ இயக்கத்தை வியக்கவோ கமல்ஹாசனின் அசைவில் எது மார்லன் ப்ராண்டோ எது அல்பசினோ என்றோ எனக்கு தோணுவதே இல்லை. திருவிழாவில் தொலைந்த குழந்தை கொஞ்ச நேரம் குரங்காட்டம் பார்ப்பது தான் நான் செய்வது. திருப்பி படியுங்கள். திருவிழா போன குழந்தை அல்ல தொலைந்த குழந்தை. இது வரையில் பார்த்த படங்களில் மிகவும் பிடித்தது எங்கள் வீட்டு பிள்ளை. எம்ஜிஆர் நடித்தது தான். ரொம்ப பழசு என்பவர்களுக்கு விக்ரம் நடித்த சாமி. தேவையான துக்கங்கள் என்னிடமே உண்டு. திரையில் மீண்டும் பார்க்கும் மனநிலை இல்லை.ஒற்றை வார்த்தையில் சொன்னால் ஒன்னரை ரூபாய் டிக்கட் எடுத்து மணலை குவித்து உட்காரும் தரை டிக்கட்டு.


ஆனால், உலகத் திரைப்பட நிபுணர்களையும் தரைடிக்கட்டுகளையும் ஒருங்கிணக்கும் ஒற்றை புள்ளி உண்டு. அம்மா என்று சொல்லித் தொலைக்காதீர்கள். தமிழ்படம். அம்மாவே இல்லாதவனுக்கும் இருப்பது நட்பு. அம்மாவையும் அப்பனையும் வெட்டி ஜெயிலுக்கு சென்றவனுக்கு கூட ஏதாவது நட்பு இருந்து தான் தீரும். அவனை எவருமே நட்பாக நினைக்காவிட்டாலும் அவன் யாரையாவது நட்பாக நினைத்துக் கொண்டிருப்பான். 

எப்படி திட்டமிட்டு யாரையும் காதலிக்க முடியாதோ அப்படியே திட்டமிட்டு நட்பும் ஏற்படுத்த முடியாது. ஏதோ ஒரு கணத்தில் எதிர்பாராத நேரத்தில் தான் உண்மையான நட்புகள் ஏற்படுகின்றன. சிறிய ஓடையாக ஆரம்பித்து பெருநதியாக பிரவாகமெடுக்கும் நதியைப் போல. நந்தலாலா நட்பெனும் நதியின் ஓட்டம். நதிக்கே உரிய சுழிவுகள், தடைகள், பெருக்கெடுப்பு. 


அம்மாவை பார்ப்பதற்காக பள்ளியிலிருந்து ஓடி வரும் ஒரு சிறுவனுக்கும் அதே நோக்கத்துடன் மனநிலை தவறியவர்களுக்கான இடத்திலிருந்து தப்பி வரும் நடுத்தர வயது ஆளுக்கும் நட்பு. எங்கே என்றால் இருவரும் மூத்திரம் அடிக்க போகும் இடத்தில். யோசித்து பார்த்தால் என்னுடைய எல்லா நட்புகளும் இப்படி தற்செயலாக நிகழ்ந்தவை தான். உண்மையில் அப்பொழுது ஏற்படுவது நட்பு கூட அல்ல. ஒரு தற்செயலான நிகழ்வு. எந்த நதியும் பெருநதியாக பிறப்பதில்லை. 


சந்தேகத்துடனும் ஒருவரை விட்டு ஒருவர் பிரிந்து செல்லும் முயற்சியுடனும் தொடரும் நட்பு போக போக பலமாகிக் கொண்டே போகிறது. கிளைநதிகள் போல இடையில் வந்து சேரும் மேலும் சில நட்புகள். 


ஒரு காட்சியில் மனநிலை தவறியவர் போல வரும் மிஸ்கினை பலர் சேர்ந்து அடிக்கிறார்கள். அப்பொழுது அந்த வழியாக வரும் பழைய நண்பர்களை கண்டவுடன் மிஸ்கினுக்கு வரும் பலம். நண்பனின் தோளைப் பிடித்துக் கொண்டு அவர் ஆடும் கொண்டாட்டம். அழகிய குறுங்கவிதை. அனுபவித்தவர்கள் பாக்கியவான்கள்.


மிஸ்கின், விபச்சாரி பாத்திரத்தில் வரும் ஸ்னிக்தா(?), சிறுவன் அகி ஒரு ட்ரக்கின் பின்னால் உட்கார்ந்து போய் கொண்டிருக்கிறார்கள். அகி உயிரைப் போல பாதுகாத்து வரும் அவன் அம்மாவின் படம் காற்றில் பறந்து போகிறது.மிஸ்கினை உலுக்க அந்த பாத்திரம் நல்ல உறக்கத்தில். ஸ்னிக்தா சத்தம் போட்டு ட்ரக்கை நிறுத்தி ஓடோடிப் போய் அந்த படத்தை எடுக்கிறார். அகி அதைப் பிடிங்கிக் கொண்டு ஓடுகிறான். அப்பொழுது ஸ்னிக்தாவின் முகம் காட்டும் உணர்ச்சிகள். In the end we remember not the words of our enemies but the silence of our friends. Martin Luther King.


லாரியின் ஹார்னை திருடி விட்டதாக மிஸ்கினை அடித்து நொறுக்கும் டிரைவர். மிஸ்கின் சொல்லும் ஒரே வரியில் அதிர்ந்து போய் அப்படியே உறையும் இடம். ஒரே ஒரு வசனம் கூட இல்லை. கடைசி வரை அந்த பாத்திரத்துக்கு வசனமே இல்லை. ஆனால் அந்த முகபாவங்கள். அந்த பாத்திரம் வரும் அத்தனை காட்சிகளும் உறைந்து போன இசை போல. 


சில நேரங்களில் நட்பின் வார்த்தைகள் வாள் போல. ஒற்றை அல்ல. பல வாட்கள் ஒரே நேரத்தில். மென்டல் என்று சொன்னதற்காக ஆட்டோ ட்ரைவரை அடித்து நொறுக்கும் மிஸ்கின், அதே வார்த்தையை சொல்லும் ஒரு ஆறு வயது பையனிடம் எதுவும் செய்ய முடியாமல் கதறும் இடம். நட்பு சுகம் மட்டுமல்ல, அது உயிர் வாதையும் கூட. உயிருடன் தோலை உரிக்கும் வாதை.


இந்த படத்தில் பல குறியீடுகள் இருப்பதாக சொல்கிறார்கள். எனக்கு தெரிந்த முக்கியமான குறியீடு கடைசி காட்சியில் அம்மாவை மனநல விடுதியில் சேர்த்து விட்டு மிஸ்கின் வெளியே வருகிறார். அவர் உள்ளிருந்த இடம் இருட்டாகவும் வெளியே வருமிடம் வெளிச்சமாகவும் இருக்கிறது. சில நேரங்களில் இருளும் ஒளியுமே மிகப் பெரிய குறியீடு.நட்பெனும் பிரமாண்ட வெளிச்சம்.


சொல்லிக் கொண்டே போகலாம் என்றாலும் கவிதையின் சுகம் அதன் அனுபவமே.விளக்கம் அல்ல.பனிக் கொட்டும் நள்ளிரவில் கொஞ்சமான போதையுடன் விஸ்கியும் சிகரெட்டுமாக இப்படி ஒரு படம் பார்ப்பதும் கூட கவிதையின் கொண்டாட்டமே.கவிதை கலைமகள் என்று எவன் சொன்னான்?


நதி போல நகரும் படத்தில் பிரச்சினை என்றால் ஸ்னிக்தாவின் பாத்திரம் துருத்திக் கொண்டு தெரிகிறது. சிறுவன் அகி கடைசியில் ஸ்னிக்தாவை அம்மாவாக ஏற்க எந்த காரணமும் இல்லை. சில இடங்களில் இல்லை பல இடங்களில் இளையராஜா படுத்துகிறார். மெளனம் மிகப் பெரிய இசை. தமிழ்ப்பட சாபம் போல கடைசியில் வரும் காட்சிகள்.


இந்த படம் கிகுஜிரோவின் காப்பியா இல்லை இன்ஸ்பைரேஷனா என்று எனக்கு தெரியவில்லை. ஆனால், எப்படி பார்த்தாலும் இது நிச்சயம் பார்க்க வேண்டிய படமே. இயக்குனர் மிஸ்கினை விட நடிகர் மிஸ்கின் வாழ்ந்து காட்டியிருக்கிறார். இயக்குனர் மிஸ்கினை பிடிக்காவிட்டாலும் நடிகர் மிஸ்கினுக்காக. 

இது காப்பியா ஒரிஜினலா என்ற விவாதத்தை நான் வேண்டுமென்றே விலக்குகிறேன். நான் இன்னும் கிகுஜிரோ பார்க்கவில்லை என்பதும் ஒரு காரணம். ஆனால், இந்த படம் காப்பியாக இருக்கும் பட்சத்தில் இயக்குனர் மிஸ்கினுக்கு என் வருத்தங்க‌ளையும் கண்டனங்களையும் பதிவு செய்கிறேன். எப்படி இருந்தாலும் நடிகர் மிஸ்கின் இயக்குனரை தாண்டிப் போய்விட்டார். அதற்காக, மிஸ்கின் ஐ லவ் யூ என்று சொல்லத் தோன்றுகிறது.

10 comments:

கலகலப்ரியா said...

ம்ம்... தொண்டைக்குள் ஏதோ அடைச்சுக்கறது..

பிரபாகர் said...

அற்புதமான, அழகான விமர்சனம்... ரொம்பவும் ரசித்து படித்தேன்.

பிரபாகர்...

vasu balaji said...

இசை மட்டுமல்ல. வாழ்க்கையின் மிக நெகிழ்வான தருணங்களில் ஒரு மௌனமாக, கலங்கிய கண்களுடன் ஒரு பார்வை, ஒரு ஹக், வாஞ்சையான தலை கோதல், நெற்றியில் சிறுமுத்தம் இவை புலப்படுத்தும் உணர்வுகள் வார்த்தைக்கு அடங்கா. இந்த விமரிசனம் படித்ததும் அந்த உணர்வின் பகிர்வை உணரமுடிந்தது. நன்றி..

எம்.எம்.அப்துல்லா said...

// ரொம்ப பழசு என்பவர்களுக்கு விக்ரம் நடித்த சாமி.

//

யோவ் பெருசு, சாமியும் எங்களுக்குப் பழைய படம்தான் :))

அது சரி(18185106603874041862) said...

//
கலகலப்ரியா said...
ம்ம்... தொண்டைக்குள் ஏதோ அடைச்சுக்கறது..

6 December 2010 22:09
//

ஆமா. எனக்கும் படம் சில டைம் அப்படித் தான் இருந்தது.

அது சரி(18185106603874041862) said...

//
பிரபாகர் said...
அற்புதமான, அழகான விமர்சனம்... ரொம்பவும் ரசித்து படித்தேன்.

பிரபாகர்...

6 December 2010 23:10
//

நன்றி பிரபாண்ணா.

அது சரி(18185106603874041862) said...

//

வானம்பாடிகள் said...
இசை மட்டுமல்ல. வாழ்க்கையின் மிக நெகிழ்வான தருணங்களில் ஒரு மௌனமாக, கலங்கிய கண்களுடன் ஒரு பார்வை, ஒரு ஹக், வாஞ்சையான தலை கோதல், நெற்றியில் சிறுமுத்தம் இவை புலப்படுத்தும் உணர்வுகள் வார்த்தைக்கு அடங்கா. இந்த விமரிசனம் படித்ததும் அந்த உணர்வின் பகிர்வை உணரமுடிந்தது. நன்றி..

7 December 2010 04:09
//

நன்றி பாலா சார். படம் இன்னும் பார்க்காட்டி கண்டிப்பா பார்த்திருங்க. உங்க கேரக்டர் சீரிஸ் எல்லாம் சேர்த்து எடுத்த படம் மாதிரி இருக்கு.(நீங்க எழுதறதை கூட எடுக்கலாம்!)

அது சரி(18185106603874041862) said...

//

எம்.எம்.அப்துல்லா said...
// ரொம்ப பழசு என்பவர்களுக்கு விக்ரம் நடித்த சாமி.

//

யோவ் பெருசு, சாமியும் எங்களுக்குப் பழைய படம்தான் :))

7 December 2010 11:59
//

:)))))

அண்ணே...மந்திரி குமாரியை ரிலீஸ் அன்னைக்கே பார்த்திட்டேன்னு சொல்றவங்க பெருசா இல்ல இன்னைக்கு தான் பார்த்தேன்னு சொல்றவங்க பெருசா? :)))

தல தளபதி said...

நான் வலைப்பூவில் புதிது. உங்கள் ஆதரவு தேவை.

Santhini said...

I am glad you enjoyed this movie.