நான் ஏன் இருட்டு சந்துக்குள்....அதுவும் அந்த சந்துக்குள் போக வேண்டும்...வேறு வழியாக போயிருக்கலாம்....அது வழக்கமாக போகும் பாதை கூட அல்ல...சிட்டி சென்டரிலிருந்து கொஞ்சம் ஒதுங்கி பகல் நேரத்திலேயே அந்த சந்து இருட்டாகத் தான் இருக்கும்....ஒரு பழைய சர்ச்...விக்டோரியா மஹாராணி காலமோ இல்லை செயின்ட் பால் அவர் கையாலேயே கரசேவை செய்தாரோ என்று யோசிக்கும் வகையில் அங்காங்கே இடிந்து...ஜன்னல்கள் நொறுங்கி.......Danny loves sTACY...Cat is a SLAG...Blair is a fucker...Man U sucks....Emily fucked everyone in Manchester....கோணல்மானலாய் கறுப்பு, நீலம், சிவப்பு என்று கிடைத்த் நிறத்தில் சுவரில் தெறிக்கும் காதல்...கருத்து சுதந்திரம்...கடுப்பு....உச்சியில் இருக்கும் சிலுவை மட்டும் இல்லாவிட்டால் அது சந்திரமுகி பங்களா...அருந்ததீ அரண்மனை என்று சொல்லிவிடலாம்...அதற்கு பக்கத்தில் எப்பொழுதும் சில பிச்சைக்காரர்கள்...உடைந்த கிடார்கள்....கிழிந்த ட்ரம்ஸ்கள்....நசுங்கிய பியர் கேன்கள்...சில காலி பாட்டில்கள்...பழைய புத்தகங்கள்...விரிக்கப்பட்ட துண்டில் சில காசுகள்...அழுத்தமாய் வீசும் கஞ்சா வாசனை...அழுக்காய் கிழிந்த உடையில் சில மனிதர்கள்....அவர்கள் மீது பயம் இல்லாவிட்டாலும்....என் வீட்டுக்கு குறுக்கு பாதையாய் இருந்தாலும்... அந்த சந்தை ஏனோ நான் தவிர்த்து விடுவதே வழக்கம்...
கொழுப்பு...குடி போதை என்றும் சொல்லலாம்...இரவு ஒரு மணி ஆகிவிட்டது...ஸம்மர் டைம் முடிந்து விண்டர் ஆரம்பித்ததில் ஒரு வேளை சன் ரைஸ் ஆகியிருந்தால் மதியம் மூன்று மணிக்கே சன் செட்....என் கை எனக்கே தெரியாத இருட்டு....காது ஓட்டையில் ஊடுருவி கிட்னியை ஃப்ரீஸ் ஆக்கும் குளிர்...இந்த கருமம் போதாது என்று விட்டு விட்டு பெருந்தூறலாய் மழை வேறு....ரேச்சலின் பர்த்டே பார்ட்டி...வழக்கத்தை விட அதிகமாய் போதை....குறுக்கு சந்தில் போனால் சீக்கிரம் வீடு போகலாம்...புத்திசாலித் தனம் என்று கூட சொல்லலாம்....
சந்தில் நுழைந்து....அதான்டா இதான்டா அருணாச்சலம் நாந்தான்டா...அன்னைத் தமிழ் நாட்டினிலே அனைவருக்கும் சொந்தம்டா...தலைவர் பாட்டை கொஞ்சம் சத்தமாக பாடிக் கொண்டு....இங்கிலாந்துல இருந்துக்கிட்டு என்ன அன்னைத் தமிழ்நாடு...அப்பத்தா தமிழ்நாடு....ஒக்காளி இன்னிக்கி செத்தா நாளைக்கு பால் கூட இல்ல....
பாதி தூரம் நடந்திருப்பேன்...ம்ம்ம்....என்ன கருமம் பிடிச்சே ஊரோ...ஒருத்தனையும் காணோமே.....
அது ஒரு முட்டாள் சந்து....நேராய் போனால் சர்ச்...ஆனால் சர்ச்சை ஒட்டி சந்து ஒரு எழுபது எண்பது டிகிரியில் திடீரென்று திரும்பும்...சந்தை வெட்டி இன்னொரு சந்து...முட்டு சந்து...சந்தின் முடிவில் ஒரு பெரிய சுவர் இருந்தால் அது முட்டு சந்து தானே....கொஞ்சம் கவனிக்காவிட்டால் அப்படி ஒரு சந்து இருப்பதே தெரியாது....அதற்குள்ளிருந்து எவனாவது/எவளாவாது உங்கள் மீது பாய்ந்த பின்னரே கவனிப்பீர்கள்......Fucking stupid turn.....என்பது போல...
நான் அந்த சந்தை கவனிக்காது கடந்து போயிருக்கலாம்...அதான் முன்னாடியே சொன்னேனே...கொழுப்பு...போதை...எவனாவது/எவளாவது திடீரென்று பாய்ந்து விட்டால்....எப்பொழுதும் எனக்கிருக்கும் ஜாக்கிரதை...அல்லது விதி யாரை விட்டது....
முட்டு சந்தை கடக்கும் முன் அனிச்சையாய் தலையை வலப்பக்கம் திருப்பி....நல்லவேளை....அப்படி யாரும் என் மீது பாயவில்லை....ஆனால்.....
சர்ச்சின் சுவர் மீது சாய்ந்து ஒருவன் தரையில் உட்கார்ந்திருந்தான்...இல்லை...சுவரை முதுகுக்கு கொடுத்து அரைகுறையாக படுத்திருந்தான்....கால்கள் இரண்டும் நீட்டி...வழக்கமான பிச்சைக்காரர்களின் தூங்குநிலை தான்...பெரிதாய் சொல்வதற்கில்லை....ஆனால்....அவனுக்கு முழுதாய் முகம் காட்டி....எனக்கு பக்கவாட்டில் முகம் காட்டி....யாரவன்...பிச்சைக்காரனை மிரட்டிக் கொண்டிருக்கிறான் போல...
தூரத்தில் இருக்கும் ஏதோ லைட்டில் இருந்து வெளிச்சம் படுவதால் பிச்சைக்காரனின் முகம் மட்டுமே தெரிகிறது....நின்று கொண்டிருப்பவன் முகம் பக்கவாட்டில் லேசாக....கறுப்பு நிற ஜீன்ஸ் பேண்ட்....வெள்ளை நிற முழுக்கை சட்டை....இளைஞன்...வயது...உடலைப்பின் படி...இருபத்தெட்டு இருக்கலாம்...ஆறடிக்கு பக்கமாய் நல்ல உயரம்...நீள நீளமாய் கைகள்....குண்டாகவும் இல்லாமல் ஒல்லியாகவும் இல்லாமல்....சரியான உடல்வாகு...டென்னிஸ் விளையாடுவான் போல...சீராக வெட்டப்பட்ட கறுப்பான தலைமுடி....உருவ அமைப்பை பார்த்தால் கண்டிப்பாக வெள்ளைக்காரன் இல்லை....பாகிஸ்தானியாகவே பங்களாதேஷியாகவோ இல்லை இந்தியனாகவோ இருக்கலாம்....இவன் ஏன் பிச்சைக்காரனை மிரட்டிக் கொண்டிருக்கிறான்....
இருங்கள்...பிச்சைக்காரன் என்றா சொன்னேன்...இல்லை...வெளிச்சத்தில் பார்த்தால் படுத்திருப்பவன் பிச்சைக்காரன் மாதிரி இல்லை...தலை கலைந்திருக்கிறது...முகத்தில் ஒரு வார தாடி....ஒரு வேளை அது அவன் ஸ்டைலாக கூட இருக்கலாம்....அவன் உடைகளும் கூட அழுக்காக இல்லை...நல்ல உடைகள்...இள நீல நிறத்தில் முழுக்கை சட்டை...அடர் கருப்பில் ஜீன்ஸ்...இல்லை...பேன்ட்....கழுத்தில் ஒழுங்காக முடிச்சிடாத டை....ஆனால் கசங்கி இருக்கிறது....குடி போதையில் விழுந்து விட்டானோ....வயது....முகத்தின் தசைகள் இறுகி இருக்கிறது....நீட்டிய கால்களும் தளர்ந்து தரையில் ஊன்றிய கைகளும் உறுதியாக இருப்பது போலத் தான் தெரிகிறது...வயது சொல்வது கஷ்டம்....நாற்பதுக்கும் அறுபதுக்கும் இடையில்...இவனை கிழவன் என்று சொல்வதா இல்லை நடுவயசா....சரி...என்னை விட வயதானவன்...அதனால் கிழவன் என்று வைத்துக் கொள்வோம்....அவனைப் பார்த்தால் வெள்ளைக்காரன் போலவும் இல்லை....சைனாக் காரன் போலவோ இந்திய துணைக்கண்டன் போலவோ இல்லை...ஒரு மாதிரி வெளுப்பான நிறம்....இந்த மங்கலான வெளிச்சத்தில் சரியாக தெரியவில்லை....ஆனால் அவன் லேசாக சிரிப்பது மட்டும் தெரிகிறது....
எவன் எப்படி போனால் என்ன....என்ன பிரச்சினையோ...ஏதேனும் கஞ்சாவாக இருக்கலாம்....நான் தாண்டிப் போயிருக்கலாம்...ஆனால்...அவனவன் விதி அவனை தேடி வருமாமே....இப்பொழுது உட்கார்ந்திருந்த வயது தெரியாத கிழவன் நின்று கொண்டிருப்பவனிடன் ஏதோ சொல்கிறான்....வாக்குவாதம் போலிருக்கிறது....
"நீ ஒரு முட்டாள்....வடிகட்டிய முட்டாள்....நான் யார் என்று தெரியாமல் பேசிக் கொண்டிருக்கிறாய்...."
அட...தமிழ்...நம்ம ஊர்க்காரங்க போலருக்கே... நினைத்துக் கொண்டிருக்கும் போதே நின்று கொண்டிருந்தவனும் ஏதோ சொல்கிறான்....
"கிழிஞ்சது போ....அந்த மயிரத் தான் அரை மணி நேரமா கேட்டுக்கிட்டு இருக்கேன்....யார் நீ...ஏன் இங்க விழுந்து கெடக்க....வீடு எங்கன்னு சொல்லு...ஒரு டாக்ஸி பிடிச்சி அனுப்பி வைக்கிறேன்...."
ஓ....இவனும் நம்ம ஊர்தான் போலருக்கே...பாவம்....எதுனா ஹெல்ப் பண்ணலாம்....என்னை மறைத்த திருப்பத்திலிருந்து ஒரு அடி எடுத்து வைக்கையில்...
கிழவனின் பதில் ஊசியாய் காதில் இறங்கியது....
"நாக்கை அடக்கி பேசு....என்னைத் தெரியவில்லை....முட்டாள்....நான் தான்....கடவுள்...."
========================
இரண்டு
சரி தான்....தனித் தமிழன் மட்டுமல்ல...தண்ணித் தமிழன் போல...எத்தனை ரவுண்ட் அடித்தானோ...எனக்கு லேசாக சிரிப்பு வந்தது...நின்று கொண்டிருந்தவனும் இதையே நினைத்திருக்கலாம்...
"அடடா....கடவுள் இப்படி நடுத்தெருவுல க்வாட்ட்ர் அடிச்சிட்டு குப்புற கெடப்பான்னு எங்கம்மா சொல்லலியே....சரி...விடு...உன் வீடு எங்கருக்குன்னு சொல்லு...இல்லாட்டி உன் பசங்க ஃபோன் நம்பர் குடு...பேசி வரச் சொல்றேன்...."
கிழவன் முறைப்பது தெரிந்தது...
"கடவுளுக்கு ஏதடா வீடு....எல்லாம் என் வீடு....எல்லாம் என் மக்கள்...உனக்கு வேண்டுமானால் ஏதேனும் வரம் வாங்கிக் கொண்டு வீடு போய் சேர்....செயின்ட் ஜெம்மா பள்ளியில் மூன்றாவது படிக்கும் உன் மகள் ஆர்த்திக்கு இன்னும் சிறிது நேரத்தில் காய்ச்சல் வரப் போகிறது....உன் டாக்டர் மிஸஸ் கிப்சனுக்கு ஃபோன் செய்து அவளைக் காப்பாற்று...இன்னும் சிறிது நேரத்தில் பெரிய மழை வரும்....அதற்கு முன் இங்கிருந்து கிளம்பு...."
கேட்டுக் கொண்டிருந்த எனக்கு ஆச்சரியாக இருந்தது....என்ன இது...கிழவன் அள்ளி விடுகிறான்....ஒரு வேளை இது உண்மையாக இருக்குமோ....
தூரத்தில் நின்று கொண்டிருந்தவன் பின் வாங்குவது தெரிந்தது...லேசாய் பின் நகர்ந்து...அவன் குரல்...பேயடித்தவன் போல....குழறலாய்...
"யேய்....நீ..நீ..ஒனக்கு எப்பிடி என் பொண்ணு பேரு தெரியும்....நீ...நீ...சாமியாரா...."
கிழவன்....வேண்டாம்....எனக்கு பயமாக இருக்கிறது....கடவுள்....கடவுள் வெற்றி பெற்றவன் போல மெதுவாக சிரித்தார்....மங்கலான இருட்டிலும் சிரிப்பில் ஒரு களை தெரிந்தது....
"இல்லை மகனே....சாமியார் அல்ல...நான் தான் சாமி....நான் தான் கடவுள்...உனக்கு சந்தேகமிருந்தால் என்ன வேண்டும் சொல்...இப்பொழுதே தருகிறேன்...."
நின்று கொண்டிருந்தவன் என்ன நினைத்தானோ....
"எனக்கு....எனக்கு....ரொம்ப குளிருது....ஒரு பாக்கெட் டன்ஹில் சிகரெட்டும் ஒரு ஸிப்போ லைட்டரும் வேணும்...."
கடவுள் மந்தகாசமாய் சிரித்தார்...கீழே ஊன்றியிருந்த வலது கை உயர்த்தி...சாய்பாபா சாமியார் போல....வெறுங்கை விரித்து..மூடித் திறக்க....
ஒரு புத்தம் புதிய டன்ஹில் சிகரெட் பாக்கெட்டும்...ஒரு ஸிப்போ லைட்டரும்....
தூரத்தில் நின்று கொண்டிருந்த எனக்கு நாக்கு தொண்டையில் சிக்கிக் கொண்டது....
நின்று கொண்டிருந்தவன் முழங்காலிட்டு சிகரெட்டை பவ்யமாய் வாங்கிக் கொண்டான்..
"மை காட்...மை காட்...சாமி...எனக்கு இன்னொரு பெரிய ஆசை...கேட்டா கோவிச்சிக்க மாட்டீங்களே..."
"நீ என் குழந்தை...என் பிம்பம்...கேள் மகனே...கேள்...."
"அது வந்து சாமி....வந்து...எனக்கு...எனக்கு ப்ரிட்னி ஸ்பியர்ஸை கிஸ் பண்ணனும்னு ரொம்ப நாளா ஆசை...."
கடவுள் திருவிளையாடல் சிவாஜி போல பெரிதாக சிரித்தார்....
"ப்ரிட்னி இப்பொழுது லாஸ்வேகஸில் குடித்துக் கொண்டிருக்கிறாள்...அவளது விதிப்படி இன்றைக்கு மூன்று விநாடிகள் முகம் தெரியாத ஒருவன் அவளை முத்தமிட வேண்டும்....எல்லாம் விதிப்படி நடக்கும்....இதோ....நீ கேட்ட ப்ரிட்னி ஸ்பியர்ஸ்...."
அந்த கும்மிருட்டில்....பளிச்சென்று சிறிய ஒளியுடன்....மறைப்பதை விட காட்டுவதே முக்கியம் எனும் பார்ட்டி ட்ரஸ்ஸில்...ஓ மை காட்....ப்ரிட்னி...நிஜமாகவே ப்ரிட்னி ஸ்பியர்ஸ்....கையில்...அது என்ன...ஐஸ் வோட்காவா...இல்லை மார்ட்டினியா....
இது கனவா...இல்லை நிறைய குடித்து ஹலுசினேஷனா....நம்ப முடியாத திகைப்புடன் நான் யோசித்துத் கொண்டிருக்கும் போதே அவன் ப்ரிட்னியை இறுக முத்தமிட்டு முடித்து....ப்ரிட்னி மறைந்து....மீண்டும் மங்கலான இருட்டு....
கடவுள் மீண்டும் பேச ஆரம்பித்தார்...
"இப்பொழுது நம்புகிறாயா....நான் கடவுள்....ஆனால் நீ...மகனே நீ ஒரு முட்டாள்....கடவுளே வந்தாலும் உனக்கு என்ன கேட்க வேண்டும் என்று தெரியவில்லை...சரி சரி கிளம்பு...உனக்கு நேரமாயிற்று....உன் மகள் ஆர்த்தியை போய்ப் பார்...."
"நம்புகிறேன்....கடவுளே....நீர் கடவுள்....நீர் தான் கடவுள்...."
குனிந்து வணங்கியவனின் கைகள் அவனது முழங்காலின் கீழே பின்பக்கமாக இருந்த பாக்கெட்டில் எதையே துழாவுவது தூரத்தில் இருந்து எனக்கு தெரிந்தது....என்ன தேடுகிறான்....ஒரு வேளை சூடம் கொளுத்த போகிறானா....
நிமிர்ந்தவனின் கையில்....அந்த மங்கலான இருட்டை கிழித்துக் கொண்டு...இரு புறமும் கூராக..... ....
ஒரு கத்தி பளபளத்தது.....
============== ==============
மூன்று
இது நான் வழக்கமாக வெண்டைக்காய் வெட்டும் கத்தியல்ல...அது ஒரு புறம் மட்டும் தான் கூர்மையாக இருக்கும்....அதுவும் கூர்மை என்று சொல்ல முடியாது....குறைவாக மொன்னை....ஆனால் இது....தூரத்தில் இருந்து பார்க்கும் போதே தெரிகிறது...ராயல் நேவியில் இருந்து லீவில் வந்த மார்க்கோ காட்டிய கத்தி போல...குத்துவதற்கே செய்த கத்தி....இருபுறமும் கூர்மையாக...
என்ன செய்கிறான் இவன்....கடவுளிடமே வழிப்பறி செய்கிறானா...
என்னைப் போலவே கடவுளும் குழம்பி இருக்க வேண்டும்....அவர் முகத்தில் சிரிப்பும் மந்தகாசமும் மறைந்து....போலி சர்டிஃபிகேட் கொடுத்து இன்டர்வியூவில் மாட்டிய தெலுங்குகாரன் போல...விழித்தார்...
"என்ன செய்கிறாய் நீ...."
"ஒன்றுமில்லை...நீ யாரென்று தெரியாமல் முட்டாள்தனமாக வரம் கேட்டுவிட்டேன்...இப்பொழுது புரிந்து விட்டது...நீ தான் கடவுள்...."
கடவுளின் குரல் கோபமாக ஒலித்தது....
"உன்னை படைத்தவனுக்கு மரியாதை கொடு...."
"மரியாதை...என்ன மயிருக்கு உனக்கு மரியாதை....எதுவும் செய்ய முடியாததால் எதுவும் செய்யாமல் இருப்பவனை மன்னிக்கலாம்....ஆனால் எல்லாம் செய்ய முடிந்த நீ செய்து கிழித்தது என்ன....உனக்கு எதுக்குடா மரியாதை..."
"நீ சொல்வது ஒன்றும் புரியவில்லை...."
"புரியலையா....போடாங்.....என்னை படை...என்னை படைன்னு யார்னா உன்னை கேட்டாங்களாடா....ஒனக்கு பொழுது போகலைன்னா மனுஷங்களை படைச்சிருவியாமே....ஒக்காளி....நாங்க என்ன உன் போதைக்கு ஊறுகாயா...."
கத்தியுடன் நின்றிருந்தவனின் குரல் காரமாக இருந்தது....
"என்ன போதை...என்ன ஊறுகாய்....மகனே....நீ குடித்திருக்கிறாய்....மழை வரும் முன் ஒழுங்காக வீடு போய் சேர் என்று சொன்னேன்....நீ கேட்கவில்லை....இப்பொழுது பார்....மழை வந்துவிட்டது...."
என்னால் நிஜமாகவே நம்ப முடியவில்லை....கடவுள் சொல்லி முடிப்பதற்குள்...சடசடவென்று....பலமாக....மிக பலமாக....மழை கொட்ட ஆரம்பித்தது....நான் நிஜமாகவே கடவுளை பார்த்துக் கொண்டிருக்கிறேன்....
கத்தியுடன் நின்றிருந்தவன் கவலைப்பட்டதாக தெரியவில்லை....
"மழை வந்தா என்ன...மயிரா போச்சி....உன்கிட்ட கேக்காம விடுறதில்ல....ஊரை கொள்ளையடிச்சி பத்து தலைமுறைக்கு சொத்து சேக்குறவனெல்லாம் மேல மேல தான் போயிக்கிட்டு இருக்கான்....கவுன்சிலரா இருந்தவன் எம்.எல்.ஏ ஆகிடறான்...எம்.எல்.ஏ மந்திரி ஆகிடறான்....அவன் பேரன் ஊர்ல பொறுக்கித் தனம் பண்றான்...நல்லவங்க....ஒன்னும் தெரியாத கொழந்தைங்க எல்லாம் ரொம்ப கஷ்டப்பட்டு சாவுறாங்க...சோத்துக்கே இல்லாம சாவுறாங்க...தேவடியா பசங்க குண்டு வச்சி சாவுறாங்க....இல்ல இனவெறி இறையாண்மைங்கிற பேர்ல கொல்றானுங்க...அப்புறம் அந்த பொணத்தைக் காட்டியே ஓட்டு வாங்குறானுங்க....இதுக்கெல்லாம் நீ என்ன செஞ்ச...."
சோவென்று பெய்த மழையில்.....கடவுளின் உதடுகள் அசையவில்லை...மெளனம்...
"இன்னாடா....கேக்குறோமில்ல....சொல்டாங்க வெண்ணை....."
கடவுளுக்கு பயம் உண்டா....கடுங்குளிரிலும் கொட்டும் மழையிலும் முகம் வியர்க்குமா...
கடவுளின் முகம் வியர்த்திருந்தது...குரல் நடுங்கியது....
"அது....அதெல்லாம் விதிப்படி நடக்கிறது....இப்படித்தான் நடக்கணும்கிறது விதி....அதை நான் நினைச்சாலும் மாத்த முடியாது...."
"எல்லாம் விதிப்படித் தான் நடக்கும்னா நீ என்ன மயிருக்குடா இருக்க....."
அவன் கடவுளை நோக்கி கத்தியுடன் முன்னேறினான்....
================ =================
நான்கு
கடவுளுக்கு அவன் நோக்கம் புரிந்திருக்க வேண்டும்....
"வேண்டாம்....வேண்டாம்....முட்டாள் தனமாக ஏதாவது செய்துவிடாதே...."
கழுத்து திருகிய கோழி போல கடவுளின் அலறல் அந்த சந்தில் எதிரொலித்தது....இதுவரை சாய்ந்திருந்த சுவற்றில் இருந்து வேகமாக எழ முயன்றார்....
அவன் அதை விட வேகமாக இருந்தான்....அவன் இடக்கால் உயர்ந்து கடவுளின் முகத்தை சுவற்றில் அழுத்தி தேய்த்தது....இடது கை கடவுளின் கலைந்த தலை மயிரை கொத்தாக பற்றியது....
கடவுள் இரு கைகளாலும் அவன் காலைப் பற்றி தன்னை விடுவிக்க போராடிக் கொண்டிருந்தார்....அவன் வேகமாக இருந்தான்....கத்த வாயெடுத்த கடவுளின் வாயில் ஷூக்கால் திணிக்கப்பட்டது....
கடவுளின் முழி பிதுங்க...தலை மயிரை இறுகப் பற்றி....குரல் வெளிவராது காலால் தடுத்து....அவன் வலது கை ஓங்கி....
கத்தி கடவுளின் வயிற்றை கிழிப்பதை தூரத்தில் இருந்து நான் பார்த்துக் கொண்டிருந்தேன்....கடவுளின் தொப்புளில் கத்தியை சொருகி....நேர்கோடாய் மேலிழுத்து....மீண்டும் கீழே கொண்டு வந்து....வலது பக்கமாய்....ஆங்கில L போல நகர்த்தி.....
மான்செஸ்டரின் குளிர்கால இரவில்....மழையுடன் மழையாக கடவுளின் ரத்தம் கலக்க....கொட்டும் மழை கண் நனைக்க...திறந்த வாய் நிறைக்க....வலப்பக்கம் தலை சாய்த்து.....கடவுள்....செத்துப் போயிருந்தார்....
============ ============
ஐந்து
கடவுளை கொன்று முடித்து....கத்தியை நனைத்திருந்த ரத்தத்தை அவரின் உடையிலேயே துடைத்து முடித்த அவன்....கடவுளின் இறந்த உடலை காலால் நகர்த்தி விட்டு....இது வரை அவர் சாய்ந்திருந்த சுவரில் நின்றவாறே சாய்ந்து கொண்டு....பாக்கெட்டை துழாவி ஒரு சிகரெட்டை எடுத்து....ஸிப்போ லைட்டரால் பற்றவைத்து....ஆழமாக இழுத்து...புகையை வெளியே விட்டு...என்னை நோக்கி திரும்பினான்....
முட்டாள் தனம்...போதை...கொழுப்பு...திமிர்....என்ன வேண்டுமானாலும் சொல்லலாம்....கடவுளின் மரணத்தை பார்த்த அதிர்ச்சியில் நான் என் மறைவிடைத்திலிருந்து வெளியே வந்திருந்தேன்....இந்த நிலையில்....இந்த நிலையில்....அவனால்....என்னை நன்றாக பார்க்க முடியும்....என்னாலும் அவனை.....
என்னை நோக்கியவன்...ச்சும்மா ஜாலிக்கு பூனை காதை கிள்ளிட்டேன்...நீ அதை பாத்துட்டியா என்று சிரிக்கும் குழந்தை போல....மெல்ல சிரித்தான்...
உயிர்வரை ஊடுருவும் குளிரில்....கடும் மழையில்....அந்த இரவின் மங்கலான வெளிச்சத்தில்.....
அவன் முகம் நானாகயிருந்தது........
(திருட்டு பயலே என்று யாரும் பின்னூட்டம் போடும் முன்...இதில் கதை மட்டுமே என்னுடையது...அடிப்படை கருத்து நீட்ஷேவுடையது...ஆல்சோ, இதை எழுத எனக்கு இரண்டு மணி நேரம் ஆகியது....படிப்பவர்கள் ஒரு இரண்டு நிமிடம் செலவு செய்து கதையின் குறைபாடுகளை சொன்னால் நல்லது....நன்றி...)
41 comments:
For comments....
விடுப்பு வாங்கிட்டு வந்து படிக்கிறேன்...
நல்ல நடை, சுவாரசியமாக படிக்க வைத்துவிட்டீர்கள்...
"மரியாதை...உனக்கு எதுக்குடா மரியாதை..."
பல முறை இப்படிச் சலித்ததுண்டு.
/என்னை படை...என்னை படைன்னு யார்னா உன்னை கேட்டாங்களாடா....ஒனக்கு பொழுது போகலைன்னா மனுஷங்களை படைச்சிருவியாமே....ஒக்காளி....நாங்க என்ன உன் போதைக்கு ஊறுகாயா...."’’
ஆகாகா
‘இதுக்கெல்லாம் நீ என்ன செஞ்ச...." /
சத்தியமா நானும் இப்படி கேட்பேன்.
/"அது....அதெல்லாம் விதிப்படி நடக்கிறது....இப்படித்தான் நடக்கணும்கிறது விதி....அதை நான் நினைச்சாலும் மாத்த முடியாது...."
"எல்லாம் விதிப்படித் தான் நடக்கும்னா நீ என்ன மயிருக்குடா இருக்க....." /
ரொம்ப சரியான கேள்வி.
இன்னைக்கெல்லாம் மண்டை குடையும் ஸார்.
//சுவரில் தெறிக்கும் காதல்...கருத்து சுதந்திரம்...கடுப்பு....உச்சியில் இருக்கும் சிலுவை மட்டும் இல்லாவிட்டால் அது சந்திரமுகி பங்களா...அருந்ததீ அரண்மனை என்று சொல்லிவிடலாம்...அதற்கு பக்கத்தில் எப்பொழுதும் சில பிச்சைக்காரர்கள்...உடைந்த கிடார்கள்....கிழிந்த ட்ரம்ஸ்கள்....நசுங்கிய பியர் கேன்கள்...சில காலி பாட்டில்கள்...பழைய புத்தகங்கள்...விரிக்கப்பட்ட துண்டில் சில காசுகள்...அழுத்தமாய் வீசும் கஞ்சா வாசனை...அழுக்காய் கிழிந்த உடையில் சில மனிதர்கள்..//
Simply Superb! (ட்ரம்ஸ்-கள்... பன்மைக்கே பன்மையா..=)))
//தலைவர் பாட்டை கொஞ்சம் சத்தமாக பாடிக் கொண்டு..//
அப்பாடா.. நான் மட்டும் பயந்தாங்குளி கிடையாது..
//..இங்கிலாந்துல இருந்துக்கிட்டு என்ன அன்னைத் தமிழ்நாடு...அப்பத்தா தமிழ்நாடு....ஒக்காளி இன்னிக்கி செத்தா நாளைக்கு பால் கூட இல்ல.... //
யாருக்கு வேணும் பால்.. விஸ்கி போதும்..
//நாக்கை அடக்கி பேசு....என்னைத் தெரியவில்லை....முட்டாள்....நான் தான்....கடவுள்...." //
அகம் பிரம்மாஸ்மி..
//"அது வந்து சாமி....வந்து...எனக்கு...எனக்கு ப்ரிட்னி ஸ்பியர்ஸை கிஸ் பண்ணனும்னு ரொம்ப நாளா ஆசை...." //
என்ன மட்டமான ரசனை.. மடோன்னா வாழ்க.. (தமாஷு மடோன்னா.. டோன்ட் பி மிஸ்டேக்கன்)
//
"அது....அதெல்லாம் விதிப்படி நடக்கிறது....இப்படித்தான் நடக்கணும்கிறது விதி....அதை நான் நினைச்சாலும் மாத்த முடியாது...."
"எல்லாம் விதிப்படித் தான் நடக்கும்னா நீ என்ன மயிருக்குடா இருக்க....." //
விதி செய்யத்தான்.... !
//உயிர்வரை ஊடுருவும் குளிரில்....கடும் மழையில்....அந்த இரவின் மங்கலான வெளிச்சத்தில்.....
அவன் முகம் நானாகயிருந்தது........//
அகம் ஆஸ்மி..! நீ........ட்ஷே!
நிஜம்மா நீங்க நாவல் எழுதலாம்... அருமையான நடை.. மற்றும் சிந்தனை.. கொஞ்சம் கூட போர் அடிக்கல..!
(இல்லைனா வாரம் ஃபுல்லா விஸ்கி சாப்ட்டு.. ஒரு நாள்ல வாந்தி எடுக்கிறத படிக்கிறது கஷ்டம்... =))) :-s... //
//திருட்டு பயலே என்று யாரும் பின்னூட்டம் போடும் முன்..// அகம் எஸ்கேப்பீ...=))
மிகவும் ரசித்து படித்தேன்....மிக அருமையான நடை....கதையா படிக்கும் பொது தோன்றிய உணர்வு இது ....படிக்கும் சக தமிழர்களும் அந்த கடவுளை கொல்லும் கொலைகாரனாக மாறிப் போவதை போல தோன்றியது எனக்கு.
சார்,
வெகு நாளைக்ககப்புறம் எனக்கு எழுத்தாளர் சுஜாத்தாவைப் படித்த திருப்தி இருந்தது காரணம் அவருக்குத்தான் இப்படி பச்சையாய்
பேசும் நையாண்டி வரும் அதில் யதார்தமும் இருக்கும்
வாழ்த்துக்க்ள்.உங்களிடம் இன்னும்
எதிர்ப்பார்கிறென்
இதை எழுத எனக்கு இரண்டு மணி நேரம் ஆகியது என்று சொன்னிர்கள் உங்களை போல நான் எழுத பல வருடங்கள் ஆகும்......
மிக அருமையான படைப்பு.....
கொஞ்சம் நீளமாக இருந்தாலும் விடாமல் படிக்கிற சுவாரஸ்யத்தோடு எழுதியிருக்கீங்க.ரசிச்சுப் படிச்சேன்.
இயல்பான எழுத்து நடை.நல்லாருக்கு.
நல்லா சுவரசியமா கொண்டுபோயிருக்கீங்க
ரசிக்கும்படியான நடை,கதை.
அதே மங்கலான ஒளியில் அது நானாகவும் இருந்தது!
சூப்பர் சாமி
//
பழமைபேசி said...
விடுப்பு வாங்கிட்டு வந்து படிக்கிறேன்...
//
உங்க ஆர்வம் புரியுதுண்ணே....அதுக்காக விடுப்பெல்லாம் வேணாம்...வாரக் கடைசில ரெண்டு நாள் இருக்குல்ல...அப்ப படிங்க :0)))
//
முகிலன் said...
நல்ல நடை, சுவாரசியமாக படிக்க வைத்துவிட்டீர்கள்...
//
நன்றி முகிலன்...
//
வானம்பாடிகள் said...
"மரியாதை...உனக்கு எதுக்குடா மரியாதை..."
பல முறை இப்படிச் சலித்ததுண்டு.
/என்னை படை...என்னை படைன்னு யார்னா உன்னை கேட்டாங்களாடா....ஒனக்கு பொழுது போகலைன்னா மனுஷங்களை படைச்சிருவியாமே....ஒக்காளி....நாங்க என்ன உன் போதைக்கு ஊறுகாயா...."’’
ஆகாகா
‘இதுக்கெல்லாம் நீ என்ன செஞ்ச...." /
சத்தியமா நானும் இப்படி கேட்பேன்.
/"அது....அதெல்லாம் விதிப்படி நடக்கிறது....இப்படித்தான் நடக்கணும்கிறது விதி....அதை நான் நினைச்சாலும் மாத்த முடியாது...."
"எல்லாம் விதிப்படித் தான் நடக்கும்னா நீ என்ன மயிருக்குடா இருக்க....." /
ரொம்ப சரியான கேள்வி.
இன்னைக்கெல்லாம் மண்டை குடையும் ஸார்.
//
நன்றி வானம்பாடிகள்....எல்லாருக்கும் இருக்க கேள்வி தான்...அதான் கடவுள் நேர்ல வர்றதில்லை...:0))
//
கலகலப்ரியா said...
Simply Superb! (ட்ரம்ஸ்-கள்... பன்மைக்கே பன்மையா..=)))
//
நன்றி ப்ரியா...ட்ரம்ஸ்கள்...பன்மைக்கே பன்மை இல்ல...ம்யூசிக் வாசிக்கிறவங்களை பார்த்தீங்கனா ரெண்டு குட்டி ட்ரம்மை ஒண்ணா கட்டி வச்சிருப்பாங்க...அந்த மாதிரி ட்ரம்ஸ்ஸோட பன்மை ட்ரம்ஸ்கள் தான?? ம்ம்ம்...ஒரு எழுத்துப் பிழைக்கு எப்பிடில்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு...:0))
//
அப்பாடா.. நான் மட்டும் பயந்தாங்குளி கிடையாது..
//
அப்படியா...அது யாரு உங்க கூட இன்னொரு பயந்தாகுளி....
//
யாருக்கு வேணும் பால்.. விஸ்கி போதும்..
//
விஸ்கிலாம் எனக்கு வேணாம்ங்க...சூடா காஃபி இருந்தா போறும்...
//
என்ன மட்டமான ரசனை.. மடோன்னா வாழ்க.. (தமாஷு மடோன்னா.. டோன்ட் பி மிஸ்டேக்கன்)
//
கடவுளை கைமா பண்ணவனோட டேஸ்ட்டு மட்டம் சொல்ல என்ன துணிச்சல்...எதுக்கும் நீங்க ஜாக்கிரதையா இருக்கது நல்லது..:0)))
//
விதி செய்யத்தான்.... !
//
:0))))
//
அகம் ஆஸ்மி..! நீ........ட்ஷே!
//
நானெல்லாம் ஷபனா ஆஸ்மி தான் கேள்விப்பட்ருக்கேன்...அதாரு அகம் ஆஸ்மி....
//
நிஜம்மா நீங்க நாவல் எழுதலாம்... அருமையான நடை.. மற்றும் சிந்தனை.. கொஞ்சம் கூட போர் அடிக்கல..!
(இல்லைனா வாரம் ஃபுல்லா விஸ்கி சாப்ட்டு.. ஒரு நாள்ல வாந்தி எடுக்கிறத படிக்கிறது கஷ்டம்... =))) :-s... //
//
சிறுகதைன்னு லேபிள் போட்டுட்டு அஞ்சு பாகத்துக்கு இடுகை...வஞ்சப்புகழ்ச்சி மாதிரி தெரியுதே....(நீங்க என்னை வச்சி காமெடி கீமெடி பண்ணலையே...:0))
//
அகம் எஸ்கேப்பீ...=))
//
இது கரீக்ட்டு...:0)))
//
lemurya said...
மிகவும் ரசித்து படித்தேன்....மிக அருமையான நடை....கதையா படிக்கும் பொது தோன்றிய உணர்வு இது ....படிக்கும் சக தமிழர்களும் அந்த கடவுளை கொல்லும் கொலைகாரனாக மாறிப் போவதை போல தோன்றியது எனக்கு.
//
வாங்க லெமூர்யா...வருகைக்கு நன்றி...
இந்த கதை நீங்கள் சொல்வது போல ஒருவனின் கதையாகவும் இருக்கலாம்...
//
moulefrite said...
சார்,
வெகு நாளைக்ககப்புறம் எனக்கு எழுத்தாளர் சுஜாத்தாவைப் படித்த திருப்தி இருந்தது காரணம் அவருக்குத்தான் இப்படி பச்சையாய்
பேசும் நையாண்டி வரும் அதில் யதார்தமும் இருக்கும்
வாழ்த்துக்க்ள்.உங்களிடம் இன்னும்
எதிர்ப்பார்கிறென்
//
வாங்க moulefrite ....வருகைக்கு நன்றி...
சுஜாதாவா?? கேக்குறதுக்கு நல்லாத் தான் இருக்கு :0)))) ஆனா அவரு மலை...நான் அடிவாரத்துல பறக்குற ஒரு கொசு...ரொம்ப தூரம் போகணும்...ஆனாலும் உற்சாகமூட்டும் உங்கள் வார்த்தைகளுக்கு மிக்க நன்றி...
//
kanavugalkalam said...
இதை எழுத எனக்கு இரண்டு மணி நேரம் ஆகியது என்று சொன்னிர்கள் உங்களை போல நான் எழுத பல வருடங்கள் ஆகும்......
மிக அருமையான படைப்பு.....
//
நன்றி கனவுலகம் கலாம்...ட்ரை பண்ணுங்க...நீங்க இதை விட குறைந்த நேரத்தில் எழுதலாம்...
//
ஹேமா said...
கொஞ்சம் நீளமாக இருந்தாலும் விடாமல் படிக்கிற சுவாரஸ்யத்தோடு எழுதியிருக்கீங்க.ரசிச்சுப் படிச்சேன்.
இயல்பான எழுத்து நடை.நல்லாருக்கு.
//
நன்றி ஹேமா...இரண்டு பாகமாக பிரிக்காலமா என்று யோசித்தேன்...ஆனால் எப்படி பிரித்தாலும் கதை ஓட்டம் பாதிப்பதாக தெரிந்தது....அதனால் துணிந்து அப்படியே...:0))
//
கார்த்திக் said...
நல்லா சுவரசியமா கொண்டுபோயிருக்கீங்க
ரசிக்கும்படியான நடை,கதை.
//
நன்றி கார்த்திக்...
//
வால்பையன் said...
அதே மங்கலான ஒளியில் அது நானாகவும் இருந்தது!
//
வால்,
நீங்களும் அங்க நின்னீங்களா...நான் பார்க்கவே இல்லியே :0))))
//
குடுகுடுப்பை said...
சூப்பர் சாமி
//
கத்திய தூக்கினதும் சாமின்னு சொல்லீட்டீங்க போலருக்கே....:0))))
அஞ்சி பார்ட் எழுதிட்டு அது என்னடா சிறுகதைன்னு லேபிள்...இப்படி யார்னா கேக்கப் போறாங்கன்னு நினைச்சேன்....
நான் எதிர்பார்த்ததை விட அதிகமாகவே ரெஸ்பான்ஸ்...இந்த நெடுங்கதையை பொறுமையுடன் படித்தவர்களுக்கு நன்றி....தமிழிஷிலும், தமிழ்மணத்திலும் ஓட்டுப் போட்டு இதை பிரபலமான இடுகைக்கு கொண்டு வந்த நண்பர்களுக்கு சிறப்பு நன்றி!!!
கலக்கல் அது சரி அண்ணாச்சி....
அது நீங்கதானா? அப்பச் சரி!!
// அது சரி said...
ம்ம்ம்...ஒரு எழுத்துப் பிழைக்கு எப்பிடில்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு...:0))//
பொழைச்சிப் போங்க..
//அப்படியா...அது யாரு உங்க கூட இன்னொரு பயந்தாகுளி....//
கடவுள கொன்னவிகதான்..
//விஸ்கிலாம் எனக்கு வேணாம்ங்க...சூடா காஃபி இருந்தா போறும்...//
ஆமாம்.. இருக்கிறது எதுக்கு.. இல்லாததான் கேப்பாய்ங்க..
// கடவுளை கைமா பண்ணவனோட டேஸ்ட்டு மட்டம் சொல்ல என்ன துணிச்சல்...எதுக்கும் நீங்க ஜாக்கிரதையா இருக்கது நல்லது..:0)))//
ஹெஹெ.. இதுக்கு எல்லாம் பயப்புடுற ஆளுகளா நாம..
//நானெல்லாம் ஷபனா ஆஸ்மி தான் கேள்விப்பட்ருக்கேன்...அதாரு அகம் ஆஸ்மி.... //
ஷாபனாங்னா என்னன்னு நீங்க சொல்லுங்க.. நாம அகம் யாருன்னு சொல்லுறோம்..
//சிறுகதைன்னு லேபிள் போட்டுட்டு அஞ்சு பாகத்துக்கு இடுகை...வஞ்சப்புகழ்ச்சி மாதிரி தெரியுதே....(நீங்க என்னை வச்சி காமெடி கீமெடி பண்ணலையே...:0))//
உங்க மேல உங்களுக்கு ரொம்ப நம்பிக்கை போலருக்கே.. சரி... 'சிறுகதை'க்கு பதிலா 'குறுநாவல்'-ன்னு லேபிள் வச்சிட்டா போச்சு.. இதுக்கு போயீ.. :P
//
கலகலப்ரியா said...
//
//விஸ்கிலாம் எனக்கு வேணாம்ங்க...சூடா காஃபி இருந்தா போறும்...//
ஆமாம்.. இருக்கிறது எதுக்கு.. இல்லாததான் கேப்பாய்ங்க..
//
விஸ்கியை வச்சி என்ன பண்றது தெரியாமக் கூட இருக்கலாம்...:0))
//
// கடவுளை கைமா பண்ணவனோட டேஸ்ட்டு மட்டம் சொல்ல என்ன துணிச்சல்...எதுக்கும் நீங்க ஜாக்கிரதையா இருக்கது நல்லது..:0)))//
ஹெஹெ.. இதுக்கு எல்லாம் பயப்புடுற ஆளுகளா நாம..
//
அது தான் எங்களுக்கு தெரியுமே....அடுத்து வேதாளம் உங்களைத் தான் கிட்நாப் பண்ண போகுது...அப்ப பார்க்கலாம் உங்க துணிச்சலை...
//
உங்க மேல உங்களுக்கு ரொம்ப நம்பிக்கை போலருக்கே.. சரி... 'சிறுகதை'க்கு பதிலா 'குறுநாவல்'-ன்னு லேபிள் வச்சிட்டா போச்சு.. இதுக்கு போயீ.. :P
//
ஹிஹி...அதெல்லாம் நல்லாத் தான் இருக்கு....ஆனா, உசுப்பேத்தி ஒடம்பை
கலகலப்ரியா said...
//
//விஸ்கிலாம் எனக்கு வேணாம்ங்க...சூடா காஃபி இருந்தா போறும்...//
ஆமாம்.. இருக்கிறது எதுக்கு.. இல்லாததான் கேப்பாய்ங்க..
//
விஸ்கியை வச்சி என்ன பண்றது தெரியாமக் கூட இருக்கலாம்...:0))
//
// கடவுளை கைமா பண்ணவனோட டேஸ்ட்டு மட்டம் சொல்ல என்ன துணிச்சல்...எதுக்கும் நீங்க ஜாக்கிரதையா இருக்கது நல்லது..:0)))//
ஹெஹெ.. இதுக்கு எல்லாம் பயப்புடுற ஆளுகளா நாம..
//
அது தான் எங்களுக்கு தெரியுமே....அடுத்து வேதாளம் உங்களைத் தான் கிட்நாப் பண்ண போகுது...அப்ப பார்க்கலாம் உங்க துணிச்சலை...
//
உங்க மேல உங்களுக்கு ரொம்ப நம்பிக்கை போலருக்கே.. சரி... 'சிறுகதை'க்கு பதிலா 'குறுநாவல்'-ன்னு லேபிள் வச்சிட்டா போச்சு.. இதுக்கு போயீ.. :P
//
நம்பிக்கையா? அப்பிடில்லாம் எதுவும் இல்லைங்க...நான் எனக்கு தோணுறதை எனக்கு தெரிஞ்ச/முடிஞ்ச மாதிரி கிறுக்கிக்கிட்டு இருக்கேன்...அதுக்கு இத்தனை பேரு ஊக்கமளிக்கிறதே பெரிய விஷயம்....இதுல நாவல் வேற எழுதி அவங்களை எதுக்கு கொடுமைப் படுத்தணும்கிற ஒரு நல்லெண்ணம் தான் :0)))
//
பழமைபேசி said...
கலக்கல் அது சரி அண்ணாச்சி....
அது நீங்கதானா? அப்பச் சரி!!
//
அய்யோ...அது நானில்லைங்க...நான் ஒரு டம்மி பீஸு....கொசு கடிச்சாலே அதை திருப்பி அடிக்காத ஆளு....எனக்கு ஏது அவ்ளோ துணிச்சல்...
//அடுத்து வேதாளம் உங்களைத் தான் கிட்நாப் பண்ண போகுது...அப்ப பார்க்கலாம் உங்க துணிச்சலை...//
அச்சோ...ரொம்ம்ம்ம்ம்ப பயம்ம்ம்மா இருக்குப்பா...
//இதுல நாவல் வேற எழுதி அவங்களை எதுக்கு கொடுமைப் படுத்தணும்கிற ஒரு நல்லெண்ணம் தான் :0)))//
toooooo modest... (another form of boast..? :P)
//
கலகலப்ரியா said...
//அடுத்து வேதாளம் உங்களைத் தான் கிட்நாப் பண்ண போகுது...அப்ப பார்க்கலாம் உங்க துணிச்சலை...//
அச்சோ...ரொம்ம்ம்ம்ம்ப பயம்ம்ம்மா இருக்குப்பா...
29 October 2009 17:24
//
I am sorry to say this Priya....வேதாளம் அடுத்து உங்களைத் தான் கடத்தப் போறதா எங்களுக்கு தகவல் வந்திருக்கு....உங்க பயம் ரொம்ப லேட்...:0)))
//
கலகலப்ரியா said...
//இதுல நாவல் வேற எழுதி அவங்களை எதுக்கு கொடுமைப் படுத்தணும்கிற ஒரு நல்லெண்ணம் தான் :0)))//
toooooo modest... (another form of boast..? :P)
//
Modest??? Of course....(ஒரிஜினல்) காந்திக்கே கோமணம் கட்ட கத்துக் குடுத்தவய்ங்க நாங்க....மாடஸ்ட்டா தான் இருப்போம்.... :0)))
Another form of boasting??
Oh goட்! ...போஸ்டிங் எல்லாம் இல்லீங்கோ....நம்ம கேரக்டரையே புரிஞ்சிக்க மாட்டேங்கறாங்களே....சரி விடுங்க....கடவுளே ஒருத்தனை நம்பி ஏமாந்துடலையா...:0)))
BTW...I have a good news for all my friends...I am going away for next couple of days....may not be replying to comments...யாருக்காவது என் மேல கொலை வெறி இருந்தா my email address is deltanathan@gmail.com
//I am sorry to say this Priya....வேதாளம் அடுத்து உங்களைத் தான் கடத்தப் போறதா எங்களுக்கு தகவல் வந்திருக்கு....உங்க பயம் ரொம்ப லேட்...:0)))//
கடத்தினதுக்கப்புறம் எனக்கு ஒரு மெயில் அனுப்புங்க சரியா..:-"
என்னென்னமொ சொல்ரீங்க.புரிஞ்சும் புரியாமல். நான் கடவுள் புதிய பதிப்பா. விதி யாரை விட்டது.
வர்ணனை உங்களுக்கு நன்றாகவே வருகிறது.
(நீங்க பாட்டுக்கு ஏதாவது சொல்லிகிட்டே போங்க.நான் நேரம் கிடைக்கும் போது வந்து டேரா போட்டுக்கறேன்)
:) so cool !
படைப்பிலக்கியத்துக்கு வாழ்த்து சொல்ல மீண்டும் வந்தேன்.
I wrote down almost the same kind of thoughts recently. I was going to say that it is intereting to know that people think alike. But I also realize, it is a fact. Human minds suffer by the very thought of -un-resonable existence. Our ego absolutely want to know "why". It is so hard to accept the fact that someone created "us" and not having us understand ourselves. I also feel like "Sorry man! I am not your toy." You are good at bad words. I can't use them eventhoug I am angry like a hell.
எனக்குள் ஆங்காரம் தினம் தினம் உறுமுகிறது
சொல்லிப்போ! எனக்கு சொல்லிப்போ !
எத்தனை கால கண்ணாமூச்சி ?
ஆடிக்களைத்து விட்டேன் !
கடவுளோ அல்லது கடவுளின் துகளோ
யாராயிருப்பினும் ...
என் இருப்பின் இயல்பினை உரைத்துப்போ !
எத்தனை முறை கேட்பது ?
அன்பும் அறிவும்
போட்டிபோட்டு கைவிரிக்கிறது
படைப்பை செய்து
அதில் குழப்பம் செய்ய
யாருனக்கு கற்றுக்கொடுத்தது ?
ஜெயிக்கச்சொல்லி
தோற்கடிக்க
யாருனக்கு உரிமை கொடுத்தது ?
ஆங்காரம் வைத்து,
அடிக்கவும் செய்கிறாய்..
இப்போது வலிக்கிறது !
துளியாய் துவள்கிறது !
ஒளிந்தாடும் வாலியே
உன்னை ஜெயிக்க மீண்டும் வருவேன் !
அதுவரை தோல்வியில் திளைப்பேன் !
my mailid - if you want to answer: santhinidevi@gmail.com
Post a Comment